அதிகாரம்: அஸ்-ஸாஃப்ஃபாத்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 183
பிரிவுகள்: 5
அதிகாரம்: அஸ்-ஸாஃப்ஃபாத்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 183
பிரிவுகள்: 5
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- (உண்மையின் பகைவர்களை எதிர்த்து) அணியணியாக நிற்போரைச்1 சான்றாகக் காட்டுகிறேன்.
- மேலும் தீமை செய்வோரைக் கண்டிப்பவர்களையும்,
- (இறைவனை) நினைவூட்டக் கூடியதை (குர்ஆனை) ஓதுகின்றவர்களையும்,
- நிச்சயமாக உங்களின் வணக்கத்திற்குரியவன் ஒருவனேயாவான் (என்பதற்குச் சான்றாகக் காட்டுகிறேன்).
- அவன் வானங்களுக்கும், பூமிக்கும், அவற்றிற்கு இடையிலுள்ளவற்றிற்கெல்லாம் இறைவன்; சூரியன் உதிக்கும் இடங்களுக்கும் இறைவன்.
- கீழ்வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தைக் கொண்டு நாம் அழகுபடுத்தி வைத்துள்ளோம்.
- நாம் அதனை வரம்பு மீறும் எல்லா ஷைத்தானிடமிருந்தும் காப்பாற்றியும் உள்ளோம்.
- வானங்களிலுள்ள பெருந்தகைகளின்2 செய்திகளை அவர்கள் கேட்பதில்லை. மேலும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் தாக்கப்படுகின்றனர்3.
- அவர்கள் அகற்ற(வும்) படுகின்றனர். மேலும் அவர்களுக்கு நிலையான தண்டனை உண்டு.
- ஆனால் ஒருவன் (ஏதாவதொன்றைப்) பறித்துச் சென்றால், அவனை எரிகற்கள் பின்தொடர்கின்றன4.
- எனவே நீர் அவர்களிடம், அவர்களின் படைப்பு கடினமானதா அல்லது நாம் படைத்துள்ளவையா? என்று கேட்பீராக. நிச்சயமாக நாம் அவர்களை ஒட்டும் களிமண்ணால் படைத்துள்ளோம்.
- உண்மையில் (அவர்களின் பேச்சைக் கேட்டு) நீர் வியப்படைகிறீர். (உம் பேச்சைக் கேட்டு) அவர்கள் ஏளனம் செய்கின்றனர்.
- அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால், அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.
- அவர்கள் எந்த ஓர் அடையாளத்தைக் காணும் போதும் (அதனை) ஏளனமாகக் கருதுகின்றனர்.
- மேலும் அவர்கள் இது தெளிவான மாயவித்தையே என்று கூறுகின்றனர்.
- என்ன! நாங்கள் மரணமடைந்து, மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது, நாங்கள் (மீண்டும்) எழுப்பப்படுவோமா?
- எங்களுடைய சென்ற கால மூதாதையர்களுமா(எழுப்பப்படுவர்?).
- நீர் கூறுவீராக: ஆம்; மேலும் நீங்கள் இழிவடைந்தவராகி விடுவீர்கள்.
- அது ஒரே ஒரு அதட்டலேயாகும். உடனே அவர்கள் (உயிர் பெற்று) பார்க்கத் தொடங்கி விடுவர்.
- எங்கள் மீது அந்தோ பரிதாபம்! இதுவே தீர்ப்பு வழங்கும் நாள் என்று அவர்கள் கூறுவார்கள்.
- நீங்கள் மறுத்து வந்த தீர்ப்பு நாள் இதுவே (எனக் கூறப்படும்). ரு1
- அநீதியிழைத்தவர்களையும், அவர்களின் தோழர்களையும், அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள் (என நாம் வானவர்களிடம் கட்டளையிடுவோம்).
- (அதாவது) அல்லாஹ்வையன்றி (அவர்கள் வணங்கி வந்தவர்களை). மேலும், அவர்களை நரகின் வழியில் அழைத்துச் செல்லுங்கள்.
