35- அல் ஃபா(த்)திர்

அதிகாரம்: அல் ஃபா(த்)திர்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்:46

பிரிவுகள்: 5


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
  2. வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய, இரண்டிரண்டு, மும்மூன்று, நந்நான்கு இறக்கைகள் உடைய வானவர்களைத்1 தூதர்களாக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும், படைப்பில் அவன் விரும்பும் அளவிற்கு அதிகமாக்குகின்றான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் உடையவனாவான்.
  3. அல்லாஹ் மக்களுக்காக ஏதேனும் கருணையைத் திறந்து விட்டால், அதைத் தடுப்பவன் எவனுமில்லை. அவன் ஒன்றை நிறுத்தி விட்டால் அதன் பின்னர் அதனை விடுவிப்பவனும் எவனும் இல்லை. அவன் வல்லோனும், ஞானமிக்கவனுமாவான்.
  4. மக்களே! அல்லாஹ் உங்களுக்குச் செய்துள்ள அருளை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உணவளிக்கின்ற அல்லாஹ்வையன்றி படைப்போன் எவனாவது உண்டா? அவனையன்றி, வணக்கத்திற்குரியவன் எவனும் இல்லை. பின்னர் நீங்கள் எங்கு திருப்பி விடப்படுகின்றீர்கள்?
  5. இவர்கள் உம்மைப் பொய்யாக்குகின்றனர் என்றால், உமக்கு முன்னரும் (தோன்றிய இறைத்)தூதர்கள் நிச்சயமாக பொய்யாக்கப்பட்டனர். எல்லாப் பிரச்சினைகளும் (தீர்ப்பிற்காக) அல்லாஹ்விடமே திருப்பப்படுகின்றன.
  6. மக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். எனவே  உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் எவனும் அல்லாஹ்வைக் குறித்து உங்களை ஏமாற்றி விடவும் வேண்டாம்.
  7. நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். எனவே நீங்கள் அவனை எதிரியாகவே கொள்ளுங்கள். தன் கூட்டத்தினரை, சுடர் விட்டெரியும் நெருப்பிற்குரியவர்கள் ஆவதற்கே அவன் அழைக்கின்றான்.
  8. நிராகரிப்போருக்குக் கடினமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை கொண்டு, நற்செயலாற்றுபவர்களுக்கு மன்னிப்பும், பெரும் நற்பலனும் உள்ளன. ரு1
  9. தனது செயலின் தீமை தனக்குக் கவர்ச்சி மிக்கதாக ஆக்கப்பட்டு, தானும் அதனை அழகானதென்று காண்பவன் (நம்பிக்கை கொண்டு, நற்செயலாற்றுபவனைப் போன்றவனாவானா?) நிச்சயமாக அல்லாஹ் தான் விரும்புபவனை வழிகேட்டில் செல்ல விடுகின்றான்; தான் விரும்புபவனை, நேர்வழியில் நடத்துகின்றான். எனவே அவர்களுக்காக வருந்தி உமது உயிர் அழிந்து விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு அறிபவனாவான்.
  10. மேகங்களை உயர்த்தக் கூடிய காற்றுகளை அனுப்புகிறவன் அல்லாஹ்வே. பின்னர் நாம் அவற்றை மரணமடைந்த நாட்டிற்கு ஓட்டிச் செல்கின்றோம். பின் அதனைக் கொண்டு பூமிக்கு, அதன் மரணத்திற்குப் பின்னர் புத்துயிர் கொடுக்கின்றோம். (மரணத்திற்குப் பின்னர்) உயிர் பெற்றெழுவது (என்பது) இவ்வாறேயாகும்.
  11. கண்ணியத்தை விரும்புபவர், கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது (என்பதனை அறிக). தூய வார்த்தைகள் அவனை நோக்கியே ஏறிச் செல்கின்றன. மேலும் நற்செயல்களே அவற்றை உயர்த்துகின்றன. சதித் திட்டங்கள் தீட்டுவோருக்குக் கடினமான தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது. இத்தகையோரின் சதித்திட்டம் அழிந்து விடக் கூடியதாகும்.
  12. அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் ஒரு துளி விந்திலிருந்தும் படைத்தான். இதன் பின்னர் அவன் உங்களை இணைகளாக ஆக்கினான். அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பமாவதுமில்லை: குழந்தையைப் பெற்றெடுப்பதுமில்லை. நீண்ட ஆயுள் உடையவர் நீண்ட ஆயுள் பெறுவதும், ஒருவரது ஆயுள் குறைக்கப்படுவதும், ஒரு நியதியின் அடிப்படையிலானதாகும். நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு முற்றிலும் எளிதேயாகும்.
