40- அல் மூமின்

அதிகாரம்: அல் மூமின்
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 86

பிரிவுகள்: 9


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. ஹா மீம் - (இறைவன்) மிகுந்த புகழுக்குரியவன்; மிகுந்த மேன்மைக்குரியவன் (என்பதை இவ்வதிகாரம் விளக்குகிறது). 
  3. இவ்வேதம் வல்லோனும், ஞானமிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறங்கியுள்ளதாகும். 
  4. அவன் பாவத்தை மன்னிப்பவனும், கழிவிரக்கத்தை ஏற்றுக் கொள்பவனும், தண்டனை வழங்குவதில் கடினமானவனும், பேருதவி செய்பவனுமாவான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவனும் இல்லை. அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது. 
  5. நிராகரிப்பவர்களைத் தவிர வேறெவரும் அல்லாஹ்வின் வசனங்கள் குறித்து விவாதிப்பதில்லை. எனவே நாட்டில் அவர்கள் சுற்றித் திரிவது உம்மை ஏமாற்றி விட வேண்டாம். 
  6. இவர்களுக்கு முன்னர் நூஹ்வின் சமுதாயத்தினரும், அவர்களுக்குப் பின்னர் பல்வேறு பிரிவினர்களும் (தங்கள் தூதர்களை) நிராகரித்தனர். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்கள் தூதரைப் பிடிக்க பெருமுயற்சி செய்தனர். பொய்யான வாக்குவாதத்தின் மூலம் உண்மையைப் பொய் என்று நிரூபிப்பதற்காக, அதனைக் கொண்டு அவர்கள் விவாதித்தனர். எனவே நான் அவர்களைப் பிடித்து விட்டேன். என் தண்டனை எவ்வாறு (கடினமானதாக) இருந்தது? 
  7. இவ்வாறான நிராகரிப்பாளர்கள் நரகத்திற்குரியவர்களாவர், என்ற உமது இறைவனின் வாக்கு அவர்களுக்கெதிராக உண்மை ஆயிற்று. 
  8. அரியணையைச் சுமந்து கொண்டிருப்பவர்களும், அதனைச் சூழ்ந்திருப்பவர்களும் தங்கள் இறைவனைப் புகழ்வதுடன், அவனது தூய்மையினை எடுத்துரைக்கின்றனர். அவனிடத்து நம்பிக்கை கொண்டு, நம்பிக்கை கொள்பவர்களுக்காகப் பாவ மன்னிப்புக் கோருகின்றனர். (அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்) எங்கள் இறைவா! நீ (உனது) கருணையாலும், அறிவாலும் எல்லாப் பொருள்களையும் சூழ்ந்து நிற்கின்றாய். எனவே, கழிவிரக்கங் கொண்டு, உன் வழியைப் பின்பற்றுபவர்களை மன்னித்து, நரக தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவாயாக. 
  9. எங்கள் இறைவா! நீ அவர்களையும், அவர்களின் மூதாதையர்கள், அவர்களின் மனைவியர்கள், அவர்களின் குழந்தைகள் ஆகியவர்களுள் நல்லவர்களையும் நீ அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ள நிலையான தோட்டங்களில் நுழையச் செய்வாயாக. நிச்சயமாக நீ வல்லமையுள்ளவனும், ஞானமிக்கோனுமாவாய். 
  10. நீ அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாற்றுவாயாக. அந்நாளில் எவரை நீ தீமைகளிலிருந்து காப்பாற்றுகின்றாயோ அவருக்கு நிச்சயமாக நீ கருணை காட்டி விட்டாய். இது மாபெரும் வெற்றியாகும். ரு1
  11. நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காக அழைக்கப்பட்ட போது நீங்கள் நிராகரித்து விட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் கொண்ட மிகுந்த வெறுப்பை விட அல்லாஹ்வின் வெறுப்பு மிகப் பெரிது என நிராகரிப்போருக்கு அறிவிக்கப்படும். 
