19- மர்யம்

அதிகாரம்: மர்யம்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 99

பிரிவுகள்: 6

  1. அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. காஃப், ஹா, யா, அய்ன், ஸாது1.
  3. (இந்த அதிகாரம்) உம் இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவுக்குச் செய்த கருணை பற்றிய விளக்கமாகும்.
  4. அவர் தம் இறைவனை மெல்லிய குரலில் அழைத்தபோது;
  5. "என் இறைவா! என் எலும்புகளெல்லாம் பலவீனமடைந்து விட்டன. (என்) தலையோ முதுமையினால் (நரைத்து) மின்னுகின்றது. என் இறைவா, உன்னிடம் நான் செய்த எந்தப் பிரார்த்தனையும் ஒருபோதும் வீணாகியதில்லை", என்று கூறினார். 
  6. நிச்சயமாக நான் என(து மரணத்து)க்குப் பின்னர் என் உறவினர்(கள் நடந்து கொள்ளும் முறை)களுக்கு அஞ்சுகிறேன். என் மனைவி மலடியாக இருக்கின்றாள். எனவே நீ எனக்கு உன்னிடமிருந்து ஒரு நண்பரை (அதாவது மகனை ) வழங்குவாயாக.
  7. அவர் எனக்கு வாரிசாகவும், யாகூபின் குடும்பத்தினருக்கு வாரிசாகவும் விளங்க வேண்டும். என் இறைவா! நீ அவரை (உனக்கு) விருப்பமானவராக ஆக்குவாயாக.
  8. (இதற்கு அல்லாஹ் இவ்வாறு கூறினான்:) ஸகரிய்யாவே! நாம் உமக்கு ஒரு மகனைக் குறித்து நற்செய்தியினை வழங்குகின்றோம். (அவர் வாலிப வயதையடைவார்). அவர் பெயர் யஹ்யாவாகும். நாம் இதற்கு முன்னர் எவருக்கும் இந்தப் பெயரைச் சூட்டவில்லை.
  9. அவர் கூறினார்: என் இறைவா! என் மனைவி மலடியாகவும், நான் முதுமையின் இறுதி எல்லையை அடைந்தவனாகவும் இருக்கின்ற நிலையில் எனக்கு எவ்வாறு மகன் பிறக்க முடியும்?
  10. (வானவர்) கூறினார்: அவ்வாறே(நிகழும்). உமது இறைவன், இது எனக்கு மிக எளிதானதே என்றும், நிச்சயமாக நான் இதற்கு முன்னர் உம்மை ஒன்றும் அற்ற நிலையிலிருந்து படைத்தேன் என்றும் கூறினான்.
  11. "என் இறைவா! எனக்கு ஏதேனுமொரு கட்டளையிடுவாயாக" என்று அவர் கூறினார். "நீர் மக்களிடம் தொடர்ந்து மூன்று இரவு(களும், மூன்று பகல்களும்) பேசாமல் இருக்க வேண்டும்" என்பதே உமக்குரிய கட்டளை என்று அவன் கூறினான்.
  12. இதன் பின்னர் அவர் தமது (தொழும்) இடத்திலிருந்து வெளியேறித் தம் சமுதாயத்தினரிடம் சென்று பகலும், இரவும்(இறைத்) தூய்மையைப் புகழ்ந்து கொண்டிருங்கள் என்று சைகை மூலம் அவர்களுக்குக் கூறினார்.
  13. யஹ்யாவே! நீர் (இறை) வேதத்தை உறுதியாகப் பற்றிக் கொள்க(என்று கூறி) நாம் அவருக்குச் சிறு பிராயத்திலேயே ஞானத்தையும் வழங்கினோம்.
  14. மேலும் எம்மிடமிருந்து இரக்கமும், தூய்மையும் (வழங்கினோம்). மேலும் அவர் இறையச்சமுடையவராகவும் இருந்தார்.
  15. அவர் தம் பெற்றோரிடம் நல்ல முறையில் நடந்து கொண்டார். ஆணவங் கொண்டவராகவும், அடங்காதவராகவும் அவர் இருக்கவில்லை.
