22- அல்-ஹஜ்

அதிகாரம் : அல்-ஹஜ்
அருளப்பெற்ற இடம் : மதீனா | வசனங்கள் : 79
பிரிவுகள் : 10


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. மக்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். ஏனென்றால் (தீர்ப்பு வழங்கும்) அந்த நேரத்தின் பேரதிர்ச்சி1 மிகவும் பயங்கரமானதாகும். 
  3. நீர் அதனைக் காணும் நாளில்2 பாலூட்டும் ஒவ்வொரு தாயும் தான் பால் கொடுக்கும் குழந்தையை மறந்து விடுவாள். கருவுற்ற ஒவ்வொரு பெண்ணும் தன் சுமையைக் களைந்து விடுவாள். நீர் மக்களைக் குடி மயக்கத்தில் இருப்பவர்களைப் போன்று காண்பீர். ஆனால் அவர்களோ குடி மயக்கத்தைக் கொண்டவர்களல்ல. ஆயினும், அல்லாஹ்வின் தண்டனை மிகக் கடினமானது. 
  4. மேலும் மக்களுள் சிலர் அல்லாஹ்வைக் குறித்து அறிவு எதுவுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். மேலும் (உண்மைக்கெதிராக) கிளர்ச்சியாளரான ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகின்றனர். 
  5. (ஆனால்) அத்தகையவனுடன் நட்பு கொண்டவரையும் அவன் வழி தவறச் செய்து, நரகத் தண்டனையின் பால் கொண்டு செல்வான் என்று அவனைக் குறித்துத் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. 
  6. மக்களே! நீங்கள் மீண்டும் எழுப்பப்படுவது குறித்து ஐயத்திற்குள்ளாகியிருந்தால், (நினைவில் கொள்ளுங்கள்) நாம் (நம் ஆற்றலை) உங்களுக்குத் தெளிவாக்க நாம் உங்களை முதலில் மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர் விந்திலிருந்தும், அதன் பின்னர் (முன்னேற்றத்தை வழங்கி) ஒட்டிக் கொள்ளும் தன்மையினைக் கொண்ட ஒரு நிலையிலிருந்தும், பின்னர் சதைத் துண்டிற்கு நிகரான ஒரு நிலையிலிருந்தும் படைத்தோம். அது குறைவான அல்லது முழுமையான ஒரு சதைத் துண்டின் வடிவமாக இருந்தது. நாம் விரும்புவதனை, குறிப்பிட்ட ஒரு காலம் வரை கருப்பைகளில் தங்கி இருக்கச் செய்கின்றோம். பின்னர் நாம் உங்களை ஒரு குழந்தையின் வடிவில் வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் உங்களுடைய வலிமையினை (வலிமை வாய்ந்த வயதினை) அடைய, உங்களை வளரச் செய்கிறோம். உங்களுள் சிலர் தமது (இயல்பான) வயதையடைந்து மரணமடைகின்றனர். உங்களுள் இன்னுஞ்சிலர் மிக முதிய வயதை அடைகின்றனர். இதனால் அவர்கள் அறிவைப் பெற்றிருந்த பின்னரும், எதுவுமறிவதில்லை. நீர் பூமியை(ச் சில காலங்களில்) வறண்டு, உயிரற்றதாகக் காண்கின்றீர். பின்னர் நாம் அதன் மீது (மழை) நீரை இறக்கும் போது, அது பொலிவு பெற்று, செழுமையடையத் தொடங்குகின்றது. அழகு வாய்ந்த எல்லா வகையான வயல்களையும் அது முளைக்கச் செய்கின்றது. 
  7. இதற்குக் காரணம், அல்லாஹ்வே நிலைத்திருப்பவனும், நிலைத்திருக்கச் செய்பவனுமாவான்; மேலும், அவன் உயிரற்றவற்றிற்கு உயிர் கொடுக்கின்றான்; மேலும் அவன் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவனாவான். 
