அதிகாரம்: முஹம்மது
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 39
பிரிவுகள்: 4
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நிராகரித்து, அல்லாஹ்வின் வழியிலிருந்து(மக்களைத்) தடுப்பவர்களின் செயல்களை அவன் பயன்ற்றதாக ஆக்குகின்றான்.
- எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்து, முஹம்மதுக்கு இறக்கப்பட்டதில் நம்பிக்கை கொள்கின்றனரோ - அது அவர்களின் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையாகும். அவன் அவர்களின் தீமைகளை அவர்களிடமிருந்து அகற்றி, அவர்களின் நிலைமையை மேம்படுத்துகின்றான்.
- இதற்குக் காரணம் நிராகரிப்பவர்கள் பொய்யைப் பின்பற்றுகின்றனர்; ஆனால் நம்பிக்கையாளர்கள் தங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ள உண்மையைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு அல்லாஹ் மக்களுக்கு அவர்களின் உவமைகளை விளக்குகிறான்.
- எனவே நீங்கள் நிராகரிப்பவர்களைப் போர்க்களத்தில் சந்திக்கும் போது (அவர்களது) கழுத்துகளை வெட்டுங்கள்1. நீங்கள் அவர்களை வென்றதும், கைகளை மிக உறுதியாகக் கட்டுங்கள். இதன் பின்னர் கருணை அல்லது போர் ஈட்டுத் தொகை (இவற்றின் மூலம் விட்டு விடுங்கள்). போர், தனது சுமைகளைக் கீழே வைக்கும் வரையில் (போர் செய்யுங்கள்). இது சூழ்நிலைகளுக்கேற்பவே. அல்லாஹ் விரும்பியிருந்தால், அவனே அவர்களிடம் பழி வாங்கியிருப்பான். எனினும் உங்களுள் சிலரை மற்றுஞ் சிலரைக் கொண்டு சோதிக்க அவன் விரும்பினான். அல்லாஹ்வின் வழியில் கொல்லப்படுபவர்களின் செயல்களை அவன் ஒருபோதும் வீணாக்கமாட்டான்.
- அவன், அவர்களுக்கு நேர்வழி காட்டி, அவர்களின் நிலைமையை மேம்படுத்துவான்.
- மேலும் அவன், அவர்களுக்கு அறிவித்திருந்த சுவர்க்கத்தில் அவர்களை நுழையச் செய்வான்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி செய்தால்2, அவன் உங்களுக்கு உதவி செய்து, உங்கள் காலடிகளை உறுதிப்படுத்துவான்.
- ஆனால், நிராகரிப்பவர்களுக்கு அழிவு தான். மேலும் அவன் அவர்களது செயல்களை வீணாக்கி விடுவான்.
- ஏனென்றால் அல்லாஹ் இறக்கிய(வசனத்)தை அவர்கள் வெறுக்கின்றனர். எனவே அவன் அவர்களது செயல்களை வீணாக்கி விடுகின்றான்.
- அவர்கள் பூமியில் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு என்னவாயிற்று என்று அவர்கள் பார்ப்பதில்லையா? அல்லாஹ் அவர்களை முற்றாக அழித்து விட்டான். (இன்றைய) நிராகரிப்பவர்களுக்கும் அவர்களது நிலையைப் போன்றதே ஏற்படும்.
- ஏனெனில், அல்லாஹ் நம்பிக்கை கொள்பவர்களின் பாதுகாவலன் ஆவான். நிராகரிப்பவர்களுக்குப் பாதுகாவலன் எவரும் இல்லை. ரு1
- நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களைத் தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். நிராகரிப்பவர்கள் உலக இன்பம் அடைகின்றனர். கால்நடைகள் தின்பது போன்று தின்று கொண்டும் இருக்கின்றனர். நரகமே அவர்களது தங்குமிடமாகும்.
- உம்மை வெளியேற்றிய நகரத்தை விட, மிகவும் வலிமை வாய்ந்ததாக இருந்த எத்தனையோ நகரங்களை நாம் அழித்து விட்டோம். அவர்களுக்கு உதவி செய்பவர் எவரும் இருந்ததில்லை.
- தம் இறைவனிடமிருந்து வந்துள்ள தெளிவான சான்றில்(நிலைத்து) இருப்பவர், தங்கள் தீய செயல்கள் அழகு வாய்ந்ததாகக் காட்டப்பட்டுத் தங்கள் தீய விருப்பங்களைப் பின்பற்றுகின்றவர்களைப் போன்றவர் ஆவாரா?