  13. இரு கடல்களும் சமமானவையல்ல. இது (ஒன்று) இனியதும், சுவையானதும், குடிக்கத்தக்கதுமாகும். மற்றொன்று துவர்ப்பானது, கசப்பானது. (அவ்வாறிருந்தும்) நீங்கள் அவற்றுள் ஒவ்வொன்றிலிருந்தும் புத்தம் புதிய (மீன்) இறைச்சியை உண்ணுகிறீர்கள். மேலும் நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை வெளியில் எடுக்கிறீர்கள். நீங்கள் அவனது அருளைத் தேடுவதற்கும், நீங்கள் நன்றி பாராட்டுவதற்கும், அவற்றில் (அலைகளைக்) கிழித்துச் செல்லும் கப்பல்களைக் காண்கின்றீர்கள். 
  14. அவன் இரவைப் பகலில் நுழையச் செய்கின்றான். பகலை இரவில் நுழையச் செய்கின்றான். மேலும் அவன் சூரியனையும், சந்திரனையும் தொண்டு செய்ய வைத்துள்ளான். இவற்றுள் ஒவ்வொன்றும் (தன் வழியில்) குறிப்பிட்ட ஒரு காலம் வரை செல்கிறது. இத்தகையவனே அல்லாஹ்- உங்கள் இறைவன்! ஆட்சி அவனுக்குரியதே; நீங்கள் அவனையன்றி எவர்களை அழைக்கிறீர்களோ அவர்கள் ஓர் அற்பப் பொருளுக்குக் கூட2 உரிமையாளர் இல்லை.
  15. நீங்கள் அவர்களை அழைத்தால், அவர்கள் உங்கள் அழைப்பைச் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் அதனைச் செவியேற்றாலும், அவர்களால் உங்களுக்குப் பதிலளிக்க இயலாது. மறுமை நாளில் அவர்கள், நீங்கள் இணையாக்கியதை மறுத்து விடுவர். நன்கு அறிந்த (ஒரு)வரைப் போல்3 வேறெவராலும் உமக்குத் தெரிவிக்க இயலாது. ரு2
  16. மக்களே! நீங்கள் அல்லாஹ்விடம் தேவையுடையோர் ஆவீர். ஆனால் அல்லாஹ் தன்னிறைவு பெற்றவனும், புகழுக்குரியவனும் ஆவான்.
  17. அவன் விரும்பினால் உங்களை அழித்து விட்டு, ஒரு புதிய படைப்பை அவனால் கொண்டு வர முடியும்.
  18. அது அல்லாஹ்வுக்குக் கடினமானதன்று.
  19. சுமை சுமக்கும் ஒருவன், மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான். கனமான சுமை சுமத்தப்பட்ட (ஓர் உயிரான)து, தன் சுமையைச் சுமக்க எவரையாவது அழைத்தால், அவர் நெருங்கிய உறவினராக இருந்தாலும் சரியே, அதில் சிறிதும் (அவரால்) சுமக்கப்பட மாட்டாது. மறைவாகத் தம் இறைவனுக்கு அஞ்சி, தொழுகையை நிலை நாட்டுவோருக்கு மட்டுமே உம்மால் எச்சரிக்கை செய்ய முடியும். தூய்மையினை அடைபவர் தமக்காகவே தூய்மையினை அடைகிறார். மேலும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.
  20. குருடரும், பார்வையுடையவரும் சமமானவரல்ல.
  21. இருள்களும், ஒளியும் (சமமானது) அல்ல.
  22. நிழலும், வெயிலும் (சமமானது) அல்ல.
  23. உயிருள்ளவையும், இறந்தவையும் சமமானவை அல்ல. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவரைக் கேட்கச் செய்கின்றான். கல்லறைகளிலுள்ளவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது.
  24. நீர் ஓர் எச்சரிக்கையாளரே ஆவீர்.
  25. நிச்சயமாக, நாம் உம்மை நற்செய்தி வழங்குபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், உண்மையுடன் அனுப்பியுள்ளோம். எச்சரிக்கை செய்பவர் எவரும் வராத எந்தச் சமுதாயமும் இல்லை.
  26. இவர்கள் உம்மைப் பொய்யாக்குகின்றனர் என்றால், இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (அவர்களுடைய தூதர்களைப்) பொய்யாக்கியிருந்தனர். அவர்களின் தூதர்கள், அவர்களிடம் தெளிவான சான்றுகளுடனும், வேத ஏடுகளுடனும், ஒளியைத் தரக்கூடிய வேதத்துடனும் வந்தனர்.