  12. எங்கள் இறைவா! நீ எங்களை இரண்டு தடவை மரணமடையச் செய்தாய்1. இரண்டு தடவை உயிர் பெறச் செய்தாய். நாங்கள் இப்பொழுது எங்கள் பாவங்களை ஒப்புக் கொள்கின்றோம். எனவே (இத் தண்டனையிலிருந்து) வெளியேற ஏதேனும் வழிவகை உண்டா என்று அவர்கள் கூறுவர்2. 
  13. உங்களது இந்நிலைக்குக் காரணம், அல்லாஹ் ஒருவனே என அறிவிக்கப்பட்ட பொழுது நீங்கள் நிராகரித்தீர்கள். ஆனால் அவனுக்கு இணை வைக்கப்பட்ட பொழுது நீங்கள் நம்பிக்கை கொண்டீர்கள். எனவே (இப்பொழுது) தீர்ப்பு, மேலானவனும், உயர்ந்தவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். 
  14. அவனே உங்களுக்குத் தன் அடையாளங்களைக் காட்டுகிறான்; வானத்திலிருந்து உங்களுக்காக வாழ்விற்குரியவற்றை இறக்குகின்றான். ஆனால் இறைவனிடம் திரும்புபவர்களே அறிவுரையினைப் பெறுகின்றனர். 
  15. எனவே நிராகரிப்போர்கள் வெறுத்த போதிலும், தங்கள் மார்க்கத்தை முற்றிலும் அவனுக்காக ஆக்கியவர்களாய் அல்லாஹ்வை அழையுங்கள். 
  16. (அவன்) உயர்பதவிகளை உடையவனும், அரியணைக்குரியவனுமாவான். (தன்னைச்) சந்திக்கும் நாளைக் குறித்து எச்சரிப்பதற்காகத் தன் அடியார்களுள் தான் விரும்புபவருக்குத் தன் கட்டளையினால் ஆவியை இறக்குகின்றான். 
  17. அவர்கள் எல்லோரும் இறைவனிடம் வரும் நாளில், அவர்களைப் பற்றி எதுவும் அல்லாஹ்வுக்கு மறைந்ததாக இருக்காது. இந்நாள் ஆட்சி எவனுக்குரியது? (அது) தனித்தவனும், முழுமையான அதிகாரத்தையுடையவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். 
  18. இந்நாளில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்காக கூலி கொடுக்கப்படும். இந்நாளில் (எத்தகு) அநீதி(யும்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிக விரைவில் கணக்கைத் தீர்ப்பவனாவான். 
  19. நீர் அவர்களுக்கு மிக விரைவாக நெருங்கிக் கொண்டிருக்கின்ற நாளைப் பற்றி எச்சரிக்கை செய்வீராக. அப்போது அவர்கள் தங்களது ஆழ்ந்த கவலையை அடக்கிக் கொள்ளும் பெரு முயற்சியி(ன் காரணத்தா)ல் இதயங்கள் அவர்களின் தொண்டைகளை அடைந்து கொண்டிருக்கும். அநீதி இழைப்பவர்களுக்கு நண்பர் எவரும் இருக்க மாட்டார். மேலும் ஏற்றுக் கொள்ளத்தக்க பரிந்துரையாளர் எவரும் இருக்க மாட்டார். 
  20. கண்களின் வஞ்சகத்தையும்4, நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் அறிகின்றான்.
  21. மேலும் அல்லாஹ் உண்மையுடன் தீர்ப்பு வழங்குகின்றான். ஆனால் அவர்கள் அல்லாஹ்வையன்றி எவர்களை அழைக்கின்றனரோ அவர்கள் எதனையும் முடிவெடுப்பதில்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். ரு2 
  22. பூமியில் அவர்கள் பயணம் செய்வதில்லையா? அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறு (தீயதாக) ஆயிற்று என்பதனை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அவர்கள் ஆற்றலிலும், பூமியில் அவர்கள் விட்டுச் சென்ற அறிகுறிகளிலும் இவர்களை விட வல்லவர்களாக இருந்தனர்5. ஆனால் அல்லாஹ் அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களைப் பிடித்துக் கொண்டான். அல்லாஹ்வி(ன் பிடியி)லிருந்து காப்பாற்றுபவர் எவரும் அவர்களுக்கு இருந்ததில்லை. 