  16. அவர் பிறந்த நாளிலும், அவர் இறந்த நாளிலும், அவரிடத்துச் சாந்தி நிலவியது. அவர்(மீண்டும்) உயிர் பெற்றெழும் நாளிலும் (நிலவும்)2. ரு1
  17. மர்யம் குறித்து (இந்த) வேதத்தில் கூறப்பட்டிருப்பதனை விளக்குவீராக. (குறிப்பாக) அவர் தமது குடும்பத்தினரிடமிருந்து கிழக்கிலுள்ள (ஓர்) இடத்திற்குச் சென்றபோது,
  18. (தமக்கும் தம் குடும்பத்தினர்களாகிய) அவர்களுக்கு(ம்) இடையே திரையிட்டு (அதாவது அவர்களுடனுள்ள தொடர்பைத் துண்டித்துக் கொண்டு தம்மைத் தாமே மறைத்து) க் கொண்டார். அப்போது நமது வசனத்தைக் கொண்டு செல்லும் வானவரை நாம் அவரிடம் அனுப்பினோம். அவர் முழுமையான ஒரு மனிதரின் வடிவத்தில் அவர் முன் தோன்றினார்.
  19. (அதற்கு மர்யம்) நீர் அவனுக்கு அஞ்சுகிறீர் என்றால் உம்மிடமிருந்து அருளாள(னான  இறைவ)னிடம் நிச்சயமாக நான் அடைக்கலம் தேடுகிறேன் என்றார்.
  20. (அதற்கு அவர்) நான் உமக்கு தூய ஒரு மகனை(ப் பற்றிய நற்செய்தி) வழங்குவதற்காக (வந்துள்ள) உமது இறைவனின் தூதரே ஆவேன் என்று கூறினார்.
  21. (மர்யம்) கூறினார்: இதுவரை ஆடவர் எவரும் என்னைத் தொடாதிருக்கும் நிலையிலும், நான் ஒரு போதும் தீய நடத்தையில் ஈடுபடாதவளாக இருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்?
  22. (வானவர்) கூறினார்: அவ்வாறே(நிகழும்). உமது இறைவன் கூறுகின்றான்: இது எனக்கு எளிதேயாகும். மேலும் நாம் அவரை மக்களுக்கு ஓர் அடையாளமாகவும், எம்மிடமிருந்து கருணையாகவும் ஆக்குவோம்3. இது (ஏற்கனவே) விதிக்கப்பட்ட ஒன்றாகும்.
  23. மர்யம் (தமது வயிற்றில்) அ(க் குழந்)தை(யை)ச் சுமந்தார். பின்னர் அத்துடன் தொலைவிலுள்ள ஓர் இடத்திற்குச் சென்று விட்டார்.
  24. பின்னர் (அவர் அங்கு சென்ற போது அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வலி அவரை ஒரு பேரீச்ச மரத்தடியில் கொண்டு போய்ச் சேர்த்தது. (அப்போது) அந்தோ! நான் இதற்கு முன்னரே மரணமடைந்து, நான் முற்றிலும் மறக்கப்பட்ட ஒன்றாக ஆகியிருக்க வேண்டுமே என்று அவர் கூறினார்.
  25. அப்போது (வானவராகிய) அவர் கீழ்ப் புறத்திலிருந்து அழைத்து கூறினார், கவலைப்படாதீர். உம்முடைய இறைவன் உமக்குக் கீழ்ப்புறத்தில் ஒரு நீரூற்றை ஓடச் செய்துள்ளான். (அங்கு சென்று உம்மையும், உம்முடைய குழந்தையையும் தூய்மைப்படுத்திக் கொள்வீராக)4.
  26. (உமக்குப் பக்கத்திலுள்ள) பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உமது பக்கமாகக் குலுக்குவீராக. அது உம்மீது புத்தம் புதிய பழங்களை உதிர்க்கும்.
