8- அல் - அன்ஃபால்

அதிகாரம் : அல் - அன்ஃபால்
அருளப்பெற்ற இடம் : மதினா | வசனங்கள் : 76

பிரிவுகள் : 10


  1. அளவற்ற அருளானனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. (தூதரே!) போரில் கைப்பற்றிய பொருள்கள் குறித்து அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். நீர் (அவர்களிடம்) கூறுவீராக! போரில் கைப்பற்றிய பொருள்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் உரியன. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்களுக்கிடையே சமாதானம் செய்து கொள்ளுங்கள். மேலும் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின், அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடவுங்கள்.
  3. (தங்கள் முன்) அல்லாஹ் (வின் பெயர்) நினைவு கூறப்படும்போது, உள்ளங்கள் நடுங்குபவர்களே (உண்மையான) நம்பிக்கை கொண்டவர்களாவர். அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதப்படும்போது அவை அவர்களின் நம்பிக்கையினை வளரச் செய்கிறது. (மேலும்) அவர்கள் தங்கள் இறைவனிடமே நம்பிக்கை வைப்பார்கள்.
  4. அவர்கள் தொழுகையை (முறைப்படி) நிலை நாட்டுவர், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்வர்.
  5. உண்மையான நம்பிக்கையாளர்கள் அவர்களே. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் (உயர்) பதவிகளும் மன்னிப்பும், கண்ணியமான உணவும் உள்ளன.
  6. நம்பிக்கை கொண்டவர்களுள் ஒரு பிரிவினர் முற்றிலும் வெறுத்தபோதிலும், உம் இறைவன் உம் இல்லத்திலிருந்து உம்மை ஒரு நன்னோக்கதிற்காக வெளியேற்றியதனாலேயே (இந்த சன்மானம் கிடைக்கிறது).
  7. உண்மை தெளிவானதன் பின்னரும் அவர்கள் (நிராகரிப்போர்), தாங்கள் கண்கூடாக கண்டு கொண்டிருக்கும் மரணத்தின் பக்கம் தள்ளப்படுவது போன்று உம்முடன் வாதிக்கின்றனர்.
  8. மேலும் அல்லாஹ் உங்களிடம் இரண்டு கூட்டங்களில் ஒன்று உங்களுக்கு (த் தரப்படும்) என்று வாக்குறுதியளித்த நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). அப்போது ஆயுத மேந்தாத கூட்டத்தினர் உங்களுக்கு (க் கிடைக்க) வேண்டுமென நீங்கள் விரும்பினீர்கள். ஆனால் அல்லாஹ் தன் வார்த்தைகளால் உண்மையை நிலைநாட்டவும் நிராகரிப்பவர்களின் வேரைத் துண்டிக்கவும் நாடினான்.
  9. குற்றவாளிகள் இதனை வெறுத்தபோதிலும், அவன் உண்மையை நிலைநாட்டவும், பொய்யை அழித்துவிடவும் (விரும்பினான்).
  10. நீங்கள் உங்கள் இறைவனிடம் உதவிகோரியபோது, உங்கள் இறைவன் உங்களுடைய வேண்டுதல்களுக்கு, நான் உங்களுக்கு அணி அணியாக தொடர்ந்து வரக்கூடிய ஆயிரங்கணக்கான வானவர்கள் மூலம் நான் உதவிசெய்வேன் என்று (கூறிப்) பதிலளித்தான்.
  11. இதன் மூலம் உங்கள் உள்ளங்கள் நிம்மதி பெறும்பொருட்டு ஒரு நற் செய்தியாகவே அல்லாஹ் இதனை ஆக்கியுள்ளான். மேலும் உதவி அல்லாஹ்விடமிருந்தே வருகிறது. நிச்சயமாக அல்லாஹ் வல்லவனும், நுண்ணறிவுடையோனுமாவான். ரு1
  12. நிம்மதி (யின் அடையாளம்) ஆக அவன் தன்னிடமிருந்து உங்களுக்குச் சிற்றுறக்கத்தை இறக்கியபோது (அந் நற்செய்தி நிறைவேறியது), மேலும் அவன் மேகங்களிருந்து மழையை அதன் மூலம் உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துவற்கும், ஷைத்தானின் கறையை உங்களிடமிருந்து அகற்றுவதற்கும், உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவற்கும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்பெறச் செய்வதற்கும் உங்களுக்கு இறக்கியபோது (ம் அது நிறைவேறிற்று).
