அதிகாரம் – யூனூஸ்
அருளப் பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 110
பிரிவுகள்: 11
- அளவற்ற அருளானனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அலிஃப் லாம் ரா (இந்த அதிகாரத்தின் வசனங்களாகிய) இவை முழுமையானதும் மிக நுட்பமான ஞானத்தைக் கொண்டதுமான வேத வசனங்களாகும்.
- நீர் மக்களை அச்சமூட்டி எச்சரிப்பீராக. நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் உண்மையின் உயர்ந்த தகுதி உண்டு என நீர் அவர்களுக்கு நற்செய்தி வழங்குவீராக என்று நாம் அம்மக்களுள் ஒருவருக்கு வஹியறிவித்திருப்பது, மக்களுக்கு வியப்பாக உள்ளதா? நிராகரிப்பவர்கள் நிச்சயமாக இவர் தெளிவான மந்திரவாதி என்று கூறுகின்றனர்.
- நிச்சயமாக உங்கள் இறைவன் வானங்களையும், பூமியையும் ஆறு காலக்கட்டங்களில் படைத்த அல்லாஹ்வேயாவான். பின்னர் அவன் அரியணையில் உறுதியாக நிலைகொண்டு எல்லாவற்றிற்கான ஏற்பாட்டையும் செய்கின்றான். அவனது அனுமதியின்றிப் பரிந்து பேசுபவர் எவருமில்லை. இத்தகு அல்லாஹ் (நான்), உங்கள் இறைவனாவான். எனவே நீங்கள் அவனையே வணங்குங்கள் (இவற்றிற்குப் பின்னரும்) நீங்கள் அறிவுரையைப் பெறமாட்டீர்களா?
- அவனிடமே நீங்கள் எல்லாரும் திரும்பிச் செல்ல வேண்டியது உள்ளது. அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. நிச்சயமாக அவன் படைப்பை உருவாக்குகின்றான். பின்னர் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்தவர்களுக்கு, நேர்மையான கூலி வழங்குவதற்காக அதைத் திரும்பவும் செய்கின்றான். மேலும் நிராகரித்தவர்களுக்கு அவர்கள் நிராகரித்ததன் காரணமாக குடிப்பதற்குக் கொதிக்கும் நீரும் வேதனையளிக்கக் கூடிய தண்டனையும் கிடைக்கும்.
- அவனே சூரியனைச் சுயமாக ஒளி தரக்கூடியதாகவும், சந்திரனைப் பிரகாசிக்கக் கூடியதாகவும் ஆக்கினான். மேலும் நீங்கள் வருடங்களின் எண்ணிக்கையையும் கணக்கையும் தெரிந்து கொள்வதற்காக ஒரு கணிப்பிற்கேற்ப அதற்கு நிலைகளை அமைத்தான். அல்லாஹ் இத(ன் அமைப்பி)னை உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். அவன் இந்த அடையாளங்களை அறிவுள்ள மக்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.
- இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும், வானங்கள் பூமி ஆகியவற்றுள் அல்லாஹ் படைத்திருப்பதிலும், இறையச்சம் உடைய மக்களுக்கு உறுதியான அடையாளங்கள் இருக்கின்றன.
- எம்மைச் சந்திப்பது குறித்து நம்பிக்கை இல்லாமல், இவ்வுலக வாழ்வில் திருப்தியடைந்து, அதனால் நிறைவு பெற்றவர்களும் எம்முடைய அடையாளங்களைப் பொருட்படுத்தாமளிருப்பவர்களுமாகிய.
- இவர்களே, தங்கள் சம்பாத்தியத்தின் காரணமாக நெருப்பைத் தங்குமிடமாக்கிக் கொண்டவர்கள்.
- நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு, அவர்களின் இறைவன் அவர்களது நம்பிக்கையின் காரணமாக (வெற்றிக்குரிய) வழியினைக் காட்டுவான். அருட்குரிய சுவர்கங்களில், அவர்களின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்.
- அவற்றில், ‘அல்லாஹ்வே நீ தூயவன்’ என்பதே அவர்களின் வேண்டுதலாகும். மேலும் அவற்றில் அவர்கள் ஒருவருக்கொருவர் கூறும் வாழ்த்து (உங்களுக்கு என்றென்றும்) சாந்தி உண்டாவதாக என்பதே. மேலும் இறுதியாக அவர்களின் முழக்கம் எல்லா உலகங்களையும் படைத்துக் காத்தோம்பும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்பதே. ரு1
- மக்கள் செல்வத்தைப் பெற விரைவது போன்று, அல்லாஹ் அவர்களிடம் (அவர்களுடைய செயலின் விளைவாகிய) தீமையை விரைவாக வருமாறு செய்திருந்தால், அவர்களுக்கு அவர்களின் (வாழ்வு முடிவடையும்) காலம் முன்னரே முடிந்து போயிருக்கும். (ஆனால் நாம் அவ்வாறு செய்யவில்லையாதலால்), எம்மைச் சந்திப்பதில் நம்பிக்கை இல்லாதவர்களைத் தங்களின் வரம்பு மீறுதலில் தடுமாறிக் கொண்டிருக்கும்படி நாம் அவர்களை விட்டு வைக்கின்றோம்.
- ஒரு மனிதனுக்கு ஏதாவதொருப் பெருந்துன்பம் ஏற்படும்போது அவன் ஒருக்கணித்து(ப் படுத்து)க் கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ நம்மை அழைக்கின்றான். பின்னர் நாம் அவனது துன்பத்தை அவனை விட்டும் நீக்கிவிட்டால், அவனுக்கு ஏற்பட்ட எந்த (ஒரு) துன்பத்தி(னை அகற்றுவத)ற்காகவும் அவன் நம்மை ஒருபோதும் அழைத்திராததைப் போன்று சென்று விடுகின்றான். இவ்வாறே வரம்பு மீறி நடப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருப்பவை அழகுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன.
- மெய்யாகவே நாம் உங்களுக்கு முன் பல சமுதாயங்களை, அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அடையாளங்களுடன் வந்திருந்தும் அவர்கள் அநீதி இழைத்தபோது அழித்துவிட்டோம். மேலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. குற்றமிழைக்கும் மக்களுக்கு இவ்வாறே நாம் கூலியினைக் கொடுக்கின்றோம்.