  27. எனவே நீர் (அவற்றை) உண்டு, (நீரூற்றிலிருந்து நீரைப்) பருகி (நீரும் நீராடி, குழந்தையையும் நீராட்டி) உம்முடைய கண்களைக் குளிர்ச்சியாக்கிக் கொள்வீராக. பிறகு (குறிப்பிட்ட இக் காலத்தில்) நீர் ஆடவர் எவரைக் கண்டாலும், அளவற்ற அருளாள(னாகிய இறைவ)னுக்காக நான் (ஒரு) நோன்பை நேர்ந்திருக்கின்றேன். எனவே இன்று நான் எவருடனும் பேச மாட்டேன் என்று நீர் கூறுவீராக5.
  28. இதன் பின்னர் அவர் (மர்யம்) அவரை (ஈஸாவை) வாகனத்தில் அமர்த்தி அவரை தம்முடைய சமுதாயத்தினரிடம் கொண்டு வந்தார்6. (அப்போது) அவர்கள் இவ்வாறு கூறினர்: மர்யமே! நீர் மிகவும் தீய செயலைச் செய்துள்ளீர்;
  29. ஹாரூனின் சகோதரியே!7 உம்முடைய தந்தையார் தீயவராக இருக்கவில்லை. உம்முடைய தாயாரும் கெட்ட நடத்தையுள்ளவராக இருக்கவில்லை.
  30. அப்போது அவர் அ(ந்)த(க் குழந்தையி) னைச் சுட்டிக் காட்டினார். அதற்கு அவர்கள் தொட்டில் குழந்தையுடன் நாங்கள் எவ்வாறு பேசுவோம்? என்றனர்.
  31. (ஈஸா) கூறினார்: நான் அல்லாஹ்வின் அடியான். அவன் எனக்கு வேதத்தை வழங்கி, என்னை நபியாக ஆக்கியுள்ளான்.
  32. நான் எங்கிருந்தாலும் அவன் என்னை அருள் நிறைந்த (ஒரு)வனாக ஆக்கியுள்ளான். நான் உயிருடனிருக்கும் வரை தொழுகையையும், ஸக்காத்தையும் அவன் எனக்கு கட்டாயக் கடமையாக்கியுள்ளான்.
  33. மேலும் என் தாயாருடன் மிக்க நல்ல முறையில் நடந்து கொள்பவனாக என்னை ஆக்கியுள்ளான். என்னை ஆணவம் கொண்டவனாகவும், இரக்கமற்றவனாகவும் ஆக்கவில்லை.
  34. நான் பிறந்த நாளிலும் எனக்குச் சாந்தி கிடைத்தது. நான் மரணமடையும் நாளிலும், எனக்கு உயிரளித்து மீண்டும் நான் எழுப்பப்படும் நாளிலும் (எனக்கு சாந்தி கிடைக்கும்).
  35. இதுவே மர்யமுடைய மகன் ஈஸா(பற்றிய உண்மையான நிலை). அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளதை பற்றிய உண்மையான விஷயம் (இதுவே).
  36. ஒரு மகனை உருவாக்கிக் கொள்வதென்பது அல்லாஹ்(வுடைய உயர் தகுதி)க்கு பொருத்தமானதன்று. அவன் தூய்மையானவன். அவன் ஒன்றைக் குறித்து (ஆக வேண்டுமென்று) முடிவெடுத்தால் 'ஆகுக' என்றே கூறுகிறான். அது ஆகி விடுகின்றது.
  37. (ஈஸா கூறினார்): நிச்சயமாக என் இறைவனும், உங்கள் இறைவனும் அல்லாஹ்வே. ஆகவே அவனை (மட்டும்) வணங்குங்கள். இது(வே) நேரான வழியாகும்.
  38. ஆனால் பல்வேறு பிரிவினர்கள் தங்களுக்குள் கருத்து வேற்றுமை கொண்டனர். எனவே, எவர்கள் ஒரு மாபெரும் நாளைச் சந்திக்கவிருப்பதை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு அழிவேயாகும்.
  39. அவர்கள் எம்மிடம் வரும் நாளில் அவர்களது கேள்விப்புலனும், பார்வையும் மிகக் கூர்மையாகி விடும். எனினும் இன்று அந்த அநீதியிழைப்பவர்கள் மிகவும் பயங்கரமான தவறான வழியில் இருக்கின்றனர்.
