23- அல் முஃமினூன்

அதிகாரம் : அல் முஃமினூன்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள் : 119

பிரிவுகள் : 6


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றனர்.
  3. அவர்கள் தங்கள் தொழுகைகளில் பணிவுடன் உள்ளனர்.
  4. மேலும் அவர்கள் வீணானவற்றிலிருந்து விலகியிருக்கின்றனர்.
  5. மேலும் அவர்கள் ஸக்காத்தை(த் தவறாமல்) செலுத்துகின்றனர்.
  6. மேலும் அவர்கள் தங்கள் கற்பைக் காத்துக் கொள்கின்றனர்.
  7. தங்கள் மனைவியர் அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்1 ஆகியோரைத் தவிர ஏனையவரிடமிருந்து (கற்பைக் காத்துக் கொள்கின்றனர்). எனவே அவர்கள் குற்றத்திற்கு உள்ளாகமாட்டார்கள்.
  8. இதற்கப்பால் (வேறொன்றினை) விரும்புவோர் வரம்பு மீறியவர்கள் ஆவார்கள்.
  9. மேலும் அவர்கள் தங்களிடம் (நம்பி) ஒப்படைக்கப்பட்ட பொருள்களையும், தம் உடன்படிக்கைகளையும், பேணிக் காப்பார்கள்.
  10. மேலும் அவர்கள் தங்கள் தொழுகையை (நிறைவேற்றுவதை) தளராமல் காக்கின்றனர்.
  11. இவர்களே அந்த உண்மையான வாரிசுகள்.
  12. அவர்கள் (ஃபிர்தவ்ஸ் ஆகிய) சுவர்க்கத்தை உரிமையாக்கி கொள்பவராவர். அவர்கள் அதில் என்றென்றும் வாழ்வார்கள்.
  13. நிச்சயமாக நாம் மனிதனைக் களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம்.
  14. பின்னர் அவனை ஒரு பாதுகாப்பான தங்குமிடத்தில் விந்தாக வைத்தோம்.
  15. இதன் பிறகு அந்த விந்தை ஒட்டுகின்ற ஒரு பொருளாக உருவாக்கினோம். அடுத்து அந்த ஒட்டுகின்ற பொருளை சதைக் கட்டியாக உருவாக்கினோம். பின்னர் அந்த சதைக் கட்டியை எலும்புகளாக உருவாக்கினோம். பிறகு அந்த எலும்புகளுக்குச் சதையை அணிவித்தோம். பின்னர் அதனை மற்றொரு படைப்பாக வளர்ச்சியடையச் செய்தோம். எனவே படைப்போருள் மிகச்சிறந்தவனாகிய அல்லாஹ் மிக்க அருளுக்குரியவனாவான்.
  16. பின்னர் நீங்கள் அதற்குப் பிறகு நிச்சயமாக மரணமடைபவர்களே.
  17. பிறகு மறுமை நாளில் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.
  18. நாம் உங்களுக்கு மேல் (பதவிகளுக்காக) ஏழு(ஆத்மீக) வழிகளைப் படைத்துள்ளோம். நாம் (எம்) படைப்பைப் பற்றிக் கவனமற்றவராக இருக்கவில்லை.
  19. மேலும் நாம் வானத்திலிருந்து ஒரு அளவிற்கேற்ப நீரை இறக்கினோம். பின்னர் அதனைப் பூமியில் தங்கச் செய்தோம். நாம் அதனை அகற்றி விடுவதற்கும் ஆற்றல் உடையவராக இருக்கின்றோம்.
  20. பின்னர் நாம் அதனைக் கொண்டு உங்களுக்காகப் பேரீச்ச மரங்களையும், திராட்சைக் கொடிகளையும் கொண்ட தோட்டங்களை உண்டு பண்ணினோம். அவற்றில் உங்களுக்கு மிகுதியான பழங்கள் (படைக்கப்பட்டு) உள்ளன. அவற்றிலிருந்து நீங்கள் உண்ணுகின்றீர்கள்.
  21. ஸீனாய் மலையிலிருந்து உற்பத்தியாகும் மரத்தையும் (உங்களுக்காக நாம் படைத்தோம்). அது உண்போருக்கு நாவுக்கினிய எண்ணெய் தருவதற்கு முளைக்கின்றது2.
