அதிகாரம்: அஸ்ஸஜ்தா
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 31
பிரிவுகள்: 3
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- அலிஃப் லாம் மீம் - நான் அல்லாஹ், எல்லாம் அறிந்தவன்.
- எல்லா உலகங்களின் இறைவனிடமிருந்து (இவ்) வேதம் இறங்கியுள்ளது. இதில் ஐயமில்லை.
- அவர் (அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்)) இதனை இட்டுக்கட்டியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று, மாறாக இது உமக்கு முன்னர் எச்சரிப்பவர் எவரும் தங்களிடம் வராத சமுதாயத்தினர் நேர் வழி பெறும் பொருட்டு, நீர் அவர்களுக்கு எச்சரிப்பதற்காக, உமது இறைவனிடமிருந்து (வந்துள்ள உண்மையாகும்).
- அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு கால கட்டங்களில் படைத்தான்1. பின்னர் அவன் அரியணையில் உறுதியாக நிலை கொண்டான். அவனையன்றி உங்களுக்கு உண்மையான எந்த நண்பரும் இல்லை. மேலும் பரிந்து பேசுபவர் எவரும் இல்லை. (எனவே) நீங்கள் அறிவுரை பெறுவதில்லையா?
- அவன் விண்ணிலிருந்து பூமி வரையிலும் தன் கட்டளையைத் தன் திட்டத்திற்கேற்ப நிலை நாட்டுவான். பின்னர் (ஒரு சுற்றை முடித்த பின்னர்) அது ஒரு நாளில் அவனை நோக்கி மேலே சென்று விடுகிறது. அந்த நாளின் அளவு, உங்கள் கணிப்பிற்கேற்ப ஓராயிரம் ஆண்டுகளாகும்2.
- அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனும், வல்லமையுள்ளவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- அவன், தான் படைத்தவற்றையெல்லாம் மேலான ஆற்றலுடன் ஆக்கினான். அவன் மனிதனது படைப்பை களிமண்ணிலிருந்து தொடங்கினான்.
- பின்னர் அவன், அவனது (மனிதனது) சந்ததியை ஓர் அற்ப திரவத்தின் சத்திலிருந்து (விந்திலிருந்து) உண்டுபண்ணியுள்ளான்.
- பின்னர் அவன், அவனுக்கு முழுமையான வலிமையை அளித்து, அவனுக்குத் தன்னிடமிருந்து தன் ஆவியை ஊதினான்3. அவன் உங்களுக்கு கேள்விப் புலனையும், பார்வையையும், உள்ளத்து உணர்வையும் வழங்கியுள்ளான். ஆனால் நீங்கள் அறவே நன்றி செலுத்துவதில்லை.
- நாங்கள் பூமியில் மறைந்து விடும் பொழுது, மெய்யாகவே நாங்கள் புதியதொரு படைப்பாகி விடுவோமா என்று அவர்கள் கூறுகின்றனர். அவ்வாறன்று. மாறாக, அவர்கள் தம் இறைவனைச் சந்திப்பதை மறுக்கின்றனர்4.
- உங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மரணத்திற்குரிய வானவர் உங்களை மரணமடையச் செய்வார்; பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள் என்று நீர் கூறுவீராக. ரு1
- குற்றமிழைத்தவர்களை தம் இறைவன் முன்னிலையில், தம் தலைகளைத் தொங்க விட்டவர்களாய் நீர் கண்டால், (அவர்கள் கூறுவர்:) எங்கள் இறைவா! நாங்கள் கண்டு கொண்டோம். மேலும் கேட்டுக் கொண்டோம்; எனவே நீ எங்களை (உலகிற்கு) திருப்பி அனுப்புவாயாக; நாங்கள் நற்செயல் செய்வோம். (ஏனெனில்) இப்பொழுது நாங்கள் (உண்மையை) உணர்ந்து கொண்டோம்.
- நாம் (கட்டாயமாக) நாடியிருந்தால், ஒவ்வொருவருக்கும், அவரவருக்குரிய நேர்வழியினை வழங்கியிருப்போம். ஆனால் (அநீதியிழைக்கும்) ஜின்கள், மனிதர்கள் ஆகியோரையெல்லாம் கொண்டு, நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன் என்ற என் வாக்கு உண்மையாயிற்று.
- எனவே நீங்கள் உங்களுடைய இந்த நாளைச் சந்திக்கவிருந்ததை மறந்ததனால் (உங்கள் செயல்களுக்குரிய தண்டனையைச்) சுவைத்துப் பாருங்கள். நாமும் உங்களை மறந்து விட்டோம். உங்கள் செயல்களின் காரணமாக நீடித்து நிற்கக் கூடிய தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள்.