  40. துயர(ம் தரும் மறுமை) நாளைப் பற்றி நீர் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிப்பீராக. அப்போது பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்பட்டுவிடும். ஆனால் (இப்பொழுது) அவர்கள் கவனமற்றவர்களாகவும், நம்பிக்கை கொள்ளாதவராகவும் இருக்கின்றனர்.
  41. நிச்சயமாக நாம் இப் பூமிக்கும், இதில் வாழ்ந்து வருபவர்களுக்கும் வாரிசாவோம். எல்லோரும் எம் பக்கமே திரும்பவும் கொண்டு வரப்படுவார்கள். ரு2
  42. (இவ்)வேதத்தில் (குறிப்பிட்டுள்ளபடி) இப்ராஹீமைப் பற்றி எடுத்துரைப்பீராக. நிச்சயமாக அவர் மிக்க உண்மையான (வராகவும்) நபியாக (வும்) இருந்தார்.
  43. அவர் தமது தந்தையிடம் கூறிய நேரத்தை(யும் நினைத்துப் பாரும்). என் தந்தையே! எதனையும் கேட்காததும், பார்க்காததும், எத்  துன்பத்தையும் அகற்ற ஆற்றல் பெறாததுமானதை நீர் ஏன் வணங்குகின்றீர்?
  44. என் தந்தையே! உமக்குக் கிடைக்காத (சிறப்பானதொரு) ஞானம் எனக்கு வழங்கப் பெற்றுள்ளது. எனவே (நான் உமது மகனேயாயினும்), நீர் என்னைப் பின்பற்றுக. நான் உமக்கு நேரான வழியினைக் காட்டுகின்றேன்.
  45. என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர். நிச்சயமாக ஷைத்தான், அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னுக்கு மாறு செய்பவனாவான்.
  46. என் தந்தையே! அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னிடமிருந்து உமக்குத் தண்டனை கிடைக்குமென நான் அஞ்சுகிறேன். இதனால் நீர் ஷைத்தானுக்கு நண்பராகி விடுவீர்.
  47. (இதற்கு இப்ராஹீமின் தந்தை) கூறினார்: இப்ராஹீமே! நீர் என் கடவுளரை வெறுக்கிறீரா? நீர் விலகிக் கொள்ளவில்லையாயின் , நிச்சயமாக நான் உம்மைக் கல்லெறிந்து கொன்று விடுவேன். நீர் சிறிது காலம் வரை என்னைத் தனியே விட்டு விடும்.
  48. (இதற்கு இப்ராஹீம்) கூறினார்: உமக்கு சாந்தி உண்டாவதாக. நான் என் இறைவனிடம் உமக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் என் மீது இரக்கம் காட்டுபவனாவான்.
  49. (தந்தையே!) நான் உங்களையும், அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவை எல்லாவற்றையும் விட்டு விலகுகிறேன். மேலும் என் இறைவனை மட்டுமே அழைப்பேன். நிச்சயமாக நான் என் இறைவனிடம் செய்யும் வேண்டுதலில் ஏமாற்றமடைந்து விட மாட்டேன்.
  50. பின்னர் அவர் அவர்களையும், அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கியவற்றையும் விட்டு விலகிய போது, நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். இவர்களுள் ஒவ்வொருவரையும் நாம் நபியாகவும் ஆக்கினோம்.
  51. நாம் அவர்களுக்கு எமது கருணையிலிருந்து (மிகுதியாக) வழங்கினோம். நாம் அவர்களுக்கு உண்மையானதும், உயர்ந்ததுமான புகழையும் அளித்தோம். ரு3
  52. (இவ்) வேதத்தில் (குறிப்பிட்ட படி) மூஸாவைப் பற்றியும் எடுத்துரைப்பீராக! அவர் நிச்சயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரும், தூதரும், நபியுமாக விளங்கினார்.
  53. நாம் மூஸாவை மலையின் வலப்பக்கமிருந்து அழைத்து தனிப்பட்ட முறையில் உரையாட (அவரை) எம்மை நெருங்கச் செய்தோம்.
  54. மேலும் நாம் எமது அருளால், அவரது சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம்.
