12- யூஸூஃப்

அதிகாரம் : யூஸூஃப்
அருளப்பட்ட இடம் : மக்கா | வசனங்கள் : 112
பிரிவுகள் : 12

  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ( ஓதுகின்றேன்).
  2. அலிஃப் லாம் ரா1. இவை மிகவும் தெளிவுபடுத்தக்கூடிய வேதத்தின் வசனங்களாகும் .
  3. நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் நிச்சயமாக இதனைத் தெளிவான மொழியில் திரும்பத் திரும்ப ஓதக்கூடிய நூலாக இறக்கியுள்ளோம் .
  4. நாம் உமக்கு வஹி அறிவித்த இந்த குர்ஆன் மூலம் அழகிய விளக்கங்களை உமக்கு அளித்தோம் . அறியாதவர்களைச் சேர்ந்தவராக இருந்தீர் .
  5. யூஸூஃப் தம் தந்தையிடம் கூறிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக:) என் தந்தையே ! நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் (கனவில்) கண்டேன் . அவை எனக்குச் சிரம்பணியக் கண்டேன் .
  6. அவர் கூறினார் : எனது அன்பு மகனே ! உமது கனவை உமது சகோதரர்களிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் உமக்கு எதிராக ஏதேனும் சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு வெளிப்படையான பகைவனாவான் .
  7. மேலும் இவ்வாறே ( நீர் கனவில் கண்டது போன்று) உம்முடைய இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்து, (இறை) ஞானங்களின் விளக்கத்தை உமக்குக் கற்றுத் தருவான் . மேலும் இதற்கு முன்னர் அவன் தனது அருட்கொடையினை உம்முடைய இரண்டு மூதாதையர்களான இப்ராஹீமுக்கும், இஸ்ஹாக்குக்கும் முழுமையாக்கியது போன்று, உமக்கும் , யாகூபின் குடும்பத்தினர் எல்லாருக்கும் அவன் அதனை முழுமையாக்குவான் . நிச்சயமாக உம்முடைய இறைவன் நன்கு அறிபவனும் மிக நுண்ணிய ஞானமுள்ளவனுமாவான் . ரு1
  8. (உண்மையைத்) தேடுவோருக்கு யூஸூஃப் மற்றும் அவருடைய சகோதரர் (களின் நிகழ்ச்சி) களில் நிச்சயமாக பல அடையாளங்கள் உள்ளன.
  9. (யூஸூஃபின் சகோதரர்களாகிய) அவர்கள் ( ஒருவர் மற்றொருவரிடம் இவ்வாறு) கூறியபோது (நிகழ்ந்தவற்றில் உங்களுக்கு அடையாளம் உண்டு) : நிச்சயமாக யூஸூஃபும் அவருடைய சகோதர ரும் , நம் தந்தைக்கு நம்மை விடவும் மிக்க அன்புக்குரியவர்களாக இருக்கின்றனர். ஆனால் நாமோ வலிமை மிக்க ஒரு கூட்டமாக இருக்கின்றோம். நிச்சயமாக மிகத் தெளிவான தவற்றில் உள்ளார் .
  10. (எனவே) யூஸூஃபைக் கொன்று விடுங்கள்.  அல்லது அவரை வேறொரு நாட்டில் எறிந்து விடுங்கள். ( அவ்வாறு செய்தால்) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கம் முழுமையாகத் திரும்பி விடும் .  இதன் பின்னர் (பாவ மன்னிப்புக் கோரி, மீண்டும்) நீங்கள் நல்லதொரு கூட்டத்தினராகி விடலாம் .
  11. (இதற்கு) அவர்களுள் பேசுபவர் ஒருவர் இவ்வாறு கூறினார் : யூஸூஃபைக் கொல்லாதீர்கள். நீங்கள் (ஏதாவது) செய்ய வேண்டுமாயின் அவரை ஒரு ஆழமான கிணற்றிற்கடியில் எறிந்து விடுங்கள். பயணிகளில் யாராவது அவரை எடுத்துக் கொள்வர் .
  12. அவர்கள் கூறினர் : எங்கள் தந்தையே ! யூஸூஃபைக் குறித்துத் தாங்கள் எங்களை நம்பாதிருப்பதற்கு தங்களுக்கு என்ன ஆகிவிட்டது ? நிச்சயமாக நாங்களோ அவருக்கு நன்மையை நாடுவோராகவே உள்ளோம்.
  13. நாளை அவரை எங்களுடன் அனுப்புவீராக . அவர் (அங்குத்) தாராளமாக உண்டு விளையாட ட்டும். நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்.
  14. அவர்(களின் தந்தை யாகூப்) கூறினார் : நீங்கள் அவரை (உங்களுடன்) அழைத்துச் செல்வது நிச்சயமாக என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது. நீங்கள் அவரைக் குறித்து கவனமற்றவர்களாயிருக்கும் நிலையில், ஏதாவது ஓர் ஓநாய் அவரைத் தின்று விடக்கூடாதே என்று நான் அஞ்சுகின்றேன்.
  15. அவர்கள் கூறினர் : நாங்கள் வலிமை வாய்ந்த ஒரு கூட்டமாக இருந்தும், ஓநாய் அவரைத் தின்று விடுமாயின் , அந்நிலையில் நிச்சயமாக நாங்கள் பெரும் நஷ்டவாளிகளேயாவோம் .
  16. பின்னர் அவர்கள் அவரை அழைத்துச் சென்று கிணற்றிற்கடியில் அவரைப் போட ஒன்றுபட்ட போது , நாம் அவருக்கு (நீர் பாதுகாப்பிலிருப்பீர்) ; நீர் அவர்களின் இச்செயல் குறித்து (ஒரு நாள்) அவர்களுக்கு அறிவிப்பீர் என்றும் , அவர்கள் இதனை அறியமாட்டார்கள் என்றும் வஹி அறிவித்தோம் .
  17. மேலும் இரவு வேளையில் அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுது கொண்டே வந்தனர்.
  18. (மேலும்) அவர்கள் கூறினர் : எங்கள் தந்தையே ! நாங்கள் ஒருவருக்கொருவர் (ஓட்டப் பந்தயத்தில்) முந்திச் சென்று கொண்டிருந்தோம் . மேலும் நாங்கள் யூஸூஃபை எங்கள் பொருள்களின் பக்கத்தில் விட்டுச் சென்றோம் . அப்போது ஓநாய் அவரைத் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறினாலும் தாங்கள் எங்களை நம்பமாட்டீர்கள்.
  19. (தங்கள் தந்தையை நம்ப வைப்பதற்காக) அவர்கள் அவரது சட்டையில் பொய் இரத்தத்தைத் தேய்த்துக் கொண்டு வந்தனர் . (இதனைக் கண்டு) அவர் இவ்வாறு கூறினார் : அவ்வாறில்லை . மாறாக உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு இந்த ஏமாற்று வேலையை கவர்ச்சி வாய்ந்ததாக்கிக் காட்டியுள்ளன. இப்பொழுது நன்கு பொறுமையினை மேற்கொள்வதே (எனக்கேற்றதாகும் ) . நீங்கள் கூறுபவற்றிலிருந்து அல்லாஹ்வின் உதவியையே தேட வேண்டும்.
