அதிகாரம் : அல்
அஹ்ஸாப்
அருளப்பெற்ற இடம் : மதீனா | வசனங்கள்: 74
பிரிவுகள்: 9
அருளப்பெற்ற இடம் : மதீனா | வசனங்கள்: 74
பிரிவுகள்: 9
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நபியே! நீர் அல்லாஹ்வின் பாதுகாப்பைத் தேடிக் கொள்வீராக. மேலும் நீர், நிராகரிப்பவர்கள், நயவஞ்சகர்கள் ஆகியவர்(களின் விருப்பங்)களைப் பின்பற்றாதிருப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
- உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவித்த வஹியைப் பின்பற்றுவீராக. நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவனாவான்.
- நீர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக. மேலும் பாதுகாவலனாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.
- அல்லாஹ் எந்த மனிதனின் நெஞ்சத்திலும் இரண்டு உள்ளங்களைப் படைத்ததில்லை. உங்கள் மனைவிகளுள், நீங்கள் (சில வேளைகளில்) தாய் என்றழைத்தவர்களை (உண்மையில்) உங்கள் தாய்களாக அவன் ஆக்கவில்லை. உங்கள் வளர்ப்பு மகன்களை (உண்மையில்) உங்கள் மகன்களாக அவன் ஆக்கவுமில்லை. இவை உங்கள் வாய்ப் பேச்சுக்களே. ஆனால் அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான். அவனே (உங்களை நேர்) வழியில் நடத்திச் செல்கிறான்.
- நீங்கள் அவர்களை, (வளர்ப்புப் பிள்ளைகளை) அவர்களின் தந்தைகளின் பெயர்களை (இணைத்துக்) கூறி அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடத்தில் மிகவும் நேர்மையானது. ஆனால் நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லையாயின், அவர்கள் உங்கள் மார்க்க சகோதரர்களும், உங்கள் நண்பர்களுமாவர். (ஏற்கனவே) நீங்கள் இழைத்த தவறுகளுக்கு உங்கள் பேரில் குற்றமில்லை. ஆனால் உங்கள் உள்ளங்கள் (உறுதியாக) நாடியதற்கு (தண்டனை உண்டு). அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களின் உயிர்களை விட நபி மிக நெருக்கமானவராவார்1. அவருடைய மனைவியர், அவர்களின் தாய்மார்களாவார்கள். மேலும் நம்பிக்கையாளர்கள் மற்றும் இடம் பெயர்ந்து வந்தவர்கள் ஆகியோரை விட, அல்லாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் இரத்த உறவினர்கள் , சிலர், சிலருக்கு மிகவும் நெருங்கியவர்கள் ஆவர். ஆனால் உங்கள் நண்பர்களுடன் நன்முறையில் நீங்கள் நடந்து கொள்வது நல்லது. இது(வும்) வேதத்தில் எழுதப்பட்டதாகும்.
- நாம் நபிமார்கள் எல்லோரிடத்தும், உம்மிடத்தும், நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமுடைய மகன் ஈஸா ஆகியோரிடத்தும் உடன்படிக்கை செய்த நேரத்தை (நினைத்துப் பாரும்). நாம் அவர்கள் எல்லோரிடமும் உறுதிவாய்ந்த உடன்படிக்கை ஒன்றை வாங்கினோம்2.
- (அவன்) உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மையினைக் குறித்துக் கேட்பதற்காக (அவ்வாறு உடன்படிக்கை செய்தான்). மேலும் நிராகரிப்பாளர்களுக்கு வேதனையளிக்கும் தண்டனையை அவன் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான். ரு1
- நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை எதிர்த்துப் படைகள் வந்த போது, அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை நினைத்துப் பாருங்கள். அப்போது நாம் அவர்களுக்கு எதிராகக் காற்றையும்3, நீங்கள் காணாத படைகளையும் அனுப்பினோம். மேலும் அல்லாஹ் உங்கள் செயல்களை நன்கு பார்க்கின்றான்.
