அதிகாரம் : அல்-அஃராஃப்
அருளப்பட்ட இடம்
: மக்கா | வசனங்கள் : 207
பிரிவுகள் : 24
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை கட்டுபவனுமான அல்லாஹ்வின் பெயரால் (நான் ஓதுகின்றேன்).
- அலிஃப் லாம் மீம் ஸாது1
- இவ்வேதம் உமக்கு இறக்கப்பட்டது. எனவே இது குறித்து உமது உள்ளத்தில் எவ்வித இறுக்கமும் ஏற்பட வேண்டாம். நீர் இதனைக் கொண்டு எச்சரிக்கை செய்யவும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் அறிவுரையாகவும் (இது உள்ளது).
- உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டதை நீங்கள் பின்பற்றுங்கள். அவனைத் தவிர, பிறரைப் பாதுகாவலர்களாகப் பின்பற்றாதீர்கள். நீங்கள் அறிவுரையினை அறவே பெறுவதில்லை.
- நாம் எத்தனையோ ஊர்களை அழித்து விட்டோம். அவர்கள் இரவில் தூங்கும் போதோ, நண்பகலில் ஓய்வெடுக்கும்போதோ நாம் தண்டனை அவர்களிடம் வந்தது.
- ஆகையால் நம் தண்டனை அவர்களிடம் வந்த நேரத்தில், அவர்கள் நிச்சயமாக நாங்கள் அநீதி இழைப்பவர்களாக இருந்தோம் என்று கூறியது அல்லாமல், அவர்களுக்கு வேறு கூக்குரல் எதுவும் இருந்தது இல்லை.
- நாம் (நம் தூதர்களை) எவர்களுக்கு அனுப்பினோமோ அவர்களை நிச்சயமாக விசாரிப்போம்; தூதர்களிடமும் நாம் கட்டாயமாக விசாரிப்போம்.
- பின்னர் நிச்சயமாக நாம் அவர்களுக்கு நம் ஞானத்தின் மூலம் (அவர்கள் செயல்களை) விளக்குவோம். ஏனென்றால் நாம் ஒரு போதும் மறைந்திருக்கவில்லை.
- (மறுமை நாளாகிய) அந்நாளில் எல்லாச் செயல்களையும் எடை போடுதல் உண்மையாகும். அச்சமயம் எவருடைய (செயல்களின்) எடை அதிகமாய் இருக்குமோ, அவர்களே வெற்றியாளர்கள்.
- எவருடைய செயல்களின் எடை குறைகிறதோ, அவர்கள் நம்முடைய அடையாளங்கள் குறித்து அநீதி இழைத்த காரணத்தால், தம்மைத்தாமே அழிவுக்கு ஆளாக்கியவராவார்.
- நிச்சயமாக நாம் உங்களைப் பூமியில் நிலைபெறச் செய்து, அதில் உங்களுக்கு வாழ்க்கைத் தேவையானவற்றை வழங்கினோம். (ஆனால்) நீங்கள் அறவே நன்றி செலுத்துவதில்லை. ரு1
- நிச்சயமாக நாம் உங்களைப் படைத்தோம். பின்னர் உங்களை வடிவமைத்தோம். பின்னர் வானவர்களுக்கு ஆதமுக்கு கீழ்படியுங்கள் என்றோம். இதற்கு வானவர்கள் (ஆதமுக்கு) கீழ்படிந்தனர். ஆனால் இப்லீஸ் (கீழ்ப்படிய) இல்லை. அவன் கீழ்ப்படிந்து நடப்பவர்களை சார்ந்தவன் இல்லை.
- (எனவே இறைவன் அவனிடம்) நான் உனக்குக் கட்டளையிட்ட போது2 கீழ்ப்படிய விடாமல் உன்னைத் தடுத்தது எது என்றான். இதற்கவன் நான் அவரை (ஆதமை) விட சிறந்தவன். நீ என்னை நெருப்பினால் படைத்துள்ளாய். அவரை (ஈரமுள்ள) களிமண்ணால்3 படைத்துள்ளாய் எனப் பதிலளித்தான்.
- அல்லாஹ் கூறினான்: அவ்வாறாயின் நீ இங்கிருந்து சென்றுவிடு, (ஏனென்றால்) நீ இங்கு பெருமை பாராட்டுவது உனக்கு ஏற்றதன்று. எனவே (இங்கிருந்து) வெளியேறி வீடு. நீ இழிவடைந்தவர்களைச் சேர்ந்தவன் ஆவாய்.
- இதற்கு அவன் (என்னுடைய இறைவா!) அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை எனக்கு நீ காலக்கெடு அளிப்பாயாக எனக் கூறினான்4.
- (அல்லாஹ்) பதிலளித்தான்: உனக்கு (உனது வேண்டுகோளுக்கேற்ப) காலக்கெடு அளிக்கப்படுகிறது.
- அவன் கூறினான்: நீ என்னைத் தவறிழைத்தவனாய் முடிவு செய்ததினால், நான் அவர்களுக்காக உனது நேரான பாதியில் உட்கார்ந்து கொள்வேன்.
- பின்னர் நான் (அவர்களை ஏமாற்றும் பொருட்டு) அவர்களுக்கு முன்னாலிருந்தும், அவர்களுக்குப் பின்னாலிருந்தும், அவர்களின் வலப்பக்கமிருந்தும், அவர்களின் இடப்பக்கமிருந்தும் அவர்களிடம் வருவேன். நீ அவர்களுள் பெரும்பாலானவர்களை நன்றி செலுத்துபவர்களாக காணமாட்டாய்.
- (அல்லாஹ்) கூறினான்: இவ்விடத்திலிருந்து வெளியேறிவிடு. நீ என்றென்றும் இகழப்பட்டவனாகவும், எப்போதும் விரப்பட்டவனாகவுமே இருப்பாய். (மனிதர்களாகிய) அவர்களுல் உன்னை எவர் பின்பற்றுவாரோ அவர்கள் எல்லாரையுங் கொண்டு நான் நரகத்தை நிரப்புவேன்.
- மேலும் ஆதமே! நீரும் உம்முடைய இணையும் தோட்டத்தில் வாழ்ந்து வாருங்கள். நீங்கள் எங்கிருந்து வேண்டுமாயின் உண்ணுங்கள்; (ஆனால் தடுக்கப்பட்ட)5 இந்த மரத்தின் பக்கம் நெருங்காதீர்கள். அங்கு சென்று விட்டால் நீங்கள் அநீதி இழைத்தவர்களாகி விடுவீர்கள் (என்று நாம் கூறினோம்)
- அவ்விருவருடைய பார்வையில் மறைந்திருந்த அவர்களின் நிர்வாணத்தை அவன் அவர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக, ஷைத்தான் அவர்களுக்குத் தூண்டிக் கூறினான். நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகிவிடவும், நிரந்தர வாழ்வைப் பெறவும் அன்றி, உங்கள் இறைவன் உங்களை இந்த மரத்திலிருந்து தடுக்கவில்லை.
- (ஷைத்தான்) அவர்களிடம் பல முறை சத்தியங்கள் செய்து நான் உங்கள் இருவருக்கும் நன்மையையே நாடுபவன் என்று கூறினான்.
- பின்னார் அவ்விருவரையும் ஏமாற்றி (அவர்களின் நிலைகளிலிருந்து) அவர்களை விலகச் செய்தான். பிறகு அவ்விருவரும் (தடுக்கப்பட்ட) அந்த மரத்திலிருந்து (சிறிது) சுவைத்துப் பார்த்த போது, அவர்களின் மானங்கள் அவர்களுக்கு வெளிப்பட்டுவிட்டன. அவ்விருவரும் சுவர்க்கத்தின் ஆடை அணிகலன்களைத்6 தங்கள் மீது பொருத்திக் கொள்ளத் தொடங்கினர். அவர்களின் இறைவன் அவர்களை, நான் உங்கள் இருவரையும் அந்த மரத்தை விட்டு தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் இருவருக்கும் மிகவும் பகிரங்கமான எதிரி என்று நான் கூறவில்லையா? (எனக் கூறி) அழைத்தான்7.
- அவ்விருவரும் எங்கள் இறைவா! நாங்கள் எங்களுக்கே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்குக் கருணை காட்டாவிடில் நாங்கள் நஷ்டமடைந்தவர்களைச் சார்ந்தவர்களாகி விடுவோம் என்றனர்.
- (அப்போது அல்லாஹ்): நீங்கள் எல்லாரும் இங்கிருந்து சென்று விடுங்கள்8. உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாவீர்கள். உங்களுக்கு (இப்)பூமியில் ஒரு தங்குமிடம் உள்ளது9. சிறிது காலம் வரை பயன்படத் தக்கவையும் உண்டு என்றான்.
- (பின்னர்) இதே பூமியில் நீங்கள் வாழ்வீர்கள். இதிலேயே மரணமடைவீர்கள். இதிலிருந்தே நீங்கள் வெளியாக்கவும் படுவீர்கள் என்றான்10. ரு2
- ஆதமின் மக்களே! உங்கள் மானத்தை மறைக்கக் கூடியதும் அணிகலனாக இருக்கக்கூடியதுமான ஆடையினை உங்களுக்காக நாம் இறக்கியுள்ளோம்11. ஆனால் இறையச்சத்தின் ஆடை அதுதான் சிறந்தது. இது அவர்கள் அறிவுரை பெறுவதற்கான அல்லாஹ்வின் கட்டளைகளைச் சேர்ந்ததாகும்.
- ஆதமின் மக்களே! உங்களுடைய தாய் தந்தையரை தோட்டத்திலிருந்து ஷைத்தான் வெளியேற்றியது போன்று உங்களை தடுமாறச் செய்ய வேண்டாம். அவ்விருவரின் மானத்தையும் அவன் அவர்களுக்கு வெளிப்படுத்த, அவர்களின் ஆடையை அவர்களிடமிருந்து அவன் பறித்துக் கொண்டான். நிச்சயமாக அவன் உங்களை பார்க்கிறான். அவனும் அவனுடைய இனத்தாரும், நீங்கள் அவர்களைப் பார்க்காத இடத்திலிருந்து (பார்க்கிறார்கள்)12. நிச்சயமாக நாம் நம்பிக்கை கொள்ளாதவர்களின் நண்பர்களாக ஷைத்தான்களை ஆக்கியுள்ளோம்.
- மேலும் (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் ஏதாவது தீய செயலைச் செய்யும் போது நாங்கள் எங்கள் மூதாதையர்களை இவ்வாறே (செய்யக்) கண்டோம். இதை அல்லாஹ் எங்களுக்குக் கட்டளையிட்டான் என்பர். கூறுவீராக: நிச்சயமாக அல்லாஹ் தீயவற்றை ஏவமாட்டான். நீங்கள் அறியாதவற்றைக் குறித்துப் பொய்யாக்கக் கூறுகின்றீர்களா?
- நீர் கூறுவீராக: என் இறைவன் எனக்கு நீதியைக் (கடைபிடிக்குமாறு) கட்டளையிட்டுள்ளான். மேலும் நீங்கள் வணக்கஸ்தலங்கள் ஒவ்வொன்றிலும் உங்கள் முகங்களை நேரான திசையில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் மார்க்கத்தில் உங்களை அவனுக்காகக் களங்கமற்றவர்களாய் ஆக்கிக் கொண்ட நிலையில் அவனை அழையுங்கள். அவன் உங்களைத் தோற்றுவித்தது போல், நீங்கள் (அவனிடமே) திரும்புவீர்கள்.