- இறையச்சமுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட தோட்டத்திற்கு விளக்கமாவது, அதில் களங்கமற்ற நீராறுகளும், சுவை மாறாத பாலாறுகளும், அருந்துபவர்களுக்கு இன்பம் தரும் மது ஆறுகளும் உள்ளன. மேலும் அதில் அவர்களுக்கு எல்லா(வகையான) பழங்களும், அவர்களது இறைவனிடமிருந்து மன்னிப்பும் உண்டு. (இத்தகு பேரின்பத்தை நுகர்வோர்) நெடுங்காலம் நெருப்பில் தங்கியிருப்பவர்களையும், தங்கள் குடல்களைக் கிழித்து விடக் கூடிய கொதிக்கும் நீர் அருந்தக் கொடுக்கப்படுபவர்களையும் போல் இருப்பார்களா?
- அவர்களுள் சிலர் (வெளிப்படையாக) உமக்குச் செவி சாய்க்கின்றனர். ஆனால் அவர்கள் உம்மிடமிருந்து எழுந்து சென்றதும், ஞானம் வழங்கப் பெற்றவர்களிடம், இ(த்தூது)வர் சற்று நேரத்திற்கு முன் என்ன கூறினார் என்கின்றனர். அத்தகையவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். மேலும் அவர்கள் தங்கள் தீய விருப்பங்களைப் பின்பற்றுகின்றனர்.
- நேர்வழியினைப் பின்பற்றுபவர்களை, அவன் அந்த நேர்வழியில் மேன்மேலும் முன்னேறச் செய்கின்றான். மேலும் அவர்களுக்கு அவர்களின் (தகுதிக்கேற்றவாறு) இறையச்சத்தை வழங்குகிறான்.
- தங்களிடம் திடீரென்று வரும் (இறுதித் தீர்ப்புக்குரிய) அந்த நேரத்தையே அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அதன் அடையாளங்கள் ஏற்கனவே வந்து விட்டன. ஆனால் உண்மையாகவே அது, அவர்களிடம் வந்து விடும் போது அவர்களின் அறிவுரை அவர்களுக்கு என்னதான் பயனளிக்கும்?
- எனவே அல்லாஹ்வையன்றி வேறெவரும் வணக்கத்திற்குரியவர் இல்லை என்பதை அறிவீராக. உமது பலவீனங்களுக்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்கள், பெண்கள் ஆகியோருக்காகவும் (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோருவீராக3. நீங்கள் இங்குமங்குமாக செல்லுமிடத்தையும், நீங்கள் தங்குமிடத்தையும் அல்லாஹ் அறிகின்றான். ரு2
- (போர்க் கட்டளைகளைக் கொண்ட) ஓர் அதிகாரம் ஏன் இறக்கப்படவில்லை என்று நம்பிக்கையாளர்கள் கூறுகின்றனர்4. ஆனால் உறுதியான (கட்டளைகளைக் கொண்ட) ஓர் அதிகாரம் இறக்கப்பட்டு, அதில் போர் பற்றிக் கூறப்படும் போது, உள்ளங்களில் நோய் உள்ளவர்கள், மரணம் நெருங்கும் வேளையில் மயக்கமடைபவன் பார்ப்பது போன்று உம்மைப் பார்ப்பதை நீர் காண்கின்றீர். எனவே அவர்களுக்கு (இறைவன் புறமிருந்து) அழிவு விதிக்கப்பட்டுள்ளது.
- கீழ்ப்படிவதும், நல்ல வாக்குமே (அவர்களுக்கு நன்று). காரியம் உறுதியாகி விட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் உண்மையாளர்களாயின், அது அவர்களுக்கு மிகச்சிறந்ததாகும்.
- எனவே நீங்கள் புறமுதுகு காட்டிவிட்டால் (கூட) பூமியில் குழப்பம் விளைவித்து, உங்கள் உறவுகளைத் துண்டித்து விடலாம் அல்லவா5.
- இத்தகையவர்களையே அல்லாஹ் சபித்து, அவர்களைச் செவிடர்களாக்கி, அவர்களின் கண்களைக் குருடாக்கியுள்ளான்.
- அவர்கள் குர்ஆனைச் சிந்தித்துப் பார்ப்பதில்லையா? அல்லது அவர்களது உள்ளங்கள் உள்ளிருந்தே பூட்டப்பட்டிருக்கின்றனவா?
- நிச்சயமாகத் தங்களுக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் புறமுதுகு காட்டித் திரும்பிச் செல்பவர்களை, ஷைத்தான் நெறி தவறச் செய்து, பொய்யான நம்பிக்கைகளை ஊட்டுகின்றான்.
- இதற்குக் காரணம், அல்லாஹ் இறக்கியதை வெறுப்பவர்களிடம், நாங்கள் சிலவற்றில் உங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்போம் என்று அவர்கள் கூறியதேயாகும். மேலும் அல்லாஹ் அவர்களின் இரகசியங்களை அறிகின்றான்.
- வானவர்கள் அவர்களின் முகங்களிலும், முதுகுகளிலும் அடித்தவாறு அவர்களை மரணமடையச் செய்யும் பொழுது, (அவர்களின் நிலை) எவ்வாறு இருக்கும்?
- இதற்குக் காரணம், அவர்கள் அல்லாஹ்வுக்குக் கோபமூட்டக் கூடியதைப் பின்பற்றி, அவனது விருப்பை வெறுத்ததேயாகும். எனவே அல்லாஹ் அவர்களது செயல்களை வீணாக்கி விட்டான். ரு3
- எவர்களின் உள்ளங்களில் நோய் உள்ளதோ, அவர்களின் பகைமையினை அல்லாஹ் ஒருபோதும் வெளிப்படுத்த மாட்டான் என்று அவர்கள் எண்ணுகின்றனரா?
- நாம் விரும்பியிருந்தால், அவர்களை நாம் உமக்குக் காட்டியிருப்போம்; அவர்களது (முகத்தின்) அடையாளங்களைக் கொண்டு நீர் அவர்களைத் தெரிந்திருப்பீர்; (இப்பொழுது கூட அவர்களின்) பேச்சின் குரல் தன்மையைக் கொண்டு நீர் அவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றீர். அல்லாஹ் உங்கள் செயல்களை அறிகின்றான்.
- (இறைவனுக்காக) உங்களுள் கடும் முயற்சி செய்பவர்களையும், பொறுமையைக் கைக்கொள்பவர்களையும் நாம் அடையாளம் காணும் வரை, நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும் உங்கள் புகழையும் சோதிப்போம்.
- எவர் நிராகரித்து அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களைத் ) தடுத்து, நேர்வழி தங்களுக்குத் தெளிவானதன் பின்னர் தூதரை எதிர்ப்பார்களோ அவர்கள், அல்லாஹ்வுக்குச் சிறிதும் தீங்கிழைக்க மாட்டார்கள். மாறாக, அவன் அவர்களது செயல்களை வீணாக்கி விடுவான்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடங்கள். (அவனது) தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் உங்கள் செயல்களை வீணாக்கி விடாதீர்கள்.
- நிச்சயமாக எவர்கள் நிராகரித்து அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்துப் பின்னர் தாங்கள் நிராகரித்தவர்களாக இருக்கும் நிலையிலேயே மரணமடைகின்றனரோ அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்.
- எனவே நீங்கள் சோர்வடைந்து, சமாதானத்திற்கு அழைப்பு விடுக்காதீர்கள்6. ஏனெனில் நிச்சயமாக நீங்கள் தாம் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுடன் இருக்கின்றான். அவன் உங்கள் செயல்களி(ன் நற்பலனி)ல் ஒருபோதும் குறைவு ஏற்பட விடமாட்டான்.
- இவ்வுலக வாழ்க்கை வெறும் விளையாட்டும், பொழுதுபோக்குமேயாகும். நீங்கள் நம்பிக்கை கொண்டு இறையச்சத்தை மேற்கொண்டால், அல்லாஹ் உங்கள் நற்பலன்களை உங்களுக்கு வழங்குவான். அவன் உங்களிடம், உங்கள் செல்வங்களைக் கேட்க மாட்டான்.
- அவன் உங்களிடம் அவற்றைக் கேட்டு உங்களை வற்புறுத்தினால், நீங்கள் கருமித்தனத்தை காட்டியிருப்பீர்கள். மேலும் அவன் உங்களுடைய (அகப்) பகைமையை வெளிப்படுத்தியிருப்பான்.
- கவனமாகக் கேளுங்கள்! நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்வதற்காக அழைக்கப்படுபவர்களாவீர்கள். உங்களுள் சிலர் கருமித்தனம் காட்டுகின்றனர். கருமித்தனம் காட்டுபவர் தமக்கெதிராகவே கருமித்தனம் காட்டுகிறார். அல்லாஹ் தன்னிறைவு பெற்றவனாவான். ஆனால் நீங்களோ தேவையுடையோர்களாவீர்கள். நீங்கள் முகம் திருப்பி விட்டால், அவன் உங்களுக்குப் பதிலாக நீங்கள் அல்லாத வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவர்கள் உங்களைப் போன்றவர்களாய் இருக்க மாட்டார்கள். ரு4