9- அத்-தவ்பா

அதிகாரம் : அத்-தவ்பா
அருளப்பட்ட இடம் : மதினா | வசனங்கள் : 129

பிரிவுகள் : 16


  1. இணை வைப்போரில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களோ அவர்களிடமிருந்து அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகிக் கொண்டதாக1 அறிவிக்கப்படுகிறது.
  2. ஆகவே நீங்கள் (அரபு) நாட்டில் நான்கு மாதங்கள் வரைச் சுற்றித் திரிந்து பாருங்கள். உங்களால் அல்லாஹ்வை தோற்கடிக்க இயலாது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் நிராகரிப்பவர்களை இழிவுப்படுத்தியே தீருவான்2 (என்பதனையும் தெரிந்து கொள்ளுங்கள்.)
  3. இம் மாபெரும் ஹஜ்ஜின் நாளில்3 அல்லாஹ்வும் அவனது தூதரும் எல்லா மக்களுக்கும் பகிரங்கமான முறையில் தெரிவிப்பது என்னவென்றால், அல்லாஹ்வும் அவனது தூதரும் இணைவைப்பவர்களி(ன் எல்லா குற்றச்சாட்டுகளி)லிருந்தும் விலகி கொண்டார்கள். எனவே (இந்த அடையாளத்தைக் கண்டு) நீங்கள் கழிவிரக்கங் கொள்வீர்களாயின், உங்களால் அல்லாஹ்வை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள். மேலும் நீர் நிராகரிப்பவர்களிடம், அவர்களுக்கு வேதனையளிக்கக் கூடிய தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது என்று அறிவிப்பீராக.
  4. ஆயினும் இணைவைப்பவர்களுள் உங்களுடன் உடன்படிக்கை செய்து கொண்டு, பின்னர் எவ்வழியிலும் உங்களுடனுள்ள உடன்படிக்கையினை முறிக்காமலும், உங்களுக்கு எதிராக எவருக்கும் உதவி செய்யாமலும் இருப்பவர்களின் உடன்படிக்கையினை, நீங்கள் அவர்களுடைய (உடன்படிக்கைக்குரிய) கால எல்லை வரை முழுமையாக நிறைவேற்றுங்கள். (அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றாதீர்கள்). நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நேசிக்கிறான்.
  5. புனிதமாக்கப்பட்ட அந்த நான்கு மாதங்கள்4 கழிந்துவிட்டால் (ஆனால் இதற்கு முன்னர் முஸ்லிம்களுடன் போர் செய்து கொண்டேயிருந்த அவர்கள் இப்பொழுது கூட உடன்படிக்கை செய்து கொள்ள விரும்பவில்லையாயின்) இணை வைப்பவர்களை நீங்கள் எங்கு கண்டாலும் கொண்டு விடுங்கள். அவர்களை (சிறை) பிடித்துக் கொள்ளுங்கள். அவர்களை (அவர்களின் கோட்டைகளில்) முற்றுகையிடுங்கள். ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களை எதிர்பார்த்து அமர்ந்திருங்கள். ஆனால் அவர்கள் கழிவிரக்கங்கொண்டு, தொழுகையினை நிலைநாட்டி, ஸகாத்துக் கொடுத்தால் நீங்கள் அவர்களின் பாதையை திறந்து விடுங்கள்5. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மீண்டும் மீண்டும் அருள் செய்பவனுமாவான்.
  6. இணை வைப்பவர்களுள் எவராவது உம்மிடம் அடைக்கலம் கோரினால், அவர் அல்லாஹ்வின் வசனத்தைக் கேட்கும் வரை அவருக்கு அடைக்கலம் வழங்குவீராக. பின்னர் அவரை அவருடைய பாதுகாப்பான இடத்தில் சேர்த்து விடுங்கள். ஏனென்றால் அவர்கள் (உண்மையினை) அறியாதவர்களாக இருக்கின்றனர்.ரு1 
  7. நீங்கள் இந்த மஸ்ஜிது ஹராமில் உடன்படிக்கை செய்து கொண்டவர்களைத் தவிர ஏனைய இணை வைப்பவர்களுடன் அல்லாஹ்வாலும் அவனுடைய தூதராலும் எவ்வாறு உடன்படிக்கை செய்து கொள்ள முடியும்?6 அவர்கள் (உங்களுடனுள்ள) தங்கள் உடன்படிக்கைகளில் நிலைத்திருக்கும் வரை நீங்களும் அவருக்களுடனுள்ள உடன்படிக்கையில் நிலைத்திருங்கள். நிச்சயமாக, (உடன்படிக்கையை முறிப்பதிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
  8. (ஆம்: அவ்வாறான இணை வைப்பவர்களுக்கு ஏதாவதொரு சலுகை) எவ்வாறு (காட்ட முடியும்). ஏனென்றால் அவர்கள் உங்களை வென்றுவிட்டால், உங்களுடைய எந்த உறவு முறையையும், உடன்படிக்கையையும் அவர்கள் பொருட்படுத்தமாட்டார்கள். அவர்கள் தங்கள் வாயினால் உங்களை மகிழ்விக்கின்றனர். ஆனால் அவர்கள் உள்ளங்களோ நிராகரிக்கின்றன. அவர்களுள் பெரும்பாலானவர்கள் உடன்படிக்கையை முறிப்பவர்களாயுள்ளனர்.
  9. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பகரமாக மிகவும் அற்ப விலையைப் பெற்றுக் கொண்டு, அவனுடைய வழியிலிருந்து (மக்களைத் தடுத்தனர்). நிச்சயமாக அவர்களின் செயல்கள் மிகக் கெட்டவையாகும்.
  10. அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களின் விஷயத்தில் எவ்வித உறவு முறையையும், உடன்படிக்கையையும் பொருட்படுத்தவில்லை. அவர்கள் எல்லையை மீறி நடப்பவர்கள் ஆவர்.
  11. எனவே அவர்கள் கழிவிரக்கங்கொண்டு, தொழுகைகளை நிலைநாட்டி, ஸகாத்து கொடுத்தால், மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். மேலும் நாம் (எம்முடைய) அடையாளங்களை அறிவுள்ள சமுதாயத்தினருக்கு மிகத் தெளிவாக விளக்குகின்றோம்.
  12. அவர்கள் தங்கள் உடனபடிக்கைக்குப் பின்னர் தங்களுடைய சத்தியங்களை முறித்து உங்களுடைய மார்க்கத்தைப் பற்றித் தாக்கி (பேசி)னால்8 (அத்தகு) நிராகரிப்பின் தலைவர்களுடன் (தீமைகளிலிருந்து) அவர்கள் விலகிக் கொள்வதற்காகப் போர் புரியுங்கள். நிச்சயமாக அவர்களின் சத்தியங்களுக்கு எந்த விதமான உறுதியுமில்லை.
  13. (நம்பிக்கை கொண்டவர்களே!) தங்கள் சத்தியங்களை முறித்து, தூதரை (அவருடைய இல்லத்திலிருந்து) வெளியேற்ற முடிவு செய்து, (போர் தொடுப்பதில்) உங்களை விட தாங்களே முந்திக் கொண்ட சமுதாயத்தினருடன் நீங்கள் போரிட வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகின்றீர்களா? ஆனால் நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாயின், நீங்கள் அஞ்சுவதற்கு மிக உரியவன் அல்லாஹ் என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்.
  14. அவர்களுடன் போரிடுங்கள். இதனால் அல்லாஹ் உங்கள் கைகளால் அவர்களுக்குத் தண்டனை அளிப்பான். மேலும் அவர்களை இழிவு படுத்துவான். மேலும் அவர்களுக்கு எதிராக வெற்றி கிடைக்க உங்களுக்கு உதவுவான். மேலும் நம்பிக்கை கொண்ட மக்களின் உள்ளங்களுக்கு(த் துன்பத்திலிருந்தும் பயத்திலிருந்தும்) விடுதலையளிப்பான்.