- பின்னர், அவர்களை (அங்கு) நிறுத்தி விடுங்கள். (ஏனெனில்) நிச்சயமாக அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.
- நீங்கள் ஒருவருக்கொருவர் உதவாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?(என்று அவர்களிடம் கேட்கப்படும்).
- அதுமட்டுமின்றி, அந்நாளில் அவர்கள் முற்றிலும் சரணடைந்து விடுவார்கள்.
- சிலர், சிலரை நோக்கி விவாதிப்பவராகத் திரும்புவார்கள்.
- நிச்சயமாக நீங்கள் எங்களிடம் வலப்பக்கத்திலிருந்து வந்தீர்கள் என்று அவர்கள் கூறுவர்5.
- மற்றவர்கள் கூறுவார்கள்: அவ்வாறன்று; நீங்கள் நம்பிக்கை கொள்வோராகவே இருக்கவில்லை.
- உங்கள் மீது எங்களுக்கு எந்த அதிகாரமும் இருந்ததில்லை; மாறாக, நீங்களே வரம்பு மீறிய சமுதாயத்தினராக இருந்தீர்கள்.
- எனவே நிச்சயமாக நாம் (தண்டனையைச்) சுவைத்தாக வேண்டும் என்ற நம் இறைவனின் வாக்கு நமக்கெதிராக உண்மையாயிற்று.
- நாங்களே வழிகேட்டில் இருந்ததனால், நாங்கள் உங்களையும் வழி தவறச் செய்தோம்.
- நிச்சயமாக அவர்கள் எல்லோரும் அந்நாளில் தண்டனையில் பங்காளிகளாவார்கள்.
- நிச்சயமாக நாம் குற்றவாளிகளுடன் இவ்வாறே நடந்து கொள்கின்றோம்.
- ஏனெனில், அல்லாஹ்வையன்றி வேறெவரும் வணக்கத்திற்குரியவர் இல்லை என்று அவர்களிடம் கூறப்பட்ட பொழுது, அவர்கள் கர்வம் கொண்டிருந்தனர்.
- மேலும் பைத்தியம் பிடித்த ஒரு கவிஞருக்காக நாங்கள் எங்கள் கடவுளரை விட்டு விடுவோமா என்று கூறினர்.
- அவ்வாறன்று; மாறாக, அவர் (ஹஸ்ரத் முஹம்மது நபி) உண்மையுடன் வந்து எல்லா தூதர்களையும் மெய்ப்படுத்தியுள்ளார்.
- (நிராகரித்தவர்களே!) நிச்சயமாக நீங்கள் வேதனையளிக்கக் கூடிய தண்டனையைச் சுவைக்கப் போகிறீர்கள்.
- நீங்கள் செய்தவற்றிற்கே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும்.
- அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர, (அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய தண்டனை அளிக்கப்படுவதில்லை).
- இத்தகையோருக்கு அறியப்பட்ட உணவு உண்டு6.
- (அதாவது) பழங்கள்7; மேலும் அவர்கள் கண்ணியம் அளிக்கப்படுவார்கள்.
- அருள் நிறைந்த தோட்டங்களில்,
- (அவர்கள்) ஒருவரையொருவர் நோக்கியவாறு மஞ்சங்களில் அமர்ந்திருப்பார்கள்.
- நீரூற்றின் தண்ணீர் நிரப்பப்பட்ட குவளைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
- (அந்த ஊற்று) வெண்மையானது(ம்), அருந்துபவர்களுக்கு இன்சுவை அளிக்கக் கூடியது(மாகும்).
- அதில் போதை இருக்காது. மேலும் அதனால் அவர்கள் மதியிழந்து விடவும் மாட்டார்கள்.
- அவர்களுடன் கீழ்நோக்கிய பார்வையுடைய, பெரிய கண்களையுடைய பெண்கள் இருப்பார்கள்.
- அவர்கள் மூடப்பட்ட முட்டை8 களைப் போன்றவர்களாக இருப்பர்.
