அதிகாரம்: அல் - அன்பியா
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள் : 113
பிரிவுகள் : 7
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- மக்களுக்கு, அவர்களின் கேள்வி கணக்கு(கேட்கும் நேரம்) நெருங்கி விட்டது. ஆனால் அவர்கள் கவனம் செலுத்தாமல் புறக்கணிக்கின்றனர்.
- அவர்களிடம், அவர்களின் இறைவனிடமிருந்து ஞாபகமூட்டும் புதியதொரு போதனை எப்பொழுது வந்தாலும், அவர்கள் (அதனை) ஏளனம் செய்பவர்களாகவே செவியேற்கின்றனர்.
- அவர்களின் உள்ளங்கள் கவனமின்மையில் மூழ்கிக் கிடக்கின்றன. அநீதியிழைத்தவர்கள் இரகசியமாக ஆலோசனை செய்(து இவ்வாறு கூறு)கின்றனர்: இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயாவார். எனவே நீங்கள் கண்டு கொண்டே அவருடைய ஏமாற்றுப் பேச்சுக்களுக்கு ஆளாகி விடுவீர்களா?
- (இவற்றைக் கேட்டு முஹம்மது (ஸல்)அவர்கள்) கூறினார்கள்: வானத்திலும், பூமியிலும் பேசப்படுவதை என் இறைவன் அறிகின்றான். அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- ஆனால் (எதிரிகளாகிய) அவர்கள் கூறினார்கள்: (இவ்வசனங்கள்) சிதறிய கனவுகளாகும். அது மட்டுமன்று, அவர் இதை (தாமாகவே) இட்டுக்கட்டியுள்ளார். இது மட்டுமன்று, அவர் ஒரு கவிஞர். எனவே, முன்னவர்கள் (அடையாளங்களுடன்) அனுப்பப்பட்டது போன்று இவர் ஏதாவது அடையாளத்தை நம்மிடம் கொண்டு வர வேண்டும்1.
- இவர்களுக்கு முன்னர் நாம் அழித்து விட்ட ஊரிலுள்ளவர் எவரும் நம்பிக்கை கொண்டதில்லை. அவ்வாறிருக்க இவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?
- உமக்கு முன்னர் ஆண்களையே நாம் அவர்களுக்கு வஹி அறிவித்து (தூதராக) அனுப்பி உள்ளோம். நீங்கள் அறியாதிருந்தால் வேத(ஞான)முடையவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.
- நாம் அத் தூதர்களுக்கு உணவு உண்ணாத உடல்களை வழங்கவில்லை. அவர்கள் மிக நீண்ட காலம்2 வாழ்ந்ததுமில்லை.
- பின்னர் அவர்களுக்கு நாம் (நம்) வாக்குறுதியினை நிறைவேற்றினோம். எனவே நாம் அவர்களையும், நாம் நாடியவர்களையும் காப்பாற்றினோம். வரம்பு மீறியவர்களை நாம் அழித்தும் விட்டோம்.
- நாம் உங்களுக்கு ஒரு வேதத்தை இறக்கினோம். அதில் உங்களுக்கு நினைவூட்டுதல் உண்டு. நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா? ரு1
- அநீதியிழைத்த எத்தனையோ ஊர்களை நாம் முழுமையாக அழித்து விட்டோம். அவற்றிற்குப் பிறகு மற்றொரு சமுதாயத்தினரை உருவாக்கினோம்.
- (அழிவிற்குள்ளாகவிருந்த) அவர்கள் எம்முடைய தண்டனையை உணர்ந்த பொழுது, அதிலிருந்து (தப்பித்துக் கொள்வதற்காக) ஓடத் தொடங்கினார்கள்.
- (அப்பொழுது நாம் கூறினோம்) ஓடாதீர்கள். உங்களிடம் (உங்கள் செயல்கள் குறித்துக்) கணக்கு கேட்பதற்காக, நீங்கள் வாழ்ந்த இன்ப நலன்களின் பக்கமும், உங்கள் வீடுகளின் பக்கமும் திரும்பிச் செல்லுங்கள்.
- இதற்கு அவர்கள், அந்தோ! நாங்கள் (வாழ்நாள் முழுவதும்) அநீதி தான் இழைத்துக் கொண்டிருந்தோம் என்றனர்.