- பிறகு நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்பதனைக் காண்பதற்காக அவர்களுக்குப் பின் பூமியில் உங்களைப் பிரதிநிதிகளாக நாம் ஆக்கினோம்.
- அவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்பட்டால் நம் சந்திப்பு பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள், (முஹம்மதே!) இது தவிர வேறொரு குர்ஆனை நீர் கொண்டுவாரும். அல்லது இதனை(யே சிறிது) மாற்றிவிடும் என்று கூறுகின்றனர். நீர் (அவர்களிடம்) கூறுவீராக, நானாக இதில் மாற்றம் (எதுவும்) செய்வதென்பது எனக்குத் தகாது. வஹீயின் மூலம் எனக்கு அறிவிக்கப்படுகின்றதையே நான் பின்பற்றுகின்றேன். நான் என் இறைவனுக்கு மாறு செய்தால் மகத்தான நாளின் தண்டனைக்கு நான் அஞ்சுகிறேன்.
- மேலும் நீர் (அவர்களிடம்) கூறுவீராக: (வேறெதாவது போதிக்க) அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதனை உங்கள் முன் ஓதிக்காட்டியிருக்கமாட்டேன். அவன் இதனை உங்களுக்கு அறிவித்திருக்கவும் மாட்டான். நான் இதற்கு முன்னர் உங்களிடையே ஒரு நீண்ட வாழ்நாளைக் கழித்திருக்கின்றேனே, இதன் பிறகும் நீங்கள் ஏன் உணர்வதில்லை?
- அல்லாஹ்வுக்கு எதிராகப் பொய்யை இட்டுக்கட்டுபவனை விடவும் அல்லது அவன் அடையாளங்களைப் பொய்யாக்குபவனை விடவும் பெரும் அநீதியிழைப்பவன் எவன்? நிச்சயமாக குற்றவாளிகள் ஒரு போதும் வெற்றி பெறுவதில்லை.
- அவர்களுக்குத் தீங்கிழைக்கவோ அவர்களுக்கு நன்மையளிக்கவோ செய்யாததை அல்லாஹ்வுக்குப் பகரமாக அவர்கள் வணங்குகின்றனர். மேலும் ‘இவர்கள் எங்களுக்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்கள்’ எனக் கூறுகின்றனர். கூறுவீராக: வானங்களிலும் பூமியிலும் அவன் அறியாதவை குறித்து நீங்கள் அல்லாஹ்வுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை வைப்பதை விட்டும் அவன் மிக்க உயர்ந்தவன்.
- மேலும் மனித இனம் ஒரே கூட்டத்தினராக இருந்தனர். பின்னர் அவர்கள் தங்களுக்கிடையே கருத்து வேற்றுமை கொண்டனர். உம்முடைய இறைவனிடமிருந்து முன்னரே வந்துவிட்ட வாக்கு இல்லாதிருப்பின் அவர்கள் வேற்றுமை கொண்டிருந்தது குறித்து அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.
- இ(த் தூது)வருக்கு அவருடைய இறைவனிடமிருந்து எந்த அடையாளமும் ஏன் இறக்கப்படவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே நீர் (கூறுவீராக): மறைவானவை பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது. எனவே நீங்கள் (அதனை) எதிர்பார்த்திருங்கள், நானும் எதிர்பார்ப்பவர்களுள் ஒருவனாக உங்களுடன் இருக்கின்றேன். ரு2
- மக்களுக்கேற்பட்ட துன்பத்திற்குப் பின்னர், அவர்களை நாம் (நமது) அருளினைச் சுவைக்கச் செய்தால், உடனே நம்முடைய அடையாளங்களின் நோக்கத்தை முறியடிக்கத் திட்டம் தீட்டுகின்றனர். நீர் (அவர்களிடம்) கூறுவீராக: அல்லாஹ் (அவர்களுக்கு எதிராக) திட்டம் தீட்டுவதில் மிக விரைவானவன். நீங்கள் தீட்டுகின்ற திட்டங்களை எமது தூதர்கள் (வானவர்கள்) பதிவு செய்து கொண்டேயிருக்கின்றனர்.
- அ(ந்த இறை)வனே உங்களைத் தரையிலும் நீரிலும் பயணம் செல்ல வைக்கின்றான். எதுவரையெனில், நீங்கள் கப்பல்களில் (ஏறி) இருந்து அவர்களையும் ஏற்றிக்கொண்டு இனிய காற்றின் உதவியினால் அவை சென்று கொண்டும், அவர்கள் அவற்றைக்கண்டு மகிழ்ந்து கொண்டும் இருக்கின்ற போது, கடுங்காற்றொன்று அவற்றை நோக்கி வந்து எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் மீது அலை அடித்தது. (அதனால்) தாங்கள் சூழ்ந்து கொள்ளப்பட்டதாக அவர்கள் எண்ணினர். அப்போது அவர்கள் தங்கள் கீழ்படிதலை அவனுக்கே அர்ப்பணித்தவர்களாய்: (இறைவா!) நீ எங்களை இ(ந்த ஆபத்)திலிருந்து காப்பாற்றினால் கட்டாயம் நாங்கள் (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாய் இருப்போம் என்று (கூறி) அல்லாஹ்வை அழைத்தனர்.
- பின்னர் அவன் (இத்தண்டனையிலிருந்து) அவர்களை மீட்டதும் அவர்கள் பூமியில் நியாயமின்றி வரம்பு மீறத் தொடங்கிவிடுகின்றனர். மக்களே! நீங்கள் இவ்வுலகின் நிலையற்ற பொருள்களை மட்டும் விரும்புவது உங்கள் ஆன்மாக்களுக்கே எதிரானது. பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்பிவரவேண்டும். அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நாம் உங்களுக்கு தெரிவிப்போம்.
