அதிகாரம் : தாஹா
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள்: 136
பிரிவுகள்: 8
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- தாஹா1 முழுமையான ஆற்றல்களைப் பெற்ற மனிதரே!
- நீர் துன்பத்திற்காளாக வேண்டுமென்பதற்காக நாம் உமக்கு(இந்த)க் குர்ஆனை இறக்கவில்லை.
- (இறைவனுக்கு) அஞ்சுவோருக்கு நேர்வழி காட்டுவதற்காகவே (இதனை இறக்கினோம்).
- பூமியையும், உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து (குர்ஆன்) இறக்கப்பட்டுள்ளது.
- அரியணையில் உறுதியாக நிலை கொண்ட (அவன்) அளவற்ற அருளாளன் ஆவான்.
- வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும், அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவையும், ஈரமான மண்ணிற்குக் கீழே உள்ளவையும் அவனுக்கே உரியன.
- நீர் உரத்த குரலில் பேசினாலும், (இறைவன் அதனைக் கேட்கின்றான்; மெதுவாகப் பேசினாலும் அவன் அதனைக் கேட்கின்றான்). ஏனெனில் அவன் இரகசியங்களையும் இன்னும் மறைந்திருப்பதையும் அறிகின்றான்.
- அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லை. அழகிய நற்பண்புகள் அனைத்தும் அவனுடையதேயாகும்.
- மூஸாவின் நிகழ்ச்சி உம்மிடம் வந்துள்ளதா? (இல்லையா?)
- அவர் ஒரு நெருப்பைக் கண்ட போது, தம் குடும்பத்தினரிடம் நீங்கள் (இங்கேயே) தங்கியிருங்கள்; நான் ஒரு நெருப்பைக் கண்டேன்2. நான் அங்கு சென்று3 அந்த நெருப்பிலிருந்து ஓர் எரி கொள்ளியை உங்களுக்குக் கொண்டு வரலாம்; அல்லது நான் அந்த நெருப்பிலிருந்து நேர்வழி பெறலாம் என்றார்.
- பின்னர் அவர் அ(ந்)த(நெருப்பி)ன் பக்கம் வந்த பொழுது அவர், மூஸாவே4 என(ப் பெயர் கூறி) அழைக்கப்பட்டார்.
- நான் உம்முடைய இறைவன். எனவே நீர் உமது காலணிகள் இரண்டையும் கழற்றி விடுவீராக5. ஏனென்றால் நீர் தூய 'துவா' பள்ளத்தாக்கில் இருக்கின்றீர்.
- நானே உம்மை (எனக்காக)த் தேர்ந்தெடுத்துள்ளேன். ஆகவே (உமக்கு) அருளப்படுகின்ற இறையறிவிப்பைச் செவியேற்பீராக.
- நிச்சயமாக நானே அல்லாஹ்- என்னையன்றி வேறெவனும் வணக்கத்திற்குரியவன் இல்லை. எனவே நீர் என்னையே வணங்கி, என்னை நினைவு கூர்வதற்காக தொழுகையை நிலை நாட்டுவீராக.
- நிச்சயமாக மறுமையின் காலம் வரக் கூடியது. ஒவ்வொரு ஆத்மாவுக்கும் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவதற்காக நான் அதனை வெளிப்படுத்த இருக்கின்றேன்.
- எனவே அதனிடத்து நம்பிக்கை கொள்ளாமல் தன் தீய ஆசைகளைப் பின்பற்றி நடப்பவர், அதனிடத்தி(ல் நம்பிக்கை கொள்வதி)லிருந்து உம்மைத் தடுத்து விட வேண்டாம். அதனால் நீர் அழிவிற்குள்ளாகி விடுவீர்.
- (மேலும்) மூஸாவே! உமது வலக்கையிலிருப்பது என்ன? (என்றோம்).
- அவர் இது எனது கைத்தடியாகும். நான் இதன் மீது சாய்ந்து கொள்கின்றேன்.இதனைக் கொண்டு என் ஆடுகளுக்கு (மரங்களிலுள்ள) இலைகளை உதிர்க்கின்றேன். இவை மட்டுமன்றி இதில் எனக்கு மேலும் பல பயன்கள் உள்ளன என்றார்.
- இதற்கு அவன் மூஸாவே! அதனைத் தரையில் எறியும் என்றான்.
- அவர் அதனைத் தரையில் எறிந்தார். அப்பொழுது அவர் திடீரென அது ஓடிக் கொண்டிருக்கும் பாம்பெனக் கண்டார்.
- (அப்பொழுது அவன்) இவ்வாறு கூறினான்: அதனைப் பிடியும். பயப்பட வேண்டாம். நாம் அதனை மீண்டும் அதன் முதல் நிலைக்குத் திருப்பி விடுவோம்.
- உமது கையை உமது கக்கத்தில் வைத்து மூடிவிட்டு, நீர் அதனை வெளியே எடுத்தால் அது எவ்வித கோளாறும் இல்லாமலே வெண்மையாக இருக்கும்6. இது மற்றோர் அடையாளமாகும்.
