48- அல் ஃபத்ஹ்

அதிகாரம்: அல் ஃபத்ஹ்
அருளப்பெற்ற இடம்: மதீனா | வசனங்கள்: 30

பிரிவுகள்: 4


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. நிச்சயமாக நாம் உமக்கு மிகத்தெளிவான ஒரு வெற்றியினை வழங்கியுள்ளோம். 
  3. இதன் விளைவாக (அவர்கள்) உமக்குச் செய்த சென்ற கால பாவங்களையும், எதிர் காலத்(தில் செய்யவிருக்கின்ற) தவறுகளையும் அல்லாஹ் உமக்காக மூடி, மறைத்து விடுவான்1. மேலும் உமக்குத் தன் அருளை முழுமைப்படுத்தி உமக்கு நேரான வழியினைக் காட்டுவான். 
  4. மேலும் அல்லாஹ் உமக்கு வல்லமை மிகு உதவியைச் செய்வான். 
  5. நம்பிக்கையாளர்கள் தங்கள் நம்பிக்கையுடன் மேலும் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்களின் உள்ளங்களில் அவனே சாந்தியை இறக்கினான். வானங்கள், பூமி ஆகியவற்றிலுள்ள படைகள் அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் நன்கு அறிபவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். 
  6. அவன் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் கீழே ஆறுகள் ஓடுகின்றதும், அவர்கள் என்றென்றும் வாழ்ந்து வருவதுமான தோட்டங்களில் நுழையச் செய்வதற்காகவும், அவர்களது தீமைகளை அவர்களை விட்டு அகற்றுவதற்காகவும்2 (அவர்களின் நம்பிக்கையை வளரச் செய்கிறான்). அல்லாஹ்விடம் அதுவே மகத்தான வெற்றியாகும். 
  7. நயவஞ்சக ஆண்களுக்கும், நயவஞ்சக பெண்களுக்கும் மேலும் அல்லாஹ்வைக் குறித்துத் தீய எண்ணங் கொள்பவர்களான இணை வைக்கும் ஆண்களுக்கும், இணை வைக்கும் பெண்களுக்கும் அவன் தண்டனை வழங்கு(வதற்காகவும்3, நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையை வளரச் செய்)கிறான். தீமை மிகு, பெருந்துன்பம் அவர்களுக்கு ஏற்படும். அவர்கள் மீது அல்லாஹ்வின் கடுங்கோபம் உண்டாகும். அவன் அவர்களைச் சபித்து விட்டான். மேலும் அவன், அவர்களுக்காக நரகத்தை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான். அது மிகக் கெட்ட சேருமிடமாகும். 
  8. மேலும் வானங்கள், பூமி ஆகியவற்றின் படைகள் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ் வல்லோனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். 
  9. நாம் உம்மை(எமது பண்புகளுக்குச்) சாட்சியாகவும், (நம்பிக்கை கொண்டவர்களுக்கு) நற்செய்தி வழங்குபவராகவும், (நிராகரிப்பவர்களை) எச்சரிப்பவராகவும் அனுப்பியுள்ளோம். 
  10. நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி செய்து, அவரைக் கண்ணியப்படுத்தி, காலையிலும், மாலையிலும் அவனது தூய்மையினை எடுத்துரைப்பதற்கே. (நாம் அவரை அனுப்பினோம்).
  11. உம்மிடம் உடன்படிக்கை செய்து கொள்பவர்கள், அல்லாஹ்விடமே உடன்படிக்கை செய்கின்றனர். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளின் மேல் இருக்கிறது. எனவே,அந்த உடன்படிக்கையை முறிப்பவர் தமது தீங்கிற்காகவே அதனை முறிக்கிறார். அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுபவருக்கு, நிச்சயமாக அவன் மாபெரும் நற்பலனை வழங்குவான். ரு1 
  12. பின்தங்கிவிட்ட காட்டு அரபிகள்4, எங்கள் உடைமைகளும், எங்கள் குடும்பத்தினரும் எங்களை வேலையில் ஈடுபடுத்தி விட்டனர். எனவே நீர் எங்களுக்குப் பாவமன்னிப்புக் கோருவீராக, என்று உம்மிடம் கட்டாயம் கூறுவர். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததைக் தங்கள் நாவுகளால் கூறுகின்றனர். நீர் கூறுவீராக: அல்லாஹ் உங்களுக்கு ஏதேனும் தீங்கைச் செய்ய நாடினால் அல்லது அவன் உங்களுக்கு ஏதேனும் நன்மையைச் செய்ய நாடினால், அவனுக்கு எதிராக உங்களுக்கு ஏதேனும் செய்ய ஆற்றல் பெற்றவன் எவன்? அவ்வாறன்று; மாறாக, நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கு அறிபவனாவான். 