- அவர்கள் உங்களிடம், உங்களுக்கு மேலிருந்தும் (அதாவது மலை வழியாகவும்), உங்களுக்குக் கீழேயிருந்தும் (தரை வழியாகவும்) வந்த நேரத்தையும், (உங்கள்)கண்கள் பதற்றமடைந்த நேரத்தையும், (உங்கள்) இதயங்கள் உங்கள் தொண்டைகளை அடைத்த நேரத்தையும், நீங்கள் அல்லாஹ்வைக் குறித்து சந்தேகமான எண்ணங்களைக் கொண்ட நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்).
- அந்த நேரத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் பெரும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டு, கடுமையான அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டனர்.
- மேலும் அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றத்தைத் தவிர வேறெதையும் எங்களிடம் வாக்குறுதியளிக்கவில்லை என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோயுடையோரும் கூறிய நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்).
- மேலும் அவர்களுள் ஒரு பிரிவினர், யஸ்ரிப்(மதீனா) மக்களே! (எதிரிகளை எதிர்த்து) உங்களால் நிற்க முடியாது; எனவே நீங்கள் (இஸ்லாத்தை விட்டுத்) திரும்பி விடுங்கள் எனக் கூறிய நேரத்தையும் (நினைத்துப் பாருங்கள்). மேலும் அவர்களுள் ஒரு பிரிவினர், எங்கள் வீடுகள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன எனக் கூறி, நபியிடம் அனுமதி கோரினார்கள். ஆனால் அவை (உண்மையில்) பாதுகாப்பற்ற நிலையில் இருக்கவில்லை. அவர்கள் தப்பியோடவே விரும்பினார்கள்.
- அ(ந்த நகரத்) தின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அவர்கள் மீது படை எடுக்கப்பட்டு, பின்னர் (முஸ்லிம்களுக்கு எதிராக) குழப்பம் செய்யக் கேட்டிருந்தால், அவர்கள் உடனே அவ்வாறே செய்திருப்பர். ஆனால் அவர்கள் அ(ந்த நகரத்)தில் (அதன் பின்னர்) சிறிது நேரமே தங்கியிருந்திருப்பர்4.
- நிச்சயமாக (நயவஞ்சகர்களாகிய) அவர்கள் ஒருபோதும் புறமுதுகு காட்டமாட்டார்கள் என்று ஏற்கனவே அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்திருந்தனர். அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கை குறித்துக் கட்டாயம் கேள்வி கேட்கப்படும்.
- நீர் கூறுவீராக: மரணத்தை விட்டோ, கொலை செய்யப்படுவதை விட்டோ நீங்கள் தப்பி ஓடினால், அவ்வாறு ஓடுவது உங்களுக்கு ஒருபோதும் பயனளிக்காது. (அப்படி ஓடிய) பின்னரும் நீங்கள் எப்பயனும் பெற மாட்டீர்கள்5.
- நீர் கூறுவீராக: அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்க விரும்பினால், அவனிடமிருந்து உங்களைக் காப்பாற்றுபவன் எவன்? அல்லது அவன் உங்களுக்குக் கருணை காட்ட விரும்பினால், (அதிலிருந்து உங்களைத் தடுப்பவன் எவன்?) அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்களுக்காக எந்த நண்பரையும், எந்த உதவியாளரையும் காண மாட்டார்கள்.
- உங்களுள் (மற்றவர்களைப் போரில் ஈடுபட விடாமல்)தடை செய்பவர்களையும், தங்கள் சகோதரர்களிடம் நீங்கள் எங்களிடம் வந்து விடுங்கள் எனக் கூறுபவர்களையும், நிச்சயமாக அல்லாஹ் அறிகின்றான். அவர்கள் அறவே போருக்குச் செல்வதுமில்லை.