- நாம் அவர்களை, அறுவடை செய்யப்பட்டுத் தன் பொழிவுகளை இழந்து விட்ட வயல்களைப் போன்று ஆக்கும் வரை, அவர்கள் அதனையே புலம்பிக் கொண்டிருந்தனர்.
- வானத்தையும், பூமியையும், அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றையும் வீண் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை.
- நாம் ஏதேனும் பொழுது போக்கினை ஏற்படுத்த விரும்பியிருந்தால், அதனை எமக்குப் பக்கத்திலேயே ஏற்படுத்தியிருப்போம்.
- அது மட்டுமன்று, நாம் உண்மையைப் பொய்யின் மீது வீசியெறிகின்றோம். அது அதன் தலையை உடைத்து விடுகின்றது. (பொய்யாகிய) அது உடனே வெருண்டோடி விடுகின்றது. (இறைவனைப் பற்றிய) உங்கள் (தவறான) வருணனையின் காரணமாக உங்களுக்கு அழிவு தான் ஏற்படும்.
- வானங்களிலும், பூமியிலுமுள்ளவர்கள் யாவரும் அவனுக்கே உரியவர்களாவர். அவனிடமுள்ளவர்கள் அவனை வணங்குவதில் பெருமையடிப்பதுமில்லை; (அதனால்) சோர்வடைவதுமில்லை.
- அவர்கள் இரவிலும், பகலிலும் அவனது தூய்மையினை எடுத்துரைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் அதில் தளர்வதில்லை.
- அவர்கள் பூமியிலிருந்து கடவுளர்களை உருவாக்கிக் கொண்டனரா? அவர்கள் (படைப்புகளைப்) படைக்கின்றனரா?
- (வானம், பூமியாகிய) அவ்விரண்டிலும் அல்லாஹ்வையன்றி வேறு கடவுளர்கள் இருந்திருப்பின் அவை இரண்டும் பெருங் குழப்பத்திற்கு இரையாகி அழிந்திருக்கும்3. எனவே அரியணைக்குரிய இறைவனாகிய அல்லாஹ் எல்லாக் குறைபாடுகளிலிருந்தும், அவர்கள் கூறுபவற்றிலிருந்தும் தூய்மையானவன்.
- அவன் எதனைச் செய்தாலும் அதனைப் பற்றி அவன் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர்களோ பதில் சொல்லியாக வேண்டும்.
- அவர்கள் அவனையன்றி வேறு கடவுளர்களை உருவாக்கிக் கொண்டனரா? நீர் கூறுக: உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள். (குர்ஆனாகிய) இது என்னுடனுள்ளவர்களின் சிறப்பிற்குக் காரணமாக விளங்குகின்றது. எனக்கு முன்னுள்ளவர்களின் சிறப்பிற்கும் காரணமாக விளங்குகின்து4. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் உண்மையினை அறிந்து கொள்வதில்லை. எனவே அதனைப் புறக்கணிக்கின்றனர்.
- நாம் உமக்கு முன்னர் எத்தனை தூதர்களை அனுப்பியுள்ளோமோ அவர்களுள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. எனவே நீங்கள் என்னை (மட்டுமே) வணங்குங்கள் என்றே நாம் வஹி அறிவித்தோம்.
- அளவற்ற அருளாள(னான இறைவ)ன் மகனை உருவாக்கிக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவன் (எல்லாப் பலவீனங்களிலிருந்தும்) தூய்மையானவன். அது மட்டுமன்று (அவர்கள் எவர்களை இறைவனுடைய மகன்கள் எனக் கூறுகின்றனரோ) அவர்கள் இறைவனுடைய கண்ணியமிக்க அடியார்களாவார்கள்.
- அவர்கள் அவனுக்கு முந்தி பேசுவதில்லை. மேலும் அவர்கள் அவனது கட்டளைகளின் படியே செயலாற்றுகின்றனர்.
- அவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், அவர்களுக்கு பின்னுள்ளவற்றையும் அவன் அறிகின்றான். அவன் விரும்பியவருக்கேயன்றி வேறெவருக்காகவும் அவர்கள் பரிந்து பேசுவதில்லை. மேலும் அவர்கள் அவனுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்.
