அதிகாரம்: அல் அன்கபூத்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 70
பிரிவுகள்: 7
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அலிஃப் லாம் மீம் (நான் அல்லாஹ், எல்லாம் அறிபவன்).
- "நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்" என்று கூறுவதானால், அவர்கள் விட்டு விடப்படுவார்களென்றும், அவர்கள் சோதனைக்கு ஆளாக்கப்படமாட்டார்களென்றும் மக்கள் எண்ணுகின்றனரா?
- அவர்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் சோதித்தோம். எனவே (இப்பொழுதும்) நிச்சயமாக அல்லாஹ் உண்மையாளர்களை வெளிப்படுத்துவான். மேலும் பொய்யர்களையும் நிச்சயமாக அவன் வெளிப்படுத்துவான்.
- அல்லது தீய செயல்களைச் செய்பவர்கள் எம்மை விட்டுத் தப்பியோடி விடுவார்களென்று அவர்கள் எண்ணுகின்றனரா? அவர்கள் எடுக்கும் முடிவு மிகத் தீயதே.
- அல்லாஹ்வை சந்திக்கவிருப்பதை எதிர்பார்ப்பவர்கள் (அதற்கு ஆயத்தம் செய்து கொள்ளட்டும்). ஏனெனில் அல்லாஹ்வால் குறிக்கப்பட்ட நேரம் நிச்சயமாக வருகிறது. மேலும் அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- (இறைவனுக்காக) கடினமான முயற்சி செய்பவர், உண்மையிலேயே தமக்காகவே முயல்கிறார். நிச்சயமாக அல்லாஹ் எல்லா உலகங்களை விட்டும் தன்னிறைவு பெற்றவனாவான்.
- மேலும் நம்பிக்கை கொண்டு, நற்செயலாற்றியவர்களின்1 தீமைகளை நிச்சயமாக நாம் அவர்களை விட்டும் அகற்றி விடுவோம். மேலும் அவர்களது செயல்களுக்கு, மிகச்சிறந்த நற்பலனை நிச்சயமாக நாம் அவர்களுக்கு வழங்குவோம்.
- தன் பெற்றோரிடம் நன்முறையில் நடந்து கொள்ள வேண்டுமென மனிதனுக்கு நாம் கட்டளையிட்டுள்ளோம். ஆனால் உனக்கு எதனைப் பற்றித் தெரியாதோ அதனை எனக்கு நீ இணை வைப்பது குறித்து, அவர்கள் உன்னிடம் வாக்குவாதம் செய்தால் நீ அவர்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம். என்னிடமே நீங்கள் திரும்பி வர வேண்டியதுள்ளது. நீங்கள் செய்த (நல்லவை, தீய) வை பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
- மேலும் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றியவர்களை நல்லடியார்களில் (கூட்டத்தில்) சேர்த்து வைப்போம்.
- நாங்கள் அல்லாஹ்விடத்து நம்பிக்கை கொண்டுள்ளோம் எனக் கூறும் சிலர் மக்களுள் இருக்கின்றனர். ஆனால் அல்லாஹ்வுக்காக அவர்கள் துன்புறுத்தப்பட்டால், அவர்கள் மக்களின் துன்புறுத்தலை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று கருதுகின்றனர். உமது இறைவனிடமிருந்து உதவி வந்தால், நிச்சயமாக நாங்கள் உங்களுடன் தானிருந்தோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். உலக மக்களின் உள்ளங்களிலுள்ளதை அல்லாஹ் நன்கு அறிபவனில்லையா?
- நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களையும் வெளிப்படுத்தி விடுவான், நயவஞ்சகர்களையும் வெளிப்படுத்தி விடுவான்.
- நிராகரிப்பவர்கள், நம்பிக்கை கொண்டிருப்பவர்களிடம் நீங்கள் எங்கள் வழியினைப் பின்பற்றுங்கள் ; நிச்சயமாக நாங்கள் உங்கள் பாவங்களைச் சுமந்து கொள்வோம் எனக் கூறுகின்றனர். ஆனால் அவர்களால் இவர்களின் பாவங்களுள் எதனையும் சுமக்க இயலாது. நிச்சயமாக அவர்கள் பொய்யர்களாவர்.