  13. உம்முடைய இறைவன் வானவர்களுக்கு, நான் உங்களுடன் இருக்கின்றேன் என்றும், ஆகவே நீங்கள் நம்பிக்கைக்கொண்டவர்களை உறுதிப்படுத்துங்கள் என்றும், நான் நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் திகிலை உருவாக்குவேன் என்றும், வஹி அறிவித்தபோது (தான் அது நிறைவேறியது). எனவே (நம்பிக்கை கொண்டவர்களே), நீங்கள் அவர்களுடைய பிடரிகளில் தாக்குங்கள். அவர்களை ஒவ்வொரு விரல் நுனியிலும் அடியுங்கள்.
  14. இதற்குக்காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்ததேயாகும். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர், அல்லாஹ் மிகக்கடினமான தண்டனை அளிப்பவனாவான் (என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும்).
  15. அதுவே (உங்களுக்குரிய தண்டனை). ஆகவே அதனைச் சுவையுங்கள். மேலும் நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு நெருப்பின் ஆக்கினை உண்டு. (என்பதனை நினைவில் கொள்ளுங்கள்).
  16. நம்பிக்கை கொண்டவர்களே! படைதிரட்டிவரும் நிராகரிப்பவர்களை நீங்கள் சந்தித்தால், ஒருபோதும் நீங்கள் அவர்களுக்குப் புறமுதுகு காட்டிவிடாதீர்கள்.
  17. மேலும், அந்நாளில் சண்டைக்காக இடத்தை மாற்றிக் கொள்பவராகவோ (முஸ்லிம்களின் வேறொரு) போர்ப்பிரிவு ஒன்றிடம் (இணைவதற்காகத்) திரும்புவராகவோ அன்றி, புறமுதுகு காட்டுபவர் அல்லாஹ்வின் கோபத்திற்காளாகித் திரும்புவார். அவர் தங்குமிடம் நரகமாகும். அந்த இடம் தங்குவதற்கு மிகக் கெட்டது.
  18. எனவே அவர்களை நீங்கள் கொல்லவில்லை, மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். நீர் எறிந்தபோது நீர் எறியவில்லை, மாறாக அல்லாஹ்வே எறிந்தான். அவன் நம்பிக்கையாளர்களுக்குத் தன்னிடமிருந்து மேலான நன்மை செய்வதற்கே (அவ்வாறு செய்தான்.) நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
  19. இது(வே) நிகழ்ந்தது.மேலும் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் திட்டத்தைப் பலவீனப்படுத்தக்கூடியவனாவான் (என்பதை அறிக).
  20. (நிராகரிக்கும் மக்கத்தினர்களே!) நீங்கள் வெற்றியை நாடினீர்கெளென்றால், நிச்சயமாக வெற்றி (தகுதியுடையோருக்கு) வந்துவிட்டது. நீங்கள் விலகிக் கொள்வீர்களாயின், இது உங்களுக்கு நன்றே. நீங்கள் (தீமையின் பக்கம்) திரும்பினால் நாமும் (அதற்குரிய தண்டனையின் பக்கம்) திரும்புவோம். உங்கள் கூட்டம் எண்ணிக்கையில் எவ்வளவுதான் அதிகமாக இருப்பினும் அது உங்களுக்கு எப்பயனும் அளிக்காது. மேலும் நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டோருடன் இருக்கின்றான். ரு2
  21. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடவுங்கள். நீங்கள் (அவருடைய கட்டளைகளை) செவியேற்றுக் கொண்ட நிலையில் அவரை விட்டும் முகம் திருப்பிக் கொள்ளாதீர்கள்.
  22. தாங்கள் செவியேற்காமலேயே, நாங்கள் செவியேற்றோம் எனக்கூறியவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்.
  23. நிச்சயமாக அல்லாஹ்விடத்து உயிரினங்களில் மிகக் கெட்டது புரிந்து கொள்ளாத செவிடர்களும், ஊமையர்களுமேயாவர்.
