24- அன்- நூர்

அதிகாரம் : அன்- நூர்
அருளப்பெற்ற இடம்: மதீனா | வசனங்கள் : 65

பிரிவுகள் : 9


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (இது) நாம் இறக்கிய ஓர் அதிகாரமாகும். இதன்படி செயலாற்றுவதை நாம் கடமையாக்கியுள்ளோம். நீங்கள் அறிவுரையினை பெற வேண்டுமென்பதற்காக நாம் இதில் எம்முடைய தெளிவான கட்டளைகளை இறக்கியுள்ளோம்.
  3. விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்பவன் ஆகிய (இருவர் மீதும் அக்குற்றச்சாட்டு நிரூபணமாகி விட்டால்) இருவருள் ஒவ்வொருவருக்கும் நீங்கள் நூறு கசையடி கொடுங்கள். அல்லாஹ்விடத்தும், மறுமை நாளிடத்தும் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் அவ்விருவர் தொடர்பாக உங்களுக்கு இரக்கம் ஏற்படக் கூடாது. அவ்விருவருக்கும் உரிய தண்டனையை நம்பிக்கை கொண்டவர்களின் ஒரு கூட்டம் காண வேண்டும்.
  4. விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் செய்பவளுடன் அல்லது இணை வைப்பவளுடனன்றி வேறெவளுடனும் உடலுறவு கொள்வதில்லை. விபச்சாரம் செய்பவள், விபச்சாரம் செய்பவன் அல்லது இணை வைப்பவனுடனன்றி வேறெவனுடனும் உடலுறவு கொள்வதில்லை1. இது நம்பிக்கை கொண்டவர்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
  5. கற்புள்ள பெண்களைப் பற்றி அவதூறு கூறி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களுக்கு(த் தண்டனையாக) எண்பது கசையடி கொடுங்கள். (பின்னர்) அவர்களின் சாட்சியினை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். இவர்களே கட்டுப்படாதவர்களாவார்கள்.
  6. அதன் பின்னர் கழிவிரக்கங் கொண்டு சீர்திருந்திக் கொண்டவர்களைத் தவிர. எனவே(இத்தகையவர்களை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான்.
  7. தங்கள் மனைவிகள் மீது அவதூறு கூறி, தங்களைத் தவிர அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லையாயின், அத்தகையவர்களுள் ஒவ்வொருவருக்குமுரிய சாட்சியாவது, தாம் உண்மையுரைப்பவர்களைச் சார்ந்தவரே என்று நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூற வேண்டும்.
  8. ஐந்தாவது (சாட்சியத்தில்) தாம் பொய்யுரைப்பவர்களைச் சார்ந்தவராக இருந்தால், தம்மீது இறைவனின் சாபம் உண்டாவதாக( என்று அவன் கூற வேண்டும்).
  9. (தன் கணவரால் அவதூறு கூறப்பட்ட) அவள் நிச்சயமாக அவர் பொய்யுரைப்பவர்களைச் சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறுவதன் மூலம் தன்னை விட்டும் அத் தண்டனையை அகற்றிக் கொள்ளலாம்.
  10. ஐந்தாவது (சத்தியம் தன் மீது அவதூறு கூறும் கணவராகிய) அவர் உண்மையுரைப்பவர்களைச் சார்ந்தவராயின், அல்லாஹ்வின் கோபம் தன் மீது உண்டாவதாக (என்று அவள் கூற வேண்டும்).
  11. உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாதிருப்பின், மேலும் அல்லாஹ் பேரருளாளனாகவும், மிக்க நுட்பமான ஞானங்களைக் கொண்டனவாகவும் இல்லாதிருப்பின் (நீங்கள் அழிவிற்குள்ளாகியிருப்பீர்கள்). ரு1
  12. ஒரு பெரும் பொய்யைப் புனைந்துரைத்தவர்கள் நிச்சயமாக உங்களைச் சேர்ந்த ஒரு பிரிவினரே. நீங்கள் அதனை உங்களுக்குத் தீயதென்று கருத வேண்டாம். மாறாக அது உங்களுக்கு மிகச்சிறந்ததே (ஏனென்றால் அதனால் உங்களுக்கு நுட்பமான ஞானம் நிறைந்த போதனையொன்று கிடைத்துள்ளது). அவர்களுள் ஒவ்வொருவருக்கும் அவர் செய்த பாவத்தின் அளவுக்குத் தண்டனையுண்டு. மேலும் அவர்களுள் அந்த பாவத்தின் ஒரு பெரும் பங்கினை உடையவருக்கு ஒரு மாபெரும் தண்டனை கிடைக்கும்.