- இதன் வாயிலாக நாம் பெரும் அடையாளங்களை உமக்குக் காட்ட இருக்கின்றோம்.
- நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக. ஏனென்றால் அவன் வரம்பு மீறி விட்டான். ரு1
- இதற்கு அவர் கூறினார்: என் இறைவா! என் உள்ளத்தை விரிவுபடுத்துவாயாக!
- என் பணியை எனக்கு எளிதாக்குவாயாக!
- என் பேச்சிலுள்ள திக்கலை அகற்றுவாயாக!
- (அவ்வாறாயின்) அவர்கள் என் பேச்சை (எளிதாகப்) புரிந்து கொள்வர்.
- என் குடும்பத்திலிருந்து எனக்கோர் உதவியாளரை நியமிப்பாயாக!
- (அதாவது) என் சகோதரர் ஹாரூனை.
- அவர் மூலம் என் ஆற்றலை உறுதிப்படுத்துவாயாக.
- அவரை என் பணியில் பங்கேற்கச் செய்வாயாக.
- நாங்கள் (இருவரும்) உனது தூய்மையை மிகுதியாக எடுத்துரைப்பதற்காகவும்,
- உன்னை அதிகமாக நினைவு கூர்வதற்காகவும் (நீ அவ்வாறு செய்வாயாக).
- நீ எங்களை நன்கு பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
- இதற்கு அல்லாஹ் கூறினான்: மூஸாவே! நீர் கோரியது உமக்கு வழங்கப்பட்டு விட்டது.
- நிச்சயமாக நாம் (இதற்கு முன்னரும்) ஒரு முறை உமக்குப் பேரருள் செய்துள்ளோம்.
- உம் தாயாருக்கு நாம் வஹி அறிவித்த போது, அவ் வஹியானது7,
- நீர் அவரை(மூஸாவை)ப் பேழையில் வைத்துப் பின்னர் அதனை நதியில் வைத்து விடுவீராக. நதி (எம் கட்டளையினால்) அதனைக் கரையில் கொண்டு வந்து சேர்த்து விடும். எனக்கும், அவருக்கும் பகைவனாக இருப்பவன் அவரை எடுத்துக் கொள்வான். (மூஸாவே) நீர் என் கண் முன்னால் வளர்க்கப்படுவதற்காக நான் உமக்கு என்னிடமிருந்து அன்பைச் சொரிந்தேன். (அதாவது நான் உமக்காக மக்களுடைய உள்ளங்களில் அன்பை உருவாக்கினேன்).
- உம் சகோதரி (நதியில் மிதந்து சென்ற உம்முடன்) நடந்து சென்று இவரை வளர்க்கும் பெண்ணைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று கூறினாள். இவ்வாறு நாம், உம்முடைய தாயாரின் கண்கள் குளிர்ச்சியடையவும், அவர் கவலையடையாமல் இருக்கவும் உம்மை அவரிடம் கொண்டு வந்தோம். (மூஸாவே!) நீர் ஒரு மனிதரைக் கொன்று விட்டீர். பின்னர் நாம் உம்மை அக்கவலையிலிருந்து காப்பாற்றி, உம்மைப் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக்கி நன்கு சோதித்தோம். (இதன் பின்னர்) நீர் பல வருடங்கள் மத்யன் மக்களிடம் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே! நீர் எமது பணிக்குத் தகுதியான வயதை அடைந்து விட்டீர்.
- நான் உம்மை எனக்காகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.
- (எனவே நீர் அந்த வயதை அடைந்த போது, நான் உம்மிடம் இவ்வாறு கூறினேன்:) நீரும், உம்முடைய சகோதரரும் என் அடையாளங்களுடன் செல்லுங்கள். என்னை நினைவு கூர்வதில் தளர்ந்து விடாதீர்கள்.
- நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள். ஏனென்றால் அவன் வரம்பு மீறி விட்டான்.
- நீங்கள் இருவரும் அவனிடம் மென்மையான வாக்கைக் கூறுங்கள். ஒருவேளை அவன் புரிந்து கொள்ளலாம். அல்லது (எனக்கு) அஞ்சலாம்.
- அவ்விருவரும் என் இறைவா! அவன் எங்களுக்கு மிக அதிகமாக அநீதியிழைத்து விடலாம் அல்லது அளவு கடந்து எங்களைக் கொடுமைப்படுத்தலாம் என்று நாங்கள் அஞ்சுகின்றோம் என்றனர்.
- நீங்கள் இருவரும் அந்த வேண்டாம். நிச்சயமாக நான் உங்கள் இருவருடன் இருக்கின்றேன். நான் (உங்கள் பிரார்த்தனைகளை ) கேட்கிறேன்.(உங்கள் நிலைமைகளை) பார்க்கவும் செய்கிறேன் என்று கூறினான்.
