அதிகாரம் : அல் ஃபுர்கான்
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள் : 78
பிரிவுகள் : 6
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- தன் அடியாருக்கு, அவர் எல்லா உலகங்களுக்கும் எச்சரிக்கையாளராக விளங்க (இந்த) ஃபுர்க்கானை1 (அதாவது குர்ஆனை) இறக்கியவனே அருளுக்குரியவன்.
- வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் எந்த மகனையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனது ஆட்சியில் அவனுக்குப் பங்காளி எவரும் இல்லை. அவன் ஒவ்வொன்றையும் படைத்து அதற்கு(த் தகுந்த) அளவையும் விதித்துள்ளான்.
- இருந்தும் அவர்கள் அவனைத் தவிர (வேறு) கடவுளரை உருவாக்கிக் கொண்டனர். அக்கடவுளர் எதனையும் படைப்பதில்லை. அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் தங்களுக்குத் தீங்கிழைப்பதற்கும், பயனளிப்பதற்கும் ஆற்றல் பெறாதவர்கள். மேலும் அவர்களுக்கு மரணத்திலும், வாழ்விலும், பின்னர் உயிர் பெற்றெழுவதிலும் எந்த அதிகாரமும் இல்லை.
- இது அவர் இட்டுக்கட்டிய ஒரு பொய்யே என்றும், இதற்கு மற்றொரு சமுதாயம் அவருக்கு உதவி செய்துள்ளது என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர். எனவே அவர்கள் (இவ்வாறு கூறி) மாபெரும் அநீதியிழைத்துப் பெரும் பொய்யும் உரைத்துள்ளனர்.
- மேலும் இது (குர்ஆன்) முன்னோர்களின் கதைகள் (என்றும்) இதனை அவர் (ஒருவரைக் கொண்டு) எழுத வைத்துள்ளார், (என்றும்) மேலும் இது காலையிலும், மாலையிலும் அவருக்குப் படித்துக் காட்டப்படுகின்றது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
- நீர் கூறுவீராக: வானங்கள், பூமி ஆகியவற்றின் இரகசியங்களை அறிப(வனாகிய இறை)வன் இதனை இறக்கியுள்ளான். அவன் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான்.
- மேலும் அவர்கள் கூறுகின்றனர்: இத் தூதருக்கு என்ன நேர்ந்து விட்டது? இவர் உணவு உண்ணுகிறார். கடை வீதிகளிலும் நடமாடுகிறார். அவருடனிருந்து மக்களை எச்சரிக்கும் ஒரு வானவர் அவரிடம் ஏன் இறக்கப்படவில்லை?
- அல்லது அவருக்கு ஒரு கருவூலம் இறக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது அவருக்கு ஒரு தோட்டம், அதிலிருந்து அவர் உண்பதற்காக இருக்க வேண்டும். மேலும் உணவளிக்கப்படுகின்ற ஒரு மனிதரையே நீங்கள் பின்பற்றுகிறீர்கள் என அநீதி இழைப்போர் கூறுகின்றனர்.
- அவர்கள் உம்மைக் குறித்து எவ்வாறெல்லாம் உதாரணங்களைப் புனைந்து பேசுகின்றனர் என்பதைப் பார்ப்பீராக. அவர்கள் தவறான வழியில் சென்று விட்டனர். எனவே அவர்களால் (நேரான) ஒரு வழியினை அடையவே முடியாது. ரு1.
- பேரருளுக்குரிய (இறை)வன் நாடினால் அதை விட மிகச்சிறந்த தோட்டங்களை உமக்காக உண்டு பண்ணி விடுவான்3. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். உமக்காக அவன் பெரும், பெரும் மாளிகைகளையும் தயாரித்து விடுவான்.
- உண்மையிலேயே அவர்கள் (மறுமை) நேரத்தை மறுக்கின்றனர். (மறுமை) நேரத்தை மறுப்போருக்கு சுடர் விட்டெரியும் தண்டனையை நாம் ஆயத்தப்படுத்தியுள்ளோம்.