  13. நீங்கள் அதனைச் செவியுற்ற போது நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் தங்கள் சமுதாயத்தினரிடம் நல்லெண்ணங் கொண்டு, இது ஒரு மாபெரும் பொய்யே என்று ஏன் கூறவில்லை
  14. அவர்கள் அ(ந்த குற்றச்சாட்டை நிரூபிப்ப)தற்கு நான்கு சாட்சியங்களை ஏன் கொண்டு வரவில்லை? எனவே, அவர்கள் சாட்சிகளை கொண்டு வராததனால், அல்லாஹ்வின் பார்வையில் அவர்கள் பொய்யர்களேயாவர்.
  15. இவ்வுலகிலும், மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமலிருந்திருப்பின் நீங்கள் ஆர்வத்தோடு ஈடுபட்டிருந்த அச் செயலிற்காக மாபெரும் தண்டனை உங்களுக்குக் கிடைத்திருக்கும்.
  16. உங்களுக்கு அறிவு இல்லாத கூற்றுகளை நாவில் தேடி, வாயால் கூறி(யதற்காக அல்லாஹ் வெறுப்படைந்தான்) நீங்கள் அதை அற்பமானதாக எண்ணினீர்கள். ஆனால் இறைவனின் பார்வையில் அது மிகப்பெரியதாகும்.
  17. நீங்கள் அதனைச் செவியேற்ற போது, இதனைப் பற்றிப் பேசுவது நமக்கேற்றதன்று, (இறைவா!) நீ தூய்மையானவன். இது மாபெரும் அவதூறாகும் என்று நீங்கள் ஏன் கூறவில்லை?
  18. நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின், ஒருபோதும் இது போன்றதைத் திரும்பச் செய்யக்கூடாது என அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகிறான்.
  19. அல்லாஹ் உங்களுக்குத் (தன்) கட்டளைகளை விளக்குகின்றான். அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  20. நம்பிக்கை கொண்டவர்களுக்கிடையே தீய நடத்தை பரவி விட வேண்டுமென விரும்புகிறவர்களுக்கு2 நிச்சயமாக இவ்வுலகிலும், மறுமையிலும் மிக்க வேதனையளிக்கக் கூடிய தண்டனையுண்டு. அல்லாஹ் அறிகின்றான். நீங்கள் அறிவதில்லை.
  21. உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாமலிருந்திருப்பின், மேலும் அல்லாஹ் மிக்க இரக்கம் காட்டுபவனாகவும், மேலும் மேலும் கருணைகாட்டுபவனாகவும் இல்லாமலிருந்திருப்பின் (நீங்கள் துன்பத்தில் ஆழ்ந்திருப்பீர்கள்). ரு2
  22. நம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடப்பவரைத் தீய நடத்தைகளையும், வெறுக்கத்தக்கவற்றையும் செய்யுமாறு அவன் ஏவுகின்றான்( என்பதனை அவர் அறிந்து கொள்ள வேண்டும்). அல்லாஹ்வின் அருளும், அவனது கருணையும் இல்லாமலிருந்திருப்பின் உங்களுள் எவரும் ஒருபோதும் தூய்மையடைந்திருக்க மாட்டார். ஆனால் அல்லாஹ், தான் விரும்புபவரைத் தூய்மை ஆக்குகிறான். அல்லாஹ் (வேண்டுதல்களை) மிக அதிகமாகக் கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
  23. உங்களுள் (ஆன்மீகம், உலகம் இவை இரண்டிலும்) சிறப்பையும், செல்வத்தையும் பெற்றவர்கள், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும்அல்லாஹ்வின் பாதையில் தங்கள் வீடுகளைத் துறந்து சென்றவர்களுக்கும் கொடுக்காமல் இருக்க முடிவு எடுக்க வேண்டாம். அவர்கள் மன்னித்து பொறுத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் உங்கள் குறைகளை மன்னிப்பதை நீங்கள் விரும்பவில்லையா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான்.
