அதிகாரம் : யாஸீன்
அருளப்பெற்ற இடம்
: மக்கா | வசனங்கள் : 84
பிரிவுகள் : 5
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- தலைவரே1.
- (நாம்) ஞானம் நிறைந்த குர்ஆனை (நீர் தலைவரென்பதற்கு) சான்றாக வழங்குகிறோம்2.
- நிச்சயமாக நீர் தூதர்களைச் சேர்ந்த (ஒரு)வர்.
- (நீர்) நேரான வழியில் (இருக்கின்றீர்).
- (இது) வல்லோனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய (இறை)வனால் இறக்கப்பட்டதாகும்.
- எச்சரிக்கை செய்யப்படாத மூதாதையரைக் கொண்ட மக்களுக்கு நீர் எச்சரிக்கை செய்வதற்காக (இது அருளப்பட்டுள்ளது). மேலும் அவர்கள் கவனமற்றவர்களாவார்கள்.
- நிச்சயமாக (நம்) வாக்கு3 அவர்களுள் பெரும்பாலார் குறித்து, உண்மையாயிற்று. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
- நாம் அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளை4 மாட்டியுள்ளோம். அவை (அவர்களின்) தாடை வரை உள்ளன. அதனால் அவர்களுடைய தலைகள் பின்னால் தள்ளப்படுகின்றன.
- நாம் அவர்களுக்கு முன்னால் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களுக்குப் பின்னாலும் ஒரு தடையை (ஏற்படுத்தியுள்ளோம்)5. நாம் அவர்களை மூடியுள்ளோம். எனவே அவர்களால் பார்க்க முடிவதில்லை.
- நீர் அவர்களுக்கு எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாதிருப்பதும் சமமானதே. அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.
- நல்லுபதேசத்தைப் பின்பற்றி, அளவற்ற அருளாளனாகிய(இறை)வனுக்குத் தனிமையில் அஞ்சுபவருக்கு மட்டுமே உம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். எனவே நீர் அவருக்கு மன்னிப்பையும், கண்ணியமான நற்பலன் பற்றிய நற்செய்தியையும் வழங்குவீராக.
- நிச்சயமாக நாமே மரணமடைந்தவர்களுக்கு உயிர் கொடுக்கிறோம். மேலும் அவர்கள் முன்னே அனுப்புபவற்றையும், அவர்கள் பின்னால் விட்டுச் செல்பவற்றையும் பதிவு செய்கிறோம்; தெளிவான ஒரு பதிவேட்டில் ஒவ்வொன்றையும் பதிவு செய்துள்ளோம்.
- ஒரு நகர மக்களின் எடுத்துக்காட்டை நீர் அவர்களுக்கு விளக்குவீராக. அவர்களிடம் தூதர்கள் வந்தபோது;
- (அதாவது) நாம் அவர்களிடம் இரண்டு தூதர்களை அனுப்பினோம்; அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினர். எனவே மூன்றாவது ஒருவரைக் கொண்டு, அவ்விரு தூதர்களையும் நாம் வலிமைப்படுத்தினோம். எனவே நிச்சயமாக நாங்கள், உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்று அவர்கள் கூறினர்.
- (அதற்குப் பதிலாக) நீங்கள் எங்களைப் போன்ற மனிதர்களேயாவீர்கள் என்றும், அளவற்ற அருளாளனாகிய (இறை)வன் எதனையும் இறக்கவில்லை; நீங்கள் பொய்யையே கூறுகின்றீர்கள் என்றும் அவர்கள் கூறினர்.
- அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்களிடம் தூதர்களாக அனுப்பப்பட்டுள்ளோம் என்பதை எங்கள் இறைவன் அறிவான்;
- எங்கள் பணி, தூதுச் செய்தியினைத் தெளிவாக எட்ட வைப்பது மட்டுமேயாகும்.