- எம் அடையாளங்கள் நினைவூட்டப்படும் பொழுது, சிரம் தாழ்த்தி வணங்குபவர்களாகத் தரையில் விழுந்து, தங்கள் இறைவனைப் புகழ்ந்து (அவனது) தூய்மையினை எடுத்துரைப்பவர்களே அவற்றை நம்புகின்றனர். மேலும் அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள்.
- (நம்பிக்கை கொண்டவர்களாகிய) அவர்களின் விலாப்புறங்கள், அவர்களின் படுக்கைகளிலிருந்து ('தஹஜ்ஜுத்' தொழுகையினை நிறைவேற்றுவதற்காக) விலகி விடுகின்றன. அவர்கள் தங்கள் இறைவனை (அவனது தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக) அச்சத்துடனும், (அவனது அருளைப் பெற வேண்டுமென்ற) பேரார்வத்துடனும் அழைக்கின்றனர். மேலும் நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (இறை வழியில்) அவர்கள் செலவு செய்கின்றனர்.
- அவர்களின் (நற்) செயல்களுக்குப் பிரதிபலனாக கண்களுக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியவை, என்ன (என்ன) மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பது எவருக்கும் தெரியாது.
- நம்பிக்கையாளர் கட்டுப்படாதவனைப் போன்றவராவாரா? அவர்கள் சமமானவர்கள் அல்ல.
- நம்பிக்கை கொண்டு, அதற்கேற்ப நற்செயல்களைச் செய்தவர்களுக்கு, நிலையாகத் தங்குவதற்கேற்ற தோட்டங்கள் உண்டு. இது அவர்களின் செயல்களுக்கேற்ற விருந்தோம்பலாக அமைந்திருக்கும்.
- கட்டுப்படாதவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்பும் போதெல்லாம், அதனுள்ளேயே அவர்கள் திருப்பப்படுவர். மேலும் நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரகத் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் என்று அவர்களிடம் கூறப்படும்.
- அவர்கள் (கழிவிரக்கங் கொண்டு எம்மிடம்) திரும்ப வேண்டுமென்பதற்காக பெருந் தண்டனைக்கு முன்னர் சிறிய தண்டனையையும் நிச்சயமாக நாம் அவர்களைச் சுவைக்கச் செய்வோம்.
- தனது இறைவனின் அடையாளங்கள் நினைவூட்டப்பட்ட பின்னரும், அவற்றைப் புறக்கணித்து விடுபவனை விட மிக்க அநீதியிழைப்பவன் எவன்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளைப் பழி வாங்குவோம். ரு2
- நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். எனவே நீர் (முழுமையான வேதமாகிய) இது (உமக்குக்) கிடைப்பது குறித்து ஐயம் கொள்ள வேண்டாம். நாம் அ(வ் வேதத்) தை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாக ஆக்கினோம்.
- மேலும் அவர்களுள் (மக்களுக்கு) நம் கட்டளையினால்5 வழிகாட்டும் தலைவர்களை நாம் ஏற்படுத்தினோம். ஏனெனில் அவர்கள் பொறுமையுடையோரும்6, நம் அடையாளங்களில் நம்பிக்கை கொண்டோருமாயிருந்தனர்.
- நிச்சயமாக உமது இறைவனாகிய அவன், அவர்கள் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகளைக் குறித்து மறுமை நாளில் அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவான்.
- இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்திருப்பது, இவர்களுக்கு வழிகாட்டவில்லையா? (இப்பொழுது) இவர்கள், அவர்கள் வசித்திருந்த இடங்களில் நடந்து திரிகின்றனர். நிச்சயமாக இதில் பல அடையாளங்கள் உள்ளன. எனவே இவர்கள் செவி சாய்ப்பதில்லையா?
- நாம் தண்ணீரை வறண்ட பூமியின் பால் ஓட்டிச் சென்று, அதன் மூலம் அவர்களின் கால்நடைகளும், அவர்களும், உண்ணும் விளைச்சல்களை வெளிப்படுத்துவதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் ஏன் கவனம் செலுத்துவதில்லை.
- நீங்கள் உண்மையாளர்களாயின் இந்த வெற்றி7 எப்போது (வரும்) என்று அவர்கள் கேட்கின்றனர்.
- அந்த வெற்றிக்குரிய நாளில்8, நிராகரிப்போருக்கு அவர்களின் நம்பிக்கை எப்பயனுமளிக்காது. மேலும் அவர்களுக்குக் காலக்கெடுவும் கொடுக்கப்படமாட்டாது.
- எனவே நீர், அவர்களைப் புறக்கணித்து (அவர்களின் முடிவை) எதிர்பார்த்துக் கொண்டிருப்பீராக. அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரு3