34- ஸபா

அதிகாரம் : ஸபா 
அருளப்பெற்ற இடம் : மக்கா  | வசனங்கள்: 55
பிரிவுகள்: 6


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லாம் எவனுக்கு உரியனவோ அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மறுமையிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் நுட்பமான ஞானமுள்ளவனும், எல்லாவற்றையும் நன்கு தெரிந்தவனுமாவான்1. 
  3. பூமியினுள் செல்வதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன்பால் ஏறுவதையும் அவன் அறிகின்றான்2. அவன் மேன்மேலும் கருணை காட்டுபவனும், மிக்க மன்னிப்பவனுமாவான். 
  4. அந்த நேரம் எங்களுக்கு வரப் போவதில்லை என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். நீர் கூறுவீராக: அவ்வாறன்று. மறைவானதை அறியும் என் இறைவன் மேல் ஆணையாக, நிச்சயமாக அது உங்களுக்கு வந்தே தீரும். வானங்களிலோ, பூமியிலோ, அணுவளவிலுள்ள ஒரு பொருளாவது அல்லது அதனை விடச் சிறியதோ, பெரியதோ எப்பொருளாயினும் அவனை விட்டுத் தப்பி விடுவதில்லை. மாறாக, அவையெல்லாம் தெளிவான நூலொன்றில் (பதிவு செய்யப்பட்டு) உள்ளன. 
  5. நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்பவர்களுக்கு நற்பலன் வழங்குவதற்காக (அந்த நேரம் வருவது இன்றியமையாததாகும்). இத்தகையோருக்கு (தங்கள் இறைவனிடமிருந்து) மன்னிப்பும், வாழ்விற்குரிய கண்ணியமிக்க வசதிகளும் உண்டு. 
  6. எம் அடையாளங்களைச் செயல் இழக்கச் செய்ய முயல்வோருக்கு (அவர்களின் பாவத்தின் காரணமாக) வேதனையளிக்கக் கூடிய தண்டனை உண்டு. 
  7. ஞானம் வழங்கப் பெற்றவர்கள், உமது இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டிருப்பது உண்மையானதென்றும், அது வல்லோனும், புகழுக்குரியோனுமாகிய (இறை)வனின் வழியில் நடத்திச் செல்கிறதென்றும் அறிகின்றனர். 
  8. நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்: (நீங்கள் மரணமடைந்ததன் பின்னர்) துண்டு, துண்டுகளாகச் சிதறடிக்கப்படும் போது, நீங்கள் புதியதொரு படைப்பாக(த் தோற்றுவிக்கப்படுபவர்கள்) ஆவீர்கள் என்று உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு மனிதரை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா? 
  9. "அவர் அல்லாஹ்வுக்கு எதிராகப் பொய்யைப் புனைந்துரைக்கின்றாரா? அல்லது அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?" . அவ்வாறன்று. மாறாக, மறுமையை நம்பாதவர்கள் (ஏற்கனவே) தண்டனைக்கு ஆளாகியிருக்கின்றனர். மேலும் (அவர்கள்) வழிகேட்டில் வெகுதூரம் சென்றவர்களுமாவார்கள். 
  10. வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும், அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்குப் பின்னாலும் (வந்து சூழ்ந்து கொண்டு) இருப்பதை அவர்கள் காண்பதில்லையா? நாம் விரும்பினால் அந்தப் பூமி அவர்களுடன் அமிழ்ந்து விடுமாறு செய்திருப்போம்; அல்லது விண்ணிலிருந்து ஒரு பேராபத்து அவர்கள் மீது விழுமாறு செய்திருப்போம். இறைவனுக்குப் பணியும் ஒவ்வொரு அடியாருக்கும் நிச்சயமாக இதில் ஓர் அடையாளம் உள்ளது. ரு1
  11. நிச்சயமாக நாம் தாவூதுக்கு எம்மிடமிருந்து அருளை வழங்கினோம். மலைகளில் வாழ்ந்து வருபவர்களே!3 நீங்களும், பறவைகளே! நீங்களும், அவருடன் இணைந்து இறைவனது தூய்மையினை எடுத்துரையுங்கள் (என்று கூறினோம்). மேலும் நாம் அவருக்காக இரும்பை மிருதுவானதாக ஆக்கினோம். 
