அதிகாரம் : ஆலி
இம்ரான்
அருளப்பெற்ற இடம்
:மதீனா | வசனங்கள்
: 201 (பிஸ்மில்லாஹ் உட்பட)
பிரிவுகள் : 20
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணைக் காட்டக் கூடியவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அலிஃப் லாம் மீம்.1
- அல்லாஹ்-அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. அவன் என்றென்றும் உயிருடனிருப்பவன். தானே நிலைத்திருந்து மற்றவற்றை நிலைத்திருக்கச் செய்பவன் .
- அவன் உம்மத்திடத்து, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தைத் தனக்கு முன்னுள்ள (இறையறிவிப்பான)தை உறுதிப்படுத்தக்கூடியதாக இறக்கினான். மேலும் தவ்ராத்தையும் இஞ்ஜீலையும் அவன் இறக்கினான்.
- (அவை) இதற்கு முன் மக்களுக்கு வழிகாட்டியாக (இருந்தன). மேலும் தீர்ப்பளிக்கும் அடையாளத்தை (அதாவது குர்ஆனை)யும் இறக்கினான். அல்லாஹ்வின் அடையாளாங்களை நிராகரித்தவர்களுக்கு, நிச்சயமாக கடினமான தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது. மேலும் அல்லாஹ் வல்லோனும் தண்டனை வழங்குபவனும் ஆவான்.
- நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்ததாக பூமியிலும் வானத்திலும் எப்பொருளும் இல்லை.
- கருப்பைகளில், தான் நாடியவாறு உங்களை வடிவமைப்பவன் அவனேதான். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் எவனுமில்லை. அவன் வல்லோனும், நுண்ணறிவுடையோனுமாவன்.
- அவனே இவ்வேதத்தை உமக்கு இறக்கினான். இதில் சில வசனங்கள் உறுதி (நிலை)யானவை.2 இவையே இந்நூலின் அடிப்படை. மற்றவை உவமை வடிவிலானவை.3 எனவே கோணலான உள்ளத்தை உடையோர் குழப்பத்தை நோக்கமாகக் கொண்டும், (இந்நூலின் உண்மைக்கு) மாற்றமான பொருள் கொள்ளும் நோக்கிலும்4 உவமை வடிவிலான வசனங்களைப் பின்தொடர்வர். ஆனால் அதன் விளக்கத்தை அல்லாஹ்வும், இறைஞானத்தில் முழுமைபெற்றவர்களுமேயன்றி, வேறெவரும் அறிய மாட்டார்கள். அவர்கள் நாங்கள் இதனை நம்புகிறோம்; இவையெல்லாம் எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ளவை எனக் கூறுகின்றனர். அறிவுடையோரேயன்றி வேறெவரும் போதனையைப் பெறமாட்டார்.
- எங்கள் இறைவா! நீ எங்களுக்கு நேர்வழி காட்டியதன் பின்னர், எங்கள் உள்ளங்களைக் கோணலாக்காதிருப்பாயாக. மேலும் எங்களுக்கு உன்னிடமிருந்து அருளை வழங்குவாயாக. நிச்சயமாக நீயே வாரி வழங்குபவனாவாய் .
- எங்கள் இறைவா! நிச்சயமாக நீ மக்களெல்லாரையும் ஒரு நாளில் ஒன்று சேர்ப்பாய். இ(ந்நாள் வருவ)தில் ஐயமேதுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் (ஒருபோதும் தன்) வாக்குறுதிக்கு மாற்றம் செய்வதில்லை. ரு1
- நிராகரிப்போருக்கு அவர்களின் செல்வங்களும், சந்ததிகளும் இறைவனுக்கெதிராகச் சிறிதும் பயனளிக்காது. இவர்களே நரகின் எரிபொருளாவர்.
- ஃபிர்அவ்னைப் பின்பற்றியோரும், அவர்களுக்கு முன்னிருந்தோரும் (செய்ததைப்) போன்று, அவர்கள் நம்முடைய அடையாளாங்களைப் பொய்யாக்கினர். எனவே அல்லாஹ் அவர்களின் பாவங்களின் காரணமாக அவர்களைத் தண்டித்தான். மேலும் அல்லாஹ்வின் தண்டணை கடினமானது.
- நீர் நிராகரிப்பவர்களிடம் கூறுவீராக .நீங்கள் நிச்சயமாகத் தோல்வி அடைவீர்கள். பின்னர் நரகத்தின் பக்கம் ஒன்று திரட்டி, கொண்டு செல்லப்படுவீர்கள். மேலும் அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்.
- ஒன்றுடன் ஒன்று போரிட்டுக் கொண்டிருந்த இருபடைகளிலே, நிச்சயமாக உங்களுக்கு ஓர் அடையாளமிருந்தது, (இவற்றுள்) ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வழியில் போர் செய்தனர். மற்றொருபிரிவினர், நிராகரிப்பவர். (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை (முஸ்லீம்களாகிய) அவர்கள் (தங்கள் சொந்தச்) கண்களால், தங்களைப்போல் இரு மடங்காகக் கண்டனர். தான் நாடுபவனுக்குத் தனது உதவியின் மூலம் அல்லாஹ் வலிமையினை வழங்குகின்றான். இதில் பார்வையுடையோருக்கு, நிச்சயமாக ஒரு படிப்பினை உள்ளது.
- விரும்பப்படுகின்ற பொருள்களாகிய பெண்கள், ஆண்மக்கள், பாதுகாக்கப் பட்ட பொன், வெள்ளிகளின் கருவூலங்கள், அழகுவாய்ந்த குதிரைகள், கால்நடைகள், வேளாண்மை ஆகியவற்றின் மீதுள்ள நேசம் மக்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இது உலக வாழ்க்கைக்குத் தேவையான பொருளாகும். அல்லாஹ்விடத்திலோ மிகவும் மேலான தங்குமிடமுள்ளது.
- நீர் கூறுவீராக: அதை விட(வும்) சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இறையச்சம் உடையவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் தோட்டங்கள் உள்ளன. அவற்றின் கீழே ஆறுகள் ஓடுகின்றன. (அவர்கள்) அவற்றில் என்றென்றும் வாழ்வர். (அவர்களுக்கு), தூய வாழ்க்கைத் துணைகளும் அல்லாஹ்வின் திருப்தியும் (விதிக்கப்பட்டு) உள்ளது. மேலும் அல்லாஹ் (தன்) அடியார்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
- இத்தகையவர்கள், எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே நீ எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னித்தருளுவாயாக; மேலும் எங்களை நரகத் தண்டனையிலிருந்து காப்பாற்றுவாயாக என்று கூறுகின்றனர்.
- (இத்தகையோர்) பொறுமையாளர்களும், உண்மை பேசுபவர்களும், கட்டுப்பட்டு நடப்பவர்களும், (இறைவனுக்காகத் தங்கள் பொருட்களைச்) செலவு செய்பவர்களும், இரவின் இறுதிப் பகுதிகளில் பாவமன்னிப்புக் கோருபவர்களுமாவார்.
- வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறெவருமில்லை என்று அல்லாஹ் நீதியில் நிலைத்தவனாய் சாட்சி கூறுகின்றான். அவ்வாறே வானவர்களும், அறிவுடையோரும் (சாட்சி கூறுகின்றனர்). வல்லமையுள்ளவனும், நுட்பமான ஞானம் உள்ளவனுமாகிய அவனைத்தவிர வேறு எவரும் வணக்கத்திற்குரியவன் இல்லை.
- நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (உண்மையான) மார்க்கம் இஸ்லாமாகும். வேதம் வழங்கப்பெற்றவர்கள், தங்களிடம் ஞானம் வந்ததன் பின்னரே தங்களுக்கிடையிலுள்ள குழப்பத்தின் காரணமாகக் கருத்து வேறுபாடு கொண்டனர். அல்லாஹ்வின் அடையாளங்களை நிராகரிக்கின்றவன், நிச்சயமாக அல்லாஹ் விரைவில் கணக்கைத் தீர்ப்பவனவான் (என்பதை நினைவில் கொள்ளட்டும்).
- எனவே அவர்கள் உம்முடன் வாக்குவாதம் செய்தால், நீர் (அவர்களிடம்): நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடி பணிந்து விட்டேன்; (அவ்வாறே) என்னைப் பின்பற்றுபவர்களும் (அடி பணிந்து விட்டனர்) என்றுக் கூறுவீராக. வேதம் வழங்கப்பட்டவர்களிடமும், கல்லாதவர்களிடமும் (உம்மியீன் மக்களிடமும்) நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து விட்டீர்களா? என்று கேட்பீராக. அவர்கள் அடிபணிந்து விட்டால், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாவர் என்பதை புரிந்து கொள்ளுங்கள. மேலும் அவர்கள் புறக்கணித்து விட்டால், உம்முடைய கடமை தூதுச் செய்தியை எடுத்துரைப்பதேயாகும். மேலும் அல்லாஹ் அடியார்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ரு2
- அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கவும், நியாயமின்றி நபிமார்களைக் கொல்ல முயலவும், மேலும் மக்களை நீதியைக் கொண்டு ஏவுகின்றவர்களை கொலை செய்ய நாடவும் செய்வோருக்கு வேதனை தரும் தண்டனை பற்றி நீர் எச்சரிப்பீராக.
- இம்மையிலும் மறுமையிலும் இவர்களின் செயல்கள் வீணாகிப் போய்விடும். இவர்களுக்கு உதவுவோர் எவருமில்லை.
- இறைசட்டத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டவர்களைப் பற்றி உமக்குத் தெரியாதா? அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பதற்காக, அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் அவர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்களுள் ஒரு பிரிவினர் புறக்கணித்து முகந்திருப்பிக் கொள்கின்றனர்.
- எண்ணத்தக்க சில நாட்களன்றி, நெருப்பு எங்களைத் ஒருபோதும் தீண்டாது என்று அவர்கள் கூறுவதே இதற்கு காரணம். அவர்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறுவது, அவர்களை அவர்களுடைய மார்க்க (விஷய)த்தில் ஏமாற்றிவிட்டது.
- எவ்வித ஐயத்திற்கும் இடமில்லாத ஒரு நாளில், நாம் அவர்களை ஒன்று சேர்க்கும்போது அவர்களின் நிலை எவ்வாறிருக்கும்? மேலும் (அந்நாளில்) ஒவ்வொருவனுக்கும் அவன் சம்பாதித்தது முழுமையாகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்படவும் மாட்டாது.