  24. அல்லாஹ் அவர்களிடம் எந்த நன்மையையாவது கண்டிருப்பின் அவன் அவர்களை (க் குர்ஆனை)ச் செவியேற்குமாறு செய்திருந்தாலும், அவர்கள் முகம் திருப்பிப் புறக்கணித்து விடுவர்.
  25. நம்பிக்கை கொண்டவர்களே! அவர் (அல்லாஹ்வின் தூதர்) உங்களுக்கு உயிர் கொடுப்பதற்காக அழைத்தால் நீங்கள், அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் பதில் அளியுங்கள். அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளத்திற்குமிடையில் சூழ்ந்திருக்கின்றான் என்பதையும், நீங்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) அவனிடமே திரும்பவும் கொண்டு செல்லபடுவீர்கள் என்பதனையும் தெரிந்துகொள்ளுங்கள்.
  26. குழப்பத்திற்கு அஞ்சுங்கள். அது உங்களுள் அநீதி இழைப்பவர்களை மட்டுமே தாக்கும் என்பதன்று. மேலும் நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனை கடினமானதாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
  27. நீங்கள் சிறுபான்மையினராக இருந்த நேரத்தை நினைத்துப் பாருங்கள். பூமியில் நீங்கள் பலவீனர்களாகக் கருதப்பட்டீர்கள், மக்கள் உங்களைப் பிடித்துச் சென்றுவிடுவார்களோ என்று பயந்தீர்கள். அவ்வாறிருந்தும் நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவன் உங்களுக்கு (மதீனாவில்) இடமளித்தான். தன்னுதவியினால் உங்களை உறுதிப்படுத்தினான். மேலும் தூய்மையானவற்றிலிருந்து உங்களுக்கு உணவு வழங்கினான்.
  28. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் (அவனுடைய) தூதருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள். மேலும் உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருள்களில் நீங்கள் தெரிந்து கொண்டே நம்பிக்கை துரோகம் செய்யாதீர்கள்.
  29. உங்கள் செல்வங்களும் உங்கள் சந்ததிகளும் சோதனையேயாகும். அல்லாஹ் அவனிடமே மாபெரும் கூலியுண்டு. ரு3
  30. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சினால் அவன் உங்களுக்கு ஒரு தனித்தன்மையை ஏற்படுத்துவான். மேலும் உங்கள் பலவீனங்களை உங்களைவிட்டு அகற்றிவிடுவான். மேலும் உங்களை மன்னிப்பான். மேலும் அல்லாஹ் பெரும் அருளுடையவனாவான்.
  31.  (தூதரே!) நிராகரிப்பவர்கள், உம்மை (ஓரிடத்தில்) சிறைப்படுத்தி வைப்பதற்காக அல்லது உம்மைக் கொன்று விடுவதற்காக அல்லது உம்மை வெளியேற்றுவதற்காக உமக்கெதிராகத் திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்த நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக), இவ்வாறு அவர்களும் திட்டங்கள் தீட்டினர். அல்லாஹ்வும் திட்டங்கள் தீட்டினான். திட்டம் தீட்டுபவர்களில் அல்லாஹ்வே மிகச் சிறந்தவன்.
  32. மேலும், அவர்களிடம் எம்முடைய வசங்கள் ஓதிக்காட்டப்பட்டால், அவர்கள் நாங்கள் செவியேற்றோம். நாங்கள் நினைத்தால், இதைப் போன்றதை நாங்களும் இயற்ற முடியும். இது (குர்ஆன்) முன்னோர்களின் கதைகளேயாகும் என்று கூறுகின்றனர்.
  33. அவர்கள் இவ்வாறு கூறிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக). அல்லாஹ்வே! இதுவே உன்னிடமிருந்துள்ள உண்மையாயின், நீ எங்கள் மீது விண்ணிலிருந்து கல்மாரியைப் பொழிவாயாக அல்லது வேதனைக்குரிய ஆக்கினையை எங்களுக்கு தருவாயாக.