- ஒரு பிரிவினருக்கு அவன் நேர்வழியினை வழங்கினான். ஆனால் மற்றொரு பிரிவினருக்கோ தவறான வழியில் செல்லுவது உரித்ததாகி விட்டது. (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு ஷைத்தான்களை தங்கள் நண்பர்களாக ஆக்கிக் கொண்டு, தாங்கள் நேர்வழியினைப் பெற்று விட்டோம் என்று நினைத்துக் கொள்கின்றனர்.
- ஆதமின் மக்களே! ஒவ்வொரு வணக்கஸ்தலத்திடத்தும் நீங்கள் உங்கள் அழகை மேற்கொள்ளுங்கள்13 உண்ணுங்கள், பருகுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்14. ஏனென்றால் அவன் வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. ரு3
- நீர் கூறுவீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக ஆக்கியுள்ள அழகு பொருள்களையும் உணவில் தூய்மையானதையும் விலக்கப்பட்டதென ஆக்கியவன் எவன்?15 நீர் கூறுவீராக: இவை இவ்வுலகில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு உரியவை ஆகும். இவை மறுமை நாளில் அவர்களுக்கு மட்டுமே உரியன. இவ்வாறே நாம் நம்முடைய அடையாளங்களை மக்களுக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றோம்.
- நீர் கூறுவீராக: வெளிப்படையானதும், மறைமுகமானதுமாகிய தீய செயல்களையும், பாவம், நியாயமின்றிச் செய்யப்படும் கிளர்ச்சி ஆகியவற்றையும் சான்று எதுவும் இல்லாத நிலையில் நீங்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தலையும் மேலும் நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (இட்டுக்கட்டி) கூறுவதையும் நிச்சயமாக என் இறைவன் விலக்கியுள்ளான்.
- ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு (முடிவு) காலம்16 குறிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களின் காலம் வந்து விட்டால், அவர்களால் அதிலிருந்து ஒரு நொடிப் பொழுதும் பின் தங்கவோ முந்தவோ முடியாது.
- ஆதமின் மக்களே! என் வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடிய தூதர்கள் உங்களிடமிருந்தே நிச்சயமாக உங்களிடம் வரும்போது, இறையச்சத்தை மேற்கொண்டு திருத்திக் கொள்வோருக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலத்தைப் பற்றிக்) கவலை அடையவும் மாட்டார்கள்.
- மேலும் எம்முடைய வசனங்கள் மறுத்து அகங்காரம் கொண்டு அவற்றை புறக்கணிப்பவர்கள், நரகத்திற்குரியவர்கள் ஆவர். அவர்கள் அதில் நீண்ட காலம் வரை தங்குவர்.
- அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனை(ந்து கூறு)கின்றவனை விடவும் அல்லது அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்படுத்துகின்றவனை விடவும் கொடியோன் எவன்? அவர்களுக்கு விதித்துள்ளதிலிருந்து அவர்களுக்குரிய பங்கு அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும். இறுதியில் எம்முடைய வானவர்கள் அவர்களின் உயிர்களை கைப்பற்றுவதற்காக அவர்களிடம் வரும்போது , (வானவர்களாகிய) அவர்கள், "அல்லாஹ்வையன்றி நீங்கள் எவர்களை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?" என்று கேட்பார்கள். அப்போது அவர்கள், "எங்களை விட்டு அவர்கள் மறைந்து விட்டார்கள்" என்று பதிலளிப்பார்கள். தாங்கள் நிராகரிப்போரைச் சார்ந்தவர்களாய் இருந்தனர் என்று அவர்களே அவர்களுக்கு எதிராக சாட்சி கூறுவார்கள்.
- (அப்பொழுது அல்லாஹ் அவர்களிடம்) உங்களுக்கு முன்னர் (காலஞ்) சென்றுவிட்ட ஜின்கள், மனிதர்கள் ஆகியோரைச் சேர்ந்த கூட்டத்தினருடன் இணைந்து நெருப்பில் நுழையுங்கள் எனக் கூறுவான். மக்கள் கூட்டம் ஒன்று (நெருப்பில்) நுழையும்போது அது தனது சகோதரக் கூட்டத்தினரைச் சபிக்கும். இறுதியில் அவர்கள் எல்லாரும் அதனுள் நுழைந்து விடும்போது, அவர்களுள் பிந்தியவர்கள், தங்களுக்கு முந்தியவர்களைக் குறித்து எங்கள் இறைவா! இவர்கள் தாம் எங்களை வழி தவறச் செய்தனர். ஆகவே இவர்களுக்கு நரகத்தில் பல மடங்கு தண்டனையை வழங்குவாயாக எனக் கூறுவர். (இதற்கு அவன்) எல்லாருக்குமே பல மடங்கு (தண்டனை) தான். ஆனால் நீங்கள் அறிவதில்லை எனக் கூறுவான்.
- அவர்களுள் முந்தியவர்கள் தமக்குப் பிந்தியவர்களிடம் எங்களை விட உங்களுக்கு எந்தச் சிறப்பும் கிடையாது; எனவே நீங்கள் செய்த செயல்களினால் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் எனக் கூறுவர். ரு4
- எம்முடைய அடையாளங்களைப் பொய்யாக்கி அகங்காரம் காட்டி அவற்றைப் புறக்கணித்து விட்டவர்களுக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. மேலும் ஊசித் துளையில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்17. குற்றவாளிகளுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கின்றோம்.
- அவர்களின் படுக்கையும், அவர்களின் மேலுள்ள போர்வைகளும் நரகத்தால் ஆனது மேலும் இவ்வாறே நாம் அநீதி இழைப்பவர்களுக்குக் கூலி கொடுக்கின்றோம்.
- நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்வோர் (இதனை நினைவில் கொள்வார்களாக). நாம் எவரின் மீதும் அவருடைய தகுதிக்கு அப்பாற்பட்ட பொறுப்பைச் சுமத்துவதில்லை. அவர்கள் சுவர்க்கத்திற்குரியவராவர்; அதில் என்றென்றும் வாழ்ந்து வருவர்.
- நாம் அந்த சுவர்க்கத்திருரியவர்களின் உள்ளங்களில் இருக்கும் எல்லாப் பகைமையையும்18 அகற்றி விடுவோம். அவர்களின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்19. அவர்கள் இவ்வாறு கூறுவார்கள்: (சுவர்க்கத்திற்குரிய) இந்த வழியினை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரியது; அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டாதிருப்பின், எங்களால் ஒரு போதும் நேர்வழியினைப் பெற்றிருக்க முடியாது. எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையினை நிச்சயமாகக் கொண்டு வந்தனர். (அவர்களிடம்) உரத்த குரலில் இவ்வாறு கூறப்படும்: நீங்கள் செய்ததற்கு(க் கூலி) ஆக நீங்கள் வாரிசுகளாக ஆக்கப்பட்ட சுவர்க்கம் இதுவே.
- சுவர்க்கத்திற்கு உரியவர்கள், நரகத்திற்கு உரியவர்களிடம் எங்கள் இறைவன் எங்களிடம் அளித்த வாக்குறுதி உண்மை என நாங்கள் கண்டு கொண்டோம். உங்கள் இறைவன் உங்களுக்கு அளித்த வாக்குறுதி உண்மை என நீங்கள் கண்டீர்களா என்று கூறுவார்கள். இதற்கு அவர்கள் ஆம்! என்பார்கள். அப்போது அறிவிக்கும் ஒருவர், அநீதி இழைப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக என்று அவர்களுக்கிடையில் உரத்த குரலில் அறிவிப்பார்.
- (அநீதி இழைத்த) அவர்கள், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை)த் தடுத்து மேலும் அதில் கோணலைத் தேடிக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் மறுமையை மறுப்போராக இருந்தனர்.
- (நரகம் மற்றும் சுவர்க்கத்திற்குரிய) அவ்விருவருக்கும் இடையே ஒரு திரை இருக்கும். எல்லாரையும் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்ளும் சிலர் சுவர்க்கத்தில் உயரமான இடங்களில்20 இருப்பர். இவர்கள் சுவர்க்கத்திற்குரியவர்களை, உங்களுக்கு சாந்தி உண்டாவதாக என்று (கூறி) அழைப்பார்கள். அவ்வாறு (அழைக்கப்பட்ட சுவர்க்கத்திக்குரிய) அவர்கள், (இது வரையிலும்) சுவர்க்கத்திற்குள் நுழைந்தவர்களாக இருக்க மாட்டார்கள். ஆயினும் (சுவர்க்கத்தினுள் செல்வதற்கு) எதிர்ப்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
- (சுவர்க்கத்திற்குரிய) அவர்களின் பார்வைகள் நரகத்திற்குரியவர்களின் பக்கம் திருப்பப்படும்போது, அவர்கள் எங்கள் இறைவா! எங்களை அநீதி இழைக்கும் சமுதாயத்தினரைச் சார்ந்தவர்களாக ஆக்கி விடாதிருப்பாயாக என்று கூறுவர். ரு5
- உயரமான இடங்களுக்குரியவர்கள், (நரகத்திற்குரியவர்கள் என்று) அவர்களின் அடையாளங்களால் பிரித்தறிந்த சிலரை அழைத்து அவர்களிடம், உங்கள் எண்ணிக்கையும் நீங்கள் பெருமை பாராட்டி வந்தவைகளும் உங்களுக்கு எந்த பயனும் அளிக்கவில்லை என்று கூறுவார்கள்.
- (பின்னர் அவர்கள் சுவர்க்கத்திற்குரியவர்களைச் சுட்டிக்காட்டி நரகத்திற்குரியவர்களிடம் இவ்வாறு கூறுவார்கள்): அல்லாஹ் ஒரு போதும் இவர்களிடம் கருணையுடன் நடந்து கொள்ள மாட்டான் என்று நீங்கள் ஆணையிட்டு கூறியவர்கள் இவர்களா? (பின்னர் சுவர்க்கத்தில் நுழைய எதிர்ப்பார்த்திருப்போரிடம் அல்லாஹ் இவ்வாறு கூறுவான்): சுவர்க்கத்தில் நுழைந்து கொள்ளுங்கள். உங்களுக்கு (எதிர்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும் ஏற்படாது. (இறந்த காலம் குறித்து) கவலையடையவுமாட்டீர்கள்.
- நரகத்திற்குரியவர்கள், சுவர்க்கத்திற்குரியவர்களை அழைத்து எங்கள் மீதும் சிறிது தண்ணீரைக் கொட்டுங்கள் அல்லது அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து எங்களுக்கும் சிறிது கொடுங்கள் என்று கூறுவார்கள். (இதற்கு சுவர்க்கத்திற்குரியவர்கள்), நிராகரிப்பாளர்களுக்கு இவ்விரு பொருட்களையும் அல்லாஹ் விலக்கியுள்ளான் என்று கூறுவார்கள்.
- (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் தங்கள் மார்க்கத்தை நகைப்பிற்குரியதாகவும் விளையாட்டாகவும் ஆக்கிவிட்டனர். மேலும் அவர்களை உலக வாழ்க்கை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கிவிட்டது. எனவே அவர்கள் நம் அடையாளங்களை மறுப்பதில் உறுதியாக இருந்ததால், தங்களுடைய இந்த நாளைச் சந்திப்பதை மறந்திருந்ததைப் போன்று இன்று நாமும் அவர்களை மறந்து விடுவோம்.