  24. (தீயவர்களின் தீங்குகளிலிருந்து) கவனமற்றவர்களாகவும், நம்பிக்கையாளர்களாகவும் விளங்கும் கற்புள்ள பெண்கள் பேரில் குற்றம் சுமத்துபவர்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்குப் பெரும் தண்டனையுண்டு.
  25. ஒரு நாளில் அவர்களது நாவுகளும், அவர்களது கைகளும், அவர்களது கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கு எதிராகச் சாட்சி கூறும்.
  26. அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய  உண்மையான கூலியை முழுமையாக அவர்களுக்கு அளிப்பான். மேலும் அல்லாஹ்வே தெளிவான உண்மை என்பதனை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
  27. கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்குத் தகுந்தவர் ஆவர். கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்குத் தகுந்தவர் ஆவர். நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்குத் தகுந்தவர் ஆவர். நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்குத் தகுந்தவர் ஆவர். இவர்களே (எதிரிகளாகிய) அவர்கள் கூறுபவற்றை விட்டும் தூயவர்களாவர். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுகளும் (விதிக்கப் பெற்று) உள்ளன. ரு3
  28. நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத மற்ற வீடுகளில் அனுமதி பெற்று, அவற்றிலுள்ளவர்க்கு ஸலாம் கூறாதவரை நுழையாதீர்கள். நீங்கள் (நல்லவற்றைப் பேணுவதில்) கவனமுடையவராக இருப்பதற்கு இதுவே உங்களுக்குச் சிறந்தது.
  29. நீங்கள் அவற்றில் எவரையும் காணவில்லையானால், (அவற்றிற்குரியவர்களிடமிருந்து) உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை அவற்றில் நுழையாதீர்கள். நீங்கள் சென்று விடுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால், திரும்பிச் சென்று விடுங்கள். அது உங்களுக்கு மிகத் தூய்மையானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
  30. உங்கள் பொருட்கள் இருக்கும் குடியில்லாத வீடுகளில் நீங்கள் நுழைவது உங்களுக்குக் குற்றமல்ல. நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் அல்லாஹ் அறிகின்றான்.
  31. நீர், நம்பிக்கை கொண்ட ஆண்களிடம் அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்திருக்குமாறும், தங்கள் மறைவான உறுப்புகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் கூறுவீராக. இது அவர்களுக்கு மிகத் தூய்மையானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதனை நன்கு அறிபவனாவான்.
  32. நீர் நம்பிக்கை கொண்ட பெண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்திருக்குமாறும், தங்கள் மறைவான உறுப்புக்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும், தானாகவே வெளிப்படுவதைத் தவிர3 தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாமலிருக்குமாறும், தங்கள் முந்தானை இடையில் தங்கள் மார்புகளை மறைத்து அணிந்து கொள்ளுமாறும், அவர்கள் தங்கள் கணவர்கள், அல்லது தங்கள் தந்தையர்கள், அல்லது தங்கள் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தங்கள் ஆண் மக்கள் அல்லது தங்கள் கணவர்களின் ஆண் மக்கள் அல்லது சகோதரர்கள் அல்லது தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள் அல்லது தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள் அல்லது தங்கள் (இனத்தைச்) சேர்ந்த பெண்கள் அல்லது தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் அல்லது பாலுணர்ச்சிக்கு அப்பாற்பட்ட ஆண் ஊழியர்கள் அல்லது பெண்களின் மறைவான உறுப்புக்களைப் பற்றித் தெரியாத சிறுவர்கள் ஆகியவர்களைத் தவிர வேறெவரிடமும் தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாமலிருக்குமாறும், தங்கள் அலங்காரத்துள் மறைத்து வைத்திருப்பது வெளிப்பட வேண்டுமென்பதற்காகத் தங்கள் கால்களை (நிலத்தில் வேகமாக)த் தட்டி நடக்காமலிருக்குமாறும் கூறுவீராக. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் யாவரும் வெற்றி பெற வேண்டுமென்றால் அல்லாஹ்வின் பால் திரும்புங்கள்.
  33. உங்களிலுள்ள விதவைகளையும், உங்கள் ஆண் அடிமைகள், பெண் அடிமைகள் ஆகியவர்களுள் நல்லவர்களையும் மணமுடித்துக் கொடுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் அருளால் அவர்களைச் செல்வர்களாக்கி வைப்பான். அல்லாஹ் வளமிக்கோனும், நன்கு அறிபவனுமாவான்.