  34. ஆனால், நீர் அவர்களுக்கிடையில் இருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களுக்குத் தண்டனையளிக்கமாட்டான். அவர்கள் பாவமன்னிப்புக்கோரிக் கொண்டிருக்கின்ற நிலையிலும் அல்லாஹ் அவர்களுக்குத் தண்டனையளிக்கமாட்டான்.
  35. அல்லாஹ் ஏன் அவர்களுக்குத் தண்டனை அளிக்கக்கூடாது? அவர்களோ மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லா) மக்களைத் தடைசெய்கிறார்கள். மேலும் அவர்கள் அதன் (உண்மை) காப்பாளர் அல்ல. இறையச்சமுடையோரே அதன் (உண்மைக்) காப்பாளர் ஆவர். ஆனால் (நிராகரிப்பவர்களாகிய) இவர்களுள் பெரும்பாலார் அறியவில்லை.
  36. (தூய) இல்லத்தில் அவர்களின் தொழுகை என்பது, சீழ்க்கையடிப்பதும், கைதட்டலுமேயன்றி வேறில்லை. எனவே நீங்கள் நிராகரித்ததற்கான தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள்.
  37. நிச்சயமாக நிராகரிப்பவர்கள் தங்கள் பொருள்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுப்பதற்காகச் செலவிடுகின்றனர். அவர்கள் அதனைச் செலவு செய்து கொண்டேயிருப்பார்கள். பின்னர் அது அவர்களின் கவலை(க்குக் காரணம்) ஆகிவிடும். பின்னர் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். நிராகரித்தவர்கள் நரகத்திற்கு ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
  38. அல்லாஹ் தீயவரை நல்லவரிலிருந்து வேறுபடுத்தவும் தீய பொருள்களுள் சிலவற்றைச், சிலவற்றின் மீது வைத்து, ஒரு குவியலாக்கி, பின்னர் அதனை நரகத்தில் தள்ளுவதற்காகவும் (அவ்வாறு செய்கிறான்). இத்தகையவர்கள்தாம் இழப்பிற்குரியவர்களாவர். ரு4
  39. நீர் நிராகரிப்பவரிடம் கூறுவீராக: அவர்கள் விலகிக் கொண்டால், முந்தைய குற்றங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படும். அவர்கள் மீண்டும் (அதே தீய செயல்களின் பக்கம்) திரும்புவார்களாயின், முன்னோர்களின் நடைமுறை சென்றுள்ளது. (அதாவது முன்னுள்ளவர்கள் பெற்ற தண்டனையே இவர்களும் பெறுவார்கள்).
  40. மேலும் குழப்பம் அறவே இல்லாமலாகி, மார்க்கமானது முற்றிலும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் வரை நீங்கள் (நிராகரிக்கின்ற) அவர்களுடன் போர் செய்து கொண்டேயிருங்கள். அவர்கள் விலகிக்கொள்வார்களாயின், நிச்சயமாக அல்லாஹ் அவர்களின் செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
  41. மேலும் அவர்கள் புறக்கணித்து விட்டால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பாதுகாவலன் என்பதனைத் தெரிந்துகொள்ளுங்கள். அவன் மிகச்சிறந்த பாதுகாவலனும் மிகச்சிறந்த உதவியாளனுமாவான்.
  42. உங்களுக்குப் போரில் கிடைத்த பொருள்களில் ஐந்திலொரு பகுதி அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்விடத்தும், இரண்டு படைகளும் சந்தித்த நாளாகிய, உண்மைக்கும் பொய்யிற்குமிடையில் தீர்ப்பளித்த நாளில் நம் அடியாருக்கு நாம் இறக்கியதனிடத்தும் நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாயின் (அதற்கேற்ப செயலாற்றுங்கள்). அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான்.