  12. முழு அளவிலான கவசங்களைச் செய்வீராக. அவற்றின் கண்ணிகளை சிறியவையாகச் செய்வீராக என்றும் கூறினோம். (தாவூதைச் சேர்ந்தவர்களே!) நீங்கள் நற்செயல்களைச் செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் பார்க்கின்றேன். 
  13. காற்றை ஸுலைமானுக்குச் (சாதகமாக நாம் வீசச் செய்தோம்). அது காலையில் செல்வதும் ஒரு மாத(பயண)5மாக இருந்தது. அது மலையில் செல்வதும் ஒரு மாத(பயண)மாக இருந்தது. உருகிய செம்பின் ஓர் ஊற்றை நாம் அவருக்காக ஓடச்6 செய்தோம். ஜின்களுள் சிலர் அவரது இறைவனின் கட்டளைக்கேற்ப அவருக்குக் கட்டுப்பட்டுப் பணியாற்றினர்7. அவர்களுள் எமது கட்டளையைப் புறக்கணித்து விடுகின்ற வரை நாம், சுடர்விட்டெரியும் நெருப்புத் தண்டனையைச் சுவைக்கச் செய்வோம் (என்றும் நாம் கூறினோம்). 
  14. அவர்கள், அவருக்காக ஆலயங்கள், சிற்பங்கள், நீர்த்தேக்கங்களைப் போன்ற தொட்டிகள், எப்போதும் அடுப்பிலே இருக்கும் பெரும் சமையல் பாத்திரங்கள் ஆகியவற்றுள் அவர் விரும்பியவற்றைச் செய்தனர். தாவூதின் குடும்பத்தினர்களே! நீங்கள் நன்றியுள்ளவர்களாகச் செயலாற்றுங்கள் (என்று கூறினோம்). ஆனால் என் அடியார்களுள் மிகச் சிலரே நன்றியுள்ளவர்களாக விளங்குகின்றனர். 
  15. நாம் அவரது மரணத்தை விதித்த போது, அவரது (ஆட்சி என்னும்) செங்கோலை அரித்துத் தின்ற உலகப் பூச்சியைத் தவிர வேறெதுவும் அவரது மரணத்தைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவில்லை8. எனவே அவர் கீழே விழுந்ததும், மறைவானதைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பின்9 இழிவிற்குரிய தண்டனையில் இருந்திருக்க மாட்டோம் என்று ஜின்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர். 
  16. ஸபாவுக்கு அவர்களின் சொந்த நாட்டில் பெரும் அடையாளம் ஒன்று இருந்தது. (அது) வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் இருந்த இரண்டு தோட்டங்கள் (ஆகும்). (நாம் அவர்களிடம்) நீங்கள் உங்கள் இறைவனின் உணவிலிருந்து உண்டு, அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (உங்கள் நகரம்) அழகு வாய்ந்த நகரமாகும். (உங்கள்) இறைவன் மிக்க மன்னிப்பவனாவான் (என்று கூறினோம்). 
  17. ஆனால் அவர்கள் (உண்மையை) புறக்கணித்து விட்டனர். எனவே( எல்லாவற்றையும்) அழிக்கும் வெள்ளத்தை நாம் அவர்களுக்கெதிராக அனுப்பி, அவர்களின் உன்னதமான இரண்டு தோட்டங்களை கசப்பும், புளிப்பும் உள்ள பழங்களையும், ஒரு சில இலந்தை மரங்களையும் கொண்ட இரு தோப்புகளாக நாம் மாற்றினோம். 
  18. அவர்கள் நன்றிகெட்டவர்களாக இருந்ததனால், நாம் அவர்களுக்கு இதனைப் பரிசாக அளித்தோம். நன்றிகெட்டவருக்கே நாம் (இவ்வாறு) கூலி தருகின்றோம். 