- பின்னர் அவர்களுள் சிலர், சிலரை நோக்கி கேள்வி கேட்டவராய் இருப்பார்கள்.
- அவர்களுள் ஒருவர் கூறுவார்: எனக்கு ஒரு தோழன் இருந்தான்;
- நிச்சயமாக (மறுமையில் எழுப்பப்படுவதை) நம்புபவர்களைச் சேர்ந்தவனா நீயும்? என்று அவன் கூறி வந்தான்.
- நாங்கள் மரணமடைந்து, மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது, நிச்சயமாக எங்களுக்கு (எங்கள் செயல்களுக்குரிய) கூலி கொடுக்கப்படுமா?
- நீங்கள் (அவனை) எட்டிப் பார்ப்பீர்களா என்று அவர் (நம்பிக்கையாளர்) வினவுவார்.
- பின்னர் அவரே(அவனைப் பற்றித் தெரிந்து கொள்ள) முயன்று, நகரத்தின் நடுவில் அவனைக் காண்பார்.
- (அடுத்து) அவர் (அவனிடம்) கூறுவார்: அல்லாஹ்வின் மேல் ஆணையாக, நீ என்னையும் அழிவிற்குள்ளாக்கவே பார்த்தாய்.
- என் இறைவனது அருள் இல்லாமல் இருந்திருப்பின், நானும் இன்று (நரகத்திற்குக்) கொண்டு வரப்பட்டவர்களைச் சேர்ந்தவனாக இருந்திருப்பேன்.
- (இன்னொரு முறை) நாம் மரணமடைபவர்கள் அல்லவா?9
- நமது இம் முதல் மரணத்தைத் தவிர மேலும் நாம் தண்டிக்கப்படுபவர்கள் அல்லவா?
- நிச்சயமாக, இதுவே மகத்தான வெற்றியாகும்.
- செயலாற்றுவோர் இது போன்ற நிலையை அடையவே முயல வேண்டும்.
- விருந்தோம்பலில் சிறந்தது இதுவா? அல்லது கள்ளி மரமா?
- நிச்சயமாக நாம் அதனை அநீதி இழைப்போருக்கு ஒரு சோதனையாக ஆக்கியுள்ளோம்.
- அது நரகத்தின் அடிப்பகுதியிலிருந்து வெளிவரும் ஒரு மரமாகும்.
- அதன் பழம் பாம்புகளின் தலைகளைப் போன்றிருக்கும்.
- அவர்கள் அதனை உண்டு, அதைக் கொண்டு தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள்.
- பின்னர் இன்னும் (குடிப்பதற்காக) மிக அதிகமாகக் கொதிக்கும் நீர்க்கலவையும் அவர்களுக்கு உண்டு.
- பின்னர், நிச்சயமாக அவர்கள் திரும்பிச் செல்வது நரகத்திற்கே.
- நிச்சயமாக அவர்கள் தம் மூதாதையர்களை வழி தவறியவர்களாகக் கண்டனர்.
- இவர்கள், அவர்களின் அடிச்சுவடுகளில் விரைந்தனர்.
- இவர்களுக்கு முன்னர், முற்காலத்து மக்களுள் பெரும்பாலார் வழி தவறியிருந்தனர்.
- நாம் அவர்களுக்கிடையே எச்சரிக்கையாளர்களை அனுப்பியுள்ளோம்.
- எனவே, எச்சரிக்கை செய்யப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு (தீயதாக) ஆயிற்று என்பதனைப் பார்ப்பீராக.
- அல்லாஹ்வின் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியார்களைத் தவிர. ரு2
- நிச்சயமாக நூஹ் எம்மை அழைத்தார். (வேண்டுதலுக்கு) நாம் மிகச்சிறந்த பதிலளிப்பவன் ஆவோம்.
- நாம் அவரையும், அவருடைய குடும்பத்தினரையும் பெருங் கவலையிலிருந்து காப்பாற்றினோம்.
- நாம் அவரது சந்ததிகளை (உலகில்) நிலைத்திருக்கச் செய்தோம்.
