27- அல்-நம்ல்

அதிகாரம்: அல்-நம்ல்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 94

பிரிவுகள் : 7


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகிறேன்).
  2. தா, ஸீன்_ தூயவன்; நன்கு கேட்பவன்(அதாவது இதை இறக்கியவன் தூயவனும், வேண்டுதல்களைக் கேட்பவனுமான இறைவனாவான்). இவை குர்ஆன் மற்றும் தெளிவான ஒரு வேதத்தின் வசனங்களாகும்.
  3. நம்பிக்கையாளர்களுக்கு (இது) ஒரு வழிகாட்டியும், நற்செய்தியுமாகும்.
  4. (நம்பிக்கையாளர்களாகிய) அவர்கள் தொழுகையை நிலைநாட்டுபவரும், மேலும் ஸக்காத்து கொடுப்பவரும், மறுமையில் உறுதி, நம்பிக்கை கொள்பவருமாவர்.
  5. மறுமையில் நம்பிக்கை கொள்ளாதாரின் செயல்களை நாம் அவர்களுக்கு அழகு வாய்ந்ததாக்கி(க் காட்டி) யுள்ளோம்1. எனவே அவர்கள் தடுமாறித் திரிகின்றனர்.
  6. அத்தகையோருக்குத் தீய தண்டனை உண்டு. அவர்கள் தாம் மறுமையில் மிகவும் இழப்பிற்குரியோர் ஆவர்.
  7. நிச்சயமாக ஞானம் மிக்கோனும், நன்கு அறிந்தோனுமாகிய ஒருவனிடமிருந்து இந்தக் குர்ஆன் உமக்கு வழங்கப்படுகிறது.
  8. மூஸா, தம் குடும்பத்தினரிடம் இவ்வாறு கூறிய நேரத்தை (நினைத்துப் பார்ப்பீராக). நான் ஒரு நெருப்பைக் கண்டேன்2. நிச்சயமாக நான் உங்களுக்கு அதிலிருந்து ஒரு செய்தியினைக் கொண்டு வருவேன். அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக சுடர் விடும் ஓர் எரிகொள்ளியினைக் கொண்டு வருவேன்.
  9. அவர் அதனிடம் வந்தபோது, இந்த நெருப்பிலுள்ளவருக்கும், இதனைச் சூழ்ந்திருப்பவர்களுக்கும் பேரருள் செய்யப்பட்டுள்ளது என்று அவருக்குக் குரல் கொடுக்கப்பட்டது3. மேலும் எல்லா உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ் தூயவன்.
  10. மூஸாவே! நிச்சயமாக நானே வல்லவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாகிய அல்லாஹ்4.
  11. நீர் உமது தடியை எறியும். அவர் அதனை ஒரு சிறிய பாம்பைப் போன்று5 நெளிந்து கொண்டிருக்கக் கண்ட போது, அவர் பின்வாங்கித் திரும்பிச் சென்றார். மேலும் அவர் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. (அப்பொழுது நாம் கூறினோம்:) மூஸாவே! நீர் அஞ்ச வேண்டாம். நிச்சயமாக என்னிடம் தூதர்கள் அஞ்ச வேண்டியதில்லை.
  12. ஆனால் ஒருவன் அநீதியிழைத்த பின்னர் தீமைக்கு ஈடாக நன்மை செய்தால் நிச்சயமாக நான் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவேன்.
  13. நீர் உமது கையை, உமது கக்கத்தில் புகுத்துவீராக. அது எந்தக் குறைபாடுமின்றி வெண்மையாக வெளி வரும். இது ஃபிர்அவ்னிடமும், அவனது சமுதாயத்தினரிடமும் அனுப்பப்படும் ஒன்பது அடையாளங்களில் உள்ளதாகும்7. அவர்கள் கட்டுப்பட்டு நடக்காத சமுதாயத்தினராவர்.
