அதிகாரம்: ஸாது
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 89
பிரிவுகள்: 5
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- ஸாது1 அறிவுரைகள் நிறைந்த குர்ஆனைச் சான்றாகக் காட்டுகிறேன்.
- ஆனால், நிராகரிப்பவர்கள் (போலிப்) பெருமையிலும், பகைமையிலும் (மூழ்கி) இருக்கின்றனர்.
- இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்துள்ளோம். அவர்கள் (உதவிக்காகக்) கதறினர். ஆனால் அது தப்பித்துக் கொள்வதற்கான நேரமன்று.
- அவர்களி(ன் சமுதாயத்தி)லிருந்தே, அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்துள்ளார் என்று அவர்கள் வியப்படைகின்றனர். இவர் ஒரு சூனியக்காரனும், மிக்க பொய்யுரைப்பவருமாவார் என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
- அவர் (எல்லாக்) கடவுளர்களையும் ஒரே கடவுளாக ஆக்கி விட்டாரா?2. நிச்சயமாக இது வியப்பிற்குரிய ஒன்றேயாகும் (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
- அவர்களின் பெரியவர்கள், நீங்கள் இங்கிருந்து சென்று விடுங்கள்; உங்கள் கடவுளர்களை உறுதியாகப் பற்றிக் கொள்ளுங்கள்; நிச்சயமாக இது திட்டமிடப்பட்ட ஒன்றேயாகும் என்று கூறிச் சென்றனர்.
- வேறு சமுதாயத்தாரில் இவ்வாறான ஒன்றினை நாம் அறவே கேள்வியுற்றதில்லை. இது பொய்க்கூற்றேயாகும்.
- நம்மு(டைய சமுதாயத்தினரு)ள் அவருக்குத் தான் அறிவுரை இறக்கப்பட்டுள்ளதா?(என்றும் அவர்கள் கேட்கின்றனர்). உண்மையில் அவர்கள் எனது அறிவுரையைக் குறித்து ஐயப்பாட்டில் இருக்கின்றனர். அதுமட்டுமின்று; அவர்கள் இதுவரை என் தண்டனையைச் சுவைக்கவில்லை.
- வல்லோனும், வாரி வழங்குவோனுமாகிய உமது இறைவனின் கருணைக் கருவூலங்கள் அவர்களிடம் உள்ளனவா?
- அல்லது வானங்கள், பூமி மற்றும் அவற்றிற்கிடையிலுள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்குரியதா? அவ்வாறாயின், அவர்கள் தங்கள் வழிவகைகளையெல்லாம் பயன்படுத்தித் தங்கள் முயற்சிகளை மேலோங்கச் செய்யட்டும்.
- கூட்டுச் சேர்ந்து கொண்ட படை ஒன்று இங்கு முறியடிக்கப்படும்3.
- இவர்களுக்கு முன்னர் நூஹ்வின் சமுதாயத்தினரும், ஆது (இனத்தினரு)ம், ஆற்றல் மிக்க4 ஃபிர்அவ்னும் பொய்ப்படுத்தினர்.
- ஸமூது (இனத்தினரு)ம், லூத்தின் சமுதாயத்தினரும், அய்க்க5 மக்களும் (பொய்ப்படுத்தினர்). அவர்கள் (எல்லோரும்) கூட்டுச் சேர்ந்து கொண்டவர்களாக இருந்தனர்.
- அவர்களுள் ஒவ்வொருவரும் தூதர்களைப் பொய்யாக்கினர். எனவே எனது தண்டனை தவிர்க்க முடியாததாகி விட்டது. ரு1
- காலத்தாழ்வு இன்றித் திடீரென்று வரும் தண்டனை ஒன்றைத் தான் இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- எங்கள் இறைவா! கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளிற்கு முன்னரே (தண்டனைக்குரிய) எங்கள் பங்கை, எங்களுக்கு நீ விரைவில் தந்து விடுவாயாக என்று அவர்கள் கூறுகின்றனர்.
- அவர்கள் கூறுவதை நீர் பொறுத்துக் கொண்டு, திறமையுள்ள எமது அடியார் தாவூதை நினைத்துப் பார்ப்பீராக. நிச்சயமாக அவர் எப்போதும் (இறைவனையே) நோக்கி நிற்பவராக விளங்கினார்.
- நாம் மலைவாழ் மக்களை அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக ஆக்கினோம். அவர்கள் இருள் சூழும் போதும், ஒளி பரவும் போதும் இறைவனது தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர்.