- நாம் அவர்களுக்கு (சிறப்புமிக்க) வேதமொன்றை வழங்கியுள்ளோம். நம்பிக்கை கொண்டோருக்கு, நேர்வழியும் அருளுமான (நிலையில்) அதனை நாம் ஞானத்தின் அடிப்படையில் மிகத் தெளிவாக விளக்கியுள்ளோம்.
- இவர்கள் இதன் உண்மை வெளிப்படுவதை எதிர்ப்பார்க்கின்றனரா? இதன் உண்மை தெளிவாகும் நாளில் (இதற்கு) முன்னர் இதனை மறந்து விட்டவர்கள், எம் இறைவனின் தூதர்கள் உண்மையுடனேயே வந்தார்கள் எனக் கூறுவார்கள். எனவே எங்களுக்கு பரிந்து பேசும் பரிந்துரையாளர்கள் எவரேனும் உண்டா? அல்லது நாங்கள் செய்து வந்ததற்கு மாற்றமாக (நற்செயல்கள்) செய்வதற்காக, நாங்கள் (உலகிற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? என்று கூறுவார்கள். நிச்சயமாக அவர்கள் தங்களையே இழப்பிற்கு ஆளாக்கி விட்டனர். அவர்கள் தங்கள் தெய்வங்களெனப் பொய்யாகக் கற்பனை செய்தவை யாவும் அவர்களை விட்டு மறைந்து விட்டன.
- நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே ஆறு காலக்கட்டங்களில், வாங்களையும் பூமியையும் படைத்தான். அதற்குப் பிறகு அவன், (ஆட்சியின்) அரியணையில் நிலை நின்றான். அவன் இரவை(க் கொண்டு) பகலை மூடச் செய்கின்றான். அது அதனை விரைந்து பிடிக்க நாடுகின்றது21. மேலும் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் ஆகியவை அவனுடைய கட்டளைக்கேற்ப (ஊதியம் பெறாமலே) செயல்படுகின்றன. கவனமாகக் கேளுங்கள். படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே உரியது. எல்லாப் பிரபஞ்சங்களையும் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ் மிக்க அருளுக்குரியவன்.
- நீங்கள் உங்கள் இறைவனை பணிவாகவும்22, மறைமுகமாகவும் அழையுங்கள். நிச்சயமாக, அவன் எல்லை மீறி நடப்பவர்களை நேசிப்பதில்லை.
- மேலும் பூமியில் அதைச் சீர்திருத்திய பின்னர் குழப்பம் செய்யாதீர்கள். (இறைவனாகிய) அவனை அச்சத்துடனும் அழையுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்பவர்களுக்கு23 அருகில் உள்ளது.
- தன் அருளுக்கு முன்னால் நற்செய்தியாக காற்றுகளை அனுப்புபவன் அவனே. பின்னர் அவை கனத்த மேகங்களைச் சுமந்து கொள்ளும்போது, நாம் அவற்றை இறந்த (வறண்ட) ஒரு நாட்டிற்குக் கொண்டு சென்று அவற்றிலிருந்து (மழை) நீரை இறக்குகின்றோம். பின்னர் நாம் அதனால் எல்லா வகையான பழங்களையும் வெளியாக்குகின்றோம். நீங்கள் அறிவுரை பெரும் பொருட்டு இவ்வாறு நாம் மரணமடைந்தவர்களை24 வெளியாக்குகிறோம்.
- (சிறந்த மண்ணைக் கொண்டுள்ள) நல்ல நிலம், தனது இறைவனின் கட்டளையினால் (நல்ல) விளைச்சலை வெளிப்படுத்துகின்றது. மேலும் மோசமான (மண்ணையுடைய) நிலம், பயனற்ற களைகளையன்றி வெளிப்படுத்துவதில்லை. இவ்வாறே நாம் நன்றி செலுத்தக் கூடிய சமுதாயத்தினருக்கு (எம்முடைய) அடையாளங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றோம். ரு7
- நிச்சயமாக நாம் நூஹை(த் தூதராக ஆக்கி) அவருடைய சமுதாயத்தினருக்கு அனுப்பி வைத்தோம். எனவே (அவர் அவர்களிடம் வந்த போது) என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனையன்றி உங்களுடைய வணக்கத்திற்குரியது வேறு எதுவும் இல்லை. மாபெரும் நாளில் தண்டனை உங்கள் மீது இறங்குவது குறித்து நான் அஞ்சுகிறேன் என்று அவர் கூறினார்.
- அவருடைய சமுதாயத்திலுள்ள பெரியார்கள், நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் காண்கின்றோம் என்றனர்.
- (அப்போது) அவர் இவ்வாறு கூறினார்: என் சமுதாயத்தினரே! வழிகேடு எதுவும் என்னிடமில்லை. மாறாக நான் எல்லா உலகங்களையும் படைத்து காத்தோம்பும் இறைவனிடமிருந்து வந்த தூதராவேன்.
- (மேலும்) என் இறைவனின் தூதுகளை உங்களுக்கு அறிவிக்கின்றேன். உங்களுக்கு நன்மையே நாடுகின்றேன். மேலும் நீங்கள் அறியாதவற்றை நான் இறைவன் புறமிருந்து அறிந்து கொள்கிறேன்.
- உங்களை எச்சரிக்கவும் நீங்கள் இறையச்சத்தை மேற்கொள்ளவும், நீங்கள் கருணை காட்டப்படவும், உங்கள் இறைவன் புறமிருந்து உங்களுள் ஒருவர் மூலம் அறிவுரையொன்று உங்களுக்கு வந்ததற்காகவா நீங்கள் வியப்படைக்கின்றீர்கள்?
- (ஆனால்) இதன் பிறகும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினர். எனவே நாம் அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ஒரு கப்பலில் காப்பாற்றினோம். நம்முடைய அடையாளங்களைப் பொய்யாக்கியோரை நாம் மூழ்கடித்து விட்டோம். அவர்கள் ஒரு பார்வையற்ற சமுதாயத்தினராக இருந்தனர். ரு8
- (மேலும்) நாம் ஆது (சமுதாயத்தினரு)க்கு அவர்களின் சகோதரர் ஹூதை(த் தூதராக அனுப்பி வைத்தோம். அப்போது) அவர் என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனையன்றி வணக்கத்திற்குரியது வேறெதுவும் இல்லை; நீங்க இறையச்சத்தை மேற்கொள்ள மாட்டீர்களா? என்று கூறினார்.
- (இதற்கு) அவருடைய சமுதாயத்தினர் நிராகரிக்கும் தலைவர்கள், (ஹூதே!) நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் காண்கிறோம். நிச்சயமாக நாங்கள் உம்மைப் பொய்யர்களைச் சார்ந்தவர்கள் என்று நினைக்கின்றோம் என்றனர்.
- (இதற்கு அவர் இவ்வாறு) கூறினார், என் சமுதாயத்தினரே! மடமை என்னிடமில்லை. மாறாக, நான் நிச்சயமாக எல்லா உலகங்களையும் படைத்துக் காத்தோம்பும் இறைவனிடமிருந்து வந்த தூதராவேன்.
- நான் என் இறைவனின் தூதுகளை உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் உங்கள் நன்மையை நாடுபவனும் நம்பிக்கைக்குரியோனுமாவேன்.
- உங்களை எச்சரிக்க, உங்கள் இறைவனிடமிருந்து உங்களுள் ஒருவர் மூலம் அறிவுரையொன்று உங்களுக்கு வந்ததற்காகவா நீங்கள் வியப்படைக்கின்றீர்கள்? அவன் உங்களை நூஹின் சமுதாயத்தினருக்கு பின்னர் பிரதிநிதிகளாக ஆக்கியதையும், உங்களுக்கு உடல் வலிமையைப் பெருகச் செய்ததையும் நினைத்துப் பாருங்கள். எனவே நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு அல்லாஹ்வின் அருகொடைகளை நினைவு கூருங்கள்.
- எங்கள் மூதாதையர் வணங்கி வந்ததை விட்டுவிட்டு, நாங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்கவா நீர் எங்களிடம் வந்தீர்? எனவே நீர் உண்மையாளரைச் சார்ந்தவராயின், நீர் எதைக் கொண்டு எங்களை அச்சுறுத்துகின்றீரோ அதை எங்களிடம் கொண்டு வாரும் என அவர்கள் கூறினார்கள்.
- அவர் கூறினார்; உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குத் தண்டனையும், கோபமும் உறுதியாகிவிட்டது. நீங்களும் உங்கள் மூதாதையர்களும் சூட்டிக் கொண்ட பெயர்களைக் குறித்து நீங்கள் என்னிடம் வாதம் செய்கின்றீர்களா? அல்லாஹ் அவற்றிற்கு எந்தச் சான்றையும் இறக்கவில்லை. எனவே நீங்களும் (தண்டனையை) எதிர்பாருங்கள். எதிர் பார்ப்பவர்களில் நானும் உங்களுடன் இருக்கிறேன்.
- எனவே நாம் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நம் கருணையினால் காப்பாற்றினோம். மேலும் நம் அடையாளங்களை மறுத்து நம்பிக்கை கொள்ளாமலிருந்தவர்களை ஆணிவேருடன் துண்டித்து விட்டோம். ரு9
- நாம் ஸமூது (சமுதாயத்தினரு)க்கு அவர்களின் சகோதரர் ஸாலிஹை(த் தூதராக) அனுப்பினோம்) அவர் (அவர்களிடம் இவ்வாறு) கூறினார், என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனையன்றி வணக்கதிற்குரியது உங்களுக்கு வேறு எதுவுமில்லை. உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான சான்று வந்துள்ளது. (அதாவது) இது உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கின்ற அல்லாஹ்வின் பெண் ஒட்டகமாகும். இதனை அல்லாஹ்வின் பூமியில் மேய்ந்து திரியுமாறு விட்டுவிடுங்கள். இதற்கு எந்த துன்பத்தையும் கொடுக்காதீர்கள். (இதற்கு மாறு செய்தால்) மிக்க வேதனையளிக்கக் கூடிய ஆக்கினை உங்களுக்குக் கிடைக்கும்.
- அவன் உங்களை ஆது சமுதாயத்தினருக்குப் பின்னர் (அவர்களின்) பிரதிநிதிகளாக்கிய நேரத்தை நினைத்துப் பாருங்கள். அவன் உங்களுக்குப் பூமியில் (இவ்வாறு) தங்குமிடத்தை அமைத்துத் தந்தான். நீங்கள் அதன் திடல்களில் கோட்டைகளை அமைத்துக் கொண்டீர்கள். மலைகளைக் குடைந்து வீடுகளைக் காட்டிக் கொண்டீர்கள். எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். மேலும் பூமியில் வேண்டுமென்றே குழப்பம் செய்யாதீர்கள்.