  14. எனவே, கண்களைத் திறக்கக் கூடிய எம்முடைய அடையாளங்கள் அவர்களிடம் வந்த போது, இது மிகத் தெளிவான ஒரு மாயவித்தையாகும் என்று அவர்கள் கூறினர்.
  15. அவர்களின் உள்ளங்கள் அவற்றை நம்பியிருந்த அதே வேளையில், அநியாயமாகவும், ஆணவத்துடனும் அவற்றை அவர்கள் மறுத்தனர். எனவே, குழப்பம் விளைவித்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பார்ப்பீராக. ரு1
  16. நாம் தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் ஞானத்தை வழங்கினோம். அவ்விருவரும் (இவ்வாறு) கூறினர்: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவனே எங்களுக்கு, நம்பிக்கை கொண்ட தன் அடியார்களுள் பெரும்பாலாரை விட சிறப்பளித்துள்ளான்.
  17. மேலும் ஸுலைமான் தாவூதின் வாரிசாக விளங்கினார். அவர் மக்களே! எங்களுக்குப் பறவைகளின் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது8.  மேலும் (தேவையான) எல்லாப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இது (இறைவனது) மிகத்தெளிவான அருளே எனக் கூறினார்.
  18. ஸுலைமானிடத்து ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றிலிருந்து அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டன. அவை (வெவ்வேறு) வகுப்புகளாக அமைந்திருந்தன.
  19. இறுதியாக அவர்கள் நம்ல் பள்ளத்தாக்கிற்கு9 வந்தபோது, நம்ல் சமுதாயத்திலுள்ள ஒருவர்: நம்ல் சமுதாயத்தினரே, ஸுலைமானும், அவரது படைகளும் (உங்கள் நிலைகளை) அறியாமல் உங்களை நசுக்கி விடாதிருப்பதற்காக, நீங்கள் உங்கள் வீடுகளுக்குச் சென்று விடுங்கள் என்றார்.
  20. (ஸுலைமான்) அவர் கூறியதைக் கேட்டு புன்னகை செய்தார். அவர் கூறினார்: நீ எனக்கும், என் பெற்றோருக்கும் செய்த உன் அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும்10, நீ திருப்தியடையக் கூடிய பொருத்தமான செயலை நான் செய்வதற்கும், நீ எனக்கு வாய்ப்பளித்து, உன் கருணையால் என்னை நீ உனது நல்லடியார்களுள் சேர்ப்பாயாக!
  21. அவர், பறவைகளை மதிப்பிட்டுப் பார்த்து இவ்வாறு கூறினார்: என்ன? நான் ஹூத்ஹூதைக்11 காணவில்லையே! அவர் (வேண்டுமென்றே) வராதவர்களைச் சேர்ந்தவராக இருக்கின்றாரா?
  22. நிச்சயமாக நான் அவருக்குக் கடினமான தண்டனை வழங்குவேன்,  அல்லது அவரைக் கொன்று விடுவேன், அல்லது அவர் என்னிடம் (வராமலிருந்ததற்குரிய) தெளிவான சான்றொன்றைக் கொண்டு வர வேண்டும்.
  23. எனவே, அவர் சிறிது நேரம் எதிர்பார்த்திருந்தார். (அதற்குள் அங்கு வந்து சேர்ந்த ஹூத்ஹூதாகிய) அவர் இவ்வாறு கூறினார்: நீர் அறியாததை நான் அறிந்துள்ளேன். ஸபாவிலிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் நான் உம்மிடம் வந்துள்ளேன்.
  24. நான் அ(ந் நாட்டிலுள்ள) வர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணைக் கண்டேன். அவளுக்கு (த் தேவையான) எல்லாம் வழங்கப்பட்டிருக்கிறது. அவளிடத்து மகத்தான ஒரு அரியணையொன்றும் உள்ளது.