- நிச்சயமாக நாங்கள், உங்களைக் கெட்ட சகுனமாகக் கருதுகிறோம். நீங்கள் விலகிக் கொள்ளவில்லையாயின், நிச்சயமாக நாங்கள், உங்களைக் கல்லெறிந்து கொன்று விடுவோம். மேலும் எங்களிடமிருந்து, உங்களுக்கு வேதனையளிக்கும் தண்டனை கிடைக்கும் என்று அவர்கள் கூறினர்.
- (அதற்கு அத் தூதர்கள்): உங்கள் கெட்ட சகுனம் உங்களுடனே இருக்கும். உங்களுக்கு அறிவுரை கூறப்படுவதனாலா? (நீங்கள் இதனைக் கூறுகின்றீர்கள்). அவ்வாறன்று. மாறாக, நீங்கள் வரம்புகளை மீறும் சமுதாயத்தினராக இருக்கின்றீர்கள் என்று கூறினர்.
- அந்த நகரத்தின் தொலைவிலுள்ள பகுதியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து, என் சமுதாயத்தினரே! தூதர்களைப் பின்பற்றுங்கள் என்றார்.
- உங்களிடம் எந்தக் கூலியும் கேட்காதவர்களும், நேர்வழி பெற்றவர்களுமாகிய இவர்களைப் பின்பற்றுங்கள்.
- என்னைப் படைத்தவனை நான் வணங்காமலிருக்க, எனக்கு என்ன நேர்ந்தது? மேலும் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள்.
- அவனையன்றி, மற்றவர்களை நான் கடவுளராக எடுத்துக் கொள்வேனா? அளவற்ற அருளாள(னாகிய இறைவ)ன் எனக்கு எந்தத் தீங்கையாவது நாடினால், அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது; அவர்களால் (அத் தீங்கிலிருந்து) என்னைக் காப்பாற்றவும் இயலாது.
- அந்நிலையில் நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில் இருப்பேன்.
- நான், உங்கள் இறைவனிடம் நம்பிக்கை கொண்டுள்ளேன். எனவே நான் சொல்வதைக் (கவனமாகக்) கேளுங்கள்.
- (அப்பொழுது அவரிடம்) நீர் சுவர்க்கத்தில் நுழைவீராக என்று கூறப்பட்டது. இதற்கு அவர் கூறினார்: அந்தோ! என் சமுதாயம் அறிந்திருக்க வேண்டுமே!
- அதாவது என் இறைவன் எவ்வாறு என்னை மன்னித்து, என்னைக் கண்ணியத்திற்குரியவர்களைச் சேர்ந்தவனாக ஆக்கியுள்ளான் (என்பதனைத் தெரிந்திருக்க வேண்டுமே).
- நாம் அவருக்குப் பின்னர், அவரது சமுதாயத்தினருக்கெதிராக வானத்திலிருந்து எந்தப் படையையும் இறக்கவில்லை; (அவ்வாறான படையை) நாம் இறக்குவதுமில்லை.
- பயங்கரமான ஒரு தண்டனையே (அவர்களுக்கு) வந்தது. அந்தோ! அவர்கள் அழிந்தே விட்டனர்.
- (நிராகரிக்கும்) அடியார்களின் பரிதாபமே! எந்தத் தூதர் அவர்களிடம் வந்தாலும், அவர்கள் அவரை ஏளனத்திற்குள்ளாக்கவே செய்கின்றனர்.
- இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருப்பதையும், ஒருபோதும் அவர்கள் இவர்களிடம் திரும்பி வராமலிருப்பதையும் இவர்கள் காணவில்லையா?
- மேலும் அவர்கள் எல்லோரும் ஒன்று திரட்டப்பட்டு, நிச்சயமாக எம்மிடம் கொண்டு வரப்படுவர். ரு2
- இறந்த பூமி(யும்) அவர்களுக்கு ஓர் அடையாளம் ஆகும். நாம் அதற்கு உயிர் கொடுத்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்தினோம். எனவே அவர்கள் அதிலிருந்து உண்கின்றனர்.