- (இதற்கு) அவருடைய (ஸாலிஹ்னுடைய) சமுதாயாத்தினருள் கர்வம் கொண்ட தலைவர்கள், ஸாலிஹ்வுடைய சமுதாயத்தினருள் பலவீனர்களாயிருந்த நம்பிக்கையாளர்களிடம், ஸாலிஹ் தம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள தூதர் என்று நீங்கள் (உறுதியாக) அறிகின்றீர்களா? என்று கேட்டனர். (அதற்கு நம்பிக்கை கொண்ட) அவர்கள் எதனைக் கொண்டு அவர் அனுப்பப்பட்டாரோ அதனை நாங்கள் நம்புகின்றோம் என்றனர்.
- (இதற்கு) கர்வங் கொண்டவர்கள், நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதா அதனை நாங்கள் நிச்சயமாக மறுப்போராவோம் என்றனர்.
- பின்னர் அவர்கள் (உணர்ச்சி வசப்பட்டு) ஒட்டகத்தின்25 கால்களைத் துண்டித்து விட்டனர், தங்கள் இறைவனின் கட்டளைக்கு மாறு செய்தனர். மேலும் ஸாலிஹே! நீர் (உண்மையில்) தூதர்களைச் சார்ந்த (ஒரு) வராயின் நீர் எங்களுக்கு வாக்களித்ததை எங்களிடம் கொண்டு வாரும் என்றனர்.
- ஆதலால் நிலநடுக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. தங்கள் வீடுகளில் மண்டியிட்டு வீழ்ந்து கிடந்தவர்களாய்26 இருந்தனர்.
- அப்போது (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகி என சமுதாயத்தினரே! நான் உங்களுக்கு என் இறைவனின் தூதைத் தெரிவித்து உங்கள் நன்மைக்குரியவற்றை உங்களிடம் கூறிவிட்டேன். ஆனால் நீங்கள் நன்மையை நாடுபவர்களை நேசிப்பதில்லை என்றார்.
- மேலும் (நாம்) லூத்தையும் (தூதராக்கி அவருடைய) சமுதாயத்தினருக்கு அனுப்பினோம்) அவர் தம்முடைய சமுதாயத்தினரிடம் இவ்வாறு கூறினார். உங்களுக்கு முன்னர் எந்தச் சமுதாயத்திலும், எவரும் செய்யாத மானக்கேடான செயலை நீங்கள் செய்கின்றீர்களா?
- நீங்கள் பெண்களை விட்டுவிட்டு காம உணர்ச்சியுடன் ஆண்களிடம் செல்கின்றீர்கள். (உண்மையில்) நீங்கள் வரம்பு மீறும் சமுதாயத்தினராவீர்கள்.
- இதற்கு அவர்கள் அளித்த மறுமொழி; (மக்களே) இவர்களை உங்கள் நரகத்திலிருந்து வெளியேற்றுங்கள். ஏனெனில் இவர்கள் தூய்மைப் பற்றிப் பெருமை பாராட்டும் மக்களாவர் என்பதாகும்.
- எனவே நாம் அவரையும் அவருடைய மனைவி நீங்கலாக அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம். அவள் பின்தங்கியவர்களைச் சார்ந்தவளாக இருந்தாள்27.
- நாம் அவர்கள் மீது (கல்) மழையினைப் (பூகம்பத்தால்) பொழியச் செய்தோம். ஆகவே குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்று நீர் பார்ப்பீராக28. ரு10
- மதியனுக்கு29 அவர்களின் சகோதரர் ஷுஐபையும் (நிச்சயமாக நாம் தூதராக அனுப்பினோம். அவர் இவ்வாறு) கூறினார்: என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள் அவனையன்றி வணக்கத்திற்குரியது உங்களுக்கு வேறெதுவுமில்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் தெளிவான அடையாளம் வந்துள்ளது. எனவே நீங்கள் அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருள்களை, (அவர்களது) உரிமையை விடக் குறைவாகக் கொடுக்காதீர்கள். மேலும் பூமியில் அதைச் சீர்திருத்திய பின்னர் குழப்பம் செய்யாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டோராயின், இதுவே உங்களுக்குச் சிறந்தது.
- நீங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவரை அச்சுறுத்தவும், அல்லாஹ்வின் பாதையிலிருந்து தடுக்கவும் (இறைவனுடைய பாதையாகிய) தில் கோணலை உருவாக்கவும் ஒவ்வொரு பாதையிலும் உட்காராதீர்கள். நீங்கள் சிறுபான்மையினராக இருந்த போது இறைவன் உங்களைப் பெரும்பான்மையினராக்கியதை நினைத்துப் பாருங்கள். குழப்பம் செய்தோரின் முடிவு எவ்வாறாயிற்று என்பதையும் பாருங்கள்.
- எதனைக் கொண்டு நான் அனுப்பப்பட்டேனோ, அதன் மீது உங்களுள் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டும், மற்றொரு பிரிவினர் நம்பிக்கை கொள்ளாமலும் உள்ளனரென்றால் நம்க்கிடையே அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை நீங்கள் பொறுமையை மேற்கொள்ளுங்கள். மேலும் அவனே தீர்ப்பு வழங்குபவர்களுள் சிறந்தவன் ஆவான்.
- அவருடைய சமுதாயத்தினரைச் சேர்ந்த அகங்காராங் கொண்ட தலைவர்கள், ஷுஐபே! நாங்கள் உம்மையும் உம்மீது நம்பிக்கை கொண்டவர்களையும் எங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றி விடுவோம்30. அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பி வர வேண்டும் என்றனர். இதற்கு அவர் நாங்கள் (இச்செயலை) வெறுத்த போதிலுமா (நீங்கள் எங்களை வெளியேற்றுவீர்கள்) என்று கூறினார்.
- உங்கள் மார்க்கத்திலிருந்து அல்லாஹ் எங்களைக் காப்பாற்றியதன் பின்னர், நாங்கள் அதன்பால் திரும்பினால், உண்மையிலேயே நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்து கூறினவர்களாகிவிடுவோம். (நாங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர்) எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி (உங்கள் மார்க்கமாகிய) அதன்பால் நாங்கள் திரும்புவதற்கு எங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? எங்கள் இறைவன் ஒவ்வொரு பொருளைப் பற்றிய முழுமையான அறிவுடையவனாவான். அல்லாஹ்விடமே நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் இறைவா! எங்களுக்கும் எங்கள் சமுதாயத்தினருக்குமிடையே உண்மையாக தீர்ப்பு வழங்குவாயாக. மேலும் தீர்ப்பு வழங்குபவர்களுள் நீயே சிறந்தவன்.
- மேலும் அவருடைய சமுதாயத்தினருள் நிராகரித்தவர்களின் தலைவர்கள் நீங்கள் ஷூஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்களாவீர்கள் என்றனர்.
- எனவே அவர்களி நிலநடுக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் மண்டியிட்டு வீழ்ந்து கிடந்தனர்.
- ஷூஐபைப் பொய்ப்படுத்தியவர்கள் அங்கு எக்காலத்திலும் வாழ்ந்திராதவர்கள் போன்றாகி (அழிந்து) விட்டனர்31 ஷுஐபைப் பொய்ப்படுத்தியவர்கள் நஷ்டமடைந்தவர்களாகி விட்டனர்.
- அப்போது அவர் (அதாவது ஷுஐப்) அவர்களை விட்டு விலகிச் சென்று விட்டார். மேலும் அவர், என் சமுதாயத்தினரே! நான் என் இறைவனின் தூதுச் செய்திகளை உங்களுக்கு எட்ட வைத்து, உங்களுக்கு அறிவுரையும் கூறிவிட்டேன். எனவே நிராகரிக்கும் சமுதாயத்திற்காக எவ்வாறு வருந்துவேன் எனக் கூறினார். ரு11
- மேலும், ஏதாவதொரு ஊருக்கு நாம் ஒரு தூதரை அனுப்பினால் அதில் வாழ்பவர்கள் பணிவை மேற்கொள்வதற்காகத் துன்பத்தையும், துயரத்தையும் கொண்டு அவர்களைப் பிடித்திருந்தோம்.
- பின்னர் நாம் அவர்கள் முன்னேறும் வரை (அவர்களின்) கஷ்ட நிலையை நல்லதாக மாற்றினோம். அடுத்து அவர்கள், நம்முடைய மூதாதையர்களுக்கும் துன்பங்களும், இன்பங்களும் ஏற்பட்டன, (எனவே எங்களுக்கும் ஏற்பாட்டால் என்ன?) எனக் கூறினர். எனவே நாம் அவர்கள் தெரிந்து கொள்ளாத நிலையில் திடீரென (தண்டனையைக் கொண்டு) பிடித்துக் கொண்டோம்.
- அந்த ஊர்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (இறை) அச்சத்தை மேற்கொண்டிருந்தால், நாம் வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் அவர்கள் மீது அருள்களின் வாயில்களைத் திறந்திருப்போம். ஆனால் அவர்கள் (நபிமார்களைப்) பொய்ப்படுத்தினர். எனவே நாம் அவர்களை அவர்களது செல்களின் காரணமாகத் தண்டனையைக் கொண்டு பிடித்தோம்.
- இந்த நகரங்களில் வாழ்பவர்கள்32 இரவு வேளையில் உறங்கி கொண்டிருக்கும்போது, நம் தண்டனை அவர்களிடம் வருவதிலிருந்து அமைதியாக இருக்கின்றார்கள்?
- அல்லது இந்த நகரங்களில் வாழ்பவர்களுக்கு, நண்பகல் வேளையில் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும்போது33 நம் தண்டனை அவர்களுக்கு வருவதிலிருந்து அவர்கள் அமைதியாக இருக்கின்றனரா?
- அவர்கள் அல்லாஹ்வின் திட்டத்திலிருந்து பாதுகாப்புப் பெற்று விட்டனரா? (அவ்வாறாயின்) நஷ்டத்திற்குள்ளாகும் சமுதாயத்தைத் தவிர வேறெவரும் அல்லாஹ்வின் திட்டத்திலிருந்து கவனமின்றி இருப்பதில்லை என்பதனை அவர்கள் நினைவில் கொள்ளட்டும். ரு12
- பூமிக்கு அதில் (முன்பு) வாழ்ந்தவர்களுக்குப் பின்னர் வாரிசாகியுள்ளவருக்கு நாம் நாடினால் அவர்களின் பாவங்களுக்கு அவர்களை நாம் தண்டிப்போம். (மேலும்) அவர்களின் இதயங்களில் முத்திரையிடுவோம். அதனால் அவர்கள் நேர்வழிக்குரிய செய்திகளைக் கேட்கமாட்டார்கள் என்பதைப் பற்றிய அறிவு அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?
- இவ்வூர்களைப் பற்றிய செய்திகளை நாம் உமக்குக் கூறுகிறோம். மேலும் அவர்களிடம் அவர்களின் தூதர்களை தெளிவான சான்றுகளுடன் வந்தனர். ஆனால் அவர்கள் முன்னரே பொய்யாக்கியதன் காரணமாக நம்பிக்கை கொள்வதில்லை. இவ்வாறே நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரை வைக்கிறான்.
- நாம் அவர்களுள் பெரும்பாலாரை(த் தங்களின்) உடன்படிக்கையில் அக்கறை உடையவர்களாக்கவில்லை. மாறாக, நிச்சயமாக நாம் அவர்களுள் பெரும்பாலாரை உடன்படிக்கையினை மீறுபவர்களாகவே கண்டோம்.
- பிறகு நாம் (மேற்கூறப்பெற்ற நபிமார்களாகிய) அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம்முடைய அடையாளங்களுடன் ஃபிர்அவ்னிடத்திலும், அவனுடைய தலைவர்களிடத்திலும் அனுப்பினோம். ஆனால் அவர்கள் அவற்றுடன் அநீதியுடன் நடந்து கொண்டனர். எனவே குழப்பம் செய்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதனை நீர் காண்பீராக.
- மேலும் மூஸா, ஃபிர்அவ்னிடம் நான் எல்லா உலகங்களின் இறைவனிடமிருந்து (வந்த) தூதராக இருக்கிறேன் என்று கூறினார்.
- அல்லாஹ்வைப்பற்றி உண்மையைத் தவிர வேறெதனையும் நான் கூறுவதற்கு உகந்தது அன்று. நான் உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான ஓர் அடையாளத்தைக் கொண்டு வந்துள்ளேன். எனவே நீ இஸ்ராயீலின் மக்களை என்னுடன் அனுப்பிவிடு.
- (அப்போது ஃபிர்அவ்ன்), நீர் ஏதாவது அடையாளத்தை கொண்டு வந்திருந்தால், நீர் உண்மையாளரைச் சார்ந்தவராயின், அதனை வெளிப்படுத்தும் என்றான்.
- இதற்கு அவர் (மூஸா), தமது தடியை(த் தரையில்) போட்டார், திடீரென அது மிகவும் தெளிவாகக் காணக் கூடிய பாம்பாகக் காட்சியளித்தது.
- பின்னர் அவர் தமது கையை வெளியே எடுத்தார், அது பார்ப்பவர்களுக்கு வெண்மையாகக் காணப்பட்டது. ரு13
- அப்போது ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தைச் சார்ந்த தலைவர்கள் 'இவர் நன்கறிந்த சூனியக்காரர் ஆவார்' எனக் கூறினர்.
- இவர் உங்களை உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற விரும்புகிறார். எனவே நீங்கள் (இது குறித்து) என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?
- அ(த்தலை)வர்கள் கூறினர்: மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் (சிறிது) காலக்கெடு கொடுங்கள். மேலும் எல்லா நகரங்களுக்கும் அறிவிப்பாளர்களை அனுப்புங்கள்.
- அவர்கள் சூனியக் கலை வல்லுநர்களை எல்லாம் உங்களிடம் கொண்டு வரட்டும்.
- எல்லா சூனியக்காரர்களும் ஃபிர்அவ்னிடம் வந்து சேர்ந்து, நாங்கள் வெற்றிபெற்றால் எங்களுக்குப் பரிசு கிடைக்குமா என்றனர்.
- இதற்கு அவன் (ஃபிர்அவ்ன்) ஆம், அதுமட்டுமின்றி நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகவும் ஆகிவிடுவீர்கள் என்றான்.
- மூஸாவே! நீர் முதலில் எறிகின்றீரா அல்லது நாங்கள் (முதலில்) எறியட்டுமா? என்று அவர்கள் கூறினர்.
- நீங்களே (முதலில்) எறியுங்கள் என்று மூஸா கூறினார். அவர்கள் (தங்களுடைய தடிகளையும் கயிறுகளையும்) எறிந்த போது, மக்களுடைய கண்களை ஏமாற்றிவிட்டது. மேலும் அவர்களை பயமுறுத்தினர். மேலும் அவர்கள் (மக்கள் முன்) மாபெரும் சூனியத்தை காட்டினர்.
- மேலும் நாம் மூஸாவுக்கு, நீர் உமது தடியை எறியும் என்று வஹீ அறிவித்தோம். (அவர் அவ்வாறு செய்த போது திடீரென) அது அவர்களின் சூனியத்தை விழுங்கிக் கொண்டிரு(ப்பது போன்று தெரி)ந்தது34.
- இதனால் உண்மை வெளிப்பட்டது. மந்திரவாதிகள் செய்தது வீணாயிற்று.
- இவ்வாறு அவர்கள், அங்கு தோற்கடிக்கப்பட்டு இழிவடைந்தனர்.
- மேலும் அவர்கள் கட்டுப்பட்டுச் சிரம்பணிந்தனர்.
- (மேலும்) எல்லா உலகங்களின் இறைவன் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம் என்று கூறினர்.
- (அவன்) மூஸா, ஹாரூன் ஆகியவர்களின் இறைவன் (ஆவான்).
- ஃபிர்அவ்ன் இவ்வாறு கூறினான்; நான் உங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்னர் நீங்கள் அவனிடத்து நம்பிக்கை கொண்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியே! இந்த நகரத்திலிருந்து அதிலுள்ள குடிமக்களை வெளியேற்றுவதற்காக நீங்கள் சூழ்ச்சி செய்திருக்கிறீர்கள். எனவே (இதன் விளைவை) நீங்கள் விரைவில் காண்பீர்கள்.
- நான் உங்கள் கைகளையும், கால்களையும் (உங்கள்) எதிர்ப்பின் காரணமாகத் துண்டிப்பேன்35. பின்னர் உங்கள் எல்லாரையும் சிலுவையில் அறைவேன்.
- அதற்கு அவர்கள், அவ்வாறாயின் நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோம் என்றார்கள்.
- எங்கள் இறைவனின் அடையாளங்கள் எங்களிடம் வந்த போது, நாங்கள் அவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எதற்காக எங்களைப் பழி வாங்குகிறாய். எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையினை இறக்குவாயாக. மேலும் (உனக்கே) கட்டுப்பட்டவர்களாக நாங்கள் இருக்கின்ற நிலையிலே, எங்களுக்கு நீர் மரணத்தை தந்தருள்வாயாக (என்று நாங்கள் இறைவனை வேண்டுகிறோம்). ரு14
- மூஸாவையும் அவருடைய சமுதாயத்தையும், நாட்டில் குழப்பம் செய்து, உம்மையும், உம்முடைய தெய்வங்களையும், புறக்கணிப்பதற்காக (சுதந்திரமாக) விட்டு வைப்பீராக என்று ஃபிர்அவ்னுடைய சமுதாயத் தலைவர்கள் கூறினர். (இதற்கு) அவன், (ஃபிர்அவ்ன்) நாம் கட்டாயமாக அவர்களுடைய ஆண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அவர்களின் பெண்களை உயிருடன் விட்டுவிடுவோம். மேலும் நாம் அவர்கள் மீது வெற்றி பெறுபவர்கள் ஆவோம் என்றான்.
- (இதற்கு) மூஸா தமது சமுதாயத்தினரிடம், நீங்கள் அல்லாஹ்விடம் உதவி கோருங்கள். மேலும் பொறுமையைக் கடைபிடியுங்கள். நிச்சயமாக நாடு அல்லாஹ்வுக்குரியது. அவன் தன் அடியார்களுள் விரும்புபவரை அதற்கு வாரிசாக்குகிறான். மேலும், (நல்ல) முடிவு இறையச்சமுடையோருக்கே உரியது என்று கூறினார்.
- (அதற்கு) அவர்கள் (மூஸாவின் சமுதாயத்தினர்), நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். நீர் எங்களிடம் வந்த பின்னரும் (நாங்கள் துன்புறுத்தப்படுகின்றோம்) என்று கூறினர். இதற்கு அவர் (மூஸா) உங்கள் இறைவன் மிக விரைவில் உங்கள் எதிரியை அழித்து விட்டு, நாட்டில் உங்களை தனது பிரதிநிதியாக்கவிருக்கின்றான். பின்னர் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்கள் என்பதனை அவன் பார்த்துக்கொள்வான் எனப் பதிலளித்தார். ரு15
- ஃபிர்அவ்னின் இனத்தினர் அறிவுரையினைப் பெறும்பொருட்டு, (இன்னல் நிறைந்த) பல வருட வறட்சியினாலும் பழங்களின் குறைவினாலும் (குழந்தைகளின் மரணத்தினாலும்) நாம் அவர்களைப் பிடித்தோம்.
- அவர்களுக்கு நன்மை வந்து விட்டால், இது எங்களுக்குரியது எனக் கூறினர். அவர்களுக்கு தீமை வந்துவிட்டாலோ, அவர்கள் (அதனை) மூஸாவினாலும், அவரைச் சார்ந்தவர்களினாலும் விளைந்த கேடாகக் கருதினர். கவனமாகக் கேளுங்கள்; அல்லாஹ்விடத்தில், அது அவர்களால் விளைந்த கேடையாமாகும். ஆனால் அவர்களில் பெரும்பாலார் அறிவதில்லை.
- மேலும் அவர்கள், நீர் ஏதாவதோர் அடையாளத்தை எங்களை ஏமாற்றுவதற்காக எங்களிடம் எப்பொழுது கொண்டு வந்தாலும், நாங்கள் ஒரு போதும் உம்மை நம்புபவர்கள் அல்லர் எனக் கூறினர்.
- அப்போது நாம் அவர்களிடம் தெளிவான அடையாளங்களாகப் புயல், வெட்டுக்கிளிகள், பேன்கள், தவளைகள், இரத்தம்36 ஆகியவற்றை அனுப்பினோம். ஆனால் அவர்கள் அகங்காரம் கொண்டனர். மேலும் அவர்கள் குற்றமிழைக்கும் மக்களாய் இருந்தனர்.
- அவர்களுக்குத் தண்டனை இறங்கிய போதெல்லாம் அவர்கள், மூஸாவே! உமது இறைவன் உம்மிடம் அளித்த வாக்குறுதிக்கேற்ப நீர் அவனை வேண்டுவீராக. நீர் எங்களை விட்டுத் தண்டனையை அகற்றிவிட்டால் நிச்சயமாக நாங்கள் உம்மிடம் நம்பிக்கை கொள்வோம். மேலும் நிச்சயமாக இஸ்ராயீலின் மக்களை உம்முடன் அனுப்பி வைப்போம் என்று கூறினர்.
- ஆனால் நாம் அவர்களுக்கெனக் குறித்திருந்த காலம் வரை தண்டனையை அவர்களிடமிருந்து அகற்றியதும், அவர்கள் வாக்குறுதிக்கு மாறு செய்யத் தொடங்கினர்.
- எனவே நாம் அவர்களைப் பழிவாங்கி, அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம். ஏனென்றால் அவர்கள் நம் அடையாளங்களைப் பொய்ப்படுத்தினார்கள். மேலும் அவர்கள் அவற்றைப் பொருட்படுத்தாதிருந்தனர்.
- நாம் அருள்புரிந்துள்ள நாட்டின்37 கிழக்கு மற்றும் மேற்குப்பகுதிகளுக்கு, பலவீனர்கள் எனக் கருதப்பட்ட சமுதாயத்தினரை38 நாம் வாரிசாக்கினோம். மேலும் இஸ்ராயீலின் மக்கள் பொறுமையை மேற்கொண்டதனால், உமது இறைவன் அவர்களுக்கு அளித்த சிறந்த வாக்குறுதி நிறைவேறிற்று. மேலும், ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயத்தினரும் செய்து கொண்டிருந்தவை, அவர்கள் (கட்டிடமாக) எழுப்பிக் கொண்டிருந்தவை ஆகிய எல்லாவற்றையும் நாம் அழித்து விட்டோம்.
