அதிகாரம்: அஸ்ஸுமர்
அருளப்பெற்ற இடம்:
மக்கா | வசனங்கள்: 76
பிரிவுகள்: 8
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணைகாட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வல்லமை மிக்க, நுண்ணறிவுடைய அல்லாஹ்விடமிருந்து இவ்வேதம் இறங்கப்பட்டதாகும்.
- நிச்சயமாக நாமே உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையுடன் இறக்கினோம். நம்பிக்கையை முற்றிலும் அவனுக்காக ஆக்கியவனாய், நேர்மையுடன் அல்லாஹ்வை வணங்குவீராக.
- உண்மையிலேயே நேரிய நம்பிக்கையே அல்லாஹ்விடம் பேரருளைப் பெறுகிறது. அவனையன்றி மற்றவர்களைப் பாதுகாவலர்களாக கொள்பவர்கள், அவர்கள் எங்களை அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்களாக ஆக்குகின்றனர் என்பதற்காகவே நாங்கள் அவர்களை வணங்குகின்றோம் (எனக் கூறுகின்றனர்)1. நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடு குறித்து அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவான். நிச்சயமாக பொய்யருக்கும், நன்றி கொன்றவருக்கும் அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
- அல்லாஹ், ஒரு மகனை உண்டாக்கிக் கொள்ள விரும்பியிருந்தால், அவன் படைப்பதிலிருந்து, அவன் விரும்புவதைத் தேர்ந்தெடுத்திருப்பான். அவன் தூய்மையானவன். அல்லாஹ் ஒருவனே, அவன் முழுமையான அதிகாரத்தைக் கொண்டவனாவான்.
- அவன் வானங்களையும், பூமியையும் முழுமையான (முன்) அறிவுடன் படைத்தான். அவன் இரவைக் கொண்டு பகலை மூடுகின்றான்; மேலும் அவன் பகலைக் கொண்டு இரவை மூடுகின்றான். இன்னும் அவன் சூரியனையும், சந்திரனையும் (ஒரு சட்டத்திற்கேற்ப) தொண்டு செய்ய வைத்துள்ளான். இவற்றுள் ஒவ்வொன்றும் (தன் வழியில்) குறிப்பிட்ட ஒரு காலம் வரை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. கவனமாகக் கேளுங்கள்! அவன் வல்லோனும், மிக்க மன்னிப்பவனுமாவான்.
- அவன் உங்களை ஓர் உயிரிலிருந்து படைத்தான். பின்னர் அவன் அதிலிருந்தே அதன் இணையைப் படைத்தான். கால்நடைகளுள் எட்டு இணைகளை அவன் உங்களுக்கு அருளினான். அவன் உங்களை, உங்கள் தாய்மார்களின் கருப்பைகளில் ஒரு படைப்பிற்குப் பின் ஒரு படைப்பாக மூன்று இருள்கள் வழியாகப் படைத்தான்2. இத்தகையவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். ஆட்சி அவனுக்குரியதே ஆகும். அவனே வணக்கத்திற்குரியவன் ஆவான். எனவே நீங்கள் எங்கே திருப்பப்படுகின்றீர்கள்?
- நீங்கள் நன்றி கொன்றவர்களாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் தன்னிறைவு பெற்றவனாவான். அவன் தன் அடியார்களிடம் நன்றிகெட்ட தன்மையை ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக இருந்தால், அவன் அதனை உங்களுக்கு விரும்புகின்றான். சுமை சுமப்பவர் எவரும் மற்றவரது சுமையைச் சுமக்க மாட்டார்3. நீங்கள் யாவரும் உங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது. அப்போது அவன் உங்களுக்கு, நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அறிவிப்பான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் மறைந்திருப்பவற்றை நன்கு அறிவான்.