  22. மேலும் கால்நடைகளில் உங்களுக்குப் பெரும் படிப்பினையுள்ளது. அவற்றின் வயிறுகளில் உள்ளதிலிருந்து நாம் உங்களைப் பருகச் செய்கிறோம்3. மேலும் அவற்றில் உங்களுக்கு மிகுதியான பயன்கள் இருக்கின்றன. நீங்கள் அவற்றுள் சிலவற்றை உண்ணுகின்றீர்கள்.
  23. நீங்கள் அவற்றின் மீதும், கப்பல்கள் மீதும் சுமந்து செல்லப்படுகின்றீர்கள்.ரு1
  24. நாம் நூஹை அவரது சமுதாயத்தினரிடம் அனுப்பினோம். அவர், என் சமுதாயத்தினரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறெவனும் இல்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சமாட்டீர்களா என்றார்:
  25. இதற்கு அவரது சமுதாயத்தின் நிராகரிப்பாளர்களின் தலைவர்கள் இவ்வாறு கூறினர்: இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே. உங்கள் மீது சிறப்பினைப் பெற அவர் விரும்புகின்றார். அல்லாஹ் (ஒரு தூதரை அனுப்ப) விரும்பினால் வானவர்களை இறக்கி இருப்பான். நாம் நமக்கு முன்னுள்ள மூதாதையர்களிடம் இத்தகு எந்த நிகழ்ச்சியும் நிகழ்ந்ததாகக் கேள்விப் பட்டதில்லை.
  26. இவர் ஒரு பைத்தியம் பிடித்த மனிதரேயாவார். எனவே இவர் (முடிவு) பற்றி சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்.
  27. (இது கேட்டு நூஹ்) என் இறைவா! இவர்கள் என்னைப் பொய்ப்படுத்துவதனால், நீ எனக்கு உதவி செய்வாயாக என்றார்.
  28. அதற்கு நாம் அவருக்கு இவ்வாறு வஹி அறிவித்தோம்: நீர் எம்முடைய கண்களுக்கு முன்னால் எமது வஹிக்கு ஏற்ப கப்பலைக் கட்டுவீராக. எனவே எமது கட்டளை வந்து, பூமியின் நீரூற்று பெருக்கெடுத்து ஓடும் போது ஒவ்வொரு பிராணியிலிருந்தும் இரு இணைகளையும், உம்முடைய உறவினர்களுள் எவர்களுக்கு எதிராக எம் கட்டளை ஏற்கனவே இறங்கி விட்டதோ அவர்களைத் தவிர ஏனையவர்களையும் அதில் (கப்பலில்) ஏற்றிக் கொள்வீராக. அநீதியிழைத்தவர்கள் குறித்து நீர் என்னிடம் எதுவும் பேசாதிருப்பீராக. ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்.
  29. மேலும் நீரும், உம்மைச் சார்ந்தவர்களும் அக்கப்பலில் ஒன்றாக அமர்ந்ததும், அநீதியிழைக்கும் சமுதாயத்தினரிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறுவீராக.
  30. (கப்பலிலிருந்து இறங்கும் நேரத்தில்) என் இறைவா! நீ, என் மீது அதிகமான அருள்கள் இறங்கும் வண்ணம் என்னை இறங்கச் செய்வாயாக. இறங்கச் செய்கின்ற அனைவரிலும் நீ மிகச்சிறந்தவனாவாய் என்றும் கூறுவீராக.
  31. இதில் அதிகமான அடையாளங்கள் உள்ளன. நிச்சயமாக நாம் எப்பொழுதும் (அடியார்களை) சோதிப்பவராவோம்.
  32. அடுத்து, நாம் அவர்களுக்குப் பின்னர் பல சமுதாயங்களைப் படைத்தோம்.
  33. நாம் அவர்களிடம் அவர்களிலிருந்தே ஒருவரை தூதராக அனுப்பினோம். (அவர், அவர்களிடம்) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு வேறெவனும் இல்லை. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சமாட்டீர்களா? (எனக் கூறினார்). ரு2
  34. அவரது சமுதாயத்தினருள் நிராகரித்தவர்களும் மறுமை(யில் அல்லாஹ்வின்) சந்திப்பைப் பொய்யாக்குபவர்களும், இவ்வுலக வாழ்க்கையில் நாம் பொருள் வசதியினை அளித்திருந்தவர்களும் ஆகிய இவர்களின் தலைவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்: இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயாவார். நீங்கள் உண்பதையே அவரும் உண்கின்றார். நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கின்றார்.