  19. அவர்களுக்கும், நாம் வளமளித்த (ஸுலைமானுடைய நாடாகிய பாலஸ்தீனத்தின்) நகரங்களுக்கும் இடையில், நேருக்கு நேர் நெருங்கியிருந்த பல நகரங்களை நாம் தோற்றுவித்து, அவற்றிற்கிடையே பயணத்தை சுருங்கச் செய்தோம். நீங்கள் அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமின்றிப் பயணம் செய்யுங்கள் (என்று கூறினோம்). 
  20. ஆனால் அவர்கள் (நன்றிசெலுத்துவதற்குப் பதிலாக) எங்கள் இறைவா! (சுற்றுப்பயணங்களின் இன்பத்தை நாங்கள் அனுபவிப்பதற்காக) எங்கள் பயணங்கள் வெகு நீண்டதாக இருக்குமாறு செய்வாயாக என்று கூறி10, அவர்கள் தங்களுக்கே அநீதியிழைத்துக் கொண்டனர். எனவே நாம் (அவர்களின் பெயர்கள் அழிந்து போகுமாறு செய்து) அவர்களைப் பழங்காலத்துக் கதைகளாக்கி, அவர்களை அழித்துத் தூள், தூளாக்கி விட்டோம். ஒவ்வொரு பொறுமையாளருக்கும், நன்றி செலுத்துபவருக்கும் நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன.
  21. நிச்சயமாக இப்லீஸ், அவர்களைப் பற்றிய தன் மதிப்பீட்டைச் சரியானதென்று நிரூபித்து விட்டான். நம்பிக்கை கொண்ட ஒரு பிரிவினரைத் தவிர மற்றவர்கள் (எல்லோரும்) அவனைப் பின்பற்றினர். 
  22. அவர்கள் மீது அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லாதிருந்தது. எனினும் நாம் மறுமையில் நம்பிக்கை கொண்டவர்களை, அது குறித்து ஐயம் கொண்டிருப்பவர்களிலிருந்து அடையாளம் காண்பதற்காகவே (அவ்வாறு நிகழ்ந்தது). உமது இறைவன் எல்லாவற்றையும் கண்காணிக்கின்றவனாக இருக்கின்றான். ரு2 
  23. நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வையன்றி, (கடவுளர் என்று) உறுதியாக எண்ணிக் கொண்டிருப்பவர்களை அழைத்துப் பாருங்கள்: அவர்கள் வானங்களிலும், பூமியிலும் ஓர் அணுவளவிலான எந்தப் பொருளுக்கும் உரிமையுள்ளவர்கள் அல்லர். அவ்விரண்டிலும் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை; அவர்களுள் அவனுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை. 
  24. அவன் அனுமதித்துள்ளவரைத் தவிர, வேறெவருக்கும் அவனிடத்தில் பரிந்து பேசுவது பயனளிக்காது. இறுதியாக அவர்களின் உள்ளங்களிலிருந்து நடுக்கம் நீங்கியதும், அவர்கள் (நபிமார்களிடம்) 'உங்கள் இறைவன் என்ன கூறினான்' என்று கேட்பார்கள். இதற்கு அவர்கள்: 'உண்மையைக் கூறினான்' என்று கூறுவார்கள். அவன் உயர்ந்தவனும், மேன்மையுடையவனுமாவான். 
  25. வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு அளிப்பவன் எவன் என்று நீர் கேட்டு, அல்லாஹ் என்று நீரே பதிலளிப்பீராக.  நேரான வழியில் அல்லது தெளிவான வழிகேட்டில் இருப்பவர்கள் நாங்களா  அல்லது நீங்களா? (என்றும் கேட்பீராக). 
  26. எங்கள் குற்றங்கள் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்களும் கேட்கப்பட மாட்டோம் என்று நீர் கூறுவீராக. 
  27. நம் இறைவன் நம் எல்லோரையும் ஒன்று திரட்டுவான், பின்னர் நமக்கிடையில் உண்மையுடன் தீர்ப்பு வழங்குவான். அவன் மிகவும் சரியான தீர்ப்பு வழங்குபவனும், எல்லாவற்றையும் நன்கு அறிபவனுமாவான் எனக் கூறுவீராக. 