- ஆனால் நிச்சயமாக அவர்கள் தங்கள் சுமைகளையும், தங்கள் சுமைகளுடன் (மற்றவர்களின்) சுமைகளையும் சுமப்பார்கள். அவர்கள் இட்டுக் கட்டிப் பேசியது பற்றி மறுமை நாளில் நிச்சயமாக அவர்களிடம் கேள்வி கேட்கப்படும். ரு1
- நிச்சயமாக நாம் நூஹை அவரது சமுதாயத்தினரிடம் அனுப்பினோம். அவர் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக அவர்களிடையே வாழ்ந்தார்2. பின்னர் அவர்கள் அநீதியிழைப்பவர்களாக இருந்த வேளையில் அவர்களைப் பெரும் வெள்ளம் (திடீரென) பிடித்துக் கொண்டது.
- எனினும் நாம் அவரையும், (அவருடன்) அக் கப்பலில் இருந்தவர்களையும் காப்பாற்றினோம். மேலும் நாம் இதனை உலக மக்களுக்கெல்லாம் ஓர் அடையாளமாகவும் ஆக்கினோம்.
- இப்ராஹீம் தம் சமுதாயத்தினரிடம் இவ்வாறு கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு அஞ்சி நடவுங்கள். நீங்கள் அறிவீர்களாயின், இதுவே உங்களுக்கு மிக்க நன்று.
- நீங்கள் அல்லாஹ்வையன்றி, சிலைகளையே வணங்குகின்றீர்கள். (மார்க்கத்தைக் குறித்துப்) பொய்யைப் புனைகின்றீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குபவற்றால், உங்களுக்கு உணவு வழங்க இயலாது. எனவே நீங்கள் அல்லாஹ்விடம் உணவைத் தேடுங்கள்; அவனை வணங்குங்கள், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் அவனிடமே திரும்பவும் கொண்டு செல்லப்படுவீர்கள்.
- நீங்கள் பொய்யாக்கினால், உங்களுக்கு முன்னிருந்த சமுதாயங்களும் (தங்கள் தூதர்களைப்) பொய்ப்படுத்தினர். தூதரின் பொறுப்பு (தூதுச் செய்தியினைத்) தெளிவாகத் தெரிவிப்பதேயாகும். (வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வைப்பதன்று).
- அல்லாஹ் எவ்வாறு படைப்பினைத் தோற்றுவிக்கின்றான்; பின்னர் அதனைத் திரும்பவும் செய்கின்றான் என்பதனை அவர்கள் காண்பதில்லையா? நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதேயாகும்.
- நீர் கூறுவீராக: நீங்கள் பூமியில் பயணம் செய்து, அவன் எவ்வாறு படைப்பினை முதலில் தோற்றுவித்தான் என்பதனைப் பாருங்கள்3. அடுத்து அல்லாஹ் மரணத்திற்குப் பிறகு அவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான்.
- அவன் தான் நாடுபவர்களுக்கு தண்டனை வழங்குகின்றான்4. மேலும் தான் நாடுபவர்களுக்கு அருள் செய்கின்றான். அவனிடமே நீங்கள் திருப்பப்படுவீர்கள்.
- உங்களால் பூமியிலோ, வானத்திலோ (இறைவனது திட்டங்களை) செயலிழக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நண்பனுமில்லை; எந்த உதவியாளனுமில்லை. ரு2
- அல்லாஹ்வின் அடையாளங்களையும், அவனைச் சந்திக்கவிருப்பதையும்5 மறுப்பவர்கள் என் அருளில் நம்பிக்கையிழந்தவர்களேயாவர். மேலும் அத்தகையவர்களுக்கு மிக்க வேதனையளிக்கக் கூடிய தண்டனை உண்டு.
- அவரது (இப்ராஹீமின்) சமுதாயத்தினர், நீங்கள் அவரைக் கொன்று விடுங்கள்; அல்லது அவரை எரித்து விடுங்கள் எனக் கூறியதே அவர்களின் பதிலாக இருந்தது. (எனவே அவர்கள் அவரை நெருப்பில் எறிந்து விட்டனர்.) ஆனால் அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து காப்பாற்றி விட்டான். நம்பிக்கை கொண்ட சமுதாயத்தினருக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன.
