46- அல் அஹ்காஃப்

அதிகாரம்: அல் அஹ்காஃப்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 36

பிரிவுகள்: 4

1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
2. ஹா-மீம். (இவ்வதிகாரத்தை இறக்குபவன் மிகுந்த புகழுக்குரியவன், மிகுந்த மேன்மைக்குரியவன்.). 
3. இவ்வேதம் வல்லோனும், நுண்ணறிவுள்ளோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாகும். 
4. நாம் வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கிடையிலுள்ளவையெல்லாம் உண்மையைக் கொண்டும், குறிப்பிட்ட ஒரு காலத்திற்காகவுமேயன்றிப் படைக்கவில்லை. ஆனால், நிராகரிப்போர் அவர்களுக்கு எச்சரிக்கப்படுவதிலிருந்து விலகி விடுகின்றனர். 
5. நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வையன்றி அழைப்பவற்றைக் கவனித்தீர்களா? அவர்கள் பூமியில் படைத்திருப்பதை எனக்குக் காட்டுங்கள். அல்லது வானங்களைப் படைப்பதில் அவர்களுக்கு ஏதேனும் பங்கு உண்டா? நீங்கள் உண்மை பேசுபவர்களாயின், இதற்கு முன்னுள்ள எந்த வேதத்தையாவது அல்லது அறிவின் சில சான்றுகளையாவது என்னிடம் கொண்டு வாருங்கள். 
6. மறுமைநாள் வரை தங்களுக்குப் பதிலளிக்காதவற்றை அல்லாஹ்வுக்குப் பதிலாக அழைப்பவனை விட மிகவும் வழிகெட்டவன் எவன்? மேலும் அவர்கள், இவர்களின் அழைப்பை அறிவதே இல்லை. 
7. மேலும் மனித இனம் (மீண்டும் உயிர் பெற்று) ஒன்றுதிரட்டப்படும் போது (கடவுள்களாகக் கருதப்பட்ட) அவர்கள், இவர்களுக்குப் பகைவர்களாகி விடுவார்கள். அவர்கள், இவர்களின் வணக்கத்தை மறுப்போராகவும் இருப்பார்கள். 
8. அவர்களுக்கு எமது தெளிவான வசனங்கள் படித்துக் காட்டப்படும் போது நிராகரிப்போர், உண்மையைக் குறித்து அது தங்களிடம் வரும் போது இது தெளிவான மாயவித்தையேயாகும் என்று கூறுகின்றனர். 
9. அவர் (குர்ஆனாகிய) இதனைத் தாமாகவே இட்டுக்கட்டியுள்ளார் என அவர்கள் கூறுகின்றனரா? நீர் கூறுவீராக: நானே இதனை உருவாக்கியிருந்தால், அல்லாஹ்வு(டைய தண்டனை)க் கெதிராக உங்களால் எனக்குச் சிறிதும் பயனளிக்க இயலாது1. நீங்கள் ஈடுபட்டிருக்கும் (வீண்) பேச்சை அவன் நன்கு அறிகின்றான். அவன் எனக்கும், உங்களுக்குமிடையில் சாட்சிக்குப் போதுமானவன். அவன் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
10. நீர் கூறுவீராக: நான் புதிய தூதன் அல்ல (எனக்கு முன்னரும் ஏராளமான தூதர்கள் தோன்றியிருந்தனர்). மேலும், என்னிடம் எவ்வாறு நடந்து கொள்ளப்படுமென்பதும் எனக்குத் தெரியாது. உங்களைக் குறித்தும் (எவ்வாறு நடந்து கொள்ளப்படும் என்பது எனக்குத்) தெரியாது. எனக்கு அறிவிக்கப்பட்ட வஹியையே நான் பின்பற்றுகின்றேன். மேலும் நான் ஒரு தெளிவான எச்சரிக்கையாளனேயன்றி வேறில்லை.