- பறவை (போன்று ஆத்மீக வானத்தில் பறப்பவர்) களையும்6 ஒன்று திரட்டி, அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களாக ஆக்கினோம். அவர்கள் எல்லோரும் அவரைச் சேர்ந்து நின்றனர்.
- நாம் அவரது ஆட்சியை வலிமைப்படுத்தி, அவருக்கு ஞானத்தையும், தீர்வான பேச்சு வன்மையையும் வழங்கினோம்.
- (அவரது) அறைச்சுவரின் மேல் வழக்காளிகள் ஏறிய (போது நிகழ்ந்தது பற்றிய) செய்தி உமக்குக் கிடைத்ததா?
- அவர்கள் தாவூதிடம் வந்தபோது, அவர் அவர்களைக் கண்டு பதற்றமடைந்தார். அப்பொழுது அவர்கள் கூறினர்: நீர் பயப்பட வேண்டாம்; (நாங்கள்) வழக்காளிகளான இரண்டு பிரிவினர்களாவோம். எங்களுள் ஒருவர், மற்றவருக்கெதிராக வரம்பு மீறியுள்ளார். எனவே நீர் எங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்கி, சரியான பாதையிலிருந்து விலகி விடாமல், எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவீராக.
- இவர் என் சகோதரர்; இவருக்குத் தொன்னூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன7. எனக்கு ஓர் ஆடு மட்டும் தான் இருக்கிறது. என்றாலும் அவர், அதனைத் தனக்குக் கொடுத்து விடு எனக்கூறி, பேச்சில் என்னை வென்று விடுகின்றார்.
- இதற்கு தாவூது, நிச்சயமாக அவர் தமது சொந்த ஆடுகளுடன், உமது ஆட்டை(யும் சேர்த்துக் கொள்வதற்காக)க் கேட்பதில் உமக்கு அநீதி இழைத்துள்ளார்8. (இறைவன் மீது) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களைத் தவிர, நிச்சயமாகப் பங்காளிகளுள் பலர், ஒருவருக்கெதிராக ஒருவர் வரம்பு மீறுகின்றனர். (நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களாகிய) அவர்கள் குறைவானவர்களாவர் என்று கூறினார். நாம் தாவூதைச் சோதித்துள்ளோம் என்று அவர் உணர்ந்து கொண்டார்9. எனவே அவர் தமது இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி, வணக்கத்தில் தலைகுனிந்தவாறு தரையில் வீழ்ந்து அவனிடம் திரும்பினார்.
- எனவே நாம் அவருடைய பலவீனங்களை மூடி மறைத்தோம். நிச்சயமாக அவருக்கு எம்மிடம் மிக நெருக்கமும், மிகச்சிறந்த தங்குமிடமும் உள்ளன10.
- (பின்னர் நாம் அவரிடம் கூறினோம்:) தாவூதே! நாம் உம்மை இப்பூமியில் ஒரு பிரதிநிதியாக ஆக்கியுள்ளோம். எனவே நீர் மக்களுக்கிடையே நேர்மையுடன் தீர்ப்பு வழங்குவீராக. மேலும் வீண் விருப்பத்தைப் பின்பற்ற வேண்டாம். அது உம்மை அல்லாஹ்வின் வழியை விட்டும் தவறச் செய்து விடும். நிச்சயமாக அல்லாஹ்வின் வழியை விட்டுத் தவறிச் செல்பவர்கள், கேள்வி, கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்டதனால், அவர்களுக்குக் கடினமான தண்டனை உண்டு. ரு2
- வானத்தையும், பூமியையும், அவ்விரண்டிற்கிடையிலுள்ள எதனையும் நாம் வீணாகப் படைக்கவில்லை. அது நிராகரிப்பவர்களின் எண்ணமாகும். நிராகரிப்பவர்களுக்கு நெருப்புத் தண்டனையின் காரணமாக அழிவுதான் (ஏற்படவிருக்கிறது).
- நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களை, பூமியில் குழப்பம் விளைவிப்பவர்களைப் போன்று நாம் நடத்துவோமா? அல்லது இறையச்சமுடையவர்களை, தீயவர்களைப் போன்று நடத்துவோமா?
- அ(வ்விறை)வனின் வசனங்களை அவர்கள் ஆராய்ந்து பார்ப்பதற்காகவும், அறிவுடையவர்கள் அறிவுரை பெறுவதற்காகவும் சிறப்பு மிக்க இவ் வேதத்தை நாம் உமக்கு இறக்கினோம்.