- நிச்சயமாக நீங்கள் இவ்வுலக வாழ்க்கையில் உங்களுக்கிடையே நேசத்தி(னை வளர்ப்ப)ற்காக அல்லாஹ்வையன்றி, சிலைகளை எடுத்துக் கொண்டீர்கள்6. பின்னர் மறுமை நாளில் உங்களுள் சிலர், சிலரை நிராகரிப்பார்கள். மேலும் உங்களுள் சிலர், சிலரைச் சபிப்பார்கள். நீங்கள் தங்குமிடம் நரகமாகும். மேலும் உங்களுக்கு உதவி செய்பவர் எவரும் இருக்க மாட்டார் என்று அவர் கூறினார்.
- அவரிடத்து (இப்ராஹீமிடத்து) லூத் நம்பிக்கை கொண்டார். அவர் (இப்ராஹீம்), "நான் என் இறைவனிடம் புகலிடம் தேடிச் செல்லவிருக்கிறேன்7. நிச்சயமாக அவன் வல்லமையுள்ளவனும், மிக நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்" என்றார்.
- நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யாகூபையும் வழங்கினோம். அவரது சந்ததிகளிடையே நபித்துவத்தையும், வேதத்தையும் (அருட்கொடையாக) அளித்தோம். மேலும் இவ்வுலகிலும் அவருக்கு, அவருக்குரிய நற்பலனை வழங்கினோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களைச் சார்ந்தவராக இருப்பார்8.
- லூத்தையும் (நாம் தூதராக அனுப்பினோம்). அவர் தம் சமுதாயத்தினரிடம், நீங்கள் உங்களுக்கு முன்னர் உலகில் எவரும் ஒருபோதும் செய்யாத, வெறுக்கத்தக்க செயலொன்றைச் செய்கின்றீர்கள்.
- நீங்கள் (பெண்களை விட்டு) ஆண்களிடம் வருகின்றீர்களா? மேலும் நீங்கள் நெடுஞ்சாலையில் கொள்ளையடிக்கின்றீர்களா? நீங்கள் உங்கள் கூட்டங்களில் வெறுக்கத்தக்க செயலைச் செய்கின்றீர்கள்9 என்று கூறிய போது, அவரது சமுதாயத்தினர், நீர் உண்மையாளர்களைச் சார்ந்தவராயின், அல்லாஹ்வின் தண்டனையை எங்களுக்குக் கொண்டு வாரும் என்று கூறியதே அவர்களின் பதிலாக இருந்தது.
- அவர், என் இறைவா! இந்தக் குழப்பக்காரர்களான சமுதாயத்தினருக்கு எதிராக நீ எனக்கு உதவி செய்வாயாக என்றார். ரு3
- இப்ராஹீமிடம் நற்செய்தியினைக் கொண்டு வந்த நமது தூதர்கள்10, " இந்த நகர மக்களை நாங்கள் அழித்து விடப் போகிறோம். ஏனென்றால், நிச்சயமாக இதன் மக்கள் அநீதியிழைப்பவர்களாக இருக்கின்றார்கள்" என்று கூறினார்கள்.
- ஆனால், அங்கு லூத் இருக்கின்றாரே என்று அவர் கூறினார். அங்குள்ளவர்களை நாங்கள் நன்கு அறிவோம்; அவரையும், அவரது மனைவி நீங்கலாக, அவரது குடும்பத்தினரையும் நிச்சயமாக நாங்கள் காப்பாற்றி விடுவோம். அவள் பின்தங்கி விடுபவர்களைச் சார்ந்தவளாவாள் என்று அவர்கள் கூறினார்கள்.
- எம் தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்களின் காரணமாக அவர் துயரத்தில் ஆழ்ந்து, அவர்களைக் குறித்து அவர் (தன்) இயலாமையை உணர்ந்தார்11. (இதனைக் கண்டு) அவர்கள் கூறினர்: நீர் அஞ்ச வேண்டாம்; துயரமடையவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் உம்மையும், உமது மனைவி நீங்கலாக உமது குடும்பத்தினரையும் காப்பாற்றி விடுவோம்12. (ஏனெனில்) அவள் பின்தங்கி விடுபவர்களைச் சார்ந்தவளாவாள்.
- இந்த நகர மக்கள் கட்டுப்பட்டு நடக்காததனால், நிச்சயமாக நாம் இவர்களுக்கு வானத்திலிருந்து ஒரு தண்டனையை இறக்கி வைக்கப் போகிறோம்.
