அதிகாரம் – அல்மும்தஹன
அருளப் பெற்ற இடம்:
மதீனா | வசனங்கள்: 14
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளானனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவனாக இருப்பவனை நண்பர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். உங்களிடம் வந்திருக்கின்ற உண்மையை அவர்கள் மறுத்த நிலையில் நீங்கள் அவர்களுக்கு அன்புத்தூது அனுப்புகின்றீர்கள். நீங்கள் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்விடம் நம்பிக்கை கொள்கின்றீர்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தூதரையும் உங்களையும் (உங்கள் வீடுகளிலிருந்து) அவர்கள் வெளியேற்றுகின்றனர். நீங்கள் என் பாதையில் பெரும் முயற்சி செய்து என் திருப்தியைத் தேடுவதற்காக நீங்கள் வெளியேறினால், உங்களுள் சிலர் அவர்களுக்கு இரகசியமாக அன்புத்தூது அனுப்புகின்றனர். அதே வேலையில், நீங்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நான் நன்கு அறிகின்றேன். உங்களுள் எவர் அதனைச் செய்கின்றாரோ, நிச்சயமாக அவர் நேரான பாதையிலிருந்து விலகிவிட்டார்.
- அவர்கள் உங்களை வெற்றி கொண்டால், அவர்கள் உங்களது பகைவர்களாகித் தங்கள் கைகளையும் நாவுகளையும் தீய நோக்கத்துடன் உங்களை நோக்கி நீட்டுவார்கள். மேலும் நீங்கள் நிராகரிப்பவர்களாகி விடவேண்டுமென்று அவர்கள் உளமார விரும்புகின்றனர்.
- மறுமை நாளில் உங்கள் உறவினர்களோ, உங்கள் பிள்ளைகளோ உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கமாட்டார்கள். அவன் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவான். மேலும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று பார்ப்பவனாக இருக்கின்றான்.
- இப்ராஹீமிடத்திலும் அவரைச் சேர்ந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. அதாவது அவர்கள் தம் சமுதாயத்தினரிடம்: நாங்கள் உங்களிடமிருந்தும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றிலிருந்தும், முற்றாக விலகிக்கொள்கின்றோம்; நீங்கள் நம்புபவற்றையெல்லாம் நாங்கள் நிராகரிகின்றோம்; ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் மீது நீங்கள் நம்பிக்கை கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையில் நிலையான பகைமையும் வெறுப்பும் தோன்றியுள்ளன எனக் கூறியபோது, ஆனால் இப்ராஹீம் தம் தந்தையிடம், நிச்சயமாக நான் உமக்காகப் பாவமன்னிப்புக் கோருவேன். எனினும் அல்லாஹ்வுக்கு மாற்றமாக என்னால் உமக்காக எதனையும் செய்யவியலாது எனக் கூறியது விதிவிலக்காகும். (அடுத்து அவர்கள் இறைவனை வேண்டினர்:) எங்கள் இறைவா! நாங்கள் உன்னிடமே நம்பிக்கை வைத்துள்ளோம். (கழிவிரக்கத்துடன்) நாங்கள் உன்னிடமே திரும்புகின்றோம். (இறுதியாக) திரும்பி வரவேண்டியதும் உன்னிடமே.
- எங்கள் இறைவா! நிராகரிப்பவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதிருப்பாயாக; எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே வல்லமையுள்ளவனும், நுண்ணரிவுள்ளவனுமாவாய்.
- நிச்சயமாக அவர்களிடம் உங்களுக்கு – அல்லாஹ்வையும் இறுதி நாளையும் (சந்திப்பதை) நம்பியிருப்பவர்களுக்கு – ஓர் அழகிய முன்மாதிரியிருக்கின்றது. புறக்கணித்து விடுபவர், நிச்சயமாக அல்லாஹ் தன்னிறைவு பெற்றவனும் எல்லாப் புகழுக்கும் உரியவனுமாவான் (என்பதனை நினைவில் கொள்ளவேண்டும்). ரு1
- அல்லாஹ் உங்களுக்கும் அவர்களுள் (தற்போது) உங்கள் பகைவர்களாக இருப்பவர்களுக்குமிடையே நேசத்தை ஏற்படுத்தி விடலாம். அல்லாஹ் பேராற்றல் உள்ளவனாவான். மேலும் அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணைக்காட்டுபவனுமவான்.
