45- அல் ஜாஸியா

அதிகாரம்: அல் ஜாஸியா
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 38

பிரிவுகள்: 4


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. ஹா-மீம். மிகுந்த புகழுக்குரியவன்; மிகுந்த மேன்மைக்குரியவன் (ஆகிய இறைவனிடமிருந்து இவ்வதிகாரம் இறங்கியுள்ளது). 
  3. இவ்வேதம் வல்லோனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டுள்ளதாகும். 
  4. நிச்சயமாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு வானங்களிலும், பூமியிலும் அடையாளங்கள் உள்ளன. 
  5. உங்களின் படைப்பிலும், (பூமியில்) அவன் பரப்பியுள்ள படைப்பினங்களிலும் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கும் சமுதாயத்தினருக்கு அடையாளங்கள் உள்ளன. 
  6. மேலும், இரவு,பகல் மாறி மாறி வருவதிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கும் வாழ்விற்குரிய பொருளிலும், (நீரிலும்) பிறகு இதன் மூலம் பூமியை அதன் மரணத்திற்குப் பின்னர் உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிந்து கொள்ளும் சமுதாயத்தினருக்குப் பல அடையாளங்கள் உள்ளன. 
  7. அல்லாஹ்வின் இந்த அடையாளங்களை நாம் உமக்கு முற்றிலும் உண்மையுடன் ஓதிக் காட்டுகிறோம். இவ்வாறிருக்க, அல்லாஹ்வுக்கும், அவனது அடையாளங்களுக்கும் பின்னர் (அதாவது அவனது வார்த்தையையும், அடையாளங்களையும் மறுத்ததன் பின்னர்) அவர்கள் எந்தச் செய்தியை நம்புவர்? 
  8. பொய்யனாகவும், பாவியாகவும் இருக்கின்ற ஒவ்வொருவனுக்கும் அழிவு தான். 
  9. அத்தகையவன், தன் முன் ஓதிக் காட்டப்படுகின்ற அல்லாஹ்வின் வசனங்களைச் செவியேற்றதன் பின்னர், பெருமையுடன் அவன் அவற்றைச் செவியேற்காதது போன்று, தனது நிராகரிப்பில் பிடிவாதம் செய்கின்றான். எனவே வேதனையளிக்கக்கூடிய தண்டனையைப் பற்றிய செய்தியை நீர் அவனுக்கு அறிவிப்பீராக. 
  10. எம்முடைய வசனங்களுள் எதையாவது அவன் தெரிந்து கொண்டால், அதை ஏளனத்திற்குரியதாக ஆக்கிக் கொள்கின்றான். இத்தகையோருக்கு இழிவிற்குரிய தண்டனை உண்டு.
  11. அவர்களுக்கு முன்னாலிருப்பது நரகமேயாகும். மேலும் அவர்கள் சம்பாதித்திருப்பது அவர்களுக்குச் சிறிதும் பயனளிக்காது. அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களைப் பாதுகாப்பாளர்களாக எடுத்துள்ளனரோ அவர்களும் (பயனளிக்க மாட்டார்கள்). மேலும் அவர்களுக்கு மாபெரும் தண்டனை உண்டு. 
  12. இது(வே சரியான) நேர்வழியாகும். மேலும் தங்கள் இறைவனின் வசனங்களை மறுப்பவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனை உண்டு. ரு1 
  13. அல்லாஹ்தான், தன் கட்டளையைக் கொண்டு கடலை அதில் கப்பல்கள் இயங்குவதற்காக உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்தான். நீங்கள் அதன் வாயிலாக அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் (அவன் அவ்வாறு செய்தான்). 
  14. மேலும் அவன் வானங்களிலும், பூமியிலும் உள்ள எல்லாவற்றையும் உங்களுக்குத் தொண்டு செய்ய வைத்தான். சிந்தனை செய்யும் சமுதாயத்தினருக்கு நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன. 
  15. (தம்மைத் துன்புறுத்தியவர்களையும்) அல்லாஹ்வின் நாளைக் குறித்து அஞ்சாதவர்களையும் மன்னிக்குமாறு நம்பிக்கையாளர்களிடம் நீர் கூறுவீராக. இதனால் அவன் (அத்தகு) சமுதாயத்தினருக்கு, அவர்களது செயல்களுக்குரிய கூலியினைக் கொடுப்பான். 
