அதிகாரம் : அல் கஸஸ்
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள் : 89
பிரிவு : 9
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- தா, ஸீன், மீம் - (இதனை இறக்குபவன்) தூயவன், நன்கு கேட்பவன், மேன்மை மிக்கவன் (ஆவான்).
- இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.
- நம்பிக்கை கொண்ட மக்களுக்காக நாம், மூஸா மற்றும் ஃபிர்அவ்னின் உண்மையான வரலாற்றை உமக்கு எடுத்துரைக்கின்றோம்.
- நிச்சயமாக ஃபிர்அவ்ன், பூமியில் மிகவும் கர்வங் கொண்டு, அதன் மக்களைப் பல பிரிவுகளாகப் பிரித்து விட்டான். அவன் அவர்களுள் ஒரு பிரிவினரைப் பலவீனப்படுத்த விரும்பி, அவர்களின் ஆண் குழந்தைகளைக் கொன்றும், அவர்களின் பெண்களை உயிர் வாழவும் விட்டான். நிச்சயமாக அவன் குழப்பம் விளைவிப்பவர்களைச் சார்ந்தவனாக இருந்தான்.
- பூமியில் பலவீனமானவர்கள் எனக் கருதப்பட்டவர்களுக்கு நாம் பேருதவி செய்து, அவர்களைத் தலைவராக்கி, (எல்லா அருள்களுக்கும்) அவர்களை வாரிசுகளாக்க விரும்பினோம்.
- மேலும் நாம் அவர்களைப் பூமியில் நிலை நாட்டவும், அவர்களிடமிருந்து ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரது படையினரும் அஞ்சியதை நாம் அவர்களுக்குக் காட்டவும் (விரும்பினோம்).
- நாம் மூஸாவின் தாயாருக்கு வஹி மூலம் (இவ்வாறு) அறிவித்தோம்:- "நீர் அவருக்குப் பாலூட்டுவீராக. அவ(ரது உயி)ரைக் குறித்து நீர் அஞ்சினால், அவரை நதியில் போட்டு விடுவீராக; நீர் அஞ்சவும் வேண்டாம்; வருந்தவும் வேண்டாம். (ஏனெனில்) நாம் அவரை உம்மிடம் திரும்பக் கொண்டு சேர்ப்போம். மேலும் நிச்சயமாக நாம் அவரைத் தூதர்களுள் ஒருவராக ஆக்குவோம்".
- ஃபிர்அவ்னின் குடும்பத்தவ(ருள் ஒருவ)ர் அவரை எடுத்துக் கொண்டார், அதன் காரணமாக அவர், அவர்களுக்கு எதிரியாகவும், துயர(த்திற்குக் காரண) மாகவும் ஆகினார். நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும்1, இவ்விருவரது படையினரும் தவறிழைப்பவர்களாக இருந்தனர்.
- ஃபிர்அவ்னின் (குடும்பத்தினருள் ஒரு) பெண்2, இவன் எனக்கும், உமக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சியை அளிக்கக் கூடியவனாக விளங்குவான். இவனைக் கொன்று விடாதீர்கள்; இவன் நமக்குப் பயனளிக்கலாம்; அல்லது நாம் இவனை மகனாக ஆக்கிக் கொள்ளலாம் என்றாள். அவர்கள் உண்மையினை உணரவில்லை3.
- மூஸாவுடைய தாயாரின் உள்ளம் (கவலையிலிருந்து) விடுதலை பெற்றது. அவள் நம்பிக்கை கொண்டவர்களைச் சார்ந்தவளாக அவளது உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தியிருக்கவில்லையாயின், அவள் அதனை (அந்த நிகழ்ச்சியின் உண்மைகளையெல்லாம்) வெளிப்படுத்தியே இருப்பாள்.
- அவள் அவருடைய சகோதரியிடம், நீ அவரைப் பின் தொடர்ந்து செல் என்றாள். எனவே அவள் அவரைத் தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் (ஃபிர்அவ்னின் மக்களாகிய) அவர்கள் அதனைப் பற்றி அறியாதவர்களாக இருந்தனர்.
- அவர் பாலூட்டும் தாய்களை மறுத்து விட வேண்டுமென்று நாம் ஏற்கனவே தீர்மானித்து விட்டோம் 4. எனவே (மூஸாவின் சகோதரியாகிய) அவள், உங்களுக்காக அவரை வளர்த்து, அவரது நன்மையை நாடும் ஒரு குடும்பத்தினரைப் பற்றி நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? என்று கூறினாள்.
- அவளது கண்கள் குளிர்ச்சி அடையவும், அவள் வருந்தாமலிருக்கவும், அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்று அவள் அறிந்து கொள்ளவும் நாம் அவரை, அவரது தாயாரிடம் திரும்ப ஒப்படைத்தோம். ஆனால், அவர்களுள் பெரும்பாலார் அறிந்து கொள்வதில்லை. ரு1.