- நீர் கூறுவீராக: ஆட்சிக்கதிபதியாகிய அல்லாஹ்வே! நீ விரும்புவோருக்கு ஆட்சியினை வழங்குகின்றாய். மேலும், விரும்புபவரிடமிருந்து ஆட்சியினைப் பறித்துக் கொள்கிறாய். மேலும், நீ விரும்புபவருக்கு மேன்மையை வழங்குகின்றாய். மேலும் நீ விரும்புபவரை இழிவுபடுத்துகின்றாய். எல்லா நன்மைகளும் உன் கையில்தான் இருக்கின்றன. நிச்சயமாக நீ எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவாய்.
- நீ இரவை பகலில் நுழையச் செய்கின்றாய். மேலும் பகலை இரவில் நுழையச் செய்கின்றாய். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றாய். மேலும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகின்றாய். மேலும் நீ விரும்புவருக்கு அளவின்றி வழங்குகின்றாய்.
- நம்பிக்கை கொண்டவர்கள், நம்பிக்கை கொண்டவர்களை விட்டு விட்டு, நிராகரிப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் உங்களை அவர்களிடமிருந்து முற்றிலும் பாதுகாத்துக் கொள்ளதாவரை, உங்களுக்கு அல்லாஹ்வுடன் எதிலும் எத்தொடர்பும் இருக்காது. மேலும் அல்லாஹ் தனது தண்டனையை குறித்து உங்களை எச்சரிக்கிறான். மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.
- நீர் (அவர்களிடம்) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களில் இருப்பதனை நீங்கள் மறைத்து வைத்தாலும் அல்லது அதனை வெளிப்படுத்தினாலும், அல்லாஹ் அதனை அறிகிறான். மேலும் வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அவன் அறிகின்றான். மேலும் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவன்.
- ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நன்மையையும், தான் செய்த தீமையையும் நேருக்கு நேர் காணும் நாளுக்கு அஞ்சுங்கள். (தீமையாகிய) இதற்கும், தனக்குமிடையே நெடுந்தூரம் இருக்கவேண்டுமே என்று அவன் விரும்புவான். மேலும் அல்லாஹ் தனது தண்டனையைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். அல்லாஹ் அடியார்களிடம் மிகுந்த பரிவு காட்டுபவனாக இருக்கின்றான். ரு3
- நீர் கூறுவீராக: (மக்களே!) நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயின் என்னைப் பின்பற்றுங்கள். (அப்போது) அல்லாஹ்(வும்) உங்களை நேசிப்பான். உங்களுடைய பாவங்களை உங்களுக்காக மன்னிக்கவும் செய்வான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மீண்டும் மீண்டும் கருணை காட்டுபவனுமாவான்.
- நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். அவர்கள் (இதனை) புறக்கணித்துத் திரும்பிவிட்டால், அல்லாஹ் நிராகரிப்பவர்களை ஒருபோதும் நேசிப்பதில்லை (என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்).
- நிச்சயமாக அல்லாஹ் ஆதம், நூஹ், இப்ராஹீமின் குடும்பம் இம்ரானின் குடும்பம் ஆகியோருக்கு எல்லா உலகங்களின் மீதும் சிறப்பினை வழங்கியிருந்தான்.6
- (அவன்) ஒருவருக்கொருவர் முழுமையாக ஒப்புமையுடையதாக இருந்த ஒரு தலைமுறைக்கு (சிறப்பினை வழங்கினான்).7 அல்லாஹ் நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமாவான்.
- இம்ரானுடைய (குடும்பத்தைச் சேர்ந்த)8 பெண், என் இறைவா! என் வயிற்றில் உள்ளதை விடுதலை செய்து உனக்காக (உன் பணிக்காக) அர்பணிக்க நான் நேர்ந்துள்ளேன். எனவே என்னிடமிருந்து இதனை ஏற்றுக்கொள்வாயாக.9 நிச்சயமாக நீயே நன்கு கேட்பவனும் நன்கு அறிபவனுமவாய் என்று கூறிய நேரத்தை நீர் நினைத்துப் பார்ப்பீராக.
- பின்னர், அவள் அதைப் பெற்றடுத்தபோது, அவள் பெற்றெடுத்ததை இறைவன் நன்கு அறிந்தவனாயிருந்தும், 'என் இறைவா! நான் ஒரு பெண்ணைப் பெற்றுள்ளேன்' என்றாள். மேலும் (அவள் எண்ணியிருந்த) ஆண் (இந்தப்) பெண்ணுக்கு ஈடாகாது (என்பதையும் இறைவன் அறிவான்.) நான் இவளுக்கு மர்யம் எனப் பெயர் சூட்டியுள்ளேன். மேலும் நான் அவளையும் அவள் சந்ததியையும் துரத்தப்பட்ட ஷய்த்தானி(ன் தாக்குதலி)லிருந்து உனது பாதுகாவலில் ஒப்படைக்கிறேன்10 என்றும் கூறினாள்.
- அப்பொழுது அவளது இறைவன் அவளை மிக நல்ல முறையில் ஏற்றுக்கொண்டு, அவளை மிகச் சிறந்த முறையில் வளரச் செய்தான். ஸக்கரிய்யாவை, அவளை வளர்ப்பவராக ஆக்கினான். ஸக்கரிய்யா வீட்டின் சிறந்த பகுதியில் இருந்த அவளிடம் சென்ற போதெல்லாம்,11 அவளிடம் (ஏதாவதோர்) உணவு இருப்பதைக் கண்டு, அவர், மர்யமே! உனக்கு இது எங்கிருந்து வந்தது என்றார். (அதற்கு அவள்): இது அல்லாஹ்விடமிருந்து (வந்தது) என்றாள். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுபவருக்கு அளவில்லாமல் வழங்குகின்றான்.
- அப்பொழுது ஸக்கரியா தம் இறைவனிடம், என் இறைவா! நீ எனக்கு உன்னிடமிருந்து தூய்மையான சந்ததியைத் தந்தருள்வாயாக. நிச்சயமாக நீ வேண்டுதலை ஏற்றுக் கொள்பவனாவாய் என்று கூறி வேண்டினார்.
- அவர் வீட்டின் சிறந்த பகுதியில்12 நின்று தொழுது கொண்டிருந்தபோது, வானவர்கள் அவரை அழைத்து, அல்லாஹ் உமக்கு யஹ்யாவைப் பற்றிய நற்செய்தியினை வழங்குகின்றான். அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்துபவராகவும், தலைவராகவும், (பாவங்களைத்) தடுப்பவராகவும், நல்லவர்களில் (முன்னேறிய) நபியாகவும் இருப்பார் என்று கூறினர்.
- அவர்: என் இறைவா! நான் முதுமையை அடைந்தும், என் மனைவி மலடியாகவும்13 இருக்கும் நிலையிலும் (என் வாழ்நாளில் நீண்ட ஆயுளைப் பெரும்) மகன் எவ்வாறு கிடைப்பான்? என்றார். (அதற்கு) அவ்வாறே, அல்லாஹ் தான் விரும்புவதைச் செய்கின்றான் என்று கூறினான்.
- (பின்னர்) அவர்: என் இறைவா! எனக்கு ஏதாவது ஒரு கட்டளை கொடு என்று வேண்டினார். (அதற்கு) நீர் மூன்று நாள் வரை சைகையினாலன்றி மக்களிடம் பேசாதீர். மேலும் மாலையிலும், காலையிலும் உம் இறைவனுடைய தூய்மையை எண்ணி, (அவனை) நினைவு கூர்வீராக என்பதே உமக்குரிய கட்டளை என்று கூறினான். ரு4
- மேலும் வானவர்கள், மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்து உம்மை தூய்மைப்படுத்தி, எல்லாப் உலகப் பெண்களை விடவும்14 உம்மைச் சிறப்பாக தேர்ந்தெடுத்துள்ளான் என்று சொன்ன நேரத்தை (நினைத்துப் பாருங்கள்).
- மர்யமே! நீர் உமது இறைவனுக்குக் கீழ்ப்படிந்து சிரம் பணிந்து, ஓரிறைவனை வணங்குபவருடன் இணைந்து அவனையே வணங்குவீராக.15
- இது மறைவான செய்திகளுள் ஒன்றாகும். இதனை நாம் உமக்கு இறை அறிவிப்பின் மூலம் அறிவிக்கின்றோம். தங்களுள் எவர் மர்யமைப் பாதுகாத்து வருவது என்பதற்காகத் தங்களுடைய அம்புகளை அவர்கள் எறிந்தபொழுது, நீர் அவர்களுடன் இருக்கவில்லை. அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த பொழுதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
- (பின்னர்) வானவர்கள்: மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தனது ஒரு சொல்லின் மூலம் உமக்கு நற்செய்தியினை வழங்குகின்றான். அவர் பெயர் மஸீஹ் ஈஸப்னு மர்யம் என்பதாகும். அவர் (இந்த) உலகிலும் மறுவுலகிலும் கண்ணியத்திற்குரியவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவர்களைச் சேர்ந்தவராகவும் இருப்பார் என்றார்.
- தொட்டிலிலும் (சிறிய வயதிலும்), நடுத்தர வயதிலும் அவர் மக்களிடத்தில் பேசுவார். அவர் நல்லவர்களைச் சார்ந்தவராக இருப்பார்.
- என் இறைவா! என்னை எந்த மனிதனும் தொடாதிருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை உண்டாகும் என்று அவர் கூறினார். அல்லாஹ்(வின் செயல்) அவ்வாறே; தான் நாடுவதை அவன் படைக்கின்றான்; அவன் ஏதாவது ஒன்றைப் பற்றி முடிவெடுத்துவிட்டால், அது குறித்து 'நீ உருவாகிவிடு' என்று கூறியவுடன் அது உருவாகத் தொடங்கி விடுகின்றது என்று அவன் கூறினான்.
- மேலும் அல்லாஹ் அவருக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்ஜீலையும் கற்றுக்கொடுப்பான்.
- மேலும் அவர் இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராவர். (அவர்) நான் உங்களிடம், உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அடையாளத்தைக் கொண்டு வந்துள்ளேன். நான் உங்களுக்காக பறவையைப் போன்ற ஒரு படைப்பை களிமண்ணிலிருந்து உருவாக்குவேன்.16 பின்னர் நான் அதில் (ஒரு புதிய உயிரை) ஊதுவேன். இதனால் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப அது பறக்கும் தகுதி பெற்றதாகிவிடும். மேலும் நான் அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப, குருடனையும், தொழுநோயாளியையும் நலமாக்குவேன். இறந்தவர்களை உயிர்பிப்பேன்.17 நீங்கள் சாப்பிடுபவை பற்றியும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரித்து18 வைப்பவை பற்றியும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் நம்பிக்கையுடையவர்களாயின், இதில் உங்களுக்கு ஓர் அடையாளம் உள்ளது (என்ற தூதுச் செய்தியைக் கூறுவார்).