  28. நீங்கள் இணைகளாக்கி அவனுடன் சேர்ப்பவர்களை எனக்குக் காட்டுங்கள். (அவனுக்கு எவரையும் இணையாக ஆக்குவது ஒருபோதும்) சரியன்று. மாறாக, அவனோ வல்லமையுள்ளவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாகிய அல்லாஹ்வே ஆவான் என்று நீர் கூறுவீராக. 
  29. நாம் உம்மை மனித இனம் முழுவதற்கும்11 (நம்பிக்கை கொண்டவர்களுக்கு) நற்செய்தி வழங்குபவரும், (நிராகரிப்பவர்களுக்கு) எச்சரிக்கை செய்பவருமாகவே அனுப்பியுள்ளோம். ஆனால் மக்களுள் பெரும்பாலார் இதனை அறிவதில்லை. 
  30. நீங்கள் உண்மையாளர்களாயின், இந்த (இறைத்தூது முழு உலகிற்குமென்ற) வாக்குறுதி எப்பொழுது நிறைவேறும் என்று அவர்கள் கேட்கின்றனர்.
  31. உங்களுக்குக் குறிப்பிட்ட காலம் ஒரு நாள் ஆகும்12. உங்களால் அதிலிருந்து ஒரு நொடி பிந்தி விடவும் முடியாது. ஒரு நொடி முந்தி விடவும் முடியாது என்று நீர் கூறுவீராக. ரு3 
  32. இந்தக் குர்ஆனிடத்தும், இது பற்றிய முன்னறிவிப்புகளிடத்தும் நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை கொள்ள மாட்டோம் என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அநீதியிழைப்பவர்கள், தம் இறைவன் முன் கொண்டு வந்து நிறுத்தப்படும் போது அவர்களில் சிலர், சிலர் மீது குற்றம் சுமத்திக் கொண்டிருப்பதை உம்மால் காண முடியும். பலவீனர்கள் எனக் கருதப்பட்டோர் கர்வம் கொண்டவர்களிடம் : நீங்கள் இல்லாமலிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டவர்களாகியிருப்போம் என்று கூறுவார்கள். 
  33. கர்வம் கொண்டவர்கள், பலவீனர்கள் எனக் கருதப்பட்டோரிடம்: நேர்வழி உங்களிடம் வந்ததன் பின்னர், நாங்களா  உங்களை அதிலிருந்து தடுத்தோம்? அவ்வாறன்று. மாறாக, நீங்களே குற்றவாளிகளாக இருந்தீர்கள் என்பார்கள். 
  34. பலவீனர்கள் எனக் கருதப்பட்டவர்கள், கர்வம் கொண்டவர்களிடம், அவ்வாறன்று; மாறாக, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து, அவனுக்கு இணைகளை ஏற்படுத்துமாறு எங்களுக்கு நீங்கள் கட்டளையிட்ட அப்போதைய இரவிலும், பகலிலும் (நீங்கள்) தீட்டிய திட்டங்களே (எங்களை அவ்வாறு ஆக்கிற்று) என்பார்கள். அவர்கள் தண்டனையைக் காணும் போது, (தாங்கள் செய்த) குற்றத்தை உணர்ந்ததால் ஏற்படும் வெட்கத்தை மறைத்து வைப்பார்கள். நிராகரித்தவர்களின் கழுத்துக்களில் விலங்கை மாட்டுவோம். அவர்களின் செயல்களுக்கேற்பவே அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படும். 
  35. எச்சரிப்பவரை (இறைத்தூதரை) நாம் எந்த ஊருக்கு அனுப்பினாலும், அங்கிருந்த செல்வந்தர்கள்: (இறைத்தூதர்களிடம்) நீங்கள் கொண்டு வந்துள்ள தூதை நிச்சயமாக நாங்கள் மறுக்கின்றோம் என்று கூறாமல் இருந்ததில்லை. 
  36. மேலும் நாங்கள் பொருட் செல்வத்திலும், மக்கட்செல்வத்திலும் (உங்களை விட) மிகுந்தவர்களாவோம் என்றும், நாங்கள் தண்டிக்கப்பட மாட்டோம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். 