- அவர்களை அது (நரகம்) தொலைவிலிருந்து காணும் போது, அவர்கள் அதன் சீற்றத்தையும், பேரிரைச்சலையும் கேட்பார்கள்.
- அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, அதன் இடுக்கமான ஓரிடத்தில் எறியப்படும் போது அவர்கள் அங்கு (தம்) மரணத்தை விரும்புவார்கள்.
- (அப்போது வானவர்கள் அவர்களிடம் கூறுவர்) இன்று நீங்கள் ஒரு மரணத்தை (மட்டும்) நாட வேண்டாம். மாறாக, பல மரணங்களை நாடுங்கள். (ஏனெனில் உங்கள் மீது மீண்டும், மீண்டும் தண்டனை வரப் போகின்றது).
- நீர் கூறுவீராக: இது சிறந்ததா? அல்லது இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நிலையான தோட்டம் சிறந்ததா? அது அவர்களுக்குரிய (சரியான) பலனும், இறுதித் தங்குமிடமுமாகும்.
- அவர்கள் விரும்புவதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் (அதில்) என்றென்றும் வாழ்ந்து வருவர். இது, (இதனை) நிறைவேற்றுவதைத் தன் கடமையாகக் கொண்டுள்ள உம் இறைவனின் வாக்குறுதியாகும்.
- அவன் அவர்களையும், அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்கி வந்தவற்றையும் ஒன்று சேர்க்கும் நாளில் அவர்களிடம், நீங்கள் தாம் என்னுடைய இந்த அடியார்களை வழி தவறச் செய்தீர்களா? அல்லது அவர்களாகவே வழி தவறி விட்டனரா? எனக் கூறுவான்.
- அவர்கள் (இறைவனை நோக்கி) நீ தூயவன். நாங்கள் உன்னையன்றி மற்றவர்களை எங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள எங்களுக்கு எந்த உரிமையும் இருந்ததில்லை. ஆனால் அவர்களும், அவர்களின் மூதாதையர்களும் (உன்) அறிவுரையை மறந்து அழிவிற்குள்ளாகும் சமுதாயத்தினராகும் வரையிலும், நீ அவர்களுக்கு (உலகப்) பொருட்களை வழங்கினாய் எனப் பதிலளிப்பார்கள்.
- (அப்பொழுது நாம் இணை வைப்பவர்களிடம் கூறுவோம்) : நீங்கள் கூறியவற்றைக் குறித்து உங்களை அவர்கள் பொய்யராக்கி விட்டனர். ஆகவே (இன்று) உங்களால் தண்டனையை அகற்றவும் முடியாது. எந்த உதவியையும் பெறவும் முடியாது. உங்களுள் அநீதியிழைப்பவரை நாம் பெரும் தண்டனையைச் சுவைக்கச் செய்வோம்.
- உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாரும் உணவு உண்டனர். கடை வீதிகளில் நடமாடினர். நாம் உங்களுள் சிலரைச் சிலருக்கு சோதனையாக்கியுள்ளோம். (முஸ்லீம்களாகிய) நீங்கள் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றீர்களா? (இல்லையா என்பதனைக் காண அவ்வாறு செய்துள்ளோம்) உமது இறைவன் நன்கு பார்ப்பவனாவான். ரு2
- எம்மைச் சந்திப்பதை எதிர் பாராதவர்கள், வானவர்கள் எங்களிடத்து ஏன் இறக்கப்படவில்லை? அல்லது நம் இறைவனை நம் கண்களால் ஏன் காண்பதில்லை எனக் கூறினர். நிச்சயமாக அவர்கள் தங்களைக் குறித்துப் பெருமையடிக்கின்றனர். மேலும் அவர்கள் வரம்பு மீறுவதில் மிகவும் முன்னேறியுள்ளனர்.
- ஒருநாள் அவர்கள் வானவர்களைக் காண்பார்கள். அந்நாளில் குற்றவாளிகளுக்கு எந்த நற்செய்தியும் இருக்காது. அவர்கள் (பதற்றமடைந்து) ஒரு பெருந்தடை இருக்க வேண்டாமா? என்று கூறுவார்கள்.
