30- அர் ரோம்

அதிகாரம்: அர் ரோம்
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 61

பிரிவுகள்: 6



  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. அலிஃப் லாம் மீம் (நான் அல்லாஹ்; எல்லாம் அறிந்தவன்)1. 
  3. ரோமானியர்கள் வெற்றி கொள்ளப்பட்டனர். 
  4. அருகில் உள்ள நாட்டில், மேலும் அவர்கள் தங்கள் தோல்விக்குப் பின் வெற்றி பெறுவர்2. 
  5. சில வருடங்களிலே, (இதற்கு) முன்னும், பின்னும் ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியதாகும். மேலும் அந்நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்வார்கள். 
  6. அல்லாஹ்வின் உதவியினால், அவன் விரும்புவோருக்கு உதவுகிறான். மேலும் அவன் ஆற்றல் மிக்கோனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  7. அல்லாஹ்வின் வாக்குறுதி (யினை நன்கு நினைவில் கொள்ளுங்கள்). அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாற்றம் செய்வதில்லை. எனினும் பெரும்பாலான மக்கள் இதனை அறிவதில்லை. 
  8. அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் வெளித் தோற்றத்தை (மட்டும்) அறிகின்றனர். ஆனால் அவர்கள் மறுமையினைப் பற்றி முற்றிலும் கவனமற்றவர்களாக இருக்கின்றனர். 
  9. இறைவன், வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கிடையிலுள்ளவற்றையும் குறிப்பிட்ட நோக்கத்துடன், குறிப்பிட்ட ஒரு காலத்திற்காக படைத்துள்ளான் என்பதனை அவர்கள் தங்கள் உள்ளத்தால் சிந்தித்துப் பார்ப்பதில்லையா? ஆனால் மக்களுள் பெலும்பாலார் தங்கள் இறைவனைச் சந்திக்கவிருப்பதனை நிராகரிப்பவர்களாக இருக்கின்றனர். 
  10. அவர்கள் பூமியில் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு (தீயதாக) ஆகி விட்டது என்பதனை அவர்கள் பார்ப்பதில்லையா? அவர்கள், இவர்களை விட வலிமை மிக்கவர்களாக விளங்கினர். மேலும் அவர்கள் நிலத்தை நன்கு பண்படுத்தினர். அதில் இவர்கள் செய்த குடியேற்றத்தை விட அதிகமாக குடியேற்றம் செய்தனர். அவர்களின் தூதர்கள், அவர்களிடம் தெளிவான அடையாளங்களைக் கொண்டு வந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக, அவர்கள் தாங்களே, தங்களுக்கு அநீதியிழைப்பவர்களாக இருந்தனர்.
  11. பிறகு தீமை செய்தவர்களுக்கு, அவர்கள் அல்லாஹ்வின் அடையாளங்களை மறுத்ததினாலும், அவற்றை ஏளனம் செய்து கொண்டிருந்ததினாலும் தீய முடிவே ஏற்பட்டது. ரு1 
  12. அல்லாஹ் படைப்பினைத் துவக்குகின்றான்; பின்னர் அதனைத் திரும்பவும் செய்கிறான். பிறகு அவனிடமே நீங்கள் திரும்பவும் கொண்டு செல்லப்படுவீர்கள். 
  13. (இறுதி) காலம் வந்து சேரும் நாளில் குற்றவாளிகள் நிராசையடைந்து விடுவர். 
  14. அவர்கள் (அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திய) இணைகளுள் எவரும் அவர்களுக்குப் பரிந்துரை செய்பவராக மாட்டார். மேலும் அவர்கள் (இறைவனுக்கு வைத்த) தங்கள் இணைகளை மறுத்து விடுவார்கள். 
  15. (இறுதி) காலம் வந்து சேரும் அந்நாளிலே அவர்கள் (தனித்தனியாகப்) பிரிந்து விடுவார்கள். 
  16. பின்னர் நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்கள் மேலான தோட்டத்தில் மதிக்கப்பட்டு, மகிழ்விக்கப்படுவர். 
