42- அஷ்ஷூரா

அதிகாரம்: அஷ்ஷூரா
அருளப்பெற்ற இடம்: மக்கா | வசனங்கள்: 54

பிரிவுகள்: 5

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. ஹா-மீம் (இவ்வதிகாரத்தை அருளியவன்) மிகுந்த புகழுக்குரியவன்; மிகுந்த மேன்மைக்குரியவன்; 
  3. ஐன்_ஸீன்_காஃப் நன்கு அறிபவன்; நன்கு கேட்பவன்; பேராற்றல் பெற்றவன்1 (ஆகிய இறைவன் இதனை இறக்கியுள்ளான்). 
  4. உமக்கு முன்னிருந்தோருக்கு அறிவித்தது போலவே உமக்கும் (அல்லாஹ்) வஹீ அறிவிக்கிறான். (அதாவது) அல்லாஹ் வல்லமை மிக்கோனும், ஞானமிக்கோனுமாவான். 
  5. வானங்களிலும், பூமியிலுமுள்ளவையெல்லாம் அவனுக்கே உரியவை. அவன் உயர்ந்தவனும், மகத்துவமிக்கவனுமாவான். 
  6. வானவர்கள், தங்கள் இறைவனைப் புகழ்ந்து (அவனது) தூய்மையினை எடுத்துரைத்தும், பூமியிலுள்ளவர்களுக்காக மன்னிப்புக் கோரியும் இருக்கும் வேளையிலும், வானங்கள்,  அவற்றிற்கு மேலிருந்து பிளந்து விழக் கூடும்2. கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வே மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  7. அவனையன்றி (மற்றவர்களைத் தங்களுக்கு)ப் பாதுகாவலர்களாக ஆக்குபவர்களை அல்லாஹ் கவனித்து வருகிறான். நீர் அவர்களுக்குக் காப்பாளர் அல்ல. 
  8. அவ்வாறே நகரங்களின் தாயையும் 3, அதன் சுற்றுப்புறத்திலுள்ள மக்களையும் நீர் எச்சரிப்பதற்காகவும்,  ஐயமின்றி (மக்கள் எல்லோரும்) ஒன்றுதிரட்டப்படக்கூடிய நாளைப் பற்றி நீர் எச்சரிப்பதற்காகவும், நாம் உமக்குக் குர்ஆனை அரபு மொழியில் வஹி மூலம் அறிவித்தோம். (அந்நாளில்) சிலர் சுவர்க்கத்திலும், மற்றும் சிலர் கொழுந்து விட்டெரியும் நெருப்பிலும் இருப்பார்கள். 
  9. அல்லாஹ் (கட்டாயமாக) விரும்பியிருந்தால், அவன் அவர்களை ஒரே சமுதாயத்தினராக்கியிருப்பான். ஆனால் அவன், தான் விரும்புபவரைத் தன் அருளில்  நுழையச் செய்கின்றான். அநீதியிழைப்பவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இல்லை. 
  10. அவர்கள் அவனை (அல்லாஹ்வை)யன்றி (மற்றவர்களைத் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக ஏற்படுத்திக் கொண்டார்களா? ஆனால் அல்லாஹ் தான் (உண்மையான) பாதுகாவலனாவான். இறந்தவர்களுக்கு அவனே உயிர் கொடுக்கிறான். அவன் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான். ரு1
  11. நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும், அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே உள்ளது. (நீர் கூறுவீராக) இத்தகையவனே என் இறைவனாகிய அல்லாஹ். நான் அவனிடமே நம்பிக்கை வைத்துள்ளேன். மேலும் நான் அவனிடமே திரும்புகின்றேன். 
  12. அவன் வானங்களையும், பூமியையும் படைத்தவனாவான். அவன் உங்கள் இனத்திலிருந்தே உங்களுக்காகத் துணைகளை உருவாக்கினான்; கால்நடைகளிலும் இணைகளை ஏற்படுத்தினான். அவன் உங்களை அதில் பெருகச் செய்கின்றான். அவனைப் போன்றது எதுவுமில்லை. அவன் நன்கு கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். 
  13. வானங்கள், பூமி ஆகியவற்றின் திறவுகோல்கள் அவனுக்கே உரியன. அவன் தான் விரும்புபவருக்கு வாழ்விற்குரியவற்றைத் தாராளமாக வழங்குகின்றான்; (தான் விரும்புபவருக்கு அவற்றைக்) குறைக்கவும் செய்கின்றான். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான். 
  14. (அடிப்படையைப் பொருத்தவரை) அவன் நூஹுக்குக் கட்டளையிட்டதையே உமக்கு மார்க்கமாக வழங்கியுள்ளான். மேலும் நாம் உமக்கு வஹி அறிவித்ததும், இப்ராஹிம், மூஸா, ஈசா ஆகியோருக்குக் கட்டளையிட்டதும், இறைவனுக்குக் கீழ்ப்படிதலை (உலகில்) நிலை நாட்டுங்கள் என்றும், அதனைப் பற்றி (ஒருபோதும்) பிரிவினை கொள்ளாதீர்கள் என்றுமேயாகும். இணை வைப்பவர்களை நீர் எதன்பால் அழைக்கின்றீரோ அது,  அவர்களுக்கு (மிக)க் கடினமானதாகத் தோன்றும். அல்லாஹ், தான் விரும்புபவர்களைத் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். மேலும் (தன்னிடம்) திரும்புபவருக்கே வழி காட்டுகின்றான். 
  15. அவர்களிடம் முழுமையான ஞானம் (குர்ஆன்) வந்ததன் பின்னரே அவர்களுக்கிடையிலுள்ள போட்டிகளினால் அவர்கள் (பல பிரிவினர்களாகப்) பிரிந்தனர். உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே ஏற்பட்டுவிட்ட குறிப்பிட்ட ஒரு காலம் வரையிலான ஒரு வாக்கு இல்லாமலிருந்திருப்பின், அவர்களுக்கிடையே முன்னரே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்4. அவர்களுக்குப் பின்னர் வேதத்திற்கு வாரிசாக ஆக்கப்பட்டவர்கள், அது குறித்து அமைதியை குலைக்கும் ஐயப்பாட்டில் இருக்கின்றனர். 
  16. எனவே, நீர் (மக்களினத்தை இம்மார்க்கத்தின் பால்) அழைப்பீராக. உமக்குக் கட்டளையிட்டபடி நீர் உறுதியுடன் நிலைத்திருப்பீராக, அவர்களின் தீய விருப்பங்களை நீர் பின்பற்றாதிருப்பீராக. மேலும் நீர் கூறுவீராக: அல்லாஹ் இறக்கியுள்ள வேதத்தில் நான் நம்பிக்கை கொள்கிறேன். மேலும் நான் உங்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்க வேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனுமாவான். எங்கள் செயல்(களின் கூலி) எங்களுக்கும், உங்கள் செயல்(களின் கூலி) உங்களுக்கும் கிடைக்கும். எங்களுக்கும், உங்களுக்குமிடையில் எவ்வித தர்க்கமும் இல்லை. அல்லாஹ் நம்மை (ஒரு நாளில்) ஒன்று திரட்டுவான். மேலும் (நாமெல்லாம்) அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டும். 
  17. அ(அல்லாஹ்வின் தூது)வரது வேண்டுதல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட(தை இவர்கள் கண்ட) பின்னரும், அல்லாஹ்வைக் குறித்து வாக்குவாதம் செய்பவர்களின் வாக்குவாதத்திற்கு, அவர்களின் இறைவனிடத்து எத்தகு மதிப்பும் இல்லை. அவர்கள் மேல் (இறைவனது) பெருங்கோபம் இறங்கும். மேலும் அவர்களுக்குக் கடுந்தண்டனை (விதிக்கப்பட்டு ) உள்ளது. 
  18. உண்மையைக் கொண்ட வேதத்தையும், துலாக்கோலையும்5 இறக்கியவன் அல்லாஹ்வே. குறிப்பிட்ட அந்த நேரம் விரைவில் வந்து விடலாம் என்று உமக்குத் தெரிவித்தது எது? 
  19. அதனிடத்து நம்பிக்கை கொள்ளாதவர்கள், அதனை விரைவு படுத்த விரும்புகின்றனர்6. ஆனால் அதன் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அதற்கு அஞ்சுகின்றனர். அது உண்மை என்றும் அவர்கள் அறிகின்றனர். கவனமாகக் கேளுங்கள்! அந்த நேரத்தைக் குறித்து ஐயப்பாடு கொண்டிருப்பவர்கள் வழிகேட்டில் வெகு தொலைவில் சென்று விட்டவர்களாவர். 
  20. அல்லாஹ் தன் அடியார்களுக்கு நன்மை செய்கின்றவனாவான். அவன் தான் விரும்புவோருக்கு வாழ்விற்குரியவற்றை வழங்குகின்றான். அவன் ஆற்றல் மிக்கவனும், வல்லவனுமாவான். ரு2
  21. மறுமையின் அறுவடையை விரும்புபவருக்கு அவரது அறுவடையில் நாம் மிகுதியாக வழங்குவோம்.  இவ்வுலகின் அறுவடையை விரும்புபவருக்கு நாம் அதிலிருந்து வழங்குகின்றோம். ஆனால், அவருக்கு மறுமையில் பங்கு எதுவும் இருக்காது. 
  22. அல்லாஹ் அனுமதிக்காததை அவர்களுக்கு மார்க்கச் சட்டத்திற்குட்பட்டதாக ஆக்கிய, (இறைவனுக்கு) இணையானவர்கள் அவர்களுக்கு இருக்கின்றனரா? (இறைவனிடமிருந்து) தீர்ப்பளிக்கும் வாக்கு ஏற்படாதிருந்திருப்பின்7 , இப்பொழுதே அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும்8. நிச்சயமாக அநீதி இழைப்பவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையுள்ளது. 
  23. அநீதியிழைத்தவர்களை, தாங்கள் செயல்களின் காரணமாக அஞ்சுபவர்களாக நீர் காண்பீர். (வாக்களிக்கப்பட்ட தண்டனையாகிய) அது, அவர்களுக்கு ஏற்பட்டே தீரும். ஆனால் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தவர்கள் அடர்த்தியான தோட்டங்களில் இருப்பார்கள்; அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்களுக்கு, அவர்களின் இறைவனிடம் உண்டு. இதுவே பேரருளாகும். 
  24. நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்யும் தன் அடியார்களுக்கு, அல்லாஹ் நற்செய்தி தருவதும் இதுவே. நான் இதற்காக (எனது இத் தொண்டிற்காக) நெருங்கிய உறவினர்களுக்கிடையே காட்டப்படுகின்ற அன்பைத் தவிர9, வேறெந்த வெகுமதியும் உங்களிடம் கேட்டதில்லை என்று நீர் கூறுவீராக. எவர் நன்மையைச் செய்கிறாரோ அவரை  நன்மையில் முன்னேறச் செய்கிறோம். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மதிப்பவனுமாவான். 
  25. (முஹம்மது நபியாகிய) அவர், அல்லாஹ்வுக்கெதிராகப் பொய்யைப் புனைந்து கூறியுள்ளார் என்று அவர்கள் கூறுகின்றனரா? (அது உண்மையாயின்) அல்லாஹ் விரும்பியிருந்தால், உமது இதயத்தில் அவன் முத்திரையிட்டிருப்பான்10. ஆனால் உண்மையில், அல்லாஹ் பொய்யை அழித்துத் தன் அடையாளங்களின் மூலம் உண்மையை நிலைநாட்டுகின்றான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களிலுள்ளவற்றை நன்கு அறிகின்றான். 
  26. அவனே தன் அடியார்களின் கழிவிரக்கத்தை ஏற்றுக் கொண்டு (அவர்களின்) தவறுகளை மன்னிக்கிறான். மேலும் நீங்கள் செய்வதை அவன் அறிகிறான். 
  27. நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்(களின் வேண்டுதல்)களை அவன் ஏற்றுக் கொண்டு, அவர்களுக்குத் தன் அருளிலிருந்து (அவர்களுக்குரிய கூலியை விட) மிகுதியாகக் கொடுக்கிறான். மேலும் நிராகரிப்பவர்களுக்குக் கடினமான தண்டனை உண்டு. 
  28. அல்லாஹ், தன் அடியார்களுக்கு வாழ்விற்குரியவற்றை மிக அதிகமாக வழங்கியிருந்தால், அவர்கள் பூமியில் கிளர்ச்சி செய்திருப்பார்கள். ஆனால் அவன் விரும்பும் அளவிற்கேற்பவே (அவற்றை) இறக்குகின்றான். நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் நிலை)களை நன்கு தெரிந்திருப்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். 
  29. அவர்கள் நம்பிக்கையிழந்ததன் பின்னர், அவனே மழையை இறக்கித் தன் கருணையைப் பரப்புகின்றான். அவனே பாதுகாவலனும், புகழுக்குரியவனுமாவான். 
  30. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பும், அவ்விரண்டிற்குமிடையில் உயிரினங்களின் வகையினை அவன் பரப்பியிருப்பதும், அவனுடைய அடையாளங்களைச் சேர்ந்தவையாகும். அவன் விரும்பும் போது, அவர்களெல்லோரையும் ஒன்று திரட்டுவதற்கு ஆற்றல் பெற்றவனாவான்11. ரு3
  31. [7:09 AM, 12/17/2016] Ibrahim Machan: உங்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால், அது உங்கள் கைகள் சம்பாதித்தவற்றி(ன் விளைவி)னாலேயாகும். அவன் (உங்கள் பாவங்களுள்) அதிகமானவற்றை மன்னிக்கிறான். 
  32. உங்களால் பூமியில் (அல்லாஹ்வின்) நோக்கத்தைச் செயலிழக்கச் செய்ய முடியாது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நண்பருமில்லை; எந்த உதவியாளருமில்லை. 
  33. கடலில் செல்லும் மலைகளைப் போன்ற கப்பல்களும் அவனது அடையாளங்களைச் சேர்ந்தவையே. 
  34. அவன் விரும்பினால், அவை அதன் மேற்பரப்பில் அசைவற்று அப்படியே நின்று விடுவதற்காகக் காற்றை அவனால் நிறுத்தி விட முடியும். பொறுமையைக் கடைப்பிடித்து, நன்றி செலுத்தும் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் அடையாளங்கள் உள்ளன. 
  35. அல்லது அவர்கள் சம்பாதித்தவற்றின் காரணமாக, அவனால் அவற்றை அழித்து விட முடியும். ஆனால் அவன் (அவர்களின் பாவங்களுள்) அதிகமானவற்றை மன்னித்து விடுகிறான். 
  36. எம் அடையாளங்கள் குறித்து விவாதம் செய்பவர்களை, அவன் அறிகின்றான். அவர்களுக்குத் தப்பி ஓடுவதற்கு எந்த இடமும் கிடையாது. 
  37. உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை, இவ்வுலக வாழ்விற்குரிய தற்காலிகமான பொருட்களேயாகும். நம்பிக்கை கொண்டு, இறைவனிடமே நம்பிக்கை வைத்திருப்போருக்கு, அல்லாஹ்விடம் உள்ளது மிகச்சிறந்ததும், நிலையானதுமாகும். 
  38. அத்தகையோர் பெரும் பாவங்களிலிருந்தும், தீய நடத்தைகளிலிருந்தும் விலகிக் கொள்வார்கள். அவர்களுக்குக் கோபம் ஏற்படும் போது, அவர்கள் மன்னித்து விடுகின்றனர். 
  39. மேலும் அவர்கள் தங்கள் இறைவனுக்குச் செவி சாய்த்துத் தொழுகையை நிலைநாட்டுகின்றனர். அவர்களது பிரச்சனைகள் அவர்களுக்கிடையே கலந்தாலோசி(த்து முடிவெடு)க்கப்படுகின்றன. மேலும் நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து, அவர்கள் செலவழிக்கின்றனர். 
  40. அவர்களுக்கு அநீதியிழைக்கப்படும் போது, அவர்கள் (வரம்பு மீறாமல்) பழி வாங்கவும் செய்கின்றார்கள். 
  41. ஒரு தீங்கிற்குரிய கூலி அதேயளவு தீங்கேயாகும்.  (என்பதனை அவர்கள் நினைவில் கொள்கின்றனர்) ஆனால், எவர் மன்னித்து, சீர்திருத்துகிறாரோ அவருக்குரிய நற்பலன் அல்லாஹ்விடமுள்ளது. நிச்சயமாக அவன் அநீதியிழைப்பவர்களை நேசிப்பதில்லை. 
  42. எவர்கள் தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்டதன் பின்னர், (அதேயளவு) பழி வாங்குகின்றார்களோ அவர்கள் பேரில் எந்தக் குற்றமுமில்லை. 
  43. மக்களுக்கு அநீதியிழைத்து, நியாயமின்றிப் பூமியில் வரம்பு மீறுபவர்களின் பேரிலே குற்றம் இருக்கும். இத்தகையவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனை உண்டு. 
