அதிகாரம்: அல் மஆரிஜ்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 45
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (நிராகரிப்பவர்களுக்கு) நிகழவிருக்கின்ற தண்டனையைப் பற்றி விசாரிப்பவன் விசாரிக்கின்றான்.
- நிராகரிப்பவர்களை அதிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இல்லை. (எனவே அது குறித்து விசாரிப்பது பொருத்தமற்றதும், பயன்ற்றதுமாகும்).
- என்றும் உயர்ந்த நிலையையுடைய அல்லாஹ்விடமிருந்து அது வரும்.
- வானவர்களும், ஜிப்ரீலும் ஒரு நாளில் அவனிடம் உயர்கின்றனர். அ(ந்)த(நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்1.
- எனவே, நீர் மிகச்சிறந்த முறையில் பொறுமையை மேற்கொள்வீராக.
- அவர்கள் அதனை மிகத் தொலைவிலானதாகக் காண்கின்றனர்.
- ஆனால், நாம் அதனை மிக அருகிலானதாகக் காண்கின்றோம்.
- வானம் உருகிய செம்பைப் போன்றதாகி விடும். (அந்) நாளில்;
- மலைகள் (காற்றில் மிதந்து அலைபடும்) பஞ்சுத் துணுக்குகளைப் போன்று ஆகி விடும்2.
- எந்த நண்பனும், எந்த நண்பனைப் பற்றியும் விசாரிக்க மாட்டான்.
- (ஏனெனில்) அவர்கள் ஒருவருக்கொருவர் (அதாவது அவர்களின் நிலைகளை) காண்பிக்கப்படுவர். குற்றவாளி அந்நாளின் தண்டனைக்கு, தன் மகனைத் தனக்கீடாகக் கொடுக்க விரும்புவான்.
- தன் மனைவியையும், தன் உடன்பிறப்பையும்,
- தனக்கு அடைக்கலம் தந்த உறவினர்களையும்,
- மேலும் பூமியிலுள்ள அனைத்தையும் கொடுத்தும் தன்னைக் காப்பாற்றலாம் (என ஏங்குவான்).
- கவனமாகக் கேளுங்கள்! (அவ்வாறில்லை) நிச்சயமாக அது தீச்சுடராகும்.
- (உடலின்) நுனிகள் வரையிலுமுள்ள தோலை உரித்து விடக்கூடியதாகும்.
- புறமுதுகு காட்டி ஓடி விட முயல்பவனையும் அது அழைக்கும்;
- (பொருளைப்) பதுக்கி, முடக்கி வைத்திருப்பவனையும் (அழைக்கும்).
- நிச்சயமாக, மனிதன் பொறுமையற்றவனாகவும், கருமித்தனமுள்ளவனாகவும் பிறந்துள்ளான்.
- அவனுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் பதற்றமடைகின்றான்.
- அவனுக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால், கருமித்தனமுள்ளவனாகி விடுகின்றான்.
- தொழுகையை நிறைவேற்றுபவர்களைத் தவிர;
- அவர்கள் தங்கள் தொழுகைகளில் எப்போதும் நிலைத்திருப்பார்கள்.
- அவர்களின் செல்வங்களில் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு பங்கு உண்டு;
- கேட்பவருக்கும், (கேட்காத) ஆதரவற்றவருக்கும்;
- அவர்கள் தீர்ப்பு நாளை உண்மையானதென்று நம்புவார்கள்.
- அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனைக்கு அஞ்சுபவர்களாயிருப்பார்கள்.
- நிச்சயமாக, அவர்களது இறைவனின் தண்டனைக்கு எதிரில் எந்தத் தற்காப்புமில்லை.
- மேலும் அவர்கள் தங்கள் மறைவானப் பகுதிகளைப் பாதுகாத்துக் கொள்வார்கள்.
- தங்கள் மனைவியர்களிடமிருந்தும், தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டதிலிருந்தும் தவிர; நிச்சயமாக அவர்களுக்கு எக் குற்றமுமில்லை.
- ஆனால் இதற்கப்பால் செல்ல விரும்புபவர்கள் வரம்பு மீறுபவர்களேயாவர்.
- அவர்கள் தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட பொருட்களையும், தங்கள் உடன்படிக்கைகளையும் குறித்து விழிப்புடன் இருப்பார்கள்.
- அவர்கள் தங்கள் சாட்சியங்களில் (நேர்மையாளராக) நிலைத்திருப்பார்கள்.
- அவர்கள் தங்கள் தொழுகைகளை நிறைவேற்றுவதில் கண்டிப்புடன் இருப்பவருமாவர்.
- இத்தகையவர்களே (தகுந்த) கண்ணியத்துடன் தோட்டங்களில் இருப்பார்கள். ரு1
- நிராகரிப்பவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? அவர் கோபத்தால் தலை தூக்கியவர்களாக உம்மிடம் விரைகின்றனர்.
- வலப்பக்கத்திலிருந்தும், இடப்பக்கத்திலிருந்தும் பல பிரிவுகளாக (வருகின்றனர்).
- அவர்களுள் ஒவ்வொருவனும் பேரின்பத் தோட்டத்திற்குள் செலுத்தப்படலாமென்று எதிர்பார்க்கின்றானா?
- அது ஒருபோதும் நடக்காது! அவர்கள் அறியும் ஒன்றிலிருந்து நாம் அவர்களைப் படைத்துள்ளோம்.
- கிழக்குகள், மேற்குகள் ஆகியவற்றின் இறைவன் மேல் நான் ஆணையி(ட்)டு(கூறு)கிறேன். நிச்சயமாக, நாம் ஆற்றல் பெற்றவராவோம்.
- அவர்களின் இடத்தில் அவர்களை விடச் சிறந்த (மற்ற) வர்களை நாம் கொண்டு வருவதற்கு (ஆற்றல் பெற்றுள்ளோம்). மேலும் நாம் தோற்கடிக்கப்படுபவர்கள் அல்ல.
- எனவே, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களது நாளை அவர்கள் சந்திக்கும் வரை அவர்கள் வீண் பேச்சிலும், விளையாட்டிலும் மூழ்கி இருக்குமாறு நீர் அவர்களைத் தனியே விட்டு விடுவீராக.
- அந்நாளில் அவர்கள் ஓர் இலக்கை நோக்கி ஓடுபவர்கள் போன்று, தங்கள் கல்லறைகளிலிருந்து விரைவாக வெளியேறுவார்கள்3.
- அவர்களின் கண்கள் (வெட்கத்தால்) கீழ் நோக்கியவாறு இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொண்டிருக்கும். இதுவே அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாளாகும். ரு2