- இருவரும் அவனிடம் சென்று (இவ்வாறு) கூறுங்கள்: நாங்கள் இருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள். எனவே, நீ இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விடு. அவர்களைத் துன்புறுத்தாதே. நாங்கள் உன்னிடம் உனது இறைவனிடமிருந்து ஒரு பெரிய அடையாளதரதைக் கொண்டு வந்துள்ளோம். (நாங்கள் கொண்டு வந்துள்ள) நேர்வழியினைப் பின்பற்றுபவருக்கு (இறைவனிடமிருந்து) சாந்தி கிடைக்கும் (என்றும் கூறுங்கள்)
- (இறைவனுடைய அடையாளத்தைப்) பொய்ப்படுத்திப் புறக்கணித்து விடுபவருக்குத் தண்டனை கிடைக்கும் என்று எங்களுக்கு வஹியின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
- (இதற்கு ஃபிர்அவ்ன்) மூஸாவே! உங்கள் இருவரது இறைவன் யார்? என்றான்.
- எங்கள் இறைவன், ஒவ்வொன்றிற்கும் உரிய வடிவம் அளித்து, அவற்றைச்(சரி வர செயல்பட) வழிகாட்டியவனேயாவான், என (மூஸா) கூறினார்.
- (ஃபிர்அவ்ன், அவ்வாறாயின்) முந்திய தலைமுறையினரின் நிலை என்ன? என்றான்.
- (மூஸா) கூறினார்: (முன்னோர்களாகிய) அவர்களைப் பற்றிய அறிவு என் இறைவனிடம் ஒரு நூலில் (பதிவு செய்யப்பட்டு) உள்ளது. என் இறைவன் தவறிழைப்பதுமில்லை; மறப்பதுமில்லை.
- அவனே உங்களுக்காக இப்பூமியை விரிப்பாக ஆக்கி, இதில் உங்களுக்காக வழிகளையும் ஏற்படுத்தியுள்ளான். மேலும் அவன் வானத்திலிருந்து நீரை இறக்கியுள்ளான். பின்னர் நாம் அந்த நீரைக் கொண்டு பல்வேறு வகையான விளைச்சல்களை இணைகளாகப் படைத்துள்ளோம்.
- (அவற்றிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள். உங்கள் கால்நடைகளையும் மேய விடுங்கள். அறிவுடையாருக்கு இதில் எத்தனையோ அடையாளங்கள் உள்ளன. ரு2
- இதிலிருந்தே, (பூமியிலிருந்தே) நாம் உங்களைப் படைத்தோம். அதனுள்ளேயே உங்களைத் திரும்பச் செய்வோம். அதிலிருந்தே உங்களை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்துவோம்.
- நாம் (ஃபிர்அவ்னாகிய) அவனுக்கு எம்முடைய எல்லா வகையான அடையாளங்களையும் காட்டினோம். ஆனால் அவன் (அவற்றைப்) பொய்யாக்கி (நம்ப) மறுத்தான்.
- அவன் கூறினான்: மூஸாவே! நீர் உமது மாய வித்தையினால் எங்களை எங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றி விடுவதற்காக நீர் எங்களிடம் வந்துள்ளீரா?
- (அவ்வாறாயின்) நாங்களும் உமக்கெதிராக அதைப் போன்ற மாய வித்தையைக் கொண்டு வருவோம். எனவே நீர் எங்களுக்கும், உமக்குமிடையில் ஒரு (காலமும்) குறிப்பிட்ட இடமும் வரையறுத்துக் கொள்ளும். அதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம். நீரும் பின்வாங்கக் கூடாது. அது (எங்களுக்கும், உங்களுக்கும்) பொருத்தமான இடமாக இருக்க வேண்டும்.
- (இதற்கு மூஸா) உங்களுக்குக் குறித்த நாள் பண்டிகை நாளாக இருக்கட்டும். சூரியன் சிறிது உயர்ந்ததும், மக்கள் எல்லோரும் ஒன்று திரண்டு விடட்டும்.
- ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று தன் திட்டங்களை ஆயத்தம் செய்து, பின்னர் (குறித்த நிகழ்ச்சிக்காகத்) திரும்பினான்.
- (அப்போது) மூஸா அவர்களிடம்: (மக்களே!) உங்களுக்கு அழிவே. அல்லாஹ்வுக்கு எதிராகப் பொய்யை இட்டுக் கட்டாதீர்கள். (ஏனெனில்) அவ்வாறு செய்தால், அவன் உங்களை ஏதேனும் தண்டனையின் மூலம் அழித்து விடலாம். (இறைவன் மீது) பொய்யைப் புனைந்து கூறுபவன், நிச்சயமாகத் தோல்வியடைவான் என்று கூறினார்.
- (ஃபிர்அவ்னும், அவனைச் சார்ந்தவர்களும்) தங்கள் பிரச்சினை குறித்துத் தங்களுக்குள் விவாதம் நடத்தி இரகசியத் திட்டங்கள் தீட்டினார்கள்.
- அவர்கள் இவ்வாறு கூறினர்: (மூஸா, ஹாரூன் ஆகிய) இவ்விருவரும் மாயவித்தைக்காரர்களேயாவர். இவர்கள் தங்கள் மாயவித்தையின் வலிமையால் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றவும், உங்களுடைய உயர்தரமான வாழ்க்கை நெறியை அழிக்கவும் நாடுகின்றனர்.