  15. மேலும் அவர்களின் உள்ளங்களிலுள்ள கோபத்தை அகற்றுவான். தான் விரும்பியவருக்கு அல்லாஹ் அருள் செய்வான். அல்லாஹ் நன்கு அறிபவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  16. உங்களுள் அறப்போர் செய்தவர் யார் என்பதையும் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களையும் விட மேலாக (நிராகரிப்பவர்களை) ஆப்த நண்பராக்கிக் கொண்டவர் யார் என்பதையும் அல்லாஹ் வெளிப்படுத்தாதமலிருக்கின்ற நிலையில் நீங்கள் இப்படியே விட்டு விடப்படுவீர்கள் என்று நினைக்கின்றீர்களா? மேலும் அல்லாஹ் உங்கள் செயல்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவனாவன். ரு2 
  17. (அத்தகு) இணைவைப்பவர்கள் தங்களுக்கு எதிராகத் (தாங்களே) நிராகரிப்பிற்குச் சாட்சி கூறிக்கொண்டிருக்கின்ற நிலையில் அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை நிர்வகிக்கும் (எந்த) உரிமை(யும்) அவர்களுக்குக் கிடையாது. இத்தகையவாகளின் செயல்கள் வீணாகி விட்டன. மேலும் இவர்கள் நீண்ட நெடுங்காலம் வரை நெருப்பில் வாழ்ந்து கொண்டிருப்பர். 
  18. அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு தொழுகைகளை நிலைநாட்டி, ஸகாத்து கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் அஞ்சாதவர் மட்டுமே அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை நிர்வகிப்பார். இத்தகையவர்களே விரைவில் வெற்றிப் பெறக் கூடியவர்கள்.
  19. ஹஜ்ஜு செய்பவர்களுக்குத் தண்ணீர் வழங்குதல், தூய பள்ளியைப் பராமரித்தல் ஆகியவற்றை, அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தவர்க(ளின் பணிக)ளைப் போன்றதாக நீங்கள் கருதிக் கொண்டீர்களா?9 இவர்கள் (இரு சாராரும்) அல்லாஹ்விடத்தில் (ஒருபோதும்) சமமானவர்கள் இல்லை. அநீதி இழைக்கும் சமுதாயத்தினர்களுக்கு அல்லாஹ் ஒரு போதும் வழி காட்டமாட்டான்.
  20. நம்பிக்கை கொண்டு இடம் பெயர்ந்து சென்று (பின்னர்) அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களையும், தங்கள் உயிர்களையும் கொண்டு அறப்போர் செய்தவர்கள் அல்லாஹ்விடத்தில் பதவியில் உயர்ந்தவர்கள் ஆவர். மேலும் இவர்களே வெற்றி பெறுபவர்களாவர்.
  21. அவர்களின் இறைவன் அவர்களுக்குத் தனது கருணை மற்றும் திருப்தி குறித்து நற்செய்தி கூறுகின்றான். மேலும் அவர்களுக்கு நிலையான அருட்கொடைகள் கொண்டா சுவர்க்கங்கள் உள்ளன.
  22. (அவர்கள்) அவற்றில் வாழ்ந்து கொண்டே இருப்பர். நிச்சயமாக அல்லாஹ்விடம் மாபெரும் நற்பலன் உள்ளது.
  23. நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் மூதாதையர்களும் உங்கள் சகோதரர்களும் நம்பிக்கையை விடவும், நிராகரிப்பை அதிகமாக நேசிப்பார்களாயின், நீங்கள் அவர்களை (உங்களுடைய உண்மையான) நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுள் எவர்கள் அவர்களிடம் அவ்வாறு நட்புக் கொள்வார்களோ, நிச்சயமாக அவர்கள் அநீதி இழைப்பவர்களாவர்.
  24. நீர் (நம்பிக்கை கொண்டவர்களிடம்) கூறுவீராக: உங்கள் மூதாதையர்களும் உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன் பிறப்புகளும், உங்கள் மனைவிகளும், உங்கள் குடும்பத்தினர்களும் நீங்கள் சம்பாதித்த பொருள்களும், நஷ்டமடைந்து விடுமோ என்று நீங்கள் அஞ்சும் வணிகங்களும், நீங்கள் விரும்பும் வீடுகளும், அல்லாஹ்வை விடவும், அவனுடைய தூதரை விடவும் அவனுடைய வழியில் அறப்போர் செய்வதை விடவும் உங்களுக்கு விருப்பமிக்கதாக இருப்பின் அல்லாஹ் முடிவை வெளியாக்கும் வரை நீங்கள் எதிர்பார்த்து இருங்கள். கட்டுப்படாத மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். ரு3 
  25. அநேக களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்துள்ளான். (குறிப்பாக) ஹுனைன் போரில், அப்போது உங்களைப் பெருமை கொள்ள வைத்த உங்களின் பெரும்பான்மை உங்களுக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை. மேலும் பூமி விரிவானதாயிருந்தும் அது உங்களுக்குக் கூறுகியிருந்தது. பின்னர் நீங்கள் புறமுதுகு காட்டி திரும்பிவிட்டீர்கள்.
  26. பின்னர் அல்லாஹ் தனது தூதருக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் தனது அமைதியினை இறக்கினான். மேலும் நீங்கள் காணாத படைகளையும் இறக்கி நிராகரிப்பவர்களுக்கு தண்டனையளித்தான். இதுவே நிராகரிப்பவர்களுக்குரிய கூலியாகும்.
  27. (அத்தகு தண்டனைக்குப்) பின்னர், தான் விரும்பியவருக்கு அல்லாஹ் கருணை காட்டுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை செய்பவனுமாவான்.
  28. நம்பிக்கை கொண்டவர்களே! இணைவைப்பவர்கள் நிச்சயமாக (மனத்) தூய்மையற்றவர்களாவர். எனவே அவர்கள் தங்களின் இவ்வருடத்திற்கு பின்னர் தூய பள்ளியை நெருங்க வேண்டாம். நீங்கள் வறுமைக்கு பயந்தால்10 அல்லாஹ் நாடினால் கட்டாயம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானம் உள்ளவனுமாவான்.
  29. வேதம் வழங்கப் பெற்றவர்களில் அல்லாஹ்விடத்தும், மறுமை நாளிடத்தும் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்ததை அனுமதி அற்றது எனக்கொள்ளாமலும், உண்மையான மார்க்கத்தைப் பின்பற்றாமலும் இருப்பவர்களுடன் அவர்கள் தங்கள் விருப்பத்துடன் கப்பம் கட்டி உங்களுக்குப் பணிந்து விடக்கூடியவர்களாகும்வரை, நீங்கள் போர் புரியுங்கள்11. ரு4
  30. உஸைர், அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர். மேலும் மஸீஹ் அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது அவர்களுடைய வாய்க் கூற்றேயன்றி வேறில்லை. தங்களுக்கு முன்னுள்ள நிராகரிப்பாளர்களின் வாதத்தையே அவர்களும் பின்பற்றுகின்றனர். அல்லாஹ் அவர்களை அழித்து விடுவானாக. அவர்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு தூரமாகச் சென்று கொண்டிருக்கின்றனர் (பாருங்கள்).
  31. அவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் சமய அறிஞர்களையும், துறவிகளையும் இவ்வாறே மர்யத்தின் மகன் மஸீஹையும் தங்கள் கடவுளர்களாக ஆக்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்றே அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. அவனையன்றி வேறெதுவும் வணக்கத்திற்குரியது அல்ல. அவர்கள் வைக்கின்ற இணையை விட்டும் அவன் தூயவன்.
  32. அல்லாஹ்வின் ஒளியினை அவர்கள் தங்கள் வாயினால் (ஊதி) அணைத்துவிட விரும்புகின்றனர். நிராகரிப்பவர் எவ்வளவு வெறுத்த போதிலும், அல்லாஹ் தனது ஒளியினை முழுமையாக்குவதைத் தவிர மற்றெல்லாவற்றையும் மறுக்கின்றான்.
  33. அவனே தன்னுடைய தூதரை நேர்வழியுடனும், உண்மையான மார்க்கத்துடனும் (ஏனைய) எல்லா சமயங்களின் மீதும் வெற்றி பெறச் செய்வதற்காக அனுப்பினான். (இதை) இணை வைப்பவர்கள் எவ்வளவு வெறுத்தாலும் சரியே.
  34. நம்பிக்கை கொண்டவர்களே! பெரும்பாலான மதகுருக்களும், துறவிகளும் மக்களின் பொருள்களை நியாயமின்றி விழுங்கி விடுகின்றனர். மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். தங்கத்தையும், வெள்ளியையும் குவித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாதிருப்பவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையைப் பற்றி நீர் அறிவிப்பீராக.