- அவர் முழுப்பக்குவமடைந்து, தம் வலிமையைப் பெற்ற போது5, (நுட்பமான) அறிவையும், ஞானத்தையும் நாம் அவருக்கு வழங்கினோம். இவ்வாறே நாம் நன்மை செய்பவர்களுக்கு நற்பலன் கொடுக்கின்றோம்.
- (ஒருநாள்) அவர் அந்த நகரத்திற்குள் அமைதியான நேரத்தில், அதன் மக்கள் கவனிக்காதவாறு நுழைந்தார்6. அப்போது அங்கு இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அவர் கண்டார். ஒருவர், அவரது கூட்டத்தைச் சேர்ந்தவரும், மற்றொருவர், அவரது பகைவர்களைச் சேர்ந்தவரும் ஆவார். தம் கூட்டத்தைச் சேர்ந்தவர், தம் பகைவனுக்கு எதிராக அவரை உதவிக்கு அழைத்தார். எனவே மூஸா, அ(ப்பகை)வரை ஒரு குத்துக் குத்தினார். இதனால் அவர் மரணமடைந்து விட்டார். (பின்னர் மூஸா) இது ஷைத்தானின் செயலைச் சேர்ந்தது7. நிச்சயமாக அவன் பகைவனும், பகிரங்கமான வழிகேட்டில் நடத்துபவனுமாவான் என்று கூறினார்.
- என் இறைவா! நான் என் ஆத்மாவுக்கு அநீதியிழைத்து விட்டேன். எனவே நீ என்னை மன்னிப்பாயாக என்று (மூஸா) கூறினார். ஆகவே, அவரை மன்னித்து விட்டான். அவன் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாவான்.
- மேலும் அவர், என் இறைவா! நீ எனக்குச் செய்த அருட்கொடையின் காரணமாக8 நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன் என்றார்.
- காலையில் அவர் அந்த நகரத்தில் பயந்த நிலையிலும், எச்சரிக்கையுடனும் துயிலெழுந்தார். அந்த நேரத்தில் தம்மிடம் நேற்று உதவி கோரியவர், மீண்டும் உதவிக்காக அவரை அழைத்தார். இதற்கு மூஸா அவரிடம், நிச்சயமாக நீ மிகத்தெளிவான வழிகேட்டில் செல்பவனாவாய் என்றார்.
- எனவே அவர், அவ்விருவருக்கும் பகைவராக இருந்தவரைப் பிடிக்க எண்ணிய போது அவர்9, மூஸாவே! நீர் நேற்று ஒருவரைக் கொன்றது போன்று, என்னையும் கொன்று விடக் கருதுகிறீரா? ' நாட்டில் நீர் வம்பனாக (பலவீனர்களை நசுக்கவே) நாடுகிறீர்; மேலும் நீர் சமாதானம் செய்து வைப்பவராக விளங்க விரும்பவில்லை' என்றார்.
- ஒருவர் அந்த நகரத்தின் தொலைவிலுள்ள பகுதியிலிருந்து விரைந்து வந்தார். அவர், மூஸாவே! நிச்சயமாகத் தலைவர்கள் உம்மைக் கொன்று விட உமக்கெதிராக ஆலோசனை செய்து கொண்டிருக்கின்றனர்; எனவே நீர் இந் நாட்டிலிருந்து வெளியேறி விடுவீராக; நிச்சயமாக நான் உமது நன்மையை நாடுபவர்களைச் சேர்ந்தவனாவேன் என்றார்.
- ஆகவே அவர் அங்கிருந்து அச்சத்துடனும், விழிப்புணர்ச்சியுடனும் வெளியேறினார். அவர், என் இறைவா! அநீதியிழைக்கும் சமுதாயத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக என்று கூறினார். ரு2
- அவர் மத்யன் நகரத்தை10 நோக்கிச் சென்ற போது அவர், என் இறைவன் எனக்கு நேரான பாதையினைக் காட்டலாம் என்று நம்புகிறேன் என்றார்.
- அவர் மத்யன் நகரத்தின் தண்ணீர் (துறை)க்கு வந்து சேர்ந்த போது அவர், அங்கு(த் தங்கள் மந்தைகளுக்கு)த் தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்தைக் கண்டார். மேலும் அவர், அவர்களுக்கு அப்பால், (தங்கள் மந்தைகளை) பின்னால் நிறுத்திக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும்11 கண்டார். உங்கள் இருவருக்கும் என்ன வேண்டும்? என அவர் (மூஸா) கேட்டார். இதற்கு அவ்விரு பெண்களும், இந்த மேய்ப்பர்கள் (தங்கள் மந்தைகளுடன்) போகாதவரை (இவற்றிற்கு) எங்களால் தண்ணீர் காட்ட முடியாது; எங்கள் தந்தை (இங்கு வரவியலாத அளவிற்கு) மிகவும் வயது முதிர்ந்தவர் என்று பதிலளித்தனர்.