- மனிதனுக்கு ஏதாவது ஒரு துன்பம் ஏற்படும் போது, அவன் (தாம் செய்த பாவத்திற்காக மனம் வருந்தி) தம் இறைவனிடம் திரும்பியவாறு அவனை அழைக்கின்றான். பின்னர் அவன் தன்னிடமிருந்து ஓர் அருளை அவனுக்கு வழங்கி விட்டால், முன்னர் அவன் எதற்காக வேண்டுதல் செய்து வந்தானோ அதனை மறந்து (மக்களை) அல்லாஹ்வின் வழியிலிருந்து தவறான வழியில் நடத்திச் செல்வதற்காக அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றான். நீர் கூறுவீராக: உமது நிராகரிப்பினால் சிறிது பயன் பெறுவீராக; நிச்சயமாக நீர் நரகத்திற்குரியவராவீர்.
- மறுமைக்கு அஞ்சுவோரும், தம் இறைவனின் அருளை எதிர்பார்ப்பவரும் இரவு நேர (வணக்க)ங்களில் சிரம் பணிந்தும், நின்றும் பணிவுடன் (அவனை) வேண்டுபவரும் ஆகிய ஒருவர் (கட்டுப்பட்டு நடக்காதவனைப் போன்றவராக இருக்க முடியுமா?). அறிபவர்களும், அறியாதவர்களும் ஒப்பாவாரா? என்று நீர் கூறுவீராக. அறிவுடையவர்கள் மட்டுமே அறிவுரை பெறுவர். ரு1
- நீர் கூறுவீராக: நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்கு அஞ்சுங்கள். இவ்வுலகில் நற்செயல்கள் செய்பவர்களுக்கு மிகச்சிறந்த வெகுமதி உண்டு. அல்லாஹ்வின் பூமி மிக விரிவானதாகும்4. பொறுமையாளர்கள் தங்கள் நற்பலனைக் கணக்கின்றிப் பெறுவர்5.
- நீர் கூறுவீராக: நேரிய நம்பிக்கையை முற்றிலும் அவனுக்கே ஆக்கியவாறு அல்லாஹ்வை வணங்க வேண்டுமென்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
- மேலும்(அவனுக்குக்) கீழ்ப்படிந்து நடப்பவர்களுள் நான் முதன்மையானவனாக இருக்குமாறும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.
- நீர் கூறுவீராக: நான் என் இறைவனுக்கு கட்டுப்படாமல் இருப்பின், மாபெரும் ஒரு நாளின் தண்டனைக்கு உண்மையிலேயே நான் அஞ்சுகின்றேன்.
- நீர் கூறுவீராக: நான் என் நேரிய நம்பிக்கையை முற்றிலும் அவனுக்கே ஆக்கியவாறு வணங்குவது அல்லாஹ்வை மட்டுமே.
- எனவே (உங்களைப் பொருத்தவரை) நீங்கள் அவனையன்றி எதனை வேண்டுமானாலும் வணங்குங்கள். நீர் கூறுவீராக: நிச்சயமாக இழப்பிற்குரியோர் தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் மறுமை நாளில் அழிவிற்குள்ளாக்கியவர்களேயாவர். கவனமாகக் கேளுங்கள்! இதுவே பகிரங்கமான இழப்பாகும்.
- அவர்களுக்கு மேலும் நெருப்பின் நிழல்கள் இருக்கும். அவர்களுக்குக் கீழும் (நெருப்பின் அதே) நிழல்கள் இருக்கும்6. இது குறித்து அல்லாஹ் தன் அடியார்களை அச்சுறுத்துகிறான். என் அடியார்களே! எனக்கு மட்டும் அஞ்சுங்கள்.
- மேலும் பொய்த் தெய்வங்களை வணங்காமல், அவற்றிலிருந்து விலகி, முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புபவர்களுக்கு நற்செய்தி உண்டு. எனவே என் அடியார்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.
- அவர்கள் அவ்வசனத்தைச் செவியேற்று, அதில் மிகச்சிறந்ததை பின்பற்றுகின்றனர். இவர்களுக்கே அல்லாஹ் நேர்வழி காட்டியுள்ளான். இவர்களே அறிவுடையவர்கள் ஆவர்.
- எவருக்கெதிராகத் தண்டனைக்குரிய தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதோ அவரா( காப்பாற்றப்படுவார்?). நரகத்தில் இருப்பவரை உம்மால் காப்பாற்ற இயலுமா?