  35. (சேகரித்து வைக்கப்பட்ட தங்கமும், வெள்ளியுமாகிய) இதனை நரக நெருப்பில் காய்ச்சப்படும் நாளில், அதனைக் கொண்டு அவர்களின் நெற்றிக்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (அவர்களிடம்) இது நீங்கள் உங்களுக்காகச் சேர்த்து வைத்த பொருளாகும். எனவே நீங்க சேர்த்து வைத்தவற்றைச் சுவைத்துப் பாருங்கள் (என்று கூறப்படும்)
  36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மாதங்களின் எண்ணிக்கை, பன்னிரெண்டு மாதங்களேயாகும்12. இது வானங்களையும் பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலிருந்து அவனால் விதிக்கப்பட்ட நியதியாகும். இவற்றுள் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இது நிலையான நெறியாகும். எனவே நீங்கள் இவற்றில் உங்களுக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதீர்கள்13. இணைவைப்பவர்கள் எல்லாரும் உங்களுடம் போர் செய்வது போன்று நீங்களும் அவர்கள் எல்லாருடனும் போர் செய்யுங்கள். அல்லாஹ் (இறை) அச்சமுடையோருடன் இருக்கின்றான் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
  37. நிச்சயமாக (புனித மாதத்தை) ஒத்திப்போடுகின்ற14 (பழக்கம்) நிராகரிப்பி(ன் காலத்தி)ன் அத்துமீறலாகும். இதனால் நிராகரிப்பவர்கள் வழிதவறுகின்றனர். அவர்கள் அதனை ஒரு வருடத்தில் ஆகாததாகவும் ஒரு வருடத்தில் ஆகுமானதாகவும் ஆக்கிக் கொள்கின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய (மாதங்களின்) எண்ணிக்கையைச் சரி செய்து கொள்வதற்காக (அவ்வாறு ஆக்கிக் கொள்கின்றனர்.) இவ்வாறு அல்லாஹ் விலக்கியுள்ளதை அவர்கள் ஆகுமானதாக்கிக் கொள்கின்றனர். அவர்களுடைய செயல்களின் தீமை அவர்களுக்கு அழகியதாக(க் காட்ட)ப்படுகிறது. மேலும் அல்லாஹ் நிராகரிக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை. ரு5  
  38. நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் யாவரும் ஒன்று திரண்டு) அல்லாஹ்வின் வழியில் போர் செய்வதற்குப் புறப்படுங்கள் என்று உங்களிடம் கூறப்பட்டால், நீங்கள் உங்கள் நாட்டுப் (பற்று) பக்கம் சாய்ந்து விட உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நீங்கள் மறுமையை விட உலக வாழ்வை விரும்புகின்றீர்களா? (அவ்வாறாயின்) உலக் பொருள் மறுமையுடன் ஒப்பிடும்போது அற்பமானதே.
  39. நீங்கள் (யாவரும் ஒன்று திரண்டு அல்லாஹ்வின் வழியில் போரிடுவதற்குப்) புறப்படவில்லையாயின் உங்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையளிப்பான், மேலும் உங்களுக்குப் பதிலாக வேறொரு சமுதாயத்தை அவன் கொண்டு வருவான். உங்களால் அவனுக்கு எந்தத் தீங்கும் செய்ய இயலாது. மேலும் அல்லாஹ் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவன் ஆவான்.
  40. நீங்கள் இந்தத் தூதருக்கு உதவி செய்யவில்லையாயின், நிராகரிப்பவர்கள் அவரை இருவருள் அந்த ஒருவராக இருந்த நிலையில் வெளியேற்றிய நேரத்திலும், அவ்விருவரும் குகையில் இருந்த போது அவர் தம்முடைய நண்ப(ர் அபூ பக்க)ரிடம் கவலைப்படாதீர் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் என்று கூறிக்கொண்டிருந்த நேரத்திலும் அல்லாஹ் அவருக்கு உதவி செய்துள்ளான் (என்பதனை நினைவில் கொள்ளுங்கள்). பின்னர் அல்லாஹ் அவருக்குத் தனது அமைதியினை இறக்கி நீங்கள் காணாத படைகளைக் கொண்டு அவன் அவருக்கு உதவி செய்து, நிராகரிப்பவர்களின் வார்த்தையை மிகவும் கீழ்த்தரமானதாக்கிவிட்டான். அல்லாஹ்வின் வார்த்தையே எப்போதும் மிக உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  41. (நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் நலிவுடனோ, வலுவுடனோ இருப்பினும் (அறப்போர் செய்வதற்காகப்) புறப்படுங்கள். நீங்கள் உங்கள் பொருள்களையும் உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்யுங்கள். நீங்கள் அறிந்திருந்தால், இது உங்களுக்கு மிக்க நன்றாகும்.
  42. விரைவில் கிடக்கிக்கூடிய பயனாகவோ, சிறிய பயணமாகவோ இருந்திருப்பின், அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார். ஆனால் நீண்ட தூரப் பயணமாக இருக்குமென்று அவர்களுக்குத் தோன்றியது. (இப்பொழுது நீர் திரும்பியதன் பின்னர்) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து, எங்களால் முடிந்திருப்பின், கட்டாயம் நாங்கள் உங்களுடன் புறப்பட்டிருப்போம் என்று கூறுவார்கள்.. அவர்கள் தங்களையே அழிவிற்குள்ளாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் பொய்யர்கள் என்பதனை அல்லாஹ் அறிகின்றான். ரு6
  43. அல்லாஹ் உம்முடைய தவறி(ன் தீய விளைவி)னை நீக்கி விட்டு, உமக்குக் கண்ணியத்தை வழங்கினான். உண்மையுரைப்பவர்கள் (யார் என்று) உமக்குத் தெரிந்து, பொய்யுரைப்பவர்களை நீர் அறியாத வரையில் அவர்களுக்கு ஏன் அனுமதி வழங்கினீர்?
  44. அல்லாஹ்விடத்தும், மறுமை நாளிடத்தும் நம்பிக்கை கொள்பவர்கள், தங்கள் பொருள்களையும் தங்கள் உயிர்களையும் கொண்டு ஆறப்போற் செய்வதிலிருந்து விலகிக் கொள்ள உம்மிடம் அனுமதி கோரமாட்டார்கள். அல்லாஹ் இறையச்சமுடையவர்களை நன்கு அறிபவனாவான்.
  45. அல்லாஹ்விடத்தும் மறுமை நாளிடத்தும் நம்பிக்கை கொள்ளாதவர்களும், ஐயம் நிறைந்த உள்ளமுடையோர்களும் மட்டுமே பின்தங்கி விடுவதற்கு அனுமதிகோருவர். எனவே அவர்கள் தங்களின் ஐயப்பாட்டில் இங்குமங்குமாகத் தடுமாறுகின்றனர்.
  46. அவர்கள் (போருக்குப்) புறப்படுவதற்கு உறுதியான நாட்டம் கொண்டிருப்பார்களாயின், அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பார்கள். ஆனால் (போருக்கு) அவர்கள் புறப்படுவதனை அல்லாஹ் விரும்புவதில்லை. எனவே தங்கள் இடத்திலேயே அவர்களை அவன் உட்கார வைத்துவிட்டான். உட்கார்ந்து கொண்டேயிருங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டது. (அதாவது நிராகரிப்பவர்களான அவர்களின் நண்பர்கள் கூறினார்கள்.)
  47. அவர்கள் உங்களுடன் இணைந்து புறப்பட்டிருப்பார்களாயின், தீமையைத் தவிர உங்களுக்குச் சிறிதும் உதவி செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் உங்களுக்கிடையே (குழப்பத்தை உருவாக்குவதற்காக) அலைந்து திரிகின்றனர். உங்களுக்குள் குழப்பத்தை உருவாக்க விரும்புகின்றனர். அவர்களுக்(குக் கூறுவதற்)காக (செய்திகளை) உன்னிப்பாகக் கேட்பவர்கள் சிலரும் உங்களுள் இருக்கின்றனர். அநீதியிழைப்பவர்களை அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
  48. அவர்கள் இதற்கு முன்னரும் குழப்பத்தை உருவாக்க நாடியிருந்தனர். உமக்குரிய சூழ்நிலைகளை(ப் பல்வேறு விதங்களில்) மாற்றினர். இறுதியில் உண்மை வந்துவிட்டது. அவர்கள் வெறுப்போராக இருந்தும் அல்லாஹ்வின் தீர்ப்பு வெளியாயிற்று.