  20. (அதே வேளையில்) ஒரு பயணக் குழுவினர் வந்தனர் . அவர்கள் தங்களுக்குத் தண்ணீர் கொண்டு வருபவரை அனுப்பினர் . அவர் (அக் கிணற்றுக்குச் சென்று அதில்) தமது வாளியை விட்டதும் (கிணற்றில் சிறுவன் ஒருவனைக் கண்டு) , ஒரு நற்செய்தி, இதோ ஒரு சிறுவன் என்று அவர் கூறினார். அவர்கள் அவனை ஒரு வணிகப் பொருளாகக் கருதிக் கொண்டு, மறைத்து வைத்துக் கொண்டனர் . அவர்கள் செய்ததனை அல்லாஹ் நன்கு அறிந்துள்ளான் .
  21. (இதன் பின்னர் யூஸூஃபின் சகோதரர்களுக்கு யூஸூஃப் மீட்கப்பட்டு விட்டது தெரிந்ததும்) அவர்கள் ( அவரைத் தங்கள் அடிமை எனக் கூறி) ஓர் அற்பக் கிரயத்திற்கு அதாவது ஒருசில வெள்ளி நாணயங்களுக்கு ஈடாக ( அக் குழுவினிரிடமே அவரை ) விற்று விட்டனர் . அவர்கள் அதில் ( அவரை விற்று சம்பாதிப்பதில் ) விருப்பமுடையவர்களாக இருக்கவில்லை2. ரு2
  22. எகிப்தி(ன் குடிமக்களி)ல் அவரை வாங்கியவர், தமது மனைவியிடம் , நீ இவரது தங்குமிடத்தை கண்ணியத்திற்குரியதாக்கி வை . இவர் நமக்குப் பயனளிப்பவராக இருக்கலாம் அல்லது நாம் இவரை (நம்முடைய) மகனாக ஆக்கிக் கொள்ளலாம் என்றார். இவ்வாறு நாம் யூஸூஃபுக்கு அந்த நாட்டில் (கண்ணியத்திற்குரிய) தங்குமிடத்தை வழங்கினோம் . நாம் அவருக்கு (இறை) ஞானங்களின் பொருளைக் கற்றுக் கொடுக்கவும் (அவ்வாறு செய்தோம்) . அல்லாஹ் தன் கட்டளையை நிறைவேற்ற முழு ஆற்றல் பெற்றவனாவான் . ஆனால் மக்களில் பெரும்பாலார் (இதை) அறிவதில்லை .
  23. அவர் தம் பருவ வயதை அடைந்த போது , நாம் அவருக்குத் தீர்ப்பளிக்கும் ஆற்றலையும் , சிறந்த ஞானத்தையும் வழங்கினோம் . மேலும் இவ்வாறே நாம் நற்செயல்கள் செய்வோருக்கும் நற்பலன் கொடுத்து வருகின்றோம் .
  24. எவளுடைய வீட்டில் அவர் (வாழ்ந்து கொண்டு) இருந்தாரோ அவள் , அவரை அவரது விருப்பத்திற்கு மாற்றமான  செயலில் ஈடுபடுத்த விரும்பினாள் . அவள் எல்லாக் கதவுகளையும் அடைத்து விட்டு , (என்னிடம்) வாரும் என்றாள். (இதற்கு) அவர் (நான் அவ்வாறு செய்வதிலிருந்து) அல்லாஹ்வின் பாதுகாப்பு (தேடுகின்றேன்) . நிச்சயமாக அவன் என் இறைவன். அவன் (தான்) உன்னிடம் எனது தங்குமிடத்தை மிக நல்லதாக ஆக்கி வைத்துள்ளான் . நிச்சயமாக அநீதியிழைப்பவர்கள் வெற்றி பெறுவதேயில்லை என்றார் .
  25. அவள் உறுதியாக அவரை விரும்பினாள் , தமது இறைவனின் தெளிவான அடையாளத்தைக் கண்டிருக்காவிட்டால் , அவரும் அவளை விரும்பியிருப்பார் . அவரை விட்டு தீமையையும் , மானக் கேடானதையும் அகற்றவே இவ்வாறு நாம் செய்தோம் . நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது அடியார்களைச் சார்ந்தவராக இருந்தார் .
  26. அவ்விருவரும் கதவின் பக்கம் விரைந்தோடினர் .(இந்த இழுபறியில்) அவள் அவரது சட்டையைப் பின்புறத்திலிருந்து கிழித்து விட்டாள் . அவ்விருவரும் (கதவைச் சென்றடைந்த தும் ), அவளுடைய கணவரைக் கதவருகில் (நிற்கக்) கண்டனர் . (அப்போது) அவள் (தன் கணவரிடம்) கூறினாள் : தங்கள் மனைவியிடம் தீங்கிழைக்கக் கருதியவனுக்கு சிறையிலடைப்பது அல்லது துன்புறுத்தும் வேதனையைத் தவிர வேறு தண்டனை உண்டா ?
  27. (அப்போது யூஸூஃப்) என் விருப்பத்திற்கு மாற்றமான செயலில் என்னை ஈடுபடுத்த விரும்பியவள் இவளே என்றார் . அவளுடைய குடும்பத்தினரிலிருந்தே ஒருவர் (இவ்வாறு) சாட்சி பகர்ந்தார் . (அதாவது) அவருடைய சட்டை முன்புறமிருந்து கிழிக்கப் பட்டிருப்பின் , அவள் உண்மை கூறியவளாயும் , அவர் பொய்யர்களைச் சார்ந்தவராயும் இருப்பார் .
  28. அவருடைய சட்டை பின்புறமாக கிழிக்கப்பட்டிருப்பின் , அவள் பொய் கூறியவளாயும் , அவர் உண்மையாளர்களைச் சார்ந்தவராயும் இருப்பார் .
  29. அவருடைய சட்டை பின்புறமிருந்து கிழிக்கப்பட்டிருப்பதை அ(வளுடைய கண) வர் கண்ட போது, அவர் (தம் மனைவியிடம் இவ்வாறு) கூறினார் : நிச்சயமாக இது உங்களுடைய சூழ்ச்சியினால் (விளைந்தது) ஆகும் . நிச்சயமாக பெண்களாகிய உங்களின் சூழ்ச்சி (மிகப் ) பெரியது.