- எனவே நீங்களும், உங்கள் திட்டங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். பின்னர் நீங்களெல்லாரும் ஓர் அணியாகத் திரண்டு வாருங்கள். இன்று மேலோங்கி விடுபவர், நிச்சயமாக வெற்றி பெற்றவராவார்.
- (இதற்கு மூஸாவை எதிர்ப்பதற்காக ஃபிர்அவ்னால் திரட்டப்பட்டவர்கள்) மூஸாவே! நீர் (முதலில்) எறியும் அல்லது நாங்கள் முதலில் எறிகின்றோம் என்றனர்.
- (அப்போது மூஸா): நீங்கள் எறியுங்கள் என்றார். இதோ! அவர்களின் கயிறுகளும், தடிகளும் அவர்களது மாய வித்தையினால் ஓடிக் கொண்டிருப்பவை போன்று மூஸாவுக்குத் தோற்றமளித்தன.
- மூஸா தம் மனதிற்குள் ஓர் அச்சத்தை உணர்ந்தார்.
- (அப்பொழுது) நாம் கூறினோம்: (மூஸாவே!) அஞ்ச வேண்டாம். ஏனெனில், நீரே மேலோங்குவீர்.
- உமது வலக்கையில் இருப்பதைப் பூமியில் எறிந்து விடுவீராக. அது அவர்கள் செய்தவற்றையெல்லாம் விழுங்கி விடும். அவர்கள் செய்தது மாயவித்தைக்காரர்களின் ஓர் ஏமாற்றுதலேயாகும். மாயவித்தைக்காரன் எங்கிருந்து வந்தாலும் (இறைவனுக்கெதிராக) வெற்றி பெற மாட்டான்.
- மாயவித்தைக்காரர்கள் (உண்மையைப் புரிந்து கொண்டதும்) சிரம் பணிந்தவர்களாக வீழ்த்தப்பட்டு ஹாரூன், மூஸா ஆகியோரின் இறைவனிடத்து நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று கூறினார்கள்.
- (ஃபிர்அவ்ன்) கூறினான்: நான் உங்களுக்கு அனுமதியளிக்கும் முன்னரே நீங்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர்தாம் உங்களுக்கு இம்மாய வித்தையைக் கற்றுத் தந்த உங்கள் தலைவர் (என்று தெரிந்து விட்டது). ஆகவே(இவ்வாறு ஏமாற்றியதற்குத் தண்டனையாக) நான் உங்கள் கைகளையும், உங்கள் கால்களையும் (நீங்கள்) மாறு செய்ததனால் துண்டித்து, உங்களைப் பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளில் பிணைத்துச் சிலுவை தண்டனையளிப்பேன். அப்பொழுது நம்முள் மிகக் கடினமானதும், நிலையானதுமாகிய தண்டனை கொடுப்பவர் யார் என்பது உங்களுக்குத் தெரியும் என்றான்.
- (மாயவித்தைக்காரர்களாகிய) அவர்கள் (இவ்வாறு) கூறினர்: (இறைவனிடமிருந்து) எங்களிடம் வந்துவிட்ட தெளிவான அடையாளங்களை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும், உனக்கு முதன்மையளிக்க மாட்டோம். எனவே உன்னால் இயன்றதை நீ செய்து கொள். உன்னால் இவ்வுலக வாழ்க்கையைக் குறித்தே தீர்ப்பு வழங்க முடியும்.
- எங்கள் பாவங்களையும் (நாங்கள் செய்யவேண்டுமென்று) நீ எங்களைக் கட்டாயப்படுத்திய மாய வித்தைகளையும், அவன் மன்னிப்பதற்காக , நாங்கள் எங்கள் இறைவனிடத்து நம்பிக்கை கொண்டுள்ளோம். அல்லாஹ் மிகச் சிறந்தவனும், என்றும் நிலைத்திருப்பவனும் ஆவான்.
- நிச்சயமாக தம்முடைய இறைவனிடம் குற்றவாளியாக வருபவருக்குக் கிடைப்பது நரகம் தான். அவர் அதில் மரணமடைவதுமில்லை; வாழ்வதுமில்லை.
- ஆனால் எவர்கள் நற்செயல்களைச் செய்து, நம்பிக்கையாளர்களாக அவனிடம் வருவார்களோ அவர்களுக்கு மிக உயர்வான பதவிகள் உண்டு.
- (அப்பதவிகள்) என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்கள் (ஆகும்). அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். இது தூய்மையானவருக்கான நற்பலனாகும். ரு3
- நாம் மூஸாவுக்கு (இவ்வாறு) வஹி அறிவித்தோம்: நீர் என் அடியார்களை இரவில் வெளியேற்றி அழைத்துச் செல்வீராக. பின்னர் அவர்களுக்குக் கடலில் உலர்ந்த ஒரு பாதையைக் காட்டுவீராக. எவரும் பின்தொடர்ந்து வந்து பிடித்துக் கொள்வாரோ என்ற அச்சம் உமக்கு வேண்டாம். (வேறெதற்கும்) நீர் அஞ்ச வேண்டாம். (இதற்கேற்ப மூஸா தமது சமுதாயத்தினரை அழைத்துக் கொண்டு கடலை நோக்கிச் சென்றார்).