  37. நிச்சயமாக என் இறைவன், தான் விரும்புபவருக்கு வாழ்விற்குரிய பொருட்களை மிகுதியாகக் கொடுக்கின்றான்; (தான் விரும்புபவருக்கு அவற்றைக்) கட்டுப்படுத்தவும் செய்கின்றான்; ஆனால் மக்களுள் பெரும்பாலார் அறிவதில்லை என்று நீர் கூறுவீராக. ரு4 
  38. உங்களை எமக்கு நெருக்கமாக ஆக்குபவை, உங்கள் செல்வங்களோ, உங்கள் பிள்ளைகளோ அல்ல; மாறாக, நம்பிக்கை கொண்டு நற்செயலாற்றுபவர்களே (எமக்கு நெருங்கியவர்) ஆவர். அவர்களுக்கு, அவர்கள் செய்தவற்றின் காரணமாக இருமடங்கு நற்பலன் உண்டு. மேலும் அவர்கள் உயர்வான மாளிகைகளில் அமைதியாக வாழ்ந்து வருவார்கள். 
  39. எம் அடையாளங்களைச் செயல் இழக்கச் செய்ய முயல்பவர்களே தண்டனையின் முன் கொண்டு வரப்படுவார்கள். 
  40. நிச்சயமாக என் இறைவன், தன் அடியார்களுள் அவன் விரும்புபவருக்கு வாழ்விற்குரிய பொருட்களைத் தாராளமாகவும், அ(வன் விரும்புப) வருக்கு அளவோடும் கொடுக்கிறான். நீங்கள் எதனைச் செலவு செய்தாலும் அவன் அத(ன் பய) னைக் கட்டாயம் வெளிப்படுத்துவான்.வாழ்விற்குரிய பொருட்களைக் கொடுப்பவர்களுள் அவன் மிகச் சிறந்தவனாவான் என்றும் நீர் கூறுவீராக.
  41. அவன், அவர்கள் எல்லோரையும் ஒன்று திரட்டிப் பின்னர், வானவர்களிடம்: உங்களை வணங்கி வந்தவர்கள் இவர்கள் தாமா? என்று கேட்கும் நாளில்; 
  42. அவர்கள் கூறுவர்: நீ தூயவன்; அவர்களுக்கு எதிரில் நீயே எங்கள் பாதுகாவலன்; (நிராகரிப்பவர்கள் கூறுவது போன்றல்ல). மாறாக, அவர்கள் ஜின்களை வணங்கி வந்தனர். அவர்களுள் பெரும்பாலார், (ஜின்களாகிய) அவர்களிடம் நம்பிக்கை கொண்டிருந்தனர். 
  43. எனவே, (நிராகரிப்பவர்களிடம்): இன்று உங்களுள் சிலர், சிலருக்குப் பயனளிக்கவோ, தீங்கு செய்யவோ இயலாது (என்று கூறப்படும்). அநீதியிழைத்தவர்களிடம், நீங்கள் பொய்ப்படுத்தியிருந்த நெருப்புத் தண்டனையைச் சுவைத்துப் பாருங்கள் என்று நாம் கூறுவோம். 
  44. அவர்களுக்கு எமது மிகத்தெளிவான வசனங்கள் ஓதிக் காட்டப்படும் பொழுது, 'இவர், உங்கள் மூதாதையர்கள் வணங்கி வந்தவற்றிலிருந்து உங்களைத் தடுக்க விரும்புகின்ற ஒரு மனிதரேயாவார்' என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், (குர்ஆனாகிய) இது இட்டுக்கட்டப்பட்ட ஒரு பொய்யேயாகும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். நிராகரிப்பவர்களிடம் உண்மை வந்து விடும்போது அவர்கள் அதனைக் குறித்து, 'இது மிகத்தெளிவான ஒரு மாயவித்தையே'13 ஆகும் எனக் கூறுகின்றனர். 
