அதிகாரம்: காஃப்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 46
பிரிவுகள்: 3
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- காஃப்- (பேராற்றல் கொண்ட இறைவன் இவ்வதிகாரத்தை இறக்கியுள்ளான்). மேன்மைக்குரிய குர்ஆன் மேல் ஆணையாக! (அதாவது, இவ்வதிகாரத்தின் உண்மைக்கு குர்ஆனைச் சான்றாகக் காட்டுகிறோம்).
- அவர்களிலிருந்தே எச்சரிப்பவர் ஒருவர் அவர்களிடம் வந்துள்ளார் என்று அவர்கள் வியப்படைகின்றனர். இது புதுமையான ஒன்றேயாகும் என்று நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
- என்ன! நாங்கள் மரணமடைந்து, மண்ணாகி விடும் போதா (மீண்டும் எழுப்பப்படுவோம்?) இது (பகுத்தறிவிற்கு) மிகத் தொலைவிலான ஒரு திரும்புதலாகும் (என்றும் அவர்கள் கூறுகின்றனர்).
- பூமி அவர்களுள் எதனைக் குறைக்கிறதோ அதனை(யும், எதனை அதிகமாக்குகின்றதோ அதனையும்) நாம் அறிவோம்1. (எல்லாவற்றையும்) பாதுகாக்கின்ற ஒரு நூல் எம்மிடம் உள்ளது.
- ஆனால், அவர்களிடம் உண்மை வந்த போது, அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர். எனவே அவர்கள் குழப்ப நிலைக்கு ஆளாகி விட்டனர்.
- அவர்களுக்கு மேலுள்ள வானத்தை நாம் எவ்வாறு அமைத்து, அதனை அலங்கரித்துள்ளோம் என்பதையும், அதில் எந்தப் பிளவும் இல்லாதிருப்பதையும் அவர்கள் காணவில்லையா?
- பூமியை நாம் விரிவுபடுத்தி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம். மேலும் ஒவ்வொரு வகையான அழகிய இணைகளையும் அதில் நாம் வளரச் செய்தோம்.
- (இறைவனிடம்) திரும்பும் ஒவ்வொரு அடியாருக்கும் இதில் (ஞான) ஒளியும், நினைவூட்டலும் உண்டு.
- நாம் வானத்திலிருந்து அருளுக்குரிய தண்ணீரை இறக்கி, பின்னர் அதனைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடையாகும் தானியத்தையும் உற்பத்தி செய்கிறோம்.
- ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட குலைகளைக் கொண்ட உயரமான பேரீச்ச மரங்களையும் (உற்பத்தி செய்கிறோம்).
- (எமது) அடியார்களுக்கு உணவாக (அவற்றை ஆக்கியுள்ளோம்). மேலும் அதன் மூலம் மரணமடைந்த நிலத்தை உயிர்ப்பிக்கின்றோம். (மரணத்திற்குப் பின்னர்) உயிர் பெற்றெழுவதும் இவ்வாறேயாகும்.
- இவர்களுக்கு முன்னர் நூஹ்வின் சமுதாயத்தினரும், கிணற்றுக்குரியவர்களும்,ஸமூதும் பொய்யாக்கினர்.
- ஆதும், ஃபிர்அவ்னும், லூத்துவின் சகோதரர்களும்,
- காட்டில் வாழும் மக்களும், (எமன் நாட்டு மக்களாகிய) துப்பா சமுதாயத்தினரும் (உண்மையை ஏற்க மறுத்து) அவர்கள் எல்லோரும் எம் தூதர்களைப் பொய்யாக்கினர். இதனால் (அவர்கள்) எம்மால் பயமுறுத்தப்பட்ட தண்டனைக்கு ஆளானார்கள்.
- முதன்முறை படைப்பினால் நாம் களைப்படைந்து விட்டோமா? இல்லை; மாறாக, அவர்கள் புதிய படைப்பைக் குறித்துக் குழம்பிய நிலையில் உள்ளனர். ரு1
- நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். மேலும் அவனுடைய உள்ளம் (அவனிடம்) முணுமுணுப்பதையும் நாம் அறிவோம். நாம் அவனுக்கு, (அவனது) உயிர் நாடியை விட மிக அருகில் உள்ளோம்.
- (வானவர்களுள் ஒருவர் அவனது) வலப்பக்கத்திலும், (மற்றொருவர் அவனது) இடப்பக்கத்திலும் அமர்ந்து, (எல்லாவற்றையும்) பதிவு செய்யும் இருவர் பதிவு செய்கின்ற போது,
- அவன் எந்த வார்த்தையைக் கூறினாலும், பாதுகாக்கும் வானவர் (அதனைப் பதிவு செய்வதற்கு) அவனிடம் ஆயத்தமாகவே இருக்கின்றார்.
- மரண மயக்கம் நிச்சயமாக வரும். (அப்போது நாம் அவனிடம்) நீ எதிலிருந்து தப்பித்துக் கொள்ளக் கருதினாயோ அது இதுதான் (என்று கூறுவோம்).
- மேலும் எக்காளம் ஊதப்படும். அதுவே வாக்களிக்கப்பட்ட நாளாகும்.
- ஒவ்வொரு ஆன்மாவும், அதனுடன் ஒட்டி வருபவர் ஒரு(வான)வரும், சாட்சி கூறுபவர் ஒரு(வான)வரும் (இருக்கும் நிலையில்) வந்து விடும்.
- (பின்னர் நாம் கூறுவோம்): நீ இது (இந்த நாள்) குறித்துக் கவனமற்றிருந்தாய். இப்பொழுது நாம் உன் திரையை, உன்னை விட்டு அகற்றி விட்டோம். இன்று உன் பார்வை மிக்க கூர்மையானதாக இருக்கிறது.