  27. பின்னர் நான் நிராகரித்தவர்களைப் பிடித்து விட்டேன். எனவே என்னை மறுத்தது எவ்வாறாயிற்று (என்பதை அவர்கள் பார்க்கட்டும்).  ரு3
  28. வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதை நீர் காணவில்லையா? அதனால் பல்வேறு நிறங்களைக் கொண்ட பழங்களை நாம் வெளிப்படுத்துகிறோம். மேலும் பல்வேறு நிறங்களான வெள்ளை, சிவப்பு மற்றும் மிகக் கருமை ஆகிய வண்ணங்களைக் கொண்ட மலைகள் உள்ளன. (என்பதையும் நீர் காணவில்லையா?).
  29. மனிதர்களிலும், மிருகங்கள், கால்நடைகள் ஆகியவற்றிலும் அவ்வாறே பல்வேறு நிறங்கள் உள்ளன. அல்லாஹ்வின் அடியார்களுள் அறிவுடையோர் மட்டுமே அவனுக்கு அஞ்சுகின்றனர். நிச்சயமாக அல்லாஹ் வல்லமையுள்ளவனும், மிக்க மன்னிப்பவனுமாவான்.
  30. அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து, தொழுகையை நிலை நாட்டி, நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து  மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்பவர்கள் என்றும் அழியாத வாணிபத்தை எதிர்பார்க்கின்றனர்4.
  31. ஏனெனில், இதன் விளைவாக அவன் அவர்களுக்கு, அவர்களுக்குரிய நற்பலனை முழுமையாக வழங்குவான். மேலும் தன் அருளிலிருந்து இன்னும் மிகுதியாக அவர்களுக்கு வழங்குவான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், மதிப்பளிப்பவனும் ஆவான்.
  32. இந்த வேதத்திலிருந்து நாம் உமக்கு வஹி மூலம் வெளிப்படுத்தியவை முற்றிலும் உண்மையானதும், தனக்கு முன்னுள்ளதை நிறைவேற்றக் கூடியதுமாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களைப் பற்றி நன்கு அறிபவனும், பார்ப்பவனுமாவான்.
  33. பின்னர் நாம், நம் அடியார்களுள் நாம் தேர்ந்தெடுத்தவர்களை இவ் வேதத்திற்கு வாரிசு ஆக்கினோம். அவர்களுள் சிலர் (நன்மை செய்வதில்) தமக்கே கடினமானவர்களாகவும், மற்றுஞ்சிலர் நடுநிலையாளர்களாகவும், இன்னுஞ்சிலர் (நன்மைகளில்) அல்லாஹ்வின் விருப்பத்துடன் (மற்றவர்களை) முந்துபவர்களாகவும் உள்ளனர். நிச்சயமாக இது பெரும் (இறை) அருளாகும்.
  34. (அவர்களுக்குரிய வெகுமதி) என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்களாகும். அவர்கள் அவற்றில் நுழைவர். அவர்கள் அவற்றில் தங்கத்தாலும், முத்துக்களாலும் ஆன வளையல்கள் அணிவிக்கப்படுவர். அவற்றில் அவர்களின் ஆடை பட்டால் ஆனதாக5 இருக்கும்.
  35. மேலும் அவர்கள் கூறுவார்கள்: நம்மை விட்டுத் துயரத்தை அகற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நிச்சயமாக நம் இறைவன் மிக்க மன்னிப்பவனும், மிகுந்த மதிப்பளிப்பவனும் ஆவான்.
  36. அவன் தன் அருளால் நமக்குத் துன்பமோ, களைப்போ ஏற்படாத, என்றென்றும் நிலைத்திருக்கும் வீட்டில் நம்மை வைத்தான்.
  37. ஆனால் நிராகரிப்பவர்களுக்கு நரக நெருப்பு (விதிக்கப்பட்டு) உள்ளது. அவர்கள் மரணமடையும் படி அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்படவும் மாட்டாது; அவர்களுக்கு அதன் தண்டனை எளிதாக்கப்படவும் மாட்டாது. நன்றி கெட்ட ஒவ்வொருவனுக்கும் இவ்வாறே நாம் கூலி அளிக்கிறோம்.
  38. மேலும் அவர்கள் அதில் கதறுவார்கள்: எங்கள் இறைவா! இதிலிருந்து எங்களை வெளியேற்றி விடுவாயாக! நாங்கள் (கடந்த வாழ்க்கையில்) செய்து வந்ததற்கு மாற்றமாக (நம்பிக்கையாளரைப் போன்று) நற்செயல்களைச் செய்வோம் (எனக் கூறுவார்கள். அதற்கு இறைவன் அவர்களிடம் கூறுவான்): நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தரவில்லையா? அறிவுரை பெறுபவர் அ(க்காலத்)தில் அறிவுரை பெற்றிருக்கலாம். எச்சரிக்கை செய்பவரும் உங்களிடம் வந்தார். (நீங்கள் அவரை ஏற்கவில்லை). எனவே நீங்கள் (இத் தண்டனையைச்) சுவைத்துப் பாருங்கள். அநீதி இழைத்தவர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை. ரு4
  39. நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றிலுள்ள மறைவானவற்றை அறிபவனாவான்: நிச்சயமாக அவன் (மக்களின்) நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கு அறிபவனாவான்.