  25. நான் அவளையும், அவளுடைய சமுதாயத்தினரையும் அல்லாஹ்வுக்குப் பதிலாகச் சூரியனை வணங்கிக் கொண்டிருக்கக் கண்டேன். ஷைத்தான், அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகு வாய்ந்ததாகக் காட்டி (சரியான) வழியிலிருந்து அவர்களைத் தடுத்து விட்டான். இதனால் அவர்கள் நேர்வழியினைப் பெறவில்லை12.
  26. வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பதை வெளிப்படுத்துபவனும், நீங்கள் மறைத்து வைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அறிகின்றவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் வணங்கமாட்டார்கள்.
  27. அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரியோன் வேறெவனும் இல்லை. (அவன்) மகத்தான அரியணைக்குரிய இறைவனாவான்.
  28. (இது கேட்டு ஸுலைமான்) கூறினார்: நீர் உண்மை கூறினீரா? அல்லது நீர் பொய்யுரைப்பவர்களைச் சார்ந்தவரா? என்பதை நாம் பார்ப்போம்.
  29. நீர் எனது இக்கடிதத்தைக் கொண்டு சென்று, இதனை அவர்கள் முன் வைத்து விட்டு, பின்னர் அவர்களை விட்டும் விலகி(அடக்கத்துடன் நின்று) அவர்கள் என்ன (விடை) தருகின்றனர் என்று பாரும்.
  30. (அவ்வரசி) இவ்வாறு கூறினாள்: தலைவர்களே! கண்ணியத்திற்குரிய கடிதமொன்று என்னிடம் தரப்பட்டுள்ளது.
  31. இது ஸுலைமானிடமிருந்து (வந்து)ள்ளது. இதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (துவக்குகிறேன்).
  32. என்னிடம் பெருமை காட்ட வேண்டாம். மேலும் கட்டுப்பட்டு நடப்பவர்களாக என்னிடம் வாருங்கள். ரு2
  33. பின்னர் அவள் கூறினாள்: தலைவர்களே! என் பிரச்சினை குறித்து நீங்கள் எனக்கு ஆலோசனை வழங்குங்கள். நீங்கள் (என்னிடத்து) உங்கள் கருத்தை வெளிப்படையாகத் தெரிவிக்காதவரை நான் எதனையும் தீர்மானிப்பதேயில்லை.
  34. அவர்கள் கூறினர்: நாம் வலிமை வாய்ந்தவர்களாகவும், போரில் மிகுந்த திறமையுள்ளவர்களாகவும் விளங்குகின்றோம். ஆனால், ஆணையிடுவது உமக்குரியதாகும். எனவே நீர் கட்டளையிடப் போவது என்னவென்பதை ஆழ்ந்து சிந்தனை செய்வீராக.
  35. அவள் கூறினாள்: நிச்சயமாக மன்னர்கள் ஒரு நாட்டில் நுழைந்து விட்டால், அதனை அழித்து, அங்கு வாழ்பவருள் கண்ணியம் மிக்கவர்களை இழிந்தவர்களாக்கி விடுகின்றனர். அவர்கள் இவ்வாறே செய்து வருகின்றனர்.
  36. நான் அவர்களுக்கு ஒரு பரிசு அனுப்பப் போகின்றேன்13. பின்னர் என் தூதர்கள் என்ன (பதிலைத்) திரும்பக் கொண்டு வருகின்றனர் என்று பார்க்கவிருக்கிறேன்.
  37. அந்தப் பரிசு ஸுலைமானிடம் வந்தபோது அவர் கூறினார்: நீங்கள் செல்வத்தைக் கொண்டு எனக்கு உதவி செய்(ய விரும்பு)கின்றீர்களா? ஆனால் அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது, அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதனை விட மிகச் சிறந்ததாகும். அவ்வாறிருந்தும், நீங்கள் உங்கள் பரிசினைப் பற்றி மகிழ்கின்றீர்கள் (போலும்).