- நாம் அவ(ரது நற்பெ)ரைப் பின்னர் தோன்றிய வழித் தோன்றல்களுக்கிடையே நிலைத்திருக்குமாறு செய்தோம்.
- எல்லாச் சமுதாயங்களிடமிருந்தும் நூஹ்வுக்குச் சாந்தி(யின் வேண்டுதல்) கிடைக்கின்றது.
- நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நற்பலன் வழங்குகின்றோம்.
- நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சேர்ந்தவராக விளங்கினார்.
- பின்னர் நாம் மற்றவர்களை மூழ்கடித்து விட்டோம்.
- நிச்சயமாக இப்ராஹீ(மு)ம் அவரது கூட்டத்தைச் சேர்ந்தவராகவே விளங்கினார்.
- அவர் தமது இறைவனிடம் தூய உள்ளத்துடன் வந்தபோது;
- அவர் தமது தந்தையிடமும், தமது சமுதாயத்தினரிடமும், நீங்கள் எதனை வணங்குகின்றீர்கள்? என்று கேட்டார்.
- அல்லாஹ்வையன்றிப் பொய்(யானவற்றைத் தவிர வேறொன்றுமில்லாத கற் பனை)க் கடவுள்களை நீங்கள் விரும்புகின்றீர்களா?
- எனவே உலகங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (என்று கேட்டார்).
- பின்னர் அவர் நட்சத்திரங்களை ஒரு பார்வை பார்த்தார்.
- நிச்சயமாக நான் நோயாளியாகப் போகிறேன் என்றார்10.
- எனவே அவர்கள், அவரை விட்டு விலகி திரும்பிச் சென்று விட்டனர்.
- பின்னர் அவர் அவர்களின் கடவுள்களிடம் இரகசியமாகச் சென்று கேட்டார்: (அவர்களைப் பார்த்து) நீங்கள் எதையும் சாப்பிடுவதில்லையா?
- நீங்கள் பேசாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?
- பிறகு அவர் ரகசியமாக தமது வலக்கையால் அவற்றை வலுவாகத் தாக்கினார்.
- பின்னர் அம் மக்கள் அவரிடம் விரைந்து வந்தனர்.
- (இப்ராஹீம் அவர்களிடம்) நீங்களே செதுக்கிக் கொண்டவற்றை நீங்கள் வணங்குகின்றீர்களா?
- ஆனால் அல்லாஹ் தான் உங்களையும், நீங்கள் செய்வதையும் படைத்துள்ளான் என்றார்11.
- நீங்கள் அவனுக்காக ஒரு சுவரை எழுப்புங்கள், (அதில் நெருப்பை மூட்டுங்கள்). பின்னர் அவனை நெருப்பில் எறிந்து விடுங்கள் என்று அவர்கள் கூறினர்.
- இவ்வாறு அவர்கள், அவருக்கு எதிராகத் (தீய) திட்டம் ஒன்றை நாடினர். ஆனால் நாம் அவர்களை மிக்க இழிவடைந்தவர்களாக்கி விட்டோம்.
- நான் என் இறைவனிடம் செல்கிறேன்; நிச்சயமாக அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்.
- என் இறைவா! நீ எனக்கு நல்ல சந்ததியைத் தந்தருள்வாயாக ( என்று அவர் வேண்டினார்).
- எனவே பொறுமைமிக்க ஒரு மகனைப் பற்றிய நற்செய்தியினை நாம் அவருக்கு வழங்கினோம்.
- அவன், அவருடன் வேகமாக நடந்து செல்வதற்குரிய வயதை அடைந்த போது, என்னருமை மகனே! நான் உன்னை அறுப்பதை(ப் போன்று) ஒரு கனவில் கண்டேன்12; எனவே (அதனைப் பற்றி) உன் கருத்து என்னவென்பதை நீ முடிவு செய், என்று அவர் கூறினார். (அதற்கு) என் தந்தையே! உமக்குக் கட்டளையிடப்பட்டவாறு நீர் செய்வீராக; அல்லாஹ் நாடினால், நீர் என்னை (எனது நம்பிக்கையில்) நிலைத்திருப்பவனாகவே காண்பீர் என்று அவர் கூறினார்.