  49. அவர்களைச் சார்ந்த (நயவஞ்சகர்களான) சிலர், (பின்தங்கி விட) எனக்கு நீர் அனுமதி வழங்குவீராக; என்னை(ப் போருக்குச் செல்ல வைத்து)ச் சோதனைக்கு ஆளாக்கி விடாதிருப்பீராக என்று கூறுகின்றனர். கவனமாகக் கேளுங்கள்; ஏற்கனவே இவர்கள் குழப்பத்தில் வீழ்ந்து கிடக்கின்றனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை அழித்துவிடக் கூடியதாகும்.
  50. உமக்கு ஏதாவது ஒரு பயன் ஏற்பட்டால், அது அவர்களுக்குத் தீயதாகப்படுகின்றது. உமக்கு ஏதாவதொரு துன்பம் ஏற்பட்டால், நம்மை எதிர்நோக்கி வரக்கூடியவைகளை சமாளிப்பதற்கான ஏற்பாட்டினை நாம் ஏற்கனவே செய்து விட்டோமே என்று கூறி அவர்கள் மகிழ்ச்சி அடைந்தவர்களாய்15 திரும்பிச் சென்று விடுகின்றனர்.
  51. நீர் (அவர்களிடம்) கூறுவீராக; அல்லாஹ் எங்களுக்கு விதித்திருப்பதுதான் எங்களுக்கு ஏற்படும். அவன் எங்கள் பாதுகாவலனாவான். மேலும் நம்பிக்கையார்கள் அல்லாஹ்விடத்திலேயே நம்பிக்கை வைத்தல் வேண்டும்.
  52. நீர் (அவர்களிடம்) கூறுவீராக; நீங்கள் எங்களுக்காக இரண்டு நன்மைகளுள் ஒன்றினைத் தவிர வேறெதனையும் எதிர்பார்ப்பதில்லை.16 நாங்கள், உங்களுக்காக அல்லாஹ் தன்னிடமிருந்தோ, எங்கள் கைகளினாலோ உங்களுக்குத் தண்டனை வழங்குவான் என்பதனைத் தான் எதிர்பார்க்கின்றோம். எனவே நீங்களும் எதிர்பாருங்கள். நாங்களும் உங்களுடன் எதிர்பார்க்கின்றோம்.
  53. நீர் (அவர்களிடம்) கூறுவீராக; நீங்கள் விருப்புடனோ அல்லது வெறுப்புடனோ செலவு செய்தாலும், எவ்வகையிலானாலும் உங்களிடமிருந்து(ள்ள தானம்) ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஏனென்றால் நீங்கள் கட்டுப்படாத மக்களாக இருக்கின்றீர்கள்.
  54. அவர்களுடைய தானங்கள் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணம், அல்லாஹ்வையும் அவனதுடைய தூதரையும் அவர்கள் நிராகரிப்பது, தொழுகையினை மிகுந்த சோம்பலுடன் அவர்கள் நிறைவேற்றுவது, இறைவழியில் வெறுப்புடன் அவர்கள் செலவு செய்வது ஆகியவற்றை தவிர வேறொன்றுமில்லை.
  55. எனவே, அவர்களின் பொருள்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு நீர் வியப்படைய வேண்டாம். அல்லாஹ் அவற்றினால் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் தண்டனை வழங்கவும், அவர்கள் நிராகரிப்பவர்களாயிருக்கும் நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிந்து விடவுமே நாடுகின்றான்.
  56. அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களென்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகின்றனர். ஆனால் அவர்களோ உங்களைச் சார்ந்தவர்களில்லை. மாறாக அவர்கள் மிகவும் கோழைகளான கூட்டத்தினராவர்.
  57. அவர்கள் ஏதாவதொரு தஞ்சம் புகுமிடத்தையோ, மறைந்திருப்பதற்குரிய குகைகளையோ, சுரங்கத்தையோ, கண்டுவிட்டால் அவர்கள் அதன்பால் திரும்பி விரைந்து சென்றுவிடுவார்கள்.
  58. (நயவஞ்சகர்களான) அவர்களில் சிலர் தானங்களைக் குறித்து உம்மீது குற்றஞ்சாட்டுகின்றனர். அந்த தானங்களிலிருந்து அவர்களுக்குச் சிறிதளவு கொடுக்கப்பட்டால், அவர்கள் திருப்தியடைந்து விடுகின்றனர். அவற்றிலிருந்து அவர்களுக்குச் சிறிதும் கொடுக்கப்படவில்லையாயின், உடனே அவர்கள் வெறுப்படைக்கின்றனர்.
  59. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களுக்கு வழங்கியதில் அவர்கள் திருப்தியடைந்து, அல்லாஹ்வும் அவன் தூதரும் போதுமானவர்கள்; அல்லாஹ் தன்னருளால் மேலும் நமக்கு வழங்குவான்; நாங்கள் அல்லாஹ்வுக்குப் பணியக்கூடியவர்களாவோம் என்று அவர்கள் கூறியிருப்பார்களாயின் (இது அவர்களுக்கு மிகவும் சிறந்ததாக இருந்திருக்கும்.)ரு7 
  60. ஸகாத் (எனும் தானங்கள்) வறியவர்கள், ஏழைகள் அத(னை ஒன்று சேர்ப்பத)ற்காக செயல்படுபவர்கள், உள்ளங்கள் ஒன்றி ஆறுதல் பெறத் தகுதியுடையவர்கள், கைதிகள், கடன்பட்டவர்கள், அல்லாஹ்வின் வழியில் (போர் செய்பவர்கள்) வழிப்போக்கர்கள் ஆகியவர்களுக்கு மட்டுமே உரியனவாகும். இது அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். மேலும் அல்லாஹ் நன்கு அறிபவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  61. (நயவஞ்சகர்களான) அவர்களில் சிலர் நபியைத் துன்புறத்துகின்றனர். மேலும் அவர் செவி17(யாகவே இருக்கின்றார்) எனக் கூறுகின்றனர். நீர் கூறுவீராக: அவர் உங்களுக்கு நன்மையினையே கேட்கின்ற காதாக இருக்கின்றார்18. அவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கின்றார். மேலும் நம்பிக்கை கொள்கின்றார். மேலும் நம்பிக்கையாளர்களையே நம்புகின்றார். மேலும் உங்களுள் நம்பிக்கையாளர்களுக்குக் கருணையாகவும் விளங்குகின்றார். அல்லாஹ்வின் தூதரைத் துன்புறுத்துபவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையுள்ளது.
  62. அவர்கள் உங்களை மகிழ்விப்பதற்காக அல்லாஹ்வின் மீது ஆணையிடுகின்றனர். ஆனால் (நயவஞ்சகர்களாகிய) அவர்கள் உண்மையான நம்பிக்கையாளர்களாயின், அவர்களால் மகிழ்விக்கப்படுவதற்கு மிகவும் உரிமை பெற்றவர்கள், அல்லாஹ்வும், அவனுடைய தூதருமாவார்கள்.
  63. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவனுக்கு நரக நெருப்பு (விதிக்கப்பட்டு) உள்ளது. அதில் நெடுங்காலம் வாழ்ந்து வருவான் என்பது அவர்களுக்குத் தெரியாதா? இது மாபெரும் இழிவாகும்.
  64. தங்களின் உள்ளங்களிலுள்ளவற்றைப் பற்றித் தங்களை(யும் முஸ்லிம்களை)யும் எச்சரிக்கக்கூடிய ஏதாவதொரு அத்தியாயம் தங்களுக்கு எதிராக இறக்கப்படுமோ என்று நயவஞ்சகர்கள் (ஏளனமாக) பயத்தை காட்டுகின்றனர். நீர் கூறுவீராக: நீங்கள் ஏளனம் செய்து கொண்டே இருங்கள். நீங்கள் (வெளிவேடமாக) அஞ்சுகிறதை நிச்சயமாக அல்லாஹ் வெளியாக்கிவிடுவான்.
  65. நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் நாங்கள் கேலியாகவும் விளையாட்டாகவும் தான் பேசிக் கொண்டிருந்தோம் என்றே பதிலளிப்பார்கள். நீர் அவர்களிடம், அல்லாஹ்வையும் அவனுடைய அடையாளங்களையும், அவனுடைய தூதரையுமா நீங்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தீர்கள் என்று கேட்பீராக.