- எனக்கு முன்னுள்ளதை அதாவது தவ்ராத்தை மெய்பிக்கக் கூடியவனாகவும், உங்களுக்கு விலக்கப்பட்டிருந்த19 ஒரு சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதாக ஆக்குவதற்காகவும் (வந்துள்ளேன்). உங்களிடம் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அடையாளத்துடன் நான் வந்துள்ளேன். எனவே அல்லாஹ்விற்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
- நிச்சயமாக அல்லாஹ் என் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எனவே நீங்கள் அவனை வணங்குகள். இது நேரான வழியாகும்.
- பின்னர் அவர்கள் நிராகரிப்பதை ஈஸா உணர்ந்தபொழுது, அல்லாஹ்வி(ன் மார்க்கத்தி)ற்காக எனக்கு உதவி செய்பவர்கள் யார் என்று கேட்டார். நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாயுள்ளோம்; நாங்கள் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொண்டுள்ளோம்; நாங்கள் கட்டுப்பட்டு நடப்பவர்களாயுள்ளோம் என்பதற்கு நீர் சாட்சியாக இருப்பீராக என்று சீடர்கள் பதில் கூறினர்.
- எங்கள் இறைவா! நீ இறக்கியதில் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். மேலும் இத்தூதரைப் பின்பற்றுகிறோம். எனவே நீ எங்களைச் சாட்சியாளர்களுடன் பதிவு செய்வாயாக.
- (ஈஸாவின் பகைவர்களாகிய) அவர்களும் திட்டம் தீட்டினர். அல்லாஹ்வும் திட்டம் தீட்டினான். திட்டம் தீட்டுபவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன். ரு5
- ஈஸாவே! நான் உமக்கு (இயற்கையான) மரணத்தைத் தருவேன். மேலும் உமக்கு எனது சந்நிதியில் உயர்வு தருவேன்.20 மேலும் நிராகரிப்பவர்களி(ன் குற்றச்சாட்டுகளி(லிருந்து உம்மைத் தூய்மைப் படுத்துவேன். மேலும் உம்மை பின்பற்றுபவர்களை, நிராகரிப்பவர்களைவிட இறுதிநாள் வரை மேலோங்கச் செய்வேன். பின்னர் என்னிடமே நீங்கள் திரும்பிவர வேண்டியதிருக்கிறது. அப்பொழுது நான், நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றவற்றில் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவேன் என்று அல்லாஹ் கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்)
- எனவே நிராகரிப்பவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் கடினமான தண்டனை கொடுப்பேன். மேலும் அவர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை.
- நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு, அவன் அவர்களுக்குரிய கூலிகளை முழுமையாக வழங்குவான். மேலும் அல்லாஹ் அநீதி இழைப்பவரை நேசிப்பதில்லை.
- (இறை) வசனங்களும், ஞானமிக்க போதனையுமாகிய இதனை நாம் உமக்கு ஓதிக் காட்டுகிறோம்.
- நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவின் நிலை, ஆதமின் நிலையைப் போன்றதாகும்.21 (ஆதமாகிய) அவரை அவன் காய்ந்த மண்ணிலிருந்து22 படைத்தான். பின்னர் அவரைக் குறித்து நீர் உருவாகுக என்று அவன் கூறியதும் அவர் உருவாகத் தொடங்கினார்.
- இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையாகும். எனவே நீர் ஐயம் கொள்பவர்களைச் சார்ந்தவராக வேண்டாம்.
- இப்பொழுது உம்மிடம் (இறை) ஞானம் வந்து விட்ட பின்னர், உம்முடன் அவரைக் குறித்து வாதாடுபவனிடம் நீர் கூறுவீராக: வாருங்கள். நாங்கள் எங்களுடைய ஆண்மக்களையும், நீங்கள் உங்கள் ஆண்மக்களையும், நாங்கள் எங்கள் பெண்களையும், நீங்கள் உங்கள் பெண்களையும், நாங்கள் எங்களைச் சார்ந்தவர்களையும், நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களையும் அழைத்துக் கொள்வோம். பின்னர் உருக்கமாகப் பிராத்தனை செய்து, பொய்யர்கள் மேல் அல்லாஹ்வின் சாபம் என வேண்டுவோம்.
- நிச்சயமாக, இதுவே உண்மையான அறிக்கையாகும். மேலும் அல்லாஹ்வையன்றி வேறெவரும் வணக்கத்திற்குரியவன் இல்லை. மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே வல்லோனும் நுண்ணறிவுள்ளோனுமாவான்.
- பின்னர் அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக அல்லாஹ் குழப்பவாதிகளை நன்கு அறிபவனாவான். (என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்). ரு6
- நீர் கூறுவீராக: வேதத்தைவுடையவர்களே! எங்களுக்கும் உங்களுக்குமிடையில் ஒன்றுபட்ட ஒரு கருத்தின் பக்கம் வாருங்கள். (அதாவது) நாம் அல்லாஹ்வையன்றி வேறவரையும் வணங்கமாட்டோம்; அவனுக்கு வேறெதனையும் இணை வைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு விட்டு நம்முள் சிலர், வேறு சிலரை கடவுள்களாக ஆக்கி கொள்ளமாட்டோம். ஆனால் அவர்கள் புறக்கணித்து விட்டால், நீங்கள் அவர்களிடம், நாங்கள் (இறைவனுக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களாயிருக்கின்றோம் என்பதற்கு நீங்கள் சாட்சிகளாயிருங்கள் என்று கூறுங்கள்.
- வேதத்தையுடையவர்களே! நீங்கள் இப்ராஹீமைக் குறித்து ஏன் வாதம் செய்கின்றீர்கள்? நிச்சயமாக அவருக்குப் பின்னரே, தவ்ராத்தும் இஞ்ஜீலும் இறக்கப் பெற்றன. பின்னர் ஏன் நீங்கள் புரிந்து கொள்வதில்லை?
- கவனமாக கேளுங்கள்! உங்களுக்கு அறிவு உள்ளவற்றைப் பற்றி வாதாடிய நீங்களே, (இப்போது) உங்களுக்குச் சிறிதளவும் அறிவு இல்லாதவற்றைப் பற்றி நீங்கள் ஏன் வாதம் செய்கின்றீகள்? அல்லாஹ் அறிகின்றான். நீங்களோ அறியமாட்டீர்கள்.
- இப்ராஹீம், யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. மாறாக அவர் ஏக இறைவனை வணங்குபவராகவும்,23 (அவனுக்கே முற்றிலும்) கட்டுப்பட்டவராகவும் இருந்தார். அவர் இணைவைப்பவர்களைச் சார்ந்தவராக இருக்கவில்லை.
- நிச்சயமாக, மக்களுள் இப்ராஹீமுடன் அதிகத் தொடர்புடையவர்கள் அவரைப் பின்பற்றுபவர்களும், இந்த நபியும், (இவரிடத்து) நம்பிக்கை கொண்டவர்களுமேயாவர். அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களின் நண்பனாவான்.
- வேதத்தையுடைவர்களுள் ஒரு பிரிவினர், உங்களை வழிகெடுக்க நாடுகின்றனர். அவர்கள் தங்களையே வழிகேட்டில் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். (இதனை) அவர்கள் உணர்வதில்லை.
- வேதத்தையுடையவர்களே! நீங்கள் சாட்சி கூறுபவர்களாக இருந்தும் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்?
- வேதத்தையுடையவர்களே! நீங்கள் தெரிந்தும் உண்மையை பொய்யுடன் கலந்து, உண்மையை ஏன் மறைக்கின்றீர்கள்? ரு7
- மேலும் வேதத்தையுடைவர்களுள் ஒரு பிரிவினர், நம்பிக்கை கொண்டவர்களிடத்து இறக்கப்பட்டதை முற்பகலில் நம்பிக்கை கொண்டு, பிற்பகலில் நிராகரித்து விடுங்கள்; (இதனால்) அவர்கள் (அதாவது ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்கள்) ஒருக்கால் திரும்பிவிடக் கூடும் என்று கூறுகின்றனர்.
- மேலும் உங்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றுபவரைத் தவிர, வேறெவரையும் நம்பாதீர்கள் (என்று அவர்கள் கூறுகின்றனர்) நீர் கூறுவீராக: நிச்சயமாக உண்மையான நேர்வழி, அல்லாஹ்வின் நேர்வழியாகும்; அது உங்களுக்குக் கிடைத்ததைப் போன்று மற்றவனுக்கும் கொடுக்கப்படுவதுமாகும். இல்லாவிடில், அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களுடன், வாதம் செய்வார்கள்.24 நீர் கூறுவீராக: நிச்சயமாக அருள் என்பது அல்லாஹ்வின் கையில் இருக்கின்றது. அவன் நாடுபவருக்கு அவ்வருளை வழங்குகின்றான். மேலும் அல்லாஹ் மிகவும் தாராளமாக வழங்குபவனும் நன்கு அறிபவனுமாவான்.
- அவன் விரும்புவோரைத் தன் அருளுக்குத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான். மேலும் அல்லாஹ் பேரருள் செய்பவனாவான்.
- மேலும் வேதத்தையுடையவர்களுள் சிலரிடம் நீர் பொருட்குவியல் ஒன்றினை நம்பி ஒப்படைத்தாலும், அதனை உம்மிடம் திருப்பிக் கொடுப்பவர்களும் இருக்கின்றனர். இன்னும் அவர்களுள், நீர் ஒரு தீனார் (நாணயம்) ஒன்றினை நம்பி ஒப்படைத்தாலும், நீர் அவன் (தலை) மேல் நிற்காதவரை அதனை உம்மிடம் திருப்பித் தராதவனும் இருக்கின்றான். எழுதப்படிக்கத் தெரியாதவர்களைப் பொறுத்தவரை, எங்களுக்கு எவ்வழியுமில்லை என்று அவர்கள் சொல்வதுதான் இதற்கு காரணம். அவர்கள் அறிந்துகொண்டே அல்லாவிற்கு எதிராகப் பொய் கூறுகின்றனர்.
- அவ்வாறன்று.25 மாறாக எவர் தன் வாக்குறுதியை நிறைவேற்றி இறையச்சத்தை மேற்கொள்வாரோ (அவர் இறையச்சமுடையவராவார்). நிச்சயமாக அல்லாஹ் இறையச்சம் உடையவர்களை நேசிக்கின்றான்.
- அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கும், தங்கள் சத்தியங்களுக்கும் ஈடாக அற்பமான26 கிரயத்தைப் பெற்றுக் கொள்கின்றவர்களுக்கு மறுமையில் எந்தப் பங்கும் இல்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவுமாட்டான்; அவர்களை பார்க்கவுமாட்டான். அவர்களைத் தூய்மையாக்கவுமாட்டான். அவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையும் (விதிக்கப்பட்டு) உள்ளது.
