26- அஷ்ஷூஅரா

அதிகாரம் : அஷ்ஷூஅரா
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள் : 228

பிரிவுகள் : 11


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஓதுகின்றேன்).
  2. தா, ஸீன், மீம், (இதனை இறக்குபவன்) தூயவன்; நன்கு கேட்பவன்; மேன்மை மிக்கவன்(ஆவான்)1.
  3. இவை, (கருத்துக்களைத்) தெளிவாக விளக்கும் வேத வசனங்களாகும்.
  4. அவர்கள் நம்பிக்கையாளர்கள் ஆகவில்லை என்பதற்காக நீர் ஒருவேளை உம் உயிரையே மாய்த்துக் கொள்வீர் போலும்2. 
  5. நாம் விரும்பினால் அவர்களின் கழுத்துகள் குனிந்து விடும் வகையில் வானிலிருந்து ஓர் அடையாளத்தை அவர்கள் மேல் இறக்கியிருப்போம்.
  6. அவர்களிடம் அளவற்ற அருளாள(னான  இறைவ) னிடமிருந்து புதியதொரு போதனை எப்பொழுது வந்தாலும், அவர்கள் அதனைப் புறக்கணிக்காமல் இருந்ததில்லை.
  7. அவர்கள் (இறை வசனங்களைப்) பொய்யாக்கி விட்டனர். எனவே அவர்கள் ஏளனம் செய்ததின் உண்மை நிச்சயமாக விரைவில் அவர்களிடம் வந்து விடும்.
  8. அவர் பூமியைப் பார்க்கவில்லையா? சிறந்த பல்வேறு இணைகளை அதில் நாம் உற்பத்தி செய்யவில்லையா?
  9. நிச்சயமாக இதில் ஒரு (பெரும்) அடையாளம் உள்ளது4. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  10. மேலும் நிச்சயமாக உமது இறைவனே வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு1
  11. உமது இறைவன் மூஸாவை (இவ்வாறு கூறி அழைத்த நேரத்தை நினைத்துப் பார்ப்பீராக) நீர் அநீதியிழைக்கும் சமுதாயமாகிய
  12. ஃபிர்அவ்னின் சமுதாயத்திடம் செ(ன்று  இவ்வாறு சொ)ல்வீராக, அவர்கள் இறையச்சம் கொள்வதில்லையா?
  13. (அதற்கு) அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யாக்குவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்.
  14. மேலும் என் உள்ளம் இடுங்குகிறது, (அத்துடன்) என் நாவு தங்குதடையின்றிப் பேசுவதில்லை. எனவே நீ, (என்னுடன் வருமாறு) ஹாரூனுக்கு அறிவிப்பாயாக.
  15. அவர்களுக்கு என் பேரில் ஒரு குற்றச்சாட்டும் உள்ளது5. எனவே அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்களோ என்றும் நான் அஞ்சுகிறேன்6.
  16. அவன் கூறினான்: அவ்வாறு நிகழாது. எனவே நீங்கள் இருவரும் எம் அடையாளங்களுடன் செல்லுங்கள். நாம் (உங்கள் வேண்டுதல்களைக்) கேட்பவராக உங்களுடன் இருப்போம்7.
  17. எனவே நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று இவ்வாறு கூறுங்கள், நாங்கள் எல்லா உலகங்களுக்குமுரிய இறைவனின் தூதர்கள்.
  18. நீ இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பி விட வேண்டும் (என்று உன்னிடம் கூறுவதற்காக நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்).
  19. ஃபிர்அவ்ன் கூறினான்: நீர் சிறுவராக இருந்த போது நாங்கள் உம்மை எங்களுக்கு மத்தியில் வளர்க்கவில்லையா? நீர் உமது வாழ்க்கையின் பல ஆண்டுகள் எங்களிடையே தங்கியிருந்தீர்.
  20. மேலும் நீர் செய்த அந்தச் செயலைச் செய்து விட்டீர். மேலும் நீர் நன்றியில்லாதவர்களைச் சார்ந்தவராவீர்.
  21. (மூஸா) கூறினார்: நான் தவறிழைப்பவர்களைச் சார்ந்தவனாக இருந்த நேரத்தில் நான் அதனைச் செய்தேன்.
  22. எனவே நான் உங்களுக்கு அஞ்சிய போது, உங்களை விட்டு ஓடி விட்டேன். பின்னர் என் இறைவன் எனக்கு முறையான தீர்ப்பை வழங்கி8, என்னை ஒரு தூதராக ஆக்கினான்.
  23. (என்னைக் குழந்தைப் பருவத்தில் வளர்த்தது குறித்து) நீ எனக்குச் சொல்லிக் காட்டும் அந்தப் பேருதவி இஸ்ராயீல் மக்கள் அனைவரையும் நீ அடிமையாக்கியுள்ளதற்கு எதிராகவா(எடுத்துக்காட்டுகிறாய்?).