- அவ்விருவரும் (இறைவனது விருப்பத்திற்குக்) கீழ்ப்படிந்து, அவர், அவனை முகங்குப்புறக் கிடத்திய போது 13,
- நாம் அவரை, இப்ராஹீமே! என அழைத்தோம்.
- நிச்சயமாக நீர் அக்கனவை நிறைவேற்றி விட்டீர்; நிச்சயமாக நாம், நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நற்பலனை வழங்குகின்றோம்14 (என்று கூறினோம்).
- நிச்சயமாக இது மிகத்தெளிவான ஒரு சோதனையாக இருந்தது.
- (இஸ்மாயீலாகிய) அவரை ஒரு பெரும் தியாகத்தின் மூலம் நாம் விடுவித்தோம்15.
- மேலும் நாம் அவ(ரது நற்பெய)ரைப் பின்னர் தோன்றிய சமுதாயங்களுக்கிடையே நிலைத்திருக்குமாறு செய்தோம்.
- இப்ராஹீமுக்குச் சாந்தி உண்டாவதாக!
- நாம், நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நற்பலன் வழங்குகின்றோம்.
- நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சார்ந்தவராக இருந்தார்.
- நபியாகவும், நல்லவர்களைச் சேர்ந்தவராகவும் விளங்கிய இஸ்ஹாக்கைப் பற்றிய நற்செய்தியினை நாம் அவருக்கு வழங்கினோம்.
- நாம் அவருக்கும், இஸ்ஹாக்கிற்கும் அருட்களை வழங்கினோம். அவ்விருவரது வழித்தோன்றல்களுள் சிலர் நன்மை செய்பவர்களாகவும், மற்றுஞ் சிலர் தங்களுக்கே தெளிவாகக் கொடுமை செய்பவர்களாகவும் இருக்கின்றனர். ரு3
- மேலும் மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் நாம் பேரருள் செய்தோம்.
- நாம் அவ்விருவரையும், அவர்களின் சமுதாயத்தினரையும் பெரும் துயரத்திலிருந்து காப்பாற்றினோம்.
- நாம் அவர்களுக்கு உதவி செய்தோம். எனவே அவர்களே வெற்றி பெற்றவர்களாய் விளங்கினர்.
- (கட்டளைகளைத்) தெளிவாக விளக்கும் ஒரு வேதத்தை நாம் அவர்களுக்கு வழங்கினோம்.
- நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காட்டினோம்.
- நாம் அவ(ரது நற்பெய)ரைப் பின்னர் தோன்றியவர்களுக்கிடைநே நிலைத்திருக்குமாறு செய்தோம்.
- மூஸாவுக்கும், ஹாரூனுக்கும் சாந்தி உண்டாவதாக!
- நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே கூலி வழங்குகின்றோம்.
- நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சேர்ந்தவர்களாகவே விளங்கினர்.
- நிச்சயமாக இல்யாஸு(ம்) தூதர்களைச் சேர்ந்தவராக விளங்கினார்.
- அவர் தம் சமுதாயத்தினரிடம், நீங்கள் இறைவனுக்கு அஞ்சி நடக்க மாட்டீர்களா? என்று கூறிய நேரத்தை நினைத்துப் பார்ப்பீராக!
- நீங்கள் ப அல் எனும் சிலையை அழைத்து, படைப்போருள் மிகச்சிறந்த(வனான இறை)வனை விட்டு விடுகிறீர்களா?
- (அல்லாஹ்வே) உங்கள் இறைவனும், உங்கள் முந்தைய மூதாதையர்களுக்கும் இறைவனுமாவான்(என்றார்).