- இவ்வுலக வாழ்க்கை, மேகத்திலிருந்து நாம் பொழியச் செய்யும் தண்ணீரைப் போன்றதாகும். இதன் பின்னர் மக்களும் கால்நடைகளும் உண்ணுகின்ற பூமியின் விளைச்சல், அத்துடன் கலந்து விடுகிறது. எதுவறையெனில் பூமி (அதன் மூலம்) தனது அணிகலன்களைப் பெற்று வனப்புடன் தோற்றமளிக்கிறது. மேலும் அதில் வாழ்பவர்கள் தாங்கள் (அதன் விளைச்சலை) ஒன்று திரட்டிக்கொள்ளத் தகுதி பெற்றதாக எண்ணுகின்றனர். அப்போது அதன் மீது இரவிலோ பகலிலோ நம்முடைய (ஆக்கினைப் பற்றிய) கட்டளை வருகிறது. நேற்று இவ்விடத்தில் (எதுவுமே) இல்லாதிருந்தது போன்று நாம் அதனை அறுவடை செய்த வயலைப்போல் ஆக்கிவிடுவோம். சிந்தித்து செயலாற்றுபவர்களுக்கு இவ்வாறே நாம் (நம்முடைய) வசனங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றோம்.
- மேலும் அல்லாஹ் அமைதி இல்லத்திற்கு அழைகின்றான். மேலும் தான் வுரும்புவரை நேரான வழியில் நடத்திச் செல்கிறான்.
- நற்செயல் செய்பவர்களுக்கு(க் கூலி) சிறந்ததாயும் (அருள்) மிகுதியாகவும் கிடைக்கும். அவர்கள் முகம் வாடவோ அவர்கள் இகழப்படவோ மாட்டார்கள். அவர்களே சொர்கத்திற்கு உரியவர்கள். அவர்கள் அதில் என்றென்றும் வாழ்ந்து வருவர்.
- தீமைகளைச் செய்பவர்களுக்கு அதற்கு ஏற்ற தீமையே பிரதிபலனாகக் கிடைக்கும். அவர்களுக்கு இழிவு ஏற்படும். அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து அவர்களைக் காப்பாற்றுபவர் எவரும் இலர். அவர்களின் முகங்கள் இரவின் (பலவிதமான) இருளைக் கொண்ட துண்டுகளால் மூடப்பட்டிருப்பது போன்று (கருமை நிறமுள்ளவர்களாகக்) காணப்படுவர். அவர்கள் நெருப்பி(ல் வசிப்பத)ற்குரியவர்களாவர். அதில் அவர்கள் நெடுங்காலம் வாழ்வர்.
- (மக்களே! ஒரு நாளை நினைத்துப் பாருங்கள்.) அந்த நாளில் அவர்களெல்லாரையும் நாம் ஒன்று திரட்டுவோம். பின்னர் இணைவைத்தவர்களிடம்: நீங்களும் உங்களால் இணையாக்கப்பட்டவர்களும் (அப்பால் சென்று) உங்கள் இடத்தில் நில்லுங்கள் என்று கூறுவோம். பின்னர் நாம் அவர்களை ஒருவரை விட்டு ஒருவரைப் பிரித்து(ம்) விடுவோம். அவர்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்கள்: நீங்கள் எங்களை (ஒருபோதும்) வணங்கியதில்லை என்று கூறுவார்கள்.
- உங்களுக்கும் எங்களுக்குமிடையில் சாட்சியாக அல்லாஹ்(வே) போதுமானவன். நாங்கள் உங்கள் வணக்கத்தைப் பற்றி முற்றிலும் தெரியாதவர்களாகவே இருந்தோம் (என்றும் கூறுவர்).
- அப்போது அங்கு ஒவ்வொரு வரும் (தமக்காக) முன்பு பெற்றிருந்ததை உணர்வர். அவர்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடம் அவர்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவர். அவர்கள் (தாங்களாகவே) இட்டுக்கட்டிக் கூறியவை(யெல்லாம்) அவர்களை விட்டு மறைந்து விடும். ரு3
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: வானம், பூமி ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு உணவளிப்பது யார்? அல்லது காதுகளையும் கண்களையும் தனது பிடியில் வைப்பது யார்? மேலும் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துவதும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துவதும் யார்? மேலும் (இந்தச்) செயல்களெல்லாவற்றிற்கான ஏற்பாட்டைச் செய்வதும் யார்? இதற்கு அவர்கள் கூறுவார்கள்: (அவ்வாறு செய்பவன்) அல்லாஹ்வே! அப்பொழுது நீர் (அவர்களிடம், அவ்வாறாயின்) நீங்கள் ஏன் இறைவனுக்கு அஞ்சமாட்டீர்கள்? என்று கூறுவீராக.
- இத்தகையவனே உங்கள் உண்மையான இறைவனாகிய அல்லாஹ். எனவே உண்மையைத் தவிர எஞ்சியிருப்பது தெளிவான வழிகேடேயல்லாமல் வேறு எது? எனவே (நீங்களே சொல்லுங்கள்) நீங்கள் எவ்வாறு (பல்வேறு திசைகளின்பால்) திருப்பிவிடப்பட்டுக் கொண்டேயிருக்கின்றீகள்?
- இவ்வாறே, கட்டுப்படாதவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்னும் உம்முடைய இறைவனின் வாக்கு, அவர்கள் மீது நிறைவேறிற்று.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: முதன்முறையாகப் படைத்து, அதனைத் திரும்பவும் செய்கின்ற எவராவது (இறைவனுக்கு நிகராக ஏற்படுத்தும்) உங்கள் இணைகளுள் இருக்கின்றனரா? நீர் (அவர்களிடம்) கூறுவீராக: முதன்முறையாகப் படைத்து அதனைத் திரும்பவும் செய்கிறவன் அல்லாஹ் (மட்டும்) தான். எனவே, நீங்கள் எங்கே திருப்பப்படுகிறீர்கள்?
- நீர் கூறுவீராக: உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களுள் உண்மையின்பால் வழிகாட்டுபவர் எவராவது இருக்கின்றாரா? நீர் கூறுவீராக: அல்லாஹ்(வே) உண்மையின்பால் வழிகாட்டுகின்ற (இறைவனாகிய) அவன், பின்பற்றப்படுவதற்கு மிகவும் உரிமை பெற்றவனா? அல்லது தமக்கு நேர்வழிகாட்டப்பட்டாலன்றி (தாமாக) நேர்வழியினைப்பெறாத ஒருவரா? உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)? நீங்கள் எவ்வாறு தீர்ப்புகள் வழங்குகின்றீர்கள்?