  43.  நீங்கள் (போர்க்களத்திற்கு) அருகிலும், அவர்கள் தொலைவிலும், வணிகக் குழுவினர் உங்களுக்குக் கீழ்ப்புறத்திலும் இருந்த நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). நீங்கள் அவர்களிடம் வாக்குறுதியளித்திருந்தாலும், (போர் தொடுக்க வேண்டிய) நேரம் குறித்து நீங்கள் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டிருப்பீர்கள். ஆனால் அல்லாஹ் முடிவு செய்து விட்டதை முழுமைப்படுத்துவதற்காக (நேரம் குறிக்காமலே போர் மூண்டது). ஆதாரங்கள் மூலமாக அழிந்தவர் அழிவதற்கும், ஆதாரங்கள் மூலமாக உயிர்பெற்றவர் உயிர்பெறவும் (தான் இந்த அடையாளம் காட்டப்பட்டது). நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
  44. அல்லாஹ் உமக்கு உம்முடைய கனவில், அவர்களைக் குறைத்துக் காட்டியதை (நீர் நினைவு கூர்வீராக). (நிராகரிப்பவர்களாகிய) அவர்களை அதிக எண்ணிக்கையைக் கொண்டவர்களாகக் காட்டியிருந்தால் நிச்சயமாக நீங்கள் தடுமாற்றமடைந்து இது குறித்து உங்களுக்கிடையே விவாதம் செய்திருப்பீர்கள். ஆனால் அல்லாஹ் (உங்களைக்) காப்பாற்றினான். அவன் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளதை(யும்) நன்கு அறிகின்றான்.
  45. அல்லாஹ் முடிவு செய்து விட்டதை முழுமைப்படுத்துவதற்காக போர் நிகழ்ந்தபோது, அவன் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களை உங்கள் பார்வையில் பலவீனர்களாகக் காட்டினான். உங்களை அவர்களின் பார்வையில் பலவீனர்களாகக் காட்டிய நேரத்தை நினைத்துப் பாருங்கள். எல்லாப் பிரச்சனைகளும் (இறுதி முடிவிற்காக) அல்லாஹ்விடமே திரும்பிக் கொண்டு செல்லப்படும். ரூ
  46. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் (நிராகரிப்பவர்களின்) எந்தப் படையைச் சந்தித்தாலும் உறுதியாக நின்று போரிடுங்கள். நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள்.
  47.  அல்லாஹ்வுக்கும், அவனுடைய் தூதருக்கும் எப்போதும் கட்டுப்பட்டு நடவுங்கள். ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள். (அவ்வாறு கொள்வீர்களாயின்) நீங்கள் தடுமாற்றமடைந்து (உங்கள்) வலிமை (உங்களை விட்டு) அகன்று விடும். மேலும் பொறுமையினை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
  48. மக்களுக்கு காட்டுவதற்காகப் பெருமையடித்தும், பகட்டிற்காகவும் தங்கள் வீடுகளிருந்து வெளியேறி, அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களைத்) தடுப்பவர்கள் போன்று நீங்கள் ஆகிவிட வேண்டாம். அல்லாஹ் அத்தகையவர்களின் செயல்களை அழித்து விட முடிவு செய்துள்ளான்.
  49. ஷைத்தான் அவர்களின் (நிராகரிப்போரின்) செயல்களை அவர்களுக்கு அழகுபடுத்திக்காட்டி, மக்களுள் எவராலும் இன்று உங்களை வெல்ல இயலாது; நான் உங்களுக்குப் பாதுகாவலனாக இருக்கிறேன் எனக் கூறிய நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்). பின்னர் இருபடைகளும் நேருக்கு நேர் சந்தித்த போது அவன் தன் குதிக்கால்களில் திரும்பி நிச்சயமாக நான் உங்களிடமிருந்து விலகிக் கொள்கிறேன். நிச்சயமாக நீங்கள் காணாததை நான் காண்கிறேன். நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் தண்டனை கடினமானது எனக் கூறினான். ரு6
  50. நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோயுள்ளவர்களும், இவர்களை (முஸ்லிம்களை) இவர்களின் மார்க்கம் பெருமையடிக்கச் செய்து விட்டது எனக் கூறிய நேரத்தை(யும் நினைத்துப்பாருங்கள்). ஆனால் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்துள்ளவர், அல்லாஹ் மிகைத்தவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான் (என்பதனைக் கண்டுகொள்கின்றார்).
  51. அந்தோ! நிராகரிப்பவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும் நேரத்தை நீர் கற்பனை செய்து பார்க்க வேண்டுமே! (வானவர்கள்) அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்துக் கொண்டிருப்பார்கள். எரிக்கும் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் (என்றும் கூறிக் கொண்டிருப்பார்கள்).