- ஆனால் அவர்கள் அவரைப் பொய்ப்படுத்தினர். எனவே நிச்சயமாக அவர்கள் (தண்டனை வழங்கப்படுவதற்காகக்) கொண்டு வரப்படுவர்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்களைத் தவிர. (இவர்கள் அதற்காகக் கொண்டு வரப்படமாட்டார்கள்).
- நாம் அவ(ரது நற்பெய)ரைப் பின்னர் தோன்றிய வழித்தோன்றல்களுக்கிடையே நிலைத்திருக்குமாறு செய்தோம்.
- இல்யாஸீனுக்கு என்றும் சாந்தி உண்டாவதாக!16
- நிச்சயமாக நாம் நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே கூலி வழங்குகின்றோம்.
- நிச்சயமாக அவர் நம்பிக்கை கொண்ட எமது அடியார்களைச் சேர்ந்தவராக விளங்கினார்.
- நிச்சயமாக லூத்து(ம்) தூதர்களைச் சேர்ந்தவராக விளங்கினார்.
- நாம் அவரையும், அவர் குடும்பத்தினர் யாவரையும் காப்பாற்றிய நேரத்தை நினைத்துப் பார்ப்பீராக!
- பின்தங்கி விடுவோரைச் சேர்ந்த ஒரு கிழவியைத் தவிர.
- பின்னர் மற்றவர்களை முற்றிலும் அழித்து விட்டோம்.
- மேலும் நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்(களின் ஊர்)களைக் கடந்து செல்கிறீர்கள்.
- மாலையிலும் (கடந்து செல்கிறீர்கள்)17. பின்னர் நீங்கள் ஏன் அறிந்து கொள்வதில்லை. ரு4
- நிச்சயமாக யூனுஸு(ம்) தூதர்களைச் சார்ந்தவராக விளங்கினார்.
- நிரப்பப்படவிருந்த கப்பலுக்கு அவர் விரைவாகச் சென்ற நேரத்தை (நினைத்துப் பாருங்கள்).
- (கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு கப்பல் மூழ்கவிருந்த நேரத்தில்) அவர்கள் சீட்டுக் குலுக்கிப் போட்டனர். (அதில் அவரது பெயர் வந்ததனால்) அவர் கப்பலிலிருந்து கடலில் எறியப்படுபவராகி விட்டார்.
- அவர் தம்மை (நினைத்து) வருந்திக் கொண்டிருந்த வேளையில் ஒரு மீன் அவரை விழுங்கி விட்டது.
- அவர் (இறைவனது) தூய்மையினை எடுத்துரைப்பவர்களைச் சேர்ந்தவராக இல்லாமலிருந்திருப்பின்,
- அவர் எழுப்பப்படும் நாள் வரை அதன் வயிற்றில் இருந்திருப்பார். (அவர் மரணமடைந்திருப்பார்).
- பின்னர் நாம் அவரை ஒரு வெட்டவெளி நிலப்பரப்பில் எறிந்தோம்18. அப்பொழுது அவர் நோயுற்றவராக இருந்தார்.
- நாம் அவருக்குப் பக்கத்தில் ஒரு சுரைச் செடியை முளைக்கச் செய்தோம்.
- நாம் அவரை ஒரு இலட்சம் அல்லது அதனை விட மிகுதியானவர்களுக்குத் தூதராக அனுப்பி வைத்தோம்.
- அவர்கள் (எல்லோரும்) நம்பிக்கை கொண்டனர். எனவே நாம் அவர்களை ஒரு (நீண்ட) காலம் வரை உலகப் பயன் அடையச் செய்தோம்.
- இப்பொழுது நீர் (நிராகரிப்பவர்களாகிய) அவர்களிடம், அவர்களுக்கு ஆண் மக்கள் இருக்க, உமது இறைவனுக்கு மட்டும் பெண் மக்களா என்று கேட்பீராக.
- அல்லது அவர்கள் சாட்சிகளாக இருக்க, நாம் வானவர்களைப் பெண்களாகப் படைத்துள்ளோமா?
- நன்றாகக் கேளுங்கள். அவர்களின் பொய்களில் இக்கூற்றும் ஒன்றாகும்.
- (அதாவது) அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றுள்ளான் (என்பது). நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.
- அவன் ஆண் மக்களை விட, பெண் மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?19
- உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பு கூறுகின்றீர்கள்?
- நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
- அல்லது உங்களிடம் ஏதேனும் தெளிவான சான்று உள்ளதா?
- நீங்கள் உண்மையாளர்களாயின், உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்.
- அவர்கள் அவனுக்கும், ஜின்களுக்கும் இடையே உறவை ஏற்படுத்துகின்றனர். ஆனால் (தீர்ப்பளிக்கப்படுவதற்காக இறைவன் முன்) தாங்கள் கொண்டு செல்லப்படுபவர் என்று ஜின்கள் நன்கு தெரிந்திருக்கின்றனர்.
- அவர்கள் கூறுபவற்றிலிருந்து அல்லாஹ் தூயவன்.
- அல்லாஹ்வின் களங்கமற்ற அடியார்களைத் தவிர. ( அவர்கள் அவ்வாறு செய்வதில்லை).
- நிச்சயமாக நீங்களும், நீங்கள் வணங்குபவைகளும்;
- உங்களுள் எவராலும் (எவரையும்) அவனுக்கெதிராக வழிகெடுக்க முடியாது.
- நரகில் நுழைய வேண்டியவர்களைத் தவிர.
- (நீர் கூறுவீராக) எங்கள் எல்லோருக்கும் குறிப்பிட்ட ஓர் இடம் உண்டு.
- நிச்சயமாக நாங்கள் எல்லோரும் (இறைவன் முன்) அணி வகுத்து நிற்பவர்களாவோம்20.
- நிச்சயமாக நாங்கள் (இறைத்) தூய்மையினை எடுத்துரைப்பவர்களுமாவோம்.
- இவர்கள் (மக்காவாசிகள் இவ்வாறு) கூறியே வந்தனர்.
- முன் சென்றவர்களிடம் (வந்ததைப் ) போன்று எங்களிடமும் தூதர்21 வந்திருந்தால்,
- நாங்கள் அல்லாஹ்வின் நல்லடியார்களைச் சேர்ந்தவராக இருந்திருப்போம்.
- ஆனால் (அவர், அவர்களிடம் வந்தபோது) அவரை, அவர்கள் நிராகரித்து விட்டனர். எனவே அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் அறிந்து கொள்வர்.
- தூதர்களாகிய நம் அடியார்களைக் குறித்து நம் தீர்ப்பு ஏற்கனவே நிகழ்ந்து விட்டது.
- (அதாவது) நிச்சயமாக அவர்களுக்கே உதவி அளிக்கப்படும்.
- (மேலும்) எமது படையின(ராகிய நம்பிக்கையாள)ர்களே கட்டாயம் வெல்வர்.
- எனவே நீர் சிறிது காலம் அவர்களிடமிருந்து விலகி விடுவீராக.
- மேலும் நீர் அவர்களை நன்கு பார்த்துக் கொண்டிருப்பீராக. அவர்களும் விரைவில் (தங்கள் முடிவைக்) கண்டு கொள்வர்.
- அவர்கள் நமது தண்டனை பெற அவசரப்படுகிறார்களா?
- ஆனால் அது அவர்களது முற்றத்தில் இறங்கும் போது, எச்சரிக்கப்பட்டவர்களுக்கு அது தீய விடியற்காலையாக இருக்கும்.
- எனவே நீர் சிறிது காலம் அவர்களை விட்டு விலகி விடுவீராக.
- மேலும் நீர் நன்கு பார்த்துக் கொண்டிருப்பீராக. நிச்சயமாக அவர்களும் (தங்கள் முடிவைக்) கண்டு கொள்வர்.
- கண்ணியமிகு இறைவனாகிய உமது இறைவன் அவர்கள் கூறுபவற்றிலிருந்து தூயவனாவான்.
- தூதர்களுக்கு என்றென்றும் சாந்தி நிலவுவதாக!
- உலகங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! ரு5