அதிகாரம் – அல்-நபா
அருளப் பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 41
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- இவர்கள் எதைப்பற்றி ஒருவரையொருவர் கேள்வி கேட்கின்றனர்?.
- மகத்தான ஒரு நிகழ்ச்சியின் செய்தியைப் பற்றி(யா?).
- அதைப்பற்றி அவர்கள் கருத்து வேற்றுமை கொண்டிருக்கின்றனர்.
- ஆம் (உண்மை அவர்களின் கொள்கைகளுக்கு மாற்றமானதாகும்.) விரைவில் அவர்கள் அறிந்து கொள்வர்.
- ஆம் மீண்டும் (நாம் கூறுகிறோம் உண்மை அவர்களின் கொள்கைகளுக்கு மாற்றமானது தான்.) விரைவில் அவர்கள் அறிந்து கொள்வர்.
- நாம் பூமியைப் படுக்கையாக ஆக்கவில்லையா?
- மலைகளை முலைகளாகவும் ஆக்கவில்லையா?
- மேலும் நாம் உங்களை இணைகளாகப் படைத்துள்ளோம்.
- மேலும் உங்கள் தூக்கத்தை நாம் ஓய்விற்குரியதாக ஆக்கியுள்ளோம்.
- மேலும் இரவை நாம் ஒரு போர்வையாக ஆக்கியுள்ளோம்.
- மேலும் பகலை நாம் வாழ்வி(ன் செயல்பாட்டி)ற்குரியதாக ஆக்கியுள்ளோம்.
- மேலும் வலிமை வாய்ந்த (வானங்கள்) ஏழை உங்களுக்கு மேல் நாம் அமைத்தோம்.
- மேலும் நாம் சூரியனை ஒளிமயமான ஒரு விளக்காக ஆக்கியுள்ளோம்.
- கொட்டும் மேகங்களிலிருந்து மிகுதியாக பொழிந்து கொண்டிருக்கும் தண்ணீரை நாம் இறக்குகின்றோம்.
- அதனைக் கொண்டு தானியத்தையும், தாவர வகையையும், வெளிப்படுத்துவதற்காக
- செழித்தோங்கி வளரும் தோட்டங்களையும் நாம் (அதனை இறக்குகின்றோம்).
- நிச்சயமாக தீர்ப்பு நாளிற்கு குறிப்பிட்ட ஒரு நேரம் உண்டு.
- அந்நாளில் எக்காளம் ஊதப்படும். அப்போது நீங்கள் திரள் திரளாக வருவீர்கள்.
- வானம் திறக்கப்பட்டு (எல்லாம்) கதவுகளாக ஆகிவிடும்.
- மலைகள் அகற்றப்பட்டு அவை கானல் நீர் (போன்று) ஆகிவிடும்.
- நிச்சயமாக நரகம் (அவர்களைத்) தாக்க பதுங்கியிருக்கிறது.
- அது கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்குத் தங்குமிடமாகும்.
- அவர்கள் அதில் பல வருடங்கள் தங்கியிருப்பார்கள்.
- கொதிநிலை சூட்டையும், கடுங்குளிச்சியையும் அன்றி
- அவர்கள் அதில் எந்த குளிர்ச்சியையோ நீரையோ சுவைக்கமாட்டார்கள்.
- (இதுவே அவர்களுக்கான) பொருத்தமான கூலி. (ஆகும்).
- நிச்சயமாக அவர்கள் எந்த கேள்வி கணக்கையும் பற்றி பயந்ததில்லை.
- மேலும் எம் அடையாளங்களை வன்மையாக பொய்யாக்கினர்.
- நாம் எல்லாவற்றையும் ஒரு நூலில் (முழுமையாகப்) பதிவு செய்து வைத்துள்ளோம்.
- எனவே நீங்கள் (தண்டனையைச்) சுவையுங்கள்; நாம் உங்களுக்குத் தண்டனையைத் தவிர வேறெதனையும் அதிகமாக்கமாட்டோம். ரு1
- நிச்சயமாய இறையச்சமுடையவர்களுக்கு வெற்றி (விதிக்கப்பட்டு) உள்ளது.
- (அதாவது சுவர் எழுப்பி அடைக்கப்பட்ட) தோட்டங்களும் திராட்சை(க்கொடி) களும்.
- ஒத்த வயதுடைய வாலிபப் பெண்களும்.
- வழிந்தோடும் கோப்பைகளும் (அவர்களுக்கு உண்டு).
- மேலும், அவர்கள் அதில் வீண் பேச்சையோ பொய்யையோ கேட்க மாட்டார்கள்.
- (இது) கணக்கிற்கேற்ற பரிசாக உம்முடைய இறைவனிடமிருந்து கிடைக்கும் நற்பலன் (ஆகும்).
- வானங்கள், பூமி, அவ்விரண்டிற்குமிடையிலுள்ளவை ஆகியவற்றிற்கெல்லாம் இறைவன், அளவற்ற அருளாளன். (அவனது அனுமதியின்றி) அவனிடம் பேசுவதற்கான ஆற்றல் அவர்களுக்கு இல்லை.
- அந்நாளில் முழுமை பெற்ற ஆவியும், வானவர்களும் அணி வகுத்து நிற்பார்கள். அளவற்ற அருளாளனாகிய (இறை)வன் எவருக்கு அனுமதியளிக்கின்றானோ, மேலும் எவர் சரியானதை மட்டும் பேசுவாரோ அவரைத் தவிர, மற்றவர்கள் பேசமாட்டார்கள்.
- அது உண்மைக்குரிய நாளாகும். எனவே விரும்புபவர், தமது இறைவனிடம் புகலிடம் தேடிக்கொள்ளட்டும்.
- நிச்சயமாக நாம் உங்களை நெருங்கியிருக்கும் தண்டனையைப் பற்றி எச்சரித்துள்ளோம். அந்நாளில் மனிதன். தனது கைகள் முன்னால் அனுப்பியுள்ளதைக் காண்பான். அந்தோ! நான் வெறும் மண்ணாக இருந்திருக்க வேண்டாமா? என்று நிராகரிப்பவன் கூறுவான். ரு2