- அவர்களுள் எவர், இறைவனையன்றி, நானும் ஒரு கடவுள் தான் எனக் கூறுகின்றனரோ அவருக்கு நாம் நரகத்தைக் கூலியாகக் கொடுப்போம். இவ்வாறே நாம் அநீதியிழைப்பவர்களுக்குக் கூலி கொடுக்கின்றோம். ரு2
- வானங்களும், பூமியுமாகிய இரண்டும் இறுக்கமாக மூடப்பட்டிருந்தன. பின்னர் நாம் அவற்றைப் பிரித்து திறந்து விட்டோம்5. தண்ணீரிலிருந்து உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் உருவாக்கினோம் என்பதனை நிராகரிப்பவர்கள் காணவில்லையா? இவ்வாறிருந்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?
- பூமி அவர்களுடன் நிலைகுலைந்து விழாமல், அவர்களைத் தாங்கி நிற்பதற்காக நாம் அதில் மலைகளை அமைத்தோம். அவர்கள் (பல்வேறு இடங்களைச்) சென்றடைவதற்காக நாம் அதில் விரிவான வழிகளையும் அமைத்தோம்.
- வானத்தை பாதுகாப்பான கூரையாக ஆக்கினோம். எனினும், அவர்கள் அதன் அடையாளங்களைப் புறக்கணிக்கின்றனர்.
- அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். இவையெல்லாம் தத்தமது சுற்றுப் பாதைகளில் தடையின்றிச் சென்று கொண்டிருக்கின்றன.
- உமக்கு முன்னர், எந்த மனிதருக்கும் என்றென்றும் வாழும் (மிக நீண்ட) வாழ்க்கையை நாம் வழங்கியதில்லை. எனவே நீர் மரணித்து, அவர்கள் மட்டும் என்றென்றும் (மிக நீண்ட நாள்) உயிருடன் இருப்பதா?6.
- ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவரே. நாம் உங்களை நல்ல நிலையிலும், தீய நிலையிலும் சோதிப்போம். (இறுதியாக) நீங்கள் எம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
- நிராகரிப்பவர்கள் உம்மைக் கண்டால், உம்மை ஓர் அற்பமாகக் கருதுகின்றனர். (மேலும் அவர்கள்): இவர் தாம் உங்கள் கடவுளர்களைப் பற்றிக் குறை கூறுகின்றாரா? (என்று கூறுகின்றனர்). ஆனால் அவர்களோ, அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னை நினைவு கூர்வதை மறுக்கின்றனர்.
- மனிதன் அவசரத்தி(ன் தன்மையி)னால் படைக்கப்பட்டுள்ளான். நான் உங்களுக்கு என் அடையாளங்களைக் காட்டுவேன். எனவே நீங்கள் (அதற்காக) அவசரப்படாதீர்கள்.
- மேலும் அவர்கள், ' நீங்கள் உண்மையாளர்களாயின், இந்த வாக்குறுதி எப்போது நிறைவேறும்? " என்று வினவுகின்றனர்.
- நிராகரிப்பவர்கள் தங்கள் முகங்களை விட்டும், முதுகுகளை விட்டும், நெருப்பை அகற்ற முடியாத அந்த நேரத்தையும், எவரிடமிருந்தும் தங்களுக்கு உதவி கிடைக்காததையும் அறிந்திருந்தால் (இந்த அளவிற்குப் பெருமையடிக்க மாட்டார்கள்).
- இல்லை; (அத் தண்டனை) அவர்களிடம் திடீரென்று வந்து, அவர்களைத் திகைப்படையச் செய்து விடும். ஆகவே அவர்கள் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வலிமை பெற மாட்டார்கள். மேலும் அவர்களுக்கு(ச் சிறிதும்) காலக்கெடு அளிக்கப்படமாட்டாது.
- உமக்கு முன்னர் தோன்றிய தூதர்களும் ஏளனம் செய்யப்பட்டனர். இதன் விளைவாக, அத்தூதர்களை ஏளனம் செய்தவர்களை அவர்கள் எதனைக் கொண்டு ஏளனம் செய்தனரோ அவையே சூழ்ந்து கொண்டன. ரு3
- நீர் கூறுவீராக: இரவு அல்லது பகல் வேளையில், அளவற்ற அருளாளனின் பிடியிலிருந்து உங்களைக் காப்பாற்றுபவர் யார்? ஆயினும், அவர்கள் தங்கள் இறைவனை நினைவு கூர்வதைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர்.