  52. இ(த்தண்டனையான)து ஏற்கெனவே உங்கள் கைகள் அனுப்பிய தீமைகளின் விளைவாகும். அல்லாஹ் தன் அடியார்கள் மீது அணுவளவு கூட அநீதி இழைப்பதில்லை.
  53. ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினர் மற்றும் அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் போன்றே (உங்களின் நிலை). அவர்களெல்லாரும் அல்லாஹ்வின் அடையாளங்களை நிராகரித்தனர். இதனால் அல்லாஹ், அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக் கொண்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க வல்லோனும் கடினமான தண்டனை வழங்குபவனுமாவான்.
  54. இதற்குக் காரணம், அல்லாஹ் ஒரு சமுதாயத்தினருக்கு அருட்கொடையினை வழங்கினால் அவர்கள் தங்கள் உள்ளங்களின் நிலைமையை மாற்றிக் கொள்ளாதவரை அந்த அருட்கொடையினை அவன் மாற்றுவதில்லை என்பதே. நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
  55. (நிராகரிப்பவர்களே! உங்கள் நிலை) ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினர் மற்றும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலையைப் போன்றது. அவர்கள் தங்கள் இறைவனின் அடையாளங்களை நிராகரித்தனர். அப்போது நாம் அவர்களை அவர்களின் பாவங்களின் காரணத்தினால் அழித்துவிட்டோம். நாம் ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தினரை மூழ்கடித்து விட்டோம். அவர்களெல்லாரும் அநீதி இழைப்பவர்களாயிருந்தனர்.
  56. நிராகரிப்போர் அல்லாஹ்விடம் உயிரினங்களில் மிகக் கெட்டவர்களாவர். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
  57. நீர் அவர்களிடம் உடன்படிக்கை செய்தீர். ஆனால் அவர்கள் ஒவ்வொரு முறையும் தங்கள் உடன்படிக்கையினை முறித்து விடுகின்றனர். அவர்கள் (இறைவனுக்கு) அஞ்சுவதில்லை.
  58. எனவே நீர் போரில் அவர்களை வென்றால், அவர்களைக் கொண்டு அவர்களுக்குப் பின்னால் இருப்பவர்களையும் அவர்கள் அறிவுரையினைப் பெறும் பொருட்டு விரட்டுவீராக.
  59. ஏதாவதொரு சமுதாயத்தினர் உடன்படிக்கையினை முறித்துவிடுவார் என நீர் அஞ்சினால், அவர்களுக்குச் சமமாக நீரும் அவ்வாறே அவர்களின் உடன்படிக்கையினை முறித்துக் கொள்வீராக. நம்பிக்கைத் துரோகம் செய்வோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. ரு7
  60. நிராகரிப்பவர்கள் தாம் முந்திக் கொண்டுவிட்டதாக நினைத்துக்கொள்ள வேண்டாம். அவர்களால் (நம்பிக்கை கொண்டவர்களை) ஒருபோதும் தோற்கடிக்க முடியாது.
  61. (முஸ்லிம்களே! போர் செய்யக்கூடிய) அவர்களுக்காக உங்களால் இயன்ற அளவு உங்கள் ஆற்றலைத் திரட்டிக் கொள்ளுங்கள். (உள்நாட்டைச் சீரமைப்பதன் மூலமும்) நாட்டு எல்லைகளில் பாசறைகளை அமைப்பதன் மூலமும் (ஆற்றலைத் திரட்டிக் கொள்ளுங்கள்) நீங்கள் அவற்றின் மூலம் அல்லாஹ்வின் பகைவர்களையும் உங்கள் பகைவர்களையும் பயமுறுத்துங்கள். மேலும் இவர்களன்றி (விரோதிகளில்) வேறு சிலரும் உள்ளனர். அவர்களை நீங்கள் அறியமாட்டீர்கள். அல்லாஹ்வே அவர்களை அறிவான். நீங்கள் அல்லாஹ்வின் வழியில் எதனைச் செலவு செய்தாலும் அதற்குரிய முழுமையான கூலியினை அவன் உங்களுக்குத் தருவான். மேலும் நீங்கள் அநீதியிழைக்கப்படமாட்டீர்கள்.