- நிச்சயமாக அவர்களுள் ஒரு பிரிவினர், வேதத்திலுள்ள ஒரு பகுதி இது என்று நீங்கள் நினைக்கும் பொருட்டு தன் நாவுகளால் சொற்களைத் திரித்துக் கூறுகின்றனர்.27 ஆனால், அது அவ்வேதத்திலுள்ளதன்று. அவர்களோ அது அல்லாஹ்விடமிருந்து வந்ததென்று கூறுகின்றனர். ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து வந்ததுமன்று. அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வைப் பற்றிப் பொய்யுரைக்கின்றனர்.
- (உண்மையான) ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஆட்சியையும், நபித்துவத்தையும் வழங்கிய பின்னர் அவர் மக்களிடத்தில் நீங்கள் அல்லாஹ்வை விட்டு விட்டு என்னுடைய அடியார்களாகி விடுங்கள் என்று கூறுதல் கண்ணியத்திற்கு தகுந்ததன்று. ஆனால் (அவர்) நீங்கள் (இறை) வேதத்தைக் கற்பிப்பதாலும், அதனைக் கற்பதனாலும் நீங்கள் இறைவனுக்கு உரியவர்களாக ஆகிவிடுங்கள் (என்றே கூறுகிறார்).
- நீங்கள் வானவர்களையும், நபிமார்களையும் கடவுள்களாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று உங்களுக்குக் கட்டளையிடுவதும் (அவரால்) இயலாது. நீங்கள் (இறைவனுக்குக்) கட்டுப்பட்டதன் பின்னர், நிராகரிக்குமாறு உங்களை அவர் ஏவுவாரா? ரு8
- மேலும் அல்லாஹ் (வேதத்தையுடையவர்களிடத்தில்): எல்லா நபிமார்களின் மூலமும்28 உறுதியான உடன்படிக்கை வாங்கிய நேரத்தை(யும் நினைத்துப் பாருங்கள்). வேதம், ஞானம் ஆகியவற்றிலிருந்து நான் உங்களுக்குக் கொடுத்துவிட்டுப் பின்னர், உங்களிடமுள்ளதை மெய்பிக்கக் கூடிய ஒரு தூதர் உங்களிடம் வந்தால், அவரிடம் நீங்கள் நம்பிக்கை கொண்டேயாக வேண்டும். மேலும் அவருக்கு உதவியும் செய்ய வேண்டும். (மேலும்) நீங்கள் ஒப்புக்கொண்டு என் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறீர்களா என்று அவன் கேட்டதற்கு, ஆம்: நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று அவர்கள் கூறினர். இப்பொழுது நீங்கள் சாட்சியாக இருங்கள். நானும் உங்களுடன் சாட்சி(களுள் ஒரு சாட்சி)யாக இருக்கின்றேன் என்றான்.
- எனவே அந்த உடன்படிக்கைக்குப் பின்னரும் புறக்கணித்து விடுகின்றவர்கள் வரம்பு மீறியவர்கள் ஆவர்.
- வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் விருப்புடனோ, வெறுப்புடனோ அவனுக்கே கட்டுப்பட்டு நடக்கும்பொழுது, அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாததை இவர்கள் விரும்புகின்றனரா? மேலும் அவனிடமே இவர்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவார்கள்.
- நீர் கூறுவீராக: நாங்கள் அல்லாஹ்விடத்திலும் எங்களுக்கு இறக்கப்பட்டதிலும் மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் (மற்றும் இவருடைய) சந்ததிகள் ஆகியோருக்கு இறக்கப்பட்டதிலும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும், (ஏனைய) எல்லா நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட அனைத்தின் மீதும் நம்பிக்கை கொள்கின்றோம். அவர்களுள் எவரையும் மற்றோருக்கு வேறுபட்டவராகக் கருதுவதுமில்லை. மேலும் நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டு நடப்பவர்களாவோம்.
- மேலும் இஸ்லாம் அல்லாத வேறு (ஏதாவது) மார்க்கத்தை (மேற்கொள்ள) விரும்புபவனிடமிருந்து (அது) ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது (என்பதையும்), அவன் மறுமையில் இழப்புக்குரியோனுமாவான்(என்பதையும் அவன் நினைவில் கொள்ளட்டும்).
- நம்பிக்கை கொண்டு, இத்தூதர் உண்மையாளர் என்று சாட்சியமும் கூறி, அவர்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் நிராகரிப்போரை அல்லாஹ் எவ்வாறு நேர்வழியில் நடத்துவான்? அல்லாஹ்(வோ) அநீதியிழைப்போருக்கு நேர்வழி காட்டுவதில்லை.
- அல்லாஹ் வானவர்கள், அனைத்து மக்கள் ஆகியோரின் சாபம் இவர்களுக்கு உண்டாவதே இத்தகையோருக்கான கூலி.
- இவர்கள் இதிலேயே, (அதாவது சாபத்திலேயே) இருப்பர். இவர்களுக்குத் தண்டனை எளிதாக்கப்படமாட்டாது. இவர்களுக்கு காலக்கெடு அளிக்கப்படவுமாட்டாது.
- அதற்கு பின்னர் பாவ மன்னிப்புக் கோரி, சீர்திருந்திக் கொள்பவரைத் தவிர, நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மீண்டும் மீண்டும் கருணை செய்பவனுமாவான்.
- நம்பிக்கை கொண்டபின் நிராகரித்து, பிறகு நிராகரிப்பில் மேலும் முன்னேறுகின்றவர்களின் பாவமன்னிப்பு, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் இவர்களே வழி தவறியவர்களாவர்.
- நிராகரித்து, நிராகரித்தவர்களாகவே மரணமடைகிறவர்களுள் எவனும், பூமியளவு பொன்னை ஈடாகக் கொடுத்தாலும், அவனிடமிருந்து ஒருபொதும் ஏற்கப்படமாட்டாது. அவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது. அவர்களுக்கு உதவி செய்பவன் எவனும் இல்லை. ரு9
- நீங்கள் உங்களுக்கு விருப்பமான பொருள்களிலிருந்து, (இறைவனுக்காகச்) செலவு செய்யாத வரையில் உங்களால் ஒருபோதும் முழுமையான நன்மையினைப் பெறமுடியாது. நீங்கள் எப்பொருளைச் செலவு செய்கின்றீர்களோ அதனை நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
- தவ்ராத் இறக்கப் பெறுவதற்கு முன்னர், இஸ்ராயீல்29 (அதாவது ஹஸ்ரத் யஃகூப்) தமக்கு விரும்பத்தக்கதல்லவென்று ஆக்கிக் கொண்டதைத் தவிர்த்து, ஏனைய எல்லா உணவும் இஸ்ராயீலின் மக்களுக்கு30 ஆகுமானதாக இருந்தது. நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து, அதனை ஓதுங்கள் என்று நீர் கூறுவீராக.
- இதன் பின்னரும் அல்லாஹ்வின் மீது பொய் புனைபவர்களே அநீதி இழைப்பவர்களாவர்.
- நீர் கூறுவீராக: அல்லாஹ் உண்மையினைக் கூறியுள்ளான். எனவே நீங்கள் (இறைவன் பக்கம்) சிரம்பணிந்திருந்தவரான இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணைவைப்பவர்களைச் சார்ந்தவராக இருந்ததில்லை.
- எல்லா மக்களு31(டைய பயனு)க்காகவும் முதன் முதலாக உருவாக்கப்பெற்ற இல்லம் மக்கா32விலுள்ளதாகும். அது எல்லா உலகங்களுக்கும் அருளுக்குரியதும் நேர்வழிக்குரியதுமா(ன இடமா)கும்.
- அதில் ஒளிமயமான பல அடையாளங்கள் உள்ளன. (அது) இப்ராஹீம் நின்ற இடமாகும். அதில் நுழைபவர் அமைதி பெற்றவராகி விடுகின்றார். அந்த வீட்டின் பக்கம் செல்ல வாய்ப்புக் கிடைத்த மக்கள் ஹஜ் செய்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். நிராகரிக்கின்றவர் அல்லாஹ் எல்லா உலகங்களை விட்டும் தன்னிறைவு பெற்றவன் (என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளட்டும்).
- நீர் கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை ஏன் மறுக்கின்றீர்கள்? ஆனால் அல்லாஹ்வோ உங்கள் செயல்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான்.
- (மேலும்) நீர் கூறுவீராக: வேதத்தையுடையவர்களே! நம்பிக்கை கொண்டவர்களை நீங்கள் அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கின்றீர்கள்? நீங்கள் அதற்குச் சாட்சியாக இருந்தும், அதைக் கோணலாக்க நாடுகிறீர்கள். மேலும் நீங்கள் செய்பவைகளைப் பற்றி அல்லாஹ் ஒருபோதும் கவனமற்றவன் அல்லன்.
- நம்பிக்கை கொண்டவர்களே! வேதம் வழங்கப்பட்டவர்களுள் எந்தப் பிரிவினர்க்காவது நீங்கள் கட்டுப்படுவீர்களாயின், நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பிறகு மீண்டும் அவர்கள் உங்களை நிராகரிப்பவர்களாக மாற்றி விடுவார்கள்.
- மேலும் அல்லாஹ்வின் வசனங்களை ஓதிக் காண்பிக்கப்படுபவர்களாக நீங்கள் இருக்கும் நிலையிலும், அவன் தூதர் உங்கள் மத்தியில் இருக்கும் நிலையிலும் நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள்? அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றவர்கள், நேரான பாதையில் நடத்தப்பட்டுள்ளார்கள் (என்று அறியுங்கள்). ரு10
- நம்பிக்கை கொண்டோரே! இறையச்சத்தை அதன் எல்லா நிபந்தனைகளுடன் மேற்கொள்ளுங்கள். நீங்கள் முழுமையாகக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருக்கின்ற நிலையில் மட்டுமே உங்களுக்கு மரணம் வரவேண்டும்.
- மேலும் நீங்கள் யாவரும் (ஒன்றுபட்டு) அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பிரிந்துபோய் விடாதீர்கள். உங்கள் மீது (செய்து)ள்ள அல்லாஹ்வின் அருளை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) எதிரிகளாயிருந்தீர்கள். பின்னர் அவன் உங்கள் உள்ளங்களில் அன்பை உருவாக்கினான். எனவே நீங்கள் அவனுடைய அருளினால், உடன் பிறப்புபோல் ஆகிவிட்டீர்கள். நீங்கள் ஒரு நெருப்புக்கிடங்கின் ஓரத்தில் இருந்தீர்கள். பின்னர் அவன் உங்களை அதிலிருந்து காப்பாற்றினான். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன் வசனங்களை, நீங்கள் நேர்வழியினைப் பெரும்பொருட்டு விளக்குகின்றான்.