  38. (ஹூத்ஹூதே!) நீர் மீண்டும் அவர்களிடம் சென்று, நிச்சயமாக நாம் அவர்களால் எதிர்க்க முடியாத படைகளுடன் அவர்களிடம் வருவோம்; நாம் அவர்களை(த் தோற்கடித்து) அங்கிருந்து இழிவடைந்தவர்களாகவும், அவர்கள் (அரச மரியாதையை இழந்து) பணிந்தவர்களாகவும் வெளியேற்றி விடுவோம். (என்று அவர்களிடம் கூறும்). 
  39. அவர் கூறினார்: அவையினரே! அவர்கள் கட்டுப்பட்டவர்களாக என்னிடம் வருவதற்கு முன்னர், உங்களுள் எவர் அவளது அரியணையை(ப் போன்றதை) என்னிடம் கொண்டு வருவார்?
  40. இதற்கு ஜின்களுள் ஒரு தலைவர்14: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுந்திருப்பதற்கு முன்னர், நான் அதனை உம்மிடம் கொண்டு வருவேன்; நிச்சயமாக நான் அதற்குரிய பெரும் வலிமையைப் பெற்றவனும், நம்பிக்கைக்குரியவனுமாவேன் என்றார்.
  41. (இறை)வேதத்தின் ஞானமுடைய ஒருவர்15: நீர் உமது கண்ணை மூடித் திறப்பதற்குள் நான் அதனை உம்மிடம் கொண்டு வந்து விடுவேன் என்றார். எனவே (ஸுலைமானாகிய) அவர், அதனைத் தம்முன் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டபோது இவ்வாறு கூறினார்: நான் நன்றி செலுத்துகிறேனா,  இல்லையா என என் இறைவன் என்னைச் சோதிப்பதற்காக அவன் செய்த அருளாகும். எவர் நன்றி செலுத்துகிறாரோ, அவர் தம(து பயனு)க்காகவே நன்றி செலுத்துகிறார். மேலும் நன்றி காட்டாதவர் (நினைவில் கொள்ளட்டும்!) நிச்சயமாக என் இறைவன் தன்னிறைவு பெற்றவனும், பெரும் வள்ளல்தன்மை உடையவனுமாவான்.
  42. (மேலும்) அவர் கூறினார்: அவளுடைய அரியணையை அவளுக்கு மிகச் சாதாரணமானதாகத் தோன்றுமாறு (இந்த அரியணையை அழகு மிக்கதாக) ஆக்கி விடுங்கள்16. அவள் நேர்வழியைப் பின்பற்றுகிறாளா அல்லது நேர்வழியைப் பின்பற்றாதிருப்பவர்களைச் சேர்ந்தவளாக இருக்கிறாளா என்று பார்ப்போம்.
  43. எனவே அவள் வந்த போது, (அவளிடம்) உமது அரியணை இதைப் போன்று தானிருக்கிறதா எனக் கேட்கப்பட்டது. இதற்கு அவள், இது அதைப் போன்றிருப்பதாகவே தெரிகிறது. எங்களுக்கு இதற்கு முன்னரே ஞானம் வழங்கப்பட்டு விட்டது; நாங்கள் ஏற்கனவே (உமக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களாகி விட்டோம் எனப் பதிலளித்தாள்.
  44. அல்லாஹ்வைத் தவிர, அவள் வணங்கி வந்தது அவளை (நம்பிக்கை கொள்வதிலிருந்து)த் தடுத்தது. நிச்சயமாக அவள் நிராகரிக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவளாக இருந்தாள்.