- அவர்களுள் பெரும்பாலார் யூகத்தையே பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக யூகம் உண்மையின் இடத்தில் எந்த பலனும் அளிப்பதில்லை. அவர்கள் செய்து கொண்டிருப்பதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
- இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாத ஒருவரால் பொய்யாக இயற்றப்பட்டிருக்கவே இயலாது. மாறாக இது தனக்கு முன்னுள்ள (இறைவசனத்)தை மெய்ப்பிக்கின்றது. மேலும் (இறை) வேதத்தின் விளக்கமாக உள்ளது. இது எல்லா உலகங்களின் இறைவனிடமிருந்துள்ளதென்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை.
- அவர் (தாமாகவே) அதனை இயற்றியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனரா? நீர் (அவர்களிடம்) கூறுவீராக: நீங்கள் (இவ்வாறு கூறுவதில்) உண்மையாளர்களாயின், இத(ன் அதிகாரங்களுள் ஒன்றி)னைப் போன்ற ஏதாவதோர் அதிகாரத்தை(யாவது இயற்றி)க் கொண்டுவாருங்கள். மேலும் (உங்கள் உதவிக்காக) அல்லாஹ்வையன்றி உங்களால் (அழைக்க) முடிந்தவர்களை அழைத்துக்கொள்ளுங்கள்.
- (ஆனால் அவர்களது இந்த எண்ணம் சரியானதன்று). மாறாக (உண்மையில்) அவர்கள் முழுமையாக அறிந்துகொள்ளாததும், அவர்களுக்கு இன்னும் விளக்கம் கிடைக்கப் பெறாததுமான ஒன்றை அவர்கள் பொய்யாக்குகின்றனர். இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே பொய்ப்படுத்தினர். எனவே தீங்கிழைப்போரின் முடிவு என்னவாயிற்று என்பதை நீர் காண்பீராக!
- அவர்களுள் அதில் நம்பிக்கை கொள்பவர்கள் சிலர் இருக்கின்றனர். மேலும் அவர்களுள் இன்னுஞ்சிலர் அதில் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். மேலும் உம்முடைய இறைவன் குழப்பம் விளைவிப்பவர்களை நன்கு அறிகின்றான். ரு4
- அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்தினால், நீர் (அவர்களிடம்) கூறுவீராக: என் செயலுக்கு நானே பொறுப்பு, உங்கள் செயலுக்கு நீங்களே. நான் செய்கின்ற செயலி(ன் பொறுப்பி)லிருந்து நீங்கள் நீங்கியவர்களாவீர்கள். நீங்கள் செய்கின்ற செயலி(ன் பொறுப்பி)லிருந்து நான் நீங்கியவனாவேன்.
- அவர்களுள் சிலர் உமக்குச் செவிசாய்க்கின்றனர். ஆனால் நீர் அந்த செவிடர்களை, அவர்கள் சிந்தித்துச் செயலாற்றாதவர்களாயிருந்தாலும் (உம்முடைய செய்தியினைக்) கேட்கச் செய்துவிடுவீரா?
- மேலும் அவர்களுள் சிலர் உம்பக்கம் பார்க்கின்றனர். ஆனால் நீர் அந்த குருடர்களுக்கு, அவர்கள் அகப்பார்வையினைப் பெறாதவர்களாயிருந்தாலும் வழிகாட்டிவிடுவீரா?
- நிச்சயமாக அல்லாஹ் சிறிதளவும் மக்களுக்கு அநீதி இழைப்பதில்லை. மாறாக, மக்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றனர்.
- மேலும் அவர்களெல்லாம் ஒன்று சேர்க்கப்படும் நாளில், அவர்கள் ஒரு நாளின் சிறிது நேரத்தைத் தவிர (இவ்வுலகில்) தங்காததைப் போல் (உணர்வார்கள்). ஒருவரையொருவர் தெரிந்துகொள்வர். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்யாக்கியோர் நிச்சயம் இழப்புக்கு ஆளாவர். மேலும் அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கமாட்டார்கள்.
- நாம் அவர்களுக்கு அளித்த எச்சரிக்கையின் ஒரு பகுதியினை (உம்முடைய வாழ்நாளிலேயே அனுப்பி) உமக்குக் காட்டினால் (நீரும் அதனைக் கண்டுகொள்வீர்). அல்லது நாம் உமக்கு (அந்த நேரத்திற்கு முன்னரே) மரணத்தை வழங்கினால் (இந்த மரணத்திற்குப் பின்னர் அதனைப் பற்றிய உண்மை உமக்குத் தெரிந்துவிடும்). எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடமே திரும்பிவரவேண்டும். மேலும் (அவர்களுக்கும் மறுமையில் அதனைப் பற்றிய உண்மை தெரிந்துவிடும்) அவர்கள் செய்வதைப்பற்றி அல்லாஹ் உற்று நோக்குபவனாவான்.
- ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் உண்டு. எனவே அவர்களின் தூதர் வரும்போது அவர்களுக்கிடையே நேர்மையுடன் தீர்ப்பு வழங்கப்படுகின்றது. மேலும் அவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படுவதில்லை.
- மேலும் நீங்கள் உண்மையாளர்களாயின், இந்த வாக்குறுதி எப்போது (நிறைவேறும்) என்று அவர்கள் கூறுகின்றனர்.
- நீர் கூறுவீராக: அல்லாஹ் நாடுவதன்றி, எனக்காக எந்தத் தீமையையோ நன்மையையோ செய்ய எனக்கு ஆற்றல் இல்லை. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் குறிப்பிட்ட காலம் நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குரிய காலம் வந்துவிட்டால், அதிலிருந்து ஒரு நொடிப்பொழுது பிந்தவோ, முந்தவோ முடியாது.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: அவனுடைய தண்டனை இரவிலோ பகலிலோ உங்களிடம் வந்தால் குற்றவாளிகள் இயன்ற அளவு விரைந்தாலும் அதிலிருந்து எவ்வாறு தப்புவர்?
- பின்னர் அது வந்துவிடும்பொழுதா நீங்கள் அதில் நம்பிக்கை கொள்வீர்கள்? (அப்பொழுது உங்களிடம்) இவ்வாறு கூறப்படும்: என்ன! (நம்பிக்கை கொள்வது) இப்போதுதானா? ஆனால் நீங்களோ (இதுவரை) விரைவில் அது வந்துவிட வேண்டுமென்று கேட்டுக்கொண்டேயிருந்தீர்கள்.
- பின்னர் அநீதி இழைத்தவர்களிடம் (இப்பொழுது) நீங்கள் நிலையான தண்டனையைச் சுவையுங்கள் என்று கூறப்படும். நீங்கள் சம்பாதித்தற்காக அன்றி வேறெதற்காகவும் நீங்கள் தண்டிக்கப்படுகிறீர்களா? (என்றும் கூறப்படும்).
- அது உண்மைதானா என்று அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். நீர் (அவர்களிடம்) கூறுவீராக: ஆம், என் இறைவன் மேல் ஆணை! நிச்சயமாக அது முற்றிலும் உண்மையே. மேலும் (இறைவனை அவ்வாறு செய்வதிலிருந்து) உங்களால் செயலிழக்கச் செய்யமுடியாது. ரு5
- அநீதி இழைத்துக் கொண்ட ஒவ்வொருவரும் பூமியிலுள்ளவையெல்லாம் பெற்றிருந்தால் அவர் அதனை நிச்சயமாகத் தனக்கு ஈடாகக் கொடுத்திருப்பார். அவர்கள் தண்டனையைக் காணும்போது (தங்கள்) வெட்கத்தை மறைப்பார்கள். அவர்களுக்கிடையே நேர்மையுடன் தீர்ப்பு வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு (எந்த) அநீதியும் இழைக்கப்படமாட்டாது.
- கவனமாகக் கேளுங்கள், வானங்களிலும், பூமியிலுமுள்ளவை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன. நன்றாகக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
- உயிரை வழங்குபவனும், மரணத்தைக் கொடுப்பவனும் அவனே. அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
- மக்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் அறிவுரை வந்துவிட்டது. அது நெஞ்சங்களிலுள்ள (நோய்கள் எல்லா)வற்றிற்கு(ம்) குணம் (அளிக்கக்கூடியது) ஆகவும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நேர்வழியாகவும் அருளாகவும் உள்ளது.
- நீர் கூறுவீராக! (இவையெல்லாம்) அல்லாஹ்வின் அருளையும், அவனது கருணையையும் கொண்டுள்ளவையே. ஆகவே அவர்கள் இதனைக் கொண்டே மகிழ்ச்சி கொண்டாட வேண்டும். அவர்கள் சேர்த்துக் கொண்டிருப்பதைவிட இ(ந்த அருட்கொடையான)து மிகச் சிறந்ததாகும்.
- நீர் கூறுவீராக! அல்லாஹ் உங்களுக்காக உணவை இறக்கியதையும், பின்னர் நீங்கள் அதில் (சிலவற்றைக்) கூடாதவையாகவும் (மற்றுஞ் சிலவற்றை) அனுமதிக்கப்பட்டவையாகவும், ஆக்கிக் கொண்டதையும் பற்றி நீங்கள் (எப்போதாவது சிந்தித்துப்) பார்த்தீர்களா? நீர் கூறுவீராக! அல்லாஹ் உங்களுக்கு (இதற்கான) அனுமதியினை வழங்கியுள்ளானா? அல்லது நீங்கள் அல்லாஹ்வின் மீது (பொய்யை) இட்டுக்கட்டுகிறீர்களா?
- அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்கள், மறுமை நாளைக் குறித்து என்ன நினைக்கின்றனர்? நிச்சயமாக அல்லாஹ் மக்களுக்கு அருள் செய்பவனாவான். ஆனால் அவர்களுள் பெரும்பாலார் நன்றி செலுத்துவதில்லை. ரு6
- நீங்கள் எந்த வேலையில் ஈடுபட்டிருந்த போதிலும், திருக்குர்ஆனின் எந்தப் பகுதியை ஓதியபோதிலும், அல்லது ஏதாவது ஒரு பணியை (நீங்கள் அணைவரும்) செய்தபோதிலும் நீங்கள் அதில் மூழ்கியிருக்கும் நேரத்தில் நாம் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம் மேலும் அணுவளவு பொருள்கூட பூமியிலோ, வானிலோ உம் இறைவனுக்கு மறைந்ததாக இல்லை. அதைவிடச் சிறிதோ பெரிதோ யாவும் தெளிவானதொரு நூலில் (பதிவாகி) இருக்கிறது.
- கவனமாகக் கேளுங்கள், அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப்பயமும் ஏற்படாது; அவர்கள் கவலையடையவுமாட்டார்கள்.
- அவர்கள் நம்பிக்கை கொண்டு (எப்போதும்) இறைவனுக்கு அஞ்சுபவர்களாயிருக்கின்றனர்.
- அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் (இறைவனிடமிருந்து) நற்செய்தி உள்ளது. அல்லாஹ்வின் திருவசனங்களில் எந்த மாற்றமும் இல்லை. அந்த மாபெரும் வெற்றி இதுவேயாகும்.
- அவர்களின் கூற்று உங்களைக் கவலையடையச் செய்ய வேண்டாம். நிச்சயமாக எல்லா (வெற்றியும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- கவனமாகக் கேளுங்கள், வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்வையன்றி (மற்றவற்றை) அழைப்பவர்கள் (உண்மையில்) இணைவைக்கபடுபவற்றைப் பின்பற்றுவதில்லை; அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் செய்வது கற்பனையன்றி வேறில்லை.
- அவனே இரவை உங்களுக்காக நீங்கள் அதில் ஒய்வு பெறுவதற்காக ஆக்கினான். பகலை (வேலை செய்வதற்காக) ஒளிமிக்கதாகவும் ஆக்கினான். (இறைத்தூதை) கேட்பவர்களுக்கு, நிச்சயமாக இதில் பல்வேறு அடையாளங்கள் உள்ளன.