  66. இப்பொழுது நீங்கள் பொய்க் காரணம் சொல்லாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நிராகரித்து விட்டீர்கள். (எனவே அதற்குரிய தண்டனையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.) உங்களுள் ஒரு பிரிவினரை நாம் மன்னித்தோம் என்றால் மற்றொரு பிரிவினர் குற்றவாளிகளாயிருந்ததால், நாம் அவர்களுக்குத் தண்டனை வழங்கினோம். ரு8
  67.  நயவஞ்சகர்களான ஆண்களும் பெண்களும் தங்களுக்கிடையே ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டவர்களாவர். அவர்கள் தீயவற்றைக் கொண்டு ஏவுகின்றனர். நன்மையை தடுக்கின்றனர். (இறைவழியில் செலவு செய்வதிலிருந்து) தங்கள் கைகளைத் தடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வை மறுத்து விட்டனர். ஆகவே அல்லாஹ்வும் அவர்களை விட்டுவிட்டான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் கட்டுப்படாதவர்கள் ஆவர்.
  68. நயவஞ்சகர்களான ஆண்களுக்கும், பெண்களுக்கும், நிராகரிப்பவர்களுக்கும், அல்லாஹ் நரக நெருப்பை வாக்களித்துள்ளான். அவர்கள் அதில் நெடுங்காலம் வாழ்ந்து கொண்டேயிருப்பர். அவர்களுக்கு அதுவே போதுமானதாகும். மேலும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான். மேலும் அவர்களுக்கு நிலையான தண்டனை (விதிக்கப்பட்டு) உள்ளது.
  69. (நயவஞ்சகர்களே!) உங்களுக்கு முன்னுள்ளவர்கள் (தண்டனை பெற்றது) போன்று, (நீங்களும் தண்டனை பெறுவீர்கள்.) அவர்கள் உங்களை விடவும் வலிமைமிக்கவர்களாகவும், செல்வங்களையும், பிள்ளைகளையும் மிகுதியாகப் பெற்றவர்களாயுமிருந்தனர். ஆகவே அவர்கள் தங்கள் பங்கிற்கேற்ப பயனடைந்தனர். எனவே உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்கள் பங்கிற்கேற்ப பயனடைந்தது போன்று, நீங்களும் உங்கள் பங்கிற்கேற்ப பயனடைந்துள்ளீர்கள். அவர்கள் எள்ளி நகையாடியது போன்று நீங்களும் எள்ளி நகையாடியுள்ளீர்கள். அவர்கள் செயல்கள் இவ்வுலகிலும், மறு உலகிலும் வீணாகி விட்டன. மேலும் இழப்பிற்குரியோர் இவர்களே.
  70. அவர்களுக்கு முன்னுள்ளவர்களான நூஹுடைய சமுதாயத்தினர், ஆது, ஸமூது சமுதாயத்தினர், இப்ராஹீமுடைய சமுதாயத்தினர், மத்யன் மக்கள் மற்றும் அழிக்கப்பட்ட ஊரார் (லூத்து நபியின் சமுதாயன்) இவர்களைப் பற்றிய செய்திகள் அவர்களிடம் வரவில்லையா? அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அடையாளங்களைக் கொண்டு வந்தனர். (ஆனால் அவர்கள் நிராகரித்தனர். இதனால் தண்டனை பெற்றனர்.) அல்லாஹ் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தங்களுக்கு(த் தாங்களே) அநீதி இழைத்துக் கொண்டனர்.
  71.  நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும் தங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் நண்பர்களாவர். அவர்கள் நல்லவற்றைக் கொண்டு ஏவுகின்றனர். தீயவற்றிலிருந்து தடுக்கின்றனர். தொழுகையை நிலைநாட்டுகின்றனர். ஸகாத்து கொடுக்கின்றனர். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்கின்றனர். இவர்களுக்கே அல்லாஹ் கருணை காட்டுவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  72. அல்லாஹ் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சுவர்க்கங்களை வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்க்ல அவற்றில் என்றென்றும் வாழ்வர். மேலும் நிரந்தரமான சுவர்க்கங்களில் தூய்மையான இல்லங்களை(யும் வாக்களித்துள்ளான்.) மேலும் (அவர்களுக்குக் கிடைக்கவிருக்கின்ற) அல்லாஹ்வின் திருப்தியே எல்லாவற்றையும் விட மிகப் பெரியது. இதுவே (மா)பெரும் வெற்றியாகும். ரு9    
  73. நபியே! நிராகரிப்பவர்களுடனும், நயவஞ்சகர்களுடனும், அறப்போர் நிகழ்த்துவீராக. மேலும் அவர்களுக்கு எதிரில் கடுமையாக இருங்கள். அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அது (தங்குவதற்கு) மிகக் கெட்டது.
  74. தாங்கள் (தீய வார்த்தை) எதனையும் கூறவில்லை என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிடுகின்றனர். ஆனால் அவர்களோ நிராகரிப்பிற்குரிய வார்த்தையினைக் கூறியுள்ளனர். மேலும் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் பின்னர் நிராகரித்துள்ளனர். மேலும் தங்களால் பெறமுடியாதவற்றை விரும்பினர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களின் அருளால் முஸ்லிம்களைச் செல்வந்தர்களாக்கினர் என்பதற்காகவே (முஸ்லிம்களாகிய) அவர்களிடம் வெறுப்பைக் காட்டுகின்றனர். எனவே அவர்கள் கழிவிரக்கங்கொள்வார்களாயின், அது அவர்களுக்கு நன்றாக இருந்திருக்கும். அவர்கள் புறக்கணித்து விட்டுச் சென்று விடுவார்களாயின், அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் வேதனையளிக்கக்கூடிய தண்டனை வழங்குவான். இவ்வுலகிலும் மறு உலகிலும் வேதனையளிக்கக்கூடிய தண்டனை வழங்குவான். இவ்வுலகில் எவரும் அவர்களுக்கு நண்பராகவோ உதவி செய்பவராகவோ இருக்கமாட்டார்.
  75. அவர்களுள் சிலர், (அல்லாஹ்வாகிய) அவன் தன்னருளால் எங்களுக்குச் சிறிது வழங்கினால், கட்டாயமாக நாங்கள் அவனுடைய வழியில் தானம் செய்து நிச்சயமாக நாங்கள் நல்லவர்களாகி விடுவோம் என்று அல்லாஹ்விடம் வாக்குறுதியளிப்பவர்களும் இருக்கின்றனர்.
  76. ஆனால் அவன் தான் அருளிலிருந்து அவர்களுக்கு வழங்கியபோது அதில் கஞ்சத்தனம் செய்தனர். மேலும் அவர்கள் புறக்கணித்தவர்களாக சென்று விட்டனர்.
  77. ஆகவே அவர்கள் இறைவனிடம் அளித்த வாக்குறுதிக்கு மாறு செய்ததானாலும் அவர்கள் பொய் கூறியதனாலும் அவர்கள் அவனைச் சந்திக்கும் நாள்வரை அவர்களின் உள்ளங்களில் நயவஞ்சகம் (தொடர்ந்து) இருக்குமாறு அவன் செய்து விட்டான்.
  78. அல்லாஹ் அவர்களின் இரகசியங்களையும், அவர்களின் (பகிரங்கமான) கலந்தாலோசிப்பையும் அறிகின்றான் என்பதும், அல்லாஹ் மறைவானவற்றையெல்லாம் முழுமையாக அறிகின்றான் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லையா?
  79. நம்பிக்கை கொண்டவர்களுள் மகிழ்ச்சியுடன் தாராளமாகத் தானம் வழங்குபவர்களைப் பற்றியும், தங்களின் (கடின) உழைப்பால் பெறுவதைத் தவிர (வேறு) எதனையும் வழங்காதவர்கள் பற்றியும் குற்றங்குறை கூறுபவர்கள் (நயவஞ்சகர்களாகிய) இவர்களேயாவர். எனவே அ(வ்வாறு  தியாகம் செய்ப)வர்களை (நயவஞ்சகர்களாகிய) இவர்கள் ஏளனம் செய்கின்றனர். அல்லாஹ் அவர்களின் ஏளனத்திற்குத் தண்டனை வழங்குவான். மேலும் அவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனை உண்டு.
  80. நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக்க் கோரினாலும் அல்லது கோராதிருந்தாலும் (இரண்டும் அவர்களுக்குச் சமமே.) நீர் அவர்களுக்காக எழுபது தடவை பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான். இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்ததேயாகும். மேலும் கட்டுப்படாத சமுதாயத்தினருக்கு அல்லாஹ் ஒருபோதும் வெற்றிற்குரிய பாதையினைக் காட்டமாட்டான். ரு10
  81. (போருக்கு செல்லாமல்) பின் தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்குப் பின்னால் தங்கள் இடத்தில் அமர்ந்திருப்பதில் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் தங்கள் பொருள்களையும், தங்கள் உயிர்களையுங் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்வதை வெறுத்தனர். (ஒருவர் மற்றொருவரிடம்) வெயிலில் (போர் செய்வதற்கு ஒன்று திரண்டு) வெளியேறாதீர்கள் எனக் கூறினர். நீர் (அவர்களிடம்) நரக நெருப்பு (இந்த வெயிலை விடவும்) மிகக் கடினமானதாகும் என்று கூறுவீராக. அந்தோ! அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!
  82. எனவே அவர்கள் (ஏமாற்றியதற்காகக்) குறைவாகச் சிரிக்க வேண்டும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டதற்கு பிரதிபலனாக அதிகமாக அழ வேண்டும்.
  83. பின்னர் அல்லாஹ் அவர்களுள் ஒருசாராரிடம் உம்மைத் திருப்பிக் கொண்டு வந்து, அவர்கள் (வருங்காலத்தில் ஏதாவதொரு) போருக்குச் செல்வதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் (வருங்காலத்தில் போருக்காக) என்னுடன் ஒரு போதும் வெளியேற மாட்டீர்கள். ஒரு போதும் நீங்கள் என்னுடன் இணைந்து பகைவருடன் போரிடமாட்டீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக நீங்கள் முதன் முறை (பின்தங்கி) உட்கார்ந்திருப்பதில் திப்தியடைந்து விட்டீர்கள். எனவே (வருங்காலத்தில் எப்போதும்) பின்தங்கியிருப்பவர்களுடன் நீங்களும் உட்கார்ந்திருங்கள் என்று கூறுவீராக.
  84. அவர்களுள் எவர் மரணமடைந்து விட்டாலும் அவருக்காக நீர் ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழ வேண்டாம். அவரது கல்லறையில் (பிரார்த்தனை செய்ய) நிற்கவும் வேண்டாம். ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்தனர். மேலும் அவர்கள் கட்டுப்படாத நிலையிலேயே மரணமடைந்தனர்.
  85. அவர்களுடைய பொருள்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை வியப்பிற்குள்ளாக்க வேண்டாம். அல்லாஹ் அவற்றின் மூலம் அவர்களுக்கு இவ்வுலகில் தண்டனை கொடுக்கவும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கின்ற நிலையிலேயே அவர்களின் உயிர்கள் பிறியவுமே நாடுகிறான். 
  86. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்: அவனுடைய தூதருடன் இணைந்து அறப்போர் செய்யுங்கள் என்று (கட்டளையிடும்) ஓர் அத்தியாயம் இறக்கபட்டால், அவர்களுள் செல்வந்தர்கள் உம்மிடம் ஒப்புதல் வேண்டி பின்னால் உட்கார்ந்திருப்பவர்களுடன் தாங்களும் இருந்து கொள்ள தங்களை விட்டு விடுங்கள் எனக் கூறுகின்றனர்.
  87. பின்தங்கிவிடும் கூட்டத்தினர்களுடன் தாங்களும் சேர்ந்திருப்பதால் அவர்கள் மகிழ்ச்சி கொண்டுள்ளனர். அவர்களின் உள்ளங்கள் முத்திரையிடப்பட்டுவிட்டன. ஆகவே அவர்கள் புரிந்து கொள்வதில்லை.
  88. ஆனால் இத்தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் (அல்லாஹ்வின் வழியில்) தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடுகின்றனர். மேலும் நன்மைகள் இவர்களுக்கே (உண்டு); மேலும் வெற்றிற்குரியவர்கள் இவர்களே ஆவர்.
  89. அல்லாஹ் அவர்களுக்காக சுவர்க்கங்களை ஆயத்தமாக்கி வைத்துள்ளான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடுகின்றன. அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்வர். இது மாபெரும் வெற்றியாகும். ரு11
  90. காட்டரபிகளுள் பொய்க் காரணம் கூறுபவர்கள் வந்து, பின்னால் தங்கிவிடுவதற்குத் தங்களுக்கு(ம்) அனுமதி வழங்கப்பட வேண்டுமென்று கூறுகின்றனர். அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் பொய் கூறுபவர்கள் (அனுமதியின்றியே) பின் தங்கிவிட்டனர். அவர்களுள் நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக வேதனையளிக்கக்கூடிய தண்டனை கிடைக்கும்.
  91. (ஆனால்) பலவீனர்களாயும் நோயாளிகளாயும், வழிச் செலவிற்கு எதனையும் பெறாதவர்களாயுமிருப்பவர்கள் அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் மாசற்ற பற்றுக் கொண்டவர்களாயிருப்பின், அவர்கள் பின் தங்கிவிடுவதில் எக்குற்றமுமில்லை. (மேலும்) நன்மை செய்பவர்களுக்கு எதிரில் பழி (கூற வழி) இல்லை. அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  92. போர் அறிவிப்புச் செய்யப்பட்டபோது தாங்கள் ஏறிச் செல்ல ஏதாவதொரு ஏற்பாட்டினை நீர் செய்ய வேண்டுமென்பதற்காக உம்மிடத்தில் வந்தவர்களிடம் குற்றம் எதுவுமில்லை19. இதற்கு நீர் உங்களை ஏற்றிச் செல்லக்கூடியது எதுவும் என்னிடமில்லையே என்று பதிலளித்தீர். (இப்பதிலைக் கேட்டு) அவர்கள் சென்றுவிட்டனர். (இறைவழியில்) செலவு செய்வதற்குத் தங்களிடம் எதுவும் இல்லையே என்ற கவலையினால் அவர்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது. 
  93. செல்வந்தர்களாயிருந்தும் உம்மிடம் அனுமதி கோருபவர்களுக்கு மட்டுமே குற்றமுண்டு. பின்தங்கி இருக்கக்கூடிய கூட்டத்தினர்களுடன் தாங்களும் இருந்து கொள்வதில் அவர்கள் திருப்தி கொண்டு விட்டனர். மேலும் அல்லாஹ் அவர்களின் உள்ளங்களில் முத்திரை வைத்துவிட்டான். எனவே அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை.
  94. நீங்கள் (போர் செய்துவிட்டு) அவர்களிடம் திரும்பி வரும்போது, அவர்கள் உங்களிடம் (பல்வேறு வகையான) சாக்குப் போக்குகள் கூறுகின்றனர். நீர் அவர்களிடம் கூறுவீராக. நீங்கள் சாக்குக் கூறாதீர்கள். நாங்கள் உங்கள் சாக்குப் போக்குகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அல்லாஹ் உங்கள் உண்மை நிலைகளைப்பற்றி எங்களுக்கு அறிவித்து விட்டான். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்கள் செயல்களைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே இருப்பார்கள். பின்னர் நீங்கள் மறைவானதையும் வெளிப்படையானதையும் அறியக்கூடிய இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். அப்போது அவன் உங்கள் செயல்களின் உண்மை நிலையைப் பற்றி உங்களுக்கு அறிவிப்பான்.
  95. நீங்கள் அவர்களிடம் திரும்பும் போது, அவர்களிடம் கண்டும் காணாதது போன்று நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அவர்கள் உங்கள் முன் அல்லாஹ்வின் மீது சத்தியங்கள் செய்வார்கள். (ஆகவே நாமும் உங்களிடம் கூறுகின்றோம்;) நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுங்கள் (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் தூய்மையற்றவர்களாவர். அவர்களின் செயல்களுக்குத் தண்டனையாக நரகமே அவர்களின் தங்குமிடமென்று ஏற்கனவே முடிவாகிவிட்டது.
  96. நெங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைவதற்காக அவர்கள் உங்கள் முன் சத்தியங்கள் செய்வர். நீங்கள் அவர்களைப் பற்றித் திருப்தியடைந்தாலும் கட்டுப் படாத மக்களைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைவதில்லை. 
  97. நாட்டுப் புறங்களில் வாழ்பவர் நிராகரிப்பிலும், நயவஞ்சகத்திலும் மிகக் கடினமானவர்களாயும் (அறியாமையினால்) அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு ஈராக்கிய வரம்புகளை அறிந்து கொள்ள முற்றிலும் வாய்ப்பற்றவர்களாயுமிருக்கின்றனர். அல்லாஹ் நன்கு அறிபவனும் நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.