- அவர்கள் உங்களிடம் மிக்க கருமித்தனம் காட்டுபவர் ஆவர். ஆனால் அச்சம் ஏற்படும் போது, நீர் அவர்களை, மரணத்தைக் கண்டு மயக்கமடைந்தவர் போன்று, அவர்களின் கண்கள் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் உம்மைப் பார்ப்பதாக காண்கிறீர். ஆனால் அந்த அச்சம் நீங்கி விடும் போது, அவர்கள் (உமது) நன்மைக்குக் கருமித்தனம் உடையோராய் உங்களைக் கூர்மையான நாவுகளால் தாக்குகின்றனர். இவர்கள் நம்பிக்கை கொள்ளவேயில்லை. எனவே அல்லாஹ் இவர்களின் செயல்களை வீணாக்கி விட்டான். அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
- இவர்கள் (நிராகரிப்போரின்) படைகள் (இன்னும்) சென்று விடவில்லை என நம்புகின்றனர். ஆனால் (நிராகரிப்போரின்) படையினர் (மீண்டும்) வந்திருந்தால் அவர்கள் நாட்டில் நாட்டுப்புற மக்களுடன் வாழவே விரும்புவர். (மேலும் நம்பிக்கையாளர்களே) உங்கள் செய்திகளைக் குறித்து மக்களிடம் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். மேலும் அவர்கள் உங்களுடன் இருந்திருந்தாலும் போர் செய்திருக்கவே மாட்டார்கள். ரு2
- அல்லாஹ்வையும், மறுமை நாளையும் (சந்திக்கப் போவதை) எதிர் பார்த்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்கின்ற உங்களுக்கு, அல்லாஹ்வின் திருத்தூதரிடத்து மிகமேலான முன்மாதிரி உண்டு.
- நம்பிக்கை கொண்டவர்கள், தாக்குதல் தொடுத்த படைகளைக் கண்டபோது, அல்லாஹ்வும், அவனது தூதரும் நம்மிடம் வாக்குறுதியளித்தது இதுவேயாகும்6. அல்லாஹ்வும், அவனது தூதரும் முற்றிலும் உண்மையையே கூறினர் என்று கூறினார்கள். இது அவர்களுக்கு நம்பிக்கையையும், கட்டுப்பாட்டையும் வளரச் செய்தது.
- நம்பிக்கை கொண்டவர்களுள் தாங்கள் அல்லாஹ்விடம் செய்திருந்த வாக்குறுதியினை உண்மைப்படுத்திய மனிதர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் (தாங்கள் போர் செய்து மரணமடைய வேண்டும் என்ற) தங்கள் எண்ணத்தை நிறைவேற்றியுள்ளனர். அவர்களுள் மற்றுஞ் சிலர் (இன்னும் அதனை) எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் (தங்கள் எண்ணத்தில்) சிறிதும் மாற்றம் ஏற்படுத்தவில்லை.
- இதன் பயனாக அல்லாஹ் உண்மையாளர்களுக்கு, அவர்களின் உண்மைக்கு நற்பலன் வழங்குவான். மேலும் அவன் நாடினால் நயவஞ்சகர்களுக்குத் தண்டனை வழங்குவான்; அல்லது அவர்களை மன்னிப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- அல்லாஹ் நிராகரிப்பவர்களை, அவர்களது கோபத்துடன் திருப்பி விட்டான். அவர்கள் எந்த நன்மையையும் பெறவில்லை. அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களுக்கு போரில் போதுமானவனாக இருந்தான். அல்லாஹ் ஆற்றல் மிக்க வல்லவனுமாவான்.
- வேதத்தையுடையவர்களுள் அ(ந்தப் போரைத் தொடுத்த)வர்களுக்கு உதவி செய்தவர்களை அவர்களின் கோட்டைகளிலிருந்து (அல்லாஹ்) இறக்கி விட்டான். மேலும் அவர்களின் உள்ளங்களில் திகிலை ஏற்படுத்தினான். நீங்கள் சிலரைக் கொன்று விட்டீர்கள். மற்றுஞ் சிலரைச் சிறைப்பிடித்தீர்கள்.