- அவர்கள் செய்த அனைத்தையும் நாம் கவனித்தோம். அதனை நாம் சிதறடிக்கப்பட்ட துகள்களாக்கி விட்டோம்.
- சுவர்க்கத்திற்குரியவர்கள் அந்நாளில் சிறந்த தங்குமிடத்தைக் கொண்டவர்களாயும், மிக மேலான துயில் கொள்ளுமிடத்தைக் கொண்டவர்களாயுமிருப்பர்.
- மேகங்களால் வானம் பிளந்து, வானவர்கள் தொடர்ந்து இறக்கப்படும் நாளை (நினைத்துப் பாருங்கள்).
- அந்நாளில் ஆட்சி உண்மையிலேயே அளவற்ற அருளாள(னான இறைவ)னுக்குரியதாக இருக்கும். அது நிராகரிப்போருக்கு ஒரு கடினமான நாளாகவுமிருக்கும்.
- அந்நாளில் அநீதியிழைத்தவர் தம் கைகளைக் கடித்துக் கூறுவர், அந்தோ! நான் தூதருடன் வழி நடந்திருக்க வேண்டுமே!
- எனக்கு அழிவு தான். அந்தோ! நான் இன்னாரை நண்பராக்கிக் கொள்ளாமல் இருந்திருக்க வேண்டுமே!
- (இறைவனை) நினைவூட்டும் (செய்தி) என்னிடம் வந்த பின், அதிலிருந்து அவன் என்னை வழி தவறச் செய்தான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனைத் தனியாக விட்டுச் செல்கின்றான்.
- என் இறைவா! என் சமுதாயத்தினர் இந்தக் குர்ஆனை முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டனர் என்று தூதர் கூறுவார்.
- இவ்வாறு நாம் எல்லா நபிமார்களுக்கும், குற்றவாளிகளிலிருந்து பகைவர்களை உருவாக்கியுள்ளோம். நேர்வழி காட்டவும், உதவி செய்யவும் உமது இறைவனே போதுமானவன்.
- குர்ஆன் இவர் மீது ஒரே வேளையில் ஏன் இறக்கப்படவில்லை? என நிராகரிப்போர் கூறினர் . அவ்வாறே. (ஆனால் குர்ஆனாகிய) இதன் மூலம் நாம் உமது உள்ளத்தை உறுதிப் படுத்தவும்4, இதனை மிகச்சிறந்ததாக அமைக்கவுமே நாம் இதனைப் படிப்படியாக இறக்கினோம்.
- (உம்மை மறுப்பதற்காக) அவர்கள் எதனைக் கூறினாலும் அதற்குச் சரியான பதிலையும், மிகச்சிறந்த விளக்கத்தையும் நாம் உமக்கு வழங்கி விடுகின்றோம்.
- தங்கள் தலைவர்களுடன் நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுபவர்கள் மிகத் தீய நிலையை உடையவர்களும், நேர்வழியிலிருந்து மிகவும் தவறியவர்களுமாவார். ரு3.
- நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கி, அவருடன் அவரது சகோதரர் ஹாரூனையும் உதவியாளராக அனுப்பினோம்.
- எம் வசனங்களை மறுத்து விட்ட சமுதாயத்தினரிடம் நீங்கள் இருவரும் செல்லுங்கள் என்று நாம் கூறினோம். பின்னர் (மறுத்து விட்ட) அவர்களை முழுமையாக அழித்து விட்டோம்.
- நூஹ்வுடைய சமுதாயத்தினர் தூதர்களை நிராகரித்த போது, நாம் அவர்களை மூழ்கடித்து, மக்களுக்கு ஓர் அடையாளமாக அவர்களை ஆக்கி விட்டோம். மேலும் அநீதியிழைப்பவர்களுக்காக நாம் துன்புறுத்தும் தண்டனையை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளோம்.
- ஆது, ஸமூது சமுதாயங்களையும், கிணற்று சமுதாயத்தையும்5, அவற்றிற்கிடையிலுள்ள மற்றும் பல சமுதாயங்களையும் (நாம் அழித்து விட்டோம்).