  35. உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடந்தால், நிச்சயமாக நீங்கள் இழப்புக்கு உரியவராகி விடுவீர்கள்.
  36. நீங்கள் மரணமடைந்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலுங் கூட நீங்கள் (மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளிப்படுத்தப்படுவீர்களென்று அவர் உங்களிடம் வாக்களிக்கின்றாரா?
  37. உங்களிடம் வாக்களிக்கப்படுவது அறிவிற்கு அப்பாற்பட்டதும், உண்மைக்கு நெடுந்தொலைவிலுள்ளதுமாகும்.
  38. நம்முடைய இவ்வுலக வாழ்க்கையினைத் தவிர வேறொரு வாழ்க்கை இல்லை. நாம் மரணிக்கிறோம். நாம் வாழ்கிறோம். நாம் மரணமடைந்ததன் பின்னர் (மீண்டும்) எழுப்பப்படப் போவதில்லை.
  39. அவர் அல்லாஹ் மீது பொய்யைப் புனைந்து கூறும் ஒரு மனிதரேயாவார். நாங்கள் அவரை நம்பப் போவதில்லை.
  40. (இதற்கு) அவர், என் இறைவா! இவர்கள் என்னைப் பொய்ப்படுத்தி விட்டனர். எனவே நீ எனக்கு உதவி செய்வாயாக என்றார்.
  41. (அப்பொழுது இறைவன்) இவர்கள் சிறிது காலத்திற்குள் நிச்சயம் வெட்கத்தில் ஆழ்ந்து விடுவர் என்றான்.
  42. உண்மையிலே  (அறிவிக்கப்பட்டிருந்த) தண்டனையொன்று அவர்களைப் பற்றிக் கொண்டது. நாம் அவர்களைக் குப்பைக் கூளமாக்கி விட்டோம். அநீதி இழைப்பவர்களுக்கு இறைவனின் சாபம் (உண்டாவதாக).
  43. அடுத்து, அவர்களுக்குப் பின்னர் நாம் பல்வேறு சமுதாயங்களை உருவாக்கினோம்.
  44. எந்தச் சமுதாயத்தினராலும் தங்களுக்குக் குறித்த காலத்திலிருந்து விரைந்தோடி(த் தப்பி) விடவும் முடியாது. (அதிலிருந்து) பின் தங்கி(த் தப்பி) விடவும் முடியாது.
  45. பின்னர் நாம் நம்முடைய தூதர்களை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பிக் கொண்டேயிருந்தோம். ஒரு சமுதாயத்தினரிடம் அவர்களின் தூதர் வந்த போதெல்லாம் அவர்கள் அவரைப் பொய்யாக்கினர். ஆகவே நாம் அவர்களுள் சிலரை, சிலருக்குப் பின்னால் அனுப்பி(அழித்து)க் கொண்டே இருந்தோம். நாம் அவர்களெல்லாரையும் கடந்த காலக் கதைகளாக்கி வைத்து விட்டோம்4.  நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இறைவனின் சாபம் (உண்டாவதாக).
  46. பின்னர் நாம் மூஸாவையும், அவருடைய சகோதரர் ஹாரூனையும் எம்முடைய அடையாளங்களுடனும், மிகத்தெளிவான வெற்றியுடனும் அனுப்பினோம்.
  47. (அதாவது) ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும். ஆனால் அவர்கள் கர்வம் கொண்டனர். மேலும் அவர்கள் அகம்பாவம் கொண்டவர்களாய் இருந்தனர்.
  48. பின்னர் அவர்கள் கூறினார்கள்: நம்மைப் போன்ற இரு மனிதரிடமா நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்? அவ்விருவரின் சமுதாயத்தினரோ நமக்கு அடிமைகளாக இருக்கின்றனர்.
  49. அவர்கள் அவ்விருவரையும் பொய்யாக்கினர். இதனால் அவர்கள் அழிவிற்குள்ளாக்கப் படுபவர்களைச் சார்ந்தவர்களாகி விட்டனர்.
  50. நாம் மூஸாவுக்கு அவ(ருடைய சமுதாயத்தின)ர்கள் நேர்வழியினைப் பெற வேதத்தை வழங்கினோம்.
