62- அல்ஜுமுஆ

அதிகாரம் : அல்ஜுமுஆ
அருளப்பெற்ற இடம்: மதீனா | வசனங்கள்: 12

பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. வானங்களிலும், பூமியிலுமுள்ளவையெல்லாம் அரசனும், தூயவனும், வல்லமையுள்ளவனும், நுண்ணறிவுள்ளவனுமாகிய அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. 
  3. அவனே எழுதப்படிக்கத் தெரியாத மக்களுக்கு - அவர்கள் இதற்கு முன்னர் தெளிவான வழிகேட்டில் இருந்த போதிலும் - அவனது கட்டளைகளைப் படித்துக் காட்டி, அவர்களைத் தூய்மைப்படுத்தி, அவர்களுக்கு வேதத்தையும், நுட்பமான அறிவையும் கற்றுக் கொடுக்கும் ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பினான். 
  4. மேலும் இதுவரை  அவர்களுடன் சேராத மற்றவர்களுக்கிடையிலும்1 (அவரை எழுப்புவான்). அவன் வல்லமை மிக்கவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான். 
  5. இது அல்லாஹ்வின் அருளாகும். தான் விரும்புபவருக்கு அவன் அதனை வழங்குகிறான். அல்லாஹ் பேரருள் உடையவனாவான். 
  6. தவ்ராத்(தின் சட்டம்) சுமத்தப்பட்டு, ஆனால் அதன்படி செயல்படாதவர்களின் உவமை, புத்தகங்(களின் சுமை)களைச் சுமக்கும் கழுதையின் உவமையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் அடையாளங்களை ஏற்க மறுக்கும் மக்களின் உவமை மிகக் கெட்டதே. அநீதியிழைக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 
  7. நீர் கூறுவீராக! யூதர்களே; மற்றெல்லா மக்களையும் விட நீங்கள் தாம் அல்லாஹ்வின் நண்பர்கள் என்று நீங்கள் உரிமை கொண்டாடுகின்றீர்கள் என்றால் - இ(ந்த வாதத்)தில் நீங்கள் உண்மையாளர்களாயின் - நீங்கள் மரணத்தை நாடுங்கள். (அதாவது முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் முபாஹலா செய்யுங்கள்). 
  8. ஆனால் அவர்களது கைகள் (ஏற்கனவே) செய்து அனுப்பியுள்ள செயல்கள் காரணமாக, அதனை ஒருபோதும் அவர்கள் நாடமாட்டார்கள். மேலும் அநீதியிழைப்பவர்களை அல்லாஹ் நன்கு அறிகின்றான். 
  9. நீர் கூறுவீராக! எந்த மரணத்திலிருந்து நீங்கள் விரைந்தோடுகின்றீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை வந்தடையும். பின்னர் நீங்கள் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் திரும்பக் கொண்டு செல்லப்படுவீர்கள். அவன் உங்களுக்கு நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி அறிவிப்பான். 
  10. நம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால், நீங்கள் அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கு விரைந்து செல்லுங்கள். (மற்றெல்லா) வியாபாரங்களையும் விட்டு விடுங்கள். நீங்கள் அறிந்திருப்பின் இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
  11. தொழுகை நிறைவேற்றப்பட்டதும், பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள், நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை மிகுதியாக நினைவு கூருங்கள். 
  12. ஆனால் அவர்கள் வியாபாரத்தையோ, கேளிக்கைகளையோ காணும் போது அதன்பால் ஈர்க்கப்பட்டு, உம்மை (தனித்து) நிற்க வைத்து விடுகின்றனர். நீர் கூறுவீராக: அல்லாஹ்விடமுள்ளது கேளிக்கையை விடவும், வியாபாரத்தை விடவும் மிகச்சிறந்ததாகும். அல்லாஹ் மிகச்சிறந்த உணவளிப்பவனாவான். ரு 2
Powered by Blogger.