- அப்பொழுது ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றான். அந்தக் கடல் (வெள்ளம்) அவர்களை முற்றிலும் மூடிக் கொண்டது.
- ஃபிர்அவ்ன் தனது சமுதாயத்தினரை வழிதவறச் செய்தான். அவன் அவர்களுக்கு நேர்வழியினைக் காட்டவில்லை.
- இஸ்ராயீலின் மக்களே! நாம் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து காப்பாற்றி விட்டோம். மேலும் நாம் உங்களுடன், மலையின் வலப்பக்கத்தில் ஓர் உடன்படிக்கையும் செய்து கொண்டோம்8. மேலும் (உங்கள் உணவிற்காக) நாம் உங்களுக்கு மன்னு(இயற்கையாகக் கிடைக்கும் ஒரு வகைத் தித்திப்பான பொருள்) ஸல்வா(காடையைப் போன்ற ஒரு வகைப் பறவை) ஆகியவற்றை இறக்கினோம்.
- (மேலும் கூறினோம்): நாம் உங்களுக்கு வழங்கியவற்றுள் தூயவற்றை உண்ணுங்கள். இதில் வரம்பு மீறாதீர்கள். அவ்வாறு மீறினால், உங்களிடத்து என் கோபம் இறங்கும். என் கோபம் எவர்மீது இறங்குகிறதோ அவர் வீழ்ந்து விடுகிறார்.
- ஆனால் கழிவிரக்கங்கொண்டு, நம்பிக்கை கொண்டு, பின்னர் நற்செயல் செய்து, நேர்வழியினைப் பெற்றவருக்கு நான் நிச்சயமாக மிக்க மன்னிப்பவனாக இருக்கிறேன்.
- மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டு விட்டு, இவ்வளவு விரைவாக வந்தது ஏன்? ( என்று அவன் கூறினான்).
- (மூஸா அதற்குப் பதிலளிக்குமுகமாக): அவர்கள் என் வழியில் என்னை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர். என் இறைவா! நீ மகிழ்ச்சியடைய வேண்டுமென்பதற்காக நான் உன்னிடம் விரைந்து வந்துள்ளேன் என்றார்.
- (இதற்கு இறைவன்) நாம் உமது சமுதாயத்தினரை உமக்குப் பின்னர் ஒரு சோதனைக்காளாக்கி விட்டோம். ஸாமிரீ(என்பவன்) அவர்களை வழிதவறச் செய்து விட்டான் என்றான்.
- அப்போது மூஸா தம் சமுதாயத்தினரிடம் மிகுந்த கோபத்துடன், கவலையடைந்தவராகத் திரும்பிச் சென்றார். (பின்னர் அவர்களிடம்) என் சமுதாயத்தினரே! உங்கள் இறைவன் உங்களிடம் சிறந்த வாக்குறுதியொன்றை அளிக்கவில்லையா? அந்த வாக்குறுதி நிறைவேற்றுவதில் ஏதேனும் காலதாமதம் ஏற்பட்டு விட்டதா? அல்லது உங்கள் இறைவனின் கோபம் உங்கள் மீது இறங்க வேண்டுமென நீங்கள் விரும்பி, என் வாக்குறுதியை முறித்து விட்டீர்களா? என்று கூறினார்.
- அவர்கள் கூறினர்: நாங்கள் உமது வாக்குறுதியை எங்கள் விருப்பத்துடன் செய்யவில்லை. மாறாக, சமுதாய அணிகலன்களின் சுமைகளைச் சுமக்குமாறு நாங்கள் செய்யப்பட்டோம். எனவே நாங்கள் அதைத் தூக்கி எறிந்து விட்டோம். அவ்வாறே ஸாமிரீயும் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டான்.
- பின்னர் அவன் அவர்களுக்காக வெற்றுடலைக் கொண்ட ஒரு கன்றுக்குட்டியை உருவாக்கினான். அதிலிருந்து ஒரு பொருளற்ற ஓசை வந்தது. பின்னர் (அவனும், அவனைச் சார்ந்தவர்களும்) இது உங்கள் கடவுளும், மூஸாவின் கடவுளுமாகும். அவர் இதனை மறந்து (தமக்குப் பின்னால் விட்டுச் சென்று) விட்டார் என்றனர்.
- (ஸாமிரீயும், அவனைச் சார்ந்தவர்களும் அவ்வாறு செய்மனரென்றாலும்) அந்தக் கன்றுக்குட்டி அவர்களின் எவ்விஷயத்திற்கும் பதிலளிப்பதில்லை என்பதையும், மேலும் அவர்களுக்கு எந்தத் தீங்கையோ, நன்மையையோ செய்ய அதற்குத் தகுதியில்லை என்பதையும் அவர்கள் காணவில்லையா? ரு4
- ஏற்கனவே (மூஸா திரும்பி வருவதற்கு முன்னரே) ஹாரூன் அவர்களிடம், என் சமுதாயத்தினரே! நீங்கள் இ(ந்)த(க் கன்றுக்குட்டியி)ன் மூலம் சோதனைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் அளவற்ற அருளாளனாவான். எனவே, நீங்கள் என்னையே பின்பற்றுங்கள். மேலும் என் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்(இணை வைக்காதீர்கள்) என்றார்.