  45. அரண்மனையில் நுழைக என்று அவளிடம் கூறப்பட்டது. அவள் அதனைக் கண்டதும், அதனை ஆழமான தண்ணீர் எனக் கருதிக் கலக்கமடைந்தாள். அப்போது ஸுலைமான், இது வழுவழுப்பான கண்ணாடித் துண்டுகளால் தளம் போடப்பட்ட அரண்மனையாகும் என்றார். (இதைக் கேட்டு) அவள் என் இறைவா! நிச்சயமாக நான் எனக்குத் தீங்கிழைத்துள்ளேன். எல்லா உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு நான் ஸூலைமானுடன் கட்டுப்பட்டு நடக்கிறேன் என்றாள்17. ரு3
  46. நிச்சயமாக நான் ஸமூது சமுதாயத்தினரிடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹைத்  தூதராக அனுப்பினோம். (அவர்) நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் என்ற (இறை கட்டளையைத் தெரிவித்த)தும், அவர்கள் தங்களுக்கிடையே வாக்குவாதம் செய்யும் இரண்டு பிரிவினர்களாகி விட்டனர்.
  47. அவர் கூறினார்: என் சமுதாயத்தினரே! நன்மை வருவதற்கு முன்னர் தீமையை நீங்கள் ஏன் விரைந்து நாடுகிறீர்கள்? உங்களுக்குக் கருணை காட்டப்படுவதற்காக நீங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதில்லையா?
  48. அவர்கள் உம்மையும், உம்முடனுள்ளவர்களையும் கெட்ட சகுனமுள்ளவர்களாகவே காண்கிறோம்18 என்று கூறினார்கள். அவர், உங்கள் கெட்ட சகுன(த்திற்குரிய காரண)ம் அல்லாஹ்விடமுள்ளது. மாறாக, நீங்கள் உண்மையிலேயே சோதனைக்காளாக்கப் பட்டிருக்கின்ற சமுதாயத்தினரே ஆவீர்.
  49. நகரில் ஒன்பது (பேர்) கொண்ட ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் நாட்டில் நன்மை (ஏதும்) செய்யாது, குழப்பம் செய்து கொண்டிருந்தனர்.
  50. அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நாங்கள் அவரையும், அவரது குடும்பத்தினரையும் இரவு நேரத்தில் தாக்குவோம். பின்னர் அவரது இரத்தத்திற்குப் பழி வாங்க விரும்புபவரிடம், அவரது குடும்பத்தினரின் அழிவினை நாங்கள் காணவில்லை. நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே என்று கூறுவோம் என்று நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யுங்கள்.
  51. அவர்கள் சதி செய்து திட்டம் தீட்டினர். நாமும் ஒரு திட்டம் தீட்டினோம். ஆனால் அவர்கள் அதனை அறிந்து கொள்வதில்லை.
  52. பின்னர், நீர் அவர்களது திட்டத்தின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பார்ப்பீராக. நிச்சயமாக நாம், அவர்களையும், அவர்களின் சமுதாயத்தினர் எல்லோரையும் முற்றாக அழித்து விட்டோம்.
  53. இவை அவர்கள் இழைத்த அநீதிகளினால் அழிவிற்குள்ளாகி விட்ட அவர்களின் வீடுகளாகும். நிச்சயமாக அறிவுடைய சமுதாயத்தினருக்கு இதில் ஒரு மாபெரும் அடையாளம் உள்ளது.
  54. எவர்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனுக்கு) அஞ்சி நடந்தார்களோ அவர்களை நாம் காப்பாற்றினோம்.
  55. லூத்து தம் சமுதாயத்தினரிடம் (இவ்வாறு) கூறிய நேரத்தில்; நீங்கள் கண்டு கொண்டே வெட்கங்கெட்ட செயலைச் செய்கிறீர்களா?
  56. நீங்கள் பாலுணர்ச்சியின் நோக்கத்துடன் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் வருகிறீர்களா? உண்மையில் நீங்கள் அறிவற்ற சமுதாயத்தினராவீர்கள்.
  57. ஆனால் அவருடைய சமுதாயத்தினர், (மக்களே! நீங்கள்) லூத்தின் குடும்பத்தினரை உங்கள் நகரிலிருந்து வெளியேற்றுங்கள். அவர்கள் மிக நல்லவர்கள் ஆக விரும்பும் மக்கள் (போல்) பேசுகின்றனர் என்பதைத் தவிர வேறு எதையும் பதிலாகச் சொல்லவில்லை.