- நாம் இஸ்ராயீலின் மக்களை கடலைக் கடந்து செல்ல வைத்தோம். தங்கள் சிலைகளின் முன் வணக்கத்தில் ஈடுபட்டிருந்த39 ஒரு சமுதாயத்தினரிடம் அவர்கள் வந்து சேர்ந்தனர். (அப்போது) அவர்கள் மூஸாவே! இவர்களின் தெய்வங்களைப் போன்று எங்களுக்கும் ஒரு தெய்வத்தை உண்டாக்கித் தருக என்றனர். (இதற்கு மூஸா இவ்வாறு) கூறினார்; நிச்சயமாக நீங்கள் அறிவற்ற மக்களாவீர்.
- நிச்சயமாக இவர்கள் ஈடுபட்டிருக்கின்றவை அழிந்து விடும். மேலும் இவர்கள் செய்வதெல்லாம் வீணாகி விடும்.
- (பின்னர் அவர்) எல்லாச் சமுதாயங்களையும் விட அல்லாஹ் உங்களுக்குச் சிறப்பினை வழங்கியிருக்கும் நிலையில் அவனையன்றி வணக்கத்திற்குரிய வேறொன்றை நான் உங்களுக்குத் தேடித் தர வேண்டுமா என்றார்.
- ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). அவர்கள் உங்களுக்கு மிகக் கொடிய தண்டனை கொடுத்து வந்தனர். உங்கள் ஆண் குழந்தைகளைக் கொன்றும் உங்கள் பெண்களை உயிருடன் வாழவும் விட்டனர். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மிகப் பெறும் நன்மை இருந்தது. ரு16
- நாம் மூஸாவுக்கு முப்பது இரவுகளை வாக்களித்தோம். பின்னர் அவற்றை மற்றொரு பத்தைக் கொண்டு முழுமைப்படுத்தினோம். இவ்வாறு அவருடைய இறைவனால் குறிப்பிடப்பட்ட வாக்குறுதி நாற்பது இரவுகளாக முழுமை பெற்றது. மேலும் மூஸா தமது சகோதரர் ஹாரூனிடம் (எனக்குப் பின்னர்) என் சமுதாயத்தினருள் என் பிரதிநிதியாக இருக்கவும், (அவர்களை) சீர்திருத்தவும் செய்வீராக. மேலும் குழப்பவாதிகளின் வழியினைப் பின்பற்றாதிருப்பீராக என்றார்.
- நாம் (குறித்த இடத்தில்) குறித்த காலத்தில் மூஸா வந்து, அவருடைய இறைவன் அவருடன் பேசிய போது, அவர், 'என் இறைவா! நான் உன்னைப் பார்க்கும் பொருட்டு நீ (உன்னை) எனக்குக் காட்டுவாயாக என்று வேண்டினார். இதற்கு அவன் உம்மால் என்னை ஒரு போதும் காணவியலாது. ஆயினும் மலையின் பக்கம் பார்ப்பீராக. அது தன்னுடைய இடத்தில் நிலைத்திருந்தால், நீர் என்னைக் காண்பீர் என்று பதிலளித்தான். பின்னார் அவருடைய இறைவன் மலையின் மீது தானே தோற்றமளித்த போது, அதனை தவிடுபொடியாக்கி விட்டான். மேலும் மூஸா மயங்கி வீழ்ந்தார். பின்னர் அவருக்கு மயக்கம் தெளிந்த போது; (என் இறைவா!) நீ எல்லாக் குறைகளிலிருந்தும் தூய்மையானவன். நான் உன்னிடமே பணிகின்றேன். நான் (இக்காலத்திலுள்ள) நம்பிக்கை கொண்ட யாவரையும் விட முதன்மையானவனாயுள்ளேன் என்றார்.
- (இறைவன்) கூறினான்: மூஸாவே நான் என் தூதைக் கொண்டும், என் வசனத்தைக் கொண்டும் (இக்காலத்திலுள்ள) எல்லா மக்களுக்கும் மேலாக உம்மைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எனவே நான் உமக்கு வழங்கியதை வலுவாகப் பற்றிக் கொள்வீராக. மேலும் நன்றி செலுத்துவோரைச் சேர்ந்தவராய் விடுவீராக.
- நாம் அவருக்காக எல்லாவற்றையும் பற்றிய அறிவுரையையும், (அக்காலத்திற்குத்) தேவையான எல்லாவற்றிற்கும் விளக்கத்தையும் சில பலகைகளில் எழுதினோம். (பின்னர் நாம் அவரிடம் இவ்வாறு கூறினோம்): நீர் இக்கட்டளைகளைப் பலமாக பற்றிக் கொண்டு, உமது சமுதாயத்தினரும், இதிலுள்ள மிக்க நல்லவற்றைப் பின்பற்றுமாறு அவர்களுக்குப் போதிப்பீராக. விரைவில் நான் உங்களுக்கு தீயவர்களின் இருப்பிடத்தைக் காட்டுவேன்40.
- நியாயமின்றிப் பூமியில் அகங்காரம் கொள்பவர்களை, விரைவிலேயே நான் என் அடையாளங்களிலிருந்து அகற்றிவிடுவேன். மேலும் அவர்கள் எந்தவொரு அடையாளத்தைக் கண்ட போதிலும், அவற்றில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். அவர்கள் நேரான வழியைக் கண்டாலும் அதை ஒரு போதும் (தம்) வழியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் அவர்கள் தவறான வழியினைக் கண்டாலும் அதனைத் (தம்) வழியாக்கிக் கொள்வார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எம்முடைய அடையாளங்களைப் பொய்யாக்கி அவற்றைப் பொருட்படுத்தாமலே இருந்தனர்.
- எம்முடைய வசனங்களையும், மரணத்திற்குப்பின் உள்ள சந்திப்பினையும் பொய்ப்படுத்தியவர்களின் எல்லாச் செயல்களும் வீணாகி விட்டன. அவர்கள் தம்முடைய செயல்களுக்குரிய கூலியை மட்டுமே பெறுவார்கள். ரு17
- மூஸாவின் சமுதாயத்தினர் அவருக்குப் பிறகு41 தங்கள் நகைகளினால் கன்றுக்குட்டி ஒன்றினை உருவாக்கிக் கொண்டனர். அது உயிரற்ற உடலாக இருந்தது. அதிலிருந்து பொருளற்ற சப்தம் மட்டுமே வந்தது42. அது அவர்களிடம் பேசுவதுமில்லை, அவர்களுக்கு எந்த வழியினையும் காட்டுவதுமில்லை என்பதைக் கூட அவர்கள் (சிந்தித்துப்) பார்ப்பதில்லையா? அவர்கள் அதனை (வணங்கத் தக்கதாக) எடுத்துக் கொண்டனர். மேலும் அவர்கள் அநீதி இழைப்போராய் இருந்தனர்.
- மேலும் அவர்கள் தாம் நிச்சயமாக வழி தவறிவிட்டோம் என்பதை அறிந்து வெட்கங்கொண்டு, எங்கள் இறைவன் எங்களுக்குக் கருணை காட்டி எங்களை மன்னிக்கவில்லையாயின் நாங்கள் இழப்பிற்கு உரியோரைச் சேர்ந்தவர்களாய் விடுவோம் எனக் கூறினர்.
- மேலும் மூஸா தமது சமுதாயத்தினரிடம் கோபமும், வருத்தமும் கொண்டவராகத் திரும்பிய போது, அவர் எனக்குப் பிறகு எனது பிரதிநிதி என்ற நிலையில் நீங்கள் செய்தது மிகத் தீயதே. நீங்கள் உங்கள் இறைவனின் கட்டளைக்கு முன் அவசரப்பட்டு விட்டீர்களே எனக் கூறினர். மேலும் அவர் அப்பலகைகளைக் கீழே எறிந்து, தமது சகோதரனின் தலை முடியைப் பிடித்து அவரைத் தம் பக்கம் இழுத்தார். (இதற்கு) அவர் (ஹாரூன்), என் தாயின் மகனே! நிச்சயமாக சமுதாயத்தினர் என்னைப் பலவீனமானவன் எனக் கருதி என்னைக் கொன்று விடப் பார்த்தனர். எனவே நீர் பகைவர்களுக்கு என்னைப் பார்த்து நகைப்பதற்கான வாய்ப்பை அளிக்காதீர்43. என்னை அநீதி இழைப்பவர்களைச் சார்ந்தவனாகவும் ஆக்காதீர் என்றார்.
- (இதனைக் கேட்டு மூஸா), என் இறைவா! என்னையும் என் சகோதரனையும் மன்னித்து விடுவாயாக. எங்களிருவரையும் உன் கருணையில் நுழையச் செய்வாயாக. கருணை காட்டுவோர் எல்லாரையும் விட நீ மிக்க கருணை காட்டுபவனாவாய் என்று கூறினார். ரு18
- (இதற்கு அல்லாஹ் இவ்வாறு கூறினான்) கன்றுக்குட்டியினை (வணங்க) எடுத்துக் கொண்டவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்வில் இழிவும் ஏற்படும். பொய்யினைப் புனைந்து கூறுபவர்களுக்கு, இவ்வாறே நாம் கூலியை வழங்குகின்றோம்.
- தீய செயல்களைச் செய்து விட்டுப் பின்னர் (அவற்றிலிருந்து விலகிக்) கழிவிரக்கம் கொண்டு மேலும் நம்பிக்கை கொள்வார்களாயின், நிச்சயமாக உம் இறைவன் இதன் பின்னரும் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- பின்னர் மூஸாவின் கோபம் சிறிது தணிந்தபோது அவர் பலகைகளை எடுத்துக் கொண்டார். தங்கள் இறைவனுக்கு அஞ்சுவோருக்கு அவற்றிலுள்ள எழுத்தில் நேரான வழியும் கருணையும் இருந்தன.
- மூஸா தமது சமுதாயத்தினருள் எழுபது பேரை நாம் வாக்குறுதியளித்த இடத்திற்குக் கொண்டு வருவதற்க்காகத் தேர்ந்தெடுத்தார். பின்னர் அவர்களை நிலநடுக்கம் பிடித்துக் கொண்ட போது44 அவர் இவ்வாறு கூறினார்; என் இறைவா! நீ நாடியிருப்பின் அவர்களையும் என்னையும் முன்னரே அழித்திருப்பாய். எங்களைச் சார்ந்த சில அறிவீனர்களின் செயலுக்குத் தண்டனையாக நீ எங்களை அழிப்பாயா? இது உன்னுடைய சோதனையே அன்றி வேறில்லை. (சோதனைகளான) இதன் மூலம் நீ நாடுபவர்களை வழிதவறியவர்கள் (என்று) ஆக்கிக் கொள்கின்றாய். நீ நாடுபவர்களுக்கு நேர் வழியினை வழங்குகிறாய். நீ எங்கள் உதவியாளனாக இருக்கிறாய். எனவே எங்களை மன்னித்து எங்களுக்கு கருணை காட்டுவாயாக. மன்னிப்பவர்களுள் எல்லாரையும் விட நீ சிறந்தவனாவாய்.