- (மக்களை) நன்மையின் பக்கம் அழைக்கவும், நல்லவற்றைப் போதித்து தீமையைத் தடுக்கவும் செய்யும் ஒரு கூட்டம் உங்களிடையே இருந்து வரவேண்டும். இவர்களே வெற்றி பெறுவோர்.
- மேலும் தங்களிடம் மிகத்தெளிவான அடையாளங்கள் வந்த பின்னர் பிரிந்துவிடவும், (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்ளவும் செய்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். மேலும் அத்தகையவர்களுக்கே (அந்நாளில்) பெரும் தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- அந்நாளில் சில முகங்கள் வெண்மையாக இருக்கும். இன்னுஞ்சில முகங்கள் கறுப்பாக இருக்கும். எவர்களின் முகங்கள் கறுப்பாகி விடுமோ (அவர்களிடம்) நீங்கள் உங்களுடைய நம்பிக்கைக்குப் பிறகு நிராகரித்தவர்களாகி விட்டீர்கள் (என்பது உண்மை) தானே. ஆகவே நீங்கள் நிராகரித்தவர்களாயிருந்த காரணத்தினால் இத்தண்டனையை சுவையுங்கள் (என்று கூறப்படும்).
- எவர்களின் முகங்கள் வெண்மையாகி விடுமோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் என்றென்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பர்.
- இவை உண்மையைக் கொண்டுள்ள அல்லாஹ்வின் வசனங்கள் ஆகும் . இவற்றை நாம் உமக்கு ஓதிக் காட்டுகின்றோம். அல்லாஹ் எல்லா உலகங்களுக்கும் எவ்வித அநீதியும் இழைக்க விரும்புவதில்லை.
- மேலும் வானங்களிலும் பூமியிலுள்ளவை (எல்லாம்) அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ்விடமே எல்லாச் செயல்களும் திரும்பக் கொண்டு செல்லப்படும். ரு11
- மக்களு(டைய பயனு)க்காகத் தோற்றுவிக்கப் பெற்ற நீங்கள்33 (மற்றெல்லாரையும் விடச்) சிறந்த கூட்டத்தினராவீர்கள். நீங்கள் நன்மையை ஏவுகின்றீர்கள்; தீமையிலிருந்து தடுக்கின்றீர்கள். மேலும் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொள்கின்றீர்கள். வேதத்தையுடையவர்களும் நம்பிக்கை கொண்டிருந்தால், அது அவர்களுக்குச் சிறந்ததாக இருந்திருக்கும். அவர்களுள் நம்பிக்கை கொண்டவரும் சிலர் உள்ளனர். அவர்களுள் பெரும்பாலார் கட்டுப்படாதவர்கள்.
- அவர்கள் சிறிதளவு துன்பமிழைப்பது தவிர உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டார்கள் அவர்கள் உங்களுடன் போரிட்டால், உங்களுக்குப் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் அவர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது.
- அவர்கள் எங்கே காணப்பட்ட போதினும், அவர்களின் மீது இழிவு இறக்கப்பட்டு விட்டது. அவர்கள் அல்லாஹ்வின் ஏதாவதோர் உடன்படிக்கை(யின்) அல்லது மக்களின் ஏதாவதோர் உடன்படிக்கையின் பாதுகாப்பிற்குள் வந்தாலன்றி (அந்த இழிவிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது). அவர்கள் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிவிட்டனர். ஏழ்மையானது அவர்களுடன் கட்டாயம் சேர்ந்தேயிருக்குமாறு செய்யப்பட்டுவிட்டது. இது அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை மறுத்தும், நபிமார்களை நியாயமின்றி கொல்ல முயன்றும்34 வந்த காரணத்தினால் (செய்யப்பட்டது) ஆகும். அவர்கள் கட்டுப்படாமலிருந்ததும், வரம்பு மீறியதும் இதற்குக் காரணமாகும்.
- அவர்கள் எல்லாரும் ஒன்றுபோலில்லை. வேதத்தையுடையவர்களுள்(ளேயே தங்களின் உடன்படிக்கையில்) நேர்மையான கூட்டமும் இருக்கின்றது. அவர்கள் இரவுப்பொழுதுகளில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகின்றனர். சிரம் பணிந்து வணங்கவும் செய்கின்றனர்.
- அவர்கள் அல்லாஹ்வின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். நன்மையை ஏவுகின்றனர் தீமையைத் தடுக்கின்றனர். நற்செயல்களில் ஒருவருக்கொருவர் முன்னேறவும் செய்கின்றனர். இத்தகையோரே நல்லவர்களாவார்கள்.
- அவர்கள் செய்யும் நன்மைகளில் எதுவும் மதிக்கப்படாமல் இருப்பதில்லை. மேலும் அல்லாஹ் இறையச்சமுடையோரை நன்கு அறிகின்றான்.
- நிச்சயமாக நிராகரிப்பவர்களுக்கு அவர்களின் பொருட்களும், சந்ததிகளும் அல்லாஹ்வுக்கு எதிராக (அவனது தண்டனையிலிருந்து காப்பாற்ற) சிறிதும் பயனளிக்காது. மேலும் அவர்கள் நெருப்புக்குரியவர்களாவர். அவர்கள் அதில் நெடுங்காலம் வாழ்வர்.
- அவர்கள் இவ்வுலக வாழ்விற்காகச் செலவு செய்பவற்றின் நிலை35 ஒரு காற்றிற்கு ஒப்பானது. கடுங்குளிர் கொண்ட அது, தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட ஒரு சமுதாயத்தின் விளைநிலத்தில் வீசி அதனை அழித்துவிட்டது. அல்லாஹ் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை மாறாக அவர்கள் தமக்கு தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
- நம்பிக்கை கொண்டவர்களே! உங்களைச் சார்ந்தவர்களை விட்டுவிட்டு, (மற்றவர்களை) நெருங்கிய நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் உங்களிடம் தீய முறையில் நடந்து கொள்வதில், குறைவு ஏதும் செய்வதில்லை. மேலும் நீங்கள் துன்பமடைவதை அவர்கள் விரும்புகின்றனர். (அவர்களின்) பகைமை அவர்களின் வாய்களிலிருந்து வெளியாகிவிட்டது. அவர்களின் இதயங்கள் மறைப்பது இன்னும் பெரிது. நீங்கள் சிந்திப்பவர்களாயின், நாம் உங்களுக்கு எம்முடைய வசனங்களை மிகத் தெளிவாக விளக்கிவிட்டோம்.
- கேளுங்கள். நீங்கள் அவர்களை நேசிக்கின்றீர்கள் ஆனால் அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் முழு வேதத்தின் மீதும் நம்பிக்கை கொள்கின்றீர்கள். அவர்கள் உங்களை சந்திக்கும்போது, நாங்கள் (கூட) நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறுகின்றனர். அவர்கள் தனித்திருக்கும்போது, உங்களுக்கு எதிராகக் கோபத்தால் விரலைக் கடிக்கின்றனர். நீர் கூறுவீராக: நீங்கள் உங்களின் கோபத்தின் காரணமாகவே மடியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் இதயங்களில் மறைந்திருப்பதைக் கூட அறிகின்றான்.
- உங்களுக்கு ஏதாவது வெற்றி கிடைத்தால், அது அவர்களை வருந்தச் செய்கின்றது. உங்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் பொறுமையையும், இறையச்சத்தையும் மேற்கொள்வீர்களாயின் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு சிறிதும் தீங்கு செய்யாது. அவர்கள் செய்வதை நிச்சயமாக அல்லாஹ் அழித்துத் தூள் தூளாக்கி விடக்கூடியவனாவான்.36 ரு12
- மேலும் நம்பிக்கையாளர்களுக்கு, போருக்காக அவர்களுக்குரிய இடங்களை வகுத்தமைப்பதற்காக நீர் உம்முடைய குடும்பத்தினரிடமிருந்து விடியற்காலையில் புறப்பட்டுச் சென்ற நேரத்தை37 (நினைத்துப் பார்ப்பீராக). மேலும் அல்லாஹ் (உம்முடைய வேண்டுதல்களை) நன்கு கேட்பவனும் ( உங்கள் யாவரின் நிலைகளை) நன்கு அறிபவனுமாவன்.
- உங்களில் இரு கூட்டத்தினர்38 அல்லாஹ் அவர்களுக்கு நண்பனாய் இருந்தும் கோழைத்தனத்தைக் காட்ட எண்ணிய நேரத்தை, நினைத்துப் பார்ப்பீராக. மேலும் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடத்திலேயே நம்பிக்கை வைக்கவேண்டும்.
- (இதற்கு முன்னர்) பத்ரில், (அதாவது பத்ர் போரில்) நீங்கள் எளியவர்களாயிருந்தும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்துள்ளான். எனவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்.
- (விண்ணிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா என்று நீர் நம்பிக்கையாளரிடம் கூறிய நேரத்தை(யும் நினைத்துப் பார்ப்பீராக).
- ஏன் (போதுமானதாக) இல்லை! நீங்கள் பொறுமையையும், இறையச்சத்தையும் மேற்கொள்வீர்களாயின் அவர்கள் உங்களைத் திடீரெனத் தாக்கினால், உங்கள் இறைவன் கடுமையாகத் தாக்கக்கூடிய ஐயாயிரம் மலக்குகள் மூலம் உங்களுக்கு உதவி செய்வான்.
- உங்களுக்கு மகிழ்ச்சிக்குரிய செய்தியாகவும்39 உங்கள் உள்ளங்கள் இதன் மூலம் நிறைவு பெறவுமே அல்லாஹ் இதை ஏற்படுத்தியுள்ளான். மிகைத்தோனும், நுண்ணறிவுடையோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தேயல்லாமல் (உண்மையான) உதவி கிடைக்காது.
- நிராகரிப்பவர்கள் தோல்வியடைந்து திரும்பிவிடும் பொருட்டு, அவர்களுள் ஒரு பகுதியைத் துண்டித்துவிடவோ அல்லது அவர்களை இழிவுபடுத்தவோ (அவன் அவ்வாறு செய்தான்).
- உமக்கு இதில் எத்தொடர்பும் இல்லை. அவன் விரும்பினால் அவர்களுக்கு அருள் செய்யவோ, அவர்களுக்குத் தண்டனை வழங்கவோ செய்யலாம். (ஆனால் அவர்கள் தண்டனைக்கே உரியவர்கள்). ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அநீதி இழைப்போராவர்.