  17. ஆனால் எவர்கள் நிராகரித்து, நமது வசனங்களையும், மறுமைச் சந்திப்பையும் மறுப்பார்களோ, அவர்கள் தண்டனையின் முன் கொண்டு வந்து நிறுத்தப்படுவர். 
  18. எனவே நீங்கள் மாலை நேரத்துள் நுழையும் போது அல்லாஹ்வின் தூய்மையினை எடுத்துரையுங்கள். 
  19. வானங்களிலும், பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. பிற்பகலிலும், நீங்கள் நடுப்பகலில் நுழையும் போதும் .(அவனது தூய்மையினைக் கூறுங்கள்). 
  20. அவன் உயிரற்றதிலிருந்து, உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றான். மேலும் உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகின்றான். அவன் பூமிக்கு அதன் மரணத்திற்குப் பின்னர் உயிரளிக்கின்றான். இவ்வாறே நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள். ரு2
  21. அவனுடைய அடையாளங்களில் ஒன்று, அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்ததன் பின்னர் நீங்கள் மனிதர்களாகி (பூமியின் மேற்பரப்பில்) பரவி விடுவதாகும். 
  22. மேலும் அவனுடைய அடையாளங்களில் ஒன்று, அவன் உங்களிலிருந்தே, உங்களுக்காக மனைவியர்களை, நீங்கள் அவர்களிடத்து மன அமைதி பெறுவதற்காகப் படைத்து, உங்களுக்கிடையே அன்பையும், கனிவையும் அவன் ஏற்படுத்தியதாகும். சிந்திக்கும் சமுதாயத்தினருக்கு , நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன. 
  23. மேலும் அவனுடைய அடையாளங்களில் ஒன்று, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பும், உங்கள் மொழிகள், உங்கள் நிறங்கள் ஆகியவற்றின் வேறுபாடும் ஆகும். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு அடையாளங்கள் உள்ளன. 
  24. மேலும் அவனுடைய அடையாளங்களில் ஒன்று, இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், நீங்கள் அவனது அருளைத் தேடுவதுமாகும். செவியேற்கும் சமுதாயத்தினருக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன. 
  25. மேலும் அவனுடைய அடையாளங்களில் ஒன்று, அச்சத்திற்காகவும், பேரார்வத்திற்காகவும் அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டி, மேகத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதனைக் கொண்டு இப்பூமிக்கு அதன் மரணத்திற்குப் பின்னர் உயிர் கொடுப்பதுமாகும். அறிந்து கொள்ளும் சமுதாயத்தினருக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன. 
  26. மேலும் அவனுடைய அடையாளங்களில் ஒன்று, வானமும், பூமியும் அவனது கட்டளையினால் (உறுதியுடன்) நிலை நிற்பதும், பின்னர் அவன் உங்களுக்கு பூமியிலிருந்து (வெளியேறும் படி) அழைப்பு விடுத்தவுடன், நீங்கள் பூமியிலிருந்து வெளிப்படுவதுமாகும். 
  27. மேலும் வானங்களிலும், பூமியிலுமுள்ளவர்கள் அவனுக்கே உரியவர்களாவர். எல்லோரும் அவனுக்கே கட்டுப்பட்டவராவார்கள். 
  28. மேலும் அவன், படைப்பைத் துவக்குகின்றான். பின்னர் அதனைத் திரும்பவும் செய்கின்றான். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும், பூமியிலும் மிக உயர்வான நிலை அவனுக்கே. அவன் வல்லவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். ரு3 
  29. அவன், உங்களுக்கு உங்களைக் குறித்து (அறிவுறுத்த) ஓர் எடுத்துக்காட்டை  விளக்குகின்றான். நாம் உங்களுக்கு வழங்கியுள்ளவற்றில் உங்கள் அடிமைகள், உங்களுக்குப் பங்காளி ஆகி, மேலும் அவர்கள் அதில் சரிசமமாக பங்குதாரர்களாகி, நீங்கள் ஒருவர் மற்றொருவருக்குப் பயப்படுவது போல் அவர்களுக்குப் பயப்படுவீர்களா?3. இவ்வாறு அறிந்து கொள்ளும் சமுதாயத்தினருக்கு நாம் அடையாளங்களைத் தெளிவாக விளக்குகின்றோம். 