  34. திருமணத்திற்கான வாய்ப்பைப் பெறாதவர்கள், அல்லாஹ் தன் அருளால் அவர்களைச் செல்வர்களாக ஆக்கும் வரைத் தூய்மையினை மேற்கொள்ள வேண்டும். உங்கள் அடிமைகளுள் விடுதலைப் பத்திரத்தை விரும்புகிறவர்களுக்கு நீங்கள் ஏதேனும் நன்மையினைக் கண்டால்4, அவர்களுக்கு (விடுதலைப் பத்திரத்தை) எழுதிக் கொடுத்து விடுங்கள். (அவர்களிடம் போதுமான அளவிற்கு செல்வம் இல்லையாயின்) அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய செல்வத்திலிருந்து அவர்களுக்குச் சிறிது வழங்(கி விடுதலையடைவதற்கான வாய்ப்பை உண்டாக்) குங்கள். உங்கள் பெண் அடிமைகள் நல்லவர்களாக வாழ விரும்பினால்5, நீங்கள் இவ்வுலக வாழ்விற்குரிய பொருளைத் தேடும் பொருட்டு அவர்களைத் தீய நடத்தைக்கு கட்டாயப்படுத்தாதீர்கள். எவராவது அவர்களைக் கட்டாயப்படுத்தினால், அவர்கள் கட்டாயத்திற்குள்ளாக்கப் பட்டதன் பின்னர் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், பேரருளாளனுமாவான்6.
  35. நாம் உங்களுக்கு மிகத் தெளிவான அடையாளங்களை இறக்கியுள்ளோம். மேலும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்றவர்களின் நிலைகளையும், இறையச்சமுடையவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும் இறக்கியுள்ளோம். ரு4
  36. அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஒளியாக விளங்குகின்றான்7. அவனது ஒளி ஒரு மாடத்தைப் போன்றது. அதில் ஒரு விளக்கு உள்ளது8. அந்த விளக்கு ஒரு கண்ணாடிக் குமிழுள் இருக்கிறது. அந்த கண்ணாடிக் குமிழ் ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தைப் போன்றது. அந்த விளக்கு கிழக்கையோ, மேற்கையோ சார்ந்திராத அருளுக்குரிய ஒரு ஒலிவ மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப்படுகின்றது9. அதன் எண்ணெய், நெருப்பு அதனைத் தீண்டாவிட்டாலும் ஒளி வீசுகிறது. ஒளி, அது பல ஒளிகளின் ஒளிப்பிழம்பாக இருக்கிறது. அல்லாஹ் தான் நாடுபவர்களைத் தன்  ஒளியின் பால் வழிகாட்டுகின்றான். மேலும் அல்லாஹ் மக்களுக்கு (தேவையான) எடுத்துக்காட்டுகளை(க் கூறி) விளக்குகின்றான். மேலும் அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான்.
  37. எந்த வீடுகள் உயர்த்தப்பட வேண்டுமென்றும், அவற்றில் அவனது பெயர் நினைவு கூரப்பட வேண்டுமென்றும் இறைவன் கட்டளையிட்டுள்ளானோ அந்த வீடுகளில் (இந்த விளக்கு) உள்ளது10. அவற்றில் அவனது தூய்மை, காலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் எடுத்துரைக்கப்படுகிறது.
  38. (இவ்வாறு நினைவு கூரும்) ஆண்களைக் கொடுக்கல், வாங்கல் தொடர்புகளோ, வணிகத் தொழிலோ  அல்லாஹ்வை நினைவு கூருவதிலிருந்தும், தொழுகையை நிறைவேற்றுவதிலிருந்தும், ஸக்காத்து கொடுப்பதிலிருந்தும் கவனமற்றவர்களாக்குவதில்லை. உள்ளங்களும், கண்களும் கலங்கும் ஒரு நாளைக் குறித்து அவர்கள் அஞ்சுகின்றனர்.
  39. இதன் பயனாக அல்லாஹ் அவர்களுக்கு, அவர்களின் செயல்களுக்குரிய மிகச்சிறந்த கூலி வழங்கி, தன் அருளால் அவர்களுக்கு (ப் பொருட் செல்வத்தையும், குழந்தைச் செல்வத்தையும்) மிகுதியாக வழங்குவான். மேலும் அல்லாஹ் தான் நாடியவருக்கு (வாழ்க்கைப் பொருட்களை) அளவின்றி வழங்குகின்றான்.