  45. அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் (பொருளற்ற செய்திகளைக் கொண்ட) எந்த வேதத்தையும் நாம் அவர்களுக்கு வழங்கவில்லை. மேலும் (அவர்கள் கூறுவது போன்ற வீண் பேச்சுக்களைக் கற்றுக் கொடுக்கும்) எந்த எச்சரிக்கையாளரையும் உமக்கு முன் அவர்களிடம் நாம் அனுப்பவுமில்லை. 
  46. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தங்கள் தூதர்களைப்) பொய்யாக்கினர். நாம் அவர்களுக்கு வழங்கியதில் பத்தில் ஒரு பங்கு(ஆற்றல்) இவர்கள் அடையவில்லை. ஆனால் இவர்கள் என் தூதர்களைப் பொய்யாக்கி விட்டனர். எனவே என்னை மறுத்தது எவ்வாறாயிற்று (என்பதை அவர்கள் பார்க்கட்டும்). ரு5 
  47. நீர் கூறுவீராக: நான் உங்களுக்கு ஓர் அறிவுரை கூறுகிறேன். நீங்கள் இருவர், இருவராகவும், தனித்தனியாகவும் அல்லாஹ்வின் முன் நில்லுங்கள்; பின்னர் சிந்தனை செய்யுங்கள். (இதன்விளைவாக) உங்கள் தோழருக்குப் பைத்தியம் இல்லை; அவர் அண்மையில் வரவிருக்கின்ற கடினமான ஒரு தண்டனையைப் பற்றி எச்சரிப்பவரேயாவார் (என்பதனை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள்). 
  48. நான், உங்களிடம் கேட்ட எந்தக் கூலியாயினும் அது உங்களுக்குரியதேயாகும். எனக்குரிய நற்பலன் அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது, அவன் எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருக்கின்றான் என்று நீர் கூறுவீராக. 
  49. நிச்சயமாக என் இறைவன் உண்மையினால் (பொய்யை) தூள், தூளாக்கி விடுகிறான். மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கு அறிபவனாவான் என நீர் கூறுவீராக. 
  50. உண்மை வந்து விட்டது. பொய்யிற்கு எதையும் போலியாக(க் கூட) படைப்பதற்கோ, அதைத் திரும்பவும் செய்வதற்கோ ஆற்றல் இல்லை என்று நீர் கூறுவீராக14.
  51. நான் தவறான வழியில் இருக்கிறேன் என்றால், நான் தவறான வழியில் இருப்பதன் கேடு என்னையேச் சேரும். நான் நேர்வழியில் இருக்கிறேன் என்றால், என் இறைவன் எனக்கு அறிவித்த இறையறிவிப்பினாலேயே ஆகும். நிச்சயமாக அவன் நன்கு கேட்பவனும், நெருங்கியவனுமாவான். 
  52. (இறைத் தண்டனையைக் கண்டு) அவர்கள் பதற்றமடைவதை, நீர் கண்டால், அப்பொழுது அவர்களுக்குத் தப்பும் வழி இருக்காது. மேலும் அவர்கள் பக்கத்திலுள்ள ஓர் இடத்திலிருந்து பிடிக்கப்படுவார்கள்; 
  53. மேலும் அவர்கள் (இறை வசனமாகிய) இதில் நம்பிக்கை கொள்கிறோம் என்று (அப்போது) கூறுவார்கள். ஆனால் அவர்கள் (இப்பொழுது) இந்த அளவிற்குத் தொலைவில் சென்று விட்டு அதனை (அதாவது நம்பிக்கையை) எவ்வாறு அடைவார்கள்? 
  54. ஏற்கனவே அவர்கள் இதனை மறுத்து விட்டனர். அவர்கள் தொலைவிலிருந்து கொண்டு குழப்பமான கற்பனைகளில் ஈடுபடுகின்றனர். 
  55. இதற்கு முன்னர் இவர்களைப் போன்றவர்களுக்குச் செய்யப்பட்டது போல், இவர்களுக்கும், இவர்களின் விருப்பங்களுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமாக அவர்களும் நிம்மதியின்மையை உண்டாக்கக் கூடிய ஐயத்திற்குள்ளாகியிருந்தனர். ரு6


Powered by Blogger.