அதிகாரம்: அஸ் ஸாரியாத்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 61
பிரிவுகள்: 3
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வன்மையாகச் சிதறடிக்கும் காற்றுகளை சான்றாகக் காட்டுகிறோம்.
- பின்னர் அவை (மழையின்) சுமையைச் சுமக்கின்றன.
- பின்னர் மெதுவாகச் செல்கின்றன.
- பின்னர் (எமது) கட்டளையின் படி கடமையை நிறைவேற்றுகின்றன.
- உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிச்சயமாக உண்மையானதே1.
- (நற்பலன், தண்டனை குறித்த) தீர்ப்பு நிச்சயமாக நிகழ்ந்தே தீரும்.
- வழித்தடங்களைக் கொண்ட வானத்தின் மேல் ஆணையாக2. (அதாவது மேற்குறிப்பிட்டதன் உண்மைக்கு இதனைச் சான்றாகக் காட்டுகிறோம்).
- நிச்சயமாக நீங்கள் (உங்கள்) பேச்சில் முரண்பட்டவர்களாக இருக்கிறீர்கள்.
- எவன் திரும்பி விடுகின்றானோ, அவனே அதிலிருந்து திருப்பி விடப்படுகின்றான்.
- பொய்யர்களுக்கு அழிவே!
- அவர்கள் (அறியாமையின்) அடிமட்டத்தில் இருக்கும் கவனமற்றவராவார்கள்.
- தீர்ப்பு நாள் எப்போது வரும் என்று அவர்கள் வினவுகின்றனர்.
- அவர்கள் நரக நெருப்புக்கு ஆளாகும் நாளே (என்று நீர் கூறுவீராக).
- உங்கள் தீங்கை நீங்கள் சுவைத்துப் பாருங்கள். நீங்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த (தண்டனையான)து இது தான் (என்று கூறப்படும்).
- நிச்சயமாக இறையச்சமுடையோர் தோட்டங்களிலும், நீரூற்றுக்களிலும் இருப்பார்கள்.
- அவர்களின் இறைவன், அவர்களுக்கு வழங்குவதை அவர்கள் பெறுவார்கள். ஏனெனில் அவர்கள் இதற்கு முன்னரே நன்மை செய்து வந்தனர்.
- அவர்கள் இரவு நேரத்தில் குறைவாகவே துயில் கொண்டனர்.
- விடியற்காலையில் அவர்கள் பாவமன்னிப்புக் கோரி வந்தனர்.
- அவர்களின் செல்வத்தில், கேட்பவருக்கும், ஆதரவற்றவருக்கும் ஒரு பங்கு இருந்தது.
- உறுதியான நம்பிக்கை கொண்டவர்களுக்குப் பூமியில் பல அடையாளங்கள் உள்ளன.
- உங்களுக்குள்ளாகவும் (பல அடையாளங்கள் உள்ளன), நீங்கள் பார்ப்பதில்லையா?
- உங்களுக்குரிய உணவும், உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவையும் வானத்தில் இருக்கின்றன.
- வானம், பூமி ஆகியவற்றின் இறைவன் மேல் ஆணையாக! நிச்சயமாக இ(ந்தக் குர்ஆனான)து நீங்கள் பேசுவது போன்று உண்மையானதேயாகும். ரு1
- இப்ராஹீமுடைய கண்ணியத்திற்குரிய விருந்தினரின் செய்தி உமக்குக் கிடைத்ததா?
- அவர்கள், அவரிடம் வந்து (உமக்குச்) சாந்தி (உண்டாவதாக) என்று கூறியபோது, அவர் (உங்களுக்கும்) சாந்தி (உண்டாவதாக) என்றார். (அவர்கள் யாவரும்) அறிமுகமில்லாதவர்களாக இருந்தனர்.
- பின்னர் அவர் நிதானமாகத் தம் குடும்பத்தினரிடம் சென்று, கொழுத்த கன்றுக் குட்டியொன்றைக் கொண்டு வந்து,
- அதனை அவர்களின் முன் வைத்து, நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்றார்.
- அவருக்கு அவர்களைப் பற்றிய ஓர் அச்ச உணர்வு ஏற்பட்டது. (இதனைப் புரிந்து கொண்ட) அவர்கள், 'நீர் அஞ்ச வேண்டாம்' என்று கூறி, அவருக்கு அறிவுள்ள ஒரு மக(ன் பிறக்கவிருப்பத)னைப் பற்றி நற்செய்தியினை அவர்கள் கூறினர்.
- பின்னர் அவருடைய மனைவி, முகத்தில் வெட்கத்தின் அறிகுறிகளுடன் முன்னால் வந்து, தமது முகத்தில் அடித்து மலடியான ஒரு கிழவி(யாக நான் இருக்கின்றேன்) என்றார்.
- அவ்வாறே உமது இறைவன் கூறியுள்ளான்; நிச்சயமாக அவன் நுட்பமான ஞானமுள்ளவனும், நன்கு அறிபவனுமாவான் என்று அவர்கள் கூறினர்.
- தூதர்களே! இப்போது உங்கள் (வருகையின்) நோக்கம் என்ன? என்று (இப்ராஹீம்) கேட்டார்.
- இதற்கு அவர்கள் கூறினர்: நாங்கள் குற்றவாளிகளான சமுதாயத்தினரிடம் அனுப்பப்பட்டுள்ளோம்.
- களி மண்ணாலான கற்களை நாங்கள் அவர்கள் மீது பொழிவதற்காக ( அனுப்பப்பட்டுள்ளோம்)3.