  62. அவர்கள் சமாதானத்திற்கு இணங்கினால், (தூதரே) நீரும் சமாதானத்திற்கு இணங்குவீராக. அல்லாஹ்விடமே நீர் நம்பிக்கை வைப்பீராக. நிச்சயமாக அவன் (பிரார்த்தனைகளை) மிகக் கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
  63. பின்னர் உம்மை ஏமாற்றிவிட அவர்கள் எண்ணினால், நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவன் (என்பதனை நினைவில் கொள்வீராக). அவனே தன்னுதவியினைக் கொண்டும், நம்பிக்கை கொண்டவர்களைக் கொண்டும் உமக்கு உறுதியளித்தான்.
  64. அவன் அவர்களின் உள்ளங்களை ஒன்றை ஒன்றுடன் இணைத்துவிட்டான். நீர் பூமியிலுள்ளவற்றையெல்லாம், அவர்களுக்காக செலவு செய்திருந்தாலும், உம்மால் அவர்களின் உள்ளங்களை இவ்வாறு இணைத்திருக்க இயலாது. ஆனால், அல்லாஹ் அவர்களுக்கிடையே நேசத்தை ஏற்படுத்திவிட்டான். நிச்சயமாக அவன் மிகைத்தவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  65. நபியே! அல்லாஹ்வும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டவர்களும் உமக்குப் போதும். (எதிரிகளைப்பற்றி நீர் பொருட்படுத்த வேண்டாம்). ரு8
  66. நபியே! நம்பிக்கை கொண்டவர்களை (நிராகரிப்பவர்களுடன்) போர் செய்யுமாறு ஆர்வமூட்டுவீராக. உங்களுள் உறுதியாக நிற்கக்கூடிய (நம்பிக்கை கொண்ட) இருபதுபேர் இருந்தால், அவர்கள் (நிராகரிக்கும்) இருநூறுபேரை வென்று விடுவார்கள். (உறுதியாக நிற்கக்கூடிய நம்பிக்கை கொண்டவர்கள்) உங்களுள் நூறு பேர் இருந்தால், அவர்கள் ஓராயிரம் நிராகரிப்பவர்களை வென்று விடுவார்கள். ஏனெனில் அவர்கள் அறிவற்ற சமுதாயத்தினராவர். (ஆனால் நம்பிக்கை கொண்டவர்களோ நன்றாகச் சிந்தித்து தங்கள் நம்பிக்கையில் நிலைத்து நிற்பவர்களாவர்).
  67. இப்பொழுது அல்லாஹ் உங்களை விட்டும் சுமையை எளிதாக்கியுள்ளான். மேலும் உங்களிடத்தில் இப்போது சிறிது பலவீனமுள்ளதையும் அறிந்துள்ளான். (அதாவது நம்பிக்கையாளர்கள் யாவரும் ஒரே தகுதியினைக் கொண்டவர் அல்லர்). எனவே உங்களுள் உறுதியாக நிற்கக்கூடிய (நம்பிக்கை கொண்ட) நூறு பேர் இருந்தால், அவர்கள் (நிராகரிக்கும்) இருநூறு பேரை வென்று விடுவர். உங்களுள் உறுதியாக நிற்கக்கூடிய ஓராயிரம் நம்பிக்கை கொண்டவர்கள் இருப்பார்களாயின, அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு (நிராகரிக்கும்) இரண்டாயிரம் பேரை வென்றுவிடுவார். அல்லாஹ் உறுதியாக நிற்கக்கூடியவர்களுடன் இருக்கின்றான்.
  68. நாட்டில் போர் செய்து இரத்தம் சிந்தாதவரை, சிறைப்பிடிப்பதென்பது எந்த நபிக்கும் ஏற்றதல்ல. (நீங்கள் முறையான போரின்றி சிறைப்பிடிப்பீர்களாயின்), நீங்கள் உலகியல் பொருள்களைத் தேடக்கூடியவர்கள் ஆவீர்கள். ஆனால் அல்லாஹ்வோ (உங்களுக்காக) மறுமையின் அருட்கொடைகளை விரும்புகின்றான். மேலும் அல்லாஹ் மிகைத்தவனும் நுட்பமான ஞானத்தைக்கொண்டவனுமாவான்.