  8. மேலும், (ஒவ்வொன்றிற்கும்) குறிப்பிடப்பட்ட நேரம், கட்டாயம் வந்தே தீரும். இதில் எந்த ஐயமுமில்லை; நிச்சயமாக அல்லாஹ் கல்லறைகளிலுள்ளவர்களை மீண்டும் எழுப்புவான். 
  9. மக்களுள் இன்னுஞ்சிலர் அல்லாஹ்வைப் பற்றி எந்த அறிவும், நேர்வழியும், ஒளிமிக்க வேதமும் இன்றி வாக்குவாதம் செய்கின்றனர். 
  10. அவன், அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களை) வழி தவறச் செய்வதற்காக, கர்வங் கொண்டு திசை திருப்புகிறான். அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. மறுமை நாளில் எரிக்கும் தண்டனையை அவனை சுவைக்கச் செய்வோம்.
  11. உன் கைகள் ஏற்கனவே செய்து அனுப்பியுள்ளதே இதற்குக் காரணம் (எனக் கூறப்படும்). மேலும் அல்லாஹ் நிச்சயமாக தன் அடியார்களுக்கு சிறிதும் அநீதி இழைப்பதில்லை. ரு1 
  12. அல்லாஹ்வை விளிம்பில் நின்று வணங்கும் சிலரும்  மக்களுள் உள்ளனர். எனவே அவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைத்தால், அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அவர்கள் முகம் திருப்பிக் கொள்கிறார்கள். அவர்கள் இம்மையையும், மறுமையையும் இழக்கிறார்கள். இதுவே மிகத் தெளிவான இழப்பாகும். 
  13. அவர்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு, தங்களுக்குத் தீங்களிக்காததும், தங்களுக்கு பயனளிக்காததுமாகிய ஒன்றினை அழைக்கின்றனர். இது மிகத் தூரமான வழிகேடாகும். 
  14. அவர்களால் அழைக்கப்படுபவன் எத்தகையோன் எனின், அவனின் தீங்கு அவனின் நன்மையை விட மிகவும் நெருங்கியதே. அந்தக் காப்பாளன் மிகக் கெட்டவன். அவனது நண்பர்களும் மிகக் கெட்டவர்களே. 
  15. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களை, அல்லாஹ் நிச்சயமாக கீழே ஆறுகள் ஓடும் தோட்டங்களில் நுழையச் செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்புவதைச் செய்கிறான். 
  16. அவர்களுக்கு (அதாவது நபி பெருமானார்(ஸல்) அவர்களுக்கு) இவ்வுலகிலும், மறு உலகிலும் அல்லாஹ் ஒருபோதும் உதவி செய்ய மாட்டான் என்று எண்ணுபவர் ஒரு கயிற்றை வானம் வரை கொண்டு சென்று (அதன் மீது ஏறி) பின்னர் அதனைத் துண்டித்து விடட்டும்3. இதன் பின்னர் அவரது திட்டம் அவரைக் கோபத்திற்குள்ளாக்கிக் கொண்டிருப்பவற்றை (அதாவது நபிகள் நாயகத்திற்கு இறைவனிடமிருந்து கிடைத்துக் கொண்டிருக்கும் உதவிகளையும், வெற்றிகளையும்) அகற்றுகின்றதாவென்பதை அவர் பார்க்கட்டும். 
  17. இவ்வாறு நாம் இதனை (அதாவது குர்ஆனை) மிகத்தெளிவான அடையாளங்களாக இறக்கினோம். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுபவருக்கு நேரான பாதையினைக் காட்டுகின்றான். 
  18. (முஹம்மது (ஸல்) அவர்கள் மீது) நம்பிக்கை கொண்டவர்கள், யூதர்கள், ஸாபிகள், கிறித்தவர்கள், மஜூஸிகள், (இறைவனுக்கு) இணை வைத்தவர்கள் ஆகிய இவர்களுக்கிடையில் நிச்சயமாக அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பு வழங்குவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். 
  19. (இஸ்லாத்தின் எதிரியாகிய) நீர், வானத்திலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், விலங்குகளும், மக்களுள் பெரும்பாலாரும் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடப்பதனைக் காண்பதில்லையா? ஆனால் மக்களில் ஒரு பெரும் பகுதியினர் தண்டனைக்கு உரியவராகி விட்டனர். அல்லாஹ் இழிவுபடுத்துபவருக்குக், கண்ணியமளிப்பவர் எவரும் இல்லை. அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்கிறான். 
  20. (நம்பிக்கை கொண்டோர், மறுப்போர் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தமது இறைவனைக் குறித்து வாக்குவாதம் செய்கின்றனர். எனவே, (இவர்களுள்) நிராகரிப்போருக்கு நெருப்பாலான ஆடைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தலைகளில் கொதிநீர் ஊற்றப்படும்.
  21. (கொதிக்கும் நீராகிய) அதனால் அவர்களின் வயிறுகளிலுள்ளவையும், அவர்களின் தோல்களும் வெந்து விடும். 
  22. அவர்களுக்(குத் தண்டனை கொடுப்பதற்) காக இரும்புச் சம்மட்டிகள் உள்ளன. 
  23. மிகுந்த வேதனையினால், அவர்கள் அத்தண்டனையிலிருந்து வெளியேற முயலும் போதெல்லாம், அதன் பக்கமே திருப்பி விடப்படுவர். எரியும் தண்டனையைச் சுவைத்துக் கொண்டே இருங்கள் (என்றும் அவர்களிடம் கூறப்படும்). ரு2 
  24. நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் ஆற்றுபவரை, நிச்சயமாக அல்லாஹ் கீழே ஆறுகள் ஓடும் தோட்டங்களில் நுழையச் செய்வான். அங்கு அவர்கள் பொன்னாலும், முத்துக்களாலும் செய்யப்பட்ட வளையல்கள் அணிவிக்கப்படுவர். அங்கு அவர்களுக்குரிய ஆடைகள் பட்டாலானவையாகும். 
  25. மேலும் அவர்கள் தூய சொல்லின் பால் வழிநடத்தப்படுவர்; மேலும் புகழுக்குரிய (இறை) வழியின்பாலும் வழிகாட்டப்படுவர். 
  26. நிராகரிப்பவர்களுக்கும், மேலும் இறைவழியிலிருந்தும், எல்லா மனிதர்களுக்கும் (அதாவது) எங்கு வசிப்பவர்களுக்கும், வெளியிலிருந்து வந்தவர்களுக்கும் பொதுவானதாக நாம் ஏற்படுத்தியுள்ள புனிதப் பள்ளியிலிருந்தும்(பைத்துல்லாஹ்) எவர்கள் மக்களைத் தடுப்பார்களோ அவர்களுக்கும், எவர் கோணலான முறையில் அநீதியிழைப்பாரோ அவர்களுக்கும் நாம் வேதனைக்குரிய ஆக்கினையைச் சுவைக்கச் செய்வோம். ரு3 
  27. மேலும் இப்ராஹீமிற்கு அந்த வீட்டின் நிலத்தை ஒதுக்கி; என்னுடன் எதையும் இணை வைக்காதீர். மேலும் எனது வீட்டை, வலம் வருபவர்களுக்காகவும், (தொழுகையில்) நிற்பவர்களுக்காகவும், குனிபவர்களுக்காகவும், சிரம்பணிந்து விழுபவர்களுக்காகவும் தூய்மைப்படுத்துவீராக4. (என்று கூறிய நேரத்தை நினைத்துப் பார்ப்பீராக). 
  28. மேலும் மனித இனத்திற்கு ஹஜ் (புனித பயணம்) குறித்துப் பிரகடனப்படுத்துவீராக. அவர்கள் நடந்தும், தொலைதூரப் பாதைகளிலிருந்து வரும் ஒவ்வொரு (நெடும் பயணத்தால்) மெலிந்த ஒட்டகங்களிலும் உம்மிடம் வருவார்கள். 