- அல்லாஹ் (தனக்கு) ஒரு மகனை ஏற்படுத்திக்கொண்டான் என அவர்கள் கூறுகின்றனர். (ஆனால்) அவன் தூய்மையானவன். அவன் தன்னிறைவு பெற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (யெல்லாம்) அவனுக்கே உரியன. இ(ந்)த (வாதத்தி)ற்கு உங்களிடம் எந்தச் சான்றும் இல்லை. நீங்கள் தெரியாத ஒன்றை அல்லாஹ்வைக் குறித்துக் கூறுகின்றீர்களா?
- நீர் (அவர்களிடம்) அல்லாஹ் மீது பொய்யைப் புனைந்து கூறுபவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை என்று கூறுவீராக.
- இவ்வுலகில் (அவர்களுக்கு) தற்காலிகப் பயன் (மட்டுமே) உள்ளது. பின்னர் அவர்கள் நம்மிடமே திரும்பவும் வரவேண்டும். இதன் பின்னர், அவர்கள் (தொடர்ந்து) நிராகரித்துக் கொண்டிருந்ததனால், நாம் அவர்களைக் கடினமான தண்டனையைச் சுவைக்கச் செய்வோம். ரு 7
- நீர் அவர்களுக்கு நூஹின் செய்தியினை எடுத்துரைப்பீராக, அதாவது அவர் தமது சமுதாயத்தினரிடம் இவ்வாறு கூறினார்: என் சமுதாயத்தினரே! என்னுடைய தகுதியும் நான் அல்லாஹ்வின் அடையாளங்களால் (உங்கள் கடமையை) நினைவூட்டுவதும் உங்களுக்கு வெறுப்பாக இருந்தால், (ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்) நான் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே நீங்கள் உங்கள் திட்டங்களையும் (நீங்கள் இறைவனுக்கு நிகராக வைத்துள்ள) உங்கள் இணைகளையும் ஒன்றுதிரட்டிக் கொள்ளுங்கள். உங்கள் செயல் திட்டம் உங்களுக்கு (எந்த வகையிலும்) ஐயத்திற்குரியதாக இருக்கவேண்டாம். பின்னர் அதனை எனக்கெதிராகச் செயல்படுத்துங்கள். எனக்கு காலக்கெடுவும் அளிக்கவேண்டாம்.
- இதன் பின்னரும் நீங்கள் புறக்கணித்து விடுவீர்களாயின், (நினைவில் கொள்ளுங்கள்) நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி வேறெவரிடத்திலுமில்லை. நான் (அவனுக்கு) முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர்களைச் சார்ந்தவனாக இருக்கவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
- ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்படுத்தினர். அப்போது நாம் அவரையும், அவருடன் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். மேலும் அவர்களை நாம் பிரதிநிதிகளாக ஆக்கினோம். மேலும், நம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்தியவர்களை நாம் மூழ்கடித்துவிட்டோம். எனவே எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு ஆயிற்று என்பதனைப் பாருங்கள்.
- அவருக்குப் பின்னர், நாம் (மேலும் பல) தூதர்களை அவ(ரவ)ருடைய சமுதாயத்தினரிடம் அனுப்பினோம். அ(த் தூது)வர்கள், அவர்களிடம் மிகத் தெளிவான அடையாளங்களைக் கொண்டுவந்தனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே அதனைப் பொய்ப்படுத்திவிட்டதனால் (அதனிடத்து) நம்பிக்கை கொள்ளவில்லை. இவ்வாறே நாம் வரம்பு மீறி நடப்பவர்களின் உள்ளங்களில் முத்திரையிடுகிறோம்.
- அவர்களுக்குப் பின்னர் நாம் மூஸாவையும், ஹாரூனையும் நம்முடைய அடையாளங்களுடன், ஃபிர்அவ்னிடமும் அவனுடைய (சமுதாயத்) தலைவர்களிடமும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் பெருமையடித்தனர். அவர்கள் (ஏற்கெனவே) குற்றமிழைக்கும் ஒரு சமுதாயத்தினராக இருந்தனர்.
- பின்னர் நம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்தபோது நிச்சயமாக இது ஒரு தெளிவான சூனியமாகும் என்று அவர்கள் கூறிவிட்டனர்.
- (இதற்கு) மூஸா (அவர்களிடம்) உண்மை உங்களிடம் வந்திருக்கும் இந்த நேரத்தில், நீங்கள் அதனைக் குறித்து (அவ்வாறு) கூறுகின்றீர்களா? இது சூனியமா(க இருக்க முடியுமா)? ஆனால், சூனியக்காரர்கள் வெற்றியடைவதில்லை என்று கூறினார்.
- இதற்கு அவர்கள்: நாங்கள் எம் மூதாதையர்கள் பின்பற்றக் கண்டத்திலிருந்து எங்களை விலக்கிவிடுவதற்காகவும், உங்கள் இருவருக்கும் நாட்டில் பெருமை கிடைப்பதற்காகவுமா நீர் எங்களிடம் வந்தீர்? ஆனால் நாங்கள் உங்கள் இருவரிடத்து ஒருபோதும் நம்பிக்கை கொள்ளமாட்டோம் என்றனர்.
- மேலும் ஃபிர்அவ்ன்: முழுமையான, புலமை பெற்ற மந்திரவாதிகளையெல்லாம் நீங்கள் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று (தனது மக்களிடம்) கூறினான்.
- எனவே மந்திரவாதிகள் வந்த போது, மூஸா அவர்களிடம்: நீங்கள் எறியப் போவதை எறியுங்கள் என்றார்.
- ஆகவே அவர்கள் (எறிய வேண்டியவற்றை) எறிந்தபோது மூஸா இவ்வாறு கூறினார். நீங்கள் கொண்டுவந்திருப்பது ஏமாற்றக் கூடியதேயாகும். நிச்சயமாக அல்லாஹ் அதனை அழித்துவிடுவான். குழப்பம் விளைவிப்பவர்களின் செயல்களை அல்லாஹ் ஒருபோதும் வெற்றிபெறவிடுவதில்லை.