  69. அல்லாஹ்விடமிருந்து ஏற்கனவே வந்துவிட்ட தெளிவான கட்டளை இல்லாதிருக்குமாயின், நீங்கள் (கைதிகளிடமிருந்து) பெற்ற ஈட்டுத் தொகையின் காரணத்தால் உங்களுக்குப் பெரிய தண்டனை கிடைத்திருக்கும்.
  70. எனவே (ஈட்டுத்தொகை பெற்றுக் கொள்ளலாம் என்ற கட்டளை வந்து விட்டதனால்), உங்களுக்கு போரில் கிடைக்கும் பொருள்களுள் (இறைக் கட்டளைக்கேற்ப) அனுமதிக்கப்பட்டதாயும், தூய்மையானதாயும் இருப்பதனை நீங்கள் உண்ணுங்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு9
  71. நபியே! உங்கள் கைகளில் (போர்க்) கைதிகளாயிருப்பவர்களிடம் நீர் கூறுவீராக! அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் நன்மையினைக் காண்பானாயின் (ஈட்டுத் தொகையாக) உங்களிடமிருந்து வாங்கப்பட்டதை விடவும் மிகச் சிறந்ததை அவன் உங்களுக்கு வழங்குவான். மேலும் உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அவன் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  72. அவர்கள் (விடுதலையடைந்த பிறகு) உமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தால், இதற்கு முன்னர் அவர்கள் அல்லாஹ்வுக்கும் நம்பிக்கைத்துரோகம் செய்துள்ளனர். ஆனால் அவன் அவர்களை (உங்கள்) அதிகாரதிற்குள்ளாக்கி விட்டான். அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  73. நம்பிக்கை கொண்டு, இடம் பெயர்ந்து சென்று தங்கள் பொருள்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போர் செய்தவர்களும், (நாட்டைத் துறந்து வந்தவர்களுக்குத் தங்கள் வீடுகளில்) இடமளித்து, (அவர்களுக்கு) உதவி செய்தவர்களுமாகிய இவர்களுள் சிலர் சிலருக்கு மிக நெருங்கிய நண்பர்களாவர். ஆனால் நம்பிக்கை கொண்டும் இடம்பெயர்ந்து செல்லாதவர்கள் (இனிமேல்) இடம் பெயர்ந்து செல்லாதவரை நீங்கள் அவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வது உங்களுக்கு ஆகாது. அவர்கள் உங்களிடம் மார்க்கத் தொடர்பாக உதவி கோரினால், அவர்களுக்கு உதவுவது உங்களுக்குக் கடமையாகும். ஆயினும் நீங்கள் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ள ஒரு சமுதாயத்திற்கு விரோதமாக (அவர்களுக்கு உதவுவது கூடாது). அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
  74. நிராகரிப்பவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாயிருக்கின்றனர். நாம் இட்ட கட்டளையை, நீங்கள் செய்யவில்லையாயின் பூமியில் பெருங்குழப்பமும் கழகமும் ஏற்பட்டு விடும்.
  75. மேலும் நம்பிக்கை கொண்டு இடம்பெயர்ந்து சென்று அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்தவர்களும் (இடம் பெயர்ந்து சென்றோருக்கு) இடமளித்து (அவர்களுக்கு) உதவி செய்தவர்களுமாகிய இவர்களே உண்மையான நம்பிக்கை கொண்டவர்களாவர். இவர்களுக்குப் பாவ மன்னிப்பும் கண்ணியமான உணவும் கிடைக்கும்.
  76. இதன் பின்னர் நம்பிக்கை கொண்டு இடம்பெயர்ந்து சென்று, உங்களுடன் இணைந்து (இறைவழியில்) அறப்போர் செய்பவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே. மேலும், அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் இரத்த உறவினர்களைப் பொறுத்தவரை அவர்கள் ஒருவர் இன்னொருவருக்கு மிகவும் நெருங்கியவராவர். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான். ரு10

Powered by Blogger.