  29. அதன் நற்பலனை அவர்களுக்காகக் காணவும், அவர்களுக்கு அவன் அளித்துள்ள கால்நடைகள் மீது ஒரு குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரை நினைவு கூரவும்(அவர்கள் வருவார்கள்). பின்னர், அவற்றிலிருந்து உண்ணுங்கள். மேலும் கஷ்டத்திலிருப்பவர்களுக்கும், வறியவர்களுக்கும் (அதிலிருந்து) உணவளியுங்கள். 
  30. பின்னர் (அவர்கள்) தம் அழுக்குகளை (நீக்கி) சுத்தம் செய்யட்டும். மேலும் தமது ஆணைகளை நிறைவேற்றட்டும். மேலும் புராதன ஆலயத்தை (கஃபத்துல்லாஹ்வை) சுற்றி வரட்டும்.
  31. (இது அல்லாஹ்வின் கட்டளை). அதாவது அல்லாஹ்வினால் புனிதமாக்கப்பட்டவற்றை மதிப்பவருக்கு அ(ச் செயலான)து, அவரது இறைவனிடத்தில் சிறப்புக்குரியது. (நம்பிக்கை கொண்டவர்களே! உண்ணக் கூடாது என குர்ஆனில் உங்களுக்கு) எடுத்துரைக்கப்பட்டவற்றையன்றி, (மற்ற) கால் நடைகள் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. எனவே நீங்கள் சிலை வணக்கமான இணை வைப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள்; பொய் பேசுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளுங்கள். 
  32. அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல், அவனை மட்டும் வணங்குபவர்களாக (இருங்கள்). அல்லாஹ்வுக்கு இணை வைப்பவன் வானத்திலிருந்து விழுந்தவனைப் போல் ஆவான். அவனைப் பறவைகள் பறித்துச் செல்கின்றன. அல்லது காற்று அவனை நெடுந்தொலைவில் வீசி எறிந்து விடுகிறது. 
  33. உண்மையில் அல்லாஹ்வின் (புனித) அடையாளங்களை ஒருவர் மதித்தால், நிச்சயமாக அது அவர் உள்ளத்தின் இறை அச்சத்திலிருந்தே (வெளிப்படுவது) ஆகும். 
  34. (குர்பானிகளாகிய) அவற்றிலிருந்து குறப்பிட்ட ஒரு காலம் வரை நீங்கள் பயன்கள் பெறலாம். பின்னர் அவற்றை புராதன இறையாலயத்தில் சேர்ப்பித்து விட வேண்டும்(என்பதை நினைவில் கொள்ளுங்கள்). ரு4 
  35. ஒவ்வொரு சமுதாயத்திற்கும், அவர்களுக்கு அளித்துள்ள கால்நடைகள் மீது, அல்லாஹ்வின் பெயர் கூற(ப்பட) நாம் குர்பானியின் ஒரு வழியை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒருவனே ஆவான். எனவே அவனுக்கே கட்டுப்படுங்கள். (இறைவனுக்குப்) பணிபவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. 
  36. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால், அவர்களின் உள்ளங்கள் அஞ்சி நடுங்குகின்றன. மேலும் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். மேலும் அவர்கள் தொழுகையை நிலைநாட்டுவார்கள். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நம் வழியில்) செலவு செய்வார்கள். 
  37. நாம் உங்களுக்குக் குர்பானிக்குரிய ஒட்டகங்களையும், அல்லாஹ்வின் புனித அடையாளங்களைச் சார்ந்தவையாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு மிகுந்த நன்மையுள்ளது. எனவே நீங்கள் அவற்றை வரிசைகளாக நிறுத்தி, அவற்றின் மீது இறைவனின் பெயரைக் கூறுங்கள். அவை நிலத்தில் சாய்ந்து விட்டால், அவற்றி(ன் இறைச்சியி) லிருந்து நீங்களும் உண்ணுங்கள். (தமது வறுமையிலும்) போதுமென்ற மனமுடையவருக்கும், (வறுமையினால்) கவலைக்குள்ளாகியிருப்பவருக்கும் உணவளியுங்கள். இவ்வாறு நாம், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அப்பிராணிகளை உங்கள் பயனிற்காக உருவாக்கினோம். 