- மேலும் நாம் தாவூதுக்கு ஸுலைமானை வழங்கினோம். அவர் மிகச்சிறந்த ஓர் அடியாராக விளங்கினார். நிச்சயமாக அவர் எப்போதும் (எம்மை) நோக்கித் திரும்புபவராகவே இருந்தார்.
- மிக வேகமாகச் செல்லும் உயர் இனக்குதிரைகள் மாலை வேளையில் அவர் முன் கொண்டு வரப்பட்ட பொழுது;
- சிறந்த பொருட்கள், என் இறைவனை எனக்கு ஞாபகமூட்டுவதால், நான் அவற்றை நேசிக்கின்றேன் என்று அவர் கூறினார். அவை திரைக்குப் பின்னால் மறைந்து விட்ட பொழுது;11
- அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள் (என்று அவர் கூறினார்). பின்னர் அவர், அவற்றின் கால்களையும், கழுத்துகளையும் தடவிக் கொடுக்கத் தொடங்கினார் 12.
- நாம் ஸுலைமானைச் சோதித்து,(ஆத்மீக உயிரற்ற) ஒரு வெற்றுடலை13 அவரது அரியணையில் அமர்த்தினோம். (இறையறிவிப்பின் மூலம் இது அவருக்குத் தெரிவிக்கப்பட்டதும்) அவர் எம்மிடம் திரும்பினார்.
- என் இறைவா! என்னை மன்னித்து, எனக்குப் பின்னர் தோன்றும் எவருக்கும், வழிவழியாகக் கிடைக்காத ஆத்மீக ஆட்சியை எனக்கு வழங்குவாயாக14. நிச்சயமாக நீயே மிக அதிகமாக வழங்குபவனாவாய் என்று அவர் கூறினார்.
- எனவே காற்று அவரது கட்டளைக்கேற்ப, அவர் செல்ல விரும்பிய இடத்தை நோக்கி இதமாக வீசிக் கொண்டிருக்குமாறு நாம் அதனை, அவருக்குத் தொண்டு செய்ய வைத்தோம்.
- அவ்வாறே ஷைத்தான்களை (அதாவது பொறியியல் வல்லுநர்களை)யும், கட்டட நிபுணர்களையும், நீர் மூழ்குனர்களையும் (அவருக்குத் தொண்டாற்ற வைத்தோம்).
- சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த மற்றவர்களையும்15 (நாம் அவருக்குத் தொண்டு செய்ய வைத்தோம்).
- இது எமது அருளாகும்16. எனவே நீர் அருள்கூர்ந்து அவர்களை விடுவித்து விடுவீராக அல்லது (உமது விருப்பம் போல்) கேள்வி, கணக்கின்றி அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்வீராக17.
- நிச்சயமாக அவருக்கு எம்மிடம் மிக நெருக்கமும், மிகச்சிறந்த தங்குமிடமும் உள்ளன. ரு3
- எமது அடியார் அய்யூபை நினைத்துப் பார்ப்பீராக. நிராகரிக்கும் ஒரு பகைவன் எனக்குப் பெருந் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான் என்று (கூறி) அவர் தம் இறைவனை அழைத்த போது;
- (நாம் அவரிடம்) நீர் உமது குதிகாலால் (பயணத்திற்குப் பயன்படும் மிருகத்தை) உதைப்பீராக. அதோ, குளிப்பதற்கும், குடிப்பதற்கும் ஏற்ற குளிர்ந்த நீர் உள்ளது (என்று கூறினோம்).
- அவருக்கு, அவருடைய குடும்பத்தினரையும் வழங்கினோம். எம்மிடத்திலிருந்து கருணையாக அவர்களைப் போன்று மேலும் வழங்கினோம். அறிவுடையவர்களுக்கு ஓர் அறிவுரையும் வழங்கினோம்.
- (நாம் அவரிடம்) வளர்ப்புப் பறவைகளுள் சிலவற்றை உணவுக்காக நீர் உம்முடன் எடுத்துக் கொண்டு, பயணம் செய்வீராக; பொய்யின் பால் சாய்ந்து விட வேண்டாம் (என்று கூறினோம்) 18. நிச்சயமாக நாம் அவரைப் பொறுமையுடையவராகக் கண்டோம். அவர் மிகச்சிறந்த ஓர் அடியாராக விளங்கினார். நிச்சயமாக அவர் எப்போதும் (எம் பக்கம்) திரும்புபவராக இருந்தார்.
- வல்லமையும், அகப்பார்வையும் உடைய எம் அடியார்களாகிய இப்ராஹீமையும், இஸ்ஹாக்கையும், யாகூபையும் நினைத்துப் பார்ப்பீராக.