  24. இதற்கு ஃபிர்அவ்ன், உலகங்களுக்கெல்லாம் இறைவன் எவன்? என்று கேட்டான்.
  25. நீங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ள விரும்பினால், வானங்களுக்கும், பூமிக்கும், அவ்விரண்டிற்குமிடையிலுள்ளவற்றிற்கும் இறைவனாக விளங்குகின்றானே அவன், என்று (மூஸா) கூறினார்.
  26. (இதற்கு ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் (மூஸா என்ன கூறுகிறார் என்பதை) கேட்கவில்லையா? என்றான்.
  27. (மூஸா) "அவன் உங்களுக்கும், உங்கள் முன்னோர்களின் மூதாதையர்களுக்கும் இறைவனாவான்" என்றார்.
  28. (ஃபிர்அவ்ன், மக்களே!) உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் தூதர் நிச்சயமாகப் பைத்தியக்காரரேயாவார்9 என்றான்.
  29. (மூஸா) கூறினார்: நீங்கள் அறிவீர்களாயின், அவன் கிழக்கிற்கும், மேற்கிற்கும், அவ்விரண்டிற்குமிடையிலுள்ளவற்றிற்கும் இறைவனாவான்.
  30. (ஃபிர்அவ்ன்) "என்னையன்றி வேறு கடவுளை நீர் ஏற்படுத்தினால் நிச்சயமாக நான் உம்மைச் சிறைப் பிடிப்பேன்", என்றான்.
  31. (மூஸா உண்மையினைத்) தெளிவுபடுத்தும் (அடையாளம்) ஒன்றினை நான் உம்மிடம் கொண்டு வந்தாலுமா? என்றார்.
  32. (ஃபிர்அவ்ன்) நீர் உண்மையாளராயின் அதனைக் கொண்டு வாரும் என்றான்.
  33. எனவே அவர் தமது தடியைக் கீழே எறிந்தார். உடனே அது ஒரு பாம்பாகக் காணப்பட்டது.
  34. மேலும் அவர் தம் கையை(த் தம் கக்கத்திலிருந்து) வெளியில் எடுத்தார். அப்போது காண்பவர்களுக்கு அது முற்றிலும் வெண்மையாயிருந்தது. ரு2
  35. (இதற்கு ஃபிர்அவ்ன்) தன்னைச் சூழ்ந்திருந்த தலைவர்களிடம் கூறினான்: நிச்சயமாக இவர் நன்கு தேர்ந்த மாயவித்தைக்காரராவார்.
  36. இவர் தமது மாயவித்தையால் உங்களை, உங்கள் நாட்டிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். எனவே நீங்கள் என்ன ஆலோசனை கூறுகிறீர்கள்?  
  37. அவர்கள் கூறினர்: அவரையும், அவரது சகோதரரையும், (சிறிது காலம்) விட்டு வையும். (தகுதியானவர்களைத்) திரட்டிக் கொண்டு வருபவர்களை நகரங்களுக்கு அனுப்பவும்.
  38. திறமை வாய்ந்த ஒவ்வொரு மாயவித்தைக்காரரையும் அவர்கள் உம்மிடம் கொண்டு வரட்டும்.
  39. இதற்கேற்ப மாயவித்தைக் காரர்கள் குறிப்பிட்ட ஒரு நாளில், குறித்த நேரத்தில் ஒன்றுதிரட்டப்பட்டனர்.
  40. நீங்கள் ஒன்று திரண்டு விடுவீர்களா? என்று மக்களிடம் கேட்கப்பட்டது.
  41. மாயவித்தைக்காரர்கள் வென்று விட்டால், நாம் அவர்களைப் பின்பற்றுவோம்.
  42. மாயவித்தைக்காரர்கள் வந்ததும் அவர்கள் ஃபிர்அவ்னிடம், நாங்கள் வென்று விட்டால் எங்களுக்கு ஏதேனும் பரிசு கிடைக்குமல்லவா? என்று வினவினர்.
  43. (இதற்கு ஃபிர்அவ்ன்) ஆம்! அப்போது நீங்கள் எனது ஆதரவைப் பெற்றவர்களைச் சேர்ந்தவர்களாகி விடுவீர்கள் என்றான்.
  44. மூஸா அவர்களிடம், நீங்கள் எறிய வேண்டியதை எறியுங்கள் என்றார்.
  45. அவர்கள் தங்கள் கயிறுகளையும், தங்கள் தடிகளையும் கீழே எறிந்து, ஃபிர்அவ்னின் கண்ணியத்தின் மேல் ஆணையாக நிச்சயமாக நாங்களே  வெற்றி பெறுவோம் என்று கூறினார்கள்.
  46. அப்பொழுது மூஸாவும் தமது தடியை எறிந்தார். உடனே அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கி விட்டது.
  47. அந்நேரத்தில் மாயவித்தைக்காரர்கள் (இறைவன் முன்) சிரம் தாழ்த்தி வணங்குமாறு வீழ்த்தப்பட்டனர்.