- அவர் அவ்விருவருக்காக (மந்தைகளுக்கு)த் தண்ணீர் காட்டி விட்டுப் பின்னர் ஒரு நிழலின் பக்கமாகத் திரும்பிச் சென்று, "என் இறைவா! நிச்சயமாக எனக்கு நன்மையிலிருந்து நீ எதை வழங்கினாலும் நான் அதை இரப்பவனாகவே இருக்கின்றேன்" என்றார்.
- அவ்விருவருள் ஒருத்தி நாணத்துடன் நடந்து அவரிடத்து வந்தாள். நீர் எங்களுக்காக (மந்தைகளுக்கு)த் தண்ணீர் காட்டியதற்குரிய கூலியினை என் தந்தை உமக்கு வழங்குவதற்காக அவர் உம்மை அழைக்கின்றார் என்று அவள் கூறினாள். எனவே அவர் அ(ம் முதிய) வரிடம் வந்து அவர் முன் (தமது) வரலாற்றினை விளங்கிய போது அவர், "நீர் அஞ்ச வேண்டாம், நீர் அநீதியிழைக்கும் சமுதாயத்தினரிடமிருந்து தப்பித்துக் கொண்டீர்" என்றார்.
- இதற்கு அவ்விருவருள் ஒருத்தி என் தந்தையே! நீர் இவரைப் பணியாளராக அமர்த்திக் கொள்க. ஏனென்றால், வலிமைமிக்க, நம்பிக்கைக்குரியவரே நீர் வேலைக்கு வைத்துக் கொள்ளும் பணியாளர்களுள் மிகச்சிறந்தவர் என்றாள்12.
- அவர் (மூஸாவிடம்) கூறினார்: நீர் எனக்கு எட்டாண்டுகள் ஊழியம் புரிய வேண்டுமென்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களுள் ஒருத்தியை நான் உமக்கு மணமுடித்துத் தர விரும்புகிறேன். ஆனால் நீர் பத்து(வருடங்களை) நிறைவு செய்தால், அது உமது சொந்த விருப்பத்தைப் பொருத்ததாகும். நான் உமக்கு எந்தக் கஷ்டத்தையும் கொடுக்க விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் நீர் என்னை நேர்மையாளர்களைச் சார்ந்தவனாகக் காண்பீர்.
- (அதற்கு மூஸா) கூறினார்: இது எனக்கும், உமக்குமிடையில் (முடிவெடுக்கப்பட்டு) உள்ளது. இவ்விரு காலக்கெடுவினுள் நான் எதனை நிறைவேற்றினாலும், எந்தக் குற்றமும் என்னைச் சாராது. மேலும் நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளி ஆவான். ரு3
- மூஸா அந்தக் காலக்கெடுவை நிறைவேற்றி விட்டுத் தம் குடும்பத்தினருடன் பயணம் செய்த போது அவர், மலையின் பக்கத்தில் ஒரு நெருப்பைக் கண்டார். அவர் தம் குடும்பத்தினரிடம், நீங்கள் இங்கு தங்கியிருங்கள்; நான் ஒரு நெருப்பைக் கண்டேன்13. ஒருவேளை நான் அங்கிருந்து உங்களுக்காக (முக்கியமான) செய்தியொன்றை கொண்டு வருவேன் அல்லது நீங்கள் குளிர் காய்வதற்காக ஓர் எரிகொள்ளியினைக் கொண்டு வரலாம் என்றார்.
- அவர் அதனிடம் வந்த போது, அருள் செய்யப்பட்ட இடத்திலுள்ள பள்ளத்தாக்கின் வலப்பக்கமிருந்து - அந்த மரத்திலிருந்து மூஸாவே! நிச்சயமாக நானே எல்லா உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ் என்று குரல் கொடுக்கப்பட்டது.
- மேலும் நீர் உமது தடியை எறியும் (என்றும் கூறப்பட்டது) அவர் அதனை, அது ஒரு சிறிய பாம்பைப் போன்று14 நெளிந்து கொண்டிருக்கக் கண்ட போது, அவர் பின்வாங்கிச் சென்றார். மேலும் அவர் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை (அப்பொழுது அவரிடம் இவ்வாறு கூறப்பட்டது) மூஸாவே! முன்னோக்கி வருக: அஞ்ச வேண்டாம்: நிச்சயமாக நீர் பாதுகாப்புப் பெற்றவர்களைச் சார்ந்தவராவீர்.