- அவர்கள், மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரை நாங்கள் அதனை வணங்குவதை நிறுத்தப் போவதில்லை என்றனர்.
- (மூஸா திரும்பி வந்ததும் ஹாரூனிடம்) கூறினார்: ஹாரூனே, அவர்கள் வழி தவறுவதை நீர் கண்டபோது, உம்மைத் தடுத்தது எது
- என்னைப் பின்பற்றாதிருக்க? என் கட்டளைக்கு மாறு செய்ய நீர் முற்பட்டீரா?
- (இதற்கு ஹாரூன்) கூறினார்: என் தாயாரின் மகனே! என் தாடியையும், தலை முடியையும் பிடிக்காதீர். இஸ்ராயீலின் மக்களிடையே நீர் பிரிவினையை உண்டு பண்ணி விட்டீர் என்றும், என்னுடைய வார்த்தைகளை நீர் மதிக்கவில்லை என்றும் நீர் கூறிவிடுவீரோ என நான் அஞ்சினேன்.
- (பின்னர் மூஸா ஸாமிரீயிடம்) ஸாமிரீயே! உன் விஷயமென்ன என்று கேட்டார்.
- அவன் கூறினான்: இவர்கள் காணாததை நான் கண்டேன். அந்தத் தூதர்(மூஸா) கூறியவற்றுள் சிலவற்றை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்9. பின்னர் (சந்தர்ப்பம் கிடைத்ததும்) நான் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டேன். என் உள்ளம் இதனையே எனக்கு அழகுவாய்ந்ததாக்கிக் காட்டிற்று.
- (மூஸா) கூறினார்: நீ அப்பால் சென்று விடு. (நீ இவ்வுலகில் ஒவ்வொருவரிடமும் என்னைத்) தொடாதீர் (அதாவது மூஸா என்னைத் தூய்மையற்றவன் எனக் கூறி விட்டார்) என்று நீ கூறிக் கொண்டிருப்பதே இவ்வுலகில் உனக்குரிய தண்டனையாகும். மேலும் உன்னால் தவிர்த்துக் கொள்ள முடியாத (தண்டனைக்குரிய) ஒரு நேரம் உனக்கு நியமிக்கப்பட்டுள்ளது. நீ வணங்கிக் கொண்டிருந்த உன் கடவுளைப் பார். நிச்சயமாக நாம் அதனை எரித்துக்10 கடலில் எறிந்து விடுவோம்.
- உங்கள் இறைவன் அல்லாஹ்வே. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. அவன் எல்லாவற்றையும் தன் அறிவால் சூழ்ந்துள்ளான்.
- இவ்வாறே நாம் உமக்கு முன்னிருந்தவர்களின் செய்திகளை விளக்குகின்றோம். நாம் உமக்கு எம்மிடமிருந்து நினைவூட்டும் ஒன்றை (குர்ஆனை) வழங்கியுள்ளோம்.
- இதனைப் புறக்கணித்து விடுபவர், மறுமை நாளில் ஒரு மாபெரும் சுமையைச் சுமப்பார்கள்.
- (அத்தகையோர்) அந்நிலையில் நீண்ட காலம் தங்கியிருப்பார்கள். மறுமை நாளில் அச்சுமை அவர்களுக்கு மிகத் தீயதாக இருக்கும்.
- எக்காளம் ஊதப்படும் நாளில் (அது நிகழும்). மேலும் நாம் அந்நாளில் குற்றவாளிகளை, அவர்களின் கண்கள் நீல நிறமாக இருக்கும் நிலையில் எழுப்புவோம்11.
- அவர்கள் தங்களுக்குள் நீங்கள் பத்து(நூற்றாண்டுகள்) தான் (இவ்வுலகில் மேலோங்கி) இருந்தீர்கள் என்று மெதுவாகப் பேசிக் கொள்வர்.
- அவர்களது மார்க்கத்தின் படி, அவர்களுள் மிகவும் சிறந்த முறையில் நடப்பவர்12, ( அவர்களிடம்) நீங்கள் சிறிது காலமே தங்கியிருந்தீர்கள்13 என்று கூறும் போது அவர்கள் என்ன சொல்வார்கள் என்பதனை நாம் நன்கு அறிகின்றோம். ரு5
- மலைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: என் இறைவன் அவற்றை உடைத்துத் துண்டு துண்டாக்கி, தூசி போன்று தூவி விடுவான்.
- பின்னர் அவற்றை ஒரு வெற்றுத் திடலாக விட்டு விடுவான்.
- நீர் அதில் எந்தப் பள்ளத்தையோ, மேட்டையோ காண மாட்டீர்.