  40. நிராகரித்தவர்களின் செயல்கள் பரந்த வெளியில் தென்படும் கானல் நீரைப் போன்றவையாகும். அதனைத் தாகமுள்ள ஒருவன் தண்ணீரென நினைக்கின்றான். அவன் அதன் பக்கம் வரும்போது, அவன் அதனை ஒன்றுமில்லாததாகக் காண்கின்றான். மேலும் அவன் அல்லாஹ்வைக் காண்கிறான். அவன், அவனுக்கு (செயல்களின்) பயனை முழுமையாக வழங்குவான். அல்லாஹ் மிகவிரைவில் கணக்கைத் தீர்ப்பவனாவான்.
  41. அல்லது (அந்த நிராகரிப்பாளர்களுடைய செயல்களின் தன்மை) பரந்த, ஆழிய கடலின் மேல் பரவியிருக்கும் காரிருளைப் போன்றதாகும். அதனை ஓர் அலை மூடுகின்றது. அந்த அலையின் மேல் மற்றோர் அலை எழுகின்றது. இந்த அலையின் மேல் மேகங்கள் உள்ளன. இவை ஒன்றன் மீது ஒன்றாகப் படர்ந்திருக்கும் இருள்களாகும். அவன் தன் கையை வெளியில் எடுக்கும் போது அவனால் அதனைக் காண முடியாது. எவருக்கு அல்லாஹ் ஒளியை அளிப்பதில்லையோ அவருக்கு, எங்கிருந்தும் ஒளி கிடைப்பதில்லை. ரு5.
  42. வானங்களிலும், பூமியிலுள்ளவர்களெல்லாரும், அணிஅணியாய் பறந்து கொண்டிருக்கும் பறவைகளும் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைப்பதை நீர் காண்பதில்லையா? அவற்றுள் ஒவ்வொன்றும் (தன் முறைப்படி) தனது வணக்கத்தையும், தன்(இறைவனைப்) புகழ்தலையும் தெரிந்திருக்கின்றன. மேலும் அல்லாஹ், அவர்கள் செய்பவற்றை நன்கு அறிகின்றான்.
  43. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. மேலும் அல்லாஹ்விடமே எல்லோரும் திரும்பச் செல்ல வேண்டியதுள்ளது.
  44. அல்லாஹ் மேகங்களை மெதுவாக ஒட்டிக் கொண்டு வந்து, பின்னர் அவற்றிற்கிடையே இணைப்பை ஏற்படுத்தி, பின்னர் அவற்றை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்குவதை நீர் காண்பதில்லையா? அதன் பின்னர் அவற்றினுள்ளிருந்து மழை பொழிவதை நீர் காண்கின்றீர். அவன் மேகத்திலிருந்து மலை (போலும்) பொருள்களை வீழ்த்துகின்றான். அவற்றுள் சில ஆலங்கட்டிகளைச் சார்ந்தவை. அவன் தான் நாடுபவர்களை அதனால் தாக்குகின்றான். தான் நாடுபவர்களிலிருந்து அதனைத் தடுத்துக் கொள்கின்றான். அதன் மின்னொளி கண்களை ஏறத்தாழ குருடாக்கி விடுகிறது.
  45. அல்லாஹ் இரவையும், பகலையும் சுழற்றுகிறான். நிச்சயமாக இதில் பார்வையுடையோருக்கு ஒரு படிப்பினை இருக்கிறது.
  46. அல்லாஹ் ஒவ்வொரு உயிரினத்தையும் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றுள் சில, தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. இன்னும் சில இரு கால்களால் நடக்கின்றன. மற்றுஞ்சில நான்கு கால்களால் நடக்கின்றன. அல்லாஹ் தான் நாடுவதைப் படைக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவனாவான்.
  47. நிச்சயமாக நாம் மிகத்தெளிவான அடையாளங்களை இறக்கியுள்ளோம். மேலும் அல்லாஹ் தான் நாடுபவரை நேர்வழியில் நேர்வழியில் நடத்துகின்றான்.