  23. இதற்குக் காரணம், அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அடையாளங்களுடன் வந்தனர். ஆனால் அவர்கள் நிராகரித்தனர். எனவே அல்லாஹ் அவர்களைப் பிடித்து விட்டான். நிச்சயமாக அவன் வல்லவனும், தண்டனையளிப்பதில் கடினமானவனுமாவான். 
  24. மேலும் மூஸாவை நம் அடையாளங்களுடனும், தெளிவான அத்தாட்சிகளுடனும் அனுப்பினோம். 
  25. ஃபிர்அவ்ன், ஹாமான், ஹாரூன் ஆகியவர்களிடம்6 (அனுப்பினோம்). ஆனால் அவர்கள், (இவர்) பொய் சொல்லக் கூடிய சூனியக்காரன் எனக் கூறினர். 
  26. அவர் எம்மிடமிருந்து உண்மையை அவர்களிடம் கொண்டு வந்த போது,   நம்பிக்கை கொண்டு அவருடன் இருப்போரின் ஆண் மக்களைக் கொன்று, அவர்களின் பெண்களை உயிருடன் விட்டு விடுங்கள் என்று அவர்கள் கூறினர். ஆனால் நிராகரிப்பவர்களின் திட்டம் பயனற்றதாகவே  இருந்தது7. 
  27. ஃபிர்அவ்ன் கூறினான்: என்னை விட்டு விடுங்கள். நான் மூஸாவைக் கொன்று விடுகிறேன் 8. அவர், தம் இறைவனை அழைக்கட்டும். அவர் உங்கள் மார்க்கத்தை மாற்றி விடுவாரோ என்றும், அல்லது குழப்பத்தின் மூலம் நாட்டை வெற்றி கொண்டு விடுவாரோ என்றும் நான் அஞ்சுகிறேன். 
  28. மூஸா கூறினார்: கேள்வி, கணக்குக் கேட்கப்படும் நாளில் நம்பிக்கை கொள்ளாத, கர்வங்கொண்ட ஒவ்வொருவரின் தீங்கிலிருந்தும் என் இறைவனும், உங்கள் இறைவனுமாகிய அவனிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். ரு3 
  29. ஃபிர்அவ்னின் சமுதாயத்தினருள் நம்பிக்கை கொண்டு, அந்நம்பிக்கையை மறைத்து வைத்திருந்த ஒரு மனிதர் கூறினார்: என் இறைவன் அல்லாஹ் என்று கூறுகின்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் ஒரு மனிதரைக் கொலை செய்யப் போகின்றீர்களா? மேலும் அவர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளையும் கொண்டு வந்துள்ளார். அவர் பொய்யராக இருந்தால், அவரது பொய்யினால் விளையும் தீங்கு அவரையே சேரும். ஆனால் அவர் உண்மையாளராயின், அவர் உங்களுக்கு முன்னறிவித்தவைகளுள் சில தண்டனைகள் உங்களுக்கும் நேரும். நிச்சயமாக வரம்புகளை மீறுபவனுக்கும், பெரும் பொய்யனுக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். 
  30. என் சமுதாயத்தினரே! இந்நாட்டில் அதிகாரமுள்ளவர்களாக இருக்கின்ற அளவுக்கு ஆட்சி இன்று உங்களிடம் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் தண்டனை நம்மிடம் வந்தால், அதற்கெதிராக நமக்கு எவன் உதவி செய்வான்? ஃபிர்அவ்ன் கூறினான்: நான் (சரி என்று) காண்பதையே உங்களுக்குத் தெரிவித்து, நேர்மையான வழியையே நான் உங்களுக்குக் காட்டுகின்றேன்.
  31. நம்பிக்கை கொண்டிருந்தவர் கூறினார்: என் சமுதாயத்தினரே! (முற்காலத்திலுள்ள) மக்களுக்கு வந்தது போன்ற (தண்டனையின்) நாள் உங்களுக்கு வருவது குறித்து நான் அஞ்சுகிறேன். 
  32. நூஹ்வின் சமுதாயத்தினர் மற்றும் ஆது, ஸமூது, அவர்களுக்குப் பின்னுள்ளவர்கள் ஆகியவர்களுக்கு ஏற்பட்ட நிலை போல் (அந்நாள் இருக்கும்). அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநீதி இழைக்க நாடுவதில்லை. 
  33. என் சமுதாயத்தினரே! (உதவிக்காக அழுது) ஒருவரையொருவர் அழைக்கும் நாளைக் குறித்தும் நான் உங்களுக்காகப் பயப்படுகின்றேன். 
  34. நீங்கள் புறங்காட்டி விரைந்தோடும் அந்நாளில் அல்லாஹ்வுக்கெதிராகக் காப்பாற்றுபவர் எவரும் உங்களுக்கு இருக்க மாட்டார். வழிகேட்டில் செல்ல அல்லாஹ்வால் விடப்பட்டவனுக்கு வழிகாட்டுபவர் எவரும் இல்லை. 
  35. இதற்கு முன்னர் யூஸுஃப் தெளிவான சான்றுகளுடன் உங்களிடம் வந்தார். ஆனால் அவர் உங்களிடம் கொண்டு வந்தது குறித்து நீங்கள் ஐயப்பாட்டிலேயே இருந்தீர்கள். அவர் மரணமடைந்த போது, அவருக்குப் பின்னர் எந்தத் தூதரையும் அல்லாஹ் ஒருபோதும் அனுப்ப மாட்டான் என்று நீங்கள் கூறினீர்கள்9. இவ்வாறே அல்லாஹ், வரம்பு மீறுபவர்களாகவும், ஐயம் கொள்பவர்களாகவும் இருப்பவர்களை வழி தவறியவர்கள் என்று (முடிவு எடுத்துக்) கொள்கிறான். 
  36. (வழி தவறியவர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாக (அல்லாஹ்விடமிருந்து) தங்களிடம் வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்கின்றனர். இது அல்லாஹ்விடத்தும், நம்பிக்கை கொண்டிருப்பவர்களிடத்தும் மிக வெறுக்கத்தக்கதாகும். இவ்வாறே ஆணவமும், கர்வமும் கொண்ட ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரையிடுகின்றான். 
  37. ஃபிர்அவ்ன் கூறினான்: ஹாமானே! நான் (வானத்திற்குச் செல்லும்) வழிகளை அடைவதற்கு நீ எனக்காக ஓர் உயரமான கோபுரத்தை எழுப்பு. 
  38. வானங்களை அடையும் வழிகள் மூலமாக நான் மூஸாவின் இறைவனைத் தெரிந்து கொள்வேன். நிச்சயமாக நான் அவரைப்  பொய்யரென்றே கருதுகின்றேன். இவ்வாறு ஃபிர்அவ்னின் பார்வையில் அவனது தீய செயல் அழகு வாய்ந்ததாக்கிக் காட்டப்பட்டு, (நேரான) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் திட்டம் அழிவிலேயே முடிவுற்றது. ரு4 
  39. நம்பிக்கை கொண்டிருந்தவர் கூறினார்: என் சமுதாயத்தினரே! நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களுக்கு நேர்மையான வழியைக் காட்டுகின்றேன். 
  40. என் சமுதாயத்தினரே! இவ்வுலக வாழ்க்கை, தற்காலிகமான பயனைக் கொண்டதேயாகும். நிச்சயமாக மறுமை வாழ்க்கையே நிலையான தங்குமிடமாகும்.
  41. எவர் தீமை செய்கிறாரோ அவருக்கு, அதற்கேற்றவாறே கூலி கிடைக்கும். எவர் நற்செயல் செய்வாரோ, அவர் ஆணாகட்டும், பெண்ணாகட்டும், அவர் நம்பிக்கையாளராக இருப்பின் அவர் சுவர்க்கத்தில் நுழைவார்கள். அதில் அவருக்கு (வேண்டியதெல்லாம்) அளவின்றி வழங்கப்படும். 