- அந்நாளில் மக்கள் ஓர் அழைப்பவரைப் பின்பற்றுவார்கள். அவரது போதனையில் எந்தக் கோணலுமிருக்காது14. அளவற்ற அருளாளனின் குரலுக்கெதிரான குரல்களெல்லாம் அடங்கி விடும்.எனவே முணுமுணுப்பைத் தவிர வேறெதனையும் நீர் கேட்க மாட்டீர்15.
- அந்நாளில் அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன் எவருக்கு (பரிந்து பேச) அனுமதி வழங்கியுள்ளானோ, எவருக்காகப் பேசுவதை அவன் விரும்புவானோ அவருக்கேயன்றி வேறெவருக்கும் பரிந்துரை பயனளிக்காது16.
- அவர்களுக்கு முன்னாலுள்ளவற்றையும், அவர்களுக்குப் பின்னாலுள்ளவற்றையும் அவன் அறிகின்றான். ஆனால் அவர்கள் தங்கள் அறிவைக் கொண்டு அவனைச் சரியாகத் தெரிந்து கொள்ள முடியாது.
- (அந்நாளில்) உயிருள்ளவனும், நிலைத்திருப்பவனும், நிலைத்திருக்கச் செய்பவனுமாகிய இறைவன் முன், பெரும் பெரும் மனிதர்களெல்லாம் பணிந்து விடுவர். அநீதியிழைப்பவர் தோல்வியடைவார்.
- நம்பிக்கை கொண்டவராக இருக்கும் நிலையில் நற்செயல்களைச் செய்பவர், எவ்வகை அநீதிக்கும், இழப்பிற்கும் அஞ்சமாட்டார்.
- இவ்வாறு நாம் இதை (இவ்வேதத்தை) அரபு மொழியில் குர்ஆனின் வடிவில் இறக்கினோம். மேலும் அவர்கள் இறையச்சமுடையவர்களாக விளங்க வேண்டும் அல்லது அவர்களுக்கு (இறை) நினைவை உள்ளத்தில் தூண்ட வேண்டும் என்பதற்காக இதில் எல்லா எச்சரிக்கைகளையும் தெளிவாக விளக்கியுள்ளோம்.
- எனவே உண்மை அரசனாகிய அல்லாஹ் மிக்க மேலானவனாவான். குர்ஆனின் வஹி முழுமையாக உமக்குக் கிடைப்பதற்கு முன் நீர் அதற்காக அவசரப்படாதிருப்பீராக. ஆயினும் என் இறைவா! எனக்கு அறிவை வளரச் செய்வாயாக என்று மட்டும் கூறுவீராக.
- நாம் இதற்கு முன்னர் ஆதமிடம் (ஒரு விஷயத்தை) வலியுறுத்திக் கூறினோம். ஆனால் அவர் (அதனை) மறந்து விட்டார். மேலும் (எமக்கு மாறு செய்யும்) எந்த உறுதியான எண்ணமும் அவரிடத்தில் நாம் கண்டதில்லை. ரு6
- மலக்குகளிடம் ஆதமிற்காக (அதாவது அவரைப் படைத்ததற்கு நன்றி செலுத்துவதற்காக இறைவனுக்கு) சிரம் பணியுங்கள் என்று நாம் கூறிய நேரத்தில் (நிகழ்ந்ததை நினைத்துப் பாருங்கள். அப்போது) இப்லீஸைத் தவிர மற்றெல்லாரும் சிரம் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்.
- எனவே நாம் கூறினோம்: ஆதமே! நிச்சயமாக (இபலீஸாகிய) இவன் உமக்கும், உம்முடைய துணைவருக்கும் பகைவனாவான். எனவே நீர் துன்பத்திற்கு ஆளாகாமலிருக்க, அவன் உங்கள் இரு தரப்பினரையும் இத் தோட்டத்திலிருந்து வெளியேற்றி விட வேண்டாம்.
- நிச்சயமாக இதில் நீர் பசித்தவராகவும், ஆடையற்றவராகவும் இருக்கலாகாது (என்பது உமக்கு விதிக்கப்பட்டுள்ளது).
- மேலும் இதில் நீர் தாகமுடையவராகவும், வெயிலில் காய்பவராகவும் இருக்கலாகாது.
- ஆனால் ஷைத்தான் அவரது உள்ளத்தில் தீய எண்ணத்தை உருவாக்கி (இவ்வாறு) கூறினான்: ஆதமே! என்றென்றும் நிலைத்திருக்கும் ஒரு மரத்தையும், ஒருபோதும் அழிவு ஏற்படாத ஓர் ஆட்சியையும் பற்றி நான் உமக்கு அறிவிக்கட்டுமா?
- எனவே அவ்விருவரும் அம்மரத்தில் இருந்து சிறிது உண்டனர். இதனால் அவ்விருவரது பலவீனங்கள் அவர்களுக்கு வெளிப்பட்டு விட்டன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் அலங்காரப் பொருட்களை (அதாவது நற்செயல்களை)த் தம்மீது பொருத்திக் கொள்ளத் தொடங்கினர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் தவறிழைத்தார்.
- இதன் பின்னர் அவருடைய இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்துக் கருணையுடன் அவர் பக்கம் திரும்பி, அவருக்கு நேர்வழியைக் காட்டினான்.