  13. ஆனால், (உண்மையென்னவென்றால்) தூதரும், நம்பிக்கை கொண்டவர்களும் தம் குடும்பத்தினரிடம் ஒருபோதும் திரும்பி வர மாட்டார்கள் என்றே நீங்கள் நினைத்திருந்தீர்கள். இது உங்கள் உள்ளங்களுக்கு அழகு வாய்ந்ததாக்கிக் காட்டப்பட்டது. நீங்கள் (இறைவனைப் பற்றியும், நம்பிக்கை கொண்டவர்களைப் பற்றியும்) தீய எண்ணம் கொண்டீர்கள். ஆனால் நீங்கள் தான் அழிவிற்குள்ளாகும் சமுதாயத்தினராக இருந்தீர்கள். 
  14. அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொள்ளாத நிராகரிப்போருக்கு நிச்சயமாக நாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளோம். 
  15. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. தான் விரும்புபவரை அவன் மன்னிக்கிறான். தான் விரும்புபவருக்கு அவன் தண்டனை வழங்குகின்றான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  16. போரில் கிடைத்த பொருட்களை எடுப்பதற்கு நீங்கள் அவற்றை நோக்கிச் செல்லும் போது, நாங்களும் உங்களைப் பின்பற்றி வர எங்களை அனுமதியுங்கள் என்று பின்தங்கி விட்டவர்கள் கூறுவர். அவர்கள் அல்லாஹ்வின் தீர்ப்பை மாற்ற விரும்புகின்றனர். நீர் கூறுவீராக: நீங்கள் எங்களைப் பின்பற்றி வர வேண்டாம். இதற்கு முன்னரே அல்லாஹ் அவ்வாறு கூறி விட்டான். இதற்கு அவர்கள்: அவ்வாறன்று; மாறாக, நீங்கள் எங்கள் மீது பொறாமை கொள்கிறீர்கள் என்று கூறுவார்கள். அவ்வாறன்று, உண்மையில் அவர்கள் அறவே புரிந்து கொள்வதில்லை. 
  17. (போருக்கு வராமல்) பின்தங்கி விட்ட காட்டு அரபிகளிடம் (நீர்) கூறுவீராக: வீரம் செறிந்த (சக்தி வாய்ந்த) ஒரு சமுதாயத்தினருக்கு எதிராக5 போர் செய்ய நீங்கள் அழைக்கப்படுவீர்கள்6. அவர்கள் சரணடையும் வரை, நீங்கள் அவர்களுடன் போர் செய்வீர்கள்7. எனவே, நீங்கள் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் உங்களுக்கு மிகச்சிறந்த கூலியை வழங்குவான். ஆனால் நீங்கள் இதற்கு முன்னர் புறக்கணித்தது போன்று, நீங்கள் புறக்கணித்து விட்டால், அல்லாஹ் உங்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனை வழங்குவான். 
  18. (போருக்குச் செல்லாதது குறித்து) குருடரின் பேரிலும் குற்றமில்லை; முடவர் பேரிலும் குற்றமில்லை; நோயாளியின் பேரிலும் குற்றமில்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவரை அவன் தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். ஆனால் புறக்கணித்து விடுபவர்களுக்கு அவன் வேதனையளிக்கக் கூடிய தண்டனையை வழங்குவான். ரு2 
  19. நம்பிக்கையாளர்கள் மரத்திற்கடியில் உம்மிடம் உடன்படிக்கை செய்து கொண்ட போது8, நிச்சயமாக அல்லாஹ் அவர்களைக் குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்து, அவர்களது உள்ளங்களிலிருந்த(நம்பிக்கை) தனை அறிந்து, அவர்களுக்கு சாந்தியை இறக்கி, அண்மையில் வரவிருக்கும் ஒரு வெற்றியினை அவர்களுக்கு வெகுமதியாக வழங்கினான்9. 
  20. மேலும் அவர்கள் கைப்பற்றிக் கொண்டிருந்த மிகுதியான போர்க்களப் பொருட்களையும் (வழங்கினான்). அல்லாஹ் வல்லோனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். 
  21. நீங்கள் கைப்பற்றவிருக்கும் மிகுதியான போர்க்களப் பொருட்களை அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்துள்ளான். (கைபர் போர்க்களப் பொருளாகிய) இதனை (வாக்களிக்கப்பட்டதற்கு) முன்னரே உங்களுக்கு வழங்கி, மக்களின் கைகளை உங்களை விட்டுத் தடுத்து விட்டான்10. இவை (எல்லாவற்றையும்) நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அடையாளமாக இருக்கவும், அவன் உங்களுக்கு நேரான வழியைக் காட்டவுமே (செய்துள்ளான்).  
  22. நீங்கள் இதுவரை அடையாத மற்றொரு வெற்றியினையும்11 (உங்களுக்கு வாக்களித்துள்ள). அல்லாஹ் அதனைச் சூழ்ந்துள்ளான். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் பெற்றவனாவான். 
  23. (ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையின் போது) நிராகரிப்பவர்கள் உங்களுடன் போர் தொடுத்திருந்தால், நிச்சயமாக அவர்கள் புறமுதுகு காட்டி ஓடியிருப்பார்கள். பின்னர் அவர்கள் காப்பாற்றுபவரையோ, உதவி செய்பவரையோ கண்டிருக்க மாட்டார்கள்.