- குற்றமிழைப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன் வாக்குகளால் உண்மையினை நிலைநாட்டுகின்றான். ரு8
- அவ்வாறிருந்தும் அவருடைய சமுதயாத்திலுள்ள சில வாலிபர்களைத் தவிர, மற்றவர்கள் தம்மை ஃபிர்அவ்னும் அவனுடைய (சமுதாயத்) தலைவர்களும் துன்புறுத்துவார்கள் என்ற அச்சத்தினால் மூஸா மீது நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் அந்த நாட்டில் கொடுங்கோலனாக இருந்தான். மேலும் அவன் நிச்சயமாக வரம்பு மீறி நடப்பவர்களைச் சார்ந்தவனாகவுமிருந்தான்.
- மூஸா (தமது சமுதாயத்தினரிடம்) என் சமுதாயத்தினரே! நீங்கள் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொள்பவர்களாயிருந்தால், நீங்கள் (உண்மையில்) கட்டுப்படுபவர்களாயின், அவனிடமே நம்பிக்கை வையுங்கள் என்றார்.
- இதற்கு அவர்கள் இவ்வாறு கூறினர்: நாங்கள் எங்கள் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவா! அநீதி இழைகின்ற மக்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்காதிருப்பாயாக.
- மேலும் உன்னருளின் மூலம், நிராகரிக்கின்ற மக்களி(ன் கொடுமையி)லிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக.
- நாம் மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் இவ்வாறு வஹி அறிவித்தோம்: நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்தினருக்காக எகிப்தில் வீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்களெல்லாரும் உங்கள் வீடுகளை ஒன்றுக்கொன்று எதிரும்புதிருமாக இருக்குமாறு அமைத்துக்கொள்ளுங்கள். மேலும் (அவற்றில்) மிகச் சிறந்த முறையில் தொழுகையினை நிறைவேற்றிக் கொண்டிருங்கள். மேலும் (மூஸாவே) நீர் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (வெற்றியினைப் பற்றிய) நற்செய்தியினை வழங்குவீராக (என்றும் வஹீ அறிவித்தோம்).
- மேலும் மூஸா கூறினார்: எங்கள் இறைவா! நீ ஃபிர்அவ்னுக்கும் அவனுடைய சமுதாயத் தலைவர்களுக்கும் (இந்த) உலக வாழ்க்கையில் அலங்காரத்தையும் செல்வங்களையும் வழங்கியுள்ளாய், ஆனால், எங்கள் இறைவா! அதன் விளைவாக அவர்கள் உன்னுடைய வழியிலிருந்து (மக்களைத்) தவறச் செய்கின்றனர். எனவே நீ அவர்களின் செல்வங்களை அழித்து விடுவாயாக. அவர்களின் உள்ளங்கள் மீதும் தண்டனை அளிப்பாயாக. ஏனெனில் வேதனையளிக்ககூடிய தண்டனையைக் காணாதவரை அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
- (அல்லாஹ்) கூறினான்: உங்கள் இவருடைய பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது. எனவே நீங்களிருவரும் உறுதியாக நிலைத்திருங்கள். மேலும் அறிவற்றவர்களின் வழியை ஒருபோதும் பின்பற்றாதீர்கள்.
- நாம் இஸ்ராயீலின் மக்களைக் கடலைக் கடக்க வைத்தோம். ஃபிர்அவ்னும் அவனுடைய படைகளும், கிளர்ச்சியாளர்களாயும், வரம்பு மீறுபவர்களாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். மூழ்கிவிடும் ஆபத்து அவனுக்கு(ம் அவனுடைய படைகளுக்கும்) நேரிட்டபோது அவன் கூறினான்: இஸ்ராயீலின் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்ற அவனையன்றி வேறெதுவும் வணக்கதிற்குரியதல்லவென்று நான் நம்பிக்கை கொள்கிறேன். நான் கட்டுப்பட்டு நடப்பவர்களைச் சேர்ந்தவர்களுள் ஒருவனாக இருக்கின்றேன்.
- (அதற்கு நாம் கூறினோம்:) நீ முன்னர் கட்டுப்படாதவனாய் இருந்திருந்தும், குழப்பம் விளைவிப்போரில் ஒருவனாய் இருந்தும், இப்பொழுதுதானா (நம்பிக்கை கொள்கிறாய்)?
- எனவே உனக்குப் பிறகு வரப்போகிறவர்களுக்கு, நீ ஓர் அடையாளமாக இருப்பதற்காக இப்பொழுது நாம் உன்னை உன்னுடைய உடலளவில் காப்பாற்றுகிறோம். மேலும் நிச்சயமாக மக்களுள் பெரும்பாலார் நம்முடைய அடையாளங்களைப் பற்றி கவனமற்றவர்களாக இருக்கின்றனர்.
- நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு (எல்லா வகையிலும்) சிறப்பிற்குரிய இடத்தை வழங்கினோம். (எல்லா வகையிலும்) தூய்மையான (விருப்பத்திற்குரிய) பொருள்களை(யும்) அவர்களுக்கு வழங்கினோம். பின்னர் அவர்களிடம் சரியான ஞானம் வந்துவிட்ட அந்த நேரம்வரை அவர்கள் (எதிலும்) கருத்துவேறுபாடு கொள்ளவில்லை. அவர்கள் இப்பொழுது கருத்துவேறுபாடு கொண்டிருப்பது குறித்து நிச்சயமாக உம்முடைய இறைவன் அவர்களுக்கிடையே மறுமைநாளில் தீர்ப்பு வழங்குவான்.
- பின்னர் (குர்ஆனைப் படிப்பவரான) நீர், உமக்கு நாம் இறக்கியது குறித்து ஏதாவது ஐயத்திற்குள்ளானால் உமக்கு முன்னர் இந்த வேதத்தைப் படித்துக் கொண்டிருப்போரிடம் கேளும். நிச்சயமாக முழுமையான (ஓர்) உண்மை உம்முடைய இறைவனிடமிருந்து உம்மிடம் வந்துள்ளது. எனவே நீர் ஐயங்கொள்பவர்களைச் சார்ந்தவராகிவிடவேண்டாம்.