- (அக் கற்கள்) வரம்பு மீறி நடந்தவர்களுக்கு(த் தண்டனைக்கென) உமது இறைவனிடம் அடையாளமிடப்பட்டுள்ளவையாகும்.
- அங்கிருந்த நம்பிக்கையாளர்களை (அதிலிருந்து) நாங்கள் வெளியேற்றி விட்டோம்.
- நாங்கள் அங்கு (எமக்குக்) கட்டுப்பட்டவர்களின் ஒரே ஒரு வீட்டையே கண்டோம்.
- வேதனையளிக்கக்கூடிய தண்டனைக்கு அஞ்சுபவர்களுக்காக நாங்கள் அங்கு ஓர் அடையாளத்தை விட்டு வைத்துள்ளோம்.
- மூஸாவி(ன் நிகழ்ச்சியி)லும் (பல அடையாளங்கள் உள்ளன). (அதாவது) நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான சான்றுடன் அனுப்பிய போது,
- அவன் தனது கர்வத்தினால் (மூஸாவைப்) புறக்கணித்து, (அவர்) ஒரு மந்திரவாதி அல்லது பைத்தியக்காரன் என்றான்.
- எனவே நாம் அவனையும், அவனது படைகளையும் பிடித்து, அவர்கள் எல்லோரையும் கடலில் எறிந்து விட்டோம். மேலும் அவன் (இன்றும்) பழிக்கப்படுகிறான்.
- ஆதுவின் (நிகழ்ச்சியி)லும் (பல அடையாளங்கள் உள்ளன. குறிப்பாக) அழிவிற்குள்ளாக்கும் காற்றை அவர்களிடம் நாம் அனுப்பிய போது,
- அது எதன் மீது வீசியதோ, அதனையெல்லாம் சிதைந்து போன எலும்பைப் போன்று ஆக்காமல் விட்டதில்லை.
- ஸமூதுவி(ன் நிகழ்ச்சியி)லும் (பல அடையாளங்கள் உள்ளன. குறிப்பாக அவருடைய சமுதாயத்திடம்) நீங்கள் சிறிது காலம் பயனடையுங்கள் என்று கூறப்பட்ட போது4,
- அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை மீறி நடந்தனர். எனவே, அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இடி முழக்கம் அவர்களைப் பற்றிக் கொண்டது.
- அவர்கள் எழுந்து நிற்கவும் இயலாதவர்களாகி விட்டார்கள்; அவர்களால் உதவி பெறவும் முடியவில்லை.
- இவர்களுக்கு முன்னர் நூஹ்வின் சமுதாயத்தினரையும் (நாம் அழித்து விட்டோம்). அவர்கள் கட்டுப்படாத சமுதாயத்தினராக இருந்தனர். ரு2
- நாம் வானத்தை வல்லமையினால் உருவாக்கினோம். நிச்சயமாக நாம் விரிவுபடுத்துவதற்கு ஆற்றல் பெற்றுள்ளோம்.
- பூமியையும் நாம் விரித்துள்ளோம். (பொருட்களை) நாம் எவ்வளவு அழகாகத் தயாரிக்கின்றோம்.
- நீங்கள் போதனை பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் நாம் இணைகளாகப் படைத்துள்ளோம்.
- எனவே நீங்கள் அல்லாஹ்வின்பால் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்காக அவனிடமிருந்து (வந்த) தெளிவான எச்சரிப்பவன் ஆவேன்.
- அல்லாஹ்வுடன் வேறெந்தக் கடவுளையும் நீங்கள் ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் உங்களுக்காக அவனிடமிருந்து (வந்த) தெளிவான எச்சரிப்பவன் ஆவேன்.
- இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களிடம் வந்த தூதர்களை மந்திரவாதிகள் அல்லது பைத்தியக்காரர்கள் என்றே அவர்கள் கூறினர்.
- அவர்கள் இதனை ஒருவருக்கொருவர் மரபுரிமையாகப் பெற்றுக் கொண்டனரா?5. அவ்வாறன்று; மாறாக, அவர்கள் யாவரும் குழப்பம் செய்யும் சமுதாயத்தினராவர்.
- எனவே நீர் அவர்களிடமிருந்து விலகி விடுவீராக. உம்மீது எந்தப் பழியும் இருக்காது.
- நீர் நினைவூட்டிக் கொண்டேயிருப்பீராக. ஏனென்றால் நினைவூட்டுவது நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்குப் பயனளிக்கின்றது.
- நான் ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன்.
- நான் அவர்களிடம் வாழ்க்கைக்குத் தேவையான எதையும் நாடுவதில்லை; அவர்கள் எனக்கு உணவளிக்க வேண்டுமென்றும் நான் நாடுவதில்லை.
- நிச்சயமாக அல்லாஹ் எல்லோருக்கும் உணவளிப்பவனும், ஆற்றல் மிக்க வல்லவனுமாவான்.
- அநீதியிழைத்தவர்கள் தங்கள் தோழர்களு(டைய குற்றத்து) க்குரிய பங்கைப் போன்று, தாங்களும் தங்கள் பங்கைச் சம்பாதித்துள்ளனர். எனவே (தண்டனையை) விரைவுபடுத்துமாறு அவர்கள் என்னிடம் கோர வேண்டாம்.
- நிராகரிப்பவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய நாளில், அவர்களுக்கு அழிவு தான். ரு3.