- நம்முடைய தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றும் கடவுளர்கள் அவர்களுக்கு (ஆதரவாக) இருக்கின்றனரா? (பொய்க் கடவுளர்களாகிய) அவர்களால் தங்கள் உயிர்களைக் கூடப் பாதுகாக்க முடியாது. எமக்கு எதிராக எவரும் அவர்களுடன் நட்பு கொள்ளவும் முடியாது.
- உண்மையில் நாம் அவர்களுக்கும், அவர்களின் மூதாதையர்களுக்கும் ஒரு நீண்ட காலம் வரை மிகுதியான வசதிகளை வழங்கியிருந்தோம். நாம் அவர்களின் நாட்டை அதன் எல்லா எல்லைகளிலிருந்தும் சிறிதாக்கிக் கொண்டே வருவதை அவர்கள் காண்பதில்லையா?7 இவ்வாறிருக்க, அவர்களால் வெற்றி பெற முடியுமா?
- நீர் அவர்களிடம் கூறுக: நான் உங்களை இறையறிவிப்பு மூலமே எச்சரிக்கின்றேன். எச்சரிக்கப்படும் போது செவிடர்களால் அந்தக் கூப்பிடுதலை கேட்க முடியாது.
- உம்முடைய இறைவனது தண்டனையின் வெப்பக்காற்று அவர்களைத் தீண்டினால், அவர்கள், ' எங்களுக்கு அழிவு தான். நாங்கள் அநீதியே இழைத்துக் கொண்டிருந்தோம் ' என்று கட்டாயம் கூறுவர்.
- எவருக்கும் சிறிதும் அநீதி இழைக்காமல் இருக்க நாம் மறுமை நாளில் சரியான தராசுகளை ஏற்படுத்துவோம். (ஒரு செயல்) கடுகளவு இருந்தாலும் நாம் அதனைக் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதுமானவனாவோம்.
- நாம் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் பிரித்தறிவிக்கும் அடையாளத்தையும், ஒளியையும், இறையச்சமுடையவர்களுக்கு ஞாபகமூட்டும் போதனையையும் வழங்கினோம்.
- (இறையச்சமுடையவர்களாகிய) அவர்கள் தங்கள் இறைவனுக்கு மறைவாகவும் அஞ்சுவார்கள். தீர்ப்பு வழங்கும் அந்த நேரத்தைக் குறித்தும் அஞ்சுவார்கள்.
- (குர்ஆனாகிய) இது அருளுக்குரிய நினைவூட்டுதல் ஆகும். இதனை நாமே இறக்கினோம். இருந்தும் நீங்கள் இதனை மறுக்கின்றீர்களா? ரு4
- நாம் இதற்கு முன்னர், இப்ராஹீமுக்கு, அவருக்கேற்ற நேர்வழியினையும், தகுதியினையும் வழங்கினோம். அவரைப் பற்றி நாம் நன்கு அறிந்திருந்தோம்.
- அவர் தம் தந்தையிடமும், தம் சமுதாயத்தினரிடமும் நீங்கள் வணங்கும் இந்த உருவங்கள் என்ன? என்று வினவினார்.
- அவர்கள், எங்கள் மூதாதையர்கள் இவற்றை வணங்கிக் கொண்டிருப்பதைக் கண்டோம் என்று கூறினார்கள்.
- அவர், அவ்வாறாயின் நீங்களும், உங்கள் மூதாதையர்களும் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தீர்கள் என்றார்.
- அவர்கள், நீர் எங்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளீரா? அல்லது நீர் எங்களுடன் விளையாடுகிறீரா? என்று கூறினர்.
- அவர் கூறினார்: உண்மையிலேயே வானங்களையும், பூமியையும் படைத்த அவற்றின் இறைவனே உங்கள் இறைவன். இதற்கு நான் சாட்சியாக இருக்கின்றேன் என்றார்.
