49- அல் ஹுஜுராத்

அதிகாரம்: அல் ஹுஜுராத்
அருளப்பெற்ற இடம்: மதீனா | வசனங்கள்: 19

பிரிவுகள்: 2


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் மற்றும் அவனது தூதரின் முன்னிலையில் முந்தி,முந்திப் பேசாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான். 
  3. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நபியினுடைய குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்.நீங்கள் ஒருவர், ஒருவரை நோக்கி உரக்கப் பேசுவது போன்று அவரை நோக்கி உரக்கப் பேசாதீர்கள். அதனால் உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் செயல்கள் வீணாகி விடலாம். 
  4. தம் குரல்களை அல்லாஹ்வின் தூதர் முன்னிலையில் தாழ்த்திக் கொள்பவர்களின் உள்ளங்களையே இறையச்சத்திற்காக அல்லாஹ் தூய்மைப்படுத்தியுள்ளான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்பலனும் உண்டு. 
  5. உமது தங்குமிடத்திற்கு வெகு தொலைவிலிருந்தே உம்மை அழைக்கத் தொடங்குபவர்களுள் பெரும்பாலார் அறிவற்றவர்களாவர். 
  6. நீர் புறப்பட்டு, அவர்களிடம் வரும் வரை, அவர்கள் பொறுமை(யுடன் எதிர்பார்த்துக்) கொண்டிருப்பின், அது அவர்களுக்கு மிகச்சிறந்ததாக இருந்திருக்கும். எனினும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  7. நம்பிக்கை கொண்டவர்களே! நேர்மையற்ற ஒருவன் ஏதேனும் செய்தியினை உங்களிடம் கொண்டு வந்தால், அதனைக் குறித்துத் தீர விசாரணை செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் அறியாமையினால் ஒரு சமுதாயத்திற்கு நீங்கள் தீங்கிழைத்து விட்டுப் பின்னர் நீங்கள் செய்ததற்கு வெட்கப்படுபவர்களாகி விடுவீர்கள் . 
  8. மேலும், அல்லாஹ்வின் தூதர் உங்களிடையே இருக்கின்றார் என்பதனை அறிந்து கொள்ளுங்கள். பெரும்பாலான விஷயங்களில் அவர் உங்கள் விருப்பங்களை ஏற்றிருந்தால், நிச்சயமாக நீங்கள் துன்பத்திற்குள்ளாகியிருப்பீர்கள். ஆனால், அல்லாஹ் நம்பிக்கையை உங்களுக்கு விருப்பமானதாகவும், அதனை உங்கள் உள்ளங்களுக்கு அழகு வாய்ந்ததாகவும் ஆக்கியுள்ளான். மேலும், அவன் நிராகரிப்பையும், கொடுமையையும், கீழ்ப்படியாமையையும் உங்களுக்கு வெறுப்பானவையாக ஆக்கியுள்ளான். இத்தகையோரே நேரான வழியைப் பின்பற்றுவோராவார்கள். 
  9. இது அல்லாஹ்வின் அருளும், வளமும் ஆகும். அல்லாஹ் நன்கு அறிபவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான். 
  10. நம்பிக்கையாளர்களுள் இரு பிரிவினர்கள் தங்களுக்குள் போர் செய்தால், அவ்விரண்டு பிரிவினர்களுக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். இதன் பின்னர் அவற்றுள் ஒன்று, மற்றொன்றிற்கு எதிராக வரம்பு மீறினால், வரம்பு மீறுகின்ற பிரிவினர் அல்லாஹ்வின் கட்டளையின்பால் திரும்பி வரும் வரை, நீங்கள் அவர்களை எதிர்த்துப் போர் செய்யுங்கள். பின்னர் அவர்கள் திரும்பி வந்து விட்டால், அவர்களுக்கிடையே நியாயத்துடன் சமாதானம் செய்து, நீதமாக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதமாக நடந்து கொள்பவர்களை நேசிக்கிறான்.
  11. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்கள் ஆவர். எனவே, சகோதரர்களுக்கிடையே நீங்கள் சமாதானத்தை ஏற்படுத்துங்கள், உங்களுக்குக் கருணை காட்டப்படுவதற்கு. நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். ரு1 