- நீ எங்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் நன்மையினை எழுதுவாயாக. நாங்கள் உன்னிடமே வந்து விட்டோம். (இதற்கு அல்லாஹ்) என் தண்டனையை நான் விரும்பியவருக்கு (அதாவது தண்டனைக்குரியவருக்கு)க் கொடுக்கின்றேன். ஆனால் என் கருணை45 எல்லாவற்றையும் சூழ்ந்துள்ளது. எனவே இறையச்சத்தை மேற்கொண்டு ஸகாத் கொடுப்போருக்கும், மேலும் நாம் வசனங்கள் மீது நம்பிக்கை கொள்வோருக்கும் நான் அதனைக் கட்டாயம் எழுதுவேன்46 எனக் கூறினான்.
- அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், சுவிசேஷத்திலும் எழுதப்பட்டுக் காணப்படுகின்ற எழுத்தறிவற்ற நபியாகிய இத்தூதரைப்47 பின்பற்றுவோருக்கு, நன்மை செய்யுமாறு அவர் கட்டளையிடவும், தீமையிலிருந்து அவர்களைத் தடுக்கவும் செய்கின்றார். மேலும் நல்லவற்றை அவர்களுக்கு அனுமதிக்கவும் தீயவற்றை அவர்களுக்கு விலக்கவும் செய்கின்றார். மேலும் அவர்களின் (மேலிருந்த) சுமையையும், அவர்களின் கழுத்துக்களில் போடப்பட்டிருந்த விலங்குகளையும் அவர்களை விட்டு அகற்றுகின்றார். எனவே அவரிடத்து நம்பிக்கை கொண்டு அவருக்கு வலிமையளித்து அவருக்கு உதவி செய்து அவருடன் இறக்கப்பட்டுள்ள ஒளியினைப் பின்பற்றிச் செல்பவர்களே வெற்றிற்குரியோராவர். ரு19
- நீர் கூறுவீராக: மக்களே! நிச்சயமாக நான் உங்கள் எல்லாருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன். வானங்கள் பூமி ஆகியவற்றில் ஆட்சி அவனுக்கே உரியது. அவனையன்றி வணக்கத்திற்குரியது எதுவுமில்லை. அவன் உயிரை வழங்கவும், மரணத்தை அளிக்கவும் செய்கின்றான். எனவே நீங்கள் அல்லாஹ்விடத்து நம்பிக்கை கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்விடத்தும் அவனது வசனங்களிடத்தும் நம்பிக்கை கொண்டுள்ள , எழுத்தறிவற்ற நபியாகிய அவனுடைய தூதரிடத்தும் (நம்பிக்கை கொள்ளுங்கள்). மேலும் நீங்கள் நேர்வழி பெரும் பொருட்டு அவரையே பின்பற்றுங்கள்.
- மூஸாவின் சமுதாதிலுள்ள ஒரு பிரிவினர் உண்மையைக் கொண்டு (மக்களுக்குப்) போதிக்கவும், நீதியை நிலை நாட்டவும் செய்கின்றனர்.
- நாம் அவர்களை பன்னிரெண்டு கோத்திரங்களாகப் பிரித்தோம். அவரிடம் அவருடைய சமுதாயத்தினர் தண்ணீர் வேண்டிய போது, நீர் உமது தடியினால் (குறிப்பிட்டதொரு) கல்லின் மீது அடிப்பீராக என்று வஹியின் மூலம் நாம் மூஸாவுக்கு அறிவித்தோம். எனவே (அவர் அவ்வாறு செய்த போது), அதிலிருந்து பன்னிரெண்டு ஊற்றுகள் பீறிட்டு வந்தன. ஒவ்வொரு கோத்திரத்தினரும் தத்தமது நீரருந்துமிடத்தை தெரிந்து கொண்டனர். மேலும் மேகங்களை நாம் அவருக்கு மேலே நிழலிடச் செய்தோம். மேலும் நாம் அவர்களுக்காக 'மன்" எனும் தானியத்தையும், காடைகளையும் இறக்கினோம். (பின்னர் அவர்களிடம்) நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தூய்மையான பொருள்களை உண்ணுங்கள் (எனக் கூறினோம்) மேலும் அவர்கள் (கட்டளைக்கு மாறு செய்து) எங்களுக்கு அநீதியிழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டனர்.
- மேலும் அவர்களிடம் (கீழ்வருமாறு) கூறப்பட்ட நேரத்தை (நினைத்துப் பாருங்கள்:) நீங்கள் இந்த ஊரில் வாழுங்கள். இதில் எங்கிருந்து வேண்டுமாயின் உண்ணுங்கள். மேலும் (இறைவா! எங்கள்) சுமையைக் குறைப்பாயாக எனக் கூறுங்கள். மேலும் அந்த வாயிலில் கட்டுப்பட்டவர்களாய் நுழையுங்கள். (அப்போது) நாம் உங்களுக்கு உங்கள் குற்றங்களை மன்னித்து விடுவோம். முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர்களுக்கு இன்னும் மிகுதியாக நாம் வழங்குவோம்.
- ஆனால், அவர்களில் அநீதி இழைத்தவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட சொல்லை, வேறொன்றால்48 மாற்றிக் கொண்டனர். எனவே அவர்கள் அநீழி இழைத்ததன் காரணத்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்து தண்டனையை இறக்கினோம். ரு20
- (தூதரே) அவர்களிடம் கடலருகில் அமைந்திருந்த நகரத்தைப் பற்றிக் கேளுங்கள். அவர்கள் 'சபத்' கட்டளையை மீறி நடந்தனர். அவர்களுடைய சபத் நாளில் அவர்களின் மீன்கள் கூட்டங் கூட்டமாய் (நீர் மட்டத்தில்) வந்தன49. சபத் கடைபிடிக்காத நாளில், அவை வரவில்லை. இவ்வாறே அவர்களின் கட்டுப்பாட்டின்மையினால் நாம் அவர்களைச் சோதித்தோம்.
- அவர்களுள் ஒரு பிரிவினர் (மற்றொரு பிரிவினரிடம்) அல்லாஹ் அழித்துவிட அல்லது கடினமான தண்டனை கொடுக்கவிருக்கும் சமுதாயத்தினருக்கு, நீங்கள் என் அறிவுரை கூறுகின்றீர்கள் எனக் கூறினர். இதற்கு அவர்கள், உங்கள் இறைவனிடமிருந்து (நாங்கள் அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டோம் என்று) கூறி தப்பித்துக் கொள்ளவும், அவர்கள் இறைவனுக்கு அஞ்சவுமே என்று பதிலளித்தனர்.
- அவர்களுக்குக் கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறுத்துவிட்ட போது, தீமையைத் தடுத்துக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம். அநீதி இழைத்துக் கொண்டிருந்தவர்களை மிகக் கடினமான தண்டனைக்கு ஆளாக்கினோம். ஏனெனில் அவர்கள் தீய செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.
- பின்னர் அவர்கள் தடுக்கப்பட்டவற்றிலிருந்து விலகிக் கொள்வதற்குப் பதிலாக, அவற்றில் அவர்கள் மேலும் முன்னேறத் தொடங்கிய போது நாம் அவர்களிடம், நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகிவிடுங்கள் என்றோம்50.
- அவர்கள் மீது கடினமான தண்டனையைக் கொடுத்துக் கொண்டிருப்பவர்களையே உம் இறைவன் இறுதிநாள் வரை நிச்சயமாக எழுப்புவான் என்று அறிவித்த நேரத்தை(யும் நினைத்துப் பாருங்கள்). நிச்சயமாக உமது இறைவன் விரைவாகத் தண்டனையளிப்பவன் ஆவான். மேலும் நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- மேலும் நாம் அவர்களைப் பூமியில் பல்வேறு சமுதாயங்களாகப் பிரித்தோம். அவர்களுள் சிலர் நல்லவர்களாகவும்51 மற்றும் சிலர் தீயவர்களாகவும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் (நன்மையின் பக்கம்) திரும்பும் பொருட்டு, நாம் அவர்களை நல்லவற்றாலும் தீயவற்றாலும் சோதித்தோம்.
- ஆனால் அவர்களுக்குப் பின்னர் (தீய) தலைமுறை ஒன்று வந்து வேதத்திற்கு வாரிசு ஆயினர். அவர்கள் இந்த அற்ப உலகின் நிலையற்ற பொருள்களை எடுத்துக் கொண்டு, நிச்சயமாக நாம் மன்னிக்கப்படுவோம் எனக் கூறுகின்றனர். பின்னர் அவர்களிடம் அது போன்றே (இன்னும்) பொருள் வந்துவிடின் அதனையும் எடுத்துக் கொள்வர். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து உண்மையன்றி வேறெதுவும் பேசமாட்டார்கள் என அவர்களிடம் வேத உடன்படிக்கை பெற்றுக் கொள்ளப்பட்டதில்லையா? மேலும் அவர்கள் அந்த வேதத்திலுள்ளதைப் படித்துள்ளனர். மேலும் மறுமை வீடு இறையச்சமுடையோருக்குச் சிறந்தது. எனவே நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்களா?
- வேதத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு தொழுகையினையும் நிறைவேற்றித் தங்களை சீர்திருத்திக் கொள்பவர்களின் நற்பலனை நாம் வீணாக்க மாட்டோம்.
- மேலும் அவர்களுக்கு மேலே மலையை52 ஒரு நிழற்குடைபோல் நாம் குனியச் செய்தபோது அவர்கள் எண்ணினர். (அப்போது நாம் அவர்களிடம்) நீங்கள் இறையச்சமுடையோராகும் பொருட்டு நாம் உங்களுக்கு வழங்கியதை உறுதியாகப் பற்றிக் கொண்டு அதிலுள்ளதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் (என்றோம்). ரு21
- உமது இறைவன் ஆதமின் மக்களுடைய முதுகளிலிருந்து அவர்களின் சந்ததிகளைத் தோற்றுவித்து, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி நான் உங்கள் இறைவனல்லவா என்ற (கேள்வியினைக் கேட்ட) போது, அவர்கள் ஆம்! (இதற்கு நாம் சாட்சி கூறுகின்றோம் என்றனர். நாங்கள் இதை (போதனை) ப் பற்றி அறவே அறியாதவர்களாயிருந்தோம் என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காகவே (நாம் அவ்வாறு செய்தோம்).
- அல்லது முன்னர் எங்கள் மூதாதையர்களே இணைவைத்தனர். அவர்களுக்குப் பின்னர், நாங்கள் பலவீனமான சந்ததியினராக இருந்தோம். பொய்யர்களாக இருந்தவர்களின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடுவாயா என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (அவ்வாறு செய்தோம்).
- இவ்வாறே நாம் வசனங்களை மிகத் தெளிவாக விளக்குகின்றோம். அவர்கள்53 தங்கள் தவறுகளிலிருந்து திரும்பி விடுவார்களென்று(ம் எதிர் பார்க்கின்றோம்).
- நாம் எம்முடைய அடையாளங்களை வழங்கிய ஒருவருடைய நிலையை நீர் அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! பின்னர் அவர் அவற்றிலிருந்து நழுவித் தனித்துவிட்டார்.54 இதனால் ஷைத்தான் அவரைப் பின்பற்றிச் சென்றான். ஆகவே அவர் வழிதவறியவர்களைச் சேர்ந்தவராகிவிட்டார்.
