அதிகாரம்: லுக்மான்
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள் : 35
பிரிவுகள்: 4
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அலிஃப் லாம் மீம். நான் அல்லாஹ், எல்லாம் அறிபவன்.
- இவை நுட்பமான ஞானங்களைக் கொண்ட வேதத்தின் வசனங்களாகும்.
- (இவை) நன்மை செய்பவர்களுக்கு வழிகாட்டியகவும், கருணையாகவும் உள்ளன.
- அவர்கள் தொழுகையினை நிலை நாட்டுபவர்களும், ஸக்காத்து கொடுப்பவர்களும், மறுமையில் உறுதியான நம்பிக்கை கொள்பவர்களுமாவார்கள்.
- அவர்களே தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள நேர்வழியினைப் பின்பற்றுபவர்களாவர். மேலும் வெற்றிக்கு உரியோர் இவர்களே.
- மக்களுள் சிலர் அறிவின்றி(மக்களை), அல்லாஹ்வின் வழியை விட்டு (வழி) தவறச் செய்வதற்காக வீண் கதைகளை (நேர்வழிக்குப் பகரமாகப்) பெற்றுக் கொள்கின்றனர். மேலும் அதை ஏளனமாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். இத்தகையோருக்கு இழிவைத் தரும் தண்டனை உண்டு.
- அவன் முன் எமது வசனங்கள் படித்துக் காட்டப்பட்டால், அவற்றை அவன் கேட்காதது போன்றும், அவனது இரு காதுகளும் செவிடு போன்றும் ஆணவத்துடன் திரும்பி விடுகின்றான். எனவே அவனுக்கு மிக்க வேதனையளிக்கும் தண்டனையை நீர் அறிவித்து விடுவீராக.
- நம்பிக்கை கொண்டு (அதற்கேற்றவாறு) நற்செயல்களைச் செய்தவர்களுக்கு நிச்சயமாக அருட்கள் நிரம்பிய தோட்டங்கள் உண்டு.
- அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். இது அல்லாஹ் செய்துள்ள உண்மையான வாக்குறுதியாகும். அவன் வல்லோனும், ஞானமிக்கோனுமாவான்.
- அல்லாஹ் வானங்களை, நீங்கள் அவற்றைக் காண்பது போன்று தூண்களின்றிப் படைத்துள்ளான். உங்களுடன் பூமி நிலை குலையாது நிற்பதற்காக அவன் அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளான். அவன் அதில் எல்லா வகையான உயிரினங்களையும் பரப்பியுள்ளான். நாம் மேகங்களிலிருந்து நீரை இறக்கி, அதில் எல்லா வகையான உயர்ந்த இணைகளையும் வளரச் செய்கின்றோம்.
- இது அல்லாஹ்வின் படைப்பாகும். எனவே நீங்கள் அவனையன்றி, மற்றவர்கள் எதனைப் படைத்துள்ளனர் என்பதை எனக்குக் காட்டுங்கள். ஆனால் (உண்மையில்) அநீதியிழைப்பவர்கள் மிகவும் பகிரங்கமான வழிகேட்டில் உள்ளனர். ரு1
- நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கி, (இவ்வாறு கூறினோம்): நீர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவீராக. நன்றி செலுத்துபவர் தமக்காகவே நன்றி செலுத்துகிறார். நன்றி கேடு காட்டுபவர் நிச்சயமாக அல்லாஹ் தேவையற்றவனும், புகழுக்குரியவனும் ஆவான் (என்பதை நினைவில் கொள்ளட்டும்).
- லுக்மான் தன் மகனுக்கு அறிவுரை கூறிய பொழுது, என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. நிச்சயமாக (அவனுக்கு) இணை வைப்பது மாபெரும் அநீதியாகும் எனக் கூறினார்.
- மேலும் நாம் மனிதனுக்கு, அவனது பெற்றோரிடம் நல்ல முறையில் நடப்பது குறித்துக் கட்டளையிட்டுள்ளோம். அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனத்தில் அவனைச் சுமந்தாள். மேலும் அவனுக்குப் பால் குடி மறக்கடிக்க இரண்டு வருடங்களாகின்றன1. நீ எனக்கும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்த வேண்டும். (இறுதியாக) என்னிடமே திரும்பி வர வேண்டியதிருக்கிறது (என்பதனை நினைவில் கொள்).