  98. (இறைவழியில்) செய்யப்பட்ட செலவினை (ஒரு) சுமையாகக் கருதும் சிலரும் நாட்டுப்புறவாசிகளில் உள்ளனர். உங்களுக்குப் பேரிடர்கள் ஏற்படுவதை அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தீய விபத்து அவர்களுக்கே ஏற்படும். அல்லாஹ் நன்கு கேட்பவனும், அறிபவனுமாவான்.
  99. அல்லாஹ்விடத்தும், மறுமைநாளிடத்தும் நம்பிக்கை கொண்டு, (இறை வழியில்) தாங்கள் செய்கின்ற செலவு இறை நெருக்கத்தையும், தூதருடைய பிரார்த்தனைகளையும் பெறுவதற்குக் காரணமாகும் எனக் கருதும் சிலரும் நாட்டுப்புறத்தவர்களுள் உள்ளனர். கவனமாகக் கேளுங்கள்; நிச்சயமாக இச்செயல், அவர்கள் (இறைவனை) நெருங்குவதற்குக் காரணமாக அமையும். அல்லாஹ் நிச்சயம் அவர்களைத் தன் அருளில் நுழைய வைப்பான். (ஏனென்றால்) அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு12
  100. இடம் பெயர்ந்து சென்றவர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர்களுள் முதலாவதாக முந்திக் கொண்டவர்கள், மேலும் அவர்களை நன்முறையில் பின் தொடர்ந்தவர்கள் ஆகியோரிடத்து அல்லாஹ் மனநிறைவு அடைந்துள்ளான். அவர்களும் அவனிடம் திருப்தி அடைந்துள்ளனர். மேலும் அவன் அவர்களுக்காக கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் தோட்டங்களை ஏற்படுத்தியுள்ளான். அவர்கள் அவற்றில் என்றென்றும் வாழ்ந்து வருவர். இது மாபெரும் வெற்றியாகும்.
  101. உம்மைச் சுற்றி வாழும் நாட்டுப்புறத்தாருள் (சில) நயவஞ்சகர்களும் உள்ளனர். நயவஞ்சகத்தில் பிடிவாதமாக இருக்கும் சிலர் மதீனா வாழ் மக்களுக்குள்ளும் இருக்கின்றனர். நீர் அவர்களை அறியமாட்டீர். ஆனால் நாம் அவர்களை அறிவோம். நாம் அவர்களுக்கு இருமுறை தண்டனை வழங்குவோம்21. பின்னர் அவர்கள் மாபெரும் ஒரு தண்டனையின்பால் திருப்பப்படுவார்கள்.
  102. தங்கள் பாவச் செயல்களை ஏற்றுக் கொண்ட வேறு சிலரும் உள்ளனர். இவர்கள் நல்ல செயல்களை வேறு சில தீய செயல்களுடன் கலந்துவிட்டனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்து விடலாம். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  103. நீர் அவர்களைத்22 தூய்மைப் படுத்துவதற்காகவும், அவர்களின் முன்னேற்றத்திற்கான வழிவகைகளை மேற்கொள்வதற்காகவும்23 நீர் அவர்களின் செல்வங்களிலிருந்து தானங்களைப் பெற்றுக் கொள்வீராக. மேலும் அவர்களுக்காகத் துஆ செய்வீராக. ஏனென்றால், உம்முடைய பிரார்த்தனை அவர்களின் (மன) அமைதிக்குக் காரணமாகும். அல்லாஹ் (உம்முடைய பிரார்த்தனைகளை) நன்கு கேட்பவனும் (நிலைமைகளை) நன்கு அறிபவனுமாவன்.
  104. அல்லாஹ்வே தன் அடியார்களின் கழிவிரக்கத்தை ஏற்றுக் கொள்பவனும், அவர்களின் தானங்களை ஒப்புக் கொள்பவனும் ஆவான் என்பதையும், மேலும் நிச்சயமாக அல்லாஹ்வே கழிவிரக்கத்தை அதிகமாக ஏற்றுக் கொள்பவனும், மீண்டும், மீண்டும் அருள் செய்பவனுமாவான் என்பதையும் அவர்கள் அறிவதில்லையா?
  105. நீர் (அவர்களிடம்) கூறுவீராக: நீங்கள் செயல்படுங்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும், நம்பிக்கை கொண்டவர்களும் கட்டாயமாக உங்கள் செயல்களை உற்று நோக்கிக் கொண்டேயிருப்பர். மேலும் நீங்கள் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறியும் இறைவனிடம் நிச்சயமாகத் திருப்பப்படுவீர்கள். பின்னர் அவன் உங்கள் செயல்களின் உண்மையினைப் பற்றி உங்களுக்குத் அறிவிப்பான்.
  106. மேலும் மற்றவர்கள், அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பானா அல்லது அவர்களை மன்னிப்பானா என்ற அவனின் தீர்ப்பை எதிர்பார்க்கின்றனர். அல்லாஹ் நன்கறிந்தோனும் நுண்ணிய ஞானமுள்ளவனும் ஆவான்.
  107. தீங்கிழைக்கவும், நிராகரிப்பிற்கு உதவவும், நம்பிக்கையாளருள் பிரிவினை உண்டாக்கவும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்து முன்னர் போராடியவருக்குப் பதுங்குமிடமாகவும் பள்ளிவாயில் ஒன்றைக் கட்டியவர்கள்24 நாங்கள் நன்மையையே நாடுகிறோம் என்று நிச்சயமாக சத்தியம் செய்வார்கள். ஆனால் நிச்சயமாக அவர்கள் பொய்யுரைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று அல்லாஹ் சாட்சி பகர்கின்றான்.
  108. (நபியே!) நீர் அ(ந்த மஸ்ஜி)தில் ஒரு போதும் நிற்க வேண்டாம். ஆரம்ப நாளிலிருந்தே இறையச்சத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட பள்ளி தான் (தொழுகை நடத்துவதற்காக) நீர் நிற்பதற்கு மிகவும் தகுதி வாய்ந்ததாகும். முற்றிலும் தூயவர்களாக வேண்டுமென்று விரும்புபவர்கள் அதில் (வருபவர்களாக) இருக்கின்றனர். முழுமையான தூய்மையை மேற்கொள்பவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான்.
  109. தனது அடித்தளத்தை இறையச்சம் மற்றும் இறை திருப்தியின் அடிப்படையில் அமைத்துள்ளவன் சிறந்தவனா? அல்லது தன் அடித்தளத்தை, நரக நெருப்பில் சரிந்து விழக்கூடிய வழுக்கலான விளிம்பில் அமைத்தவ(ன் சிறந்தவ)னா? மேலும் அல்லாஹ் அநீதியிழைக்கும் சமுதாயத்தினர்க்கு வழி காட்டுவதில்லை.
  110. அவர்கள் எழுப்பிய கட்டிடம், அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாகிவிடும் வரையிலும், அவர்களின் உள்ளங்களில் என்றென்றும் ஐய உணர்வை ஊட்டிக் கொண்டேயிருக்கும். அல்லாஹ் நன்கு அறிபவனும், மிக நுட்பமான ஞானமுள்ளவனுமாவான்.ரு13
  111. நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு சுவர்க்கம் அளிப்பதற்கு ஈடாக அல்லாஹ் அவர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், அவர்களின் பொருள்களையும் விலைக்கு வாங்கிக் கொண்டான். (ஏனென்றால்) அவர்கள் அல்லாஹ்வின் வழியில் போர் செய்கின்றனர். இதனால் (ஒன்று) அவர்கள் (தங்கள் பகைவர்களைக்) கொன்று விடுகின்றனர். (அல்லது தாங்கள்) கொல்லப்படுகின்றனர். தவ்ராத், இன்ஜீல், குர்ஆன் ஆகியவற்றில் வாக்குறுதி அளித்து இதனை தன் மீது கடமையாக்கியுள்ளான். தனது வாக்குறுதியினை நிறைவேற்றுவதில் அல்லாஹ்வைவிட மேலானவன் எவன்? எனவே (நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் அவனுடன் செய்த வணிகம் குறித்து மகிழ்ச்சியடையுங்கள். மேலும் இதுவே மாபெரும் வெற்றியாகும்.
  112. அவர்கள் கழிவிரக்கங் கொள்பவர்கள், வணங்குபவர்கள், (இறைவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், (இறைவனிடம்) குனிபவர்கள், (தொழுகையில்) சிரம்பணிபவர்கள், நன்மையை ஏவுபவர்கள், தீயவற்றிலிருந்து தடுப்பவர்கள், அல்லாஹ்வின் வரம்புகளைப் பாதுகாப்பவர்கள் ஆவார்கள். (இத்தகு தன்மைகளைக் கொண்ட) நம்பிக்கை கொண்டவர்களுக்கு நீர் நற்செய்தியினை வழங்குவீராக!