11. நீர் கூறுவீராக: இது அல்லாஹ்விடமிருந்து உள்ளதாக இருந்து, இதனை நீங்கள் நிராகரித்து, இஸ்ராயீலின் மக்களிலிருந்து சாட்சியொருவர் (மூஸா), தம்மைப் போன்ற ஒருவர் (தோன்றப் போவது) பற்றிச் சாட்சி பகர்ந்து1அ, நம்பிக்கையும் கொண்டிருக்க, நீங்கள் கர்வம் கொள்கின்றீர்கள் என்றால், (உங்கள் நிலை) என்னவென்பதை நீங்கள் எனக்குக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அநீதியிழைக்கும் சமுதாயத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். ரு1 
12. நிராகரிப்பாளர்கள் நம்பிக்கையாளரைக் குறித்து இ(ந்தக்  குர்ஆனான)து ஏதேனும் நன்மையானதாக இருந்திருப்பின், இதில் (நம்பிக்கை கொள்வதில்) அவர்களால் எங்களை முந்தியிருக்க முடியாது எனக் கூறுகின்றனர். ஆனால் இதன் மூலம் அவர்கள் நேர்வழியினைப் பெறாததால், இது ஒரு பழமையான பொய் என்று அவர்கள் கூறுவார்கள். 
13. இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும், கருணையாகவும் விளங்கியது. (குர்ஆனாகிய) இது அநீதியிழைப்பவர்களை எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நற்செய்தி வழங்குவதற்காகவும்2, (முந்தைய வேதங்களிலுள்ள முன்னறிவிப்புகளை) உண்மைப்படுத்தக்கூடிய3 (வகையில்) அரபு மொழியிலுள்ள வேதமாகும். 
14. நிச்சயமாக அல்லாஹ்வே எம் இறைவன் எனக்கூறி, பின்னர் (அக்கொள்கையில்) நிலைத்திருப்பவர்களுக்கு எந்தப் பயமும் ஏற்படாது; அவர்கள் வருந்தவுமாட்டார்கள். 
15. அத்தகையோர் சுவர்க்கத்தில் வாழ்பவர்களாவர். அவர்கள் செய்த செயல்களுக்கு நற்பலனாக அதில் அவர்கள் என்றென்றும் வாழ்ந்து வருவர். 
16. தன் பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு நாம் மனிதனுக்குக் கட்டளையிட்டோம். அவனுடைய தாய் துன்பத்துடன் அவனைச் சுமந்து, வலியுடன் அவனைப் பெற்றெடுக்கிறாள். அவனைச் சுமப்பதற்கும், அவனுக்குத் தாய்ப்பால் மறக்கடிக்கவும் முப்பது மாதங்கள் ஆகின்றன4. பின்னர் அவன் தனது முழுமையான வாலிபப் பருவத்தையடைந்து, நாற்பது வயதை எட்டியதும், என் இறைவா! நீ எனக்கும், என் பெற்றோருக்கும் அருளிய உனது அருளுக்கு நான் நன்றி செலுத்தவும், உனக்கு விருப்பமான நற்செயல்களை நான் செய்யவும், நீ எனக்கு அருள் புரிவாயாக. மேலும் எனக்காக, என் சந்நதிகளை நல்லவர்களாக ஆக்குவாயாக. நிச்சயமாக நான் உன்னிடமே திரும்புகின்றேன். நிச்சயமாக நான் (உனக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களைச் சேர்ந்தவனாவேன் என்று அவன் கூறுகின்றான். 
17. அத்தகையோரிடமிருந்தே நாம் அவர்களது நற்செயல்களை ஏற்றுக் கொண்டு, அவர்களது கெட்ட செயல்களைக் கண்டுங்காணாதது போன்று இருந்து விடுகிறோம். (அவர்கள்) சுவர்கத்திற்கு உரியவர்களுக்கிடையே (இருப்பார்கள்). இது அவர்களிடம் செய்யப்பட்ட உண்மையான வாக்குறுதியாகும். 
18. ஆனால் தன் பெற்றோரிடம்: உங்கள் இருவரைப் பற்றியும் அந்தோ பரிதாபம்! எனக்கு முன்னர் ஏற்கனவே பல தலைமுறையினர் இறந்து போய் (அவர்களுள் எவரும் உயிர் பெற்று வராமல்) இருக்க, நான் ( மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு, பூமியிலிருந்து) வெளியேற்றப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பயமுறுத்துகின்றீர்களா என்று கூறுபவனும் உள்ளான். அவ்விருவரும் அல்லாஹ்விடம் முறையீடு செய்து (அந்த மகனிடம்) உன் மீது ஆழ்ந்த வருத்தமே (ஏற்படுகின்றது). இறைவன் மீது நம்பிக்கை கொள். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதே என்று கூறுகின்றனர். ஆனால் அவன், இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும் என்றே கூறுகிறான். 