- நாம் அதில் பேரீச்சை மரங்களையும், திராட்சைகளையும் கொண்ட தோட்டங்களை அமைத்து, அதில் நீரூற்றுக்களை பீரிடச் செய்தோம்.
- அவர்கள் அதன் பழங்களிலிருந்து உண்பதற்காக (நாம் அவ்வாறு செய்தோம்). அ(த் தோட்டத்)தை அவர்களின் கைகள் (வளரச்) செய்யவில்லை. அவ்வாறிருந்தும் அவர்கள் நன்றி செலுத்த மாட்டார்களா?
- பூமி முளைக்கச் செய்வதையும், அவர்களையும், இன்னும் அவர்கள் அறியாதவற்றையும் எல்லாம் இணைகளாகப் படைத்தவன் தூயவன் ஆவான்.
- இரவு(ம்) அவர்களுக்கு ஓர் அடையாளமாகும். இதிலிருந்து நாம், பகலை இழுத்துக் கொள்கிறோம். அதற்குப் பின்னர் அவர்கள் இருளில் மூழ்கி விடுகின்றனர்.
- சூரியன், அதற்கெனக் குறித்த வரையறைக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இது, வல்லோனும், ஞானமிக்கோனுமாகிய (இறை)வன் ஏற்படுத்திய திட்டமாகும்.
- மேலும் சந்திரனை, ஒரு முதிர்ந்த கிளை6 போலாகித் திரும்பி வருமளவுக்குப் பல நிலைகளை அதற்கு ஏற்படுத்தியுள்ளோம்.
- சூரியனால், சந்திரனை அணுக முடியாது. அவ்வாறே இரவால் பகலை முந்தவும் முடியாது. அவை எல்லாம் ஒரு சுற்றுப்பாதையில் தடையின்றி மிதக்கின்றன7.
- (சுமை) நிரப்பப்பட்ட கப்பலில் நாம் அவர்களின் வழித்தோன்றலை எடுத்துச் செல்வதும் அவர்களுக்கு ஓர் அடையாளமாகும்.
- அவர்கள் பயணம் செய்ய அவர்களுக்கு அது போன்றவற்றை (இன்னும்) நாம் உருவாக்குவோம் 8.
- நாம் விரும்பியிருந்தால், அவர்களை மூழ்கடித்துக் கொன்றிருப்போம். அப்போது (அவர்களது) முறையீட்டைக் கேட்பவர் எவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்; அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.
- எம்மிடமிருந்துள்ள கருணையினாலன்றி, (அவர்கள் காப்பாற்றப்பட்டிருக்க மாட்டார்கள்). மேலும் அது சிறிது காலப் பயனே ஆகும்.
- உங்களுக்குக் கருணை காட்டப்படும் பொருட்டு, எதிரில் உள்ளவற்றிலிருந்தும் (வேண்டுதல் மூலமும்), பின்னுள்ளவற்றிலிருந்தும் (கழிவிரக்கம் மூலமும்) உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் கூறப்படும் பொழுது (அவர்கள் விலகிச் செல்கின்றனர்).
- அவர்களது இறைவனிடமிருந்துள்ள அடையாளங்களில், எந்த அடையாளம் அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.
- அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம், அல்லாஹ் விரும்பியிருந்தால், அவன் எவர்களுக்கு உணவளித்திருப்பானோ அவர்களுக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் தெளிவான வழிகேட்டிலேயே இருக்கின்றீர்கள் என்று கூறுகின்றனர்.
- நீங்கள் உண்மையாளர்களாயின் (தண்டனையைப் பற்றிய) அந்த வாக்குறுதி எப்போது (நிறைவேற்றப்படும்) என்று அவர்கள் கூறுகின்றனர்.
- அவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில், அவர்களைப் பற்றிக் கொள்ளும் ஒரே (ஒரு) தண்டனையைத் தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- அப்பொழுது அவர்களால் மரண சாசனம் கூறவும் இயலாது; அவர்களால் தங்கள் குடும்பத்தினரிடம் திரும்பி வரவும் இயலாது. ரு3
- மேலும் எக்காளம் ஊதப்படும். உடனே அவர்கள் கல்லறைகளிலிருந்து (வெளியேறி) தங்கள் இறைவனிடம் விரைந்து செல்வார்கள்.
- எங்களுக்கு அழிவு தான்! எங்கள் கல்லறைகளிலிருந்து எங்களை எழுப்பியது யார்? என்று அவர்கள் (ஒருவர், மற்றவரிடம்) கூறுவார்கள். இது அளவற்ற அருளாளனின் வாக்குறுதியாகும். தூதர்கள் உண்மையே கூறினர் (என்றும் அவர்கள் கூறுவர்).
- இது ஒரு திடீர் தண்டனையே! இதன் காரணமாக உடனே அவர்கள் எல்லோரும் எம்மிடம் கொண்டு வரப் படுவார்கள்.
- அந்நாளில், எந்த ஆன்மாவுக்கும் சிறிதளவு கூட அநீதி இழைக்கப்படமாட்டாது; உங்கள் செயல்களுக்கேற்பவே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும்.
- நிச்சயமாக அந்நாளில் சுவர்க்கத்திற்குரியவர்கள், (இறை நினைவில்) மூழ்கி மகிழ்வார்கள்.
- அவர்களும், அவர்களின் இணைகளும் (இறைவனின் கருணை) நிழலில் மஞ்சங்களில் சாய்ந்து அமர்ந்திருப்பார்கள்.
- அதில் அவர்களுக்குப் பழங்கள் உண்டு; அவர்கள் கேட்பதெல்லாம் அவர்களுக்குக் கொடுக்கப்படும்.
- மேன்மேலும் கருணை காட்டும் இறைவனிடமிருந்து வாழ்த்தாக அவர்களுக்கு ஸலாம் கூறப்படும்.
- குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நம்பிக்கையாளர்களை விட்டு) விலகி விடுங்கள் (என்றும் நாம் கூறுவோம்).
- ஆதமின் மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்கக் கூடாது என்று நான் உங்களைக் கட்டுப்படுத்தவில்லையா? ஏனென்றால் நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான பகைவனாவான்;
- மேலும் நீங்கள் என்னையே வணங்க வேண்டும்; இதுவே நேரான வழி (என்று நான் கட்டுப்படுத்தவில்லையா?)
- (ஷைத்தானாகிய) அவன் உங்களுள் ஒரு பெரும் கூட்டத்தினரை வழி தவறச் செய்து (அழித்து) விட்டான். நீங்கள் புரிந்து கொள்ளவில்லையா?
- உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இது தான்.
- நீங்கள் நிராகரித்ததனால் இன்று இதில் நுழையுங்கள்.
- இன்று நாம் அவர்களின் வாய்களில் முத்திரையிட்டு விடுவோம். அவர்களின் கைகள் எம்மிடம் பேசும். அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவர்களின் கால்கள் சாட்சி கூறும்.
- நாம் விரும்பியிருந்தால் அவர்களின் கண்களைக் குருடாக்கியிருப்போம். பின்னர் அவர்கள் (பார்வையின்றி) ஒரு வழியைத் தேடிச் சென்றிருப்பார்கள். ஆனால் இந்நிலையில் அவர்கள் (உண்மையான வழியை) எவ்வாறு காண்பார்கள்?
- நாம் விரும்பியிருந்தால், அவர்களின் இடங்களிலேயே அவர்களின் நிலைகளை மாற்றியிருப்போம். பின்னர் அவர்களால் முன்னோக்கிச் செல்லவோ, திரும்பிச் செல்லவோ இயலாது. ரு4
- நாம் எவருக்கு நீண்ட ஆயுளை வழங்குகின்றோமோ அவரது உடல் வலிமையைக் குன்றச் செய்கின்றோம். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
- அவருக்கு (அதாவது முஹம்மது நபிக்கு) நாம் கவிதை இயற்றக் கற்றுக் கொடுக்கவில்லை. அது அவர் (உயர் தகுதி)க்கு ஏற்றதுமன்று. இது ஓர் அறிவுரையும், (சான்றுகளுடன்) விளக்கும் (மீண்டும், மீண்டும் ஓதக்கூடிய) குர்ஆனுமே ஆகும்.