- நீ அறியாத ஒன்றை எனக்கு இணை வைக்கும் படி உன்னிடம் அவ்விருவரும் வாக்குவாதம் செய்தால், நீ அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்காதே. எனினும் உலக விவகாரங்களில் அவர்களுடன் அன்புடன் ஒத்துழைப்பாயாக. மேலும் நீ என்பால் குனிகின்றவரின் வழியைப் பின்பற்றுவாயாக. பின்னர் என்னிடமே நீங்கள் திரும்பி வர வேண்டியதிருக்கிறது. அப்பொழுது நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பேன்.
- (லுக்மான் கூறினார்): என் அருமை மகனே! ஒரு செயல் ஒரு கடுகளவாக இருப்பினும், மேலும் அது கற்பாறையினுள்ளோ, வானங்களிலோ, பூமியிலோ (மறைந்து) இருந்தாலும் அல்லாஹ் அதனை வெளிப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நுட்பமானவற்றை அறிபவனும், எல்லாம் தெரிந்தவனுமாவான்.
- என் அருமை மகனே! தொழுகையை நிறைவேற்று. மேலும், நல்லதை ஏவி, தீயதைத் தடுப்பாயாக. மேலும் உனக்கு ஏற்படும் துன்பத்தை பொறுமையுடன் சகித்துக் கொள். நிச்சயமாக இது மனுஉறுதி மிக்க செயலைச் சேர்ந்ததாகும்.
- நீ மனிதர்களிடத்து உன் கன்னத்தைக் கர்வத்தால் பொங்கச் செய்யாதே; பூமியில் ஆணவங் கொண்டு நடக்காதே. நிச்சயமாக கர்வங்கொண்டவன், பெருமையடிப்பவன் எவனையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
- உன் நடையில் நடுநிலையைப் பேணுவாயாக. மேலும் உன் குரலைத் தாழ்த்திக் கொள்வாயாக. (ஏனெனில்) நிச்சயமாக குரல்களுள் மிகவும் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்.
- வானங்களிலுள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் அல்லாஹ் உங்களுக்காகப் பணி செய்ய வைத்து, உங்களுக்குத் தன் அருட்கொடைகளை வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் முழுமைப்படுத்தி இருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா? மக்களுள் சிலர் அல்லாஹ்வைக் குறித்து ஞானமின்றியும், வழிகாட்டலின்றியும், ஒளிமிக்க வேதமின்றியும் விவாதம் செய்கின்றனர்.
- அல்லாஹ் இறக்கி இருப்பதனை நீங்கள் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் பொழுது, இல்லை; நாங்கள் எங்கள் மூதாதையர்கள் எதைப் பின்பற்றக் கண்டோமோ, அதையே பின்பற்றுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். என்ன?, சுடர் விட்டெரியும் நெருப்பின் தண்டனையின்பால் ஷைத்தான் அவர்களை அழைத்திருந்தாலுமா? (அவர்கள் அவ்வாறு செய்வர்?).
- தம்மை (முழுமையாக) அல்லாஹ்விடம் ஒப்படைத்து, நன்மை செய்பவராகவும் இருப்பவர், நிச்சயமாக உறுதியான கைப்பிடியினைப் பற்றிக் கொண்டார். எல்லாப் பிரச்சினைகளின் முடிவும் அல்லாஹ்விடமே உள்ளது.
- நிராகரிப்போரின் நிராகரிப்பு உம்மை வருத்தத்திற்குள்ளாக்க வேண்டாம். அவர்கள் எம்மிடமே திரும்பி வர வேண்டியதிருக்கிறது. பின்னர் நாம் அவர்கள் செய்தவை பற்றி அவர்களுக்கு அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ், உள்ளங்களிலுள்ளவற்றை நன்கு அறிபவனாவான்.
- நாம் அவர்களைச் சிறிதளவு (உலகியல்) பயனை அடையச் செய்வோம். பின்னர் நாம் அவர்களைக் கடினமான தண்டனையின்பால் விரட்டுவோம்.