  38. அவற்றின் இறைச்சியும், அவற்றின் இரத்தமும் ஒருபோதும் அல்லாஹ்வைச் சென்றடைவதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களிலுள்ள இறையச்சம் தான் அவனைச் சென்றடைகின்றது. அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியினைக் காட்டியதற்காக, நீங்கள் அவனது பெருமையினை எடுத்துரைக்க இவ்வாறு அவன் அவற்றை உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்தான். நற்செயல் செய்பவர்களுக்கு நீர் நற்செய்தியினை வழங்குவீராக. 
  39. நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களைப் பாதுகாத்துக் கொண்டேயிருப்பான். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை துரோகிகளையும், நன்றி கெட்டவர்களையும் விரும்புவதில்லை. ரு5 
  40. எவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டதோ, அவர்களுக்குப்(போரிட) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், அவர்கள் மீது அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவ ஆற்றல் உள்ளவனாவான்.
  41. 'எங்களின் இறைவன் அல்லாஹ்' என்று சொன்னதற்காக மட்டும் அநியாயமாக அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டப்பட்டவர்களுக்கும், (போரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது). மேலும் அல்லாஹ் சில மனிதர்களுக்கு மற்றவர்களைக் கொண்டு பதிலடி கொடுக்க வைக்கவில்லையாயின், கோயில்களும், ஆலயங்களும், மடங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாக நினைவு கூரப்படும் பள்ளி வாயில்களும் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். மேலும் அல்லாஹ் அவனு(டைய மார்க்கத்து)க்கு உதவுபவர்களுக்கு நிச்சயமாக உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் சக்தி வாய்ந்தவனும், மிகைத்தோனுமாவான். 
  42. (நாட்டைத் துறந்து சென்ற முஸ்லீம்களாகிய) அவர்களுக்கு நாம் உலகில் வலிமையினை வழங்கினால், அவர்கள் தொழுகையினை நிலைநாட்டுவார்கள். ஸக்காத்தும் கொடுப்பார்கள். நல்லவற்றைச் செய்யுமாறு ஏவி, தீயவற்றை தடுப்பார்கள். எல்லாச் செயல்களின் முடிவும் அல்லாஹ்விடம் உள்ளது. 
  43. அவர்கள் உம்மைப் பொய்ப்படுத்துகிறார்களென்றால், இவர்களுக்கு முன்னர் நூஹ்வுடைய சமுதாயத்தினரும், ஆது  சமுதாயத்தினரும், ஸமூது சமுதாயத்தினரும், (தங்கள் நபிமார்களைப்) பொய்ப்படுத்தினர். 
  44. இப்ராஹீமின் சமுதாயத்தினரும், லூத்தின் சமுதாயத்தினரும் (அவ்வாறே செய்தனர்). 
  45. மதியன் வாசிகளும் (அவ்வாறே செய்தனர்). மூஸாவும் பொய்யாக்கப்பட்டார். ஆகவே நான் நிராகரித்தவர்களுக்கும் சிறிது காலக்கெடு அளித்து, பின்னர் அவர்களைப் பிடித்து விட்டேன். எனவே என்னை நிராகரிப்பது எவ்வளவு பயங்கரமானது (என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்). 
  46. அநீதியிழைத்துக் கொண்டிருந்த நிலையிலுள்ள எத்தனையோ நகரங்களை நாம் அழித்து விட்டோம். அவை தமது கூரைகளின் மீது விழுந்து கிடக்கின்றன.  (எத்தனையோ) கிணறுகள் முற்றிலும் கைவிடப்பட்டுள்ளன. மிக மிக உயர்ந்த (எத்தனையோ) கோட்டைகளும் (அழிந்து போய் விட்டன). 