- (இறைவன்) கூறினான்: இங்கிருந்து நீங்கள் இரண்டு கூட்டத்தினரும் எல்லோரும் வெளியேறி விடுங்கள். உங்களுள் சிலர், சிலருக்குப் பகைவர்களாக இருக்கின்றீர்கள். எனவே என்னிடமிருந்து நேர்வழி உங்களிடம் வரும்போது எனது நேர்வழியினைப் பின்பற்றுபவர், ஒருபோதும் வழிதவறவும் மாட்டார்; துயருறவும் மாட்டார்.
- என்னை நினைவு கூர்வதிலிருந்து விலகி விடுபவருக்கு அவருடைய வாழ்க்கை துன்பமானதாகவே இருக்கும். மறுமை நாளில் நாம் அவரைக் குருடனாக எழுப்புவோம்.
- (இதனால்) அவர் கூறுவார்: என் இறைவா! இதற்கு முன்னர் பார்வையுடையவனாக இருந்த என்னை, நீ ஏன் இப்பொழுது குருடனாக எழுப்பினாய்?
- (இதற்கு இறைவன்) கூறுவான்: இவ்வாறே உம்மிடம் எம் அடையாளங்கள் வந்தன. நீர் அவற்றைப் புறக்கணித்து விட்டீர். அவ்வாறே இன்று நீரும் புறக்கணிக்கப்படுகிறீர்.
- (இறை சட்டங்களின்) வரம்பை மீறுவோருக்கும், தமது இறைவனின் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாதவருக்கும் நாம் இவ்வாறே கூலி வழங்குகிறோம். மறுமைத் தண்டனை மிகக் கடினமானதும், நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடியதுமாகும்.
- இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருப்பது இவர்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? இவர்கள் அவர்களின் வாழ்விடங்களில் நடந்து திரிகின்றனர். அறிவுடையோருக்கு இதில் பல அடையாளங்கள் உள்ளன. ரு7
- உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வந்துவிட்ட ஒரு வாக்கும், கட்டாயத் தண்டனையும் (வரையறுக்கப்பட்டு) இல்லாமல் இருந்திருக்குமாயின் (இந்தச் சமுதாயங்களுக்குத்) தண்டனை நிரந்தரமானதாகியிருக்கும்.
- எனவே இவர்கள் கூறுபவை குறித்து பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. மேலும் சூரியன் தோன்றுவதற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உமது இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. இரவின் பல்வேறு நேரங்களிலும், பகலின் எல்லைகளிலும் அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. இதனால் நீர் (அவனது அருளைப் பெற்று) மகிழ்ச்சியடையலாம்.
- அவர்களுள் சில பிரிவினருக்கு நாம் வழங்கியுள்ள, இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களாகத் தற்காலிகப் பலன் தரும் பொருள்களின் பால் நீர் உமது பார்வையைச் செலுத்தாதீர். அவற்றின் மூலம் நாம் அவர்களைச் சோதிப்பதற்காகவே (அவை அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன). உம்முடைய இறைவனால் வழங்கப்பட்ட உணவு மிகச்சிறந்ததும், நிலைத்திருக்கக் கூடியதுமாகும்.
- தொழுதுவருமாறு உம் குடும்பத்தினருக்கு வலியுறுத்திக் கூறிக் கொண்டிருப்பீராக. நீரும் அதில் நிலைத்திருப்பீராக. நாம் உம்மிடம் உணவு கேட்பதில்லை. நாமே உமக்கு உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். மேலும் இறையச்சமுடையோருக்கே நல்ல முடிவு (அமையும்).
- அவர் தமது இறைவனிடமிருந்து ஏதாவது அடையாளத்தை நம்மிடம் ஏன் கொண்டு வருவதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். முந்தைய வேதங்களில் விளக்கப்பட்டது போன்ற அடையாளங்கள் அவர்களிடம் வரவில்லையா?
- நாம் அவர்களை இ(த் தூதரை அனுப்புவ)தற்கு முன்னரே ஏதாவதொரு தண்டனையின் மூலம் அழித்திருந்தால், அவர்கள் இவ்வாறு கூறலாம். " எங்கள் இறைவா! நீ ஏன் ஒரு தூதரை எங்களிடம் அனுப்பவில்லை? (நீ அவ்வாறு செய்திருந்தால்) நாங்கள் இழிவடைந்து அவமானத்திற்குள்ளாவதற்கு முன்னரே நாங்கள் உனது அடையாளங்களைப் பின்பற்றியிருப்போம்".
- நீர் கூறுவீராக: ஒவ்வொருவரும் (தமது முடிவை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே நீங்களும் (உங்கள் முடிவை) எதிர்பார்த்துக் கொண்டிருங்கள். நேர்வழியில் செல்வோர் எவர் என்பதையும், நேர்வழியை அடைந்தவர்கள் எவர் என்பதையும், (எவர் அவ்வாறில்லை என்பதையும்) நீங்கள் விரைவிலேயே தெரிந்து கொள்வீர்கள். ரு8