  40. அவனே உங்களைப் பூமியில் முன்னோர்களின் பிரதிநிதிகளாக ஆக்கினான். எனவே நிராகரிப்பவர், தமது நிராகரிப்பி(ற்குரிய விளைவி) னைத் தாமே அனுபவிப்பார். நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தையே வளர்க்கும். மேலும் நிராகரிப்பவர்களின் நிராகரிப்பு அவர்களுக்கு நஷ்டத்தையே வளர்க்கும்.
  41. நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வையன்றி அழைக்கின்ற (நீங்கள் அவனுக்கு ஏற்படுத்தியுள்ள) உங்கள் இணைகளைப் பார்த்துள்ளீர்களா? அவை பூமியில் படைத்திருப்பதை நீங்கள் எனக்குக் காட்டுங்கள் அல்லது வானங்களைப் படைப்பதில் அவற்றுக்கு ஏதேனும் பங்கு உண்டா? அல்லது தெளிவான ஒரு சான்று பெறக் கூடிய ஒரு வேதத்தை நாம் அவர்களுக்கு வழங்கியுள்ளோமா? (அவ்வாறன்று) மாறாக, அநீதி இழைப்பவர்களுள் ஒருவருக்கொருவர் ஏமாற்றுதலைத் தவிர வேறு வாக்குறுதி அளிப்பதில்லை.
  42. நிச்சயமாக அல்லாஹ்வே வானங்களும், பூமியும் (தம் இடங்களிலிருந்து) விலகி விடாதவாறு தடுக்கின்றான். அவை விலகி விடுமாயின், அவனுக்குப் பின்னர் அவற்றை (அழிவிலிருந்து) எவராலும் தடுக்க இயலாது. நிச்சயமாக அவன் மிக்க இரக்கமுடையவனும், மிக்க மன்னிப்பவனும் ஆவான்.
  43. எச்சரிக்கை செய்பவர் எவரும் தங்களிடம் வந்தால், மற்றெல்லாச் சமுதாயங்களிலுள்ள ஒவ்வொருவரையும் விடத் தாங்கள் மிகச்சிறந்த நேர்வழியைப் பின்பற்றுபவர்களாகி விடுவோம் என்று அவர்கள் அல்லாஹ்வின் மேல் மிக்க உறுதியான சத்தியங்கள் செய்தனர். ஆனால் எச்சரிக்கை செய்யும் ஒருவர் அவர்களிடம் வந்தபோது, அது அவர்களுக்கு வெறுப்பையே வளர்த்தது. 
  44. ஏனெனில், பூமியில் அவர்கள் பெருமையடித்தனர். மேலும் தீய சூழ்ச்சிகள் செய்தனர். ஆனால் தீய சூழ்ச்சி, அதனைச் செய்பவர்களையே சூழ்ந்து கொள்கின்றது. (அழிந்து போன) முன் சென்றோரின் வழியினைத் தவிர வேறொன்றையா அவர்கள் எதிர்பார்க்கின்றனர்? ஆனால் அல்லாஹ்வின் செயல் முறையில் எந்த மாற்றத்தையும் நீர் ஒருபோதும் காண மாட்டீர். மேலும் அல்லாஹ்வின் செயல் முறையில் எந்த வேற்றுமையையும் நீர் ஒருபோதும் காண மாட்டீர்.
  45. அவர்கள் பூமியில் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு (தீயதாக) ஆயிற்று, என்பதனை அவர்கள் பார்த்ததில்லையா? அவர்கள், இவர்களை விட வலிமை மிக்கவர்களாக இருந்தனர். வானங்களிலோ, பூமியிலோ உள்ள எதனாலும் அல்லாஹ்வின் திட்டங்களை செயலிழக்கச் செய்ய முடியாது. நிச்சயமாக அவன் நன்கு அறிபவனும், பேராற்றல் பெற்றவனுமாவான்.
  46. மக்கள் செய்கின்ற செயல்களின் காரணமாக அவர்களுக்கு, அல்லாஹ் தண்டனையளித்து விடுவானாயின், பூமியின் மேற்பரப்பில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். ஆனால் அவன், அவர்களைக் குறிப்பிட்ட ஒரு காலம் வரை விட்டு விடுகிறான். பிறகு அவர்களுக்குரிய குறிப்பிட்ட நேரம் வரும் போது, அல்லாஹ் தன் அடியார்களைக் கவனிப்பவனாக இருக்கின்றான் (என்பது தெரிய வரும்). ரு5
Powered by Blogger.