  55. (இவ்) வேதத்தில் (குறிப்பிட்ட படி) இஸ்மாயீலைப் பற்றியும் நீர் எடுத்துரைப்பீராக. நிச்சயமாக அவர் தம் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார். அவர் தூதரும், நபியுமாக விளங்கினார்.
  56. அவர் தம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறும், ஸக்காத்து கொடுத்து வருமாறும் வலியுறுத்திக் கூறி வந்தார். அவர் தம் இறைவனுக்கு விருப்பமானவராக இருந்தார்.
  57. (இவ்) வேதத்தில் (குர்ஆனில் குறிப்பிட்ட படி) இத்ரீஸைப் பற்றியும் எடுத்துரைப்பீராக. அவர் உண்மையானவராகவும், நபியாக(வும்) விளங்கினார்.
  58. மேலும் நாம் அவரை ஒரு உயர்வான பதவிக்கு உயர்த்தினோம்.
  59. ஆதமுடைய சந்ததிகள், நாம் நூஹ்வுடன்(கப்பலில்) எடுத்துச் சென்றவர்(களின் சந்ததி) கள், இப்ராஹீம் மற்றும் இஸ்ராயீலின் சந்ததிகள், மேலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்தவர்கள் ஆகியோரைச் சேர்ந்த நபிமார்களிலிருந்து அல்லாஹ், அருள் புரிந்தவர்கள் இவர்களே! இவர்களின் முன் அளவற்ற அருளாள(னாகிய இறைவ) னின் வசனம் ஓதிக்காட்டப்பட்ட பொழுது இவர்கள் சிரம் பணிந்தவர்களாகவும், அழுதவர்களாகவும் வீழ்ந்தனர்.
  60. அடுத்து அவர்களுக்குப் பின்னர் ஒரு தலைமுறையினர் தோன்றினர். அவர்கள் தொழுகையை வீணாக்கி, மன இச்சைகளைப் பின்பற்றலாயினர். எனவே அவர்கள் விரைவில் வழிகேட்டிற்குரிய இடத்தை அடைவார்கள்.
  61. எவர்கள் கழிவிரக்கங் கொண்டு, நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுவார்களோ, அவர்கள் சுவர்க்கத்தில் நுழைவார்கள். இவர்களுக்கு (சிறிதும்) அநீதி இழைக்கப்பட மாட்டாது.
  62. நிலையான (அந்தத்) தோட்டங்கள், அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன் தன் அடியார்களுக்கு, (அவை அவர்களின் பார்வையிலிருந்து) மறைந்திருக்கும் நிலையிலே, வாக்களித்துள்ளதாகும். நிச்சயமாக இறைவனது வாக்குறுதி நிறைவேறியே தீரும்.
  63. அவர்கள் அவற்றில் சாந்தி(பற்றிய வாழ்த்துகள்) அன்றி வீண் பேச்சு எதனையும் கேட்க மாட்டார்கள். அவற்றில் அவர்களுக்கு காலையிலும், மாலையிலும் அவர்களுக்குரிய உணவு கிடைக்கும்.
  64. நம் அடியார்களுள் இறையச்சமுடையோரை வாரிசு ஆக்கும் சுவர்க்கம் இதுவே.
  65. (வானவர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறுவார்கள்): நாங்கள் உம் இறைவனின் கட்டளையினால் தான் இறங்குகின்றோம். எங்களுக்கு முன்னுள்ளவை, எங்களுக்குப் பின்னுள்ளவை, அவ்விரண்டுக்கும் இடையிலுள்ளவையெல்லாம் அவனுக்குரியவை. உம் இறைவன் மறப்பவனல்லன்.
  66. வானங்களுக்கும், பூமிக்கும், அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றிற்கும் இறைவன் (அவனே). எனவே, நீர் அவனை வணங்குவீராக. மேலும் அவனை வணங்குவதில் என்றென்றும் நிலைத்திருப்பீராக. அவனுக்கு ஒப்பானவனை நீர் அறிவீரா? ரு4
  67. என்ன? நான் மரணமடைந்து விட்டால், பின்னர் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா என மனிதன் கூறுகிறான்.