- (உங்கள்) மார்க்கத் தொடர்பாக உங்களுடன் போர் செய்யாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும் நீங்கள் நன்மை செய்து, அவர்களிடம் நீதியாக நடப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. அல்லாஹ் நீதியாக நடப்பவர்களை நேசிக்கின்றான்.
- (உங்கள்) மார்க்கத் தொடர்பாக உங்களுடன் போர் செய்தவர்களுடனும், உங்களை உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேற்றியவர்களுடனும், உங்களை வெளியேற்ற (மற்றவர்களுக்கு) உதவி செய்தவர்களுடனும் நீங்கள் நட்புக்கொள்வதைத்தான் அல்லாஹ் தடுக்கின்றான். அத்தகையவர்களுடன் நட்புக் கொள்பவர்கள் அநீதி இழைப்பவர்களேயாவார்கள்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நம்பிக்கை கொண்ட பெண்கள் அகதிகளாக உங்களிடம் வரும்போது, நீங்கள் அவர்களைச் சோதித்துப் பாருங்கள். அல்லாஹ் அவர்களின் நம்பிக்கையை நன்கு அறிகின்றான். பின்னர் அவர்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொண்டவர்கள்தாம் என்று நீங்கள் அறிந்தால், அவர்களை நிராகரிப்பாளர்களிடம் திருப்பி அனுப்பாதீர்கள். இப்பெண்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் இப்பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களும் அல்ல. எனினும் (இவர்களின் நிராகரிப்பவர்களான கணவர்கள், திருமணத்தின் போது இவர்களுக்காக) அவர்கள் செலவு செய்ததை நீங்கள் கொடுத்துவிடுங்கள். பின்னர் நீங்கள் (இவர்களை நிராகரிப்பவர்களிடமிருந்து விடுவித்து) இவர்களுக்குரிய மஹர்களை இவர்களுக்குக் கொடுத்து, இவர்களை மணந்து கொள்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நிராகரிக்கும் பெண்களுடன் (உங்கள்) இல்லறத் தொடர்புகளை வைத்துக் கொள்ளாதீர்கள். எனினும் நீங்கள் (அவர்களுக்காகச்) செலவு செய்ததை (அவர்கள் நிராகரிப்பவர்களிடம் ஓடிச் சென்றுவிட்டால், அந்த நிராகரிப்பாளர்களிடம்) கேளுங்கள்; (நிராகரிப்பாளர்களின் மனைவிகள் இஸ்லாத்தைத் தழுவி முஸ்லிம்களிடம் வந்தால், நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் (திருமணத்தின்போது) செலவு செய்ததை (முஸ்லிம்களிடம்) கேட்கட்டும். இது அல்லாஹ்வின் தீர்ப்பாகும். அவன் உங்களுக்கிடையே தீர்ப்பு வழங்குகின்றான். அல்லாஹ் நன்கு அறிபவனும் நுண்ணறிவுடையோனுமாவான்.
- உங்கள் மனைவிகளுள் எவளாவது உங்களை விட்டு பிரிந்து நிராகரிப்பவர்களிடம் சென்றதன் பின்னர், நீங்கள் பழிவாங்கி (நிராகரிப்பவர்களிடமிருந்து சில போர்க்களப் பொருள்களைப் பெற்றீர்களா)னால், எவர்களின் மனைவிகள் சென்று விட்டனரோ அவர்கள் (தங்கள் மனைவிகளுக்கும்) செய்த செலவுக்குச் சமமானதை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்.
- நபியே! நம்பிக்கை கொண்ட பெண்கள், தாங்கள் அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்க மாட்டார், திருடமாட்டார், விபச்சாரம் செய்யமாட்டார், தங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டார், தாங்களாகவே வேண்டுமென்று புனைந்துரைக்கும் அவதூறான எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தமாட்டார். நல்லவற்றில் உமக்கு மாறு செய்யமாட்டார் என்று (உமது கைகளில்) நம்பிக்கை உடன்படிக்கை செய்துகொண்டு உம்மிடம் வரும்போது, நீர் அவர்களின் உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டு, அவர்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் வேண்டுவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணைக்காட்டுபவனுமவான்.
- நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளான சமுதாயத்தினரை நீங்கள் நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நிராகரிப்பவர்கள் கல்லறைகளிலுள்ளவர்களிடம் நம்பிக்கையிழந்து விட்டது போன்று, நிச்சயமாக அவர்கள் மறுமை வாழ்க்கையில் நம்பிக்கையிழந்துவிட்டனர். ரு2