- அல்லாஹ் மேல் ஆணையாக! நீங்கள் புறமுதுகு காட்டித் திரும்பிச் செல்லும் போது, நான் உங்கள் சிலைகளுக்கு எதிராக நிச்சயமாக ஒரு திட்டம் வகுப்பேன்.
- பின்னர் அவர், அவர்கள் (மீண்டும் ஒரு தடவை) அதனிடம் வருவதற்காக, அவைகளுள் (அச் சிலைகளுள்) பெரியதைத் தவிர, மற்றெல்லாவற்றையும் துண்டு துண்டாக உடைத்து விட்டார்.
- இதற்கு அவர்கள் கூறினர்: நம் கடவுளர்களை இவ்வாறு செய்தவர் யார்? நிச்சயமாக இதனைச் செய்தவர் அநீதியிழைப்பவர்களைச் சார்ந்தவராவார்.
- (அப்போது மற்றுஞ்சிலர்) கூறினர்: இப்ராஹீம் என்றழைக்கப்படுகின்ற வாலிபர் ஒருவர் (நம் கடவுளர்களாகிய) இவர்களைப் பற்றிக் குறைத்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்.
- (இது கேட்டு, சமுதாயத்தின் தலைவர்கள்) கூறினர்: (அவ்வாறாயின் அவருக்கெதிராக) சாட்சி அளிக்க அவரை மக்களின் கண் முன் அழைத்து வாருங்கள்.
- (பின்னர்) அவர்கள் கூறினர். இப்ராஹீமே! நீர் தாம் எங்கள் கடவுளர்களை இவ்வாறு செய்தீரா?
- அவர் கூறினார்: நிச்சயமாக ஒருவர்8 இதனைச் செய்துள்ளார். அவர்களுள் ' பெரிய கடவுள்' இதோ இருக்கின்றார். அவரால் பேச முடியுமாயின், அவரிடமே கேட்டுப் பாருங்கள்.
- எனவே, அவர்கள் தங்கள் தலைவர்களை நோக்கி9 நிச்சயமாக நீங்கள் தாம் அநீதியிழைப்போர் என்றனர்.
- அவர்கள் தலைகுனிவிற்கு ஆளாக்கப்பட்டனர். (அதாவது, பதிலளிக்க இயலாதவர்களாக ஆக்கப்பட்டனர். பின்னர் அவர்கள்) இவர்கள் (இக் கடவுளர்கள்) பேசுவதில்லை என்பதைத் தான் நீர் நன்கு அறிவீரே என்றனர்.
- அதற்கு (இப்ராஹீம்) கூறினார்: அவ்வாறாயின் உங்களுக்கு எந்த நன்மையையோ, தீமையையோ செய்ய முடியாத ஒன்றையா, நீங்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு வணங்குகிறீர்கள்?
- உங்கள் மீது அந்தோ பரிதாபம்! அல்லாஹ்வையன்றி நீங்கள் எதனை வணங்குகின்றீர்களோ அவற்றின் மீதும் பரிதாபம். நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லையா?
- (இது கேட்டு கோபமடைந்த அவர்கள்) நீங்கள் எதனையாவது செய்ய நாடினால், இவரை எரித்து உங்கள் கடவுளர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார்.
- அப்போது நாம், நெருப்பே! நீ இப்ராஹீமுக்காக குளிர்ந்து சாந்தி நிறைந்ததாகி விடு என்றோம்.
- அவர்கள் அவருக்குத் தீது செய்ய விரும்பினார்கள். ஆனால் நாம் அவர்களை பேரிழப்புக்கு ஆளாக்கி விட்டோம்.
- நாம் அவரையும், லூத்தையும் காப்பாற்றி, ஒரு நாட்டிற்குக் கொண்டு சென்றோம். அதில் எல்லா மக்களுக்காகவும் அருள் செய்திருந்தோம்.
- மேலும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், பேரராகிய யாகூப்பையும் வழங்கினோம். அவர்களெல்லாரையும் நாம் நல்லவர்களாக ஆக்கினோம்.