- நாம் விரும்பியிருப்பின் அவற்றின் (அடையாளங்கள்) மூலம் நாம் அவரை உயர்த்தியிருப்போம். ஆனால் அவர் பூமியின் பக்கம் சாய்ந்தது தமது (தீய) விருப்பங்களைப் பின்பற்றிச் சென்றுவிட்டார். எனவே அவருடைய நிலை ஒரு நாயின் நிலையை போன்றது. அதனை நீர் தாக்கினாலும் அது நாக்கைத் தொங்கவிட்டு மூச்சிரைத்துக் கொண்டிருக்கும். இதுவே எம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்தும் சமுதாயத்தினரின் நிலையாகும்.55 எனவே அவர்கள் சிந்திக்கும் பொருட்டு நீர் இந்த வரலாற்றை அவர்களிடம் எடுத்தியம்புவீராக.
- எம் அடையாளங்களைப் பொய்ப்படுத்திய சமுதாயத்தினரின் நிலை மிகக் கெட்டது. மேலும அவர்கள் தமக்குத்தாமே தீங்கிழைக்கின்றனர்.
- அல்லாஹ் வழிகாட்டியவனே நேர்வழி பெற்றவன். எவர்களை அவன் வழிகேட்டில் விட்டுவிட்டானோ, அவர்களே இழப்பிற்குரியோர் ஆவர்.
- நிச்சயமாக நாம் படைத்த ஜின்கள் மற்றும் மனிதர்களில் பெரும்பாலனவர்களின் முடிவு நரகமாயிற்று. (ஏனெனில்) அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தும் அவற்றால் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. மேலும் அவர்களுக்குக் கண்கள் இருந்தும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை. மேலும் அவர்களுக்கு காதுகள் இருந்தும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள் ஆவர்; இல்லை, அவர்கள் அவற்றை விடவும் மிகக் கெட்டவர்கள். உன்மயில் அவர்கள் முற்றிலும் கவனமற்றவர்களே ஆவர்.
- மேலும் முழுமையான் நற்பண்புகள் (எல்லாம்) அல்லாஹ்வுக்கே உரியன. எனவே நீங்கள் அவற்றைக் கொண்டு அவனிடம் வேண்டுங்கள். அவனுடைய பண்புகளைக் குறித்து தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு அவர்களின் செயல்களுக்குரிய கூலி கொடுக்கப்படும்.
- மேலும் நாம் படைத்தவர்களுள், உண்மையைக் கொண்டு (மக்களை) வழி நடத்துபவரும், மேலும் அதன் மூலம் நீதி வழங்குபவருமான ஒரு சமுதாயத்தினர் உள்ளனர். ரு22
- எம்முடைய அடையாளங்களைப் பொய்ப்படுத்துபவர்களை அவர்கள் உணர்ந்து கொள்ளா விதத்தில் படிப்படியாக நாம் (அழிவின் பக்கம்) இழுத்துக் கொண்டு வருவோம்.
- நான் அவர்களுக்கு(த் தற்போது) காலக்கெடு அளித்திருக்கிறேன். என் திட்டம் நிச்சயமாக மிக்க உறுதி வாய்ந்தது.
- அவர்களின் தோழர் (முஹம்மது (ஸல்) அவர்களு)க்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் மிகத் தெளிவான ஓர் எச்சரிக்கையாளரே அன்றி வேறில்லை. (இதை) அவர்கள் சிந்திப்பதில்லையா?
- அவர்கள் வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சியையும், அல்லாஹ் படைத்த எல்லாவற்றையும் பார்ப்பதில்லையா? மேலும் ஒரு வேளை தங்களின் அழிவுகாலம் நெருங்கிவிட்டதோ என்பதையும் காண்பதில்லையா? எனவே இதன் பின்னர் வேறெந்தச் செய்தியில் அவர்கள் நம்பிக்கை கொள்வர்?
- வழிதவறியவன் என்று அல்லாஹ் முடிவு செய்தவனுக்கு வழி காட்டுபவன் எவனுமில்லை. அவர்களைத் தங்களின் வரம்பு மீறலில் திரியுமாறு அவன் விட்டு விடுகின்றான்.
- அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைக் (கியாமத்தை) குறித்து அது எப்போது வருமென்று கேட்கின்றனர். நீர் கூறுவீராக! அதனைப் பற்றிய அறிவு என் இறைவனிடமே உள்ளது. அவனையன்றி அதனை அதற்குரிய காலத்தில் வெளிப்படுத்த எவராலும் முடியாது. அது வானங்களிலும் பூமியிலும் பாரமானதாக இருக்கும்.56 (மேலும்) அது உங்களிடம் திடீரென்று தான் வரும். அது குறித்து நீர் அதனை நன்கறிந்திருப்பதைப் போன்று57 அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறுவீராக: அதனைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை.
- நீர் கூறுவீராக; அல்லாஹ் நாடுவதன்றி, எனக்காக எந்த தீமையையோ நன்மையையோ செய்ய எனக்கு ஆற்றல் இல்லை. நான் மறைவானதை அறிந்திருந்தால், நன்மைகளுள் அதிகமானவற்றை (எனக்காக) சேர்த்திருப்பேன். ஒருபோதும் எனக்கு எந்த துன்பமும் ஏற்பட்டிருக்காது. ஆனால் நாம் நம்பிக்கை கொண்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுபவனும் நற்செய்தி வழங்குபவனுமாவேன். ரு23
- அவனே உங்களை ஓரினத்திலிருந்து படைத்தான். அதிலிருந்தே அதன் இணையையும் அவளிடம் நிம்மதி பெறுவதற்காக உருவாக்கினான். எனவே அவன் அவளை மூடிக்கொள்ளும்போது, அவள் லேசான சுமையைச் சுமந்து கொண்டாள். பின்னர் அவள் அதனுடனே நடமாடுகிறாள். பின்னர் அவள் கனமாகிவிடும்போது அவ்விருவரும் தங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம், நீ எங்களுக்கு நலமிக்க குழந்தையை வழங்கினால் நாங்கள் நன்றி செலுத்துவோராகிவிடுவோம் என்று வேண்டுகின்றனர்.
- ஆனால் அவன் அவ்விருவருக்கும் நலமிகு குழந்தையை வழங்கும்போது அவர்களுக்கு வழங்கிய குழந்தையைக் குறித்து இறைவனுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர்கள் இணைவைப்பதை விட்டும் அல்லாஹ் மிக்க உயர்ந்தவனாவான்.
- அவர்களே படைக்கப்பட்டவர்களாயிருக்கும் நிலையில், எதையும் படைக்காதவற்றை அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்குகின்றனரா?
- அவர்களால் இவர்களுக்கு (இணைவைப்பவர்களுக்கு) எவ்வுதவியும் செய்ய முடியாது. மேலும் அவர்களால் தமக்குத்தாமே எவ்வுதவியும் செய்ய முடியாது.
- நீங்கள் அவர்களை நேர்வழியின்பால் அழைத்தால், அவர்கள் உங்களைப் பின்பற்றமாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது மௌனமாக இருப்பதும் உங்களுக்குச் சமமானதே.
- அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே. எனவே நீங்கள் அவர்களை அழைத்துக் கொண்டிருங்கள். நீங்கள் உண்மையாளர்களாயின், அவர்கள் உங்கள் அழைப்பிற்குப்பதில் அளிக்கட்டும்.
- நடக்கும் கால்கள் அவர்களுக்கு உள்ளனவா? பிடிக்கும் கைகள் அவர்களுக்கு இருக்கின்றனவா? காணும் கண்கள் அவர்களுக்கு உள்ளனவா? கேட்கும் காதுகள் அவர்களுக்கு இருக்கின்றனவா? நீர் அவர்களிடம் கூறுவீராக! நீங்கள் உங்கள் கூட்டாளிகளை அழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் எனக்கு எதிராக திட்டம் தீட்டுங்கள். எனக்குக் காலக்கெடு எதுவும் தர வேண்டாம்.
- நிச்சயமாக இந்த முழுமை பெற்ற வேதத்தை இறக்கிய அல்லாஹ்வே என் பாதுகாவலன். மேலும் அவன் நல்லவர்களுக்கு உதவி செய்கின்றான்.
- அவனையன்றி நீங்கள் அழைப்பவர்களால், உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. அவர்களால் தங்களுக்கும் எவ்வுதவியும் செய்ய முடியாது.
- நீங்கள் அவர்களை நேர்வழியின்பால் அழைத்தால், அவர்களால் (அதனைச்) செவியேற்க முடியாது. அவர்கள் உம்மைப்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் போன்று நீர் அவர்களைக் காண்கிறீர். ஆனால் அவர்களோ பார்ப்பதில்லை.
- (நபியே! எப்போதும்) மன்னிப்பைக் கடைபிடிப்பீராக இயல்பிற்கேற்ற செயலைப் போதிப்பீராக. அறிவற்றவர்களை விட்டு முகந்திருப்புவீராக.
- ஷைத்தானிடமிருந்து ஏதேனும் தீய தூண்டுதல் உம்மைத் தாக்கினால், நீர் அல்லாஹ்விடம் அடைக்கலம் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- இறையச்சமுடையோருக்கு ஷைத்தானிடமிருந்து ஏதேனும் ஒரு தீய எண்ணம் ஏற்படும்பொழுது அவர்கள் எச்சரிக்கை அடைகின்றனர். மேலும் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டவர்களாய் விழிப்படைகின்றனர். (அவர்கள் நேர்வழி அடைந்து விடுவார்கள்)
- (நிராகரிப்பவர்களாகிய) அவர்களின் சகோதரர்கள் அவர்களைத் தவறான வழியின் பக்கம் இழுக்கின்றனர். பின்னர் அவர்கள் (தம் முயற்சிகளை) எவ்வகையிலும் தளர்த்திக் கொள்வதில்லை.
- நீர் அவர்களிடம் தெளிவான ஏதாவதொரு (புதிய) அடையாளத்தைக் கொண்டு வராதிருக்கும்போது, நீர் அதை ஏன் இழுத்துக் கொண்டு வரவில்லை என்று அவர்கள் வினவுகின்றனர். நீர் கூறுவீராக: என் இறைவனிடமிருந்து எனக்கு அருளப்படுகின்ற இறையறிவிப்பையே நான் பின்பற்றுகின்றேன். இது உங்கள் இறைவனிடமிருந்துள்ள தெளிவான ஒளியாகும். இது நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும் கருணையாகவும் இருக்கின்றது.
- (மக்களே) குர்ஆன் ஓதப்படும்போது அதனைக் காது கொடுத்துக் கேளுங்கள். மேலும் மௌனமாக இருங்கள். இதனால் நீங்கள் கருணைக் காட்டப்படுவீர்கள்.
- நீர் உம்முடைய இறைவனை பணிவுடனும், அச்சத்துடனும் உம்முடைய உள்ளத்தி நினைத்துக் கொண்டிருப்பீராக. மெதுவான குரலில் காலையிலும் மாலை நேரங்களிலும்58 (அவ்வாறே செய்து கொண்டிருப்பீராக). மேலும் ஒருபோதும் கவனமற்றவர்களைச் சார்ந்தவராக இருக்க வேண்டாம்.
- நிச்சயமாக உம்முடைய இறைவனுக்குக் நெருக்கமானவரக்கள் அவனை வணங்குவது குறித்து பெருமையடித்துக் கொள்வதில்லை. அவர்கள் எப்போதும் அவனது தூய்மையை எடுத்துரைத்தும் அவனுக்குச் சிரம் பணிந்தும் இருப்பார்கள். ரு24