  48. அவர்கள் கூறினர்: (எல்லா) உலகங்களின் இறைவனிடம் நம்பிக்கை கொள்கிறோம்.
  49. மூஸா, ஹாரூன் ஆகியவர்களின் (இறைவனிடம் நம்பிக்கை கொள்கிறோம்.)
  50. (இதற்கு ஃபிர்அவ்ன்) நான் அனுமதி வழங்குவதற்கு முன்னரே நீங்கள் அவரிடம் நம்பிக்கை கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக அவர் தாம் உங்களுக்கு மாய வித்தையைக் கற்றுத் தந்த உங்கள் தலைவர். எனவே, நீங்கள் (உங்கள் முடிவை) விரைவில் தெரிந்து கொள்வீர்கள். நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், உங்கள் கால்களையும் (நீங்கள்) மாறு செய்ததனால் துண்டித்து, நிச்சயமாக உங்கள் எல்லோரையும் சிலுவையில் அறைவேன் என்றான்.
  51. அவர்கள் கூறினர் (இதனால் எங்களுக்கு) எந்தத் தீங்குமில்லை ; நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்களாவோம்.
  52. நாங்கள் எல்லோருக்கும் முன்னர் நம்பிக்கை கொண்டவர்களாகி விட்டதனால், எங்கள் இறைவன் எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னிப்பானென்று நிச்சயமாக நாங்கள் நம்புகின்றோம். ரு3
  53. நாம் மூஸாவுக்கு, நீர் என் அடியார்களை இரவோடிரவாக அழைத்துச் செல்வீராக; நிச்சயமாக நீங்கள் பின் தொடரப்படுவீர்கள் என்று வஹி அறிவித்தோம்.
  54. எனவே ஃபிர்அவ்ன் பல நகரங்களுக்கும் (மக்களைத்) திரட்டிக் கொண்டு வருபவர்களை அனுப்பினான்.
  55. (பின்னர் அவன் இவ்வாறு கூறினான்: இஸ்ராயீலின் மக்களாகிய) அவர்கள் ஒரு சிறிய கூட்டத்தினரேயாவர்.
  56. இருப்பினும் அவர்கள் நம்மைக் கோபமூட்டிக் கொண்டிருக்கின்றனர்.
  57. மேலும் நாம் மிகுந்த எச்சரிக்கையுடனிருக்கும் ஒரு பெரும் கூட்டத்தினராவோம். (எனவே நாம் அவர்களை எதிர்த்தாக வேண்டும்).
  58. ஆகவே நாம் அவர்களை (ஃபிர்அவ்னையும், அவனது கூட்டத்தினரையும்) தோட்டங்களிலிருந்தும், நீரூற்றுகளிலிருந்தும் வெளியேற்றி விட்டோம்.
  59. கருவூலங்களிலிருந்தும், கண்ணியமிக்க இடங்களிலிருந்தும் (வெளியேற்றி விட்டோம்).
  60. அவ்வாறே நிகழ்ந்தது. மேலும் நாம் இஸ்ராயீலின் மக்களை அவற்றிற்கு வாரிசாக ஆக்கினோம்10.
  61. பின்னர் விடியற்காலத்தில் அவர்கள் (ஃபிர்அவ்னும், அவனுடைய சமுதாயத்தினரும் இஸ்ராயீல் மக்களைத் தடுத்து நிறுத்த) அவர்களைப் பின் தொடர்ந்து சென்றனர்.
  62. இதன் பிறகு அவ்விரு கூட்டங்களும் ஒன்றையொன்று கண்ட போது, மூஸாவின் தோழர்கள் நிச்சயமாக நாம் பிடிபட்டோம் என்றனர்.
  63. (மூஸா) கூறினார்: அவ்வாறு ஒருபோதும் நடக்காது. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கின்றான்; அவன் எனக்கு (வெற்றிக்குரிய) வழி காட்டுவான்.
  64. அப்பொழுது மூஸாவுக்கு, நீர் உமது தடியால் கடலை அடிப்பீராக என்று நாம் வஹி அறிவித்தோம். இதனால் அது பிரிந்தது. ஒவ்வொரு பகுதியும் ஒரு பெரும் குன்று போல் காணப்பட்டது.
  65. அப்பொழுது நாம் பின்தொடர்வோரை (ஃபிர்அவ்னின் கூட்டத்தினரை) நெருக்கமாக அணுகச் செய்தோம்.
  66. மூஸாவையும், அவருடனிருந்த எல்லோரையும் நாம் காப்பாற்றினோம்.
  67. பின்னர் மற்றவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.
  68. நிச்சயமாக இதில் (மாபெரும்) ஓர் அடையாளம் உள்ளது. ஆனால் (நிராகரிப்பவர்களான) அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  69. நிச்சயமாக உமது இறைவன் வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு4
  70. நீர் அவர்களுக்கு இப்ராஹீமின் நிகழ்ச்சியினை படித்துக் காட்டுவீராக.