- அவற்றுள் ஒவ்வொரு சமுதாயத்தையும் நாம் உதாரணம் மூலம் எச்சரிக்கை செய்தோம். மேலும் (அவை, அதனைப் புரிந்து கொள்ளாததனால்) அவை எல்லாவற்றையும் முற்றிலும் அழித்து விட்டோம்.
- (நிராகரிப்பாளர்களாகிய) அவர்கள் துன்பம் தரும் மழை பொழிந்த நகரத்தைக் கடந்து சென்றுள்ளனர்6. அவர்கள் அ(ந்த நகரத்தின் அடையாளத்)தைக் காண்பதில்லையா? உண்மையிலேயே அவர்கள் மீண்டும் எழுப்பப்படுவதை எதிர்பார்ப்பதில்லை.
- அவர்கள் உம்மைக் காணும் போது ஏளனத்திற்குரிய ஒரு பொருளாகவே உம்மைக் கருதுகின்றனர். (மேலும் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்): அல்லாஹ் இவரையா தூதராக அனுப்பியுள்ளான்?
- நாம் (நம் கடவுளராகிய) அவற்றில் நிலைத்திருக்காவிடில், அவர் நம் கடவுளரிடமிருந்து நம்மை ஏறத்தாழ வழிதவறவே செய்திருப்பார் (என்றும் கூறுவார்கள்). மேலும் அவர்கள் தண்டனையைக் காணும் போது (நேர்) வழியிலிருந்து மிகவும் தவறியவர் எவர் என்பதை கட்டாயம் அறிந்து கொள்வார்கள்.
- (தூதரே!) தமது தீய இச்சைகளை தமது கடவுளாக ஆக்கிக் கொண்டவரது நிலையை நீர் காணவில்லையா? (அவனைக் கட்டாயப்படுத்தித் தவறான வழியிலிருந்து தடுப்பதற்கு) நீர் அவருக்குக் கண்காளிப்பாளர் ஆவீரா?
- அவர்களுள் பெரும்பாலானவர்கள் செவியேற்கின்றனர் அல்லது உணர்கின்றனர் என்று நீர் கருதுகின்றீரா? அவர்கள் விலங்குகளைப் போன்றவர்களேயாவர். மாறாக நடைமுறையைப் பொருத்தவரை அவர்கள் அவற்றை விடவும் மிகக் கெட்டவர்களாவர். ரு4
- (செவியேற்பவரே!) உமது இறைவன் நிழலை எவ்வாறு நீட்டியுள்ளான் என்பது உமக்குத் தெரியாதா? அவன் நாடியிருந்தால், அதனை ஓரிடத்தில் (அப்படியே) இருக்குமாறு செய்திருப்பான். பின்னர், நாம் சூரியனை அதன் மீது சான்றாக ஆக்கினோம்.
- பின்னர் நாம் அதனைப் படிப்படியாக எம் பக்கம் ஈர்த்துக் கொள்கிறோம் 7.
- அவனே இரவை உங்களுக்கு ஆடையாகவும், தூக்கத்தை ஓய்விற்குரியதாகவும் ஆக்கினான். அவனே பகலை எழுவதற்கும் (செயல்படுவதற்கும்) உரியதாக ஆக்கினான்.
- அவனே தன் அருள் மழைக்கு முன்னதாக காற்றுகளை நற்செய்தியாக அனுப்புகிறான். மேலும் மேகத்திலிருந்து தூய நீரையும் இறக்கினோம்.
- அதனால், உயிரற்ற பூமியை உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்த கால்நடைகளையும், பெருமளவில் மனிதர்களையும் அதிலிருந்து பருகச் செய்வதற்காகவும் (அதனை இறக்கினோம்).
- அவர்கள் அறிவுரையினைப் பெற (பல்வேறு வழிகளில்) நாம் இதனை அவர்களுக்கு நன்கு விளக்கியுள்ளோம். ஆனால் மக்களுள் பெரும்பாலார் நிராகரிப்பைத் தவிர எல்லாவற்றையும் மறுக்கின்றனர்.
- நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஊருக்கும் ஓர் எச்சரிக்கையாளரை அனுப்பியிருப்போம்.
- எனவே நீர் நிராகரிப்பவர்களைப் பின்பற்றாதீர். நீர் (குர்ஆனாகிய) இதனால் அவர்களுடன் பெரும் அறப்போர் நிகழ்த்துவீராக.
- அவனே இரண்டு கடல்களைப்8 பாயச் செய்துள்ளான். அவற்றுள் ஒன்று சுவையானதும், இனியதுமாகும். மற்றொன்று உவர்ப்பானதும், கசப்பானதுமாகும். அவன் அவ்விரண்டிற்கிடையில் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளான். ஒன்றுடனொன்று இணைந்து விடாது தனித்தனியே இருக்குமாறும்9 செய்துள்ளான்.
- அவனே நீரிலிருந்து10 மனிதனைப் படைத்தான். அவன், அவனுக்குப் பரம்பரை உறவையும், திருமண உறவையும் ஏற்படுத்தியுள்ளான். உமது இறைவன் பேராற்றல் பெற்றவனாவான்.
- (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் தங்களுக்கு எந்தப் பலனோ, எந்தத் தீங்கோ ஏற்படுத்த முடியாத வற்றை அல்லாஹ்விற்குப் பகரமாக வணங்குகின்றனர். நிராகரிப்பவர் எப்போதும் தம் இறைவனுக்கு மாறு செய்பவராக இருக்கின்றார்.
- நாம் உம்மை நற்செய்தி வழங்குபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.
- நீர் கூறுவீராக: நான் உங்களிடம் இதற்கு எந்தக் கைமாறும் கோருவதில்லை. ஆனால், எவரேனும்(தாமாக) விரும்பினால் அவர் தம் இறைவனிடம் செல்லும் வழியைப் பெற்றுக் கொள்ளலாம்11. (இதுவே எனக்குரிய கைமாறு)
- நீர் என்றும் மரணமடையாத உயிருள்ளவனிடமே நம்பிக்கை வைத்து, அவனைப் புகழ்வதன் மூலம் அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. தன் அடியார்களின் பாவங்களை அறிவதற்கு அவனே போதுமானவன்.
- அவன் வானங்களையும், பூமியையும் அவற்றிற்கிடையிலுள்ள எல்லாவற்றையும் ஆறு கால கட்டங்களில் படைத்தான். பின்னர் அவன் அரியணையில் உறுதியாக நிலை கொண்டான். அவன் அளவற்ற அருளாளனாவான். எனவே, நீர் அவனைக் குறித்து நன்கு அறிந்தவரிடம்12 வினவுவீராக.
- அளவற்ற அருளாளனான (இறை)வனுக்குச் சிரம் பணியுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அளவற்ற அருளாளன் என்பது யார்? நீர் எங்களுக்குக் கட்டளையிடும் ஒன்றிற்கு நாங்கள் சிரம் பணிவதா?", என்று கேட்கின்றனர். மேலும் இது அவர்களுக்கு வெறுப்பை அதிகமாக்குகின்றது. ரு5
- வானத்தில் நட்சத்திரக் கூட்டங்களை அமைத்து, அதில் (ஒளிரும்) சூரியனையும், ஒளிவீசும் சந்திரனையும் அமைத்த (இறை)வன் அருளுக்குரியவனாவான்.
- அறிவுரையினைப் பெற விரும்புபவர் அல்லது நன்றியுடையோராய் இருக்க விரும்புபவரு(டைய பயனு)க்காக அவனே இரவையும், பகலையும் ஒன்றையொன்று பின் தொடரக் கூடியதாக ஆக்கினான்.
- அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னின் (உண்மையான) அடியார்கள் பூமியில் பணிவுடன் நடப்பவராவர். அறிவற்றவர்கள் அவர்களுடன் (அறிவீனமாகப்) பேசினால் அவர்கள் சாந்தி எனக் கூறி(ச் சென்று) விடுவார்கள்.