- நாம் அவர்களை (மக்களின்) தலைவர்களாக ஆக்கினோம். அவர்கள் நமது கட்டளை மூலம் அவர்களுக்கு நேர்வழி காட்டினர். நாம், அவர்களுக்கு நற்செயல்களைச் செய்யுமாறும், தொழுகையை நிலைநாட்டுமாறும், ஸக்காத்து கொடுக்குமாறும் வஹியின் மூலம் அறிவித்தோம். அவர்கள் யாவரும் எம்மை வணங்கும் அடியார்களாகவே விளங்கினர்.
- நாம் லூத்துக்கு (மக்களிடையே தீர்ப்பு வழங்குவதற்கான) ஞானத்தையும்10, அறிவையும் வழங்கினோம். மிகவும் தீய செயலைச் செய்து வந்த நகரத்திலிருந்து நாம் அவரைக் காப்பாற்றினோம். அ(வருடைய நகரில் வசித்த)வர்கள் கட்டுப்பாட்டை மீறிய, மிகவும் தீய சமுதாயத்தினராக இருந்தனர்.
- நாம் அவரை நம் கருணையில் நுழையச் செய்தோம். அவர் எம்முடைய நல்லடியார்களைச் சார்ந்தவராக இருந்தார். ரு5
- (இப்ராஹீமுடைய நிகழ்ச்சிக்கு) முன்னர் நூஹ்(எம்மை) அழைத்த போது, நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்று நாம் அவரையும், அவரது குடும்பத்தினரையும் பெருந்துன்பத்திலிருந்து காப்பாற்றினோம்.
- எம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்திய அவருடைய சமுதாயத்தினருக்கு எதிராக, நாம் அவருக்கு உதவி செய்தோம். அவர்கள் மிகவும் தீய சமுதாயத்தினராக இருந்தனர். எனவே நாம் அவர்களெல்லாரையும் மூழ்கடித்து விட்டோம்.
- மேலும், தாவூதையும், சுலைமானையும் நினைத்துப் பார்ப்பீராக! ஒரு வயலை சமுதாயப் பொதுமக்கள்11 விழுங்கிக் கொண்டிருந்த போது, அவ்விருவரும் அது குறித்துத் தீர்ப்பு வழங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அவர்களின் தீர்ப்புக்கு நாமே சாட்சியாக இருந்தோம்.
- பிரச்சனையின் உண்மையை நாம் சுலைமானுக்குத் தெளிவுபடுத்தினோம். நாம் அவர்கள் எல்லோருக்கும் தீர்ப்பு வழங்குவதற்கான ஞானத்தையும், அறிவையும் வழங்கினோம். மேலும் நாம் மலைவாசிகளையும், பறவைகளையும் தாவூதுடன் பணியாற்ற வைத்தோம். அவர்களெல்லாரும், இறைவனது தூய்மையினை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர். இவற்றையெல்லாம் நாமே செய்தோம்.
- உங்கள் போரில் உங்களைக் காப்பாற்றுவதற்காக நாம் அவருக்குக் கவச ஆடையினைத் தயாரிக்கக் கற்றுக் கொடுத்தோம். எனவே நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருப்பீர்களா?
- நாம் வேகமான காற்றையும், சுலைமானுக்குப் பணியாற்ற வைத்தோம். அது அவரது கட்டளைக்கு ஏற்ப, நாம் அருள் புரிந்த பூமியை நோக்கி வீசியது12. எல்லாவற்றையும் நாம் அறிவோம்.
- கலகம் செய்பவர்களுள்13 அவருக்காகக் கடல்களில் முத்துக் குளிப்பவர்களும், இது மட்டுமன்றி வேறு பணி செய்பவர்களும் இருந்தனர். நாம் அவர்களைக் கண்காணிப்பவராக இருந்தோம்.
- மேலும் அய்யூப் தம் இறைவனை அழைத்துத் துன்பம் என்னைப் பற்றிக் கொண்டது. இறைவா! நீ கருணை காட்டுபவர்கள் எல்லோரையும் விட, மிக அதிகமாகக் கருணை காட்டுபவனாவாய் எனக் கூறினார்.
- எனவே நாம் அவரது வேண்டுதலை ஏற்று, அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தை அகற்றினோம். அவருக்கு அவருடைய குடும்பத்தினரையும் வழங்கினோம். எம்மிடத்திலிருந்து கருணையாக அவர்களைப் போன்று மேலும் வழங்கினோம். இந்த நிகழ்ச்சியினை, வணங்குபவர்களுக்கு ஓர் அறிவுரையாக ஆக்கினோம்.