  51. நாம், மர்யமுடைய மகனையும், அவருடைய தாயையும் ஓர் அடையாளமாக்கினோம். அவ்விருவருக்கும் தங்குவதற்கேற்றதும், நீரூற்றுக்களைக் கொண்டதுமான ஓர் உயர்ந்த இடத்தில் தஞ்சமளித்தோம்5. ரு3
  52. தூதர்களே! தூய்மையான பொருட்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். நிச்சயமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாவேன்.
  53. (நபிமார்களாகிய) உங்களுடைய இந்தக் கூட்டத்திலனர்6 ஒரே கூட்டத்தினராவீர்கள்7. நான் உங்கள் இறைவன். எனவே உங்கள் கடமைகளை எனக்காகவே செய்யுங்கள்.
  54. ஆனால் (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் தங்கள் மதச் சட்டத்தை தங்களுக்குள் பல துண்டுகளாக்கி விட்டனர். ஒவ்வொரு பிரிவினரும் தங்களுக்கென்று (தேர்ந்தெடுத்து) வைத்திருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்.
  55. எனவே நீர் அவர்களைச் சிறிது காலம் வரை அவர்களது குழப்பத்திலேயே விட்டு விடுவீராக.
  56. நாம் அவர்களுக்குப் பொருளையும், ஆண் மக்களையும் கொண்டு உதவுவதை அவர்களுக்காக
  57. நன்மை செய்வதில் நாம் விரைகின்றோம் என்று அவர்கள் எண்ணுகின்றனரா? அவ்வாறன்று. எனினும் அவர்கள் (உண்மை நிலையினை) உணர்ந்து கொள்வதில்லை.
  58. நிச்சயமாக தங்கள் இறைவனுக்கு அஞ்சி, நடுங்கி வாழ்பவர்களும்,
  59. மேலும் தங்கள் இறைவனின் வசனங்களில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களும்,
  60. மேலும் தங்கள் இறைவனுக்கு வேறெவரையும் இணையாக்காதவர்களும்,
  61. மேலும் (இறைவனால் ) வழங்கப்பட்ட பொருளை (உரியவர்களுக்கு)க் கொடுத்துக் கொண்டிருப்பவர்களும், தாங்கள், தங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம் என்பது குறித்து உள்ளச்சம் கொண்டிருப்பவர்களும்,
  62. ஆகிய இவர்களே நன்மைகளை விரைந்து செய்கின்றவராவார்கள். மேலும் இவர்கள் அவற்றில் ஒருவரையொருவர் முந்துபவராவார்கள்.
  63. மேலும் நாம் ஒருவனுக்கு அவன் தகுதிக்கு அப்பாற்பட்ட எந்தப் பொறுப்பையும் சுமத்துவதில்லை. முற்றிலும் உண்மையினைக் கூறும் பதிவேடு எம்மிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்படமாட்டாது. 
  64. ஆனால் அவர்களின் உள்ளங்கள் இதனைக் குறித்து முற்றிலும் கவனமற்ற நிலையில் உள்ளன. மேலும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற இன்னும் பல (தீய) செயல்களும் அவர்களிடம் உள்ளன.
  65. இறுதியாக, நாம் அவர்களுள் கவலையற்ற, இன்ப வாழ்க்கை நடத்தியவர்களைத் தண்டனையைக் கொண்டு பிடித்து விட்டால், உடனே அவர்கள் முறையீடுகள் செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
  66. (அப்போது நாம் அவர்களிடம் இவ்வாறு கூறுவோம்): இன்று நீங்கள் முறையீடுகள் செய்யாதீர்கள். எம்மிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக எந்த உதவியும் செய்யப்பட மாட்டாது.
  67. என் வசனங்கள் மெய்யாகவே உங்களுக்குப் படித்துக் காட்டப்பட்டன. ஆனால் நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிப் கொண்டிருந்தீர்கள்;
  68.  அவற்றைப் பொருட்படுத்தாதவர்களாகவும், ஆணவங் கொண்டவர்களாகவும், வீண் பேச்சுக்கள் பேசியவர்களாகவும், (உங்கள் குதிகால்களில் திரும்பிப் கொண்டிருந்தீர்கள்.)