- மேலும் அவர்கள் தங்கள் இறைவனுக்காக சிரம் பணிந்தும், நின்றும் (வணங்கியவர்களாக) இரவுகளைக் கழிப்பார்கள்.
- மேலும் அவர்கள், " எங்கள் இறைவா! எங்களிடமிருந்து நரகத் தண்டனையை அகற்றி விடுவாயாக; ஏனெனில் அதன் தண்டனை ஒரு பெரும் வேதனையாகும்", என்று கூறுவார்கள்.
- நிச்சயமாக அது தற்காலிகமாகத் தங்குவதற்கும், நிரந்தரமாகத் தங்குவதற்கும் கெட்ட இடமாகும்.
- மேலும் (அல்லாஹ்வின் அடியார்களாகிய) அவர்கள் செலவு செய்யும் போது வீண் விரயம் செய்யவோ, கருமித்தனம் காட்டவோ செய்யாமல்அவ்விரண்டுக்கும் இடையில் நடுநிலையைக் கைக் கொள்வார்கள்.
- மேலும் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்த (பொய்க்) கடவுளையும் அழைக்க மாட்டார்கள். மேலும் அல்லாஹ், (கொல்லக் கூடாது என்று) தடுத்த எவரையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்ய மாட்டார்கள். மேலும் அவர்கள் விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதனைச் செய்பவர் (தன்) பாவத்திற்குரிய தண்டனையைப் பெற்றுக் கொள்வார்.
- மறுமை நாளில் அவருக்குப் பன்மடங்கு தண்டனை கொடுக்கப்படும். அதில் அவர் இழிவடைந்தவராகவே நெடுங்காலம் தங்குவார்.
- கழிவிரக்கம் கொண்டு (மனந்திருந்தி) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோர் நீங்கலாக. அல்லாஹ் இத்தகையோரின் தீய செயல்களை நற்செயல்களாக மாற்றுகின்றான். அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான்.
- மேலும் கழிவிரக்கம் கொண்டு நற்செயல் செய்கிறவர்கள் நிச்சயமாக (உண்மையாக) மனந்திருந்தி அல்லாஹ்விடம் திரும்புகின்றனர்.
- மேலும் அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். மேலும் அவர்கள் ஏதாவது வீணானதைக் கடந்து செல்லும் போது (அதில் ஈடுபடாமல்) கண்ணியத்துடன் கடந்து சென்று விடுவார்கள்.
- மேலும் அவர்களுக்கு, அவர்களுடைய இறைவனின் வசனங்கள் நினைவூட்டப்படும் போது செவிடர்களைப் போன்றும், குருடர்களைப் போன்றும் அலட்சியமாக இருக்க மாட்டார்கள்.
- மேலும் அவர்கள், " எங்கள் இறைவா! எங்கள் மனைவிகளையும், எங்கள் குழந்தைகளையும் எங்கள் கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்கக் கூடியவர்களாக ஆக்குவாயாக! மேலும் எங்களை இறையச்சம் உடையவர்களுக்கு முதன்மையானவராக ஆக்குவாயாக! ", என்று வேண்டுவார்கள்13.
- இத்தகையோருக்கு (நன்மையில்) நிலைத்திருந்த காரணத்திற்காக (சுவர்க்கத்தில்) மிக உயர்ந்த இடங்கள் பரிசாகக் கிடைக்கும். அங்கு அவர்கள் வாழ்த்துடனும், சமாதானத்துடனும் வரவேற்கப்படுவர்.
- அதில் என்றென்றும் தங்கி விடுவர். அடைக்கலம் பெறுவதற்கும், என்றென்றும் வாழ்வதற்கும் அது தலைசிறந்த இடமாகும்.
- (நிராகரிப்போரிடம்) கூறுவீராக: நீங்கள் பிரார்த்தனை செய்யாவிட்டால் என் இறைவன் உங்களைப் பொருட்படுத்தவே மாட்டான். நீங்கள் (இறைத் தூதை) மறுத்து விட்டதால் தண்டனை உங்களைப் பற்றிக் கொள்ளும். ரு6