  24. முன்னரே இயங்கி வரும் அல்லாஹ்வின் செயல்முறை இதுவேயாகும். அல்லாஹ்வின் செயல்முறையில் நீர் ஒருபோதும் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர். 
  25. அவனே உங்களுக்கு, அவர்களின் மேல் வெற்றியினை வழங்கியதன் பின்னர், மக்காவின் பள்ளத்தாக்கில் அவர்களது கைகளை உங்களை விட்டும், உங்கள் கைகளை அவர்களை விட்டும் தடுத்தான்.நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்றுப்  பார்க்கின்றவனாவான். 
  26. நிராகரித்தவர்களும், புனிதப் பள்ளிக்குச் செல்ல விடாது உங்களையும், மேலும் நேர்ந்தளிக்கப்பட்டவற்றை அது செல்ல வேண்டிய இடத்தை அடைய விடாது தடுத்தவர்களும் இவர்களே. நம்பிக்கை கொண்ட சில ஆண்களும், நம்பிக்கை கொண்ட சில பெண்களும் (மக்காவில்) இல்லாமலிருந்திருந்தால்! (நாம் உங்களைப் போரிடச் செய்திருப்போம்). ஏனெனில் நீங்கள் அவர்களை அறிய மாட்டீர்கள். மேலும் நீங்கள் அறியாமல் அவர்களைக் கால்களால் மிதித்து விட்டு, அதன் விளைவாக அவர்களிடமிருந்து உங்களுக்குக் களங்கம் ஏற்பட்டு விடலாம். அல்லாஹ் , தான் விரும்புபவரைத் தனது கருணையில் நுழையச் செய்வதற்காக (அவன் அவ்வாறு செய்யவில்லை). அவர்கள் (நிராகரிப்போரை விட்டும்) பிரிந்து போயிருந்தால், அவர்களுள் நிராகரித்தவர்களுக்கு நிச்சயமாக நாம் வேதனையளிக்கும் தண்டனையை வழங்கியிருப்போம். 
  27. நிராகரித்தவர்கள் தம் உள்ளங்களில் அறியாமைக்கால பெருமைமிகு கடுஞ்சினத்தை ஏற்படுத்திக் கொண்ட போது, அல்லாஹ் தன் தூதரிடத்தும், நம்பிக்கையாளர்களிடத்தும் தன் சாந்தியினை இறக்கி, இறையச்ச வழியில் அவர்களை உறுதிப்படுத்தினான். அவர்கள் அதற்கு அதிக உரிமையுள்ளவர்களாகவும், மிக்கத் தகுதியுள்ளவர்களாகவும் விளங்கினர். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான். ரு3 
  28. நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) அக்கனவை முற்றிலும் உண்மையுடன் நிறைவேற்றினான்12. அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் அமைதியுடனும், (உங்களுள் சிலர்) தங்கள் தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், (மற்றுஞ் சிலர்) முடிகளைக் கத்தரித்துக் கொண்டவர்களாகவும் புனிதப் பள்ளியில் நுழைவீர்கள். நீங்கள் எவருக்கும் அஞ்ச மாட்டீர்கள். ஆனால், நீங்கள் அறியாததை அவன் அறிந்துள்ளான். இது மட்டுமல்லாமல், அவன் உங்களுக்காக மிக அண்மையில் ஒரு வெற்றியினை ஏற்படுத்தியுள்ளான். 
  29. அவனே தன் தூதரை நேர்வழியுடனும், உண்மையான மார்க்கத்துடனும், இதனை அவன் ஒவ்வொரு மார்க்கத்தையும் வெற்றி பெறச் செய்வதற்காக அனுப்பினான். அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கிறான். 
  30. முஹம்மது, அல்லாஹ்வின் தூதராவார். அவருடனிருப்பவர்கள் நிராகரிப்பவர்களுக்கெதிரில் கடினமானவர்களும், தங்களுக்குள் மிக்க மென்மையாக நடந்து கொள்பவர்களுமாவார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும், விருப்பத்தையும் தேடியவாறு குனிந்தும், சிரம்பணிந்தும் வணங்குபவர்களாக நீர் அவர்களைக் காண்கின்றீர். அவர்களின் (சிறப்புத்தன்மைக்குரிய) அறிகுறி, அவர்களின் நெற்றியிலுள்ள சிரம்பணிதலின் அடையாளமாகும். இது தவ்ராத்தில் அவர்களைப் பற்றிய விளக்கமாகும். இஞ்ஜீலில் அவர்களுக்குள்ள உதாரணமானது, அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள்13. அது முதலில் தன் தளிரை வெளிப்படுத்திப் பின்னர், அதனை உறுதிப்படுத்திப் பின்னர், அது அடர்த்தியாகி விதைத்தவர்களை வியப்பிற்குள்ளாக்கும் விதத்தில் அது தனது தண்டின் மீது உறுதியாக நின்றது. இதன் விளைவாக நிராகரிப்பவர்கள் அவர்களைக் கண்டு பொறாமைப்படுவார்கள். அவர்களுள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்பலனையும் வாக்களித்துள்ளான். ரு4 

Powered by Blogger.