- வானங்களிலும், பூமியிலும் உள்ளவை (எல்லாம்) அல்லாஹ்விற்கே உரியன. அவன் விரும்புபவனை மன்னித்து விடுகின்றான்; அவன் விரும்புபவனுக்குத் தண்டனை வழங்குகின்றான். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மென்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு13
- நம்பிக்கை கொண்டவர்களே! (பொருளை) அளவின்றிப் பெருகச் செய்யும் (உங்கள் பொருளுக்கு உரிய) வட்டியை நீங்கள் விழுங்காதீர்கள்.40 மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அல்லாஹ்வுக்கு அஞ்சுகள்.
- மேலும் நிராகரிப்போருக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ள நெருப்பிற்கு அஞ்சுகள்.
- மேலும் உங்களுக்கு கருணை காட்டப்படும் பொருட்டு நீங்கள் அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள்.
- மேலும் நீங்கள், உங்கள் இறைவனிடமிருந்து இறங்கக்கூடிய மன்னிப்பின் பக்கமும் வானங்கள், பூமி ஆகியவற்றின் மதிப்பைக் கொண்டதும் இறையச்சமுடையோருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளதுமான சொர்க்கத்தின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்.
- (இறையச்சமுடைய) இவர்கள் செல்வ நிலையிலும் வறிய நிலையிலும் (இறைவனுடைய வழியிலே) செலவு செய்கின்றனர். மேலும் (அவர்கள்) கோபத்தை அடக்குபவர்களும் மக்களை மன்னிப்பவர்களுமாவர். மேலும் அல்லாஹ் நனமை செய்பவர்களை நேசிக்கின்றான்.
- ஆயினும், இத்தகையோர் ஏதாவதொரு தீய செயலைச் செய்து விட்டாலோ தமக்குத்தாமே அநீதியிழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைவு கூர்ந்து தங்கள் பாவங்களுக்கு மன்னிப்புக் கோருகின்றனர். அல்லாஹ்வையன்றி எவரால் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும் அவர்கள் (தாம்) செய்து விட்டதனைப் பற்றி அறிந்து கொண்டே அடம்பிடிப்பதில்லை
- இவர்களுக்குரிய கூலி தங்கள் இறைவனிடமிருந்து (இறங்கக் கூடிய) மன்னிப்பும், கீழே41 ஓடுகின்ற ஆறுகளைக் கொண்ட தோட்டங்களுமாகும். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பர். செயலாற்றுபவருக்குரிய (இக்)கூலி எத்துணை சிறந்தது!
- உங்களுக்கு முன்னர் எத்தனையோ செயல்முறைகள் சென்றுவிட்டன. (அவற்றின் விளைவுகளை பார்க்க வேண்டுமாயின்) நீங்கள் பூமியில் சுற்றித்திரிந்து (அந்த செயல்முறைகளைப்) பொய்யாக்குவோரின் முடிவு எத்தகையது என்பதைப் பாருங்கள்.
- இ(த்திருக்குர் ஆனான)து மக்களுக்குத் தெளிவாக்கக் கூடியதாகவும், இறையச்சமுடையோர்க்கு வழிகாட்டியாகவும் அறிவுரையாகவும் உள்ளது.
- நீங்கள் தளர்ச்சியடையாதீர்கள் துயரமும் அடையாதீர்கள். மேலும் நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் நீங்களே மேன்மை அடைவீர்கள்.
- உங்களுக்கு ஏதாவதொரு காயம் ஏற்பட்டால், அதுபோன்ற காயம் அவர்களுக்கும் ஏற்ப்பட்டுள்ளது. (வெற்றியின்) இந்நாட்களை நாம் மக்களிடையே மாறி மாறி வரச்செய்கின்றோம். (அவர்கள் அறிவுரையினைப் பெறவும்) அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை வெளிப்படுத்திக் காட்டவும், உங்களிலிருந்து (சிலரை) உயிர்த்தியாகிகளாக்கவும் இவ்வாறு செய்கின்றான். மேலும் அல்லாஹ் அநீதி இழைப்பவர்களை நேசிப்பதில்லை.
- மேலும் அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை தூயவர்களாக்கி நிராகரிப்பவர்களை அழித்து விடுவதற்காகவும் (அவ்வாறு செய்கிறான்).
- உங்களுள் (இறைவழியில்) முயல்பவர் யார் என்றும், பொறுமையாளர் யார் என்றும் அல்லாஹ் வெளிப்படுத்தாத வரையிலும் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
- இந்த மரணத்தை42 நீங்கள் அதை அடைவதற்கு முன்னரே நாடிக்கொண்டிருந்தீர்கள். எனவே இப்போது (அதன் தன்மை எல்லாம்) உங்களுக்கு வெளிப்பட்ட நிலையில், அதனைக் கண்டு கொண்டீர்கள். (இருந்தும் இப்போது சிலர் ஏன் தயங்குகின்றனர்?) ரு14
- மேலும் முஹம்மது ஒரு தூதர் மட்டுமே ஆவார். அவருக்கு முன் தோன்றிய எல்லாத் தூதர்களும் மரணமடைந்து விட்டனர். எனவே அவர் மரணமடைந்து விட்டாலோ அல்லது கொலை செய்யப்பட்டாலோ நீங்கள் உங்கள் குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவீர்களோ? தமது குதிகால்களில் திரும்பிச் சென்று விடுவோரால் ஒருபோதும் அல்லாஹ்வுக்குச் சிறு இழப்பையும் ஏற்படுத்த முடியாது. மேலும் அல்லாஹ் நன்றி செலுத்துவோருக்கு நிச்சயமாக நற்பலன் வழங்குவான்.
- மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்த உயிரும் மரணமடைய முடியாது. (ஏனெனில்) இது குறிப்பிட்ட காலத்தைப் பற்றிய தீர்ப்பாகும். இவ்வுலகக் கூலியை விரும்புவோருக்கு, நாம் அதிலிருந்து அவருக்கு வழங்குவோம். மறுமையின் கூலியை விரும்புவோருக்கு, நாம் அவருக்கு அதிலிருந்து வழங்குவோம். மேலும் நன்றி செலுத்துவோருக்கு, நிச்சயமாக நாம் நற்பலன் வழங்குவோம்.
- மேலும் எத்தனையோ நபிமார்கள் (இருந்து) இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து ஏராளமான இறையடியார்கள் போர் செய்துள்ளனர். அல்லாஹ்வின் வழியில் தங்களுக்கு(த்துன்பம்) ஏற்பட்டதற்காக அவர்கள் தளர்ந்து விடவோ, பலவீனத்தைக் காட்டவோ இல்லை. (எதிரிகளுக்கு முன்னால்) அவர்கள் பணிந்துவிடவுமில்லை. அல்லாஹ் பொறுமையாளர்களிடம் அன்பு காட்டுகிறான்.
- எங்கள் இறைவா! எங்கள் (குறைபாடுகளாகிய) குற்றங்களையும், எங்கள் செயல்களில் எங்களின் வரம்பு மீறுதல்களையும் எங்களுக்கு மன்னித் தருள்வாயாக! எங்கள் காலடிகளை உறுதிப்படுத்துவாயாக. மேலும் நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக என்று கூறியதைத் தவிர அவர்கள் எதுவும் கூறியதில்லை.
- எனவே அல்லாஹ் அவர்களுக்கு (இந்த) உலகின் கூலியையும் மறுமையின் சிறப்புவாய்ந்த கூலியையும் வழங்கினான். மேலும் அல்லாஹ் நன்மை செய்பவர்களை நேசிக்கின்றான். ரு15
- நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களைப் பின்பற்றினால் அவர்கள் உங்களை உங்கள் குதிகால்களில் திருப்பி விடுவார்கள். இதனால் நீங்கள் இழப்பிற்கு ஆளாவீர்கள்.
- (நீங்கள் இழப்பிற்குரியவரல்லர்.) மாறாக அல்லாஹ்வே உங்களுக்கு உதவியாளன். மேலும் உதவி அளிப்போரில் சிறந்தவன் அவனே.
- இணைவைப்பதற்கு எந்த ஆதாரமும் இறக்கப்படாத நிலையில், அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்ததன் காரணமாக நிராகரிப்போரின் உள்ளங்களில் நிச்சயமாக நாம் திகிலை இடுவோம். அவர்களின் தங்குமிடம் நெருப்பாகும். அநீதி இழைப்போரின் தங்குமிடம் மிகக் கேட்டதே.
- அல்லாஹ்வின் கட்டளையினால் நீங்கள் அவர்களைக் கொன்றொழித்துக் கொண்டிருந்த வேளையில், அவன் உங்களுடன் செய்த வாக்குறுதியை நிறைவேற்றினான். எதுவரை எனில் நீங்கள், சோம்பேறித்தனம் காட்டி (இறைதூதரின்) கட்டளையைப் பற்றி ஒருவருக்கொருவர் சண்டையிட்டு நீங்கள் விரும்பியதை அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் கட்டுப்பட மறுத்தீர்கள். (அப்போது அவன் தன் உதவியை நிறுத்திவிட்டான்.) உங்களுள் சிலர் இவ்வுலகை நாடுபவரும், இன்னுஞ்சிலர் மறுமையை நாடுபவருமாவீர்கள். பின்னர் அவன் உங்களை சோதிப்பதற்காக (எதிரிகளாகிய) அவர்களின் தாக்குதலிலிருந்து உங்களை காப்பாற்றினான். நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு பேரருள் புரிவோனுமாவான்.
- தூதர் மிகவும் பின்னால் உள்ள உங்கள் அணியில் (நின்று) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும்போது, நீங்கள் எவரையும் திரும்பிப் பாராமல் ஓடிக்கொண்டிருந்தீர்கள். அதனால் உங்களை விட்டு நழுவிச்சென்ற (வெற்றியான)து பற்றியும், உங்களுக்கு ஏற்பட்டது(யரம்) பற்றியும், நீங்கள் வருத்தம் கொள்ளாமல் இருப்பதற்காக, ஒரு துன்பத்திற்கு ஈடாக இன்னொரு துன்பத்தைக் கொடுத்தான்.43 மேலும் நீங்கள் செய்வதை அல்லாஹ் அறிகின்றான்.