- இதோ (அவனது சொல், செயல்களைப் பற்றிய குறிப்பு) என்னிடம் தயாராக உள்ளது என்று அவனுடன் இருப்பவர் கூறுவார்2.
- (அவனுடன் இருந்த இருவரிடமும் நாம் கூறுவோம்:) நிராகரிப்போர் எல்லோரையும், உண்மையின் பகைவர்களையும் நகரில் எறியுங்கள்.
- நன்மையைத் தடுப்பவனையும், வரம்பு மீறுபவனையும், ஐயம் கொள்பவனையும் (எறியுங்கள்).
- இவன் அல்லாஹ்வுடன் வேறு கடவுளை ஏற்படுத்திக் கொண்டான். எனவே அவனைக் கடுந்தண்டனையில் எறியுங்கள்.
- அவனுடைய கூட்டாளி கூறுவான்: எங்கள் இறைவா! நான் அவனை வரம்பு மீறச் செய்யவில்லை. மாறாக, அவனே வழிகேட்டில் நெடுந்தொலைவு சென்று விட்டான்.
- அ(தற்கு இறை)வன் கூறுவான்: என் முன்னிலையில் நீங்கள் சண்டையிடாதீர்கள். நான் ஏற்கனவே தண்டனை பற்றிய எச்சரிக்கையை உங்களுக்கு அனுப்பி விட்டேன்.
- எந்த வாக்கும் என் முன்னிலையில் மாற்றப்படுவதில்லை3. நான் என் அடியார்களுக்குச் சிறிதளவு கூட அநீதியிழைப்பதுமில்லை. ரு2
- அந்நாளில் நாம் நரகத்திடம், நீ நிரம்பி விட்டாயா? என்று கேட்போம். அதற்கு இன்னும் இருக்கிறதா? என்று அது பதிலளிக்கும்.
- இறையச்சமுடையவர்களுக்குச் சுவர்க்கம் தொலைவில் இல்லாமல், மிக அருகில் கொண்டு வரப்படும்4.
- உங்களுள் (இறைவனிடம்) குனிந்தவராய் (தம் செயல்களைச் சரியாகப்) பாதுகாத்து வந்த ஒவ்வொருவருக்கும் வாக்களிக்கப்பட்டது இதுவே.(என்று அவர்களிடம் கூறப்படும்).
- எவர், அளவற்ற அருளாளனுக்குத் தனிமையில் அஞ்சி, கழிவிரக்கம் கொண்ட உள்ளத்துடன் (அவனிடம்) வருவார்களோ
- அவர்களிடம், நீங்கள் இதில் சாந்தியுடன் நுழையுங்கள். இது நிலையான நாளாகும் (என்றும் கூறப்படும்).
- அவர்கள் விரும்புவதெல்லாம் அதில் அவர்களுக்குக் கிடைக்கும். (அவர்களுக்கு வழங்குவதற்கு) அதைவிட மிகுதியாகவும் எம்மிடம் உள்ளது.
- இவர்களுக்கு முன்னர், இவர்களை விடவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்த எத்தனையோ சமுதாயங்களை நாம் அழித்து விட்டோம். (அவர்களிடம் தண்டனை வந்தபோது, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக) அவர்கள் நாடுகளில் சுற்றித் திரிந்தனர். (இறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு) புகலிடம் எதுவும் அவர்களுக்கு இருந்ததா?
- (சிந்திக்கும்) உள்ளத்தைப் பெற்றிருப்பவருக்கு, அல்லது செவிசாய்த்துச் சிந்தனை செய்பவருக்கு நிச்சயமாக இதில் அறிவுரை உள்ளது.
- நிச்சயமாக நாம் வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ள எல்லாவற்றையும் ஆறு காலகட்டங்களில் படைத்தோம். எமக்கு எந்தக் களைப்பும் ஏற்பட்டதில்லை5.
- எனவே நீர் அவர்கள் கூறுவதைப் பொறுத்துக் கொண்டு, சூரியன் தோன்றுவதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும் நீர் உமது இறைவனைப் புகழ்ந்து, அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக.
- இரவு நேரத்திலும் அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. (குறிப்பிட்ட) வணக்கங்களுக்குப் பிறகும் (நீர் அவ்வாறே செய்வீராக).
- கேட்பீராக! ஒருநாள், அழைப்பவர் அருகிலுள்ள இடத்திலிருந்து6 அழைப்பார்.
- அந்நாளில் நிறைவேறக்கூடிய, தண்டனைக்குரிய ஒலியை அவர்கள் கேட்பார்கள். மேலும் அது (உயிர்பெற்று) வெளியேறும் நாளாகும்.
- நிச்சயமாக உயிரளிப்பதும், மரணத்தைத் தருவதும் நாமே! மேலும், திரும்பி வர வேண்டியதும் எம்மிடமே!
- அந்நாளில் அவர்க(ளின் தீய செயல்க)ளால் பூமி பல பகுதிகளாகப் பிளந்து, அவர்கள் மிக விரைவாக வெளிப்படுவர்7. ஒன்றுதிரட்டுதலான இது எமக்கு மிக எளிதே.
- அவர்கள் கூறுபவற்றை நாம் நன்கறிவோம். நீர் அவர்களை எவ்விதத்திலும் கட்டாயப்படுத்துவதற்காக நியமிக்கப்படவில்லை. எனவே நீர் எனது எச்சரிக்கைக்கு அஞ்சுபவருக்குக் குர்ஆனைக் கொண்டு அறிவுரை கூறுவீராக. ரு3