- நீர் உமது கையை உமது மார்புக்கருகில் அங்கியினுள் புகுத்துவீராக. அது எந்தக் குறைபாடுமின்றி வெண்மையாக வெளிவரும். பயத்திலிருந்து விடுபடுவதற்காக நீர் உமது கையை உமது பக்கம் இழுத்துக் கட்டிக் கொள்ளும். எனவே இவை உமது இறைவனிடமிருந்து ஃபிர்அவ்னுக்கும், அவனது அவையினருக்கும் இரண்டு சான்றுகளாகும். நிச்சயமாக அவர்கள் கட்டுப்பட்டு நடக்காத சமுதாயத்தினராவர்.
- (மூஸா) கூறினார்: என் இறைவா! நான் அவர்களுள் ஒருவரைக் கொன்று விட்டேன். எனவே அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்15.
- என் சகோதரர் ஹாரூன் என்னை விடவும் மிகத் திறமையாகப் பேசுபவர். எனவே அவர் என்னை உண்மைப்படுத்துவதற்காக, அவரை உதவியாளராக என்னுடன் அனுப்பி வைப்பாயாக. அவர்கள் என்னைப் பொய்ப்படுத்தி விடுவார்களோ என்று நான் அஞ்சுகிறேன்.
- நாம் உமது சகோதரனைக் கொண்டு, உமது கரத்தை வலுப்படுத்துவோம். மேலும் உங்கள் இருவருக்கும் (வெற்றிக்குரிய) ஆற்றல் அளிப்போம். அவர்களால் உங்களை நெருங்க முடியாது. நீங்கள் இருவரும், உங்களைப் பின்பற்றுபவர்களும் எம் அடையாளங்கள் மூலம் வெற்றி பெறுபவர்களாவீர்கள் என்று (இறைவன்) கூறினான்.
- மூஸா எம்முடைய தெளிவான அடையாளங்களுடன் வந்த போது, அவர்கள் இது பொய்யாகப் புனையப்பட்ட மாயவித்தையேயாகும்; நம் முன்னோர்களான மூதாதையர்களிடம் இது (போன்றது) பற்றி நாங்கள் கேட்டதில்லையே என்றனர்.
- மேலும் மூஸா (இவ்வாறு) கூறினார்: என் இறைவன், தன்னிடமிருந்து நேர்வழியினைக் கொண்டு வந்தவரையும், இறுதி முடிவு எவருக்குரியதாகும் என்பதையும் நன்கு அறிபவனாவான்; நிச்சயமாக, அநீதியிழைப்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை.
- (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: தலைவர்களே! என்னையன்றி உங்களுக்கு வேறெந்தக் கடவுளும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே ஹாமானே! நான் மூஸாவின் இறைவனைத் தேடுவதற்காக களிமண் (செங்கல்)களைச் சுட்டு எனக்காக ஒரு கோபுரத்தை எழுப்பு16. ஏனெனில் நிச்சயமாக நான் அவரைப் பொய்யர்களைச் சார்ந்தவராகக் கருதுகின்றேன்.
- அவனும், அவனது படைகளும் நாட்டின் எந்த நியாயமுமின்றி ஆணவத்துடன் நடந்து கொண்டனர். அவர்கள் எம்மிடம் ஒருபோதும் திரும்பக் கொண்டு வரமாட்டார்கள் என்று எண்ணினர்.
- எனவே நாம் அவனையும், அவனது படைகளையும் பிடித்து, அவர்களைக் கடலில்17 எறிந்து விட்டோம். ஆகவே, அநீதியிழைப்பவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதனைப் பார்ப்பீராக.
- (மக்களை) நரகத்தின் பால் அழைக்கக் கூடிய தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். மேலும் மறுமை நாளில் அவர்களுக்கு எந்த உதவியும் செய்யப்படமாட்டாது.
- நாம் இவ்வுலகில் அவர்களை சாபம் பின்தொடரச் செய்தோம்; மேலும் மறுமை நாளில் அவர்கள் நன்மைகளை(யெல்லாம்) இழந்தவர்களைச் சார்ந்தவர்களாக இருப்பர். ரு4
- நாம் முன்னுள்ள தலைமுறையினரை அழித்ததன் பின்னர், மூஸாவிற்கு வேதத்தை வழங்கினோம். அது மக்களுக்கு (ஆன்மீகப்) பார்வைய(ளிப்பதா)கவும், நேர்வழியாகவும், கருணையாகவும் விளங்கியது. மேலும் (அதனை) அவர்கள் அறிவுரை பெறுவதற்கே (வழங்கினோம்).