- (இது) உயிருள்ளவருக்கு எச்சரிக்கை செய்வதற்காகவும், நிராகரிப்பவர்களைக் குறித்து அல்லாஹ்வின் வாக்கு நிறைவேற்றப்படுவதற்காகவும் (அவற்றை தெளிவாக விளக்குகின்றது).
- எமது கைகள் உருவாக்கியவற்றுள் நாம் அவர்களுக்காகப் படைத்த கால்நடைகளை அவர்கள் காண்பதில்லையா? அவர்கள் அதற்கு உரிமை(யும்) கொண்டாடுகின்றனர்.
- நாம் அவற்றை, அவர்களுக்குக் கட்டுப்படச் செய்துள்ளோம். எனவே அவர்கள், அவற்றுள் சிலவற்றில் பயணம் செய்கின்றனர். இன்னும் சிலவற்றை உண்கின்றனர்.
- அவற்றில் அவர்களுக்கு (பிற) பயன்களும், குடிக்கக் கூடியவையும் இருக்கின்றன. எனவே அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
- தாங்கள் உதவி செய்யப்படலாமென்று அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) கடவுளர்களை உருவாக்கிக் கொண்டனர்.
- அவர்களால், அவர்களுக்கு எந்த உதவியும் செய்ய இயலாது; மேலும் அவர்கள் (அவர்களின் இறைவன் முன்) படையாகக் கொண்டு வரப்படுவர்.
- எனவே, அவர்களின் பேச்சு உம்மைத் துயரத்திற்குள்ளாக்க வேண்டாம். அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நாம் அறிவோம்.
- நாம் மனிதனைக் (கேவலம்) ஒரு விந்துத் துளியிலிருந்து படைத்திருப்பதை அவன் பார்க்கவில்லையா? பின்னர் அவன் வெளிப்படையான சச்சரவு செய்பவனாகி விடுகின்றான்.
- அவன் நமக்கு உவமைகளை எடுத்துக் கூறுகிறான்: மேலும் தனது பிறப்பை மறந்து விடுகின்றான். எலும்புகள் உக்கி, அழிந்து விடும் போது அவற்றிற்கு உயிர் கொடுப்பவன் எவன்? என்று அவன் கூறுகின்றான்.
- நீர் கூறுவீராக: அவற்றை முதல் தடவை படைத்தவனே அவற்றிற்கு உயிர் கொடுப்பான். படைக்கப்பட்ட ஒவ்வொன்றி(ன் நிலையி) னைப் பற்றியும் அவன் நன்கு அறிவான்.
- (அவன்) உங்களுக்காகப் பசுமையான மரத்திலிருந்து நெருப்பை உற்பத்தி செய்தான்; எனவே நீங்கள் அதிலிருந்து (நெருப்பை) மூட்டிக் கொள்கின்றீர்கள்.
- வானங்களையும், பூமியையும் படைத்த அவன், அவர்களைப் போன்ற படைப்பைப் படைப்பதற்கு ஆற்றல் பெற்றவனில்லையா? ஆம்; அவன் ஒப்புயர்வற்ற படைப்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- நிச்சயமாக அவன் ஒன்றை நாடினால், ' ஆகுக' என்று கட்டளையிட்டதும், அது ஆ(கத் தொடங்)கி விடுகிறது.
- எவனது கையில் எல்லாவற்றின் ஆட்சியும் உள்ளதோ அவன் தூயவன். அவனிடமே நீங்கள் எல்லோரும் திரும்பிக் கொண்டு செல்லப்படுவீர்கள். ரு5