- அதன் மூலம் தெளிவானதோர் அடையாளத்தை, அறிந்து கொள்ளும் மக்களுக்காக நாம் விட்டு வைத்துள்ளோம்.
- மத்யன் நகருக்கு அவர்களின் சகோதரர் ஷூஐபையும் (நாம் தூதராக அனுப்பினோம்) அவர் (இவ்வாறு) கூறினார்: "என் சமுதாயத்தினரே! அல்லாஹ்வை வணங்குங்கள். இறுதி நாளை நினைவில் கொள்ளுங்கள். பூமியில் குழப்பம் விளைவிப்போராய் அநீதியிழைக்காதீர்கள்".
- ஆனால் அவர்கள் அவரைப் பொய்யாக்கினர். எனவே கொடும் பூகம்பம் அவர்களைப் பற்றிக் கொண்டது. இதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் முகங்குப்புற வீழ்ந்து கிடந்தனர்.
- ஆது, ஸமூது சமுதாயங்களையும் (நாம் அழித்து விட்டோம்). அவர்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து அது உங்களுக்கு தெளிவாகும். ஷைத்தான் அவர்களின் செயல்களை அவர்களுக்கு அழகு வாய்ந்ததாக்கிக் காட்டினான்13. அவர்கள் அறிவுக்கூர்மையுள்ளவர்களாக இருந்தும், (அல்லாஹ்வின்) வழியில் அவர்களைச் செல்ல விடாமல் அவன் தடுத்து விட்டான்.
- மேலும் ஹாரூன், ஃபிர்அவ்ன், ஹாமான் ஆகியவர்களையும் (நாம் அழித்து விட்டோம்). அவர்களிடம் மூஸா மிகத்தெளிவான அடையாளங்களைக் கொண்டு வந்தார். ஆனால் அவர்கள் பூமியில் ஆணவத்துடன் நடந்து கொண்டனர். ஆயினும் அவர்களால் (நமது ஆக்கினையிலிருந்து) தப்பிக்க முடிந்ததில்லை.
- நாம் அவர்களுள் ஒவ்வொருவரையும், அவ(ரவ)ரது பாவத்தின் காரணமாகப் பிடித்தோம். அவர்களுள் சிலர் மீது நாம் கல் மழையைப் பொழியச் செய்தோம். அவர்களுள் சிலரை ஓசை மிகுந்த சூறாவளி பற்றிக் கொண்டது. நாம் அவர்களுள் சிலரைப் பூமி விழுங்கி விடுமாறு செய்தோம். அவர்களுள் சிலரை நாம் மூழ்கடித்து விட்டோம். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டனர்.
- அல்லாஹ்வையன்றி மற்றவர்களை உதவியாளர்களாக்கிக் கொண்டவர்களின் நிலை, தனக்காக ஒரு வீட்டைக் கட்டிக் கொண்ட சிலந்தியின் நிலையைப் போன்றதாகும். நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்தியின் வீடேயாகும். அந்தோ! அவர்கள் தெரிந்திருக்க வேண்டுமே!
- அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைப்பவற்றை நிச்சயமாக அவன் அறிகின்றான். அவன் வல்லமையுள்ளவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
- இவை மக்களுக்காக நாம் விளக்கும் எடுத்துக்காட்டுகளாகும். ஆனால் ஞானமுடையவர்கள் மட்டுமே இவற்றை புரிந்து கொள்கின்றனர்.
- அல்லாஹ் வானங்களையும், பூமியையும் குறிப்பிட்ட ஒரு நோக்கத்துடனேயே படைத்தான். நிச்சயமாக இதில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் அடையாளம் உள்ளது. ரு4
- (குர்ஆன்) வேதத்திலிருந்து உமக்கு வஹி அறிவித்ததை ஓதுவீராக. மேலும் தொழுகையினை நிலை நாட்டுவீராக. நிச்சயமாக தொழுகை வெட்கக் கேட்டிலிருந்தும், பகிரங்கமான தீமையிலிருந்தும் (ஒருவனைத்) தடுக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ்வை நினைவு கூருவது (ஏனையவற்றை விட) பெரிது. மேலும் அல்லாஹ் நீங்கள் செய்வதை அறிகின்றான்.