  47. அவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து பார்ப்பதில்லையா? அவ்வாறாயின், உணர்ந்து கொள்ளக் கூடிய உள்ளங்கள் அவர்களுக்கும் கிடைத்திருக்கும். அல்லது கேட்கக் கூடிய காதுகள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். உண்மையில் புறக்கண்கள் குருடாக இருப்பதில்லை. மாறாக, நெஞ்சங்களிலுள்ள உள்ளங்களே குருடாக இருக்கின்றன. 
  48. அவர்கள் உம்மிடம் தண்டனையை விரைவாகக் கொண்டு வருமாறு அவசரப்படுகின்றனர். அல்லாஹ் ஒருபோதும் தன் வாக்குறுதியினை மீற மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது, (சில வேளைகளில்) உங்கள் கணக்கின் படி ஆயிரம் வருடங்கள் போன்றதாகும். 
  49. அநீதியிழைத்துக் கொண்டிருந்த நிலையிலுள்ள எத்தனையோ நகரங்களுக்கு (முதலில்) நான் காலக்கெடு அளித்தேன். பின்னர் நான் அவற்றைப் பிடித்து விட்டேன். என்னிடமே எல்லோரும் திரும்பி வர வேண்டியதுள்ளது. ரு6 
  50. நீர் கூறுவீராக: மக்களே! நான் உங்களுக்கு மிகத்தெளிவான எச்சரிக்கையை விடுப்பவனாக இருக்கின்றேன்.
  51. நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்பவர்களுக்கு (இறைவனது) மன்னிப்பும், கண்ணியமான உணவும் கிடைக்கும். 
  52. எம்முடைய அடையாளங்கள் குறித்து (எம்மைச்) செயலிழக்கச் செய்ய முயன்றோர் நரகத்திற்குரியவர்களாவர். 
  53. உமக்கு முன்னர் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதரும், ஒவ்வொரு நபியும் ஏதாவதொன்றினை விரும்பிய போதெல்லாம்5 அவரது விருப்பத்தின் பாதையில்6 ஷைத்தான் இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அல்லாஹ், ஷைத்தான் ஏற்படுத்துவதை அழித்து விடுகிறான். பின்னர் அல்லாஹ் தன் அடையாளங்களை உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானம் உள்ளவனுமாவான். 
  54. (இது) ஷைத்தான் (இறைத்தூதர்களின் வழியில்) ஏற்படுத்துபவற்றை உள்ளத்தில் நோய் உடையவர்களுக்கும், கடின உள்ளமுடையவர்களுக்கும் ஒரு சோதனையாக அவன் (அல்லாஹ்) ஆக்குவதற்கேயாகும். நிச்சயமாக அநீதியிழைப்போர் கடுமையாக எதிர்ப்பதில் ஈடுபட்டிருக்கின்றனர். 
  55. மேலும் (குர்ஆனாகிய) அது உமது இறைவனிடமிருந்துள்ள உண்மையேயாகும் என்று அறிவுடையவர்கள் அறிந்து, அதனிடத்து நம்பிக்கை கொண்டு, அவர்களின் உள்ளங்கள் அவனுக்குப் பணிந்து விடுவதற்காகவும் ஆகும். நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கை கொண்டவர்களை நேரான வழியில் நடத்திச் செல்பவனாவான். 
  56. (அழிவிற்குரிய) நேரம் நிராகரிப்பாளர்களிடம் திடீரென வரும் வரை அல்லது தனக்குப் பின் எதனையும் விட்டு வைக்காத ஒரு நாளின் தண்டனை அவர்களிடம் வரும் வரை நிராகரிப்பவர்கள் இ(ந்)த(க்குர்ஆ)னைக்  குறித்து ஐயத்திலேயே இருப்பார்கள். 
  57. அந்நாளில் ஆட்சியெல்லாம் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும். அவன் அவர்களுக்கிடையில் தீர்ப்பு வழங்குவான். எனவே நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கைக்கேற்ப செயல்படுபவர்கள் பேரின்பத் தோட்டங்களில் இருப்பார்கள். 