  44. ஒருவர் பொறுமையைக் கடைப்பிடித்து, மன்னித்து விடுவாரானால், நிச்சயமாக அது துணிவுமிக்க  செயலைச் சேர்ந்ததாகும். ரு4 
  45. அல்லாஹ் எவரை வழி தவறியவர் என்று தீர்மானிக்கின்றானோ அவருக்கு, அதன் பின்னர் பாதுகாவலர் எவரும் இல்லை. அநீதியிழைப்பவர்கள் தண்டனையைக் காணும் போது, (அதிலிருந்து) திரும்பிச் செல்வதற்கு வழி ஏதும் உண்டா? என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர்! 
  46. இழிவின் காரணமாகத் தலை குனிந்தவர்களாகவும், கீழ்நோக்கிப் பார்ப்பவர்களாகவும் அவர்கள் அதன் (தண்டனையின்) முன் கொண்டு வரப்படுவதை நீர் காண்பீர். தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் மறுமை நாளில் இழப்பிற்குள்ளாக்கியவர்களே  நிச்சயமாக நஷ்டவாளிகளாவர் என்று நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள். கவனமாகக் கேளுங்கள்! அநீதியிழைப்பவர்கள் நிலையான தண்டனைக்கு ஆளாவார்கள். 
  47. அல்லாஹ்வுக்கெதிராக அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் அவர்களுக்கு இல்லை. வழிதவறியவரென்று அல்லாஹ் தீர்மானிப்பவரை நேரான வழியில் கொண்டு வருவதற்கான வழிவகை ஏதுமில்லை. 
  48. அல்லாஹ்வி(ன் தீர்ப்பி)லிருந்து திருப்பி விட முடியாத ஒருநாள் வருவதற்கு முன்னர், நீங்கள் உங்கள் இறைவனுக்குச் செவி சாயுங்கள். அந்நாளில் உங்களுக்கு எந்தப் புகலிடமும் இருக்காது. மேலும் நிராகரி(ப்பதற்கான எந்த வாய்)ப்பும்  உங்களுக்கு இருக்காது. 
  49. ஆனால் அவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால், நாம் உம்மை அவர்களைப் காப்பாற்றுபவராக அனுப்பவில்லை; (தூதுச் செய்தியினை) எடுத்துரைப்பதே உமது கடமையாகும். நிச்சயமாக நாம் மனிதனை எம்மிடமிருந்துள்ள கருணையைச் சுவைக்கச் செய்யும் போது, அதனால் அவன் மகிழ்ச்சியடைகின்றான். ஆனால், அவர்களின் கைகள் அனுப்பி வைத்தவற்றின் விளைவாக அவர்களுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால், மனிதன் நன்றிகெட்டவனாகி விடுகின்றான். (அவனுக்குக் கிடைத்த எல்லா அருட்களையும் நிராகரிக்கின்றான்). 
  50. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் விரும்புவதைப் படைக்கின்றான். அவன் விரும்புபவருக்குப் பெண் குழந்தைகளை வழங்குகின்றான். மேலும் அவன் விரும்புபவருக்கு ஆண் குழந்தைகளை வழங்குகின்றான்.
  51. அல்லது அவன், அவர்களுக்கு ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் கலந்து வழங்குகின்றான். அவன் விரும்புபவரை மலடாக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கு அறிபவனும், ஆற்றல் மிக்கவனுமாவான். 
  52. வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரைத் தான் அனுப்புவதன் மூலமேயன்றி12, அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். 
  53. இவ்வாறே நாம் எமது கட்டளையின் மூலம் உமக்கு மகத்தான வஹியை இறக்கினோம். வேதம் என்றால் என்னவென்பதையும், நம்பிக்கை என்றால் என்னவென்பதையும் நீர் அறியாமலிருந்தீர். ஆனால் நாம் அதனை (அந்த இறையறிவிப்பை) ஒளியாக ஆக்கியுள்ளோம். அதன் மூலம் எம் அடியார்களுள் நாம் விரும்புபவருக்கு நேர்வழி காட்டுகிறோம். நிச்சயமாக நீர் (மக்களை) நேரான வழியின்பால் கொண்டு வருகின்றீர். 
  54. அது, வானங்களிலுள்ளவற்றிற்கும், பூமியிலுள்ளவற்றிற்கும் உரியவனாகிய அல்லாஹ்வின் வழியாகும். எல்லா விவகாரங்களும் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ரு5
Powered by Blogger.