- அவர்களின் பூமிக்கும், அவர்களின் வீடுகளுக்கும், அவர்களின் செல்வங்களுக்கும், நீங்கள் இதுவரை காலடி எடுத்து வைக்காத பூமிக்கும் அவன் உங்களை வாரிசு ஆக்கினான்7. அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான். ரு3
- நபியே! நீர் உமது மனைவியரிடம் கூறுவீராக: நீங்கள் உலகையும், அதன் அலங்காரத்தையும் விரும்பினால், வாருங்கள், நான் உங்களுக்கு உலகப் பொருட்களுள் சிலவற்றை வழங்கி, அழகான முறையில் உங்களை விடுவித்து விடுகின்றேன்.
- நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வீட்டையும் விரும்பினால், நிச்சயமாக அல்லாஹ் உங்களுள் நன்மை செய்பவர்களுக்கு மாபெரும் கூலியினை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.
- நபியின் மனைவியரே! உங்களுள் எவராவது, மேலான நம்பிக்கைக்கு மாற்றமான ஒன்றைச் செய்தால்8, அவருக்கு இரு மடங்குத் தண்டனை வழங்கப்படும். இது அல்லாஹ்வுக்கு எளிதே.
- உங்களுள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பணிந்து, நற்செயலைச் செய்பவளுக்கு அவளின் கூலியினை நாம் இருமடங்காக வழங்குவோம். மேலும் வாழ்விற்குரிய கண்ணியமான பொருட்களையும் நாம் அவளுக்காக ஆயத்தப்படுத்தி வைத்துள்ளோம்.
- நபியின் மனைவிகளே! நீங்கள் இறையச்சமுடையவர்களாயின், மற்றப் பெண்களிலிருந்து தனித்தன்மை வாய்ந்தவர்களாவீர்கள். எனவே உள்ளத்தில் நோய் உடையவன் (உங்களைக் குறித்து ஏதேனும்) தீய எண்ணங் கொள்ளாதிருக்க, நீங்கள் மிக மிருதுவாகப் பேசாதீர்கள். மேலும் நீங்கள் நல்ல வார்த்தைகளைக் கூறுங்கள்.
- நீங்கள் உங்கள் வீடுகளில் இருங்கள்; பண்டைய அறியாமைக் கால முறையைப் போன்று நீங்கள் அலங்காரம் செய்யாதீர்கள்; மேலும் தொழுகையினை நிறைவேற்றுங்கள்; ஸக்காத்தைக் கொடுங்கள்; அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். (நபியின்) வீட்டினரே! அல்லாஹ் உங்களிடமிருந்து தூய்மையின்மையை அகற்றி, உங்களை முழுமையாகத் தூய்மைப்படுத்தவே விரும்புகின்றான்.
- உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினைவில் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக நுட்பமானவனும், எல்லாம் அறிபவனுமாவான். ரு4
- இறைவனுக்கு முற்றிலும் அடிபணியும் ஆண்களும், பெண்களும், நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும், கீழ்ப்படிந்து நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண்களும், பெண்களும், முழுமையான பொறுமையுடைய ஆண்களும், பெண்களும், பணிவுள்ள ஆண்களும், பெண்களும், தருமம் கொடுக்கும் ஆண்களும், பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும், தம் கற்பைக் காக்கும் ஆண்களும், பெண்களும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறும் ஆண்களும், பெண்களும், ஆகிய இவர்கள் எல்லோருக்கும் மன்னிப்பையும், மாபெரும் நற்பலனையும் அல்லாஹ் ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.
- அல்லாஹ்வும், அவனது தூதரும் (ஏதாவது) ஒன்றுக்குத் தீர்ப்பு வழங்கி விட்டால், (அதன் பின்னர்) நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும், நம்பிக்கை கொண்ட எந்த பெண்ணுக்கும், தங்கள் பிரச்சினைக்குத் தங்கள் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பளிப்பதற்கு உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படாதவர், நிச்சயமாக மிகத் தெளிவான வழிகேட்டில் சென்று விடுகின்றார்.