  12. நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு சமுதாயத்தினர், இன்னொரு சமுதாயத்தினரை ஏளனம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள், இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். (ஒரு கூட்டத்தைச் சேர்ந்த) பெண்கள் (மற்றொரு கூட்டத்தைச் சேர்ந்த) பெண்களையும் (ஏளனம் செய்ய வேண்டாம்). ஒருவேளை அவர்கள், இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் உங்கள் மக்களையே பழித்துரைக்காதீர்கள். ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர் சூட்டி அழைக்காதீர்கள். ஏனெனில் நம்பிக்கை கொண்ட பின்னர் கெட்ட பெயர் எடுப்பது மிகவும் தீய ஒன்றாகும். கழிவிரக்கங் கொள்ளாதவர்கள் அநீதியிழைப்பவர்கள் ஆவார்கள். 
  13. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அதிகமான யூகங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் சில யூகங்கள் பாவமாகும். பிறர் குற்றங்களைத் தேடி அலையாதீர்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் புறங்கூறாதீர்கள். உங்களுள் எவராவது மரணமடைந்து விட்ட தம் சகோதரரின் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (உங்களைக் குறித்து இவ்வாறு கூறப்பட்டால்) நீங்கள் நிச்சயமாக அதனை வெறுப்பீர்கள். மேலும் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அல்லாஹ் அதிகமாக கழிவிரக்கத்தை ஏற்றுக் கொள்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  14. மக்களே! நாம் உங்களை ஆண், பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக, நாம் உங்களைக் கோத்திரங்களாகவும், இனங்களாகவும் ஆக்கியுள்ளோம்1. நிச்சயமாக அல்லாஹ்வின் பார்வையில் உங்களுள் கண்ணியமிக்கவர், உங்களுள் இறையச்சமிக்கவரே. நிச்சயமாக அல்லாஹ் எல்லாம் அறிந்தவனும், எல்லாம் உணர்ந்தவனுமாவான். 
  15. நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம் என்று காட்டரபிகள்2 கூறுகின்றனர். நீர் கூறுவீராக! நீங்கள் (உண்மையிலேயே) நம்பிக்கை கொள்ளவில்லை. நாங்கள் (வெளிப்படையாக) கட்டுப்பட்டோம் என்று நீங்கள் கூறுங்கள்.ஏனெனில் (உண்மையான) நம்பிக்கை இதுவரை உங்கள் உள்ளங்களில் நுழையவில்லை. (நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்தால், உங்கள் செயல்களுள் எதனையும் அவன் குறைத்து விட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  16. நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும் (உண்மையான) நம்பிக்கை கொண்டு, பின்னர் ஐயம் (எதுவும்) கொள்ளாமல் தங்கள் உடைமைகளையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் அறப்போர் செய்பவர்களேயாவார்கள். இத்தகையவர்களே உண்மையாளர்கள். 
  17. நீர் கூறுவீராக: நீங்கள் அல்லாஹ்வுக்கு உங்கள் மார்க்கத்தை அறிமுகம் செய்து வைக்கின்றீர்களா? ஆனால் அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் அறிகின்றான். மேலும் அவன் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான். 
  18. அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதனால் உமக்கு உபகாரம் செய்து விட்டதாக அவர்கள் கருதுகின்றனர். நீர் கூறுவீராக: நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை எனக்குச் செய்த உபகாரம் என்று கருதாதீர்கள். இதற்கு மாறாக, நீங்கள் உண்மையாளர்களாயின், அல்லாஹ் உங்களுக்கு (உண்மையான) நம்பிக்கையின்பால் வழிகாட்டியிருப்பதில் அவன் உங்களுக்கு அருள் செய்துள்ளான். 
  19. நிச்சயமாக அல்லாஹ் வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிகின்றான். மேலும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் உற்றுப் பார்க்கின்றான். ரு2
Powered by Blogger.