- (மக்களுக்கு மறுமை) வீட்டைப் பற்றிச் சிறப்பாக நினைவூட்டுவதற்காக நாம் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
- மேலும் நிச்சயமாக அவர்கள் எம்மிடம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகவும், மிகச் சிறந்தவர்களாகவும் விளங்கினர்.
- இஸ்மாயீலையும், எசயாவையும், துல்கிஃப்லையும் நினைத்துப் பார்ப்பீராக. மேலும் இவர்கள் எல்லோரும் மிகச்சிறந்தவர்களாக விளங்கினர்.
- இது நினைவூட்டக்கூடிய ஒன்றாகும். நிச்சயமாக இறையச்சமுடையவர்களுக்கு மிகச்சிறந்த தங்குமிடம் உண்டு.
- (அதாவது) அவர்களுக்காக வாயில்கள் திறக்கப்பட்ட, நிலையான தோட்டங்கள் (உள்ளன).
- அவற்றில் அவர்கள் (தலையணைகளில்) சாய்ந்து அமர்ந்திருப்பர். அவற்றில் மிகுதியான பழங்களையும், பானங்களையும்(மகிழ்ச்சியுடன்) அவர்கள் வேண்டுவர்.
- கீழ்நோக்கிய பார்வைகளை உடைய, ஒத்த வயதினர்களான, தூய பெண்கள் அவர்களுடன் இருப்பர்.
- இது கேள்வி, கணக்குக் கேட்கப்படும் நாளில் கிடைக்குமென்று உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதாகும்.
- நிச்சயமாக இது ஒருபோதும் முடிவடைந்து விடாத எமது உணவாகும்.
- இது (நம்பிக்கை கொண்டவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதாகும்). ஆனால் கட்டுப்பட்டு நடக்காத தீயவர்களுக்கு மிகக் கெட்ட தங்குமிடம் (நியமிக்கப்பட்டு) உள்ளது.
- (அதாவது) நரகம். அதில் அவர்கள் நுழைவர்; அது தங்குவதற்கு மிகக் கெட்ட இடமாகும்.
- இது (நிராகரிப்பவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதாகும்). இதனை அவர்கள் சுவைக்க வேண்டும். அதாவது கொதிநீரையும், கடுமையாகக் குளிர்ந்த முடை நாற்றநீரையும் (அவர்கள் சுவைக்க வேண்டும்).
- இது போன்ற இயல்பினைக் கொண்ட (பல்வேறு வகையான) மற்றும் பல (தண்டனை) உண்டு19.
- (அவர்களுள் ஒரு பிரிவினர், மற்றொரு பிரிவினரைச் சுட்டிக் காட்டி) இது உங்களுடன் நரகத்தில் நுழையும் ஒரு படையாகும். அவர்களுக்கு எந்த நல்வரவேற்பும் இல்லை. நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழைவர் (என்பர்).
- (இது கேட்டு) அவர்கள், இல்லை, (உண்மையிலேயே) உங்களுக்கும் நல்வரவேற்பு இல்லை. இ(ந்த நரகத்)தை எங்களுக்கு நீங்கள் தாம் ஆயத்தப்படுத்தினீர்கள்20. மிகக் கெட்ட தங்குமிடம் இதுவே என்பர்.
- மேலும் அவர்கள் கூறுவர்: எங்கள் இறைவா! இதனை எங்களுக்காக அனுப்பி வைத்தவருக்கு நரகத் தண்டனையை இருமடங்கு மிகுதியாக வழங்குவாயாக.
- (நரகத்திற்குரிய) அவர்கள் கூறுவர்: தீயவர்கள் என நாங்கள் எண்ணிக் கொண்டிருந்தவர்களை நாங்கள் (இங்கே) காணாதிருப்பதற்கு எங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?
- (எங்கள் மனதில் வீணே தோன்றிய எண்ணத்தினால்) நாங்கள் அவர்களை ஏளனத்திற்குரியவர்களாக்க் கருதி விட்டோமா? அல்லது அவர்களைக் குறித்துக் கண்கள் தவறிழைத்தனவா? (அவர்கள் ஏன் இங்கு காணப்படுவதில்லை?).
- நிச்சயமாக நரகத்திற்குரியவர்கள் ஒருவருடன் ஒருவர் வாக்குவாதம் செய்வது உண்மையே. ரு4
- நீர் கூறுவீராக: நான் ஓர் எச்சரிக்கை செய்பவனேயாவேன். தனித்தவனும், முழுமையான அதிகாரத்தைக் கொண்டவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர, வேறெவனும் வணக்கத்துக்குரியவன் இல்லை.