  113. இணைவைப்பவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருவது நபிக்கோ, நம்பிக்கையாளர்களுக்கோ தகுமானதன்று. அவர்கள் நெருங்கிய உறவினர்களாயிருந்தாலும் சரியே; அவர்கள் நிச்சயமாக நரகவாசிகளே என்று இவர்களுக்குத் தெளிவானதன் பின்னர் (எவ்வாறு அவர்களுக்காக மன்னிப்புக் கோரலாம்?)
  114. இப்ராஹீம் தம்முடைய தந்தையாரிடம் அளித்திருந்த ஒரு வாக்குறுதியினால் தான் இவர் அவருக்காகப் பாவமன்னிப்புக் கோரினார். ஆனால் அவர் அல்லாஹ்வின் பகைவராவார் என்பது அவருக்குத் தெரிந்ததும், அவர் அதிலிருந்து முழுமையாக விலகிக் கொண்டார். இப்ராஹீம் மிகவும் மென்மை வாய்ந்த உள்ளத்தைக் கொண்டவராயும், அறிவு படைத்தவராயும் விளங்கினார்.
  115. அல்லாஹ் ஒரு சமுதாயத்தினருக்கு நேர்வழியினை வழங்கியதன் பின்னர், அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவற்றைக் குறித்து அவன் அவர்களுக்கு விளக்காதவரை அவர்களை வழிதவறியவர்கள் எனத் தீர்மானிப்பது25 அவனது தகுதிக்கு ஏற்றதன்று. அல்லாஹ் எல்லாவற்றையும் அறிகின்றான். 
  116. நிச்சயமாக வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்குரியதே. அவன் உயிரையும் வழங்குகின்றான்; மரணத்தையும் கொடுக்கின்றான். மேலும அல்லாஹ்வைத் தவிர உங்களுக்கு நண்பரோ உதவி செய்பவரோ வேறெவரும் இல்லை.
  117. நபிக்கும், இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கும், அவர்களுள் ஒரு சாராரின் உள்ளங்கள் தடுமாற்றத்திற்கு உள்ளான பிறகு ஏற்பட்ட கடினமான வேளையில் அவரை பின் தொடர்ந்த உதவியாளர்களுக்கும் அல்லாஹ் பேரருள் செய்துள்ளான். பின்னர் அவன் அ(ந்தப் பலவீனமான)வர்களுக்கும் அருள் செய்தான். நிச்சயமாக அவன் (நம்பிக்கை கொண்ட) அவர்களை நேசிப்பவனும் (அவர்களுக்கு) மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
  118. மேலும், பின்தங்கிவிட்ட அந்த மூவருக்கும்26 (அருள் செய்தான்). பூமி விரிவானதாக இருந்தும் கூட அவர்களுக்கு அது குறுகிவிட்டது. அவர்களின் உள்ளங்களும் அவர்களுக்கு இறுகி விட்டனர். அவனிடம் திரும்புவதனைத் தவிர, அல்லாஹ்விடமிருந்து அடைக்கலம் எதுவுமில்லை என்று அவர்கள் நினைத்தனர். அப்போது அவர்களின் நிலையை கண்டு அவர்களும் கழிவிரக்கம் கொள்ள அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்தான். நிச்சயமாக அல்லாஹ் மேன்மேலும் கழிவிரக்கத்தை ஏற்றுக் கொள்பவனும் மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு14
  119. நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் உண்மையாளர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.
  120. மதீனா வாழ் மக்களும், அவர்களின் சுற்றுப்புறங்களில் வாழும் கிராம வாசிகளும் அல்லாஹ்வின் தூதரை(த் தனிமையாக) விட்டுத் தாங்கள் பின் தங்கிவிடுவதும், அவரது உயிரை விட தங்கள் உயிர்களுக்கு முதன்மை அளிப்பதும் அவர்களுக்கு ஏற்றதல்ல, ஏனெனில், அல்லாஹ்வின் வழியில் அவர்களுக்கு ஏற்படும் தாகம், களைப்பு, பசி ஆகிய எல்லாவற்றுக்கும், மேலும் நிராகரிப்பவர்களுக்கு கோபமூட்டும் வண்ணம் பூமியில் அவர்கள் அடியெடுத்து வைப்பதற்கும், பகைவர்களிடமிருந்து பெறும் துன்பங்களுக்கும் ஈடாக அவர்களுக்கு நற்செயல்களே எழுதப்படுகின்றன. நன்மை செய்பவர்களுக்குரிய நற்பலனை நிச்சயமாக அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான்.
  121. அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் செய்கின்ற சிறிய அல்லது பெரிய செலவும், ஏதாவதொரு பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து செல்வதும் (அவர்களின் நற்செயல்களைச் சேர்ந்ததாக) எழுதப்படுகின்றன. அல்லாஹ் அவர்களின் செயல்களுக்கு (எல்லாவற்றையும் விட) மிக உயர்வான பிரதிபலனை வழங்குகிறான்.
  122. நம்பிக்கை கொண்டவர்களெல்லாரும் (ஒன்று திரண்டு) புறப்படுவது அவர்களால் முடியாததாகும். அவர்களின் ஜமாஅத்திலிருந்து ஒரு சாரார், மார்க்கத்தை முழுமையாகக் கற்கவும் அவர்களிடம் திரும்பிவந்து (மார்க்கத்தைச் சரிவர பேணாதிருப்பது குறித்து) அவர்களை எச்சரிக்கை செய்வதற்கும் அவர்கள் ஏன் புறப்பட்டிருக்கக் கூடாது? ரு15
  123. நம்பிக்கையாளர்களே! உங்கள் அருகில் வாழும் நிராகரிப்பவர்களுடன், அவர்கள் உங்களின் உறுதிப்பாட்டைக் கண்டுணரும் வண்ணம் நீங்கள் போரிடுங்கள். மேலும் அல்லாஹ் இறையச்சமுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
  124. ஏதாவதொரு அதிகாரம் இறக்கப்படும் போதெல்லாம் இது உங்களுள் எவருடைய நம்பிக்கையை வளரச் செய்துள்ளது என்று கூறும் சிலர் அவர்களுள் உள்ளனர். ஆனால் நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை இ(ந்த அதிகாரமான)து அதிகரித்து விட்டது. அவர்கள் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்றனர்.
  125. உள்ளங்களில் நோய் உள்ளவர்களுக்கு, இ(ந்த அதிகாரமான)து அவர்களின் (பழைய) அழுக்குடன் மேலும் அழுக்கைச் சேர்க்கிறது. மேலும் அவர்கள் நிராகரிப்பவர்களாகவே மரணமடைவர்.
  126. ஒவ்வொரு வருடமும் ஒருமுறை அல்லது இரு முறை அவர்கள் சோதனைக்கு உள்ளாவதை அவர்கள் காண்பதில்லையா? ஆயினும் அவர்கள் கழிவிரக்கம் கொள்வதுமில்லை; அறிவுரையினைப் பெறுவதுமில்லை.
  127. ஓர் அதிகாரம் இறக்கப்படுகின்றபோது, எவராவது உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றாரா என்று (கூறி)27 அவர்களுள் சிலர், சிலரைப் பார்க்கின்றனர். பின்னர் (அவையிலிருந்து) அவர்கள் திரும்பிச் செல்கின்றனர். அல்லாஹ் அவர்களின் உள்ளங்களைத் திருப்பிவிட்டான். ஏனென்றால் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்கள் ஆவர்.
  128. (நம்பிக்கை கொண்டவர்களே!) உங்களிடம் உங்களிலிருந்தே ஒருவர் தூதராக வந்துள்ளார். உங்களுக்கேற்படும் துன்பம், அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கிறது. அவர் உங்கள் நலனில் மிகுந்த ஆர்வங்கொண்டவராயும், நம்பிக்கை கொண்டவர்களை நேசிப்பவராயும், அவர்களுக்கு மிக்க கருணை காட்டுபவராயுமிருக்கின்றார்.
  129. அவர்கள் திரும்பிவிடுவார்களாயின், நீர் கூறுவீராக: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். அவனையன்றி வேறெதுவும் வணங்கத்தக்கதல்ல. நான் அவனிடமே நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் வல்லமை மிக்க அரியணையின் இறைவனாவான். ரு16

Powered by Blogger.