  58. எனவே நாம் அவரது மனைவியைத் தவிர அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் காப்பாற்றினோம். நாம் அவளைப் பின்தங்கியவர்களைச் சேர்ந்தவள் என உறுதி கொண்டுள்ளோம்19.
  59. நாம் அவர்கள் மீது ஒரு மழையைப் பொழியச் செய்தோம். எச்சரிக்கப்பட்டவர்கள் மீது பொழியச் செய்யப்பட்ட மழை மிகக் கெட்டது. ரு4
  60. நீர் கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன் தேர்ந்தெடுத்துள்ள அவனது அடியார்களுக்கு (என்றென்றும்) சாந்தி நிலவுவதாக. சிறந்தவன் அல்லாஹ்வா? அல்லது அவர்கள் (அவனுக்கு) வைக்கும் இணைகளா? என்றும் நீர் கூறுவீராக.
  61. அல்லது வானங்களையும், பூமியையும் படைத்து, மேகத்திலிருந்து உங்களுக்காக தண்ணீரை இறக்கியவன் எவன்? பின்னர் நாம் அதனைக் கொண்டு ஒளிமிக்க (பழத்) தோட்டங்களை வளரச் செய்தோம். அவற்றின் மரங்களை வளரச் செய்வது உங்களால் இயலாதிருந்தது. அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? இல்லை. மாறாக, (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள், அவனுக்கு இணை வைக்கும் சமுதாயத்தினராவர்20.
  62. அல்லது பூமியைத் தங்குமிடமாக்கி, அதற்கிடையில் ஆறுகளை அமைத்து, அத(ன் பயனி)ற்காக மலைகளை உருவாக்கி,  (இனிமையானதும், உவர்ப்பானதுமாகிய) இரண்டு கடல்களுக்கிடையே21 தடுப்பொன்றை ஏற்படுத்தியவன் எவன்? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? ஆனால், உண்மையென்னவென்றால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
  63. அல்லது துன்பத்திற்காளானவர், அவனிடம் பிரார்த்தனை செய்யும் போது அவரு(டைய வேண்டுதலு)க்குப் பதிலளித்து, (அவரது) தீங்கை அகற்றி, (வேண்டுதல் புரியும்) உங்களை இப்பூமி முழுவதற்கும் வாரிசுகள் ஆக்குபவன் எவன்? (இத்தகு ஆற்றல் பெற்ற) அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீங்கள் அறவே உணர்வதில்லை.
  64. அல்லது நிலம், கடல் ஆகியவற்றின் (பல்வேறு வகையான) இருள்களில் உங்களுக்கு வழி காட்டுபவன் எவன்? மேலும் தன் அருளுக்கு (அதாவது மழைக்கு) முன்னால் நற்செய்தியாகக் காற்றுக்களை அனுப்புகிறவன் எவன்? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? அவர்கள் (அவனுக்கு) வைக்கும் இணைகளை விட அல்லாஹ் மிக்க மேலானவன்.
  65. அல்லது முதன்முறையாகப் படைப்பைத் துவக்கி, அதை மீண்டும் செய்பவன் எவன்? மேலும் வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் எவன்? அல்லாஹ்வுடன் வேறு கடவுள் உண்டா? நீர் கூறுவீராக: நீங்கள் உண்மையாளர்களாயின் (அவனுடன் வேறு கடவுளரும் உண்டு என்பதற்கான) உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்.
  66. நீர் கூறுவீராக: அல்லாஹ்வையன்றி வானங்களிலும், பூமியிலுமுள்ள எவரும் மறைவானதை அறிவதில்லை. அவர்கள் எப்போது (உயிர்ப்பிக்கப்பட்டு) எழுப்பப்படுவர் என்பதையும் அவர்கள் அறிவதில்லை.
