அதிகாரம் – அல்-நாஸியாத்
அருளப் பெற்ற இடம்: மக்கா |வசனங்கள்: 47
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (மக்களை உண்மையான நம்பிக்கையின் பால்) சுறுசுறுப்பாக ஈர்ப்பவர்கள் மேல் ஆணையாக. (அதாவது அவர்களை சான்றாகக் காட்டுகிறேன்).
- மேலும் (தங்கள்) முடிச்சுகளை உறுதியாகக் கட்டுபவர்கள் மேல் ஆணையாக.
- வேகமாக ஊர்ந்து செல்பவர்கள் மேல் ஆணையாக.
- பின்னர் அவர்கள் மிக அதிகமாக (முன்னேற்றம் பெற்று) மற்றவர்களை முந்துகின்றனர்.
- பின்னர் அவர்கள் (தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட) விவகாரங்களை நிருவகிக்கின்றனர்.
- நடுங்கக்கூடிய (பூமியான)து நடுங்கும் நாளில் (அது நேரிடும்).
- இரண்டாவது (நடுக்கம்) ஒன்று அதனைப் பின்பற்றும்.
- அந்நாளில் (சிலருடைய) உள்ளங்கள் நடுங்கிக் கொண்டிருக்கும்.
- அவர்களின் கண்கள் கீழ் நோக்கியவாறு இருக்கும்.
- அவர்கள் கூறுவர் (உண்மையிலேயே) நாங்கள் எங்களுடைய பழைய நிலைக்கு கொண்டு வரப்படுவோம்.
- என்ன? நாங்கள் அழுகிப்போன எலும்புகளாக ஆகிவிட்டாலுமா?
- அவ்வாறாயின், நிச்சயமாக அது ஒரு பெரும் இழப்பிற்குரிய திரும்புதலேயாகும் என்று அவர்கள் கூறினார்கள்.
- அது ஒரே ஓர் அதட்டல் தான்.
- எனவே அவர்கள் (எல்லாரும் போர்க்) களத்திற்கு வருவார்கள்.
- முஸாவின் செய்தி உமக்கு கிடைத்ததா?
- புனிதப் பள்ளத்தாக்காகிய துவாவில் அவரது இறைவன் அவரை அழைத்துக் கூறிய போது;
- (அதாவது) நீர் ஃபிர்அவ்னிடம் செல்வீராக: ஏனென்றால், அவன் வரம்பு மீறிவிட்டான்.
- நீர் (அவனிடம்) கூறுவீராக: நீ தூய்மையடைய விரும்புகின்றாயா?
- நீ (இறைவனுக்கு) அஞ்சி நடப்பதற்காக நான் உனக்கு உன் இறைவன்பால் வழி காட்டுவேன்.
- எனவே, அவர் அவனுக்கு ஒரு பெரும் அடையாளத்தைக் காட்டினார்.
- ஆனால். அவன் (அதனைப்) பொய்ப்படுத்தி, மாறு செய்தான்.
- பின்னர் அவன் (முஸாவுக்கெதிராகப்) பெரும் சூழ்ச்சி செய்பவனால் (அவரைப்) புறக்கணித்து விட்டான்.
- மேலும் அவன் (அவையினரை) ஒன்று திரட்டி (பொதுமக்களுக்கு) அறிவிப்பு கொடுத்தான்.
- நான் உங்களுடைய மேலான இறைவனாவேன் என்று அவன் கூறினான்.
- எனவே அல்லாஹ் அவனை மறுஉலக, மற்றும் இவ்வுலகத் தண்டனைக்காகப் பிடித்து விட்டான்.
- நிச்சயமாக இதில், (தமது இறைவனுக்கு) அஞ்சுபவருக்கு ஒரு படிப்பினை உள்ளது. ரு1
- படைப்பதற்கு மிகக் கடினமானது நீங்களா? அல்லது அவன் படைத்துள்ள வானமா?
- அவன் அதன் உயரத்தை உயர்த்தி, அதனை முழுமைப்படுத்தினான்.
- அவன் அதன் இரவை இருளாக்கி, அதன் முற்பகல் நேரத்தை (ஒளிமயமாக்கி) வெளிப்படுத்தினான்.
- அத்துடன் பூமியை அவன் விரிவுபடுத்தினான்.
- அவன் அதிலிருந்து அதன் நீரையும், அதன் புல்வெளியையும் வெளிப்படுத்தினான்.
- மலைகளை அவன் உறுதியானதாக ஆக்கினான்.
- (இவையெல்லாம்) உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயனளிப்பதாகும்.
- ஆனால் மாபெரும் பேராபத்து வரும்போது,
- மனிதன் எதற்காகப் பெரும் முயற்சி செய்தானோ அதை(யெல்லாம்) அவன் அந்நாளில் நினைத்துப் பார்ப்பான்.
- பார்ப்பவனுக்கு நரகம் தெளிவாக வெளிப்படுத்தப்படும்.
- எனவே எவன் வரம்பு மீறி.
- இவ்வுலக வாழ்கைக்கு முதன்மையளிக்கின்றானோ,
- நிச்சயமாக நரக நெருப்பே (அவனது) தங்குமிடமாகும்.
- ஆனால். எவன் தனது இறைவனின் மகிமைக்கு அஞ்சி, தீய விருப்பங்களை விட்டுத் தன்னைத் தடுத்துக் கொண்டானோ,
- நிச்சயமாக சொர்க்கமே (அவனுடைய) தங்குமிடமாகும்.
- அவர்கள் உம்மிடம் அந்த நேரத்தைப் பற்றி, அது எப்பொழுது வரும் என்று கேட்கின்றனர்.
- அத(ன் வருகையி)னைப் பற்றிய பேச்சுடன் உமக்கு என்ன தொடர்பு இருக்கிறது?
- அதன் இறுதி(யான அறிவு) உமது இறைவனிடமுள்ளது.
- நிச்சயமாக நீர் அதற்கு அஞ்சபவரை எச்சரிக்கக் கூடியவரேயாவீர்.
- அவர்கள் அதனைக் காணும் நாளில், அவர்(இவ்வுலகில்) ஒரு மாலை நேரம் அல்லது அதன் காலை நேரம் மட்டுமேயன்றி தங்கியிருந்ததில்லை போன்று (அவர்கள் நிலை) இருக்கும். ரு2