- வேதத்தையுடையவர்களுடன், சிறந்த (உறுதியான, ஆதாரத்)தினாலன்றி விவாதம் செய்யாதீர்கள். ஆனால் அவர்களுள் அநீதியிழைப்பவர்களைத் தவிர (அவர்களுக்கேற்றவாறு விவாதம் செய்வது உங்கள் மீது குற்றமன்று) நீங்கள் (அவர்களிடம்) எங்களுக்கு இறக்கப்பட்டிருப்பதிலும், உங்களுக்கு இறக்கப்பட்டிருப்பதிலும் நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம். எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஒருவனேயாவான். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டு நடக்கின்றோம் என்று கூறுங்கள்.
- இவ்வாறே நாம் உமக்கு (இந்த முழுமையான) வேதத்தை இறக்கியுள்ளோம். எனவே நாம் எவர்களுக்கு (தவ்ராத்) வேத(த்தின் உண்மையான ஞான)த்தை வழங்கியுள்ளோமோ அவர்கள் இதில் நம்பிக்கை கொள்கின்றனர். (வேதம் பெற்ற) இவர்களுள் சிலரும் இதில் நம்பிக்கை கொள்கின்றனர். நிராகரிப்பவர்களே எம்முடைய வசனங்களைப் பிடிவாதமாக மறுக்கின்றனர்14.
- இ(ந்தக் குர்ஆன் இறங்குவ)தற்கு முன்னர் நீர் எந்த வேதத்தையும் படித்ததுமில்லை; (மக்களுக்குப் படித்துக் காட்டியதுமில்லை;) எதனையும் உமது வலக்கையால் எழுதியதுமில்லை. அவ்வாறு இருந்திருக்குமாயின், பொய்யர்கள் ஐயம் கொண்டிருக்கலாம்.
- ஆனால் ஞானம் வழங்கப்பட்டிருப்பவர்களின்15 உள்ளங்களில்16 (குர்ஆனாகிய) இது, தெளிவான அடையாளங்கள் ஆகும். அநீதியிழைப்பவர்களே எமது அடையாளங்களை நிராகரிக்கின்றனர்.
- அவருடைய இறைவனிடமிருந்து அவருக்கு எந்த அடையாளங்களும் ஏன் இறக்கப்பட்டதில்லை என்று அவர்கள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக: அடையாளங்கள் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியன. நிச்சயமாக நான் மிகத்தெளிவான எச்சரிக்கை விடுப்பவனேயாவேன்.
- அவர்களுக்குப் படித்துக் காட்டப்படுகின்ற (குர்ஆனாகிய இந்த) வேதத்தை நாம் உமக்கு இறக்கியிருப்பது அவர்களுக்குப் போதுமான அடையாளமாகாதா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்தினருக்கு நிச்சயமாக இதில் (பெரும்) கருணையும், அறிவுரையும் உள்ளன. ரு5
- நீர் கூறுவீராக: எனக்கும், உங்களுக்குமிடையில் சாட்சியாக இருப்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன். அவன் வானங்களிலும், பூமியிலுமுள்ளதை அறிகின்றான். மேலும் பொய்யை நம்பி, அல்லாஹ்வை மறுப்பவர்கள் தாம், இழப்புக்குரியோர் ஆவர்.
- தண்டனை விரைவில் வர அவர்கள் உம்மைக் கேட்கின்றனர். (அதற்கென) குறிப்பிட்ட ஒரு காலம் இல்லாமலிருந்திருப்பின், தண்டனை அவர்களிடம் நிச்சயமாக வந்திருக்கும். அவர்கள் அறியாமலிருக்கும் வேளையில், நிச்சயமாக அது திடீரென்று அவர்களிடம் வரும்.
- தண்டனை விரைவில் வர அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்17. நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
- அந்நாளில் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களது கால்களுக்குக் கீழிருந்தும் ஆக்கினை வந்து அவர்களை மூடிக் கொள்ளும். மேலும் அவன் உங்கள் செயல்களின் பலனைச் சுவைத்துப் பாருங்கள் எனக் கூறுவான்.
- நம்பிக்கை கொண்டுள்ள என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விரிவானது. எனவே நீங்கள் என்னையே வணங்குங்கள்.
- ஒவ்வொரு உயிரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியதாகும். பின்னர் எம்மிடமே நீங்கள் திரும்பவும் கொண்டு வரப்படுவீர்கள்.