- (நபியே!) எவருக்கு அல்லாஹ்வும், நீரும் அருள் செய்துள்ளீர்களோ, அவரிடம், " நீர் உமது மனைவியை (மணவிலக்கு அளிக்காமல்) உம்மிடமே வைத்துக் கொள்வீராக. அல்லாஹ்வுக்கு அஞ்சுவீராக" என்று நீர் கூறிய நேரத்தில் (நிகழ்ந்ததை நினைத்துப் பார்ப்பீராக). அல்லாஹ் வெளிப்படுத்தவிருந்ததை நீர் உமது உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தீர்9. மேலும் நீர் மக்களுக்கு அஞ்சினீர். ஆனால் நீர் அஞ்சுவதற்கு மிகவும் உரிமையுள்ளவன் அல்லாஹ்வே ஆவான். நம்பிக்கை கொண்டவர்களின் வளர்ப்பு மகன்கள், தங்கள் மனைவியருக்கு மணவிலக்கு அளித்து விட்டால், அப் பெண்களை (மணந்து கொள்வதை)க் குறித்து (நம்பிக்கை கொண்ட) அவர்களுக்கு எந்தத் தடையுமிருக்கக் கூடாதென்பதற்காக, ஸைது அவள் குறித்துத் தன் விருப்பத்தை நிறைவேற்றிய பின்னர் (அதாவது அவளுக்கு மணவிலக்கு அளித்த பின்னர்) நாம் அவளை, உமக்குத் திருமணம் செய்து வைத்தோமர10. எவ்வாறிருந்த போதிலும், அல்லாஹ்வின் தீர்ப்பு நிறைவேறியே தீரும்.
- அல்லாஹ், நபிக்குக் கடமையாக்கியுள்ள (எந்தக் கட்டளையையும் நிறைவேற்றுவ)தில் அவர் மீது குற்றமில்லை. முன் சென்றவர்களிடமும் அல்லாஹ்வின் நடைமுறை இதுவேயாகும். அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். (எவராலும் அதனை மாற்ற முடியாது).
- (கடந்த காலத் தூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை எடுத்துரைத்தனர்; அவனுக்கே அஞ்சினர்; அவர்கள் அல்லாஹ்வையன்றி வேறெவருக்கும் அஞ்சியதில்லை. மேலும் கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவனாவான்.
- முஹம்மது உங்களுள் எந்த ஆணுக்கும் தந்தை இல்லை. ஆனால் (அவர்) அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் கா(த்)தம் ஆகவும் விளங்குகின்றார்11. மேலும் அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாவான். ரு5
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வை மிக அதிகமாக நினைவு கூருங்கள்.
- மேலும் நீங்கள் காலையிலும், மாலையிலும் அவனது தூய்மையினை எடுத்துரைத்துக் கொண்டிருங்கள்.
- அவனே உங்களை பல்வேறு இருள்களிலிருந்து ஒளியின்பால் கொண்டு வருவதற்காக உங்களுக்கு அருள் செய்கின்றான். அவனது வானவர்கள் உங்களுக்காக வேண்டுதல் செய்கின்றனர்12. மேலும் அவன் நம்பிக்கை கொண்டவர்களிடம் மேன்மேலும் கருணை காட்டுபவனாவான்.
- அவர்கள் அவனைச் சந்திக்கும் நாளில், அவர்களுக்குரிய வாழ்த்துரை (ஸலாம்) சாந்தி என்பதாகும்13. அவன் அவர்களுக்காக மிக்க கண்ணியமான நற்பலனை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான்.
- நபியே! நிச்சயமாக நாம் உம்மை (உலகிற்குச்) சாட்சியாகவும், (நம்பிக்கை கொண்டவர்களுக்கு) நற்செய்தி நல்குபவராகவும், (நிராகரிப்பவர்களுக்கு) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியுள்ளோம்.
- மேலும் அல்லாஹ்வின்பால் அவன் கட்டளையின் படி அழைப்பவராகவும், ஒளி வீசும் சூரியனாகவும்14 (அனுப்பியுள்ளோம்).
- நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து மாபெரும் அருள் கிடைக்கும் என்று அவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
- நிராகரிப்பவர்கள், நயவஞ்சகர்கள் ஆகியவர்க(ளின் கூற்றுக்க)ளை நீர் ஒருபோதும் பின்பற்ற வேண்டாம்; அவர்களின் துன்புறுத்தலை பொருட்படுத்த வேண்டாம்; நீர் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைப்பீராக. பாதுகாவலனாக இருப்பதற்கு அல்லாஹ் போதுமானவன்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து கொண்டதன் பின்னர், அவர்களைத் தொடுவதற்கு முன்னர், நீங்கள் அவர்களுக்கு மணவிலக்கு அளித்து விட்டால் (அவர்கள் மறுமணம் புரிந்து கொள்வதற்கு முன்னர்) நீங்கள் கணிக்கும் 'இத்தா'14 வைக்கோர உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. எனவே நீங்கள் அவர்களுக்குத் தேவையான சில பொருட்களை அளித்து, நல்லமுறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்.
- நபியே! நீர் மஹர் கொடுத்த மனைவிகளையும்15, போரின் விளைவாக அல்லாஹ் உமக்கு அளித்துள்ளவர்களில், உமது வலக்கை சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்16 நாம் உமக்கு ஆகுமாக்கி வைத்துள்ளோம். மேலும் உமது தந்தையின் சகோதரரின் பெண் மக்கள், உமது தந்தையின் சகோதரிகளின் பெண் மக்கள், உமது தாய்மாமனின் பெண் மக்கள், உமது தாயின் சகோதரிகளின் பெண் மக்கள் ஆகிய இவர்களில் எவர்கள் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களையும்17 (நாம் உமக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கியுள்ளோம்). மேலும் தம்மை நபியிடம் ஒப்படைத்த நம்பிக்கை கொண்ட பெண்ணை, அந்த நபியும் விரும்பினால் அவளையும்(உமக்கு அனுமதித்துள்ளோம்). இந்தக் கட்டளை உமக்கு மட்டுமேயாகும்18. ஏனைய நம்பிக்கை கொண்டவர்களுக்கு அல்ல. உமக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாதென்பதற்காக நாம் (முஸ்லிம்களாகிய) அவர்களுக்கு, அவர்களது மனைவிகள் குறித்தும், அவர்களது வலக்கைகள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் குறித்தும் கடமையாக்கியிருப்பதை நாம் ஏற்கனவே நன்கறிவோம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- (உமது மனைவிகளாகிய) அவர்களுள் நீர் நாடியவரை அகற்றி விடுவீராக19. நீர் நாடியவரை உம்முடன் வைத்துக் கொள்வீராக. நீர் அகற்றியவர்களுள் எவரையாவது உம்முடன் வைத்துக் கொள்ள விரும்பினால், அது உம்மீது குற்றமாகாது. இது அவர்களின் கண்களுக்கு இதம் அளிப்பதற்கும், அவர்கள் வருந்தாமலிருப்பதற்கும், நீர் அவர்களுக்கு வழங்கியதைக் கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தியடைவதற்கும் மிக நெருக்கமானதாகும். அல்லாஹ், உங்கள் உள்ளங்களிலுள்ளவற்றை அறிகின்றான். அல்லாஹ் நன்கு அறிபவனும், இரக்கமுடையவனுமாவான்.