- வானங்களுக்கும், பூமிக்கும், அவ்விரண்டிற்குமிடையிலுள்ளவை அனைத்திற்கும் உரிய இறைவன், வல்லமையுள்ளவனும், மிக்க மன்னிப்பவனுமாவான்21.
- நீர் கூறுவீராக: இது ஒரு மிகப்பெரிய செய்தியாகும்.
- (ஆனால்) அதனை நீங்கள் புறக்கணித்துக் கொண்டிருக்கிறீர்கள்.
- மேலுள்ள பெருந்தகைகள் (வானவர்கள். நேர்வழி காட்டுவதற்கு இக் காலத்தில் பொருத்தமானவர் யார் என) விவாதித்துக் கொண்டிருந்த போது, அவர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
- நான் தெளிவான எச்சரிக்கை செய்பவன் மட்டுமே ஆவேன் என்றே எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது.
- உமது இறைவன் வானவர்களிடம் இவ்வாறு கூறிய போது (நிகழ்ந்ததை நினைத்துப் பார்ப்பீராக): நான் களிமண்ணிலிருந்து ஒரு மனிதனைப் படைக்கவிருக்கிறேன்;
- எனவே நான் அவனை முழுமையாக்கி, அவனுள் என் ஆவியை ஊதினால், நீங்கள் யாவரும் அவனுக்குக் கட்டுப்பட்டவர்களாக (அல்லாஹ்வின் முன்) சிரம் பணியுங்கள்.
- எனவே வானவர்கள் எல்லோரும் கீழ்ப்படிந்தனர்.
- ஆனால் இப்லீஸ் (கீழ்ப்படியவில்லை). அவன் கர்வம் கொண்டு, நிராகரித்தவர்களைச் சேர்ந்தவனாகி விட்டான்.
- இறைவன் கூறினான்: இப்லீஸே! நான் என் இரு கைகளால் படைத்ததற்கு22 நீ கீழ்ப்படியாமல் உன்னைத் தடுத்தது யாது? நீ கர்வம் கொண்டவனாகி விட்டாயா? அல்லது உயர்பதவிக்கு உரிமை கொண்டாடுபவர்களைச் சேர்ந்தவனாகி விட்டாயா?
- அவன் கூறினான்: நான் அவரை விடச் சிறந்தவன். நீ என்னை நெருப்பால் படைத்துள்ளாய். அவரையோ களிமண்ணால் படைத்துள்ளாய்23.
- (இறைவன்) கூறினான்: நீ இங்கிருந்து வெளியேறி விடு. ஏனென்றால் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாவாய்.
- நிச்சயமாகத் தீர்ப்பு நாள் வரை எனது சாபம் உன் மீது இருந்து கொண்டேயிருக்கும்.
- அவன் கூறினான்: என் இறைவா! அவர்கள் எழுப்பப்படும் நாள் வரை நீ என்னை விட்டு வைப்பாயாக.
- இறைவன் கூறினான்: நிச்சயமாக நீ விட்டு வைக்கப்பட்டவர்களைச் சேர்ந்தவனாவாய்.
- இது குறிப்பிடப்பட்ட நாள் வரை (ஆகும்).
- அவன் கூறினான்: உனது வல்லமையின் மேல் ஆணையாக! நிச்சயமாக நான், அவர்கள் எல்லோரையும் வழிதவறச் செய்து விடுவேன்.
- அவர்களுள் தேர்ந்தெடுக்கப்பட்ட உன் அடியார்களைத் தவிர.
- இறைவன் கூறினான்: அதுவே உண்மை. நானும் உண்மையை(யே) கூறுகிறேன்.
- (அதாவது) நிச்சயமாக நான், உன்னையும், உன்னைப் பின்பற்றுபவர்கள் எல்லோரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன்.
- நீர் கூறுவீராக! நான் இ(றைத் தூதை எடுத்துரைப்ப)தற்காக உங்களிடம் எந்தக் கூலியும் கேட்பதில்லை; நான் போலியாக நடிப்பவரைச் சேர்ந்தவனுமில்லை.
- இது (குர்ஆன்) எல்லா மக்களுக்கும் நினைவூட்டக் கூடிய ஒன்றேயாகும்.
- சிறிது காலத்திற்குப் பின்னர் இதன் (உண்மையான) கருத்தை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் 24. ரு5