  30. யூஸூஃபே ! நீர் இதனை அலட்சியப் படுத்திவிடுவீராக . (பெண்ணே !) உன் குற்றத்திற்காக நீ மன்னிப்பைத் தேடிக் கொள். நிச்சயமாக நீ குற்றமிழைப்போரைச் சேர்ந்தவளேயாவாய் . ரு3
  31. அந்த நகரத்திலுள்ள பெண்கள் : அஸீஸூடைய மனைவி தன்னுடைய அடிமையை அவருடைய விருப்பத்திற்கு மாற்றமான செயலில் ஈடுபடுத்த விரும்புகிறாள். அவளுடைய காதல் , அவளது உள்ளத்தின் ஆழத்தில் குடிகொண்டு விட்டது. நாம் அவளை மிகத் தெளிவான தவற்றில் இருப்பதாகவே காண்கிறோம் என்றனர்.
  32. அந்தப் பெண்களின் சூழ்ச்சியை அவள் செவியுற்ற போது, அவர்களுக்குத் தூது அனுப்பி , அவர்களுக்காக (சிறப்பான) ஒரு விருந்தை ஆயத்தம் செய்தாள் . அவர்களுள் ஒவ்வொருத்திக்கும் ( உணவுப் பொருள்களை வெட்டுவதற்காக ஒரு ) கத்தியைக் கொடுத்து பின்னர் (யூஸூஃபிடம்) நீர் அவர்களுக்கு முன்னால் வாரும் என்றாள் . எனவே அவர்கள் அவரைக் கண்ட போது பெரும் மகிமைக்குரிய மனிதராகவே அவரை மதித்தனர் . (அவரைக் கண்ட வியப்பினால்) அவர்கள் தங்கள் கைகளை அறுத்துக் கொண்டனர்3. மேலும் அவர்கள் கூறினர் : இவர் (தீய செயல்களிலிருந்தும் ) அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றார் . இவர் மனிதரே அல்ல ; இவர் ஒரு கண்ணியம் மிகு வானவரேயாவார் என்றனர் .
  33. (இதற்கு) அவள் கூறினாள் : எவரைக் குறித்து நீங்கள் என்னைப் பழித்தீர்களோ அவர் இவரே . நான் அவரை அவர் விருப்பத்திற்கு மாற்றமான செயலில் ஈடுபடுத்த முயன்றது உண்மை தான். ஆனால் அவர் (அதிலிருந்து) தப்பி விட்டார் . மேலும் தற்போது நான் அவருக்கு இடுகின்ற கட்டளையை அவர் செய்யவில்லையாயின் , நிச்சயமாக அவர் சிறைப்படுத்தப்படுவார் . மேலும் நிச்சயமாக அவர் இழிவடைந்தவராகி விடுவார்.
  34. (இது கேட்டு) அவர் ( இவ்வாறு) கூறி (வேண்டி)னார்  : என் இறைவா ! அவர்கள் என்னை எதன்பால் அழைக்கின்றனரோ அதைவிடச் சிறைக்குச் செல்வது எனக்கு மிகவும் விருப்பமானதாகும் . அவர்களது சூழ்ச்சியி(ன் தீய விளைவி)னை என்னை விட்டு நீ அகற்றவில்லையாயின் , நான் அவர்களுக்குப் பணிந்து அறிவீனர்களைச் சேர்ந்தவனாகி விடுவேன்4.
  35. எனவே , அவருடைய இறைவன் அவரது வேண்டுதலை ஏற்றுக் கொண்டு , அவர்களது சூழ்ச்சியிலிருந்து அவரைக் காப்பாற்றினான் . நிச்சயமாக அவனே எல்லாம் கேட்பவனும் , எல்லாம் அறிபவனுமாவான் .
  36. பின்னர் அ(ச்சமுதாயத்தலை) வர்கள் ( அவரின் குற்றமற்ற தன்மையின்) அறிகுறிகளைக் கண்டு (தமது நல்ல பெயரைக் காப்பாற்ற) சிறிது காலம் அவரைச் சிறையிலிட நேர்ந்தது. ரு4
  37. சிறையில் அவருடன் இரண்டு வாலிபர்களும் நுழைந்தனர் . அவர்களுள் ஒருவர் (அவரிடம்) நான் என்னைத் திராட்சையைப் பிழிந்து கொண்டிருப்பதாக (கனவில்) கண்டேன் என்றார் . மற்றொருவர் , நான் என் தலை மீது ரொட்டிகளைச் சுமந்து கொண்டிருப்பதாகவும், பறவைகள் அவற்றிலிருந்து தின்று கொண்டிருப்பதாகவும், என்னைக் (கனவில்) கண்டேன் என்றார் . (அவ்விருவரும் அவரிடம்) இதன் சரியான விளக்கத்தைத் தாங்கள் எங்களுக்குத் தெரிவியுங்கள். நிச்சயமாக நாங்கள் தங்களை நன்மை செய்பவர்களைச் சார்ந்தவராக கருதுகின்றோம் (என்றனர்).
  38. இதற்கு அவர் கூறினார் : இந்த நேரத்திற்குரிய உணவு உங்களிடம் வராது . அது வருவதற்கு முன்னரே நான் இ(ந்)த(க்கனவி)ன் சரியான விளக்கத்தை உங்களுக்கு தெரிவிக்கிறேன் . ( கனவுகளுக்கு விளக்கம் கூறுவதற்கான தகுதியாகிய ) இது ( என்னிடம் காணப்படுவதற்குக் காரணம்) என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கியதனாலாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்பவர்களுமாகிய மக்களின் மதத்தை நான் விட்டு விட்டேன் .
  39. நான் என் தந்தையரான இப்ராஹீம், இஸ்ஹாக், யாகூப் ஆகியவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். எந்தப் பொருளையும் அல்லாஹ்வுக்கு இணையாக்குவதற்கான உரிமை எங்களுக்கு கிடையாது. இது எங்கள் மீதும் (மற்ற) மக்கள் மீதும்  உள்ள அல்லாஹ்வின் அருளாகும் . ஆனால் பெரும்பாலான மக்கள் நன்றி செலுத்துவதில்லை.
  40. என் இரு சிறைச்சாலைத் தோழர்களே , வேற்றுமை கொண்டிருக்கும் கடவுளர் சிறந்தவர்களா ? அல்லது ஏகனாகவும் , மிக்க மேலானவனுமாகிய அல்லாஹ் சிறந்தவனா ?
  41. நீங்கள் அவனை விட்டு விட்டு, நீங்களும் உங்கள் மூதாதையர்களும் உருவாக்கிக் கொண்ட (கற்பனையான) சில பெயர்களைத் தவிர (வேறெதனையும்) வணங்குவதில்லை. அல்லாஹ் அவற்றிற்கு (உங்களுக்கு ஆதரவாக) எந்தச் சான்றையும் இறக்கவில்லை. தீர்ப்பு அல்லாஹ்விடமே (உள்ளது). நீங்கள் அவனையன்றி வேறெதனையும் வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டுள்ளான் . இதுவே நிலையான உண்மை மார்க்கமாகும் .ஆனால் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை .
  42. என் சிறைச்சாலைத் தோழர்களே ! ( இப்பொழுது உங்கள் கனவுகளின் விளக்கத்தைக் கூறுகிறேன்). உங்களுள் ஒருவர் தம்முடைய எஜமானுக்கு மது கொடுப்பார் . மற்றொருவர் சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்படுவார் . பின்னர் பறவைகள் அவரது தலையிலிருந்து உண்ணும். நீங்கள் எதனைக் குறித்து வினவுகிறீர்களோ , அதற்கான தீர்ப்பு (இதோ) வழங்கப்பட்டு விட்டது.
  43. அவ்விருவருள் எவரைக் குறித்து, அவர் விடுதலையடைபவராக இருக்கின்றார் என்று, தாம் கருதினாரோ அவரிடம் நீர் உம்முடைய எசமான னிடம்  என்னைப் பற்றி (யும்) கூறும் என்று அவர் சொன்னார் . பின்னர் ஷைத்தான் 5 ( சிறையிலிருந்து விடுதலை பெற்ற) அவர் , அவருடைய எஜமான னிடம் (அதனைக்) கூறுவதை மறக்கடித்து விட்டான் . அவர் (யூஸூஃப்) பல வருடங்கள் சிறையில் தங்கியிருந்தார். ரு5
  44. (சிறிது காலத்திற்குப் பின்னர்) மன்னர் கூறினார் : நான் (கனவில்) கொழுத்த ஏழு பசுக்களைக் காண்கிறேன் : அவற்றை மெலிந்த ஏழு (பசுக்கள்) தின்று கொண்டிருக்கின்றன. மேலும் பசுமையான ஏழு கதிர்களையும் , உலர்ந்த வேறு சில கதிர்களையும் (காண்கிறேன்). தலைவர்களே ! நீங்கள் கனவிற்கு விளக்கம் கூறுபவர்களாயின் , என்னுடைய (இக்) கனவைப் பற்றிய விளக்கத்தை எனக்குத் தெரிவியுங்கள்.
  45. அவர்கள் இவ்வாறு கூறினர் : (இவை ) வீணான கனவுகள். கனவுகளின் விளக்கத்தை நாங்கள் அறியோம் .
  46. (கைதிகளாகிய) அவ்விருவருள் விடுதலையடைந்து , ஒரு காலத்திற்குப் பின்னர் நினைத்துப் பார்த்தவர் இவ்வாறு கூறினார் : நான் உங்களுக்கு அதன் சரியான விளக்கத்தைத் தெரிவிப்பேன் . எனவே நீங்கள் என்னை அனுப்புங்கள் .
  47. (அவர் யூஸூஃபிடம் சென்று) யூஸூஃபே ! உண்மையாளரே ! மெலிந்த ஏழு (பசுக்கள்) தின்னுகின்ற கொழுத்த ஏழு பசுக்களையும் , பசுமையான ஏழு கதிர்களையும், உலர்ந்த (கதிர்களான) வேறு சிலவற்றையும் (கனவில் காண்பது) குறித்து, மக்கள் (விளக்கத்தைத்) தெரிந்து கொள்வதற்காக நான் அவர்களிடம் செல்ல வேண்டியதிருப்பதால் , நீர் எங்களுக்கு (அவற்றைப் பற்றிய) விளக்கத்தைத் தருவீராக என்று கூறினார்.
  48. அவர் (இவ்வாறு) கூறினார் : நீங்கள் ஏழு வருடங்கள் தொடர்ந்து உழைத்து விதைப்பீர்கள் .(இக்காலத்தில்) நீங்கள் அறுவடை செய்வதில், உண்ணக்கூடிய சிறு பகுதியைத் தவிர உள்ளவற்றை அதன் கதிர்களிலே(யே) விட்டு வையுங்கள்.
  49. பின்னர், இதன் பிறகு கடினமான (பஞ்சத்தைக் கொண்ட) ஏழு வருடங்கள் வரும். அவற்றிற்காக நீங்கள் ஏற்கனவே சேமித்து வைத்ததில் , நீங்கள் பாதுகாக்கக் கூடிய சிறு பகுதியைத் தவிர உள்ளதை அவை தின்று விடும்.
  50. பிறகு மிகுந்த அளவில் மழை பொழியும்  ஓர் ஆண்டு மக்களுக்கு வரும் . அதில் மக்கள் எண்ணெய்க்கும் திராட்சை ரசத்திற்கும் மன்றாடுவர். ரு6
  51. மன்னர் (அவர்களிடம்) : நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வாருங்கள் என்றார். எனவே (மன்னரின்)தூதர் அவரிடம் வந்ததும் அவர் ( யூஸூஃப், வந்தவரிடம்) நீர் உம்முடைய எஜமானரிடம் திருப்பிச் சென்று , தங்கள் கைகளை அறுத்துக் கொண்ட பெண்களின் நிலை என்ன என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கு அறிபவனாவான் என்றார் .
  52. (இந்தத் தூதுச் செய்தியினைக் கேட்ட ) அவர் (அதாவது மன்னர் அந்த பெண்களிடம்) : நீங்கள் யூஸூஃபை அவரது விருப்பத்திற்கு மாற்றமான ஒரு (தீய) செயலில் ஈடுபடுத்த முயன்றீர்கள் .7. (அப்போது உண்மையில்) உங்கள் பிரச்சினை என்ன ? என்றார். இதற்கு அவர்கள் அவர் அல்லாஹ்வுக்காக (த் தீயதை செய்வதற்கு) அஞ்சினார் . நாங்கள் அவரிடத்தில் எத்தீமையையும் அறிந்த தில்லை என்றனர் . அஸீஸின் மனைவி , இப்பொழுது உண்மை முற்றிலும் வெளிப்பட்டு விட்டது. நான் (தான்) அவரை, அவரது விருப்பத்திற்கு மாற்றமான (தீய) செயலில் ஈடுபடுத்த முயன்றேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களைச் சேர்ந்தவராவார் என்றாள்.
  53. (யூஸூஃப் அவரிடம் கூறினார் : வீட்டில் அஸீஸ் ) இல்லாதிருக்கும் போது, நான் அவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யவில்லை என்பதையும், நம்பிக்கைத் துரோகம் செய்வோரின் திட்டத்தை அல்லாஹ் வெற்றி பெறச் செய்வதில்லை என்பதையும் (அஸீஸாகிய) அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இது (குறித்து விசாரிக்கக் கூறினேன்).
  54. நான் என்னைக் குற்றச்சாட்டுகளிலிருந்து நீங்கியவன் எனக் கொள்ள வில்லை. (ஏனென்றால்) என் இறைவனால் கருணை காட்டப்படாத உள்ளம் நிச்சயமாக தீமையைத் தூண்டக் கூடியதே . நிச்சயமாக என் இறைவன் மிக மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான் .