  58. நிராகரித்து எம் அடையாளங்களைப் பொய்யாக்குபவர்களுக்கு நிச்சயமாக இழிவுபடுத்தும் தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது. ரு7 
  59. மேலும் அல்லாஹ்விற்காகத் தங்கள் இல்லங்களைத் துறந்து சென்று, பின்னர் கொல்லப்பட்டு அல்லது இயற்கையாக மரணமடைந்து விடுபவர்களுக்கு அல்லாஹ் மிகச்சிறந்த வெகுமதி வழங்குவான். வெகுமதி வழங்குபவர்களுள் அல்லாஹ்வே மிகச்சிறந்தவனாவான். 
  60. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை, அவர்கள் விரும்புமிடத்தில் நுழையச் செய்வான். அல்லாஹ் நன்கு அறிபவனும், மிக்க இரக்கம் உடையவனுமாவான்.
  61. இது அவ்வாறேயாகும். தான் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டனையளித்தவன் பின்னர் (அவனது பகைவனால்) தாக்கப்பட்டால், நிச்சயமாக அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் பாவங்களை அழித்து விடுபவனும், மிக்க மன்னிப்பவனுமாவான். 
  62. இதன் காரணமாவது, அல்லாஹ் இரவைப் பகலில் நுழையச் செய்கிறான்; பகலை இரவில் நுழையச் செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். 
  63. அதற்குக் காரணம் இதுவேயாகும்: அல்லாஹ் தானாகவே நிலைத்திருப்பவனும், ஏனைய பொருட்களை நிலைத்திருக்கச் செய்பவனுமாவான். மேலும் அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைக்கின்றவை அழிந்து விடக் கூடியதாகும். இன்னும் அல்லாஹ்வே மிக்க உயர்ந்தவனும், மிகப்பெரியவனுமாவான். 
  64. அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்குவதையும், பூமி பசுமையாகி விடுவதையும் நீர் பார்த்ததில்லையா? நிச்சயமாக அல்லாஹ் கிருபையுடையவனும், நன்கு அறிந்தவனுமாவான். 
  65. வானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அவனுக்கே உரியன. நிச்சயமாக அல்லாஹ் தன்னிறைவு பெற்றவன்;  புகழ்களுக்குரியவன். ரு8 
  66. அல்லாஹ் பூமியிலுள்ளவற்றை எந்த ஊதியமுமின்றி உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்திருப்பதனையும், கப்பல்கள் அவனது கட்டளையினால் கடலில் செல்வதனையும் நீர் பார்த்ததில்லையா? தன் கட்டளையின்றி வானம், பூமியின் மீது விழுந்து விடாதவாறு அவன் அதனைத் தடுத்து வைத்துள்ளான்7. நிச்சயமாக அல்லாஹ் மக்களிடம் மிக்க இரக்கம் காட்டுபவனும், (அவர்களுக்கு) மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். 
  67. அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் அவன் உங்களுக்கு மரணத்தைக் கொடுப்பான். இதன் பின்னர் மீண்டும் உங்களுக்கு உயிர் கொடுப்பான். நிச்சயமாக மனிதன் மிகவும் நன்றி கெட்டவனாக இருக்கின்றான். 
  68. நாம் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் வணக்கத்திற்குரிய ஒரு முறையினை ஏற்படுத்தினோம். அதற்கேற்ப அவர்கள் நடக்கின்றனர். எனவே இம்முறையினை (இஸ்லாத்தினை)க் குறித்து அவர்கள் உம்முடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். (ஏனென்றால் இது இறைவனால் ஏற்படுத்தப்பட்டதாகும்). நீர் (அவர்களை) உமது இறைவன் பால் அழைப்பீராக. ஏனென்றால் நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கின்றீர். 
  69. அவர்கள் உம்முடன் வாக்குவாதம் செய்தால், நீர் கூறுவீராக: அல்லாஹ் உங்கள் செயல்களை நன்கு அறிபவனாவான். 
  70. நீங்கள் எவற்றில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றீர்களோ, அவற்றைக் குறித்து மறுமை நாளில் அல்லாஹ் உங்களுக்கு(ம், எனக்கும்) இடையில் தீர்ப்பளிப்பான்.