  48. அவர்கள் அல்லாஹ்விடத்தும், இத்தூதரிடத்தும் நாங்கள் நம்பிக்கை கொண்டு கட்டுப்பட்டு நடக்கின்றோம் எனக் கூறுவர். பின்னர் அவர்களுள் ஒரு பிரிவினர் அதன்பிறகு புறக்கணித்து விடுகின்றனர். அத்தகையவர்கள் ஒருபோதும் நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை.
  49. அல்லாஹ்வின் பாலும், அவனது தூதரின் பாலும் அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டால், அவர்களுள் ஒரு பிரிவினர் புறக்கணிக்கத் தொடங்கி விடுகின்றனர்.
  50. அவர்களுக்குச் சாதகமாக ஏதேனும் இருந்தால் கட்டுப்பட்டவர்களாய் (விரைவாக) அவரிடம் வருகின்றனர்.
  51. அவர்களது உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது அவர்கள் ஐயப்பாடு கொண்டிருக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும், அவனது தூதரும் தங்களுக்கு அநீதியிழைத்து விடுவர் என்று அஞ்சுகின்றனரா? அவ்வாறன்று. மாறாக அவர்களே அநீதியிழைப்பவர்களாவார்கள். ரு6
  52. நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாலும், அவனது தூதரின் பாலும்அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவதற்காக அழைக்கப்பட்டால், நாங்கள் செவியேற்றோம், கட்டுப்பட்டோம் என்று கூறுவதே அவர்களின் பதிலாக இருந்து வருகிறது. இத்தகையவர்களே வெற்றி பெறுவோராவர்.
  53. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி (பாதுகாப்பிற்குரிய) கேடயமாக அவனை எடுத்துக் கொள்பவர்கள் வெற்றியடைபவர்களாவர்.
  54. நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால், உடனே அவர்கள் (வீடுகளிலிருந்து) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதிவாய்ந்த சத்தியங்கள் செய்கின்றனர். நீர் கூறுவீராக: சத்தியங்கள் செய்யாதீர்கள். பொதுவாகக் கட்டுப்பட்டு நடப்பதே போதுமானதாகும்.  நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு தெரிந்து கொள்பவனாவான்.
  55. அல்லாஹ்வுக்கும் கட்டுப்பட்டு நடங்கள். இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள் என்று நீர் கூறுவீராக. எனவே நீங்கள் புறக்கணித்து விட்டால் அ(த் தூது) வரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கே அவர் பொறுப்பாளராவர். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு நீங்கள் பொறுப்பாளர்களாவீர்கள். நீங்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள் நேர்வழியினைப் பெறுவீர்கள். மேலும் இத் தூதரின் பொறுப்பு தூதுச் செய்தியினைத் தெளிவாக எடுத்துரைப்பது மட்டுமேயாகும்.
  56. அல்லாஹ் உங்களுள் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களை, அவர்களின் முன்னோர்களை கலீஃபாவாக (தலைவராக) ஆக்கியது போன்று11 இப்பூமியில் கலீஃபாவாக ஆக்குவதாகவும்12, அவன் அவர்களுக்காக விரும்பிய அவர்களின் மார்க்கத்தை அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாகவும், அவன், அவர்களுக்கு அவர்களது அச்சத்திற்குப் பிறகு, அதற்குப் பதிலாக அமைதியினை வழங்குவதாகவும் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளான். அவர்கள் என்னை வணங்குவார்கள். எதனையும் எனக்கு இணையாக்க மாட்டார்கள். இதன் பின்னரும் நிராகரிப்பவர்கள் கட்டுப்படாதவர்களாவார்கள்.
  57. நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள். மேலும் ஸக்காத்துக் கொடுங்கள். இத் தூதருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். அப்போது தான் உங்கள் மீது கருணை காட்டப்படும்.