  71. அவர் தம் தந்தையிடமும், தம் சமுதாயத்தினரிடமும் நீங்கள் எதை வணங்குகிறீர்கள்? என்று கேட்ட போது,
  72. நாங்கள் சிலைகளை வணங்குகின்றோம். மேலும் நாங்கள் அவற்றைத் தொடர்ந்து வணங்குபவர்களாகவே இருக்கின்றோம் என்று அவர்கள் கூறினர்.
  73. அவர் கேட்டார்: நீங்கள் அவற்றை அழைக்கும் போது, அவை உங்களுடைய அழைப்பைச் செவியேற்கின்றனவா?
  74. அல்லது அவை உங்களுக்கு ஏதாவது பயனோ அல்லது தீங்கோ ஏற்படுத்துகின்றனவா?
  75. அவர்கள் கூறினர்: அவ்வாறன்று. எனினும் எங்கள் முன்னோர்கள் அவ்வாறே செய்து வருவதை நாங்கள் கண்டுள்ளோம்.
  76. அவர் கூறினார்: எதனை நீங்கள் வணங்கி வருகின்றீர்களோ அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?
  77. (அதாவது) நீங்களும், முந்தைய உங்கள் மூதாதையர்களும் (எதை வணங்கி வருகின்றீர்களோ அதைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா?)
  78. (எல்லா) உலகங்களின் இறைவனைத் தவிர நிச்சயமாக அவை (எல்லாம்) எனக்கு எதிரிகளே.
  79. (உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய) அவன் என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர்வழியினையும் காட்டுகின்றான்.
  80. மேலும் உண்பதற்கும், பருகுவதற்கும் அவனே எனக்கு வழங்குகின்றான்.
  81. மேலும் நான் நோயாளியாகி விட்டால், அவனே என்னை நலமடையச் செய்கிறான்.
  82. மேலும் அவன் என்னை மரணமடையச் செய்து, பின்னர் அவன் என்னை உயிர்ப்பிப்பான்.
  83. மேலும் தீர்ப்பு வழங்கும் நாளில் என் குற்றங்களை எனக்கு மன்னிப்பவன் அவனே என்று நான் நம்பி இருக்கிறேன்.
  84. என் இறைவா! எனக்கு ஞானத்தை வழங்கி, என்னை நல்லோருடன் சேர்த்து வைப்பாயாக. 
  85. பின் வருவோருக்கிடையே என்றென்றும் உண்மையான (நிலையான) புகழை எனக்கு வழங்குவாயாக.
  86. மேலும் அருட்கொடைகளைக் கொண்ட தோட்டத்தின் வாரிசுகளைச் சார்ந்தவனாக என்னை ஆக்குவாயாக.
  87. மேலும் என் தந்தையை மன்னித்து விடுவாயாக. அவர் தவறான வழியில் செல்பவர்களைச் சேர்ந்தவராக இருந்தார்.
  88. மேலும் அவர்கள் எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தாதிருப்பாயாக .
  89. அந்நாளில் செல்வமும், ஆண் மக்களும் எந்தப் பயனும் அளிக்காது.
  90. பணிவான உள்ளத்துடன் அல்லாஹ்விடம் வருபவர்களைத் தவிர.
  91. மேலும் (அந்நாளில்) சுவர்க்கம் இறையச்சமுடையவர்களுக்கு அருகில் கொண்டு வரப்படும்.
  92. மேலும் நரகம் வழி தவறியோருக்கு திறக்கப்பட்டிருக்கும்.
  93. நீங்கள் வணங்கி வந்தவை எங்கே என அவர்களிடம் கேட்கப்படும்.
  94. (அதாவது) அல்லாஹ்வைத் தவிர (வணங்கியவை எங்கே?) அவற்றால் உங்களுக்கு உதவ முடியுமா? அல்லது (தங்களுக்கே) அவை உதவிக் கொள்ள முடியுமா?
  95. அப்போது அவர்களும், வழி தவறியோரும் அதனுள் முகங்குப்புற தள்ளப்படுவர்
  96.  இப்லீஸின் கூட்டத்தார் எல்லோரும் (அதனுள் முகங்குப்புற தள்ளப்படுவர்.)
  97. அதில் அவர்கள் தங்களுக்குள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் போது (இவ்வாறு) கூறுவர்.
  98. அல்லாஹ்வின் மேல் ஆணையாக! நாங்கள் (அப்பொழுது) வழி கேட்டில் இருந்தோம்.
  99. (அதாவது) நாங்கள் எல்லா உலகங்களின் இறைவனுக்கு உங்களை சமமாக்கி வைத்த போது,
  100. மேலும் குற்றவாளிகளே எங்களைத் தவறான வழியில் நடத்தினர்.
  101. எனவே (இன்று) நமக்குப் பரிந்து பேசுபவர் எவரும் இல்லை.