19. இவர்களுக்கு முன் சென்ற பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் சமுதாயங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட அதே தீர்ப்பு, இவர்களுக்கு எதிராகவும் வழங்கப்பட்டது. (அதாவது) நிச்சயமாக அவர்கள் இழப்புக்குரியோராவார்கள். 
20. எல்லோருக்கும் அவர்கள் செய்தவற்றிற்கேற்ப பதவிகள் உள்ளன. அவர்களின் செயல்களுக்குக் கூலி முழுமையாக வழங்கவே இது. மேலும் அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்.
21. நிராகரிப்பவர்கள் நரகத்தின் முன் கொண்டு வரப்படும் நாளில் (அவர்களிடம்): நீங்கள் உலக வாழ்க்கையில் உங்களுடைய நல்ல பொருட்களையெல்லாம் செலவழித்து விட்டீர்கள். நீங்கள் அவற்றைக் கொண்டு (முழுமையாக) பயனடைந்தீர்கள். எனவே நீங்கள் பூமியில் நியாயமின்றி ஆணவம் கொண்டிருந்ததாலும், வரம்பு மீறிச் செயல்பட்டதாலும், இன்று உங்களுக்கு இழிவுக்குரிய தண்டனை கொடுக்கப்படுகிறது.(என்று கூறப்படும்) ரு2 
22. ஆதுடைய சகோதரரை (ஹூதை) நீர் நினைத்துப் பார்ப்பீராக. அவர் தமது சமுதாயத்தினரை மணற்குவியல்களுக்கிடையே5 எச்சரித்தார். அவருக்கு முன்னரும், அவருக்குப் பின்னரும் எச்சரிக்கை செய்பவர்கள், 'நீங்கள் அல்லாஹ்வையன்றி வேறெவரையும் வணங்காதீர்கள்; மாபெரும் ஒரு நாளின் தண்டனையைப் பற்றி நான் உங்களுக்காக அஞ்சுகிறேன்' என்று (கூறிச்) சென்றுள்ளனர். 
23. நீர் எங்கள் கடவுளர்களிடமிருந்து எங்களை அகற்றுவதற்காக எங்களிடம் வந்திருக்கின்றீரா? நீர் உண்மையாளர்களைச் சேர்ந்தவராயின், எதைக் குறித்து எங்களைப் பயமுறுத்துகிறீரோ அதை நீர் எங்களிடம் கொண்டு வாரும் என்று அவர்கள் கூறினர். 
24. (அதைப் பற்றிய) உண்மையான ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது; நான் எதனுடன் அனுப்பப்பட்டுள்ளேனோ அதையே நான் உங்களுக்குத் தெரிவிக்கின்றேன்; ஆனால் உங்களை அறிவற்ற ஒரு சமுதாயமாகவே நான் காண்கிறேன் என்று அவர் கூறினார். 
25. பின்னர் அவர்கள் அதைத் தங்கள் பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருக்கும் மேகமாகக் கண்ட பொழுது, இது நம்மீது மழையைப் பொழிய இருக்கின்ற ஒரு மேகமாகும் என்று அவர்கள் கூறினர். (நாம் கூறினோம்) : அவ்வாறன்று, மாறாக இதுவே நீங்கள் விரைவில் வர எதிர்பார்த்த, வேதனையளிக்கக் கூடிய தண்டனையைக் கொண்ட ஒரு காற்றாகும். 
26. இது தனது இறைவனின் கட்டளையினால் எல்லாவற்றையும் அழிவிற்குள்ளாக்கும். எனவே காலையில் அவர்கள் வசித்த இடங்களைத் தவிர, வேறெதுவும் காணப்படாத நிலையிலாகி விட்டார்கள். இவ்வாறே நாம் குற்றவாளிகளான சமுதாயத்தினருக்குக் கூலி கொடுக்கின்றோம். 
27. நாம் உங்களுக்கு இங்கு வழங்காத வலிமையெல்லாம், நாம் அவர்களுக்கு வழங்கினோம். நாம் அவர்களுக்குக் காதுகளையும், கண்களையும், உள்ளங்களையும் கொடுத்தோம். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களைப் பிடிவாதமாக மறுத்ததனால், அவர்களது காதுகளும், அவர்களது கண்களும், அவர்களது உள்ளங்களும் அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்கவில்லை. அவர்கள் எது குறித்து ஏளனம் செய்து கொண்டிருந்தார்களோ அ(த் தண்டனையான)து அவர்களைச் சூழ்ந்து கொண்டது. ரு3 
28. உங்கள் சுற்றுப்புறங்களிலுள்ள நகரங்களை நாம் அழித்து விட்டோம். அவர்கள் (எம்மிடம்) திரும்புவதற்காக அடையாளங்களை மிகத்தெளிவாக நாம் விளக்கி விட்டோம். 
