அதிகாரம்: அத்துகான்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 60
பிரிவுகள்: 3
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- ஹா-மீம். மிகுந்த புகழுக்குரியவன்; மிகுந்த மேன்மைக்குரியவன். (ஆகிய இறைவனிடமிருந்து இவ்வதிகாரம் இறங்கியுள்ளது).
- தன் கருத்தைத் தெளிவாக விளக்குகின்ற இவ்வேதத்தின் மேல் ஆணையாக! (அதாவது நாம் இவ்வுண்மைக்குச் சான்றாக இக்குர்ஆனையே முன் வைக்கின்றோம்).
- நிச்சயமாக நாம் இதனை அருளுக்குரிய ஓர் இரவில் இறக்கினோம். நிச்சயமாக நாம் (தவறான வழியில் செல்பவர்களை எப்போதும்) எச்சரிக்கை செய்தே வருகிறோம்.
- அதில்1 ஒவ்வொரு ஞானமிக்கக் கட்டளையும், திட்டவட்டமாகக் காட்டப்பட்டுள்ளது2.
- எமது கட்டளையினால்3 (அவ்வாறு பிரித்துக் காட்டப்பட்டுள்ளது) நிச்சயமாக நாம் எப்போதும் தூதர்களை அனுப்பியே வந்தோம்.
- இது, உமது இறைவனிடமிருந்து வந்த கருணையாகும்4. நிச்சயமாக அவன் நன்கு கேட்பவனும், நன்கு அறிபவனுமாவான்.
- நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பின், (அவன்) வானங்கள், பூமி மற்றும் அவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றின் இறைவன் ஆவான்.
- அவனையன்றி வணக்கத்திற்குரியவர் எவரும் இல்லை. அவனே உயிரை அளிக்கவும், மரணத்தைத் தரவும் செய்கின்றான். அவன், உங்கள் இறைவனும், உங்கள் முந்தைய மூதாதையர்களின் இறைவனுமாவான்.
- இருந்தும், அவர்கள் ஐயத்தில் விளையாடுகின்றனர்.
- எனவே தெளிவான புகை ஒன்றை வானம் கொண்டு வரும் நாளை நீர் எதிர்பார்ப்பீராக5.
- அது, மக்கள் எல்லோர் மேலும் நிழலை உண்டு பண்ணும். இது வேதனையளிக்கக்கூடிய தண்டனையாகும்.
- (மக்கள் அதனைக் கண்டு கதறுவர்) எங்கள் இறைவா! இத்தண்டனையை எங்களை விட்டு அகற்றி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்.
- அறிவுரைகள் அவர்களுக்கு எவ்வாறு தான் பலனளிக்கும்? (ஏனெனில், உண்மையைத்) தெளிவாக விளக்கும் ஒரு தூதர் ஏற்கனவே அவர்களிடம் வந்துள்ளார்.
- இருப்பினும், அவர்கள் அவரைப் புறக்கணித்து விட்டு, இவர் எவராலோ கற்பிக்கப்பட்ட பைத்தியக்காரர் என்று கூறினார்கள்.
- சிறிது நேரத்திற்காக நாம் அத்தண்டனையை அகற்றுவோம். ஆனால், நிச்சயமாக நீங்கள் (அதே நிராகரிப்பின்பால்) திரும்புவீர்கள்.
- நாம் (உங்களை) மிகவும் வலுவான பிடியால் பிடிக்கும் நாளில், நிச்சயமாக நாம் சரியான முறையில் பழி வாங்குவோம் (என்பதனை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்).
- நாம் இவர்களுக்கு முன்னர் ஃபிர்அவ்னின் சமுதாயத்தினரைச் சோதித்தோம். அவர்களிடம் கண்ணியத்திற்குரிய ஒரு தூதர் வந்தார்.
- (அவர், அவர்களிடம் கூறினார்): அல்லாஹ்வின் அடியார்களை நீங்கள் என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கையில் உண்மையான ஒரு தூதராவேன்;
- அல்லாஹ்வை எதிர்ப்பதில் நீங்கள், உங்களை உயர்த்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக நான், உங்களிடம் தெளிவான சான்றுடன் வந்துள்ளேன்;
- என்னை நீங்கள் (அவசரப்பட்டு) கல்லெறிந்து கொன்று விடாதிருப்பதற்காக, என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவனிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்;
- நீங்கள் என்னை நம்பவில்லையாயின், நீங்கள் என்னை முற்றிலும் தனியாக விட்டு விடுங்கள்.
- பின்னர் அவர், இவர்கள் பாவம் செய்யும் சமுதாயத்தினராக இருக்கின்றனர் என்று கூறித் தம் இறைவனை வேண்டினார்.
- (அப்போது இறைவன் கூறினான்:) நீர் என் அடியார்களை இரவோடு இரவாக (இந்த நாட்டிலிருந்து) அழைத்துச் செல்வீராக. ஏனெனில் நீங்கள் பின்தொடரப்படுவீர்கள்.
- கடல் தாழ்ந்து அமைதியாக இருக்கும் வேளையில், நீர் அதனை (உமக்குப் பின்னால்) விட்டு விடுவீராக. நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்பட வேண்டிய படையினராவர்.
- அவர்கள் தங்களுக்குப் பின்னர் எத்தனையோ தோட்டங்களையும், நீரூற்றுக்களையும் விட்டுச் சென்றனர்!
- வயல்களையும், கண்ணியத்திற்குரிய இடங்களையும்;
- அவர்கள் மகிழ்ச்சியடைந்நு கொண்டிருந்த சுகபோகங்களையும்( விட்டுச் சென்றனர்).
- இவ்வாறே நிகழ்ந்தது. நாம் இவை எல்லாவற்றிற்கும் மற்றொரு சமுதாயத்தினரை வாரிசாக ஆக்கினோம்6.
- வானமும், பூமியும் அவர்களுக்காக அழவில்லை7. அவர்களுக்குக் காலக்கெடு அளிக்கப்படவுமில்லை. ரு1
- இஸ்ராயீலின் மக்களை இழிவான தண்டனையிலிருந்து நாம் காப்பாற்றினோம்.
- (அதாவது) ஃபிர்அவ்னிடமிருந்து. நிச்சயமாக அவன் மிக்க கர்வம் கொண்டவனாகவும், வரம்பு மீறி நடப்பவர்களைச் சேர்ந்தவனாகவும் இருந்தான்.
- நாம் (அவர்களது தகுதியைத்) தெரிந்து கொண்டு (அவர்களின் காலத்திலுள்ள) எல்லாச் சமுதாயங்களுக்கும் மேலாக அவர்களைத் தேர்ந்தெடுத்தோம்.
- தெளிவானதொரு சோதனையைக் கொண்ட பல அடையாளங்களை நாம் அவர்களுக்கு வழங்கினோம்.
- நிச்சயமாக இவர்கள் கூறுகின்றனர்:
- நமக்கு முதல் மரணத்தையன்றி வேறெந்த மரணமும் இல்லை; நாம் மீண்டும் எழுப்பப்படவும் மாட்டோம்;
- எனவே, நீங்கள் உண்மை சொல்பவர்களாயின், எங்கள் மூதாதையர்களை (திரும்பக்) கொண்டு வந்து காட்டுங்கள்.
- அவர்கள் சிறந்தவர்களா? அல்லது துப்பா (என்னும்) சமுதாயத்தினரும், இவர்களுக்கு முன்னிருந்தவர்களுமா? (சிறந்தவர்கள்). அவர்களெல்லாம் குற்றம் செய்பவர்களாக இருந்ததனால், நாம் அவர்களை அழித்து விட்டோம்.
- நாம் வானங்களையும், பூமியையும் மற்றும் அவ்விரண்டிற்கிடையிலுள்ளவற்றையும் விளையாட்டிற்காகப் படைக்கவில்லை.
- நாம் அவற்றை நிலையான ஒரு நோக்கத்திற்காகவே படைத்தோம். ஆனால் அவர்களுள் பெரும்பாலார் அறிவதில்லை.
- நிச்சயமாக தீர்ப்பு நாள் அவர்கள் எல்லோருக்கும் குறிப்பிட்ட நேரமாகும்.
- அந்நாளில் நண்பர் எவரும், எந்த நண்பருக்கும் அறவே பயன்பட மாட்டார். அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.
- ஆனால் எவருக்கு அல்லாஹ் கருணை காட்டுவானோ அவரைத் தவிர. நிச்சயமாக அவன் வல்லமையுள்ளவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். ரு2
- நிச்சயமாக கள்ளி மரம்8
- பாவிகளின் உணவாகும்.
- உருகிய செம்பைப் போன்று அது (அவர்களது) வயிறுகளில் கொதிக்கும்.
- சுடுவெந்நீர் கொதிப்பது போல்.
- (நாம் வானவர்களுக்குக் கட்டளையிடுவோம்) நீங்கள் அவனைப் பிடித்துச் சுடர்விட்டெரியும் நெருப்பின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்;
- பின்னர் தண்டனையாகத் தரப்படும் கொதிக்கும் நீரை அவனது தலை மேல் ஊற்றுங்கள்.
- (நாம் அவனிடம் கூறுவோம்: இத் தண்டனையை) நீ சுவைத்துப் பார்; நீ வல்லமையுள்ளவனும், கண்ணியத்திற்குரியவனும் ஆயிற்றே! (நீ அவ்வாறே உன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாய்).
- நீங்கள் ஐயம் கொண்டிருந்தது நிச்சயமாக இதுவே. (என்றும் நாம் கூறுவோம்).
- நிச்சயமாக இறையச்சமுடையோர் பாதுகாப்பான இடத்தில் இருப்பார்கள்.
- தோட்டங்கள், நீரூற்றுக்கள் ஆகியவற்றிற்கிடையே (இருப்பார்கள்).
- அவர்கள் மெல்லிய பட்டாடையும், கனமான பட்டாடையும் அணிந்து, ஒருவரையொருவர் நோக்கியவாறு அமர்ந்திருப்பார்கள்.
- (அது) அவ்வாறே (இருக்கும்) அகன்ற, கருமை நிறக் கண்களைக் கொண்ட அழகிய இணைகளை நாம் அவர்களுக்குத் துணைவர்களாக வழங்குவோம்.
- அவர்கள் அவற்றில் எல்லாவகையான பழங்களையும் வரவழைப்பர்; மேலும் அமைதியுடன் வாழ்ந்து வருவர்.
- முதல் மரணத்தைத் தவிர, அவர்கள் அவற்றில் வேறெந்த மரணத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொழுந்து விட்டெரியும் நெருப்புத் தண்டனையிலிருந்து அவன் அவர்களைக் காப்பாற்றுவான்;
- (இதுவும்) உமது இறைவனிடமிருந்துள்ள அருளாகும். இது ஒரு மகத்தான வெற்றியாகும்.
- அவர்களின் அறிவுரையினைப் பெறுவதற்காக நாம் இதனை (குர்ஆனை) உமது மொழியில் எளிதாக்கியுள்ளோம்.
- எனவே நீர் எதிர்பார்த்திருப்பீராக; அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ரு3