- நாம் மூஸாவிடம்(நபித்துவப்) பணியினை ஒப்படைத்த பொழுது, நீர் (மலையின்) மேற்குப் பக்கத்தில் இருந்ததுமில்லை18, நீர் சாட்சிகளுள் ஒருவராக இருந்ததுமில்லை.
- ஆனால் நாம் (மூஸாவுக்குப் பின்னர்) பல தலைமுறையினரை உருவாக்கினோம். அவர்களின் ஆயுள் நீளமாகியது. (இதனால் அவர்கள் தங்களுக்கு முன்னறிவிக்கப்பட்டவற்றை மறந்து விட்டனர்). மேலும் நீர் மத்யன் மக்களுக்கு எம் அடையாளங்களைப் படித்துக் காட்டுபவராய், அவர்களிடையே வாழ்ந்து வரவுமில்லை. மாறாக, தூதர்களை அனுப்பியது நாமே19.
- மேலும் நாம் (மூஸாவை) அழைத்த போதும், நீர் மலையின் பக்கத்தில் இருந்ததில்லை. மாறாக, உமக்கு முன்னர், எச்சரிப்பவர் எவரும் தம்மிடம் வராத சமுதாயத்தினர்20 அறிவுரையினைப் பெறும் பொருட்டு, நீர் அவர்களுக்கு எச்சரிப்பதற்காக உமது இறைவனிடமிருந்து ஓர் அருளாகவே (நாம் உம்மை அனுப்பியுள்ளோம்).
- அவர்கள் தம் கைகள் முன்னால் (செய்து) அனுப்பியவற்றின் காரணமாக ஒரு துன்பம் ஏற்பட்டால் 'எம் இறைவா, நீ ஒரு தூதரை எங்களிடம் ஏன் அனுப்பவில்லை? ஒரு தூதரை அனுப்பியிருந்தால் நாங்கள் உன் அடையாளங்களைப் பின்பற்றி, நம்பிக்கையாளர்களைச் சேர்ந்தவர்களாகி இருப்போம் என அவர்கள் கூறாதிருக்கவும் (உம்மைத் தூதராக அனுப்பினோம்).
- எம்மிடமிருந்து அவர்களிடம் உண்மை வந்தபோது, மூஸாவுக்குக் கொடுக்கப்பட்ட போதனையைப் போன்றது இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை? என்று அவர்கள் கூறினர். இதற்கு முன்னர் மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதை அவர்கள் மறுக்கவில்லையா? (மூஸா, ஹாரூன் ஆகிய) இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மாயவித்தைக்காரர்களாவர் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள். மேலும் நாங்கள் இவையெல்லாவற்றையும் மறுக்கின்றோம் என்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
- "நீங்கள் உண்மையாளர்களாயின் இவ்விரு வேதங்களை விடச் சிறந்த, நேர்வழியினைக் காட்டும் வேதமொன்றை, நான் பின்பற்றுவதற்காக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள்" என்று நீர் கூறுவீராக.
- அவர்கள் உமக்குப் பதிலளிக்கவில்லையாயின், அவர்கள் தமது தீய விருப்பங்களையே பின்பற்றுகின்றனர் என்று நீர் அறிந்து கொள்வீராக. மேலும் அல்லாஹ்விடமிருந்து எந்த வழி காட்டலுமின்றித் தனது தீய விருப்பத்தைப் பின்பற்றுபவனை விட மிகத் தவறான வழியில் செல்பவன் எவன்? நிச்சயமாக அநீதியிழைக்கும் சமுதாயத்தினருக்கு அல்லாஹ் (வெற்றியின்) வழியினைக் காட்டுவதில்லை. ரு5
- அவர்கள் அறிவுரையினைப் பெற வேண்டுமென்பதற்காக நிச்சயமாக நாம் (எமது) செய்தியினை அவர்களுக்கு தொடர்ந்து அறிவித்தோம்.
- நாம் எவர்களுக்கு இதற்கு முன்னர் வேதத்தைக் கொடுத்திருந்தோமோ அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொள்கின்றனர்21.
- மேலும் இது அவர்களுக்குப் படித்துக் காட்டப்படும் போது, நாங்கள் இதன் மீது நம்பிக்கை கொள்கின்றோம்; நிச்சயமாக, இது எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரே (இறைவனுக்குக்) கட்டுப்பட்டு நடப்பவர்களாகி விட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.
- அவர்கள் மேற்கொண்ட பொறுமையின் காரணமாக22 அவர்களுக்குரிய பிரதிபலன் அவர்களுக்கு இரு முறை வழங்கப்படும்23. மேலும் அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையை எதிர்க்கின்றனர். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து அவர்கள் செலவு செய்கின்றனர்.