  55. மன்னர் கூறினார் : அவரை (யூஸூஃபை) என்னிடம் அழைத்து வாருங்கள். அவரை எனக்கெனத் தனிப்பட்ட பொறுப்பாளராகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன். (யூஸூஃப் வந்ததும்) அவருடன் (மன்னராகிய) அவர் பேச்சு வார்த்தை நடத்திய போது , நீர் இன்று (முதல்) எம்மிடம் உயர்பதவி உடையவரும் , நம்பிக்கைக்கு உரியவருமாவீர் என்றார் .
  56. (இதற்கு) அவர் (யூஸூஃப்) என்னை நாட்டின் கருவூலங்களுக்கு (அதிபதியாக) நியமியுங்கள். ஏனென்றால் நிச்சயமாக நான் (கருவூலங்களின்) மிகச்சிறந்த பொறுப்பாளனும்(அவற்றிலிருந்து செலவு செய்வதை ) நன்கு அறிந்தவனுமாவேன் என்றார்.
  57. இவ்வாறு நாம் யூஸூஃபை நாட்டின் உயர்( பொறுப்பாளராக) நிலை பெறச் செய்தோம் . அவர் ( தம் விருப்பத்திற்கேற்ப) நாடிய இடத்தில் (எல்லாம்) தங்கினார். நாம் விரும்புவோருக்கு (இவ்வுலகிலேயே) நமது அருளினை வழங்குகின்றோம் . நன்மை செய்பவர்களுக்குரிய நற்பலனை நாம் வீணாக்கி விடுவதில்லை.
  58. நம்பிக்கை கொண்டு, (இறைவனுக்கு) அஞ்சுபவர்களுக்கு (இவ்வுலகில் கிடைக்கும் நற்பலனை விட ) மறுமையில் கிடைக்கும் நற்பலன் மேலானதாகும். ரு7
  59. யூஸூஃபின் சகோதரர்களும் (அந்த நாட்டிற்கு) வந்து அவரிடம் சென்றனர் . அவர் அவர்களை ( கண்டவுடன்) அடையாளம் தெரிந்து கொண்டார். ஆனால் அவர்கள், அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை .
  60. அவர் அவர்களுக்குரிய பொருட்களை வழங்கி அவர்களை ஆயத்தப்படுத்திய போது (அவர்களிடம்) கூறினார் : உங்கள் தந்தை வழியிலான உங்களுடைய சகோத ரரை என்னிடம் அழைத்து வாருங்கள். நான் அளவை முழுமையாக வழங்குகின்றேன் என்பதனையும் , நான் விருந்தளிப்பவர்களுள் மிகச்சிறந்த (விருந்தளிப்ப)வனாவேன்  என்பதையும் நீங்கள் காணவில்லையா ?
  61. நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வரவில்லையாயின் , உங்களுக்கு அளந்து கொடுப்பதற்கு எதுவும் என்னிடம் இருக்காது (என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். மேலும், அந்நிலையில்) நீங்கள் என்னருகில் நெருங்கவும் கூடாது.
  62. இதற்கு அவர்கள், அவருடைய தந்தை அவரைப் பிரிவதற்கு நாங்கள் கோரிக்கை விடுப்போம் . நிச்சயமாக (அதனை) நாங்கள் செய்வோம் என்றும் கூறினர்.
  63. அவர் தம் பணியாளர்களிடம் அவர்களின் பணத்தை அவர்களின் மூட்டைகளில் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் திரும்பிச் செல்லும் போது இதனை அவர்கள் புரிந்து கொண்டு ஒருவேளை அவர்கள் மீண்டும் திரும்பி வரலாம் என்றார் .
  64. அவர்கள் தங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்ற போது எங்கள் தந்தையே ! (வருங்காலத்தில்) நமக்கு (த் தானிய) அளவு தடுக்கப்பட்டு விட்டது. எனவே , நாம் மீண்டும் (தானியம்) பெறுவதற்காக எங்கள் சகோதர(னாகிய புன்யாமீ) னை (யும் ) எங்களுடன் அனுப்புவீராக . நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம் என்றனர் .
  65. அவர் கூறினார் : இதற்கு முன் இவருடைய சகோதர ரைக் குறித்து நான் உங்களை நம்பியது போல் , இவரைக் குறித்தும் நான் உங்களை நம்புவதா ? எனவே அல்லாஹ்வே மிகச்சிறந்த பாதுகாவலன். மேலும் அவன் கருணை காட்டுபவருள் மிகச்சிறந்த கருணையாளன் ஆவான் .
  66. அவர்கள் தங்கள் பொருட்களைத் திறந்த போது, தங்கள் பணம் தங்களிடமே திருப்பித் தரப்பட்டிருப்பதனைக் கண்டனர் . அவர்கள் எங்கள் தந்தையே ! (இதனைவிட அதிகமாக) நாம் வேறெதனை விரும்ப முடியும்? இது நம்முடைய பணம் . இது(வும்) நமக்குத் திருப்பித் தரப்பட்டுள்ளது. (எங்கள் சகோதரரும் எங்களுடன் வந்தால்) நாங்கள் நம் குடும்பத்தினர்க்கு உணவுப் பொருளை கொண்டு வருவோம். எங்கள் சகோதர ரை (எல்லா முறையிலும்) பாதுகாத்துக் கொண்டு, ஓர் ஒட்டகச் சுமையளவு (தானியத்தை ) மிகுதியாகக் கொண்டு வருவோம் .(நமக்கு இலவசமாகக் கிடைக்கும்) இந்த நிறை , பேர ருளாகும் என்றனர்.
  67. அவர் (அவர்களிடம்) நீங்கள் (தாமாகவே ஏதாவதொரு இன்னலால்) சூழ்ந்து கொள்ளப்பட்டாலன்றி , நீங்கள் கட்டாயமாக இவரை என்னிடம் (திருப்பிக்) கொண்டு வந்து சேர்ப்பீர்கள் என்று நீங்கள் என்னிடம் அல்லாஹ்வின் பேரில் உறுதி கூறாதவரை , நான் இவரை உங்களுடன் ஒருபோதும் அனுப்பமாட்டேன் என்றார். பின்னர் அவர்கள் அவருக்குத் தங்கள் உறுதி மொழியைக் கொடுத்த போது , அவர், நாம் கூறுவதை அல்லாஹ் கண்காணிப்பவனாவான் என்றார் .
  68. மேலும் அவர் கூறினார் : என் பிள்ளைகளே ! நகரின் ஒரே வாயில் வழியே நீங்கள் யாவரும் (சேர்ந்து) நுழையாது வெவ்வேறு வாயில்கள் வழியே நுழையுங்கள்8. அல்லாஹ்வி(ன் பிடியி) லிருந்து (காப்பாற்றப்பட) நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது. அவனிடமே நான் நம்பிக்கை வைத்துள்ளேன் .மேலும் நம்பிக்கை வைப்போர் , அவனிடமே நம்பிக்கை வைக்க வேண்டும் .