- ஆனால் தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்களுக்கு உயரிய மாளிகைகள் உள்ளன. மேலும் அதனினும் உயரிய மாளிகைகள் பல கட்டப்பட்டிருக்கும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் உறுதியான வாக்குறுதியாகும். அல்லாஹ் தன் வாக்குறுதியை மீறுவதில்லை.
- அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவன் அதனைப் பதராக ஆக்கி விடுகின்றான். நிச்சயமாக இதில் அறிவுடையவர்களுக்கு நற்போதனை இருக்கிறது. ரு2
- அல்லாஹ் எவரது நெஞ்சத்தை இஸ்லாத்தி(னை ஏற்றுக் கொள்வத)ற்காகத் திறந்துள்ளானோ, மேலும் எவர் தமது இறைவனிடமிருந்துள்ள ஒளியினால் நேர்வழியும் காட்டப்பட்டுள்ளாரோ அவரா (அவ்வாறில்லாத ஒருவரைப் போன்றவராக இருக்க முடியும்?) அல்லாஹ்வை நினைவு கூருவதற்கெதிராக எவர்களின் உள்ளங்கள் கடினமானவையாக இருக்கின்றனவோ அவர்களுக்கு அழிவு தான்! அவர்கள் மிகப் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர்.
- அல்லாஹ் மிகச்சிறந்த செய்தியினை அதாவது முதஷாபிஹான (முன்னுள்ள மற்ற வேதங்களின் சிறந்த கருத்துக்களுக்கு உடன்பாடான) மிக உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட வேதத்தை இறக்கினான். அதனைப் படிப்பதனால் தங்கள் இறைவனுக்கு அஞ்சுபவர்கள் மெய்சிலிர்த்து விடுகின்றனர். பின்னர் அவர்களின் தோல்களும், உள்ளங்களும் மென்மையடைந்து அல்லாஹ்வை நினைவு கூருவதன் பக்கம் சாய்ந்து விடுகின்றன. இது அல்லாஹ்வின் வழிகாட்டுதல் ஆகும். அவன் விரும்புபவர்களுக்கு இதன் மூலம் நேர்வழியினைக் காட்டுகின்றான். அல்லாஹ்வால் வழிகேட்டில் செல்ல விடப்பட்டவனுக்கு வழிகாட்டுபவன் எவனுமில்லை.
- மறுமை நாளில் தீய தண்டனையிலிருந்து தனது நம்பிக்கையே தன்னைப் பாதுகாக்கும் என எண்ணுபவனா (காப்பாற்றப்பட்டவன்?) அநீதி இழைத்தவர்களிடம், நீங்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவற்றைச் சுவைத்துப் பாருங்கள் எனக் கூறப்படும்.
- இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (எமது தூதர்களைப்) பொய்ப்படுத்தினர். எனவே அவர்கள் அறியாத இடத்திலிருந்து அவர்களிடம் தண்டனை வந்தது.
- அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையிலும் இழிவைச் சுவைக்கச் செய்தான். அவர்கள் அறிந்திருப்பின், மறுமையிலுள்ள தண்டனை (இதனை விட) மிகப் பெரியதாகும்.
- மக்கள் அறிவுரையினைப் பெறுவதற்காக நிச்சயமாக நாம் அவர்களுக்கு இந்தக் குர்ஆனில் எல்லா உவமைகளையும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளோம்.
- அவர்கள் இறையச்சமுடையவர்களாகத் திகழ தெளிவான மொழியில் கோணல் அற்றதாக இந்தக் குர்ஆனை நாம் இறக்கினோம்.
- அல்லாஹ் ஓர் உவமையை(ப் படிப்பினைக்காக) விளக்குகின்றான்: ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு கொண்ட பல பங்காளிகள் ஒரு மனிதனின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். மற்றொரு மனிதன் ஒரு மனிதனுக்கு மட்டும் முழு உடைமையாக இருக்கின்றான். இவ்விருவரும்7 தங்கள் நிலையில் சமமானவர்களாக இருக்க முடியுமா? எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. ஆனால் அவர்களுள் பெரும்பாலானவர்கள் அறிவதில்லை.
- நிச்சயமாக நீர் (ஒரு நாள்) மரணமடைவீர்; நிச்சயமாக அவர்களும் மரணமடைவார்கள்.
- பின்னர் மறுமை நாளில் நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவன் முன் (தத்தமது கொள்கைகளைப் பற்றி) ஒருவரோடொருவர் வாக்குவாதம் செய்து கொள்வீர்கள். ரு3
- அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவனையும், உண்மை தன்னிடம் வந்த போது அதனைப் பொய்யாக்கியவனையும் விட மிக்க அநீதி இழைப்பவன் எவன்? நிராகரிப்பவனின் இருப்பிடம் நரகத்தில் அல்லவா இருக்கிறது?
- ஆனால் உண்மையைக் கொண்டு வந்த (ஒவ்வொரு) வரும், அதனை மெய்ப்பித்த (ஒவ்வொரு) வரும் ஆகிய இவர்களே இறையச்சமுடையவர்களாவர்.
- அவர்கள் விரும்புவதெல்லாம் அவர்களது இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அது நன்மை செய்பவர்களுக்குரிய கூலியாகும்.
- அல்லாஹ், அவர்கள் செய்தவற்றின் தீமையை (தீய விளைவுகளை) அவர்களை விட்டு அகற்றி, அவர்களது வெகுமதியை அவர்களின் செயல்களுள் மிகச்சிறந்தவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்கு வழங்குவதற்காக(வே இது).
- அல்லாஹ் தன் அடியானுக்குப் போதுமானவன் அல்லவா? அவன் அல்லாதவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர். அல்லாஹ்வால் வழிகேட்டில் விடப்பட்டவனுக்கு வழிகாட்டுபவன் எவனுமில்லை.
- மேலும் அல்லாஹ் ஒருவனுக்கு நேர்வழி காட்டினால், அவனைத் தவறான வழியில் நடத்துபவர் எவரும் இல்லை. அல்லாஹ் பழி வாங்குவதில் வல்லமை மிகுந்தவன் அல்லவா? 8
- வானங்களையும், பூமியையும் படைத்தவன் எவன் என்று நீர் அவர்களிடம் வினவினால், நிச்சயமாக அவர்கள், அல்லாஹ் என்று கூறுவார்கள். நீர் கூறுவீராக: அல்லாஹ் எனக்குத் தீங்கிழைக்கக் கருதினால், அல்லாஹ்வையன்றி நீங்கள் எவற்றை அழைக்கின்றீர்களோ அவற்றால் அவனது தீங்கை அகற்றி விட முடியுமா? அல்லது அவன் எனக்குக் கருணை காட்டக் கருதினால், அவற்றால் அவனது கருணையைத் தடுத்து விட முடியுமா? நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? நீர் கூறுவீராக! எனக்கு அல்லாஹ் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவனிடமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
- நீர் கூறுவீராக: என் சமுதாயத்தினரே! நீங்கள் உங்கள் இடத்திலிருந்து செயல்படுங்கள். நானும் செயல்படுகிறேன். நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்;
- இழிவுபடுத்தும் தண்டனை எவருக்கு வருகின்றது என்பதையும், எவருக்கு நிலையான தண்டனை இறங்குகின்றது என்பதையும் (தெரிந்து கொள்வீர்கள்).
- நிச்சயமாக நாம் உமக்கு மக்களு(டைய நன்மை)க்காக இவ்வேதத்தை உண்மையைக் கொண்டுள்ளதாக இறக்கினோம். எனவே எவன் நேர்வழியினைப் பின்பற்றுவானோ அதன் நன்மை அவனுக்குக் கிடைக்கும். எவன், தவறான வழியினைப் பின்பற்றுவானோ அதன் தீங்கு அவனுக்கே கிடைக்கும். நீர் அவர்களின் பாதுகாவலர் அல்ல. ரு4
- அல்லாஹ் மக்களின் உயிர்களை அவர்களின் மரணத்தின் போதும் (இதுவரை) மரணமடையாதவர்களின் உயிர்களை அவர்களது தூக்கத்தின் போதும் கைப்பற்றுகிறான். பின்னர் மரணம் முடிவாகி விட்டவற்றை அவன் (தன்னிடமே) நிறுத்தி வைத்துக் கொள்கின்றான். மற்றவற்றைக் குறிப்பிட்ட ஒரு காலத்திற்குத் (திருப்பி) அனுப்பி விடுகின்றான். சிந்தனை செய்யும் மக்களுக்கு இதில் அடையாளங்கள் உள்ளன.
- இவர்கள் அல்லாஹ்வையன்றிப் பரிந்து பேசுபவர்களை ஏற்படுத்திக் கொள்கின்றனரா? நீர் கூறுவீராக: அவர்கள் எதற்கும் வலிமை பெறாதவர்களாகவும், அறிவற்றவர்களாகவும் இருந்தாலுமா?
- நீர் கூறுவீராக: பரிந்து பேசுதல் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியன. வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. பின்னர் நீங்கள் அவனிடமே திரும்பவும் கொண்டு செல்லப்படுவீர்கள்.
- அல்லாஹ்வைப் பற்றி மட்டும் கூறப்படும் பொழுது, மறுமையிடத்து நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் வெறுப்பினால் எகிறி எழுகின்றன9. ஆனால் அவன் அல்லாதவர்களைப் பற்றிக் கூறப்படும் பொழுது உடனே மகிழத் தொடங்குகின்றனர்.
- நீர் கூறுவீராக: வானங்களையும், பூமியையும் படைத்தவனும், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனுமாகிய அல்லாஹ்வே! நீயே உனது அடியார்களுக்கிடையே அவர்கள் கொண்டிருக்கும் பல்வேறு வேறுபாடுகளில் தீர்ப்பு வழங்குபவனாவாய்.
- அநீதி இழைத்தவர்கள், பூமியிலுள்ள அனைத்தையும், அதனுடன் அவை போன்றவற்றையும் பெற்றிருப்பின் மறுமை நாளில் தீய தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர்கள் தங்களுக்கு ஈடாக அவற்றைக் கொடுக்க விரும்பியிருப்பர். ஆனால் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்காதது அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வெளிப்படும்.
- அவர்களின் செயல்களின் தீமைகள் அவர்களுக்குத் தென்படும். அவர்கள் ஏளனம் செய்து கொண்டிருந்த (தண்டனையான)து அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்.
- மனிதனுக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் பொழுது அவன் எம்மை அழைக்கின்றான். ஆனால் நாம் எம்மிடமிருந்து ஓர் அருளை அவனுக்கு வழங்கி விடும் பொழுது, இது எனது (சொந்த) அறிவின் காரணமாக எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அவன் கூறுகின்றான். அவ்வாறன்று: அது ஒரு சோதனையேயாகும். ஆனால் அவர்களுள் பெரும்பாரார் அறிவதில்லை.
- இவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் கூறினர். என்றாலும் அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
- எனவே அவர்கள் சம்பாதித்தவற்றின் தீமை(களுக்கான தண்டனை)கள் அவர்களை அடைந்தன. இவர்களுள் அநீதி இழைப்பவர்கள் சம்பாதித்தவற்றின் தீமைகளும் இவர்களைப் பற்றிக் கொள்ளும். இவர்களால் அவற்றை முறியடிக்க இயலாது.
- அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு வாழ்விற்கு வேண்டியவற்றை விரிவாக்குகின்றான்: (தான் நாடுபவருக்கு அவற்றைச்) சுருக்கவும் செய்கின்றான் என்பதனை அவர்கள் அறிவதில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்தினருக்கு நிச்சயமாக இதில் மாபெரும் அடையாளங்கள் உள்ளன. ரு5
- நீர் கூறுவீராக: தமக்கே (பாவஞ் செய்து) அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! நீங்கள் அல்லாஹ்வின் கருணை பற்றி நம்பிக்கை இழந்து விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- மேலும் நீங்கள் உங்கள் இறைவன்பால் திரும்பி விடுங்கள். உங்களிடம் தண்டனை வருவதற்கு முன்னர், நீங்கள் அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து விடுங்கள். (ஏனென்றால்) அதன் பின்னர் (எவராலும்) நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்.