- மேலும் இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்லு ஆகியவர்களையும் (நினைத்துப் பார்ப்பீராக). இவர்களெல்லாரும் பொறுமையாளர்களாக விளங்கினர்.
- நாம் இவர்களெல்லாரையும் எம் கருணையில் நுழையச் செய்தோம். இவர்கள் யாவரும் நல்லவர்களாக விளங்கினர்.
- துன்னூன் (ஆகிய யூனுஸ்) கோபத்துடன் சென்ற நேரத்தை(யும் நினைத்துப் பார்ப்பீராக). நம் தீர்ப்பு அவரைப் பிடித்துக் கொள்ளாது என அவர் எண்ணினார். எனவே அவர் துன்ப வேளையில் (நம்மை) அழைத்து, உன்னையன்றி வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. நீ தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநீதியிழைப்பவர்களைச் சார்ந்தவனாக இருந்தேன் என்றார்.
- எனவே நாம் அவரது பிரார்த்தனையை ஏற்று, துயரத்திலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நாம் நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றி வருகின்றோம்.
- ஸக்கரிய்யா தமது இறைவனை அழைத்து: என் இறைவா! என்னைத் தனித்தவனாக விட்டு விடாதிருப்பாயாக. வாரிசாக இருப்பவர்களுள் நீ மிகச்சிறந்தவனாவாய் என்று கூறிய நேரத்தை(யும் நினைவு கூர்வீராக).
- நாம் அவரது பிரார்த்தனையை ஏற்று, அவருக்கு யஹ்யாவை வழங்கினோம். அவருடைய மனைவியை அவருக்காக உடல் நலமுள்ளவராக்கினோம். அவர்களெல்லாரும் நல்லவற்றைச் செய்வதில் ஒருவரையொருவர் முந்திக் கொண்டிருந்தனர். நம்பிக்கையுடனும், பயத்துடனும் எம்மை அழைத்தனர். எமக்காகப் பணிவான வாழ்க்கையை நடத்தினர்.
- தம் கற்பைக் காப்பாற்றிக் கொண்ட அப்பெண்ணையும் (நினைத்துப் பார்ப்பீராக). நாம் அவருக்கு நமது வஹியை வழங்கி அருள் புரிந்தோம். அவரையும், அவருடைய மகனையும் உலகிற்கு ஓர் அடையாளமாக்கினோம்.
- உங்களுடைய இந்தச் சமுதாயத்தினர் ஒரே சமுதாயத்தினராவர். நான் உங்கள் இறைவனாவேன். எனவே நீங்கள் என்னையே வணங்குங்கள்.
- (நபிமார்களின் எதிரிகளாகிய) அவர்கள் தங்கள் மார்க்கத்தைத் தங்களுக்குள்ளே துண்டு துண்டாக்கி(த் தங்களுக்கு ஏற்ற பகுதிகளை எடுத்து)க் கொண்டனர்15. (ஆனால்) அவர்கள் யாவரும் எம்மிடமே திரும்பி வரக்கூடியவர்களாவர். ரு6
- எனவே நம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில், நற்செயல்களைச் செய்வோரின் முயற்சி வீணாவதில்லை. நாம் அதைப் (நற்செயல்களைப்) பதிவு செய்வோம்.
- ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்து விட்டால், அவ்வூரில் வாழ்ந்து வந்தவர்கள் இவ்வுலகிற்குத் திரும்ப வர மாட்டார்கள் என்பது விதிக்கப்பட்டுள்ளது.
- இறுதியில் யாஜூஜூம், மாஜூஜூம் திறந்து விடப்படும் பொழுது அவர்கள் எல்லாக் குன்றுகளையும், கடல் அலைகளையும் தாண்டி உலகில் பரவி விடுவர்16.
- (இறைவனது ) உண்மையான வாக்குறுதி நெருங்கி விடும் போது நிராகரிப்பவர்களின் திறந்த கண்கள் திறந்தவாறே இருந்து விடும்17. (மேலும் அவர்கள் கூறுவார்கள்): எங்கள் மீது பரிதாபமே! நாங்கள் இந்த நாளைக் குறித்து முற்றிலும் கவனமற்றவர்களாகவே இருந்து வந்தோம். அது மட்டுமன்றி, நாங்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்தோம்.