  102. மேலும் இரக்கம் காட்டும் நண்பர் எவரும் இல்லை.
  103. எனவே (உலகிற்குத்) திரும்பிச் செல்ல முடிந்தால், நாங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களைச் சேர்ந்தவர்களாகி விடுவோம்.
  104. இதில் ஒரு பெரும் அடையாளம் உள்ளது. ஆனால் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  105. நிச்சயமாக உமது இறைவன் வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு5
  106. நூஹ்வுடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யாக்கினர்11.
  107. அவர்களின் சகோதரர் நூஹ், அவர்களிடம் நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா? எனக் கூறிய போது (அவரைப் பொய்யாக்கினர்).
  108. நிச்சயமாக நான் நம்பிக்கைக்குரிய தூதராக உங்களிடம் வந்துள்ளேன்.
  109. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள்.
  110. நான் இ(ச் சேவை செய்வ)தற்காக எந்தக் கூலியும் உங்களிடம் கேட்பதில்லை. எனக்குரிய நற்பலன் எல்லா உலகங்களுக்குமுரிய இறைவனிடம் மட்டுமே உள்ளது.
  111. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
  112. மிக்க இழிவானவர்கள் உம்மைப் பின்பற்றியிருக்கும் அதே வேளையில், நாங்கள் உம்மிடத்து நம்பிக்கை கொள்ள வேண்டுமா என்று அவர்கள் கூறினர்.
  113. (இதற்கு) அவர் (இவ்வாறு) கூறினார்: அவர்கள் செய்து வரும் வேலை குறித்து எனக்குத் தெரியுமா என்ன?
  114. நீங்கள் புரிந்து கொள்வீர்களாயின் அவர்களிடம் கேள்வி, கணக்குக் கேட்பது என் இறைவனின் பொறுப்பாகும்.
  115. நம்பிக்கை கொண்டவர்(களாக என்னிடம் வருபவர்)களை நான் விரட்டி விடப் போவதில்லை.
  116. நான் மிகத்தெளிவாக அச்சமூட்டி எச்சரிக்கை விடுப்பவனே ஆவேன்.
  117. அவர்கள் கூறினார்கள்: நூஹே! நீர் (இதனை விட்டு) விலகிக் கொள்ளவில்லையாயின், நீர் கல்லெறிந்து கொல்லப்படுவீர்.
  118. (இதற்கு) அவர் கூறினார்: என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யாக்கி விட்டனர்.
  119. எனவே, நீ எனக்கும், அவர்களுக்குமிடையில் இறுதியான தீர்ப்பு வழங்கி, என்னையும், என்னுடனுள்ள நம்பிக்கை கொண்டவர்களையும் (எதிரிகளின் தீங்கிலிருந்து) காப்பாற்றுவாயாக!
  120. எனவே, நாம் அவரையும், அவருடனிருந்தவர்களையும் (அவர்களால்) நிரப்பப்பட்ட ஒரு கப்பலின் மூலம் காப்பாற்றினோம்.
  121. இதன் பின்னர் எஞ்சியிருந்தவர்களை நாம் மூழ்கடித்து விட்டோம்.
  122. இதில் ஒரு மாபெரும் அடையாளம் உள்ளது. எனினும் அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  123. நிச்சயமாக உமது இறைவன் வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு6
  124. (இவ்வாறே) ஆது  சமுதாயத்தினரும் தூதர்களைப் பொய்யாக்கினர்12.
  125. அவர்களின் சகோதரர் ஹூது அவர்களிடம், நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சமாட்டீர்களா எனக் கூறிய போது (அவர்கள் நிராகரித்தனர்).
  126. நிச்சயமாக நான் நம்பிக்கைக்குரிய தூதராக உங்களிடம் வந்துள்ளேன்.
  127. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
  128. நான் இ(ச் சேவையைச் செய்வ) தற்கு உங்களிடம் எந்தக் கூலியும் கேட்பதில்லை. எனக்குரிய நற்பலன் எல்லா உலகங்களுக்குமுரிய இறைவனிடமே உள்ளது.
  129. வீண் பெருமைக்காக ஒவ்வொரு குன்றிலும் நீங்கள் (நினைவு) மண்டபத்தைக் கட்டுகிறீர்களா?
  130. நீங்கள் நிலைத்திருப்பதற்காக தொழிற்கூடங்களை நிறுவுகிறீர்களா?
  131. நீங்கள் (எவரையும்) பிடித்துக் கொண்டால் , கொடுங்கோலனைப் போன்று பிடித்துக் கொள்கிறீர்களா13?
  132. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
  133. நீங்கள் தெரிந்து கொண்ட (இந்தப்) பொருள்கள் மூலமாக உங்களுக்கு உதவி செய்தவனுக்கு அஞ்சி நடங்கள்.
  134. அவன் உங்களுக்கு கால்நடைகளாலும், ஆண் மக்களாலும் உதவி செய்துள்ளான்.
  135. தோட்டங்கள், நீரூற்றுக்கள் ஆகியவற்றாலும் (உதவி செய்துள்ளான்).
  136. நிச்சயமாக நான் பெருந் தண்டனைக்குரிய நாளைக் குறித்து (அது) உங்கள் மீது(வருமென) அஞ்சுகிறேன்.
  137. அவர்கள் கூறினார்கள்: நீர் அறிவுரை கூறுவதும், கூறாதிருப்பதும் எங்களுக்கு ஒன்றே.
  138. இது முன்னுள்ளோரின் பழக்கமேயன்றி வேறில்லை14.
  139. மேலும் நாங்கள் (ஒருபோதும்) தண்டிக்கப்பட மாட்டோம்.
  140. எனவே அவர்கள், அவரைப் பொய்யாக்கினர். இதனால் நாம் அவர்களை அழித்து விட்டோம். நிச்சயமாக இதில் மாபெரும் ஓர் அடையாளம் உள்ளது. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்ளவில்லை.
  141. நிச்சயமாக உமது இறைவன் வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு7
  142. ஸமூது சமுதாயத்தினரும் தூதர்களைப் பொய்யாக்கினர்.
  143. அவர்களின் சகோதரர் ஸாலிஹ், அவர்களிடம் : நீங்கள் இறைவனுக்கு அஞ்சமாட்டீர்களா? என்று கூறியபோது (அவர்கள் நிராகரித்தனர்).
  144. நிச்சயமாக நான் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராக உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளேன்.
  145. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
  146. நான் இதற்காக எந்தக் கூலியும் உங்களிடம் கேட்பதில்லை. எனக்குரிய நற்பலன் எல்லா உலகங்களுக்குமுரிய இறைவனிடமே உள்ளது.
  147. நீங்கள் இங்குள்ளவற்றில் பாதுகாப்புடன் விட்டு வைக்கப்படுவீர்(கள் என்று நினைக்கிறீர்)களா?
  148. அதாவது தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும்
  149. தானிய வயல்களிலும் (கனம் மிகுந்த) பழங்களால் ஒடியப் போகும் பேரீச்ச மரங்களிலும்
  150. நீங்கள் மலைகளைக் குடைந்து எளிதாக வீடுகளை அமைக்கிறீர்கள்.
  151. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
  152. வரம்பு மீறி நடப்போரின் வார்த்தைகளுக்கு நீங்கள் கட்டுப்படாதீர்கள்.
  153. (வரம்பு மீறி நடக்கும்) அவர்கள் நாட்டில் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார்கள். மேலும் அவர்கள் சீர்திருத்தம் செய்வதில்லை.
  154. (நிராகரிப்பவர்களான) அவர்கள் (இவ்வாறு) கூறினர்: நீர் உணவு அளிக்கப்படுகின்றவரே15.
  155. நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயாவீர். எனவே நீர் உண்மையாளராயின், ஏதேனும் ஓர் அடையாளத்தைக் கொண்டு வாரும்.
  156. அவர் கூறினார்: இதோ ஒரு பெண் ஒட்டகம். இதற்கு நீர் அருந்தும் உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட நாளில் உங்களுக்கும் (ஒரு வகையான) நீர் அருந்தும் உரிமை உண்டு.
  157. நீங்கள் அதற்கு எத்  தீங்கும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால், ஒரு பெரிய நாளின் தண்டனை உங்களைப் பற்றிக் கொள்ளும்.
  158. (இதனைச் செவியேற்றிருந்தும்) அவர்கள் அதன் கால்களைத் துண்டித்து, பின்னர் வருந்துபவர்களாகி விட்டனர்.
  159. எனவே, அவர்களைத் தண்டனை பற்றிக் கொண்டது. நிச்சயமாக இதில் ஓர் மாபெரும் அடையாளம் உண்டு. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  160. நிச்சயமாக உமது இறைவன் வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு8
  161. லூத்தின் சமுதாயத்தினரும் தூதர்களைப் பொய்யாக்கினர்.
  162. அவர்களின் சகோதரர் லூத், அவர்களிடம் நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா என்று கூறிய போது (அவர்கள் மறுத்தனர்).
  163. நிச்சயமாக நான் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராக உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளேன்.
  164. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
  165. நான் இ(ச் சேவையைச் செய்வ)தற்காக எந்தக் கூலியும் உங்களிடம் கேட்பதில்லை. எனக்குரிய நற்பலன் எல்லா உலகங்களுக்குமுரிய இறைவனிடமே உள்ளது.
  166. நீங்கள் எல்லாப் படைப்புகளும் ஆண்களிடம் வருகிறீர்களா?
  167. மேலும் உங்களுக்காக, உங்கள் இறைவன் படைத்த உங்கள் மனைவிகளை நீங்கள் விட்டு விடுகின்றீர்களா? அதுமட்டுமன்று, நீங்கள் (இயற்கை) வரம்பை மீறும் சமுதாயமாவீர்கள்.