  16. எவன் (நம்பிக்கைக்கேற்ப) நற்செயல் செய்கிறானோ, அதன் பலன் அவனுக்கே கிடைக்கும். எவன் தீமை செய்கிறானோ அதன் தீங்கும் அவனுக்கே- பின்னர் நீங்கள் (யாவரும்) உங்கள் இறைவனிடமே திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். 
  17. நிச்சயமாக நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு வேதத்தையும், ஆட்சியையும், நபித்துவத்தையும் வழங்கினோம். நாம் அவர்களுக்குத் தூய்மையான பொருட்களிலிருந்து வாழ்விற்குரியவற்றைக் கொடுத்தோம். மேலும் அக்கால மக்களை விட அவர்களுக்குச் சிறப்பினை அளித்தோம். 
  18. மேலும் நாம் அவர்களுக்குத் தெளிவான கட்டளைகளையும் வழங்கினோம். அவர்களிடம் (உண்மையான) ஞானம் வந்ததன் பின்னரே அவர்களுக்கிடையிலுள்ள போட்டியினால் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டனர். நிச்சயமாக உமது இறைவன், அவர்கள் கொண்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறித்து மறுமைநாளில் அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவான். 
  19. பின்னர் நாம் உம்மை, கட்டளைகளைக் கொண்ட தெளிவானதொரு மார்க்கத்தில் ஆக்கினோம். எனவே நீர் அதனைப் பின்பற்றுவீராக. அறிவற்றவர்களின் தீய விருப்பங்களைப் பின்பற்றாதிருப்பீராக. 
  20. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கெதிராக உமக்கு எந்தப் பயனையும் அளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அநீதியிழைப்பவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாவர். ஆனால் அல்லாஹ் இறையச்சமுடையவர்களின் நண்பனாவான்.
  21. இ(வ் வேதமான)து, மனித இனத்திற்குத் தெளிவான சான்றுகள்(உள்ளதாகும்). மேலும் உறுதியான நம்பிக்கை கொள்கின்ற சமுதாயத்தினருக்கு வழிகாட்டுதலும், கருணையுமாகும். 
  22. தீயசெயல்களைச் செய்கின்றவர்கள், அவர்களின் வாழ்வும், மரணமும் ஒன்றுபோல் ஆகும் வண்ணம்1, நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்கின்றவர்களைப் போன்று நாம் ஆக்குவோம் என்று எண்ணுகின்றனரா? அவர்களின் தீர்ப்பு எவ்வளவு கெட்டதாக உள்ளது? ரு2 
  23. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் நிலையான ஒரு நியதிக்கேற்ப படைத்துள்ளான். இதன் விளைவாக ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் சம்பாதிப்பதற்குரிய நற்பலன் கொடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு அநீதியிழைக்கப்படமாட்டாது. 
  24. தனது மன இச்சைகளை தனது கடவுளாக ஆக்கிக் கொண்டவனை நீர் பார்த்தீரா? மேலும் அல்லாஹ் தனது ஞானத்தின் அடிப்படையில் அவனை வழிதவறியவன் என்று தீர்மானித்து, அவனது காதுகளிலும், அவனது உள்ளத்திலும் முத்திரையிட்டு, அவனது கண்களில் திரையிட்டுள்ளான். எனவே அல்லாஹ்வு(டைய இச் செயலு)க்குப் பின்னர் அவனுக்கு நேர்வழி காட்டுபவர் யார்? நீங்கள் அறிவுரையினைப் பெற்றுக் கொள்வதில்லையா? 
  25. நம்முடைய இவ்வுலக வாழ்வைத் தவிர வேறு (வாழ்வு) இல்லை. நாம் (இங்கேயே) மரணமடைகின்றோம். மேலும் நாம் (இங்கே) வாழ்கின்றோம். காலம் தான் நம்மை அழிவிற்குள்ளாக்குகின்றது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்களுக்கு அதனைப் பற்றிய எந்த அறிவும் கிடையாது. அவர்கள் வீண் கற்பனை செய்கின்றனர். 