- அவர்கள் வீண் பேச்சைக் கேட்க நேர்ந்தால்24, அதனைப் புறக்கணித்து விட்டு (இவ்வாறு) கூறுவார்கள்: " எங்களுக்கு எங்கள் செயலும், உங்களுக்கு உங்கள் செயலுமே; உங்களுக்கு சாந்தி உண்டாவதாக; நாங்கள் அறிவீனர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை ".
- நீர் விரும்பியவர்களை நேர் வழியில் செலுத்த நிச்சயமாக உம்மால் முடியாது25. மாறாக அல்லாஹ், தான் விரும்புபவருக்கு நேர் வழி காட்டுகின்றான். மேலும் நேரான வழியில் செல்லக் கூடியவர் யார் என்பதை அவன் நன்கு அறிகின்றான்.
- மேலும் நாங்கள் உம்முடன் (உள்ள) இந்த வழிகாட்டலைப் பின்பற்றினால், எங்கள் நாட்டிலிருந்து நாங்கள் பறிக்கப்பட்டு விடுவோம்26 என்று அவர்கள் கூறுகின்றனர். (நீர் கூறுவீராக) நாம் அவர்களுக்கு அமைதியான பாதுகாப்பகம் வழங்கவில்லையா? எம்மிடமிருந்து எல்லாப் பொருட்களின் பழங்களும் அங்கு உணவாகக் கொண்டு வரப்படுகின்றன. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
- தம் வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சியுடனிருந்த எத்தனையோ ஊர்களை நாம் அழித்து விட்டோம். இதோ (பாருங்கள்) இவை யாவும் அவர்கள் வசித்த இடங்களாகும். அவர்களுக்குப் பின் எவரும் அங்கு வாழ்ந்ததில்லை. மேலும் நாமே (அவற்றிற்கு) வாரிசாகி விட்டோம்.
- நம் அடையாளங்களை அவர்களுக்குப் படித்துக் காட்டும் ஒரு தூதரை (அவர்களது) ஊர்களின் தலை நகரத்தில் எழுப்பாத வரையில், உம் இறைவன் அவற்றை ஒருபோதும் அழிப்பவனல்ல. மேலும் அவ்வூர்களிலுள்ள மக்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்தாலேயன்றி அவற்றை நாம் அழிப்பதில்லை.
- உங்களுக்குக் கொடுக்கப்பட்டவையெல்லாம் இவ்வுலக வாழ்க்கைக்குரிய தற்காலிகப் பொருள்களும், அதன் அலங்காரங்களுமேயாகும். அல்லாஹ்விடமுள்ளது மிகச் சிறந்ததும், என்றும் நிலையானதுமாகும். அவ்வாறிருந்தும் நீங்கள் அறிந்து கொள்வதில்லையா? ரு6
- நாம் (மறுமையில் கிடைக்கும் வெற்றியைப் பற்றிய) அழகிய வாக்குறுதியளித்து, அதனை அடைய இருக்கின்ற ஒருவரும், இவ்வுலக வாழ்க்கைக்குரிய பொருட்களை மட்டும் நாம் கொடுத்துப் பின்னர் மறுமை நாளில் (குற்றம் சாட்டப்பட்டவராக எம்முன்) கொண்டு வரப்படுபவர்களைச் சார்ந்தவராக இருக்கும் ஒருவரும் ஒப்பாவாரா?
- அந்நாளில், அவன் அவர்களை அழைத்து, எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் நினைத்திருந்த அவர்கள் எங்கே? எனக் கேட்பான்.
- தங்களுக்கு எதிராக (தண்டனைக்குரிய) தீர்ப்பு வழங்கப்பட்டவர்கள்27 (இவ்வாறு) கூறுவார்கள், "எங்கள் இறைவா! இவர்களைத் தாம் நாங்கள் தவறான வழியில் நடத்தினோம். நாங்கள் தவறான வழியில் சென்றது போன்று இவர்களையும் தவறான வழியில் செல்ல வைத்தோம். (இப்பொழுது இவர்களிடமிருந்து) நாங்கள் விலகிக் கொண்டு உன்னிடம் (திரும்பி) வருகின்றோம்; இவர்கள் எங்களை வணங்குபவர்களாக இருந்ததில்லை".
- இப்பொழுது நீங்கள் உங்கள் கூட்டாளிகளை அழையுங்கள் எனக் கூறப்படும். அவர்கள், அவர்களை அழைப்பார்கள். ஆனால் அவர்கள், அவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். (இணை வைத்தவர்களாகிய) அவர்கள் அத் தண்டனையைக் காண்பார்கள். அந்தோ! அவர்கள் நேர்வழியில் சென்றிருக்கக்கூடாதா?
- அந்நாளில், இறைவன் அவர்களை அழைத்து, நீங்கள் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்? எனக் கேட்பான்.
- அந்நாளில் எல்லா விசயங்களும் அவர்களுக்கு மறந்து போய்விடும். அவர்கள் ஒருவரையொருவர் கேட்க(க் கூட) மாட்டார்கள்.
- ஆனால் மனம் வருந்தி, நம்பிக்கை கொண்டு, நற்செயலாற்றுபவர் விரைவில் வெற்றி பெற்றவர்களைச் சேர்ந்தவராகி விடலாம்.
- மேலும் உமது இறைவன், தான் விரும்புவதைப் படைக்கவும்; (தான் விரும்புபவரைத்) தேர்ந்தெடுக்கவும் செய்கின்றான். (தேர்ந்தெடுக்கும்) இவ்விசயத்தில் அவர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை. அல்லாஹ் தூயவன்; மேலும் அவர்கள் (அவனுக்கு) இணையாகக் கொள்பவற்றை விட அவன் மிகவும் மேலானவன்.
- மேலும் உமது இறைவன், அவர்களின் உள்ளங்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்றான்.
- மேலும் அவனே அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு எவனும் இல்லை. தொடக்கத்திலும், மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. மேலும் ஆட்சி அவனுக்கே உரியது. அவனிடமே நீங்கள் திரும்பவும் கொண்டு வரப்படுவீர்கள்.
- நீர் கூறுவீராக: அல்லாஹ் உங்கள் மீது இரவை, மறுமை நாள் வரை நீடித்திருக்கச் செய்து விட்டால், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு ஒளியைக் கொண்டு வரும் கடவுள் வேறு யார் என்பதை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள். நீங்கள் கவனமாகக் கேட்பதில்லையா?
- நீர் கூறுவீராக! அல்லாஹ் உங்கள் மீது பகலை, மறுமை நாள் வரை நீடித்திருக்கச் செய்து விட்டால், நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளும் இரவை அல்லாஹ்வையன்றி உங்களுக்குக் கொண்டு வரும் கடவுள் வேறு யார் என்பதை நீங்கள் எனக்குத் தெரிவியுங்கள். நீங்கள் (சிந்தித்துப்) பார்ப்பதில்லையா?
- அவன் தனது கருணையினால், உங்களுக்காக இரவையும், பகலையும், நீங்கள் அதில் ஓய்வெடுத்துக் கொள்ளவும், (பகலில்) அவனது அருளைத் தேடவும் ஏற்படுத்தியுள்ளான். மேலும் நீங்கள் நன்றியுள்ளவர்களாக விளங்குவதற்காகவே (இவ்வாறு செய்தான்).
- அந்நாளில் அவன் அவர்களை அழைத்து, எனக்கு இணையானவர்கள் என்று நீங்கள் நினைத்திருந்த அவர்கள் எங்கே எனக் கேட்பான்.
- நாம் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் சாட்சியொருவரைக் கொண்டு வந்து நிறுத்துவோம். பின்னர், உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள் என்று கூறுவோம். அப்போது அவர்கள், உண்மை அல்லாஹ்வுக்குரியதே என்று அறிந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் இட்டுக்கட்டிப் பேசியவையெல்லாம் அவர்களை விட்டு மறைந்து விடும். ரு7
- நிச்சயமாக ஹாரூன், மூஸாவின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான். ஆனால் அவன் அவர்களுக்குக் கொடுமையிழைத்தான்28. நாம் அவனுக்கு (அதிகமான) கருவூலங்களைக் கொடுத்திருந்தோம்29. அவனது (கருவூலங்களின்) சாவிகள், வலிமை வாய்ந்த ஒரு கூட்டம் கஷ்டத்துடன் சுமக்கக் கூடியதாக இருந்தன30. அவனது சமுதாயத்தினர் அவனிடம் (இவ்வாறு) கூறினர்: " நீ (இந்த அளவிற்குப்) பெருமையடிக்க வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் (இவ்வாறு) பெருமையடிக்கின்றவரை விரும்புவதில்லை.
- அல்லாஹ் உனக்கு வழங்கியதிலிருந்து மறுமை வாழ்விடத்தைத் தேடிக் கொள். இவ்வுலகிலுள்ள உன் பங்கையும் (முற்றிலுமாக) மறந்து விட வேண்டாம். அல்லாஹ் உனக்கு நல்லது செய்தது போன்று நீயும் (மற்றவர்களுக்கு) நல்லதைச் செய். மேலும் பூமியில் நீ குழப்பத்தை நாடாதே. நிச்சயமாக குழப்பம் விளைவிப்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை.
- என்னிடம் (மட்டும்) உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்கு தரப்பட்டுள்ளது என்று (ஹாரூன்) கூறினான். அவனுக்கு முன்னர், அவனை விட மிகவும் வலிமை வாய்ந்தவர்களாயும், மிகுந்த செல்வங்களைப் பெற்றவர்களாயும் இருந்த (பல) தலைமுறையினரை அல்லாஹ் அழித்து விட்டான் என்பதை அவன் அறியவில்லையா?31. குற்றவாளிகளிடம் தங்கள் பாவங்கள் குறித்து (விளக்கம் தருமாறு) வினவப்படமாட்டாது32.
- அவன் தன் சமுதாயத்தினரின் முன் தனது பகட்டு ஆரவாரத்துடன் சென்றான். இவ்வுலக வாழ்வினை(ப் பெரிதும்) விரும்பியவர்கள், ஹாரூனுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்று, நமக்கும் கிடைத்திருக்க வேண்டாமா? உண்மையிலேயே அவன் பெரும் பேறு பெற்றவனாவான் என்று கூறினார்கள்.
- ஆனால் ஞானம் பெற்றவர்கள்; உங்களுக்கக் கேடு தான்; நம்பிக்கை கொண்டு, நற்செயலாற்றுபவருக்கு அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் வெகுமதி மிகச் சிறந்ததாயிருக்கும். இது பொறுமையினை மேற்கொள்பவர்களுக்கேயன்றி வேறெவருக்கும் வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்கள்.
- பின்னர் நாம் அவனையும், அவனது வம்சத்தையும் பூமி விழுங்கி விடுமாறு செய்து விட்டோம். அல்லாஹ்வுக்கு எதிராக, அவனுக்கு உதவி செய்யும் எந்தக் கூட்டத்தினரும் அவனுக்கு இருந்ததில்லை. உதவிக்கு அழைப்போரைச் சேர்ந்தவனாகவும் அவன் இருந்ததில்லை.
- அவனது பதவியினை அடைய நேற்று வரை ஆவலுடன் விரும்பியவர்கள் (இவ்வாறு) கூறத் தொடங்கினார்கள். அந்தோ! நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களுள் தான் நாடுபவர்களுக்கு (வாழ்விற்கு வேண்டியதை) மிகுதியாக வழங்குகின்றான்; மேலும் (தான் நாடுபவர்களுக்கு அதைக்) கட்டுப்படுத்தவும் செய்கின்றான்; அல்லாஹ் நம்மீது அருள் செய்யாமலிருந்திருப்பின், அவன் நம்மை(யும்) அது விழுங்கி விடுமாறு செய்திருப்பான். அந்தோ! நிராகரிப்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லைரு8.
- இந்த மறுமை வீட்டை பூமியில் தற்பெருமையையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக நாம் ஏற்படுத்தியுள்ளோம். (நல்ல) முடிவு இறையச்சமுடையவர்களுக்கே ஏற்படும்.
- நற்செயல் செய்பவருக்கு அதனை விடவும் சிறந்த நற்பலன் உண்டு. ஒருவன் தீய செயலைச் செய்தால், தீய செயல்களைச் செய்பவர்களுக்கு, அவர்கள் செய்தவற்றிற்கேற்பவே கூலி வழங்கப்படும்.
- இந்தக் குர்ஆ(னின் போதனையி) னை உமக்குக் கடமையாக்கியவன் (உம்முடைய) திரும்புமிடத்திற்கு33 உம்மை நிச்சயமாக மீண்டும் கொண்டு வருவான்34. நீர் கூறுவீராக: என் இறைவன் நேர்வழியினைக் கொண்டு வந்தவரையும், தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் நன்கு அறிவான்.
- உமக்கு முழுமையான ஒரு வேதம் அருளப்படுமென்று நீர் எதிர்பார்த்ததேயில்லை. ஆனால் இது உமது இறைவனிடமிருந்துள்ள ஓர் அருளேயாகும். எனவே நீர் நிராகரிப்பவர்களுக்கு ஒருபோதும் உதவி செய்பவராக இருக்க வேண்டாம்.
- அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர், அவற்றிலிருந்து உம்மை எவனும் தடுத்து விட வேண்டாம். நீர் உம் இறைவன் பால் (மக்களெல்லாரையும்) அழைப்பீராக. மேலும் (அவனுக்கு) இணை வைப்பவர்களைச் சார்ந்தவராகி விட வேண்டாம்.
- அல்லாஹ்வையன்றி வேறெந்தக் கடவுளையும் நீர் அழைக்காதீர். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் எவனும் இல்லை. அவனைத் தவிர அனைத்தும் அழியக் கூடியவையே35. தீர்ப்பு அவனுக்கே உரியது. மேலும் நீங்கள் யாவரும் அவனிடமே திருப்பப்படுவீர்கள். ரு9