  42. என் சமுதாயத்தினரே! நான் உங்களை ஈடேற்றத்தின்பால் அழைக்கின்றேன். நீங்கள் என்னை நரகத்தின்பால் அழைக்கின்றீர்கள்! (என்ன விநோதம் பாருங்கள்). 
  43. நான் அல்லாஹ்வை நிராகரித்து, எனக்குத் தெரியாததை நான் அவனுக்கு இணை வைக்க வேண்டுமென்று நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். அதே வேளையில் நான் உங்களை வல்லமையுள்ளவனும், மிக்க மன்னிப்பவனுமாகிய (இறை)வன்பால் அழைக்கின்றேன். 
  44. நிச்சயமாக நீங்கள் என்னை எதன்பால் அழைக்கின்றீர்களோ அதற்கு, இவ்வுலகிலோ, மறு உலகிலோ அழைக்கப்படுவதற்கான எத்தகுதியும் இல்லை. நிச்சயமாக நாம் அல்லாஹ்விடமே திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது. வரம்பு மீறுபவர்கள் நரகத்திற்குரியவர்களாவர். 
  45. எனவே நான் உங்களுக்குக் கூறுவதை நீங்கள் விரைவில் நினைத்துப் பார்ப்பீர்கள். நான் என் விவகாரத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கின்றேன். நிச்சயமாக அல்லாஹ் (தன்) அடியார்களை கவனித்துப் பார்ப்பவனாக இருக்கிறான். 
  46. ஆகவே அல்லாஹ் (நம்பிக்கை கொண்டிருந்த) அவரை, (நிராகரிப்பவர்களாகிய) அவர்கள் தீட்டிய திட்டங்களின் தீமைகளிலிருந்து காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னைச் சேர்ந்தவர்களைக் கடுமையான தண்டனை சூழ்ந்து கொண்டது. 
  47. அதாவது பகலிலும், இரவிலும் நெருப்பின் முன் அவர்கள் கொண்டு வரப்படுவர். குறிப்பிட்ட நேரம் வரும் நாளில் ஃபிர்அவ்னைச் சேர்ந்தவர்களைக் கடினமான தண்டனைக்குள் நுழையச் செய்யுங்கள் (என்று வானவர்களிடம் கூறப்படும்). 
  48. அவர்கள் நெருப்பில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்யும் போது, பலவீனமானவர்கள் பெருமை பாராட்டியவர்களிடம், நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம்; ஆகவே உங்களால் எங்களை நெருப்பின் (தண்டனையின்) ஏதேனும் ஒரு பகுதியிலிருந்து காப்பாற்ற இயலுமா எனக் கூறுவர். 
  49. பெருமையடித்தவர்கள் (இப்பொழுது) நாமெல்லாரும் இதில் இருக்கின்றோம். அல்லாஹ் ஏற்கனவே (தன்) அடியார்களுக்கிடையே தீர்ப்பளித்து விட்டான் என்பார்கள். 
  50. நெருப்பிலுள்ளவர்கள் நரகத்தின் காவலர்களிடம், உங்கள் இறைவன் ஒரு நாளிற்காவது தண்டனையை எங்களுக்கு எளிதாக்குமாறு நீங்கள் அவனிடம் வேண்டுங்கள் என்று கூறுவார்கள்.
  51. (அப்போது) உங்கள் தூதர்கள் தெளிவான அடையாளங்களுடன் உங்களிடம் வரவில்லையா என்று அவர்கள் கூறுவர். இதற்கு அவர்கள் ஆம் (வந்தனர்) என்பர். அவ்வாறாயின் நீங்கள் வேண்டிக் கொண்டே இருங்கள் என்று (நரகத்தின் காவலர்களாகிய) அவர்கள் பதிலளிப்பர். ஆனால் நிராகரிப்பாளர்களின் வேண்டுதல் பயனற்றதாக இருக்கும். ரு5 
  52. இவ்வுலக வாழ்க்கையிலும், சாட்சிகள் எழுந்து நிற்கும் நாளிலும் நிச்சயமாக நாம் தூதர்களுக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்கும் உதவி செய்வோம். 