- (அப்போது இவ்வாறு கூறப்படும்): நீங்களும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவையனைத்தும் நரகத்தின் விறகுகளே18. நீங்களெல்லாரும் அதில் நுழைவீர்கள்.
- அவர்கள் உண்மையிலேயே கடவுளர்களாக இருந்திருப்பின், அவர்கள் நரகத்திற்கு வந்திருக்க மாட்டார்கள். அவர்களெல்லாரும் அதில் நீண்ட காலம் வீழ்ந்து கிடப்பார்கள்.
- அதில் அவர்களுக்கு அழுகையின் புலம்பல் (மட்டுமே) இருக்கும். அவர்கள் அதில் (வேறெதையும்) கேட்க மாட்டார்கள்.
- நன்மை கிடைக்கும் என்ற நற்செய்தியினை ஏற்கனவே எம்மிடமிருந்து பெற்றவர்கள், அதிலிருந்து (நரகத்திலிருந்து) வெகு தொலைவில் விலகியே இருப்பார்கள்.
- அவர்கள் அதன் சப்தத்தைக் கூடக் கேட்க மாட்டார்கள். தங்கள் உள்ளம் விரும்பும் நிலையிலே அவர்கள் என்றென்றும் இருப்பர்.
- பெருந்துன்பங்கூட அவர்களைக் கவலைக்குள்ளாக்காது. மேலும் மலக்குகள் அவர்களைச் சந்திப்பார்கள். இது உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட உங்கள் நாளாகும் (என்று அவர்கள் கூறுவார்கள்).
- எழுதப்பட்ட பத்திரச் சுருளை சுருட்டிக் கொள்வது போன்று, நாம் வானத்தைச் சுருட்டும் நாளில் முதன்முறை நாம் உங்களைப் படைக்கத் தொடங்கியது போன்று திரும்பவும் அதனைச் செய்வோம்19. இது, நாம் கடமையாகக் கொண்டுள்ள வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் அவ்வாறு செய்வோம்.
- (தாவூதின்) சங்கீதத்தில், சில அறிவுரைகளைக் கூறியதன் பின்னர் (புனித) பூமிக்கு என்னுடைய நல்லடியார்கள் வாரிசுகளாவார்கள் என்று வரைந்துள்ளோம்.
- (இறைவனை) வணங்கும் சமுதாயத்தினருக்கு இ(வ்விஷயத்)தில் ஒரு தூதுச் செய்தி உள்ளது20.
- நாம் உம்மை அனைத்து உலகங்களுக்கும் ஓர் அருளாகவே அனுப்பினோம்21.
- நீர் கூறுவீராக: உங்கள் இறைவன் ஒருவனே என்று தான் எனக்கு வஹி அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் கட்டுப்படுவீர்களா?
- அவர்கள் புறக்கணித்து விட்டால், நீர் அவர்களிடம் கூறுவீராக. நான் உங்கள் எல்லோருக்கும் ஒன்றுபோல் எச்சரிக்கை செய்து விட்டேன். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டது அண்மையில் இருக்கிறதா அல்லது தொலைவில் இருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது.
- இறைவன், நீங்கள் பேச்சில் வெளிப்படுத்துவதையும் அறிகின்றான். நீங்கள் மறைத்து வைப்பதையும் அறிகின்றான்.
- அது ஒருவேளை உங்களுக்குச் சோதனையாகவும், குறிப்பிட்ட ஒரு காலம் வரை பயனளிப்பதாகவும் இருக்கலாம் என்பதும் எனக்குத் தெரியாது.
- (இந்த இறையறிவிப்பு வந்ததும் இறைத்தூதர்) கூறினார்கள்: என் இறைவா! நீ உண்மைக்கேற்ப தீர்ப்பளிப்பாயாக22. எங்கள் இறைவன் அளவற்ற அருளாளனாவான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் கூறுபவற்றிற்கு எதிராக அவனிடமே உதவி கோரப்படுகின்றது. ரு7