- இதன் பின்னர் பெண்களை மணந்து கொள்ள உமக்கு அனுமதி இல்லை20. உமது வலக்கை சொந்தமாக்கிக் கொண்டவர்களைத் தவிர (இப்போதுள்ள மனைவிகளாகிய) அவர்களுக்குப் பதிலாக வேறு மனைவிகளை, அவர்களின் அழகு உம்மை எந்த அளவு கவர்ந்தாலும் சரியே, பற்றிக் கொள்ளவும் அனுமதியில்லை. அல்லாஹ் எல்லாவற்றையும் கவனிப்பவனாவான். ரு6
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் உணவிற்காக அழைக்கப்பட்டாலன்றி, நபியின் வீடுகளில் ஒருபோதும் நுழையாதீர்கள்; அதுவும் சமையலாவதை எதிர்பார்த்தவண்ணம் (முன்கூட்டியே சென்று) இருக்கக் கூடாது. மாறாக, நீங்கள் அழைக்கப்படும் போது உள்ளே செல்லுங்கள். நீங்கள் உண்டு முடிந்ததும், பேச்சில் மூழ்கி விடாமல் கலைந்து சென்று விடு்ங்கள்21. நிச்சயமாக இது (அதாவது உணவிற்காக முன்னர் செல்வதும், தேவையின்றி பேச்சில் மூழ்கியிருந்து விடுவதும்) நபிக்குத் துன்பம் தருகிறது. அவர் உங்களிடம் (போய் வாருங்கள் என்று கூற) வெட்கப்படுகின்றார். ஆனால் அல்லாஹ் உண்மையைக் கூற வெட்கப்பட மாட்டான். நீங்கள் (நபியின் மனைவிகளாகிய) அவர்களிடம் வீட்டிற்குரிய பொருள் எதுவும் கேட்க வேண்டுமானால், திரைக்குப் பின்னாலிருந்து அவர்களிடம் கேளுங்கள். இது உங்களின் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மை தரும். நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்குத் துன்பம் கொடுப்பது உங்களுக்கு ஏற்றதன்று. நீங்கள் அவருக்குப் பின்னர், அவருடைய மனைவிகளை ஒருபோதும் மணந்து கொள்ளவும் கூடாது. இது அல்லாஹ்வின் பார்வையில் மாபெரும் குற்றமாகும்.
- நீங்கள் ஒன்றை வெளிப்படுத்தினாலோ, மறைத்து வைத்தாலோ நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான்.
- (நபியின் மனைவிகள்) தங்கள் தந்தையர்கள், தங்கள் ஆண் மக்கள் 22, தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் ஆண் மக்கள், தங்கள் சகோதரிகளின் ஆண் மக்கள், தங்கள் சொந்தப் பெண்கள், தங்கள் ஆதிக்கத்தின் கீழ் உள்ள அடிமைப் பெண்கள் ஆகியோர்களின் முன்பாக வருவதில் அவர்கள் பெயரில் எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கின்றான்.
- நிச்சயமாக அல்லாஹ் இந்த நபியின் மீது தன் அருளைப் பொழிந்து கொண்டே இருக்கின்றான். மலக்குகளும் (இவருக்காகப் பிரார்த்தனைகள் செய்து கொண்டே இருக்கின்றனர். எனவே) நம்பிக்கை கொண்டவர்களே! இந்த நபி(கள் நாயகம் அவர்களு)க்கு எப்போதும் அருள் பொழியுமாறும், சாந்தியும், சமாதானமும் கிடைக்குமாறும் நீங்களும் பிரார்த்தனை செய்யுங்கள்.
- அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் துன்பத்தைக் கொடுப்பவர்களை அல்லாஹ் இவ்வுலகிலும், மறுமையிலும் சபித்துள்ளான். மேலும் அவர்களுக்கு இழிவுபடுத்தக் கூடிய தண்டனையை ஆயத்தப்படுத்தியுள்ளான்.
- நம்பிக்கை கொண்ட ஆண்களையும், நம்பிக்கை கொண்ட பெண்களையும், அவர்கள் செய்யாத (குற்றம்) ஒன்றிற்காகத் துன்புறுத்துவோர், மாபெரும் பொய்யையும், மிகத்தெளிவான பாவத்தையும் சுமக்கின்றனர்.
