61- அஸ்ஸஃப்

அதிகாரம்: அஸ்ஸஃப்
அருளப்பெற்ற இடம் : மதீனா | வசனங்கள்: 15

பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்(ஓதுகின்றேன்). 
  2. வானங்களிலும், பூமியிலுமுள்ளவையெல்லாம் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. அவன் வல்லமையுள்ளவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான். 
  3. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? 
  4. நீங்கள் செய்யாததை நீங்கள் சொல்வது, அல்லாஹ்வின் பார்வையில் மிக்க வெறுக்கத்தக்கதாகும். 
  5. உருக்கப்பட்ட ஈயத்தால் இணைக்கப்பட்ட (உறுதி வாய்ந்த) ஒரு கட்டடத்தைப்போல் அமைத்து, அவன் வழியில் (வலிமையான) வரிசைகளாக அணி வகுத்துப் போர் செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான்.
  6. மூஸா தம் சமுதாயத்தினரிடம்: நான் உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் என்பதனை நீங்கள் அறிந்திருந்தும், நீங்கள் ஏன் என்னைத் துன்புறுத்துகின்றீர்கள்? என்று கூறிய போது (நிகழ்ந்ததை நினைத்துப் பாருங்கள்). எனவே அவர்கள் (நேரான பாதையிலிருந்து) விலகிய போது, அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை விலகச் செய்து விட்டான். மேலும் கட்டுப்படாத மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. 
  7. மர்யமின் மகன் ஊஸா தன் சமுதாயத்தினரிடம், இஸ்ராயீலின் மக்களே! நிச்சயமாக நான் எனக்கு முன்னர் தவ்ராத்தில் கூறப்பட்டதை நிறைவேற்றக் கூடியவனாகவும், எனக்குப் பின்னர் வரப் போகின்ற அஹ்மத் எனும் பெயரைக் கொண்ட ஒரு தூதரைப் பற்றி நற்செய்தி வழங்குபவனாகவும்1, உங்களிடம் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்று கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). பின்னர் அ(த் தூது)வர் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்தபோது, இது மிகத்தெளிவான மந்திர வித்தையாகும் என்று அவர்கள் கூறினர். 
  8. அவர் இஸ்லாத்தின்பால் அழைக்கப்படுகையில்2, அல்லாஹ்வுக்கு எதிராகப் பொய்யைப் புனைந்துரைப்பவனை விட மிகவும் அநீதியிழைப்பவன் எவன்? அநீதியிழைத்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். 
  9. அவர்கள் தங்கள் வாய்களால் அல்லாஹ்வின் ஒளியை அணைத்து விட விரும்புகின்றனர். ஆனால் நிராகரிப்பவர்கள் (எவ்வளவு) வெறுத்த போதிலும், அல்லாஹ் தனது ஒளியை முழுமையாக்கியே தீருவான். 
  10. அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மையான மார்க்கத்துடனும், இதனை அவன் எல்லா மார்க்கத்தின் மீதும் வெற்றி பெறச் செய்வதற்காக அனுப்பினான். (இறைவனுக்கு) இணை வைப்பவர்கள் (இதனை) எந்த அளவு வெறுத்தாலும் சரியே. ரு1
  11. நம்பிக்கை கொண்டவர்களே! வேதனையளிக்கக் கூடிய தண்டனையிலிருந்து உங்களைக் காப்பாற்றும் வாணிபம் ஒன்றைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 
  12. நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும் நம்பிக்கை கொண்டு, உங்கள் பொருட்களையும், உங்கள் உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் வழியில் கடுமையாக உழைப்பதே (அந்த வாணிபம்) ஆகும். நீங்கள் அறிந்திருப்பின், இது உங்களுக்கு மிகச்சிறந்ததாகும். 
  13. (நீங்கள் அவ்வாறு செய்தால்) அவன் உங்கள் பாவங்களை மன்னித்து, தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடுகின்றன. மேலும் என்றென்றும் நிலைத்திருக்கும் தோட்டங்களிலுள்ள தூய்மையானதும், இன்பமானதுமான இருப்பிடங்களில் (அவன் உங்களை அமர்த்துவான்). இது (அவன் உங்களுக்கு அளிக்கும்) மாபெரும் வெற்றியாகும். 
  14. நீங்கள் விரும்புகின்ற இன்னொன்றையும் (அவன் உங்களுக்கு வழங்குவான்). அது அல்லாஹ்விடமிருந்துள்ள உதவியும், அண்மையில் கிடைக்கக்கூடிய வெற்றியுமாகும். எனவே நீர் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி வழங்குவீராக. 
  15. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்பவர்களாக ஆகி விடுங்கள். எவ்வாறெனில், மர்யத்தின் மகன் ஈஸா (தமது) சீடர்களிடம், அல்லாஹ்வுக்காக எனது உதவியாளர்கள் யார் என்று கூறினார். நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்பவர்களாக இருக்கின்றோம் என்று சீடர்கள் விடையளித்தனர். இஸ்ராயீலின் மக்களுள் ஒரு பிரிவினர் நம்பிக்கை கொண்டனர்; மற்றொரு பிரிவினர் நிராகரித்து விட்டனர். இதனால் நாம் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களின் பகைவர்களுக்கு எதிராக உதவி செய்தோம். ஆகவே அவர்கள் வெற்றி பெற்றவர்களாகி விட்டனர். ரு2
Powered by Blogger.