  67. மாறாக, மறுமை பற்றிய அவர்களின் அறிவு முற்றாக முடிவு பெற்றது. அதுமட்டுமன்று அவர்கள் அது குறித்து ஐயத்திற்குள்ளாகி இருக்கின்றனர். இன்னும் அது குறித்து அவர்கள் குருடர்களேயாவர். ரு5
  68. நிராகரிப்பாளர்கள் கூறுகின்றனர்: நாங்களும், எங்கள் மூதாதையர்களும் மண்ணாகி விட்டாலுமா, நாங்கள் மீண்டும் (உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியே கொண்டு வரப்படுவோம்?
  69. எங்களிடமும், எங்கள் மூதாதையர்களிடமும் இதற்கு முன்னர் அவ்வாறே வாக்களிக்கப்பட்டது. இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளேயாகும்.
  70. நீர் கூறுவீராக: நீங்கள் பூமியில் பயணம் செய்து, குற்றவாளிகளின் முடிவு எவ்வாறாயிற்று என்பதனைப் பாருங்கள்.
  71. நீர் அவர்களைப் பற்றிக் கவலையடையவும் வேண்டாம்; அவர்கள் தீட்டும் சதித் திட்டங்களினால் வருந்தவும் வேண்டாம்.
  72. நீங்கள் உண்மையாளர்களாயின் (தண்டனையைப் பற்றிய) இந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்) என்று அவர்கள் கேட்கின்றனர்.
  73. நீங்கள் அவசரப்படுகின்றவற்றுள் ஒரு சில (தண்டனைகள்) உங்களுக்குப் பின்னாலேயே வந்து கொண்டிருக்கலாம் என்று நீர் கூறுவீராக.
  74. நிச்சயமாக உமது இறைவன் மக்களுக்கு அருள் செய்பவனாக இருக்கிறான். ஆனால் அவர்களுள் பெரும்பாலார் நன்றி செலுத்துவதில்லை.
  75. மேலும் நிச்சயமாக உமது இறைவன் அவர்களின் நெஞ்சங்கள் மறைப்பவற்றையும், அவர்கள் வெளியிடுபவற்றையும் அறிகின்றான்.
  76. வானத்திலும், பூமியிலும் மறைந்திருக்கும் எந்தப் பொருளும் தெளிவான நூலில் (பதிவாகி) இல்லாமல் இல்லை.
  77. நிச்சயமாக இந்தக் குர்ஆன் இஸ்ராயீல் மக்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ள பெரும்பாலானவற்றை அவர்களுக்கு விளக்குகின்றது.
  78. நிச்சயமாக இது நம்பிக்கை கொண்டவர்களுக்கு வழிகாட்டியாகவும், அருளாகவும் விளங்குகின்றது.
  79. நிச்சயமாக உமது இறைவன் (இஸ்ராயீல் மக்களாகிய) அவர்களுக்கிடையே (குர்ஆனாகிய) தன் கட்டளையைக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்றான். மேலும் அவன் வல்லோனும், நன்கு அறிபவனுமாவான்.
  80. எனவே, நீர் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைப்பீராக. நிச்சயமாக நீர் தெளிவான உண்மையில் இருக்கின்றீர்.
  81. நிச்சயமாக இறந்தவர்களை உம்மால் செவியேற்குமாறு செய்ய முடியாது; செவிடர்களையும் (உமது) அழைப்பைச் செவியேற்குமாறு செய்ய முடியாது. (குறிப்பாக) அவர்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடும் போது.
  82. மேலும் உம்மால் குருடர்களுக்கும் அவர்களின் வழிகேட்டிலிருந்து நேர்வழி காட்ட முடியாது. எம் வசனங்களிடத்து நம்பிக்கை கொள்பவர்களை மட்டுமே நீர் செவியேற்குமாறு செய்கின்றீர். மேலும் அவர்கள் கட்டுப்பட்டு நடப்பவர்களாவர்.