  69. அவர்களின் தந்தை அவர்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்கள் நுழைந்த போது, (எந்த நோக்கத்திற்காக இக்கட்டளை இடப்பட்டதோ , அந்த நோக்கம் நிறைவேறி விட்டது. ஆனால் யாகூப் தம்முடைய திட்டத்தின் மூலம் தம் மக்களாகிய) அவர்களை இறைத் திட்டத்திலிருந்து காப்பாற்ற முடிந்த தில்லை . ஆயினும் யாகூபின் உள்ளத்திலிருந்த ஓர் அவாவை அவர் (இவ்வாறு) நிறைவேற்றி விட்டார்9. (யாகூபாகிய) அவருக்கு நாம் ஞானத்தை வழங்கியதனால் , அவர் மிகுந்த ஞானமுடையவராக விளங்கினார். ஆனால் பெரும்பாலானவர்கள் (இந்த உண்மையினைத் ) தெரிந்து கொள்வதில்லை. ரு8
  70. அவர்கள் யூசுபிடம் சென்ற போது , அவர் தம் சகோதர ருக்கு தம் பக்கத்தில் இடமளித்து (அவரிடம்) : நிச்சயமாக நானே (காணாமற் போன) உம்முடைய சகோதரன். எனவே இவர்கள் செய்து கொண்டிருப்பது குறித்து நீர் கவலையடைய வேண்டாம் என்றார்.
  71. பின்னர் அவர் அவர்களின் பொருளை வழங்கி (அவர்கள் திரும்பிச் செல்வதற்கு) அவர்களை ஆயத்தப்படுத்திய போது, அவர் (நீர் அருந்தும் ஒரு) குவளையை தம் சகோதரரின் மூடையில் வைத்து விட்டார். 10. பிறகு (இவ்வாறு நிகழ்ந்தது) பயணக் குழுவினர்களே ! நிச்சயமாக நீங்கள் திருடர்களாக இருக்கின்றீர்கள் என்று (அரசப் பணியாளரான ) ஓர் அறிவிப்பாளர் அறிவித்தார்.
  72. (யூஸூஃபுடைய சகோதரர்களாகிய) அவர்கள் ( அரசப் பணியாளர்களாகிய ) அவர்களின் பக்கம் திரும்பி, நீங்கள் எதனை இழந்துள்ளீர்கள் என்றனர்.
  73. அவர்கள் (தானியம் அளக்கக்கூடிய) அரசரது அளவையை11 நாங்கள் இழந்துள்ளோம். அதனைக் (கண்டுபிடித்துக்) கொண்டு வருபவருக்கு(ப் பரிசாக) ஓர் ஒட்டகம் சுமக்கும் அளவு   (தானியம்) கிடைக்கும் என்றனர். (இவ்வாறு அறிவித்தவர்களுள் ஒருவர்) நான் இ(ந்)த(ப் பரிசி)ற்குப் பொறுப்பாளனாவேன் (என்றார்).
  74. அவர்கள் கூறினர் : அல்லாஹ் மேல் ஆணையாக! நாட்டில் குழப்பத்தை விளைவிப்பதற்காக, நாங்கள் (இங்கு) வரவில்லை என்பதனை நீங்கள் அறிவீர்கள். மேலும் நாங்கள் திருடர்கள் அல்ல.
  75. அவர்கள் கூறினர் : நீங்கள் பொய்யர்கள் (என்று தெளிவு) ஆகி விட்டால் அதற்குரிய தண்டனை என்ன?
  76. அவர்கள் கூறினர்: அதற்குரிய தண்டனை, அது (பாத்திரம்) எவருடைய பொருளில் காணப்படுகிறதோ அவரே இ(ந்)த(ச் செயலி)க்கும் தண்டனை(க்குரியவர்) ஆவார். நாங்கள் அநீதியிழைப்பவர்களுக்கு இவ்வாறே தண்டனையளிக்கின்றோம்.
  77. எனவே, (அறிவிப்பாளராகிய) அவர், அவருடைய (யூஸூஃபுடைய) சகோதரரின் மூடை(யைச் சோதி)க்கு முன்னர் அவர்களின் மூடைகளை(ச் சோதிக்க) ஆரம்பித்தார்12. பின்னர் அவருடைய மூடையி(னைச் சோதித்த போது, அதில் அந்தப் பாத்திரம் இருப்பதைக் கண்டு அதி)லிருந்து அதனை வெளியே எடுத்தார். இவ்வாறு நாம் யூஸூஃபிற்காக (ஒரு) திட்டம் வகுத்தோம். (இல்லையாயின்) அவரால் மன்னரின் சட்டத்தின் கீழ் (இருந்து கொண்டு) தம் சகோதர ரை அல்லாஹ்வின் நாட்டமின்றி (தம்முடன்) தங்க வைத்துக் கொள்ள இயலாது இருந்தது. நாம் விரும்புபவருக்கு பதவிகளை உயர்த்துகின்றோம். மேலும் அறிஞர்களுக்கெல்லாம் மேலான (மிகச்) சிறந்த அறிஞன் (ஒருவன்) இருக்கின்றான்.
  78. இவர் திருடியிருந்தால், (அது அப்படியொன்றும் வியப்பிற்குரியதன்று. ஏனென்றால்) அவருடைய ஒரு சகோதரர் (கூட) நிச்சயமாக முன்னர் திருடியுள்ளார் என்றனர். இதற்கு யூஸூஃப் தாம் அ(றிந்திருந்த)தை தமது மனதிற்குள் மறைத்து வைத்துக் கொண்டு அதனை அவர்களுக்கு வெளிப்படுத்தாதிருந்தார். (எனினும்) அவர் (தம் மனத்திற்குள்) நீங்கள் மிகக் கெட்ட நிலையில் உள்ளீர்கள். நீங்கள் கூறுவதனை அல்லாஹ்(வே) மிக்க நன்றாக அறிபவனாவான் என்றார்.
  79. அவர்கள் கூறினர்: (அரசவை) தலைவரே !14 இவருக்கு வயது முதிர்ந்த தந்தையொருவர் உள்ளார். எனவே இவருக்குப் பதிலாக எங்களுள் எவரையேனும் தாங்கள் (சிறைப்) பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நாங்கள் தங்களை நன்மை செய்பவர்களைச் சார்ந்தவராக கருதுகின்றோம்.