- நீங்கள் அறியாமலேயே திடீரென்று உங்களிடம் தண்டனை வருவதற்கு முன்னர் உங்களுக்கு, உங்கள் இறைவனிடமிருந்து அருளப்பட்ட மிகச்சிறந்த (போ) தனை(யை)ப் பின்பற்றுங்கள்10.
- நான் அல்லாஹ்வின் விஷயத்தில் வரம்பு மீறியதற்காக எனக்குப் பரிதாபமே; நிச்சயமாக நான் (இறையறிவிப்பை) இகழ்ந்தவர்களைச் சேர்ந்தவனாக இருந்தேன் என்று எவரும் கூறாமலிருப்பதற்காக;
- அல்லது, அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால், நிச்சயமாக நான் அவனுக்கு அஞ்சி நடப்பவர்களைச் சேர்ந்தவனாக இருந்திருப்பேன் என்று அவர் கூறாதிருப்பதற்காக;
- அல்லது, அவர் தண்டனையைக் காணும் போது, (உலகிற்குத்) திரும்பிச் செல்ல எனக்கு வாய்ப்புக் கிடைத்தால், நான் நன்மை செய்பவர்களைச் சேர்ந்தவனாகி இருப்பேன் என்று அவர் கூறாதிருப்பதற்காக (சிறந்ததைப் பின்பற்றுங்கள்).
- (இதற்கு இறைவன் பதிலளிப்பான்;) அவ்வாறன்று; மாறாக என் அடையாளங்கள் உன்னிடம் வந்தன. நீ அவற்றைப் பொய்யாக்கி, கர்வங்கொண்டு, நிராகரிப்பவர்களைச் சேர்ந்தவனாகி விட்டாய்.
- அல்லாஹ்விற்கு எதிராகப் பொய்யுரைத்தவர்களின் முகங்கள் மறுமை நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர். கர்வங் கொண்டவர்களுக்குரிய இருப்பிடம் நரகத்தில் அல்லவா? (இருக்கிறது).
- அல்லாஹ், தனக்கு அஞ்சி நடந்தவர்களுக்குத் தகுதியான வெற்றியின்பால் வழிகாட்டி, அவர்களைக் காப்பாற்றுவான். தீங்கு அவர்களைத் தீண்டாது. அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.
- அல்லாஹ் எல்லாவற்றையும் படைப்பவனும், எல்லாவற்றையும் பாதுகாப்பவனுமாவான்.
- வானங்கள், பூமி ஆகியவற்றின் திறவு கோல்கள் அவனிடமே உள்ளன. மேலும் அல்லாஹ்வின் அடையாளங்களை மறுப்பவர்கள் இழப்பிற்குரியவர்களே! ரு6
- நீர் கூறுவீராக: அறிவற்றவர்களே! அல்லாஹ் அல்லாதவற்றை நான் வணங்க வேண்டுமென்று நீங்கள் எனக்குக் கட்டளையிடுகின்றீர்களா?
- நிச்சயமாக உமக்கும், உமக்கு முன்னுள்ளவர்(களான நபிமார்)களுக்கும் வஹி அறிவிக்கப்பட்டது; அதாவது நீர் (இறைவனுக்கு) இணை வைத்தால், நிச்சயமாக உமது செயல் வீணாகி விடும். நிச்சயமாக நீர் இழப்பிற்குரியோரைச் சேர்ந்தவராகி விடுவீர்.
- (எனவே நீர் அவ்வாறு செய்யாதிருப்பீராக) மாறாக, அல்லாஹ்வை வணங்கி, நன்றி செலுத்துபவர்களைச் சேர்ந்தவராகி விடுவீராக.
- அவர்கள் அல்லாஹ்வை அவனது மதிப்பிற்கேற்றவாறு மதிப்பதில்லை. தீர்ப்பு நாளில் பூமி முழுவதும் அவனது அதிகாரத்திற்குட்பட்டதாகிவிடும். வானங்கள் அவனது வலக்கை(யின் வல்லமை)யால் சுருட்டப்படும். அவன் தூயவன். அவர்கள் (அவனுக்கு) ஏற்படுத்துகின்ற இணைகளை விட்டும் அவன் மேன்மையானவன்.
- எக்காளம் ஊதப்படும். அப்பொழுது அல்லாஹ் (காப்பாற்ற) விரும்பியவரைத் தவிர, வானங்களிலுள்ளவர்களும், பூமியிலுள்ளவர்களும் மயக்கமடைந்து (வீழ்ந்து) விடுவர். பிறகு மறுமுறை எக்காளம் ஊதப்படும். உடனே அவர்கள் (தங்கள் முடிவை) எதிர்பார்த்தவாறு நின்று கொண்டு இருப்பர்.
- பூமி, தன் இறைவனது ஒளியினால் ஒளி வீசும். (வேத) நூல் (அவர்கள் முன் திறந்து) வைக்கப்படும். நபிமார்களும், சாட்சிகளும் கொண்டு வரப்படுவர். அவர்களுக்கிடையே நியாயமான தீர்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது.
- ஒவ்வொருவருக்கும் அவர்கள் ஆற்றிய செயலுக்காக முழுமையான கூலி வழங்கப்படும். அவர்கள் செய்தவற்றை அவன் நன்கு அறிபவனாவான்.
- நிராகரிப்பவர்கள் கூட்டங்கூட்டமாக நரகத்திற்கு விரட்டப்படுவார்கள். அவர்கள் அதனை வந்தடையும் போது, அதன் வாயில்கள் திறக்கப்படும். அதன் காவலர்கள் அவர்களிடம், உங்களிலிருந்தே (தோன்றிய) தூதர்கள் உங்களிடம் வந்து, உங்கள் இறைவனது வசனங்களை அவர்கள் உங்களுக்கு ஓதிக் காட்டவில்லையா? உங்களுடைய இந்த நாளின் சந்திப்பு பற்றி உங்களை அவர்கள் எச்சரிக்கவில்லையா என்று கூறுவார்கள். இதற்கு அவர்கள், ஆம் ; (அவர்கள் வந்து எச்சரித்தனர்). ஆனால் நிராகரிப்பவர்களுக்கு எதிராக தண்டனையைப் பற்றிய முன்னறிவிப்பு நிறைவேறியே தீர வேண்டியதிருந்தது என்று சொல்வார்கள்.
- (அப்போது) அவர்களிடம் நீங்கள் நரகத்தில் நெடுங்காலம் தங்கியிருக்க வேண்டிய நிலையில் அதன் வாயில்களில் நுழையுங்கள். கர்வங்கொண்டவர்களின் இருப்பிடம் மிகத் தீயதேயாகும் என்று கூறப்படும்.
- தங்கள் இறைவனுக்கு அஞ்சியவர்கள் கூட்டங்கூட்டமாக சுவர்க்கத்திற்கு அழைத்துக் கொண்டு வரப்படுவார்கள். அவர்கள் அதனை அடையும் போது, அதன் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அதன் காவலர்கள் அவர்களிடம், உங்களுக்குச் சாந்தி உண்டாவதாக! நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். இதில் நுழைந்து என்றென்றும் வாழ்ந்து வாருங்கள் என்பார்கள்.
- இதற்கு அவர்கள், தனது வாக்குறுதியினை எங்களுக்கு நிறைவேற்றி, இந்த இடத்திற்கு எங்களை வாரிசாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். சுவர்க்கத்தில் நாங்கள் விரும்பும் இடங்களில் நாங்கள் இருந்து வருவோம் என்பார்கள். எனவே (நன்றாகச்) செயலாற்றியவர்களின் நற்பலன் எத்துணை சிறந்தது!
- நீர் வானவர்களை, அந்த அரியணையைச் சூழ்ந்து நின்று தங்கள் இறைவனைப் புகழ்ந்து, (அவனது) தூய்மையினை எடுத்துரைத்துக் கொண்டிருப்பதைக் காண்பீர். மேலும் அவர்களுக்கிடையே நேர்மையுடன் தீர்ப்பு வழங்கப்படும். எல்லா உலகங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் எனக் கூறப்படும். ரு8