  168. அவர்கள் கூறினர்: லூத்தே! நீர் விலகிக் கொள்ளவில்லையாயின் நிச்சயமாக நீர் நாடு கடத்தப்படுவீர்.
  169. லூத் கூறினார்: நிச்சயமாக நீங்கள் செய்வதை நான் அறவே விரும்பவில்லை.
  170. என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும், அவர்களது செயல்களிலிருந்து காப்பாயாக.
  171. எனவே நாம் அவரையும், அவரது குடும்பத்தினர் யாவரையும் காப்பாற்றினோம்.
  172. பின்னால் நின்று விட்டவர்களுள் ஒரு கிழவியைத் தவிர.
  173. (லூத்தைக் காப்பாற்றிய) பின்னர் மற்றவர்கள்களையெல்லாம் நாம் அழித்து விட்டோம்.
  174. நாம் அவர்கள் மீது (கல்) மழையொன்றைப் பொழியச் செய்தோம். எச்சரிக்கப்பட்டவர்களின் (மேல் பொழிந்த) மழை மிக்க தீயது.
  175. நிச்சயமாக இதில் ஓர் மாபெரும் அடையாளம் உண்டு. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  176. நிச்சயமாக உமது இறைவன் வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு9
  177. காட்டு வாழ் மக்கள்16 தூதர்களைப் பொய்யாக்கினர்.
  178. ஷூஐபு, அவர்களிடம் (இவ்வாறு) கூறியபோது (அவர்கள் பொய்யாக்கினர்) நீங்கள் இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா
  179. நிச்சயமாக நான் நம்பிக்கைக்குரிய ஒரு தூதராக உங்களிடம் வந்துள்ளேன்.
  180. எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, எனக்குக் கட்டுப்பட்டு நடங்கள்17.
  181. நான் இச் சேவைக்காக எந்தக் கூலியும் உங்களிடம் கோருவதில்லை. எனக்குரிய நற்பலன் எல்லா உலகங்களுக்குமுரிய இறைவனிடமே உள்ளது.
  182. நீங்கள் அளவினை முழுமையாகக் கொடுங்கள். (மற்றவர்களுக்குக்) குறைத்துக் கொடுப்பவர்களாகாதீர்கள்.
  183. சரியான தராசு கொண்டு நிறுத்துக் கொடுங்கள்.
  184. நீங்கள் மக்களுக்கு அவர்களுக்குரிய பொருட்களைக் குறைவாகக் கொடுக்காதீர்கள். மேலும் நாட்டில் குழப்பம் விளைவிக்க ஒழுக்கமற்ற செயலில் ஈடுபடாதீர்கள்.
  185. உங்களையும், உங்களுக்கு முன்னுள்ள படைப்பினங்களையும் படைத்தவனுக்கு அஞ்சுங்கள்.
  186. (அவரது சமுதாயத்தினர்) கூறினர்: நீர் உணவளிக்கப்படுகின்றவரே18.
  187. நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதரே. நிச்சயமாக நாங்கள் உம்மைப் பொய்யர்களைச் சேர்ந்தவராகக் கருதுகின்றோம்.
  188. எனவே நீர் உண்மையாளராயின் மேகத்தின் ஒரு துண்டை எங்கள் மேல் விழச் செய்யும்19.
  189. (இதற்கு ஷூஐபு) நீங்கள் செய்து கொண்டிருப்பதை என் இறைவன் நன்கு அறிகின்றான் என்றார்.
  190. ஆனால் அவர்கள் அவரைப் பொய்யாக்கினர். எனவே, நிழலுடைய நாளின் தண்டனை அவர்களைப் பற்றிக் கொண்டது. நிச்சயமாக அது பயங்கரமான நாளின் தண்டனையாக இருந்தது.
  191. நிச்சயமாக இதில் மாபெரும் ஓர் அடையாளம் உண்டு. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் நம்பிக்கை கொள்வதில்லை.
  192. நிச்சயமாக உமது இறைவன் வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான். ரு10
  193. நிச்சயமாக (க் குர்ஆனாகிய) இது எல்லா உலகங்களின் இறைவனிடத்திலிருந்து இறக்கப்பட்டதே.
  194. இத்துடன் நம்பிக்கைக்குரிய ஆவி இறங்கியுள்ளது.
  195. நீர் ஓர் எச்சரிக்கையாளராக விளங்க உமது  உள்ளத்தில் (இறங்கியுள்ளது).
  196. (மிகத் தெளிவானதும்) விளக்கமான(துமான) அரபு மொழியில் (இறங்கியுள்ளது)
  197. நிச்சயமாக இது(குறித்து) முன்னுள்ள வேதங்களிலும் (குறிப்பிடப்பட்டு) உள்ளது.