- பிறகு அவன் இத்துன்பத்திற்குப் பின் உங்களுக்கு மன அமைதியை அதாவது தூக்கத்தை இறக்கினான். இது உங்களுள் ஒருபிரிவினரை ஆட்கொண்டது. மற்றொரு பிரிவினர் தம்மைப் பற்றிய கவலையில் ஆழ்ந்திருந்தனர்.44 இவர்கள் அல்லாஹ்வைக் குறித்து அறிவீனமான யூகம் போன்று, உண்மையற்ற எண்ணங்கொண்டிருந்தனர். இந்த தீர்மானத்தில் எங்களுக்கும் ஏதேனும் கூறுவதற்கு உண்டா எனக் கூறிவந்தனர். தீர்மானங்கள் எல்லாம் அல்லாஹ்விற்குரியது என்று நீர் கூறுவீராக. (நயவஞ்சகர்களான) அவர்கள் உம்மிடம் வெளியிடாதவற்றைத் தம் உள்ளங்களில் மறைத்து வைத்துள்ளனர். தீர்மானிப்பதில் எங்களுக்கும் ஏதேனும் பங்கு இருப்பின், நாம் இங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக: நீங்கள் உங்களுடைய வீடுகளில் இருந்தாலும் (அல்லாஹ் தனது கட்டளையினை நிறைவேற்றவும்), உங்கள் இதயங்களிலுள்ளதைச் சோதிக்கவும், உங்கள் உள்ளங்களிலுள்ளதைத் தூய்மைப்படுத்தவும் போர் செய்வது விதிக்கப்பட்டுள்ளவர்கள் (கொலையுண்டு) கிடக்க வேண்டிய இடங்களை நோக்கிக் கட்டாயம் வெளியேறியிருப்பார்கள். அல்லாஹ் இதயங்களில் உள்ளவற்றை நன்கு அறிகிறான்.
- இருபடைகள் நேருக்குநேர் மோதிக் கொண்ட நாளில் உங்களுள் புறமுதுகு காட்டியவர்களை அவர்களின் செயல்கள் சிலவற்றின் காரணத்தால் ஷய்த்தான் நிச்சயமாக இடறி விழ வைக்க நாடினான். இப்பொழுது நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், சகித்துக் கொள்பவனுமாவான். ரு16
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரித்தவர்களைப் போன்று ஆகி விடாதீர்கள். அவர்கள் தங்கள் சகோதரர்களைக் குறித்து, அவர்கள் நாட்டில் (அறப்போர் நோக்குடன்) பயணம் செய்யும்போது அல்லது போருக்குப் புறப்படும்போது அவர்கள் நம்முடன் இருந்திருப்பார்களாயின் மரணமடைந்திருக்க மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவுமாட்டார்கள் என்று கூறுகின்றனர். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் வருத்தத்தை உருவாக்குவதற்காகவே45 (இவ்வாறு கூறும்படிச் செய்தான்). மேலும் அல்லாஹ்(வே) உயிர்பெறச் செய்கின்றான். மரணிக்கவும் செய்கின்றான். மேலும் நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
- நீங்கள் அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டால் அல்லது மரணமடைந்தால், நிச்சயமாக அல்லாஹ்வின் (இடமிருந்து உங்களுக்குக் கிடைக்கக் கூடிய) மன்னிப்பும், அருளும் அவர்கள் சேர்த்து வைக்கும் பொருட்களை விட மிகச் சிறந்ததாகும்.
- நீங்கள் மரணமடைந்தால் அல்லது கொல்லப்பட்டால், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விடமே ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.
- அல்லாஹ்விடமிருந்து (உமக்கு வழங்கப் பெற்று)ள்ள மகத்தான அருளின் காரணமாக(வே), நீர் அவர்களுக்கு மென்மை வாய்ந்தவராகத் திகழ்கின்றீர். நீர் தீய ஒழுக்கமும், கடின உள்ளமும் உடையவராக இருந்திருப்பின் அவர்கள் உம் சூழலில் இருந்து சிதறிச் சென்றிருப்பர். எனவே நீர் அவர்களை மன்னித்து அவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக. மேலும் முக்கிய விஷயங்களில் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக. பின்னர் நீர் (எது பற்றியும்) உறுதியான முடிவு எடுத்துவிட்டால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் தன்மீது நம்பிக்கை வைப்பவர்களிடம் உறுதியாக அன்பு கொள்கிறான்.
- அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை எவராலும் வெல்ல முடியாது. அவன் உங்களுக்கு உதவி செய்வதை விட்டுவிட்டால், அவனைத் தவிர உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைத்தல் வேண்டும்.
- நம்பிக்கைத் துரோகம் செய்வதென்பது எந்த நபியின் கண்ணியத்திற்கும் ஏற்றதன்று. நம்பிக்கைத் துரோகம் செய்தவன், தனது நம்பிக்கைத் துரோகத்தால் பெற்றுக் கொண்டதை மறுமை நாளன்று தானே வெளிப்படுத்துவான். பின்னர் ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அது சம்பாதித்தது அதற்கு முழுமையாகக் கொடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்பட மாட்டாது.
- அல்லாஹ்வின் திருப்தியைப் பின்பற்றிச் செல்பவன் அல்லாஹ்வின் கோபத்தைப் பெற்றுத் திரும்புகின்றவனைப் போன்று ஆவானா? அவன் தங்குமிடம் நரகம் ஆகும். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
- அல்லாஹ்விடத்தில் அவர்கள் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர். மேலும் அவர்கள் செய்வதை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
- அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களிடையே அவர்களிலிருந்து ஒரு தூதரை அனுப்பி நிச்சயமாக அருள் புரிந்துள்ளான். அவர் அவனது அடையாளங்களை ஓதிக்காட்டுகிறார். மேலும் அவர்களைத் தூய்மைப் படுத்துகின்றார். மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். நிச்சயமாக அவர்கள் (இதற்கு) முன்னர் மிகத் தெளிவான வழிகேட்டில் இருந்தனர்.
- உங்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், அதைவிட இருமடங்கு துன்பத்தை நீங்களே விளைவித்துள்ளீர்கள் (என்பது உண்மை) அல்லவா? இது எங்கிருந்து (வந்து)ள்ள தென்று நீங்கள் கூறினீர்கள். நீர் (அவர்களிடம்), அது உங்களிடமிருந்துதான் வந்துள்ளதென்று கூறுவீராக. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான்.
- இருபடையினர் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட நாளில், உங்களுக்கு நேர்ந்தது அல்லாஹ்வின் கட்டளையினாலேயாகும். மேலும் (அது) நம்பிக்கை கொண்டவர்களை பிரித்தறிவதற்கும்,
- மேலும் நயவஞ்சகர்களைப் பிரித்தறிவதற்குமே (ஏற்பட்டது). மேலும் நயவஞ்சகர்களான அவர்களிடம், வாருங்கள். அல்லாஹ்வின் வழியில் போரிட்டு (எதிரியின் தாக்குதலைத்) தடுத்து நிறுத்துங்கள் என்று கூறப்பட்டது. (அதற்கு அவர்கள்): எங்களுக்குப் போரிடத்தெரிந்திருந்தால் கட்டாயம் உங்களைப் பின்பற்றியிருப்போம் என்றனர். அவர்கள் அந்நாளில் நம்பிக்கையைவிட நிராகரிப்பை மிகவும் நெருங்கியிருந்தனர். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தங்கள் வாய்களால் கூறுகின்றனர். அவர்கள் மறைத்து வைப்பதை அல்லாஹ் யாவரையும் விடவும் நன்கறிவான்.
- இவர்கள் தாங்களே (பின் தங்கியவர்களாக) இருந்த நிலையில் தங்கள் சகோதரர்களிடம், அவர்கள் நாங்கள் கூறுவதை கேட்டிருந்தால் அவர்கள் கொலையுண்டிருக்க மாட்டார்கள் எனக் கூறினர். நீர் (அவர்களிடம்) நீங்கள் உண்மையாளர்களாயின் நீங்கள் உங்களை விட்டும் மரணத்தை விலக்கிக் காட்டுங்கள் என்று கூறுவீராக.
- மேலும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை, மரணித்தவர்கள் என்று நீங்கள் ஒருபோதும் எண்ணவேண்டாம் மாறாக, அவர்கள் தங்கள் இறைவனிடம் உயிருள்ளவர். (மேலும்) அவர்கள் உணவளிக்கப்படுகின்றனர்.
- அல்லாஹ், தனது அருளால் தங்களுக்கு வழங்கியவற்றால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாவர். மேலும் தங்களுக்குப் பின்னிருந்து (வந்து) தங்களுடன் இதுவரை இணையாதவர்களைப் பற்றி(யும்) மகிழ்ச்சியடைந்தவர்களாவர். ஏனென்றால் அவர்களுக்கு(ம் இதே கொள்கையைக் கொண்டிருப்பவருக்கும்) எவ்விதமான அச்சமும் ஏற்படாது. அவர்கள் கவலையடைவும் மாட்டார்கள்.
- (ஆயினும்) அல்லாஹ்விடமிருந்து (தங்களுக்கு வழங்கப்பெற்று)ள்ள பெரும் அருட்கொடையிலும், (அவனது) அருளிலும், அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களின் கூலியினை வீணாக்குவதில்லை என்பதிலும் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ரு17
- தங்களுக்கு காயம் ஏற்பட்டதன் பிறகு(ம்) அல்லாஹ்வினுடையதும், தூதருடையதுமான கட்டளையினை ஏற்றுக் கொண்டவர்களுள் தங்கள் கடமையினை நன்முறையில் நிறைவேற்றியவர்க்கும், இறையச்சத்தை மேற்கொண்டவர்களுக்கும் பெரும் கூலி உண்டு.
- எதிரிகள்46 அவர்களிடம் வந்து: உங்களுக்கு எதிராக மக்கள் (படையைத்) திரட்டியுள்ளனர். எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சுங்கள் என்று கூறினர். ஆனால் இது, அவர்களின் நம்பிக்கையை மேலும் வளரச்செய்தது. மேலும், அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவன் நல்ல பாதுகாவலன் என்றும் அவர்கள் கூறினர்.
- ஆகவே, அவர்கள் எந்த இழப்புமின்றி அல்லாஹ்விடமிருந்து பெரும் அருட்கொடையையும், பெரும் அருளையையும் பெற்றுத் திரும்பினர். அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பின்பற்றிச் சென்றனர். அல்லாஹ் பெரும் அருள் செய்பவனாவான்.
- (அச்சுறுத்தும்) அவன் (ஒரு) ஷய்த்தானேயாவான். அவன் தனது நண்பர்களை அச்சுறுத்துகின்றான். நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின் (ஷய்த்தான்களாகிய) அவர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள்.
- நிராகரிப்பில் விரைந்து முன்னேறிக் கொண்டிருப்பவர்கள் உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். அவர்களால் அல்லாஹ்வுக்கு ஒருபோதும் எத்தீங்கும் இழைத்து விட முடியாது. மறுமையில் அவர்களுக்கு எப்பங்கையும் ஒதுக்காமலிருக்க(வே)அல்லாஹ் நாடுகின்றான். மேலும் அவர்களுக்கு பெரும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
- நம்பிக்கையை விற்றுவிட்டு நிராகரிப்பை பெற்றுக் கொண்டவர்களால், நிச்சயமாக அல்லாஹ்வுக்கு ஒருபோதும் எத்தீங்கும் இழைத்துவிட இயலாது. மேலும் அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய ஆக்கினையுண்டு.