  83. அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படும் போது, நாம் அவர்களுக்காகப் பூமியிலிருந்து கடிக்கும் கிருமியை வெளிப்படுத்துவோம்22. மக்கள் நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததே அதற்குக் காரணம். ரு6
  84. ஒவ்வொரு சமுதாயத்திலும் எமது அடையாளங்களைப் பொய்யாக்கியோருள், ஒரு பெருங் கூட்டத்தை நாம் ஒன்று திரட்டும் நாளை (நினைத்துப் பாருங்கள்). பின்னர் அவர்கள் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவர்.
  85. இறுதியாக அவர்கள் (அவனிடம்) வரும்போது, அவன் (இவ்வாறு) கூறுவான்: அவை குறித்து முழுமையான அறிவு பெறாமலிருந்தும், நீங்கள் என் அடையாளங்களைப் பொய்யாக்கினீர்களா?23 அல்லது நீங்கள் (இஸ்லாத்திற்கெதிராக) என்னென்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
  86. அவர்கள் அநீதியிழைத்ததனால், அவர்களுக்கெதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும். அவர்களால் எதுவும் பேச முடியாது24.
  87. நாம் இரவை, அவர்கள் அதில் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும், பகலை, பார்க்கும் சக்தியினை வழங்கக் கூடியதாகவும் ஆக்கியிருப்பதனை அவர்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்ட சமுதாயத்திற்குப் பல அடையாளங்கள் உள்ளன.
  88. எக்காளம் ஊதப்படும் நாளில், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும் பதற்றமடைவார்கள். எல்லோரும் பணிவுடன் அவனிடம் வருவார்கள்.
  89. மலைகளை நீர் காண்கிறீர். அவை உறுதியாக நிலைத்து நிற்பதாக நினைக்கிறீர். ஆனால் அவை மேகங்கள் மிதப்பதைப் போன்று அசைந்து கொண்டிருக்கின்றன25. இது, ஒவ்வொன்றையும் நிறைவாகச் செய்துள்ள அல்லாஹ்வுடைய செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்கின்றவற்றை நன்கு அறிபவனாவான்.
  90. நற்செயலைச் செய்பவருக்கு, அதனை விடச் சிறந்தது (நற்பலனாகக் ) கிடைக்கும். அத்தகையோர் அந்நாளில் பதற்றத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாவர்.
  91. தீய செயலைச் செய்பவர்களின் தலைவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள். பின்னர் உங்களுக்குரிய கூலி, உங்கள் செயலுக்கேற்றதாக இல்லையா? (என்று அவர்களிடம் கூறப்படும்).
  92. நான் இந்த (மக்கா) நகரத்தின் இறைவனை வணங்க வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அவனே இதனைப் புனிதமாக்கியுள்ளான். மேலும் ஒவ்வொரு பொருளும் அவனுக்குரியதாகும். மேலும் நான் கட்டுப்பட்டு நடப்பவர்களைச் சேர்ந்தவனாக விளங்க வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
  93. மேலும் நான் குர்ஆனைப் படித்துக் காட்டுவதற்கும், (எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது). எனவே, நேர்வழியினைப் பின்பற்றுபவர், தமக்காகவே அதனைப் பின்பற்றுகின்றார். எவர் வழிதவறிச் செல்வாரோ அவரிடம் நான் எச்சரிக்கை செய்பவனேயாவேன் எனக் கூறுவீராக.
  94. மேலும் நீர் கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் உங்களுக்குத் தன் அடையாளங்களை விரைவில் காட்டுவான். நீங்கள் அவற்றை அறிந்து கொள்வீர்கள். மேலும் உமது இறைவன் நீங்கள் செய்வதனைப் பற்றி அறியாதவனல்ல. ரு7

Powered by Blogger.