  198. (குர்ஆனாகிய) இதனை இஸ்ராயீலின் மக்களிடையேயுள்ள அறிஞர்கள் அறிகிறார்கள் என்பது அவர்களுக்கு (ப் போதிய) ஓர் அடையாளம் இல்லையா?20
  199. நாம் இதனை அரபியல்லாத ஒருவருக்கு இறக்கியிருந்தால்,
  200. மேலும் அவர் இதனை (நிராகரிப்பவர்களாகிய) அவர்களுக்குப் படித்துக் காட்டினாலும், அவர்கள் ஒருபோதும் அவர் மீது நம்பிக்கை கொண்டிருக்க மாட்டார்கள்21.
  201. இவ்வாறே நாம் குற்றவாளிகளின் உள்ளங்களில் இதனைப் புகுத்தியுள்ளோம்.
  202. அவர்கள் வேதனையளிக்கக்கூடிய தண்டனையைக் கண்டு கொள்ளும் வரை அதன் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.
  203. அ(த் தண்டனையான)து அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் திடீரென அவர்களை வந்தடையும்.
  204. அப்பொழுது அவர்கள் எங்களுக்குக் காலக்கெடு அளிக்கப்படுமா? என்று கூறுவார்கள்.
  205. இவர்கள் தாம் எமது தண்டனையை விரைந்து (கொண்டு வருமாறு) வேண்டினரா?
  206. உமக்குத் தெரியாதா? நாம் அவர்களைச் சில வருடங்கள் (இவ்வுலகப் பொருள்களிலிருந்து) பயன் பெறச் செய்து,
  207. பின்னர் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (தண்டனையான) து அவர்களிடம் வந்தால்,
  208. அவர்களுக்குப் பயன்படுமாறு வழங்கப்பட்டது அவர்களுக்கு எந்தப் பலனையும் அளிக்காது.
  209. எச்சரிப்பவர்கள் (அனுப்பப்பட்டு) இராத எந்த நகரத்தையும் நாம் ஒருபோதும் அழித்ததில்லை.
  210. அவர்கள் அறிவுரை பெறவே (அவ்வாறு செய்தோம்). நாம் அநீதி இழைப்பவர்கள் அல்ல.
  211. ஷைத்தான்கள் (குர்ஆனாகிய) இதனை எடுத்துக் கொண்டு இறக்கவில்லை.
  212. இதற்கான தகுதி அவர்களுக்கு இல்லை. மேலும் (இதற்குரிய) ஆற்றலும் அவர்களுக்கு இல்லை.
  213. நிச்சயமாக அவர்கள் (இறை வசனத்தைக் கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளனர்.
  214. எனவே நீர் அல்லாஹ்வுடன் வேறெந்தக் கடவுளையும் அழைக்காதீர். அவ்வாறு செய்தால் நீர் தண்டனைக்குள்ளாக்கப் படுபவர்களைச் சார்ந்தவராகி விடுவீர்.
  215. நீர் (முதலில்) உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக.
  216. உம்மைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களுக்காக நீர் உம் (கருணை) இறக்கையை விரிப்பீராக.
  217. பின்னர் அவர்கள் உமக்குக் கட்டுப்படாவிடில், நீங்கள் செய்வதிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன் என்று கூறுவீராக.
  218. மேலும், வல்லவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவ(னுமாகிய இறைவ)னிடமே நம்பிக்கை வைப்பீராக.
  219. நீர் (தனிமையில் தொழுவதற்காக) நிற்கும் போது அவன் உம்மைக் காண்கின்றான்.
  220. சிரம் பணிந்து வணங்கும் கூட்டத்தினருள் நீர் இங்குமங்கும் செல்வதையும்22 (அவன் காண்கின்றான்)
  221. நிச்சயமாக அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
  222. ஷைத்தான்கள் எவர்கள் மீது இறங்குகின்றனர் என்பதை நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா?
  223. பொய்யுரைக்கும் ஒவ்வொரு பாவியின்  மீதும் அவர்கள் இறங்குகின்றனர்.
  224. அவர்கள் வதந்தியைத் தெரிவிக்கின்றனர். அவர்களுள் பெரும்பாலார் பொய்யர்களாவர்.
  225. மேலும் கவிஞர்களை வழி தவறியவர்களே பின்பற்றுகின்றனர்23.
  226. (கவிஞர்களாகிய) அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் குறிக்கோளின்றி அலைந்து திரிவதை24 நீர் காணவில்லையா?
  227. மேலும் அவர்கள் தாம் செய்யாததைக் கூறுகின்றனர்.
  228. (கவிஞர்களுள்) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிபவர்களாகவும், (தங்கள் கவிதைகளில்) அல்லாஹ்வைப் பற்றி அதிகமாக நினைவு கூர்பவர்களாகவும், தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்ட பின்னரே (நியாயமான முறையில்) திருப்பித் தாக்குபவர்களாகவும் விளங்குபவர்களைத் தவிர, அநீதியிழைப்பவர்கள் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டிய இடத்தை விரைவில் தெரிந்து கொள்வார்கள். ரு11

Powered by Blogger.