- நிராகரிப்பவர்களை நாம் விட்டுவைப்பது அவர்களுக்கு நன்று என அவர்கள் ஒருபோதும் கருதவேண்டாம். நாம் அவர்களை விட்டுவைக்கின்றோம் (என்றால்), அதன் விளைவு அவர்கள் (தங்கள்) பாவங்களில் முன்னேறுவதற்கே ஆகும். மேலும் அவர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- நல்லர்களிலிருந்து தீயவர்களை வேறுபடுத்திக் காட்டாதவரையில் நீங்கள் இருக்கும் நிலையிலேயே நம்பிக்கையாளர்களை அல்லாஹ் விட்டு வைக்கமாட்டான். அல்லாஹ் உங்களுக்கு மறைவானதைப் பற்றி ஒருபோதும் அறிவிக்க(வும்) மாட்டான். ஆனால் அல்லாஹ் தனது தூதர்களிலிருந்து, தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதர்களிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள் மேலும் நீங்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொள்வீர்களாயின், உங்களுக்குப் பெரும் நற்பலன் கிடைக்கும்.
- அல்லாஹ் தனது அருளால் தங்களுக்கு வழங்கியதில் கருமித்தனம் செய்பவர்கள், அது தங்களுக்கு நல்லதென்று ஒருபோதும் நினைத்துக் கொள்ளவேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீயதே. அவர்கள் கருமித்தனம் செய்பவற்றை நிச்சயமாக மறுமைநாளில் சங்கிலியாக்கப்(பட்டு அவர்களின் கழுத்துகளில் மாட்டப்)படும். வானங்கள் பூமி ஆகியவற்றின் நிரந்தர உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. மேலும் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிந்தவனாவான். ரு18
- அல்லாஹ் தேவையுடையவனும்47 நாங்கள் நிறைவு பெற்றவரும் ஆவோம் என்று கூறியவர்களின் கூற்றை அல்லாஹ் நிச்சயமாகக் கேட்டுவிட்டான். அவர்களின் இக்கூற்றையும், அவர்கள் நியாயமின்றி நபிமார்களைக் கொல்ல முயன்றதையும், நிச்சயமாக நாம் பதிவு செய்வோம். மேலும் நாம் (அவர்களிடம்) சுட்டெரிக்கும் தண்டனையைச் சுவையுங்கள் என்று கூறுவோம்.
- உங்கள் கைகள் முன்னர் அனுப்பிவைத்ததன் காரணமாக(வே) இது விளைந்தது. (உண்மையென்னவெனில்) அல்லாஹ் அடியார்களுக்கு கொஞ்சமும் அநீதி இழைப்பதில்லை.
- நெருப்பு தின்று விடும் தியாகம்48 ஒன்றைக் கொண்டு வராதவரை, எத்தூதரையும் ஏற்கக் கூடாதென அல்லாஹ் நிச்சயமாக எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான் என்று அவர்கள் கூறினர். நீர் (அவர்களிடம்) கூறுவீராக: எனக்கு முன் உங்களிடத்து பல தூதர்கள் தெளிவான அடையாளங்களையும் நீங்கள் கூறியதையும் கொண்டு வந்துள்ளனர். பின்னர் நீங்கள் உண்மையாளர்கள் எனில், அவர்களை ஏன் கொலை செய்ய முயன்றீர்கள்?
- அவர்கள் உம்மைப் பொய்யாக்குகின்றனர் என்றால், (அதனால் என்ன?) உமக்கு முன்னர் தெளிவான அடையாளங்களையும், ஞானநூல்களையும், ஒளிமயமான வேதத்தையும் கொண்டு வந்த பல தூதர்களும் பொய்யாக்கப்பட்டிருந்தனர்.
- எல்லா உயிர்களும் மரணத்தைச் சுவைத்தே தீரும். உங்களுக்கு உங்(களின் செயல்க)ளின் முழுமையான கூலி49 இறுதிநாளில்(தான்) கிடைக்கும். எனவே நெருப்பிலிருந்து அகற்றப்பட்டு, சொர்க்கத்தில் நுழைக்கப்பட்டவர் வெற்றி பெற்றார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றக் கூடிய தற்காலிகப் பொருட்கள் அல்லாமல் வேறில்லை.
- நீங்கள் உங்கள் செல்வங்கள், உங்கள் உயிர்கள் ஆகியவற்றால் கட்டாயம் சோதிக்கப்படுவீர்கள். மேலும் உங்களுக்கு முன்னர் வேதம் வழங்கப் பெற்றவர்களிடமிருந்தும், இணைவைப்பவர்களிடமிருந்தும் துயரம் தரக் கூடியவற்றை நிச்சயமாக நீங்கள் கேட்பீர்கள். நீங்கள் பொறுமை செய்து இறையச்சத்தை மேற்கொள்வீர்களாயின், நிச்சயமாக இது துணிவுக்குரிய செயல்களைச் சேர்ந்ததாகும்.
- வேதம் வழங்கப்பட்டவர்களிடத்தில் நீங்கள் இதை மக்களிடம் கட்டாயம் வெளிப்படுத்த வேண்டும் என்றும், இதை மறைக்க கூடாதென்றும் அல்லாஹ் உறுதிமொழி வாங்கியிருந்தும், அவர்கள் அதனைத் தங்கள் முதுகுகளுக்குப் பின் தூக்கி எறிந்து விட்டு, அதனை அற்ப விலைக்கு50 விற்றுவிட்டதையும் நினைத்துப் பாருங்கள். அவர்கள் பெற்றுக் கொண்டது மிக மோசமானதொன்றாகும்.
- தாங்கள் செய்தவற்றைப் பற்றிப் பெருமை கொண்டு, தாங்கள் செய்யாதவற்றிற்கும் பாராட்டப்பட வேண்டுமென்று விரும்புகின்றவர்கள், தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவர் என நீர் ஒருபோதும் நினைக்க வேண்டாம். மேலும் அவர்களுக்கு வேதனையளிக்க கூடிய தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
- வானங்கள், பூமி ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. மேலும் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான். ரு19
- வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும், இரவும் பகலும் மாறிமாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சயமாகப் பல அடையாளங்கள் உள்ளன.
- அவர்கள் நின்று கொண்டும், உட்கார்ந்துகொண்டும், ஒருக்கணித்துப் படுத்துக் கொண்டும் அல்லாஹ்வை (எப்போதும்) நினைத்துக் கொண்டிருக்கின்றனர். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பு பற்றிச் சிந்திதுக் கொண்டிருக்கின்றனர். எங்கள் இறைவா! நீ இதனை வீணாகப் படைக்கவில்லை. நீ தூய்மையானவன். எனவே நீ எங்களை நெருப்பின் தண்டனையிலிருந்து காப்பாற்றுவாயாக (எங்களது வாழ்க்கை குறிக்கோளற்றதாக ஆகுவதிலிருந்தும் காப்பாற்றுவாயாக) என்றும் கூறுகின்றனர்.
- எங்கள் இறைவா! நீ நெருப்பில் நுழையச் செய்தவரை நிச்சயமாக இழிவுபடுத்தி விட்டாய். மேலும் அநீதி இழைப்பவர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை.
- எங்கள் இறைவா! உங்கள் இறைவனிடத்து நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (கூறி) நம்பிக்கையின் பக்கம் அழைக்கும் ஓர் அழைப்பவரின் குரலை நிச்சயமாக நாங்கள் செவியுற்றோம். எனவே, நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். (ஆகவே) எங்கள் இறைவா! நீ எங்கள் பாவங்களை எங்களுக்காக மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களிடமிருந்து அகற்றுவாயாக. எங்களை நல்லடியார்களுடன் மரணிக்கச் செய்வாயாக.
- மேலும் எங்கள் இறைவா! நீ உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு வாக்களித்தவற்றை(யெல்லாம்) எங்களுக்குத் தருவாயாக. மேலும் மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தி விடாதிருப்பாயாக. நிச்சயமாக நீ வாக்குறுதியை மீறுவதில்லை.
- எனவே அவர்களின் இறைவன் (பின் வருமாறு கூறி), அவர்க(ளின் வேண்டுதல்க)ளை ஏற்று, உங்களுள் ஆணாயினும், பெண்ணாயினும் எந்த ஒரு செயலாற்றுபவரின் செயலையும் நான் வீணாக்க மாட்டேன். நீங்கள் ஒருவர் மற்றொருவருடன் (தொடர்பு) உள்ளவராவீர்கள். எனவே எவர்கள் தங்கள் இடத்தை விட்டு வெளியேறியும், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டும், என் பாதையில் துன்புறுத்தப்பட்டும், போரிட்டும், கொல்லப்பட்டும் உள்ளனரோ அவர்களுடைய தீமை(களின் விளைவு)களை அவர்களிடமிருந்து நிச்சயமாக நான் அழித்து விடுவேன். மேலும் கீழே ஆறுகள் ஓடுகின்ற தோட்டங்களில் நிச்சயமாக நான் அவர்களை நுழைய செய்வேன். இது அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்பலனாகும். அல்லாஹ்விடமே மிகச் சிறந்த நற்பலனுள்ளது.
- நிராகரிப்போர் சுதந்திரமாக நாட்டில் சுற்றித் திரிவது உம்மை ஒருபோதும் ஏமாற்றிவிட வேண்டாம்.
- இது தற்காலிக பயனாகும். இதற்குப் பிறகு அவர்களின் தங்குமிடம் நரகமாகும். மேலும் அது மிகவும் கெட்ட தங்குமிடமாகும்.
- ஆனால் தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களுக்கு கீழே ஆறுகள் ஓடுகின்ற தோட்டங்கள் உள்ளன. அவர்கள், அவற்றில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பர். (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள விருந்தோம்புதலாகும். அல்லாஹ்விடத்திலுள்ளது நல்லவர்களுக்கு மிகச் சிறந்தது.
- வேதத்தையுடையவர்களுள் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடமும், உங்களுக்கு இறக்கப்பட்டதிலும் அவர்களுக்கு இறக்கப்பட்டதிலும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அல்லாஹ்வுக்குப் பணிந்தவராகவும் உள்ளனர். அல்லாஹ்வின் வசனங்களைக் குறைந்த விலைக்கு விற்பதில்லை.51 அவர்களுக்கு அவர்கள் இறைவனிடம் நற்பலன் உண்டு. நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் விரைவானவன்.
- நம்பிக்கை கொண்டவர்களே! பொறுமையுடன் செயல்படுங்கள். (எதிரிகளை விட அதிகமாகப்) பொறுமையை கையாளுங்கள். எல்லைகளைக் கண்காணித்துக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றிபெற இறையச்சத்தைக் கைக்கொள்ளுங்கள். ரு20