  68. மனிதன் இதற்கு முன் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த வேளையில், நாம் அவனைப் படைத்ததை அவன் நினைத்துப் பார்க்கவில்லையா?
  69. உமது இறைவன் மீது ஆணையாக! (இறைவனாகிய) நாம் அவர்களையும், ஷைத்தான்களையும், ஒன்று சேர்ப்போம். பின்னர் நிச்சயமாக அவர்களெல்லாரையும் மண்டியிட்டவர்களாக இருக்கும் நிலையில் நகரத்தின் பக்கம் கொண்டு வருவோம்.
  70. பின்னர் நாம் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும், அளவற்ற அருளாள(னான இறைவ) னுக்கு கொடிய எதிரிகளாய் இருந்தவர்களை நிச்சயமாகப் பிடுங்கி எடுப்போம்.
  71. மேலும் அதில் எரிக்கப்பட மிகவும் தகுதி பெற்றவர் எவர் என்பதனை நாம் நன்கறிவோம்.
  72. உங்களுள் ஒவ்வொருவரும் அதில் (நரகில்) செல்பவராவீர்8. இது உம் இறைவனின் விதிக்கப்பட்ட உறுதியான வாக்குறுதியாகும்.
  73. நாம் இறையச்சமுள்ளவர்களைக் காப்பாற்றுவோம். மேலும் அநீதியிழைத்தவர்களை அதில் மண்டியிட்டவர்களாக விட்டு விடுவோம்.
  74. அவர்களுக்கு எம்முடைய மிகத் தெளிவான வசனங்கள் ஓதிக் காட்டப்பட்டால், நிராகரிப்போர் நம்பிக்கையாளர்களிடம் நம்மிரு பிரிவினருள் தகுதியில் சிறந்தவரும், உற்றாரைப் பொருத்தவரை  மிகவும் கவரத்தக்கவரும் எவர்? எனக் கூறுவார்கள்.
  75. இவர்களுக்கு முன்னர் செல்வத்திலும், வெளிப்படைத் தோற்றத்திலும் (இவர்களை விட) மிகச்சிறந்து விளங்கிய எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருக்கின்றோம்.
  76. நீர் கூறுவீராக: தவறான வழியில் இருப்போருக்கு அளவற்ற அருளாள(னான  இறைவன்)ன், அவர்களுக்கு எச்சரித்துள்ளதை - அது தண்டனையாயினும் சரி அல்லது (இறுதி அழிவின்) காலமாயினும் சரி, - அவர்கள் காணும் வரை நீண்ட காலக்கெடு அளிப்பான். அப்பொழுது பதவி(யைப் பொருத்தவரை) யில் மிகக் கெட்டவரும், படை பலத்தில் மிகப் பலவீனமானவரும் எவர் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
  77. நேர்வழியினைப் பெற்றவர்களை அல்லாஹ் நேர்வழியில் மேலும் முன்னேறச் செய்கிறான். உம் இறைவனின் பார்வையில் நற்பலன் மற்றும் இறுதி முடிவைப் பொருத்தவரையில் மிகச்சிறந்தது நிலையான நற்செயல்களேயாகும்.
  78. எம்முடைய அடையாளங்களை மறுத்து, நிச்சயமாக எனக்கு ஏராளமான செல்வமும், சந்நிதிகளும் வழங்கப்படும்9 எனக் கூறுபவரை நீர் காணவில்லையா?
  79. அவர் மறைவானதைப் பற்றித் தெரிந்து கொண்டாரா? அல்லது அளவற்ற அருளாள(னான  இறைவ)னிடம் ஏதாவது வாக்குறுதியினைப் பெற்றுள்ளாரா?
  80. அவ்வாறன்று10, நாம் அவரது அக்கூற்றைப் பாதுகாத்து வைப்போம். அவருக்குரிய தண்டனையை நீடிக்கச் செய்வோம்.
  81. அவர் எ(ந்)த(ப் பொருளி)னைப் பற்றி (பெருமையாக) க் கூறுகின்றாரோ, அதற்கு நாம் வாரிசாகி விடுவோம்11. அவர் எம்மிடம் தனிமையாகவே வருவார்.