- நபியே! நீர் உமது மனைவிகளிடமும், உமது பெண் மக்களிடமும், நம்பிக்கை கொண்டவர்களின் பெண்களிடமும் அவர்கள் (வெளியில் செல்லும் போது) தங்களுடைய பெரிய மேலாடைகளைக் கொண்டு தங்களைப் போர்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக23. இது அவர்கள் பிரித்தறியப்படுவதற்கு மிகவும் பொருத்தமானது24. அவர்கள் துன்புறுத்தப்பட(வும்) மாட்டார்கள். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- நயவஞ்சகர்களும், தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும், நகரத்தில் பொய் வதந்திகளைப் பரப்பித் திரிபவர்களும் விலகிக் கொள்ளவில்லையாயின் நிச்சயமாக நாம் அவர்களுக்கெதிராக உமக்கு அதிகாரத்தை வழங்குவோம். பின்னர் அவர்கள் அதில் உம்முடைய அக்கம்பக்கத்தவராக குறைந்த காலமே வாழ்வர்.
- அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். (எனவே) அவர்கள் எங்கு காணப்படினும், பிடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட வேண்டும்.
- முன்னர் காலஞ்சென்றவர்களிடத்து அல்லாஹ்வின் செயல்முறை இதுவே. அல்லாஹ்வின் செயல்முறையில் எந்த மாற்றத்தையும் உம்மால் ஒருபோதும் காண முடியாது.
- இறுதிக்காலம் குறித்து மக்கள் உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக அதைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம்(தான்) உள்ளதென்று நீர் கூறுவீராக. மேலும் அந்த நேரம் நெருங்கியிருக்கலாம் என உமக்குத் தெரிவிப்பது எது?
- நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களைச் சபித்துள்ளான். மேலும் அவர்களுக்காகச் சுடர் விட்டெரியும் நெருப்பை ஆயத்தப்படுத்தியுள்ளான்.
- அவர்கள் அதில் நீண்டகாலம் வாழ்ந்து வருவர். (அங்கு எந்தவொரு) நண்பரையோ, உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்.
- அவர்களுடைய பெரும்பெரும் தலைவர்கள் நெருப்பில் புரட்டப்படும் நாளில், 'அந்தோ! நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடந்திருக்க வேண்டுமே; (அவனது) தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்திருக்க வேண்டுமே' என்று அவர்கள் கூறுவார்கள்.
- மேலும் அவர்கள் கூறுவர்: எங்கள் இறைவா! நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்தோம்; அவர்கள் எங்களை தவறான வழியில் நடத்திச் சென்று விட்டனர்.
- எங்கள் இறைவா! நீ அவர்களுக்கு இருமடங்கு தண்டனை வழங்குவாயாக. மேலும் மாபெரும் சாபத்தைக் கொண்டு அவர்களைச் சபித்து விடுவாயாக (என்றும் வேண்டுவர்). ரு8
- நம்பிக்கை கொண்டவர்களே! (அவதூறு கூறி) மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஆனால் (அவரைப் பற்றி) அவர்கள் கூறியவற்றிலிருந்து அல்லாஹ் அவரை அகற்றி விட்டான். அவர் அல்லாஹ்வின் பார்வையில் மேன்மைக்குரியவராக விளங்கினார்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, சரியான(தும், உண்மையானதுமான) வார்த்தையைக் கூறுங்கள்.
- (நீங்கள் அவ்வாறு செய்தால்) உங்களுக்கு, உங்கள் நடத்தைகளை அவன் சீர்திருத்தி, உங்களுக்கு, உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர், நிச்சயமாக மாபெரும் வெற்றியினை அடைவார்.
- நிச்சயமாக நாம் நம்பி ஒப்படைக்கும் பொருளை (இறைச் சட்டத்தை) வானங்கள், பூமி, மலைகள் ஆகியவற்றின் முன் வைத்தோம். ஆனால் அவை, அதனைச் சுமக்க மறுத்தன. மேலும் அது குறித்து அஞ்சின. ஆனால் மனிதன் அதனைச் சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் (தனக்கே) கொடுமை இழைப்பவனாயும், பின்விளைவுகளைப் பொருட்படுத்தாதவனாயும் இருக்கின்றான்.
- அல்லாஹ் நயவஞ்சக ஆண்களுக்கும், பெண்களுக்கும், இணை வைக்கின்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும், தண்டனை வழங்குவதும், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் அருள் செய்வதுமே இதன் விளைவாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு9