41- ஹாமீம் அஸ்-ஸஜ்தா

அதிகாரம்: ஹாமீம் அஸ்-ஸஜ்தா
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 55

பிரிவுகள்: 6


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. ஹா, மீம், மிகுந்த புகழுக்குரியவன்; மிகுந்த மேன்மைக்குரியவன் (எனும் இறைப் பண்புகள் இவ்வதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளன). 
  3. (இந்தக் குர்ஆன்) அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய (இறை) வனிடமிருந்து இறக்கப்பட்டதாகும். 
  4. இது தன் வசனங்களைத் தெளிவாக விளக்கியுள்ள ஒரு வேதமாகும். இது மிகுதியாக ஓதப்படும். (மேலும் இதன் மொழி) கருத்துகளை மிகத்தெளிவாக தானே விளக்கக் கூடியதாகும். (ஆனால் இவ்வேதம் ஆத்மீக) அறிவுடைய மக்களுக்கே பயனளிக்கும். 
  5. இது (நல்லவர்களுக்கு) நற்செய்தியை முன்னறிவிக்கக் கூடியதும், (தீயவர்களை) எச்சரிக்கை செய்யக்கூடியதுமாகும். ஆனால் அவர்களுள் பெரும்பாலார் புறக்கணித்து விட்டனர். அவர்கள் செவியேற்பதுமில்லை. 
  6. அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் எங்களை எதன்பால் அழைக்கின்றீர்களோ அதனை ஏற்றுக் கொள்வதிலிருந்து எங்கள் உள்ளங்கள் திரையினுள் உள்ளன. எங்கள் காதுகளில் செவிடு இருக்கிறது. எங்களுக்கும், உமக்குமிடையில் ஒரு திரையுள்ளது. எனவே நீர் உமது பணியைச் செய்யும்; நாங்கள் எங்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம். 
  7. நீர் கூறுவீராக: நான் உங்களைப் போன்ற மனிதனே. உங்கள் வணக்கத்திற்குரியவன் ஒரே இறைவனேயாவான் என்று எனக்கு இறையறிவிப்பின் மூலம் அறிவிக்கப்படுகிறது. எனவே நீங்கள் அவனிடம் (செல்லும்) நேரான பாதையைக் கைக் கொண்டு, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். இணை வைப்பவர்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. 
  8. (இணை வைப்பவர்களாகிய) அவர்கள் ஸக்காத்து கொடுப்பதுமில்லை; அவர்கள் மறுமையை மறுப்போருமாவார். 
  9. நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் ஆற்றுபவர்களுக்கு என்றும் முடிவடையாத நற்பலன் உண்டு. ரு1 
  10. நீர் கூறுவீராக: பூமியை இரண்டு கால கட்டங்களில் படைத்த இறைவனை நீங்கள் மறுத்து, அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றீர்களா? அவனே எல்லா உலகங்களுக்கும் இறைவனாவான்.
  11. அவன் அதன் (பூமியின்) மேற்பரப்பில் உறுதிவாய்ந்த மலைகளை அமைத்துள்ளான். மேலும் (அதற்கு வேண்டிய) வளத்தை வழங்கியுள்ளான். மேலும் அதில் (வாழ்பவர்களுக்கு) தேவையான உணவு வகைகளை நான்கு கால கட்டங்களில் சரியாக வரையறுத்துள்ளான்1. கேட்போர் எல்லோருக்கும் ஒன்று போல் (கிடைக்கும் படி) ஆக்கியுள்ளான்2. 
  12. பின்னர் அவன் வானத்தின் பக்கம் திரும்பினான். அப்பொழுது அது புகை மண்டலமாக இருந்தது. அவன் அதனிடமும், பூமியிடமும், நீங்கள் இருவரும் விருப்புடனோ, வெறுப்புடனோ வருக என்றான். அவ்விரண்டும், நாங்கள் விருப்பத்துடன் வருகின்றோம் என்றன. 
  13. எனவே அவன் அவற்றை இரண்டு காலகட்டங்களில், ஏழு வானங்களாக முழுமைப்படுத்தி, ஒவ்வொரு வானத்திற்கும் அதன் பணியை அறிவித்தான். நாம் கீழ் வானத்தை (வெளிச்சத்திற்காகவும்) பாதுகாப்பிற்காகவும் விளக்குகளைக் கொண்டு அழகுபடுத்தினோம். இது வல்லமையுள்ள நன்கு அறிபவனாகிய (இறை)வனின் சட்டமாகும். 
  14. ஆனால் அவர்கள் புறக்கணித்து விட்டால், ஆது, ஸமூது (ஆகிய சமுதாயங்களு)க்குக் கிடைத்த தண்டனையைப் போன்ற அழிவிற்குள்ளாக்கும் தண்டனையைப் பற்றி நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்து விட்டேன் என்று நீர் கூறுவீராக. 
  15. (அவர்களின்) தூதர்கள், நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் வணங்காதீர்கள் என்று (கூறியவாறு) அவர்களுக்கு முன்னாலிருந்தும், அவர்களுக்கப் பின்னாலிருந்தும் அவர்களிடம் வந்தனர். அப்போது அவர்கள், எங்கள் இறைவன் விரும்பியிருந்தால், நிச்சயமாக அவன் வானவர்களை இறக்கியிருப்பான்; எனவே நீங்கள் எதனுடன் அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதனை நாங்கள் மறுக்கின்றோம் என்றனர். 
  16. அது சமுதாயத்தினர் எந்த நியாயமுமின்றிப் பூமியில் ஆணவத்துடன் நடந்து கொண்டு, ஆற்றலில் எங்களை விட மிகவும் வல்லவர் எவர் எனக் கூறினர். அவர்களைப் படைத்த அல்லாஹ், ஆற்றலில் அவர்களை விட மிகவும் வல்லமையுள்ளவன் என்பதனை அவர்கள் கண்டதில்லையா? அவர்கள் எம் வசனங்களைத் தொடர்ந்து மறுத்து வந்தனர். 
  17. எனவே நாம் அவர்களை இவ்வுலக வாழ்க்கையில் இழிவிற்குரிய தண்டனையைச் சுவைக்கச் செய்வதற்காகக் கெட்ட சகுனத்தைக் கொண்ட நாட்களில் நாம் அவர்கள் மீது கொடிய புயற்காற்றை அனுப்பினோம். நிச்சயமாக மறுமையின் தண்டனையோ இதனை விட மிகவும் இழிவுபடுத்தக் கூடியதாகும். (அங்கு) அவர்கள் எவ்விதத்திலும் உதவி செய்யப்படமாட்டார்கள். 
  18. மேலும் நாம் ஸமூது சமுதாயத்தினருக்கு நேர்வழியினைக் காட்டினோம். ஆனால் அவர்கள் நேர்வழியை விட குருட்டுத்தனத்தை மிக விரும்பினார்கள். எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டதற்கு இழிவுபடுத்தும் தண்டனையான ஒரு பேராபத்து அவர்களைப் பற்றிக் கொண்டது. 
  19. நம்பிக்கை கொண்டு, இறையச்சத்துடன் நடந்து கொண்டவர்களை நாம் காப்பாற்றினோம். ரு2 
  20. அல்லாஹ்வின் எதிரிகளை நரகின்பால் கூட்டமாக அழைத்துச் செல்லும் நாளில், அவர்கள் தரவாரியாக நடத்திச் செல்லப்படுவார்கள்.
  21. இறுதியாக, அவர்கள் அதனை அடையும் போது, அவர்கள் செய்து கொண்டிருந்தது குறித்து அவர்களின் காதுகளும், அவர்களின் கண்களும், அவர்களின் தோல்களும் அவர்களுக்கு எதிராக சாட்சி கூறும். 
  22. அவர்கள் தங்களுடைய தோல்களைப் பார்த்து, நீங்கள் ஏன் எங்களுக்கு எதிராகச் சாட்சி கூறினீர்கள்?  எனக் கூறுவர். அவை கூறும்: எல்லாவற்றையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களைப் பேசச் செய்தான். மேலும் அவனே உங்களை முதன்முறை படைத்தான். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். 
  23. (பாவங்கள் செய்யும் போது) உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராகச் சாட்சி கூறும் என்று நீங்கள் அஞ்சவில்லை. மாறாக, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுள் பெரும்பாலானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நீங்கள் எண்ணினீர்கள்3. 
  24. உங்கள் இறைவனைக் குறித்து நீங்கள் எண்ணிய அந்த எண்ணமே உங்களை அழிவிற்குள்ளாக்கியது. எனவே (இப்பொழுது) நீங்கள் இழப்பிற்குரியோரைச் சேர்ந்தவர்களாகி விட்டீர்கள். 
  25. எனவே அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமாயின், நெருப்பு அவர்களின் இருப்பிடமாகும். அவர்கள், தங்கள் (இறைஞ்சுதல்) கேட்கப்பட வேண்டுமென்று விரும்பினாலும், அவர்கள் கேட்கப்பட மாட்டார்கள். 
  26. இவர்களுக்கு முன்னுள்ளவற்றையும், இவர்களுக்குப் பின்னுள்ளவற்றையும் (அதாவது இவர்களின் செயல்களை) இவர்களுக்கு அழகு வாய்ந்தவையாக்கிக் காட்டும் தோழர்களை இவர்களுக்கு நாம் ஏற்படுத்தியுள்ளோம். மேலும் இவர்களுக்கு முன் சென்ற பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் சமுதாயத்திற்கு எதிராக வழங்கப்பட்ட அதே தீர்ப்பு இவர்களுக்கு எதிராகவும் வழங்கப்பட்டது. (அதாவது) நிச்சயமாக அவர்கள் இழப்பிற்குரியோராவர். ரு3 
  27. மேலும் நிராகரிப்போர் கூறுகின்றனர்: இந்தக் குர்ஆனுக்கு நீங்கள் செவி சாய்க்காதீர்கள்; நீங்கள் உயர்வடைய (அது படித்துக் காட்டப்படும் போது) நீங்கள் அதில் கூச்சலிடுங்கள். 
  28. எனவே நிச்சயமாக நாம் நிராகரிப்பவர்களைக் கடினமான தண்டனையைச் சுவைக்கச் செய்வோம்; மேலும் நிச்சயமாக நாம் அவர்களுக்கு, அவர்களின் மிகத்தீய செயல்களுக்காகக் கூலி கொடுப்போம். 
  29. நெருப்பு- இதுவே அல்லாஹ்வின் எதிரிகளின் கூலியாகும். அவர்கள் எம் அடையாளங்களைப் பிடிவாதமாக மறுத்ததற்குக் கூலியாக, அதில் நெடுங்காலம் தங்குவதற்குரிய வீடு அவர்களுக்கு உண்டு. 
  30. எங்கள் இறைவா! பெரியவர்கள், பொதுமக்கள் ஆகியவர்களுள் எங்களைத் தவறான வழியில் நடத்தியவர்களை நாங்கள் எங்கள் காலடிகளின் கீழே (போட்டு) நசுக்குவதற்காகவும், இதன் விளைவாக அவர்கள் மிகவும் இழிவடைந்தவர்களைச் சேர்ந்தவர்கள் ஆவதற்காகவும் நீ அவர்களை எங்களுக்குக் காட்டுவாயாக என்று நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்4.
  31. எங்கள் இறைவன் அல்லாஹ் எனக் கூறி, இக்கொள்கையில் நிலைத்திருப்பவர்களிடம், நீங்கள் அஞ்சவும் வேண்டாம்; கவலையடையவும் வேண்டாம்; உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைப் பற்றிய நற்செய்திகளை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று (கூறியவாறு) வானவர்கள் இறங்குவர். 
  32. (மேலும் அவர்கள்) நாங்கள் இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் உங்கள் நண்பர்கள்; உங்கள் மனங்கள் விரும்புவதெல்லாம் அதில் உங்களுக்குக் கிடைக்கும். மேலும் நீங்கள் கேட்பதெல்லாம் அதில் உங்களுக்குக் கிடைக்கும். 
  33. இது மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய (இறை)வனிடமிருந்துள்ள விருந்தோம்பலாக இருக்கும் (என்றும் கூறுவர்). ரு4 
  34. அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்துத் தம்முடைய நம்பிக்கைக்கேற்ப செயலாற்றி, நான் கட்டுப்பட்டு நடப்பவர்களைச் சேர்ந்தவனாவேன் எனக் கூறுபவரை விடவும் மிகச் சிறந்ததனைக் கூறுபவன் எவன்? 
  35. நன்மையும், தீமையும் ஒன்றாகாது. நீர் மிக அழகியவற்றால் (தீமையை) எதிர்ப்பீராக. எவருக்கும், உமக்குமிடையில் பகையையுள்ளதோ அவர், அதன் விளைவாக உம்முடைய நெருங்கிய நண்பராக ஆகி விடுவார். 
  36. அதற்கான வாய்ப்பு, பொறுமையை நன்கு கடைப்பிடிப்பவர்களுக்கே கிடைக்கின்றது. மேலும் நன்மையின் ஒரு மாபெரும் பகுதியினைப் பெற்றவர்களுக்கே அது கிடைக்கும். 
  37. (உண்மையிலிருந்து விலகி நிற்பவனாகிய) ஷைத்தானிடமிருந்து ஏதேனும் ஒரு துன்பம் உமக்கு ஏற்பட்டால், அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான். 
  38. இரவும், பகலும், சூரியனும், சந்திரனும் அவனது அடையாளங்களைச் சார்ந்தவையே. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ சிரம் பணியாதீர்கள். நீங்கள் அ(வ்விறை) வனையே வணங்குகிறீர்கள் என்றால், அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே சிரம் பணியுங்கள். 
  39. ஆனால் அவர்கள் கர்வம் கொண்டு திரும்பினால், உமது இறைவனிடத்திலுள்ளவர்கள் இரவும், பகலும் அவனது தூய்மையினை எடுத்துரைக்கின்றனர்; அவர்கள் ஒருபோதும் சோர்வடைவதில்லை (என்பதை நினைவில் கொள்ளட்டும்). 
  40. நீர் பூமியை வெட்டவெளியாகக் காண்பதும் அவனது அடையாளங்களைச் சேர்ந்ததாகும். பின்னர் நாம் அதன் மீது நீரை இறக்கும் போது, அது புத்துயிர் பெற்று செழிப்படைகின்றது. நிச்சயமாக, இதனை உயிர்ப்பித்தவன் மரணமடைந்தவர்களையும் உயிர்ப்பிப்பான். நிச்சயமாக அவன் எல்லாவற்றிற்கும் பேராற்றல் பெற்றவனாவான்.
  41. நிச்சயமாக எமது வசனங்களைத் திரித்துக் கூறுபவர்கள், எம்மை விட்டு மறைந்தவர்கள் அல்லர். நரகத்தில் எறியப்படுபவனா சிறந்தவன்? அல்லது மறுமை நாளில் அமைதி பெற்றவனாக (எம்மிடம்) வருபவனா? நீங்கள் விரும்புவதைச் செய்யுங்கள். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றைக் கவனித்துப் பார்ப்பவனாகவே இருக்கின்றான். 
  42. (குர்ஆனாகிய) நினைவூட்டக் கூடியது அவர்களிடம் வந்த போது, அதனை மறுத்தவர்கள் (தங்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொண்டனர்). மேலும் நிச்சயமாக அது மிகுந்த கண்ணியத்திற்குரிய வேதமாகும். 
  43. அதற்கு முன்னாலிருந்தோ, அதற்குப் பின்னாலிருந்தோ பொய் அதனை அணுக முடியாது. (அது) மிக நுட்பமான ஞானத்தைக் கொண்டவனும், மிகுந்த புகழுக்குரியவனுமாகிய (இறை)வனிடமிருந்து இறக்கப்பட்டதாகும். 
  44. உமக்கு முன்னர் தூதர்களிடம் கூறப்பட்டவையே உம்மிடமும் கூறப்படுகின்றது. நிச்சயமாக உமது இறைவன் மிக்க மன்னிப்பவனும், வேதனையளிக்கக் கூடிய தண்டனையை அளிப்பவனுமாவான். 
  45. நாம் இதனை வேற்று மொழியிலுள்ள குர்ஆனாக ஆக்கியிருந்தால், நிச்சயமாக அவர்கள் இதன் வசனங்கள் ஏன் தெளிவாக விளக்கப்படவில்லை என்றும், என்ன! (வேதம்) வேற்று மொழியும், தூதர் அரபியுமா? என்றும் கூறியிருப்பார்கள். நீர் கூறுவீராக: நம்பிக்கை கொள்பவர்களுக்கு அது வழிகாட்டியும், குணப்படுத்துகின்றதுமாகும்5. ஆனால் நம்பிக்கை கொள்ளாதவர்களின்  காதுகளில் செவிட்டுத்தன்மை உள்ளது. அது அவர்களுக்கு மறைந்ததுமாகும். அவர்கள் வெகு தொலைவிலிருந்து அழைக்கப்படுகின்றவ(ர்கள் போன்றோ)ராவர். ரு5 
  46. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். ஆனால் அது குறித்தும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுத்தப்பட்டன. உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே ஏற்பட்டு விட்ட ஒரு வாக்கு இல்லாமலிருந்திருப்பின், அவர்களுக்கிடையே முன்னரே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்கள் அது குறித்து அமைதியைக் குலைக்கும் ஐயத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
  47. எவர் நற்செயலைச் செய்கின்றாரோ, அதன் பயன் அவருக்கே. எவர் தீய செயலைச் செய்கின்றாரோ, அதற்குரிய தண்டனையும் அவருக்கே கிடைக்கின்றது. உமது இறைவன் தன் அடியார்களுக்கு அறவே அநீதி இழைப்பதில்லை. 
  48. அந்நேரத்தைப் பற்றிய அறிவு அவனிடமே திருப்பப்படுகிறது. (அந்நேரம் குறித்த முழுமையான அறிவு அவனிடமே உள்ளது). அவனுக்குத் தெரியாமல் பழங்கள் அவற்றின் மடல்களிலிருந்து வெளிப்படுவதில்லை. மேலும், (அவனுக்குத் தெரியாமல்) எந்தப் பெண்ணும் கருவுறுவதோ, பெற்றெடுப்பதோ இல்லை. அந்நாளில் அவன் அவர்களை, எனக்கு இணையாக்கப்பட்டவர்கள் எங்கே? எனக் கூறி அழைப்பான். அதற்கு அவர்கள், எங்களுள் எவரும் அதற்குச் சாட்சியாக இல்லை என்று நாங்கள் உன்னிடம் தெளிவாக கூறி விட்டோம் எனக் கூறுவர். 
  49. இதற்கு முன்னர் அவர்கள் அழைத்துக் கொண்டிருந்தவையெல்லாம், அவர்களை விட்டும் மறைந்து விடும். தங்களுக்குத் தப்பும் வழி ஏதுமில்லை என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வர். 
  50. மனிதன் நல்லதைக் கேட்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை. ஆனால், அவனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் , அவன் நம்பிக்கை இழந்து, சோர்வடைந்து விடுகின்றான்.
  51. அவனுக்குத் துன்பம் ஏற்பட்டதன் பின்னர், நாம் அவனை எம்மிடமிருந்து கருணையைச் சுவைக்கச் செய்தால், இது எனக்குரியது; அந்த நேரம் (எப்போதாவது) வரும் என்று நான் நினைக்கவில்லை; ஆனால் நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்பட்டால், நிச்சயமாக அவனிடம் மிகச் சிறந்தது எனக்கு உண்டு என்று அவன் உறுதியாகக் கூறுகின்றான். நிராகரிப்போர் செய்தவற்றைப் பற்றி நாம் அவர்களுக்குத் தெரிவித்து, நிச்சயமாக நாம் அவர்களைக் கடினமான தண்டனையைச் சுவைக்கச் செய்வோம். 
  52. நாம் மனிதருக்கு (ஏதேனும்) ஓர் அருளை வழங்கினால், அவன் புறக்கணித்துத் திசைமாறி விடுகிறான். ஆனால், அவனுக்கு (ஏதேனும்) தீங்கு ஏற்பட்டால், மிகவும் நீண்ட வேண்டுதல் செய்கிறான். 
  53. நீர் (அவர்களிடம்) கூறுவீராக: (குர்ஆனாகிய) இது அல்லாஹ்விடமிருந்து உள்ளதாக இருந்து, பின்னர் நீங்கள் அதனை மறுக்கிறீர்கள் என்றால், (உண்மையிலிருந்து) வெகு தொலைவில் விலகி விடுபவனை விட மிக அநீதியிழைப்பவன் எவன் என்பதை நீங்களே சொல்லுங்கள். 
  54. இது உண்மையானதே என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும் வரை, நாம் எம் அடையாளங்களை அடிவானங்களிலும், அவர்களுக்கிடையிலும் விரைவில் காட்டுவோம். உமது இறைவன் எல்லாவற்றிற்கும் சாட்சியாக இருப்பது போதுமானதாக இல்லையா? 
  55. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது தொடர்பாக எப்போதும் ஐயப்பாட்டிலேயே இருக்கின்றனர். கவனமாகக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் சூழ்ந்து கொள்பவனாவான். ரு6

Powered by Blogger.