  30. ஆனால் அநீதியிழைப்பவர்கள், அறிவின்றித் தங்கள் அற்பமான விருப்பங்களைப் பின்பற்றுகின்றனர். எனவே வழி தவறிச் செல்ல, அல்லாஹ் விட்டு விடுகிறவனுக்கு எவரால் வழிகாட்ட முடியும்? அவர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை.
  31. எனவே நீர் உமது முழுக் கவனத்தையும் நேர்மையான முறையில் மார்க்கத்தி(ன் தொண்டி)ற்காக ஆக்கிக் கொள்வீராக. அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள இயல்பைப் பின்பற்றுங்கள். அதற்கேற்பவே அவன் மனிதனைப் படைத்துள்ளான்4. அல்லாஹ்வின் படைப்பில் எந்த மாற்றமுமில்லை. இதுவே நிலைநிற்கக் கூடிய (உண்மை) மார்க்கமாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் அறிவதில்லை. 
  32. நீங்கள் யாவரும் அவனுக்குப் பணிந்த வண்ணம் (இயற்கை மார்க்கத்தைக் கடைப்பிடியுங்கள்). மேலும் நீங்கள் அவனுக்கு அஞ்சுங்கள். தொழுகையை நிறைவேற்றுங்கள். (இறைவனுக்கு) இணை வைப்பவர்களைச் சேர்ந்தவர்களாகி விடாதீர்கள். 
  33. (அதாவது) தங்கள் மார்க்கத்தைப் பிளவு படச் செய்து, பல்வேறு பிரிவினர்களாகப் பிரிந்து விட்டவர்களைச் சேர்ந்தவர்கள்5 ஒவ்வொரு பிரிவினரும் தங்களிடமுள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றனர்6. 
  34. மக்களுக்கு ஒரு பெருந்துன்பம் ஏற்படும் போது, அவர்கள் தங்கள் இறைவனுக்குப் பணிந்த வண்ணம் அவனை அழைக்கின்றனர். பின்னர் அவன் அவர்களுக்குத் தன் கருணையைச் சுவைக்கச் செய்யும் போது, அந்தோ! அவர்களுள் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கு இணை வைக்கத் தொடங்கி விடுகின்றனர். 
  35. இதன் விளைவாக நாம் அவர்களுக்கு வழங்கியதை அவர்கள் செயலளவில் மறுக்கின்றனர். எனவே (சிறிது காலம்) பயனடையுங்கள்; ஆனால் விரைவிலேயே நீங்கள் (உங்கள் முடிவைத்) தெரிந்து கொள்வீர்கள் (எனக் கூறப்படும்). 
  36. அவர்கள் இறைவனுக்கு இணை வைப்பதற்கு (ஆதரவாகக்) கூறக்கூடிய யாதொரு அத்தாட்சியையும் நாம் அவர்களுக்கு இறக்கியுள்ளோமா? 
  37. நம் கருணையை நாம் மக்களைச் சுவைக்கச் செய்யும் போது அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் அவர்கள் தாமாகவே சம்பாதித்துக் கொண்டதனால், அவர்களுக்கு ஏதேனும் தீமை ஏற்பட்டால், உடனே அவர்கள் நிராசையடைந்து விடுகின்றனர். 
  38. அல்லாஹ் தான் நாடுவோருக்கு வாழ்விற்கு வேண்டிய (உண)வை தாராளமாகக் கொடுக்கின்றான். மேலும் (தான் நாடுவோருக்கு) கட்டுப்படுத்தியும் கொடுக்கின்றான் என்பதனை அவர்கள் காணவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்தினருக்கு உண்மையாகவே இதில் பல அடையாளங்கள் உள்ளன. 
  39. எனவே நீர் உறவினருக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் அவர்களுக்கு உரியதைக் கொடுப்பீராக7. இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் விருப்பத்தைப் பெற நாடுவோருக்கு சிறந்ததாகும். மேலும் இவர்களே வெற்றி பெறுபவர்களாவார்கள். 