  80. அவர் கூறினார்: நாங்கள் எவரிடத்தில் எங்கள் பொருளைப் பெற்றுள்ளோமோ, அவரைத் தவிர வேறொருவரை நாங்கள் பிடிப்பதிலிருந்து இறைவனிடம் அடைக்கலம் தேடுகின்றோம். நாங்கள் அவ்வாறு செய்தால், நிச்சயமாக நாங்கள் அநீதியிழைப்பவர்களைச் சார்ந்தவர்களாவோம். ரு9
  81. எனவே, அவர்கள் அவரிடம் (யூஸூஃபிடம்)நம்பிக்கை இழந்துவிடவே, தங்களுக்குள் தனித்து ஆலோசனை செய்தனர். (அப்போது) அவர்களுள் பெரியவர் இவ்வாறு கூறினார்: அல்லாஹ்வின் பெயரால் (அதாவது அவன் மீது சத்தியம் செய்து வலியுறுத்தப்பட்ட) உறுதி மொழியினை உங்கள் தந்தை உங்களிடம் வாங்கியுள்ளார் என்பதும், (இதற்கு) முன்னர் நீங்கள் யூஸூஃப் விஷயத்தில் வரம்பு மீறியுள்ளீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியாதா? எனவே என் தந்தை (குறிப்பாக) எனக்கு அனுமதி வழங்கும் வரை அல்லது அல்லாஹ்(வே) எனக்கென்று தீர்ப்பளி(த்து ஏதாவதொரு வழியினை வகு) க்கும் வரை நான் இந்த நாட்டை விட்டுப் புறப்படமாட்டேன். தீர்ப்பு வழங்குபவர்களிலெல்லாம் மிகச் சிறந்தவன் அவனே.
  82. நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று (அவரிடம்) கூறுங்கள்: எங்கள் தந்தையே! நிச்சயமாகத் தங்களுடைய மகன் திருடி விட்டார். நாங்கள் (நேரடியாகத்) தெரிந்த தையே தங்களிடம் கூறியுள்ளோம், மறைவானதை எங்களால் பாதுகாக்க இயலவில்லை.
  83. நாங்கள் தங்கியிருந்த ஊரி(ன் மக்களி)டமும், நாங்கள் சேர்ந்து வந்த வணிகக் குழுவினரிடமும் தாங்கள் விசாரித்துப் பாருங்கள். மேலும் நிச்சயமாக நாங்கள் உண்மையே கூறுகிறோம்.
  84. அவர் (யாகூப்) கூறினார்: (இச் செய்தி சரி) இல்லை. மாறாக, உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒன்றை உருமாற்றிக் காட்டியுள்ளன15(எனத் தெரிகின்றது). எனவே, இப்பொழுது நான் அழகிய பொறுமையினை மேற்கொள்வதே (எனக்கு ஏற்றதாகும்). அல்லாஹ் அவர்களெல்லாரையும் என்னிடம் கொண்டு வருவான். நிச்சயமாக அவனே நன்கு அறிபவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  85. அவர் அவர்களிடமிருந்து விலகிச் சென்று: ( என் இறைவா!) யூஸூஃபைப் பற்றி (மீண்டும்) நான் முறையிடுகின்றேன் என்றார். அவர் வருந்திய துன்பத்தின் காரணமாக அவர் கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டன16. ஆனால் அவர் தமது துயரத்தை அடக்கி வைத்திருந்தார்17.
  86. அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக, தாங்கள் நோயாளியாக ஆகி அல்லது மரணமடையும் வரைத் தாங்கள் யூஸூஃபைப் பற்றி நினைத்துக் கொண்டேயிருப்பீர்கள் (எனத் தெரிகின்றது) என்றனர்.
  87. அவர் கூறினார்: நான் எனது மனவருத்தத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன். நான் அல்லாஹ்விடமிருந்து நீங்கள் அறியாத ஞானத்தைப் பெற்றுள்ளேன். 
  88. என்னுடைய பிள்ளைகளே! செல்லுங்கள்; (சென்று) யூஸூஃபையும், அவருடைய சகோதர ரையும் தேடுங்கள். அல்லாஹ்வின் அருளில் நிராசையடைந்து விடாதீர்கள். அல்லாஹ்வின் அருளில், நிராகரிப்பவர்களைத் தவிர வேறெவரும் நிராசையடைவதில்லை.
  89. அவர்கள் (மீண்டும்) அவரிடம் (யூஸூஃபிடம்) வந்தபொழுது, அவரிடம் கூறினர்: தலைவரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. நாங்கள் குறைவாகவே பணம் கொண்டு வந்துள்ளோம். எனவே தாங்கள் எங்களுக்கு (தானிய) அளவை முழுமையாக வழங்குங்கள். மேலும் எங்களுக்கு (ரியதை விடவும் சற்று அதிகமாக)த் தரும மும் வழங்குங்கள். நிச்சயமாக, அல்லாஹ் தருமம் வழங்குபவர்களுக்கு(ப் பெரும்) நற்பலனை வழங்குகின்றான்.
  90. அவர் கூறினார்: நீங்கள் அறியாமையில் இருந்த போது, நீங்கள் யூஸூஃபையும், அவருடைய சகோதர ரையும் என்ன செய்திருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
  91. நீர் தாமா யூஷூஃப் ? என அவர்கள் கூறினர். அவர், ஆம; நான் தான் யூஸூஃப். இவர் என் சகோதரர். அல்லாஹ் எங்கள் மீது அருள் செய்துள்ளான். எவர் (இறைவனுக்கு) அஞ்சி, பொறுமையைக் கைக் கொள்வாரோ அத்தகு நன்மை செய்பவர்களின் நற்பலனை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்குவதில்லை என்றார்.
  92. அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது தங்களுக்கு மேன்மையினை வழங்கியுள்ளான். மேலும் நிச்சயமாக நாங்கள் தவறிழைத்தவர்களாவோம் என்றனர்.
  93. அவர் கூறினார்: இன்றைய நாள் உங்கள் மீது எவ்வித குற்றச்சாட்டும் இல்லை18. அல்லாஹ்(வும்) உங்களை மன்னித்து விடுவான்.  அவன் கருணை செய்பவரெல்லாரையும் விட மிக அதிகமாக கருணை செய்பவனாவான்.
  94. நீங்கள் என்னுடைய இந்தச் சட்டையைக் கொண்டு சென்று இதனை என் தந்தையின் முன் வைத்து விடுங்கள். இதனால் அவர்கள் (என்னைப் பற்றிய) எல்லா விபரங்களையும் புரிந்து கொள்வார்கள்19. நீங்கள் உங்கள் குடும்பத்தினர் எல்லாரையும் என்னிடம் அழைத்து வாருங்கள். ரு10
  95. அவர்களின் பயணக்குழு (எகிப்திலிருந்து) புறப்பட்டதும், அவர்களின் தந்தை (மக்களிடம்) நீங்கள் என்னைப் பைத்தியக்காரனக கருதிப் பொய்ப்படுத்தினாலும் சரியே. நிச்சயமாக நான் யூஸூஃபின் நறுமணத்தை நுகர்கின்றேன் (என்றே நான் சொல்வேன்) என்றார்.
  96. இதற்கு அவர்கள் அல்லாஹ் மேல் ஆணையாக உம்முடைய பழைமையான அதே தவறுக்குள்ளாகியே இருக்கின்றீர் என்றனர்.
  97. (யூஸூஃப் கிடைத்து விட்டார் என்று) நற்செய்தி கூறுபவர் (யாகூபிடம்) வந்ததும், அவர் அ(ந்)த(ச் சட்டையி) னை அவர் முன் வைத்து விட்டார். இதனால் அவர் எல்லாச் செய்தியினையும் புரிந்து கொண்டு, (அவர்களிடம்) நீங்கள் அறியாத தை நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து நான் அறிகின்றேன் என்று நான் உங்களிடம் கூறவில்லையா என்றார்.
  98. (அப்போது) அவர்கள் (யூஸூஃபின் சகோதரர்கள்) எங்கள் தந்தையே! நீர் எங்களுக்காக (இறைவனிடம்) எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு வேண்டுவீராக: நிச்சயமாக, நாங்கள் தவறிழைத்தவர்களாவோம் என்றனர்.
  99. இதற்கு அவர்: நிச்சயமாக நான் உங்களுக்காக என் இறைவனிடம் பாவ மன்னிப்பைக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான் என்றார்.
  100. பின்னர் அவர்கள் (யாவரும்) யூஸூஃபிடம் சென்றபோது அவர், தம் பெற்றோரைத் தம்முடன் தங்க வைத்தார். மேலும், அவர் கூறினார்: நீங்கள் எல்லாரும் அல்லாஹ்வின் விருப்பப்படி எகிப்தினுள் வந்து நிம்மதியாக வாழுங்கள்.
  101. அவர், தம் பெற்றோரைத் தமது அரியணையின் மீது அமர்த்தினார். அவருக்காக அவர்கள் (அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர்களாக) சிரம்பணிந்து வீழ்ந்தனர். அவர் (யூஸூஃப்) இவ்வாறு கூறினார்: என் தந்தையே! இது ஏற்கனவே நான் கண்ட கனவின் விளக்கமே20. என் இறைவன் அதனை உண்மையாக்கினான். அவன் என்னைச் சிறையிலிருந்து வெளியேற்றி எனக்கு (மாபெரும்) அருள் செய்துள்ளான். ஷைத்தான் எனக்கும், என் சகோதரர்களுக்குமிடையில் பிணக்கை ஏற்படுத்தியதன் பின்னர், (எனக்கு மதிப்பிற்குரிய இந்தப் பதவியினை வழங்கிய) அவன் உங்களை நகர்ப்புறத்திலிருந்து (வெளியேற்றி இப்பொழுது என்னிடம்) கொண்டு வந்துள்ளான். என் இறைவன் தான் விரும்புபவரிடம் மென்மையாக (வும், பேருதவியுடனும் ) நடந்து கொள்கின்றான். நிச்சயமாக அவனே நன்கு அறிபவனும், நுட்பமான ஞானமுடையவனுமாவான்.
  102. என் இறைவா! நீ எனக்கு அதிகாரத்தினை வழங்கினாய். மேலும் எனக்கு கனவின் விளக்கத்தை (யும்) கற்றுத் தந்தாய். வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய நீ(யே) இவ்வுலகிலும், மறுஉலகிலும் எனக்கு உதவி செய்பவன். உனக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவனாக இருக்கின்ற நிலையில், நீ எனக்கு மரணத்தைத் தந்து, நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக!.
  103. (எம்முடைய தூதரே!) இது மறைவான செய்திகளைச் சார்ந்தது 21. இதனை நாம் உமக்கு வஹீ(யின் மூலம்) அறிவிக்கின்றோம். (உம்முடைய பகைவர்களாகிய) அவர்கள் (உமக்கு எதிராகத்) திட்டங்கள் வகுத்து இறுதியில் தங்களுக்குள் ஒன்றுபட்ட போது, நீர் (அந்த நேரத்தில்) அவர்களுடன் இருக்கவில்லை.
  104. (எல்லாரும் நேர்வழியினைப் பெற்று விட வேண்டுமென்று) நீர் பேரவா கொண்டாலும், (மக்களில்) பெரும்பாலார் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
  105. (தூதுச் செய்தியைப் போதிப்பதாகிய) இது தொடர்பாக நீர் அவர்களிடம் எந்தக் கூலியும் கேட்பதில்லை. நிச்சயமாக இது மனித இனம் முழுவதற்கும் ஓர் அறிவுரையேயன்றி வேறில்லை.ரு11
  106. வானங்களிலும், பூமியிலும் எத்தனையோ அடையாளங்கள் உள்ளன. அவர்கள் அவற்றைப் புறக்கணித்து விட்டு அவற்றைக் கடந்து செல்கின்றனர்.
  107. அவர்களுள் பெரும்பாலார் அல்லாஹ்விடத்தில் நம்பிக்கை கொள்ளும் அதேவேளையில், இணை வைப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
  108. அல்லாஹ்வின் தண்டனைகளுள் ஏதாவதொரு கடினமான தண்டனை அவர்களுக்கு வருவதிலிருந்து அல்லது (முன்னரே அறிவிக்கப்பட்ட) அந்த நேரம், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் திடீரென்று அவர்களுக்கு வருவதிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட்டவர்களாக ஆகி விட்டனரா?.
  109. நீர் கூறுவீராக: இதுவே எனது வழி22. நான் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்றேன். நானும் என்னைப் பின்பற்றியோரும் தெளிவான ஞானத்திலிருக்கிறோம். மேலும் அல்லாஹ் தூய்மையானவன். நான் (இறைவனுக்கு) இணை வைப்பவர்களைச் சார்ந்தவனல்லன்.
  110. உமக்கு முன்னரும் (மக்களுக்கு வழிகாட்டுவதற்காக அதே) நகரங்களைச் சேர்ந்த ஆண்களையே வஹி அறிவித்துத் தூதர்களாக அனுப்பியுள்ளோம். எனவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து தங்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று எனக் காண்பதில்லையா? (இறைவனுக்கு) அஞ்சுவோருக்கு மறுமை வீடே மிகச் சிறந்தது. எனவே நீங்கள் சிந்தித்துச் செயல்பட மாட்டீர்களா?.
  111. தூதர்கள் தம் மக்களைக் குறித்து நம்பிக்கையிழந்து24 தாங்கள் பொய்ப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணிய போது, அவர்களிடம் நம் உதவி வந்தது. நாம் விரும்பியவர்கள் காப்பாற்றப்பட்டனர். குற்றமிழைக்கும் மக்களை விட்டும் எம்முடைய தண்டனை (ஒருபோதும்) அகற்றப்பட மாட்டாது.
  112. இவர்களைப் பற்றிய விளக்கத்தில் அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக ஒரு படிப்பினை உண்டு. (ஒருக்காலும்) இது (எவராலும்) பொய்யாகப் புனைந்து கூறப்பட்ட செய்தியன்று. மாறாக, (இது) தனக்கு முன்னுள்ளதை (முழுமையாக) நிறைவேற்றக் கூடியதாகவும், ஒவ்வொன்றையும் மிகத்தெளிவாக விளக்கக் கூடியதாகவும், நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர்வழியாகவும், கருணையாகவும் இருக்கின்றது. ரு12

Powered by Blogger.