  26. எமது மிகத்தெளிவான வசனங்கள் அவர்களுக்குப் படித்துக் காட்டப்படும் போது, நீங்கள் உண்மையாளர்களாயின், எங்கள் மூதாதையர்களை (த் திரும்ப)க் கொண்டு வாருங்கள் எனக் கூறுவதே அவர்களின் வாதமாக இருக்கின்றது. 
  27. நீர் கூறுவீராக: அல்லாஹ்வே உங்களுக்கு உயிரைக் கொடுக்கிறான். பின்னர் அவனே உங்களை மரணமடையச் செய்கிறான். இதன் பின்னர் ஐயத்திற்கிடமில்லாத மறுமை நாள் வரை அவனே உங்களை ஒன்றுதிரட்டுவான். ஆனால் மக்களுள் பெரும்பாலார் இதனை அறிவதில்லை. ரு3 
  28. வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. வாக்களிக்கப்பட்ட நேரம் வரும் நாளில் உண்மையினை ஏற்க மறுப்பவர்கள், இழப்பிற்குரியவர்களாவர். 
  29. ஒவ்வொரு சமுதாயத்தினரும் மண்டியிட்டு வீழ்ந்து கிடப்பதை நீர் காண்பீர். ஒவ்வொரு சமுதாயத்தினரும், அவர்களது வேதத்தின்பால் அழைக்கப்படுவர்2. இன்று உங்களுக்கு, உங்கள் செயல்களுக்குரிய கூலி கொடுக்கப்படும். 
  30. இது எமது வேதமாகும். இது உங்களுக்கு எதிராக உண்மையைப் பேசுகின்றது. நீங்கள் செய்தவற்றையெல்லாம் நாம் பதிவு செய்து கொண்டிருந்தோம்.
  31. எனவே நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தவர்களை அவர்களின் இறைவன் தன் கருணையில் நுழையச் செய்வான். இதுவே மிகத்தெளிவான வெற்றியாகும். 
  32. ஆனால், நிராகரித்தவர்களைப் பொறுத்த வரை, உங்களுக்கு என் வசனங்கள் படித்துக் காட்டப்பட்டதில்லையா? ஆனால் நீங்கள் கர்வம் கொண்டிருந்தீர்கள். மேலும் நீங்கள் குற்றம் செய்யும் சமுதாயத்தினராக இருந்தீர்கள்.(என்று அவர்களிடம் கூறப்படும்). 
  33. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதேயாகும். (உலகின் இறுதி வாழ்விற்குரிய) அந்த நேரமும் (வரவிருக்கிறது) . அதில் எத்தகு ஐயத்திற்கும் இடமில்லை என்று (உங்களிடம்) கூறப்பட்ட பொழுது, நீங்கள், அந்தநேரம் எதுவென்று நாங்கள் அறியோம்; நாங்கள் அதனை ஒரு கற்பனையென்றே கருதுகின்றோம்; அது குறித்து எங்களுக்கு எந்த உறுதிப்பாடும் கிடையாது என்றீர்கள். 
  34. அவர்கள் செய்த தீமைகள் அவர்களுக்கு வெளிப்பட்டுவிடும். அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்தது அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். 
  35. அவர்களிடம் இவ்வாறு கூறப்படும்: உங்களுடைய இந்த நாளைச் சந்திக்க இருந்ததை நீங்கள் மறந்தது போன்று, இன்று நாம் உங்களை மறந்து விடுவோம். உங்கள் புகலிடம் நெருப்பாகும். உங்களுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை. 
  36. இதற்குக் காரணமானது நீங்கள் அல்லாஹ்வின் அடையாளங்களை ஏளனத்திற்கு உரியதாக்கினீர்கள். உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட்டது. எனவே இன்று அவர்கள் அதிலிருந்து வெளியேற்றப்படவும் மாட்டார்கள். மேலும் (கருணைக்காக) வேண்டிக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப்படவும் மாட்டார்கள். 
  37. வானங்கள் மற்றும் பூமியின் இறைவனும், எல்லா உலகங்களின் இறைவனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். 
  38. வானங்களிலும், பூமியிலுமுள்ள மகிமைகளெல்லாம் அவனுக்கே உரியன. அவன் வல்லமையுள்ளவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான். ரு4

Powered by Blogger.