  71. (அல்லாஹ்வின் தூதர் முஹம்மதே!) வானத்திலும், பூமியிலுமிருப்பவற்றை அல்லாஹ் அறிகின்றான் என்பது உமக்குத் தெரியாதா? இவையெல்லாம் ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இ(வ்வாறு  இவற்றைப் பாதுகாப்பதென்ப)து அல்லாஹ்வுக்கு எளிதேயாகும். 
  72. அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகின்றனர். இதற்கு அவன் எந்தச் சான்றையும் இறக்கவில்லை. மேலும் அவர்களுக்கு இதனைப் பற்றிய எவ்வகையான அறிவும் இல்லை. அநீதியிழைப்பவர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை. 
  73. அவர்களுக்கு எம்முடைய மிகத்தெளிவான வசனங்கள் படித்துக் காட்டப்பட்டால், நிராகரிப்பவர்களின் முகங்களில் வெறுப்பை(க் காட்டும் அறிகுறிகளை மிகத்தெளிவாக) நீர் காண்கின்றீர். அவர்களுக்கு எம் வசனங்களைப் படித்துக் காட்டிக் கொண்டிருப்பவர்களைத் தாக்க முனைந்து விடுகின்றனர். நீர் கூறுவீராக: நான் உங்களுக்கு இதனை விட மிகக் கொடியதைத் தெரிவிக்கட்டுமா? அது தான் நரகம். அல்லாஹ் அதனை நிராகரிப்பவர்களுக்கு வாக்களித்துள்ளான். அது மிக்க தீய தங்குமிடமாகும். ரு9 
  74. மக்களே! உங்களிடம் கூறப்படுவதைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றீர்களோ, அவர்களால் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது. அதற்காக அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலுஞ் சரியே. இது மட்டுமன்றி, ஓர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளைப் பறித்துச் சென்றால், அவர்களால் அதனிடமிருந்து அதனை(க் கூட) விடுவிக்க முடியாது. அழைப்போரும், அழைக்கப்படுவோரும் மிகப் பலவீனமானவர்களேயாவர். 
  75. அவர்கள் அல்லாஹ்வை (அவனது பண்புகளை) கண்ணியப்படுத்த வேண்டியவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக்க வலிமையுள்ளவனும், மிகைத்தோனுமாவான். 
  76. அல்லாஹ் வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் (தன்) தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் மிகக் கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். 
  77. அவர்களுக்கு முன்னாலிருப்பதையும், அவர்களுக்குப் பின்னாலிருப்பதையும் அவன் அறிகின்றான். மேலும் அல்லாஹ்விடமே எல்லாப் பிரச்சினைகளும் திரும்பக் கொண்டு செல்லப்படும். 
  78. நம்பிக்கை கொண்டவர்களே! குனிந்து, சிரம்பணிந்து, உங்கள் இறைவனை வணங்கி நற்செயலைச் செய்யுங்கள். அப்போது தான் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 
  79. மேலும் நீங்கள் அல்லாஹ்வின் வழியில் முயல வேண்டிய முறையில் முழுமையாக முயலுங்கள். (ஏனென்றால்) அவனே உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மார்க்கத்தி(ன் போதனையி)ல் அவன் உங்களுக்கு எந்தக் கஷ்டத்தையும் ஏற்படுத்தவில்லை. (நம்பிக்கை கொண்டவர்களே!) உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தை(த் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்) இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு சாட்சியாக இருக்கவும், அவன் உங்களுக்கு இதற்கு முன்னுள்ள (வேதத்)திலும் இ(ந்த வேதத்)திலும் முஸ்லீம்கள் என்று பெயர் சூட்டினான். எனவே நீங்கள் தொழுகையை நிறைவேற்றுங்கள். ஸக்காத்து கொடுங்கள். மேலும் அல்லாஹ்வை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள். அவனே உங்களின் எசமான்; (அவனே) மிகச்சிறந்த எசமானனும், மிகச்சிறந்த உதவியாளனுமாவான். ரு10


Powered by Blogger.