29. பின்னர் அவர்கள் (இறைவனின்) நெருக்கத்தை நாடி எவர்களை அல்லாஹ்வையன்றி கடவுளராக எடுத்துக் கொண்டனரோ, அவர்கள் ஏன் அவர்களுக்கு உதவி செய்யவில்லை? மாறாக, அவர்கள், அவர்களை விட்டும் மறைந்து விட்டனர். இது அவர்களது பொய் மற்றும் அவர்கள் இட்டுக்கட்டிக் கூறிய(தனாலும் விளைந்த)தாகும். 
30. குர்ஆனைச் செவியேற்க விரும்பிய ஜின்களுள் ஒரு குழுவினரை6 நாம் உம்மை நோக்கித் திருப்பிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக). அவர்கள் அங்கு (குர்ஆன் ஓதும் இடத்தில்) வந்திருந்த போது (ஒருவருக்கொருவர்) மவுனமாக இரு(ந்து கேளு)ங்கள் என்று கூறினர். அது முடிவடைந்ததும், அவர்கள் தங்கள் சமுதாயத்தினரிடம் அவர்களை எச்சரித்தவர்களாய் திரும்பிச் சென்றனர்.
31. அவர்கள் கூறினர்: எங்கள் சமுதாயத்தினரே! நாங்கள் மூஸாவுக்குப் பின்னர் இறக்கப்பட்டுள்ள ஒரு வேதத்தைச் செவியேற்றுள்ளோம். அது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துகின்றதும், உண்மையின் பக்கமும், நேர்வழியின் பக்கமும் வழிகாட்டுகின்றதுமாகும். 
32. எங்கள் சமுதாயத்தினரே! நீங்கள் அல்லாஹ்வின்பால் அழைப்பவருக்குப் பதிலளித்து, அவரிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். இதனால் அல்லாஹ் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னித்து, வேதனையளிக்கும் தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவான். 
33. அல்லாஹ்வின்பால் அழைப்பவருக்குப் பதிலளிக்காதவரால், பூமியில் அவனது திட்டத்தை முறியடிக்க இயலாது. அ(வ்விறை)வனையன்றிப் பாதுகாப்பவர்களும் அவருக்கு இல்லை. அத்தகையோரே மிகத்தெளிவான வழிகேட்டில் உள்ளவர்கள். 
34. வானங்களையும், பூமியையும் படைத்து, அவற்றைப் படைத்ததனால் களைப்படையாத அல்லாஹ், மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்க ஆற்றல் பெற்றவனாவான் என்பதனை அவர்கள் பார்ப்பதில்லையா? ஆம்! நிச்சயமாக அவன் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான். 
35. நிராகரிப்பவர்கள் நெருப்பின் முன் கொண்டு வரப்படும் நாளில், (அவர்களிடம்) இது உண்மையில்லையா? (என்று கேட்கப்படும். அதற்கு) அவர்கள், ஆம்! எங்கள் இறைவன் மேல் ஆணையாக (இது முற்றிலும் உண்மை தான்) எனக் கூறுவார்கள். அப்பொழுது அவன் நீங்கள் நிராகரித்ததனால் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் என்று கூறுவான். 
36. மன உறுதி கொண்ட தூதர்கள் பொறுமையைக் கடைப்பிடித்தது போன்று நீரும் பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. அவர்களைக் குறித்து நீர் அவசரப்பட வேண்டாம். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட த(ண்டனையி)னை அவர்கள் காணும் நாளில், ஒரு பகல் பொழுதின் ஒரு சிறிது நேரமேயன்றித் தாங்கள் தங்கியிருந்ததில்லை போல் அவர்கள் உணர்வார்கள். இது வெளிப்படுத்தப்பட்ட ஓர் எச்சரிக்கை. கட்டுப்படாத சமுதாயத்தினரே அழிவிற்குள்ளாக்கப்படுவர். ரு4


Powered by Blogger.