  58. (செவியேற்பவரே!) நிராகரிப்பவர்கள் (தங்கள் சதித்திட்டங்களால்) இப்பூமியில் எம்மை செயலிழக்கச் செய்வர் என்று நீர் ஒரு போதும் கருத வேண்டாம். அவர்களின் தங்குமிடம் நரகமேயாகும். அது மிகத் தீய தங்குமிடமாகும். ரு7
  59. நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களும், உங்களுள் பருவம் அடையாதவர்களும் மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி பெற்று உள்ளே வர வேண்டும். அதாவது ஃபஜ்ர் தொழுகைக்கு முன்னும், நடுப்பகலில் நீங்கள் உங்கள் ஆடைகளைக் களைந்திருக்கும் நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பின்னரும் ஆகும். இவை நீங்கள் மறைவாக இருக்கும் மூன்று நேரங்களாகும். இவையல்லாத மற்ற நேரங்களில் (உள்ளே சென்று வருவதனால்) உங்கள் மீதோ, அவர்கள் மீதோ குற்றமில்லை. ஏனென்றால் உங்களுள் சிலர், சிலரிடம் பெரும்பாலும் (அவசியத்திற்காக) வந்து செல்பவர்களாயுள்ளனர். இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  60. உங்கள் குழந்தைகள் பருவமடைந்து விட்டால், அவர்களும் தங்களுக்கு முன்னுள்ள(பெரிய)வர்கள் அனுமதி பெற்றது போன்று அனுமதி பெற வேண்டும். இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  61. திருமணம் செய்யும் தகுதியை இழந்த வயது முதிர்ந்த பெண்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாத முறையில் தங்கள் மேலாடைகளைக் களைந்து வைத்திருப்பது அவர்கள் பேரில் குற்றமன்று. ஆயினும் அவர்கள் (அதனைக் கூடத்) தவிர்த்து கொள்வது அவர்களுக்குச் சிறந்ததாகும். அல்லாஹ் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
  62. குருடன், முடவன், நோயாளி ஆகியவர்கள் மீதும், உங்களில் எவர் மீதும், உங்கள் வீடுகளிலோ, உங்கள் தந்தையர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயார்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோஉங்கள் தந்தையின் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரிகளின் வீடுகளிலோ, (பராமரிப்பிற்காக) சாவி உங்கள் வசமிருக்கும் உங்கள் நண்பர்களின் வீடுகளிலோ உண்பது குற்றமன்று13. (இவ்வாறே) நீங்கள் யாவரும் ஒன்றாகவோ, தனித்தனியாகவோ உண்பதும் உங்கள் பேரில் குற்றமன்று. நீங்கள் வீடுகளில் நுழையும் போது உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் ஸலாம் கூறிக் கொள்ளுங்கள். இது அல்லாஹ்விடமிருந்துள்ள ஒரு பெரும் அருளிற்குரியதும், தூய்மையானதுமாகிய வாழ்த்தாகும். நீங்கள் அறிந்து கொள்வதற்காக இவ்வாறு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான். ரு8
  63. அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டவர்களே உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாவர். மேலும் அவர்கள் சமுதாய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றிற்காக அவரோடு இருக்கும் போது, அவரிடம் அனுமதி பெறாமல் எழுந்து செல்ல மாட்டார்கள். உம்மிடம் அனுமதி பெற்றுச் செல்பவர்களே அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டிருப்பவர்களாவர். எனவே அவர்கள் தங்களுடைய ஏதாவதொரு (முக்கிய) பணிக்காக உம்மிடம் அனுமதி கோரினால் அவர்களுள் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி வழங்கி விட்டு, அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  64. நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுள் ஒருவரை இத்தூதர் அழைப்பது, உங்களுள் ஒருவர் மற்றவரை அழைப்பது போன்றேயாகும் எனக் கருதாதீர்கள். (ஆலோசனை மன்றத்திலிருந்து) உங்களுள் மறைவாக நழுவி விடுபவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான். எனவே இ(த் தூது)வருடைய கட்டளைக்கு மாற்றம் செய்பவர்கள் (இறைவனிடமிருந்து) ஏதேனும் துன்பம் தங்களுக்கு நேர்ந்து விடுமோ அல்லது துன்புறுத்தும் தண்டனை தங்களுக்கு வந்து விடுமோ என்று அஞ்ச  வேண்டும்.
  65. (கவனமாகக்) கேளுங்கள். வானங்களிலும், பூமியிலுமிருப்பவை அல்லாஹ்விற்குரியனவே. நிச்சயமாக அவன் உங்கள் (செயல்களின்) நிலையினை நன்கு அறிகின்றான். அவர்கள் அவனிடத்துத் திரும்பக் கொண்டு செல்லப்படும் நாளில் அவன், அவர்களுக்கு அவர்களது செயல்களைப் பற்றி அறிவிப்பான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான். ரு9

Powered by Blogger.