- மேலும் அல்லாஹ்வின் அடையாளங்களைப் பொய்ப்படுத்தியவர்களைச் சார்ந்தவராக நீர் ஒருபோதும் ஆகிவிடவேண்டாம். இல்லையேல் நீர் நஷ்டவாளிகளைச் சார்ந்தவராகி விடுவீர்.
- எவர்களைக் குறித்து உம்முடைய இறைவன் (இடமிருந்து தண்டனை பற்றிய) தீர்ப்பு வந்துவிட்டதோ அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
- வேதனைக்குரிய ஆக்கினையை அவர்கள் காணும் வரை எல்லா அடையாளங்களும் அவர்களிடம் வந்து விட்டாலும் சரியே (அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்).
- யூனுஸுடைய சமுதாயம் தமது நம்பிக்கையை கொண்டு பயன் அடைந்தது போன்று, ஏனைய நாட்டவர்கள் (முழுவதும்) ஏன் நம்பிக்கை கொள்ளவில்லை? (யூனுஸுடைய சமுதாய மக்களாகிய) அவர்கள் நம்பிக்கை கொண்டபோது, நாம் அவர்களிடமிருந்து இவ்வுலக வாழ்க்கையிலேயே இழிவிற்குரிய தண்டனையை அகற்றிவிட்டோம். அவர்களுக்குச் சிறிது காலம் வரை (எல்லாவகையான) பொருட்களையும் வழங்கினோம்.
- உமது இறைவன் (கட்டாயமாக) விரும்பியிருந்தால் பூமியிலுள்ளவர்கள் எல்லாருமே ஒன்றாக நம்பிக்கை கொண்டிருப்பர். (எனவே இறைவனே கட்டாயப்படுத்தாதிருக்கும் போது) மக்கள் நம்பிக்கை கொள்வதற்காக நீர் அவர்களைக் கட்டாயப்படுத்துவீரா?
- அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த ஆன்மாவாலும் நம்பிக்கை கொள்ள இயலாது. அறிவைப் பெற்றிருந்தும், அதனால் சிந்தித்துச் செயல்படாதவர்களிடத்து அவன் தனது கோபத்தை இறக்குகின்றான்.
- நீர் (அவர்களிடம்): நீங்கள் வானங்களிலும் பூமியிலும் (நிகழ்ந்துக்கொண்டு) இருப்பது என்னவென்று (சிந்தித்துப்) பாருங்கள் என்று கூறுவீராக. ஆனால் எவ்வகையான அடையாளங்களும், எச்சரிக்கைகளும் நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு எப்பயனும் அளிக்காது.
- பின்னர் அவர்கள் தங்களுக்கு முன்னர் சென்று விட்டவர்களின் (தண்டனை) நாட்களைப் போன்ற நாட்களைத் தவிர வேறெதனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்? நீர் அவர்களிடம் கூறுவீராக: நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களுள் ஒருவனாக இருகின்றேன்.
- பின்னர் நாம் நம்முடைய தூதர்களையும், அவர்களிடத்து நம்பிக்கை கொண்டவர்களெல்லாரையும் காப்பாற்றுவோம். இவ்வாறே (எப்போதும் நடைப்பெறுகிறது). நாம் நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றுவதைக் கடமையாக கொண்டுள்ளோம். ரு10
- நீர் கூறுவீராக: மக்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தைப் பற்றி ஏதேனும் ஐயம் கொண்டிருப்பின் (ஒன்றைக் கேட்டுக்கொள்ளுங்கள்:) அல்லாஹ்வையன்றி, நீங்கள் வணங்குபவர்களை நான் வணங்குவதில்லை. மாறாக, நான் உங்களுக்கு மரணத்தையளிப்பவனாகிய அல்லாஹ்வை வணங்குகின்றேன். நான் நம்பிக்கை கொண்டிருப்பவர்களைச் சேர்ந்தவனாக விளங்கவேண்டுமென்று எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
- மேலும், (பின்வரும் இறைக்கட்டளைகளை நான் எடுத்துரைக்க வேண்டுமென்றும் எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது). நீர் முற்றிலும் (அல்லாஹ்வின்பால்) சாய்ந்தவராய், நம்பிக்கைகளை உமது உறுதியான குறிக்கோளாக்கிக் கொள்க. நீர் ஒருபோதும் இணைவைப்பவர்களைச் சேர்ந்தவராகி விடவேண்டாம்.
- மேலும், அல்லாஹ்வையன்றி உமக்கு பயன் அளிக்காததும், தீங்கிழைக்காததுமான எதையும் நீர் அழைக்க வேண்டாம். நீர் (அவ்வாறு) செய்தால், அந்நிலையில் நிச்சயமாக நீர் அநீதி இழைப்பவர்களைச் சேர்ந்தவராவீர்.
- மேலும், அல்லாஹ் உமக்கு ஏதாவதொரு துன்பத்தைக் கொடுத்தால் அதனை அகற்றுபவர் அவனையன்றி வேறெவருமில்லை. அவன் உமக்கு ஏதாவதொரு நன்மையினை நாடினால், அவனுடைய அருளைத் தடுத்து நிறுத்துபவர் எவருமில்லை. அவன் தன் அடியார்களுள் தான் விரும்புபவருக்கு(த் தன் அருளை) வழங்குகின்றான். மேலும் அவன் மிக அதிகமாக மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைக்காட்டுபவனுமவான்.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: மக்களே! உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து உண்மை வந்துவிட்டது. எனவே நேர்வழியினைப் பின்பற்றுபவர் தமக்காகவே பின்பற்றுகின்றார். (இந்த வழியிலிருந்து) தவறி விடுகின்றவர் தமக்கு எதிராகவே தவறுகின்றார். மேலும் நான் உங்களுக்குப் பொறுப்பாளியல்லன்.
- உமக்கு அருளப்படுகின்ற இறையறிவிப்பை நீர் பின்பற்றுவீராக. மேலும் அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமையை மேற்கொள்வீராக. மேலும் தீர்ப்பு வழங்குபவர்களுள் சிறந்தவன் அவனே. ரு11