  53. அநீதி இழைத்தவர்களின் சாக்குப் போக்குகள் அந்நாளில் அவர்களுக்குப் பயனளிக்காது. அவர்களுக்குச் சாபம் ஏற்படும். தீய தங்குமிடமும் அவர்களுக்கு உண்டு. 
  54. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு நேர்வழியினை வழங்கினோம். மேலும் (தவ்ராத்) வேதத்திற்கு இஸ்ராயிலின் மக்களை வாரிசாக்கி வைத்தோம். 
  55. அ(வ் வேதமான)து அறிவுடையோர்க்கு வழிகாட்டியும், நல்லுபதேசமும் ஆகும். 
  56. எனவே நீர் பொறுமையுடன் இருப்பீராக; நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. (உமது இறைவனிடம்) மக்கள் செய்த உமது பாவங்களுக்கு, அவர்களுக்காகப் பாதுகாப்புத் தேடுவீராக. மேலும் மாலையிலும், காலையிலும் உமது இறைவனைப் புகழ்வதுடன் (அவனது) தூய்மையினை எடுத்துரைப்பீராக. 
  57. அல்லாஹ்வின் வசனங்கள் தொடர்பாகத் தங்களிடம் (அவனிடமிருந்து) வந்த எந்தச் சான்றுமின்றி வாக்குவாதம் செய்பவர்களின் நெஞ்சங்களில் தற்பெருமை (க்குரிய போலி உணர்வு) தான் உள்ளது. அதனை அவர்கள் ஒருபோதும் அடையப் போவதில்லை. எனவே நீர் அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவீராக. நிச்சயமாக அவன் நன்கு கேட்பவனும், நன்கு பார்ப்பவனுமாவான். 
  58. வானங்களையும், பூமியையும் படைத்தல், மனித இனத்தைப் படைப்பதை விட மிகப் பெரிதாகும். ஆனால் பெரும்பாலும் மக்கள் அறிவதில்லை. 
  59. குருடனும், பார்வையுடையவரும் ஒப்பாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு, அதற்கேற்ப நற்செயல்கள் செய்பவர்கள், தீமை செய்பவர்களுக்கு ஒப்பாக மாட்டார்கள். நீங்கள் அறவே அறிவுரை பெறுவதில்லை. 
  60. (அழிவிற்குரிய) அந்த நேரம் வந்தே தீரும். அதில் ஐயத்திற்கு இடம் இல்லை. ஆனால் பெரும்பாலும் மக்கள் நம்பிக்கை கொள்வதில்லை.
  61. உங்கள் இறைவன் கூறுகின்றான்: நீங்கள் என்னிடம் வேண்டுங்கள்; நான் உங்கள் வேண்டுதலுக்குப் பதிலளிப்பேன். ஆனால் என்னை வணங்காமல், கர்வம் கொண்டிருப்பவர்கள் நிச்சயமாக இழிவடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். ரு6 
  62. அல்லாஹ்வே உங்களுக்கு இரவை, நீங்கள் அதில் ஓய்வெடுத்துக் கொள்வதற்காகவும், பகலைப் பார்ப்பதற்காகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்களுக்குப் பேரருள் செய்பவனாவான். ஆனால் பெரும்பாலும் மக்கள் நன்றி செலுத்துவதில்லை. 
  63. இத்தகையவனே உங்கள் இறைவனும், எல்லாவற்றையும் படைப்பவனுமாகிய அல்லாஹ். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் எவனும் இல்லை. எனவே நீங்கள் எங்கே திருப்பப்படுகின்றீர்கள்? 
  64. அல்லாஹ்வின் வசனங்களைப் பிடிவாதமாக மறுப்பவர்கள் இவ்வாறே திருப்பப்படுகின்றனர். 
  65. அல்லாஹ்வே உங்களுக்காகப் பூமியைத் தங்குமிடமாகவும், வானத்தை ஒரு விதானமாகவும் படைத்து, உங்களை வடிவமைத்தான்: பின்னர் உங்கள் உருவங்களை அழகாக அமைத்தான்; மேலும் வாழ்விற்குரிய மிகச்சிறந்த பொருள்களை உங்களுக்கு வழங்கினான். இத்தகையவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எனவே எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ் அருளுக்குரியவனே! 
  66. அவன் உயிருடன் இருப்பவன் (உயிர் கொடுப்பவன்) ஆவான். அவனையன்றி வணக்கத்திற்குரியவன் எவனும் இல்லை. எனவே நீங்கள் இறை வணக்கத்தை முழுமையாக அவனுக்கே ஆக்கியவர்களாக, அவனிடமே வேண்டிக் கொண்டிருங்கள். எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். 
  67. நீர் கூறுவீராக: என் இறைவனிடமிருந்து தெளிவான சான்றுகள் என்னிடம் வந்திருக்கின்றன. எனவே, அல்லாஹ்வையன்றி நீங்கள் அழைப்பவற்றை நான் வணங்கக் கூடாதென்று தடை செய்யப்பட்டுள்ளேன். அனைத்து உலகங்களின் இறைவனுக்கே நான் கட்டுப்பட்டு நடக்க வேண்டுமென்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். 
  68. அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், அதன் பின்னர் இரத்தக் கட்டியிலிருந்தும் படைத்தான். பின்னர் அவன் உங்களை ஒரு குழந்தையாக வெளிப்படுத்துகின்றான். பின்னர் இதன் விளைவாக நீங்கள் உங்கள் வாலிபத்தை அடைகிறீர்கள். பின்னர் இதன் விளைவாக நீங்கள் உங்கள் முதுமையை அடைகிறீர்கள். மேலும் உங்களுள் ஒரு சிலரின் உயிர் இ(வ் வயதை அடைவ)தற்கு முன் (அதாவது முதுமைக்கு முன்) கைப்பற்றப்படுகிறது. நீங்கள் குறிப்பிட்ட கால அளவை அடைவதற்காகவும், நீங்கள் சிந்திப்பதற்காகவுமே இவ்வாறு செய்கிறான். 
  69. உயிரளிப்பவனும், மரணிக்கச் செய்பவனும் அவனே. எனவே அவன் ஒன்று குறித்து முடிவெடுத்தால் அதற்கு அவன் ஆகுக என்றே கூறுகின்றான். அது ஆக ஆரம்பித்து விடுகிறது. ரு7 
  70. அல்லாஹ்வின் அடையாளங்கள் குறித்து வாக்குவாதம் செய்பவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் எங்குத்  திருப்பப்படுகின்றனர்?
  71. (வாக்குவாதம் செய்யும்) அவர்கள் வேதத்தையும், நாம் எம் தூதர்கள் மூலமாக அனுப்பி வைத்ததனையும் பொய்யாக்குகின்றனர். எனவே அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் தெரிந்து கொள்வார்கள். 
  72. அவர்களது கழுத்துக்களைச் சுற்றி இரும்புச் சங்கிலிகளும், விலங்குகளும் இருக்கும். அவர்கள் இழுக்கப்படுவர். 
  73. (அவர்கள் அவற்றுடன்) கொதிக்கும் நீரில் (இழுத்துச் செல்லப்படுவர்). பின்னர் அவர்கள் நரகத்தில் எரிக்கப்படுவர். 
  74. பின்னர் நீங்கள் (அல்லாஹ்வுக்கு) இணை வைத்து வந்தவர்கள் எங்கே என அவர்களிடம் கூறப்படும். 
  75. அல்லாஹ்வைத் தவிர. அதற்கு அவர்கள் கூறுவார்கள்: அவர்கள் எங்களை விட்டு மறைந்து போய் விட்டனர்; (பின்னர் கூறுவர்) அவ்வாறன்று; மாறாக நாங்கள் இதற்கு முன்னர் எதனையும் அழைத்ததில்லை. இவ்வாறு அல்லாஹ் நிராகரிப்பவர்களை வழி தவறச் செய்கின்றான். 
  76. எதற்கெனில், நீங்கள் பூமியில் நியாயமின்றி மகிழ்ச்சியில் திளைத்தீர்கள். மேலும் நீங்கள் வீணாக உணர்ச்சி வசப்பட்டீர்கள். 
  77. நீங்கள் நரகத்தில் நெடுங்காலம் இருப்பதற்காக அதன் வாயில்களில் நுழையுங்கள். கர்வம் கொண்டவர்களின் இருப்பிடம் மிகவும் கெட்டதாகும். 
  78. எனவே நீர் பொறுமை கொள்வீராக. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும். நாம் அவர்களிடம் வாக்களித்தவற்றின் ஒரு பகுதியை நாம் உமக்குக் காட்டினாலும் சரியே அல்லது (எம் வாக்குறுதி நிறைவேறுவதற்கு முன்னர்) நாம் உம்மை மரணமடையச் செய்தாலும் சரியே, (எவ்வாறிருப்பினும்) எம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். 
  79. நிச்சயமாக நாம் உமக்கு முன்னர் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களுள் சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறியுள்ளோம். நாம் உமக்குக் கூறாதவர்களும் அவர்களுள் சிலர் உள்ளனர். அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் தூதராலும், எந்த அடையாளத்தையும் கொண்டு வர இயலாது. ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும் பொழுது உண்மைக்கேற்ப தீர்ப்பளிக்கப்படுகிறது. (உண்மையைப்) பொய்யாக்குபவர்கள் அங்கு இழப்பிற்கு ஆளாகி விடுகின்றனர். ரு8 
  80. அல்லாஹ்வே கால்நடைகளை உங்களுக்காக, நீங்கள் அவற்றுள் சிலவற்றின் மீது சவாரி செய்யப் படைத்தான். மேலும் சிலவற்றி(ன் இறைச்சியி)னை நீங்கள் உண்கிறீர்கள்.
  81. அவற்றுள் உங்களுக்கே இன்னும் பல பயன்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் நீங்கள் உங்கள் உள்ளங்களிலுள்ள தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் (அவன் அவற்றைப் படைத்தான்). அவற்றின் மீதும், கப்பல்களிலும் நீங்கள் சுமக்கப்படுகின்றீர்கள். 
  82. மேலும் அவன் தன் அடையாளங்களை உங்களுக்குக் காட்டுகின்றான். எனவே அல்லாஹ்வின் அடையாளங்களுள் எதனை நீங்கள் மறுப்பீர்கள்? 
  83. அவர்கள் பூமியில் பயணம் செய்து, அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதனை அவர்கள் பார்த்ததில்லையா? அவர்கள் இவர்களை விட மிகுதியானவர்களாகவும், ஆற்றல் மற்றும் பூமியில் (அவர்கள் விட்டுச் சென்ற) தடயங்கள் ஆகியவற்றில் வல்லவர்களாகவும் இருந்தனர். ஆனால் அவர்கள் சம்பாதித்ததொன்றும் அவர்களுக்குப் பயனளிக்கவில்லை. 
  84. அவர்களின் தூதர்கள் தெளிவான அடையாளங்களுடன் அவர்களிடம் வந்த போது, தங்களிடமிருந்த மிகக் குறைந்த அறிவைக் கொண்டு அவர்கள் பேருவகை அடைந்தனர். அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்த (தண்டனையான)து அவர்களைச் சூழ்ந்து கொண்டது. 
  85. அவர்கள் எம் தண்டனையைக் கண்ட போது, நாங்கள் அல்லாஹ் ஒருவனிடம் நம்பிக்கை கொள்கிறோம் என்றும், அவனுக்கு நாங்கள் இணை வைத்து வந்ததையெல்லாம் மறுக்கின்றோம் என்றும் அவர்கள் கூறினர். 
  86. ஆனால் அவர்கள் எமது தண்டனையைக் கண்ட போது, அவர்களின் நம்பிக்கை அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்கவில்லை. இதுவே அல்லாஹ்வின் அடியார்கள் தொடர்பாக எப்போதும் நிகழ்ந்து வருகின்ற அவனது நியதியாகும். நிராகரிப்பாளர்கள் அந்நேரத்தில் நஷ்டத்திற்காளாகி விட்டனர். ரு9
Powered by Blogger.