  40. மக்களின் செல்வங்கள் பெருக வேண்டுமென்று, நீங்கள் வட்டிக்குக் கொடுப்பது அல்லாஹ்வின் பார்வையில் பெருகுவதில்லை8. ஆனால் நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியினை நாடி, எதனை ஸக்காத்தாக கொடுத்தாலும்- இத்தகையவர்களே (தங்கள் செல்வங்களைப்) பன்மடங்காகப் பெருக்கிக் கொள்கின்றனர்.
  41. அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் அவனே உங்களுக்கு உணவளித்தான். பின்னர் அவன் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் அவன் உங்களை உயிர்பெறச் செய்வான். உங்களால் (இறைவனுக்கு) இணையாக்கப்பட்டவர்களுள் எவரேனும் இச்செயல்களில் எதையாவது செய்கின்றாரா? அவன் தூய்மையானவன். மேலும் அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்தும் இணைகளை விட்டும் அவன் மிக்க மேலானவன். ரு4 
  42. மக்களின் கைகள் செய்த செயல்களினால், நிலத்திலும், கடலிலும் குழப்பம் பரவியுள்ளது. இதனால் அவர்கள் (தங்கள் தீய செயல்களிலிருந்து) திரும்புவதற்காக, இறைவன் அவர்களை, அவர்களின் செயல்களுள் சிலவற்றை (அதாவது அதன் விளைவை இவ்வுலகில்) சுவைக்க வைப்பான். 
  43. நீர் கூறுவீராக: நீங்கள் பூமியில் பயணம் செய்து (உங்களுக்கு) முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு (தீயதாக) ஆயிற்று என்பதனைப் பாருங்கள். அவர்களுள் பெரும்பாலார் இறைவனுக்கு இணைவைப்போராய் இருந்தனர். 
  44. அல்லாஹ்விடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாத நாள் வருவதற்கு முன்னர், நீர் உமது முழுக்கவனத்தையும் நிலையான மார்க்கத்தி(ன் தொண்டி)ற்காக ஆக்கிக் கொள்வீராக. அந்நாளில் (நம்பிக்கை கொண்டவர்களும், நிராகரிப்பவர்களுமாகிய) அவர்கள் தனித்தனியாக பிரிந்து விடுவர்9. 
  45. நிராகரிப்போர் தம் நிராகரிப்பி(ன் விளைவி) னைச் சுமப்பர். நற்செயலாற்றுவோர், தமக்காகவே (நன்மையை) ஆயத்தம் செய்கின்றனர். 
  46. நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்வோருக்கு, இறைவன் தன் அருளிலிருந்து நற்பலன் வழங்குவதற்காகவே (அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்). நிச்சயமாக அவன் நிராகரிப்போரை நேசிப்பதில்லை. 
  47. மேலும் அவனுடைய அடையாளங்களில் ஒன்று, அவன் உங்களைத் தன் கருணையைச் சுவைக்கச் செய்யவும், கப்பல்கள் அவனது கட்டளையினால் செல்லவும், நீங்கள் அவனது அருளைத் தேடிக் கொள்ளவும், நீங்கள் நன்றியுள்ளவர்களாக விளங்கவும், அவன் காற்றுக்களை நற்செய்தி வழங்குபவையாக அனுப்புவதாகும். 
  48. நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அவர்களின் சமுதாயத்தினரிடம் அனுப்பினோம். அவர்கள், அவர்களிடம் தெளிவான அடையாளங்களைக் கொண்டு வந்தனர். பின்னர் நாம் குற்றவாளிகளுக்குப் (பொருத்தமான) தண்டனையை வழங்கினோம். நம்பிக்கை கொண்டவர்களுக்கு உதவுவது நிச்சயமாக எமது கடமையாகவே இருக்கிறது. 
  49. அல்லாஹ் தான், காற்றுக்களை (நீராவியாக) மேகங்களை உயர்த்துவதற்காக அனுப்புகிறான். பின்னர் அவன், தான் நாடியவாறு அதனை விண்ணில் பரவச் செய்து, அதனை அடுக்கடுக்காக அமைக்கின்றான். அதன் நடுவிலிருந்து மழை பொழிவதை நீர் காண்கின்றீர். அவன் அதனைத் தன் அடியார்களுள் , தான் நாடுபவர்கள் மீது இறக்கி வைத்ததும் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். 