- நம்பிக்கை கொண்டு, நற்செயலாற்றுபவர்களுக்கு நிச்சயமாக நாம் சுவர்க்கத்திலுள்ள உயர்தரமான மாளிகைகளில் வாழ இடமளிப்போம். அதன் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் என்றென்றும் வாழ்ந்து வருவர். (நற்)செயல் ஆற்றுபவர்களுக்குரிய பிரதிபலன் மிகச்சிறந்ததாயிருக்கும்.
- (நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களாகிய) அவர்கள் (தங்கள் கொள்கைகளிலும், செயல்களிலும்) உறுதியாக, நிலைத்து நிற்பார்கள்18. மேலும் அவர்கள் தங்கள் இறைவனிடமே நம்பிக்கை வைப்பார்கள்.
- (மனிதனைப் போன்று) தமக்குரிய உணவை எடுத்துச் செல்லாத எத்தனையோ உயிரினங்கள் உள்ளன. அல்லாஹ்வே அவற்றிற்கும், உங்களுக்கும் உணவளிக்கின்றான்19. அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- வானங்களையும், பூமியையும் படைத்து, சூரியனையும், சந்திரனையும் (ஊதியமின்றி) பணியாற்ற வைத்தவன் எவன் என்று நீர் அவர்களிடம் வினவினால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வே என்று கூறுவார்கள். பின்னர் அவர்கள் (உண்மையிலிருந்து) எங்கே திருப்பி விடப்படுகின்றனர்.
- அல்லாஹ் தன் அடியார்களுள் தான் நாடுபவர்களுக்கு உணவை விரிவாக வழங்குகின்றான்; மேலும் அ(வன் நாடுப)வருக்கு அதைக் கட்டுப்படுத்தியும் கொடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனாவான்.
- மேகத்திலிருந்து நீரை இறக்கி, பின்னர் அதனைக் கொண்டு பூமிக்கு, அதன் மரணத்திற்குப் பின்னர் வாழ்வளிப்பவன் எவன் என்று நீர் அவர்களைக் கேட்டால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் என்று கூறுவார்கள். நீர் கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை. ரு6
- இவ்வுலக வாழ்க்கை ஒரு பொழுதுபோக்கும், விளையாட்டுமேயாகும். நிச்சயமாக மறுமை (வாழ்விற்குரிய) வீடே உண்மையான வாழ்வு(க்குரிய வீடு) ஆகும். அந்தோ! அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
- அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது, நம்பிக்கையை முழுமையாக அல்லாஹ்வுக்காக மட்டும் ஆக்கியவர்களாக, கலப்பற்ற உள்ளத்துடன் அவனை அழைக்கின்றனர். ஆனால் அவர்களைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்ததும்(அவனுக்கு மீண்டும்) இணை வைக்கத் தொடங்கி விடுகின்றனர்.
- நாம் அவர்களுக்கு வழங்கியதனை நிராகரிக்கவும், சிறிது காலம் வரை பயனடையவும் (அவர்கள் அவனுக்கு இணை வைக்கின்றனர்). ஆனால் அவர்கள் (தங்கள் செயல்களின் பயன்களை) விரைவில் அறிந்து கொள்வார்கள்.
- தங்கள் சுற்றுப்புறங்களிலிருந்தெல்லாம் (அதாவது மக்காவிற்கு வெளியிலிருந்து) மக்கள் பறித்துச் செல்லப்படுகின்ற நிலையில், (மக்காவாகிய) புனித இடத்தை நாம் (அவர்களுக்கு) அமைதிக்கு உரியதாக்கியிருப்பதனை அவர்கள் காண்பதில்லையா? இதன் பின்னரும் அவர்கள் பொய்யில் நம்பிக்கை கொள்ளவும், அல்லாஹ்வின் அருளை நிராகரிக்கவும் செய்கின்றனரா?
- அல்லாஹ்வைப் பற்றி பொய்யைப் புனைந்துரைப்பவரை விட அல்லது தம்மிடம் உண்மை வந்த பொழுது அதனைப் பொய்யாக்குபவரை விட20 கொடிய அநீதியிழைப்பவர் எவர்? இத்தகு நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் இருப்பிடமொன்று இல்லையா?
- மேலும் எவர்கள் நம்மைச் சந்திக்க முயற்சிப்பார்களோ அவர்களை நிச்சயமாக நாம், நம் வழிகளில் நடத்துவோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களுடன் இருக்கின்றான். ரு7