  82. அவர்கள் அல்லாஹ்வையன்றி மற்ற (பொய்க்) கடவுளரை, இவர்கள் தம் கண்ணியத்திற்குக் காரணமாக அமைவார்கள் என்ற நம்பிக்கையில், உருவாக்கிக் கொண்டனர்.
  83. அவ்வாறன்று, அக் கடவுளர்கள் ஒரு நாள் இவர்களின் வணக்கத்தை மறுத்து இவர்களுக்கு எதிரிகளாகி விடுவர். ரு5
  84. ஷைத்தான்களை நிராகரிப்பாளர்களுக்கு எதிராக, (அவர்கள் கட்டுப்படாத செயல்கள் செய்ய) தூண்டுமாறு நாம் அனுப்பியுள்ளதை நீர் பார்க்கவில்லையா?
  85. எனவே நீர் அவர்களைக் குறித்து அவசரப்பட வேண்டாம். நாம் அவர்களின் அழிவிற்குரிய நாட்களைக் கணித்து வைத்துள்ளோம்.
  86. இறையச்சமுடையோரை அளவற்ற அருளாள(னான  இறைவ)னிடம் (கண்ணியத்திற்குரிய) விருந்தினராக நாம் ஒன்று திரட்டிக் கொண்டு வரும் நாளில்,
  87. குற்றவாளிகளை ஒரு மந்தையைப் போல் நரகின் பால் விரட்டுவோம்.
  88. அந்த நாளில் அளவற்ற அருளாள(னான  இறைவ)னிடமிருந்து வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டவரைத் தவிர வேறெவருக்கும் பரிந்து பேசும் தகுதியிருக்காது.
  89. அளவற்ற அருளாள(னான  இறைவ)ன் தனக்கு ஒரு மகனை உருவாக்கிக் கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர்.
  90. (நீர் கூறுவீராக): நிச்சயமாக நீங்கள் கொடூரமான (செய்தி) ஒன்றைக் கூறுகிறீர்கள்.
  91. அதனால் வானங்கள் வெடித்து விடவும், பூமி பிளந்து (பல) துண்டுகளாகி விடவும், மலைகள் தூள்தூளாகி வீழ்ந்தும் விடலாம்.
  92. ஏனெனில் அவர்கள் அளவற்ற அருளாள(னான  இறைவ)னுக்கு ஒரு மகனை ஏற்படுத்துகின்றனர்.
  93. அருளாள(னான  இறைவ)ன் தனக்கு ஒரு மகனை கொண்டிருப்பதென்பது அவனுக்கு முற்றிலும் தேவையற்றதேயாகும்.
  94. ஏனெனில், வானங்கள், பூமி ஆகியவற்றிலுள்ள ஒவ்வொருவரும் அருளாள(னான  இறைவ) னிடம் ஓர் அடிமையாகவே வருவர்.
  95. நிச்சயமாக அ(வ் விறை)வன் அவர்களைச் சூழ்ந்தும், அவர்கள் எல்லாவற்றையும் எண்ணி வைத்தும் உள்ளான்.
  96. அவர்களெல்லாரும் மறுமை நாளில் தனித்தனியாக அவனிடம் வருவார்கள்.
  97. நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களுக்கு நிச்சயமாக அருளாள(னான  இறைவ)ன் (ஆழமான) அன்பை ஏற்படுத்துவான்12.
  98. எனவே இறையச்சமுடையோருக்கு இதன் மூலம் நீர் நற்செய்தி வழங்கவும், வாய்ச்சண்டையிடும் சமுதாயத்தை இதன் மூலம் எச்சரிக்கவும், நாம் நிச்சயமாக இ(ந்)த(க் குர்ஆ)னை உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
  99. இவர்களுக்கு முன்னிருந்த எத்தனையோ சமுதாயத்தினரை நாம் அழித்து விட்டோம். நீர் அவர்களுள் எவரையேனும் (எவ்வாறேனும்) காண்கிறீரா? அல்லது அவர்களைப் பற்றியதை தாழ்ந்த குரலிலாவது கேட்கின்றீரா? ரு6
Powered by Blogger.