- வானங்களையும், பூமியையும் படைத்தவன் எவன் என்று நீர் அவர்களிடம் வினவினால், நிச்சயமாக அவர்கள், அல்லாஹ் என்பார்கள். நீர் கூறுவீராக: எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஆனால், அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
- வானங்களிலும், பூமியிலுமுள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியன. நிச்சயமாக அல்லாஹ் தன்னிறைவு பெற்றவன், புகழுக்குரியவன்.
- பூமியிலுள்ள மரங்களெல்லாம் எழுதுகோல்களாக இருந்து, கடல் (நீர் மையாக இருந்து), அதனுடன் மேலும் ஏழு கடல்கள் அதற்கு உதவினாலும், அல்லாஹ்வின் சொற்கள் (எழுதி) முடிவடையாது. நிச்சயமாக அல்லாஹ் வல்லோனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
- உங்கள் படைப்பும், உங்கள் எழுப்புதலும் ஒரே நபரை(ப் படைப்பதும், எழுப்புவதும்) போன்றதாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான்.
- அல்லாஹ் இரவைப் பகலில் நுழையச் செய்கின்றான்; மேலும் பகலை இரவில் நுழையச் செய்கின்றான்; மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் பணியாற்ற வைத்துள்ளான் என்பதையும், இவற்றுள் ஒவ்வொன்றும் தன் பாதையில் குறிப்பிட்ட ஒரு காலம் வரை சென்று கொண்டிருப்பதையும், நீங்கள் செய்பவற்றைப் பற்றி அல்லாஹ் நன்கு அறிபவனாவான் என்பதையும் நீர் காண்பதில்லையா?
- இது, அல்லாஹ் தான் உண்மை(இறைவன்) என்பதனாலும், அவனையன்றி, அவர்கள் அழைப்பவை பொய்யானவை என்பதனாலும், அல்லாஹ் மிக உயர்ந்தவனும், (ஒப்பிலா) பெரியோனும் என்பதனாலும் நிகழ்கிறது. ரு3
- அல்லாஹ் தன் அடையாளங்களை உங்களுக்குக் காட்டுவதற்காக, அவனது அருளுடன்2 கடலில் செல்கின்ற கப்பல்களை நீர் காணவில்லையா? மிக்க பொறுமையாளராகவும், மிக்க நன்றியுடையவராகவும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் (பல) அடையாளங்கள் உள்ளன.
- அலைகள் நிழலைப் போன்று அவர்களை மூடிக் கொள்ளும் போது, அவர்கள் அல்லாஹ்விடம் கலப்பற்ற நம்பிக்கை கொண்டவர்களாக அவனை அழைக்கின்றனர். ஆனால், அவன் அவர்களைக் காப்பாற்றிக் கரைக்குக் கொண்டு வந்ததன் பின்னர் அவர்களுள் சிலர் நடுநிலையைக் கடைப்பிடிக்கின்றனர். நம்பிக்கை துரோகியையும், நன்றி கெட்டவனையும் தவிர வேறெவனும் எம்முடைய வசனங்களை மறுப்பதில்லை.
- மக்களே! இறை பக்தியைக் கைக் கொள்ளுங்கள். எந்தத் தந்தையும் தன் மகனுக்கு எந்தப் பயனும் அளிக்க முடியாத, மேலும் எந்த மகனும் தன் தந்தைக்கு எவ்வகையிலும் பயனளிக்க முடியாத அந்த நாளுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதே. எனவே உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம். மேலும் ஏமாற்றுபவ(னான ஷைத்தா)ன் அல்லாஹ்வைக் குறித்து உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
- நிச்சயமாக அந்த நாள் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவன் மழையை இறக்குகின்றான். கருப்பைகளுள் இருப்பதனை அவன் அறிகின்றான். எந்த ஆன்மாவும், நாளை எதனைச் சம்பாதிக்கும் என்பதனை அறிவதில்லை. எந்த ஆத்மாவும், எந்த மண்ணில் மரணமடையும் என்பதனையும் அது அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனும், நன்கு உணர்பவனுமாவான். ரு4.