  50. அதற்கு முன்னர்- அது அவர்கள் மீது இறக்கப்படுவதற்கு முன்னர்- அவர்கள் நிராசையடைந்தவர்களாக இருந்தனர்.
  51. எனவே பூமிக்கு, அதன் மரணத்திற்குப் பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர் கொடுக்கின்றான் என்று அவனது கருணையின் அடையாளங்களைக் காண்பீராக. நிச்சயமாக அவனே இறந்தவர்களை உயிர் பெறச் செய்பவன். மேலும் அவன் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனாவான். 
  52. நாம் ஒரு காற்றை அனுப்பி, அதனால் அவர்கள் அதனை (தங்கள் வயலை) மஞ்சள் நிறமாகக் கண்டால், அதன் பின்னர் (அறிவுரையினைப் பெறுவதற்குப் பதிலாக) நன்றிகெட்டவர்களாகி விடுவர். 
  53. மரணமடைந்தவர்களை உம்மால் செவியேற்க வைக்க முடியாது. செவிடர்கள் புறமுதுகு காட்டித் திரும்பி விடும் போது, அவர்களுக்கு (அந்த) அழைப்பைக் கேட்க வைக்கவும் உம்மால் முடியாது. 
  54. உம்மால் குருடர்களுக்கு, அவர்களின் வழிகேட்டிலிருந்து வழி காட்டவும் முடியாது. எம் வசனங்களிடத்து நம்பிக்கை கொள்பவர்களாகவும், கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் இருப்பவர்களை மட்டுமே உம்மால் செவியேற்குமாறு செய்ய முடியும். ரு5
  55. அல்லாஹ் தான் உங்களை ஒரு பலவீனமான நிலையிலிருந்து படைத்து, பலவீனத்திற்குப் பின்னர் வலிமையினை அளித்து, வலிமைக்குப் பின்னர் பலவீனத்தையும், முதுமையையும் ஏற்படுத்தினான். தான் நாடுவதை அவன் படைக்கின்றான். அவன் நன்கு அறிபவனும், முழுமையான ஆற்றல் பெற்றவனுமாவான். 
  56. குறிப்பிட்ட நேரம் வரும் நாளில், குற்றவாளிகள் தாங்கள் சிறிது நேரமே (உலகில்) தங்கியிருந்ததாகச் சத்தியஞ் செய்வார்கள்10. இவ்வாறே அவர்கள் (பொய்யாக) வீண் பேச்சு பேசுகின்றார்கள். 
  57. ஆனால் ஞானமும், நம்பிக்கையும் வழங்கப் பெற்றவர்கள் (இவ்வாறு) கூறுவார்கள்: நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வேதத்திற்கேற்ப உயிர் பெற்றெழும் நாள் வரைத் தங்கியிருந்தீர்கள்11. மேலும் இதுவே உயிர் பெற்றெழும் நாள்12. ஆனால் நீங்கள் அறிவதில்லை. 
  58. அநீதியிழைத்தவர்களின் சாக்குப் போக்குகள் அந்நாளில் எப்பலனும் அளிக்காது. மேலும் அவர்கள் நுழைவாயிலை அடையும் வழியிலும் அனுமதிக்கப் படமாட்டார்கள். 
  59. நிச்சயமாக நாம் மக்களுக்காக இந்தக் குர்ஆனில் ஒவ்வொரு எடுத்துக்காட்டையும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளோம். உண்மையிலேயே நீர் அவர்களிடம் எந்த அடையாளத்தைக் கொண்டு வந்தாலும், நீங்கள் பொய்யர்களே என்று நிராகரிப்போர் நிச்சயமாகக் கூறுவார்கள். 
  60. இவ்வாறே அல்லாஹ் அறிவற்றவர்களின் இதயங்களில் முத்திரையிடுகின்றான்13. 
  61. எனவே, பொறுமையைக் கடைப்பிடிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. (நம்பிக்கையில்) உறுதியற்றவர்கள் உம்மை ஏமாற்றி (உம் நிலையிலிருந்து) தளர்வடையச் செய்து விட வேண்டாம். ரு6
Powered by Blogger.