  69. (குர்ஆனாகிய இதில்) கூறப்பட்டிருப்பதைப் பற்றி அவர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லையா? அல்லது அவர்களின் முன்னோர்களான மூதாதையர்களுக்குக் கிடைக்காத (வாக்குறுதியான)து அவர்களுக்குக் கிடைத்து விட்டதா?
  70. அல்லது அவர்கள் தங்கள் தூதரை அடையாளம் கண்டு கொள்ளவில்லையா? இதனால் அவரை மறுக்கின்றனரா?
  71. அல்லது அவர்கள் அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதென்று கூறுகின்றனரா? அவ்வாறன்று. அவர், அவர்களிடத்து உண்மையினைக் கொண்டு வந்தார். அவர்களுள் பெரும்பாலானவர்கள் அந்த உண்மையினை வெறுக்கின்றனர்.
  72. அந்த உண்மை அவர்களது ஆசைகளைப் பின்பற்றி இருந்தால், வானங்களும், பூமியும், அவற்றிலுள்ளவர்களும் குழப்பத்திற்கு உள்ளாகியிருப்பர். அது மட்டுமன்று, நாம் அவர்களிடம் அவர்களுக்குரிய அறிவுரையினைக் கொண்டு வந்தோம். ஆனால் அவர்கள் தங்களுக்குரிய அறிவுரையினைப் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றனர்.
  73. அல்லது நீர் அவர்களிடத்து ஏதேனும் கூலி கேட்கின்றீரா? (அவ்வாறன்று. ஏனென்றால்) உமது இறைவனால் வழங்கப்பட்ட பொருள் மிகச்சிறந்ததாகும். மேலும் அவன் உணவளிப்போருள் மிகச்சிறந்தவனாவான்.
  74. நிச்சயமாக, நீர் அவர்களை நேரான வழியில் அழைக்கின்றீர்.
  75. மேலும் மறுமையில் நம்பிக்கை கொள்ளாதவர்கள் அந்த (உண்மையான) வழியிலிருந்து விலகிச் செல்பவர்களாவர்.
  76. நாம் அவர்களிடத்துக் கருணை காட்டி, அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தை அகற்றினால், அவர்கள் தங்கள் வரம்பு மீறுவதில் தடுமாறித் திரிந்தவர்களாகவே நிலைத்திருப்பர்.
  77. நாம் அவர்களைக் கடுமையான தண்டனையால் பிடித்துக் கொள்வோம். அப்படியிருந்தும், அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணிவதுமில்லை. மன்றாடிப் பிரார்த்தனை செய்வதுமில்லை.
  78. இறுதியாக நாம் அவர்களுக்குக் கடினமான ஒரு தண்டனையின் வாயிலைத் திறந்து விட்டால் அவர்கள் நம்பிக்கையிழந்தவர்களாகி விடுகின்றனர்.
  79. அவனே உங்களுக்குக் காதுகளையும், கண்களையும், உள்ளங்களையும் படைத்துள்ளான். (ஆனால் ) நீங்கள் அறவே நன்றி செலுத்துவதில்லை8.
  80. அவனே உங்களைப் பூமியில் வளரச் செய்தான். மேலும் அவனிடமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்.
  81. உங்களுக்கு உயிர் கொடுப்பவனும், மரணமடையச் செய்பவனும் அவனேயாவான். இரவு, பகல் மாறி மாறி வருவது அவனுக்குட்பட்டதேயாகும். நீங்கள் உணர்வதில்லையா?
  82. ஆனால் அவர்கள் தங்கள் முன்னோர்கள் கூறியது போன்றே கூறுகின்றனர்.
  83. அவர்கள் கூறினர்: நாம் மரணமடைந்து, மண்ணாகவும், எலும்பாகவும் மாறிவிட்ட பின்னருங் கூட நாம் மீண்டும் எழுப்பப்படுவோமா?
  84. இதற்கு முன்னர் இதே வாக்குறுதி எங்களுக்கும், எங்கள் மூதாதையர்களுக்கும் அளிக்கப்பட்டது. (ஆனால் அவ்வாறொன்றும் நடைபெறவில்லை) இது முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும்.
  85. இந்தப் பூமியும், இதிலுள்ளவையும் எவனுக்குரியவை என்று நீங்கள் அறிந்திருந்தால் கூறுங்கள், எனக் கூறுவீராக.
  86. அல்லாஹ்விற்குரியவை என்று நிச்சயமாக அவர்கள் பதிலளிப்பார்கள். அவ்வாறாயின், நீங்கள் ஏன் அறிவு பெறுவதில்லை என்று நீர் கூறுவீராக.
  87. பின்னர் நீர் அவர்களிடம் ஏழு வானங்களுக்கும், மகத்தான அரியணைக்கும் உரிய இறைவன் எவன் என்று கேட்பீராக.
  88. அவை(யெல்லாம்) அல்லாஹ்விற்குரியவை என்று அவர்கள் உடனே பதிலளிப்பார்கள். அவ்வாறாயின் நீங்கள் அஞ்சமாட்டீர்களா? எனக் கூறுவீராக.
  89. (மேலும்) நீர் கூறுவீராக: எல்லாவற்றின் ஆட்சி எவனது கையில் உள்ளது? அவனே (எல்லோருக்கும்) பாதுகாப்பளிக்கின்றான். ஆனால் அவனுக்கு எதிரில் வேறெவராலும் பாதுகாப்பு அளிக்க முடியாது. நீங்கள் அறிந்திருப்பின் ( உங்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியும்).
  90. அல்லாஹ்விற்கே(இவையெல்லாம் உரியன) என்று அவர்கள் உடனே கூறுவர். அவ்வாறாயின் நீங்கள் ஏமாற்றப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்படுகின்றீர்கள் என்று நீர் கூறுவீராக.
  91. உண்மையாகவே நாம் அவர்களிடம் உண்மையினைக் கொண்டு வந்துள்ளோம். ஆனால் நிச்சயமாக அவர்கள் முற்றிலும் பொய்யர்களே.
  92. அல்லாஹ் எவரையும் மகனாக ஆக்கிக் கொள்ளவில்லை. அவனுடன் வேறெந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருப்பின் ஒவ்வொரு கடவுளும் தான் படைத்தவற்றைத் தனியாகப் பிரித்துக் கொண்டு சென்றிருக்கும். (கடவுள்களாகிய) அவற்றுள் சில, சிலவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தி இருக்கும். அவர்கள் கூறுபவற்றை விட்டும் அல்லாஹ் தூயவனாவான்.
  93. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும்அறிபவனாவான். அவர்கள் இணை வைப்பதிலிருந்து அவன் மிக மிக உயர்ந்தவனாவான். ரு5
  94. நீர் கூறுவீராக: என் இறைவா! அவர்களிடத்து வாக்களிக்கப்படுவதை நீ என் வாழ்நாளிலேயே காண்பிப்பதாயின்,
  95. என் இறைவா! நீ என்னை அநீதியிழைக்கும் சமுதாயத்தினரைச் சார்ந்தவனாக ஆக்கி விடாதிருப்பாயாக9.
  96. நாம் அவர்களுக்கு வாக்களித்துள்ளதை உமக்குக் காட்டுவதற்கு நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றவராவோம்10.
  97. நீர் அவர்களின் தீமைகளை மிக்க அழகானவற்றைக் கொண்டு அகற்றுவீராக. அவர்கள் கூறுபவற்றை நாம் நன்கறிவோம்.
  98. மேலும் நீர் கூறுவீராக: என் இறைவா! கிளர்ச்சியாளர்களின் தீங்குகளிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன்.
  99. என் இறைவா! அவர்கள் என் முன் வருவதிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். 
  100. அவர்களுள் ஒருவருக்கு மரணம் வந்து விட்டால், அவர்(மீண்டும்,மீண்டும் மன்றாடி இவ்வாறு) கூறுவார்: என் இறைவா! என்னைத் திரும்ப அனுப்பி விடு.
  101. நான் விட்டு வந்த இட(மாகிய உலக)த்தில் நற்செயல்களை நான் செய்வதற்காக (என்னைத் திரும்பவும் அங்கு அனுப்பி விடு). அது நடக்கக் கூடியதன்று. நிச்சயமாக அது அவன் பேசும் வெறும் பேச்சாகும். அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் ஒரு திரையுள்ளது11. (எனவே அவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, உலகிற்கு ஒருபோதும் திரும்ப வரமாட்டார்கள்).
  102. பின்னர் எக்காளம் ஊதப்படும் போது, அந்நாளில் அவர்களுக்கிடையே எந்த உறவும் (தொடர்பும்) இருக்காது. அவர்கள் ஒருவரையொருவர் விசாரிக்கவும் மாட்டார்கள்.
  103. எனவே, எவர்களுடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.
  104. எவர்களின் எடைகள் குறைவாக இருக்கின்றனவோ அவர்களே தங்களை இழப்பிற்குள்ளாக்கியோர். (அவர்கள்) நீண்ட காலம் நரகத்தில் இருப்பார்கள்.
  105. நெருப்பு அவர்களது முகங்களைப் பொசுக்கும். அவர்கள் அதில் இருள் படிந்தவராக இருப்பார்கள்.
  106. உங்களுக்கு என் வசனங்கள் படித்துக் காட்டப்படவில்லையா? எனினும், நீங்கள் அவற்றைப் பொய்யாக்கிக் கொண்டீர்கள் அல்லவா?
  107. அவர்கள் கூறுவார்கள்: என் இறைவா! எங்கள் துரதிர்ஷ்டம் எங்களை வென்று விட்டது. நாங்கள் வழிதவறிய கூட்டத்தினராக இருந்தோம்.
  108. எங்கள் இறைவா! எங்களை இ(ந்த நரகத்) திலிருந்து வெளியேற்றி விடுவாயாக. இதன் பின்னர் நாங்கள் (அந்தப் பாவங்களின் பால் ) திரும்பினால், நிச்சயமாக நாங்கள் அநீதியிழைப்பவர்களாவோம்.
  109. (இறைவன்) கூறுவான்: நரகத்திற்குச் சென்று விடுங்கள். என்னிடம் பேசாதீர்கள்!
  110. நிச்சயமாக என் அடியார்களுள் இவ்வாறு கூறிய ஒரு பிரிவினர் இருந்தனர்: எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களை மன்னித்து, எங்களுக்குக் கருணை காட்டுவாயாக! மேலும் நீ கருணை காட்டுபவர்களுள் சிறந்தவனாவாய்.
  111. அவர்கள் (உங்களின் நகைப்பிற்குரிய பொருளாகி, உங்களை என்னை) நினைவு கூர்வதை மறக்கச் செய்யும் வரை நீங்கள் அவர்களை ஏளனத்திற்கு ஆளாக்கினீர்கள். மேலும் நீங்கள் அவர்களைக் கண்டு சிரித்துக் கொண்டே இருந்தீர்கள்.
  112. அவர்கள் பொறுமை காட்டியதனால் இன்று நான் அவர்களுக்கு (ப் பொருத்தமான) நற்பலன் வழங்குவேன். நிச்சயமாக அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.
  113. (பின்னர் இறைவன்) நீங்கள் எத்தனை வருடங்கள் பூமியில் இருந்தீர்கள் என்று கேட்பான்.
  114. நாங்கள் ஒரே நாள் அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் தங்கியிருந்தோம்; கணக்கு வைத்திருப்பவர்களிடம் நீயே கேட்டுப்பார் என்று பதிலளிப்பார்கள்.
  115. (இதற்கு இறைவன்) கூறுவான்: நீங்கள் அறிந்திருப்பின் மிகக் குறைந்த காலமே நீங்கள் தங்கியிருந்தீர்கள்12.
  116. நாம் உங்களை வீணாக (எந்தக் குறிக்கோளுமின்றிப் படைத்தோமென்றும், நீங்கள் எம்மிடம் கொண்டுவரப்பட மாட்டீர்கள் என்றும் நீங்கள் நினைத்திருந்தீர்களோ?
  117. அல்லாஹ் மிகவும் உயர்தகுதியைக் கொண்டவனும், உண்மையான பேரரசனும் ஆவான். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் கண்ணியமிக்க அரியணைக்குரிய இறைவனாவான்.
  118. எந்தச் சான்றுமில்லாது அல்லாஹ்வுடன் வேறு கடவுளை அழைப்பவரின் கணக்கு அவரது இறைவனிடமுள்ளது. நிச்சயமாக நிராகரிப்பவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.
  119. நீர் கூறுவீராக, என் இறைவா! மன்னித்தருள்வாயாக. மேலும் கருணை காட்டுவாயாக, நிச்சயமாக கருணை காட்டுபவர்களில் நீ சிறந்தவனாவாய். ரு6

Powered by Blogger.