அதிகாரம்: அல்முனாஃபிகூன்
அருளப்பெற்ற இடம்
: மதீனா | வசனங்கள்: 12
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நயவஞ்சகர்கள் உம்மிடம் வரும் போது, "நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதராவீர் என்று நாங்கள் சாட்சி பகர்கின்றோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று அவன் அறிவான். ஆனால் நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்களேயாவர் என்று அல்லாஹ் சாட்சி பகர்கின்றான்.
- அவர்கள் தங்கள் சத்தியங்களை ஒரு கேடயமாக ஆக்கிக் கொண்டு, அல்லாஹ்வின் வழியிலிருந்து (மக்களைத்) தடுக்கின்றனர். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பது மிகத் தீயதாகும்.
- இதற்குக் காரணம் (முதலில்) அவர்கள் நம்பிக்கை கொண்டனர். பின்னர் நிராகரித்து விட்டனர். எனவே அவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டு விட்டது. அவர்கள் புரிந்து கொள்ளமாட்டார்கள்.
- நீர் அவர்களைக் காணும் போது, அவர்களது உடலமைப்பு உம்மை வியக்கச் செய்கின்றது. அவர்கள் பேசினால், அவர்களின் பேச்சை நீர் கேட்கின்றீர். அவர்கள், தாங்கலாக நிறுத்தப்பட்ட மரக்கட்டைகளைப் போன்றிருக்கின்றனர். ஒவ்வொரு குரலும் தங்களுக்கு எதிரானதென்று அவர்கள் நினைக்கின்றனர். அவர்கள் பகைவர்களாவார்கள். எனவே நீர் அவர்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பீராக. அல்லாஹ்வால் அவர்கள் சபிக்கப்பட்டுள்ளனர். (உண்மையான பாதையிலிருந்து) அவர்கள் எங்கே திருப்பி விடப்படுகின்றனர்.
- மேலும், வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரலாம் என்று அவர்களிடம் கூறப்படும் போது, அவர்கள் தங்கள் தலைகளை ஒருபக்கமாகத் திருப்பிக் கொள்கின்றனர். அவர்கள் (உண்மையான வழியிலிருந்து மக்களைத்) திருப்பிக் கொண்டிருப்பவர்களாக நீர் அவர்களைக் காண்கின்றீர். அவர்கள் மிகவும் பெருமை கொண்டவர்களாவார்கள்.
- நீர் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருவதும், அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோராதிருப்பதும் அவர்களுக்குச் சமமானதேயாகும். (அவர்கள் தாங்களாகவே பாவமன்னிப்புக் கோராதவரை) அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் கட்டுப்படாத மக்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை.
- அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்காக நீங்கள் செலவு செய்யாதீர்கள், அப்போது அவர்கள் கலைந்து சென்று (அவரை விட்டு விலகி) விடுவார்கள் என்று கூறுபவர்கள் அவர்களே. ஆனால் வானங்கள், பூமி ஆகியவற்றின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். இருப்பினும் நயவஞ்சகர்கள் புரிந்து கொள்வதில்லை.
- நாம் மதீனாவுக்குத் திரும்பினால், மிகுந்த கண்ணியத்திற்குரியவர், மிக்க அற்பமானவரை நிச்சயமாக அங்கிருந்து வெளியேற்றி விடுவார் என்று அவர்கள் கூறுகின்றனர்1. ஆனால் (உண்மையான) கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும், நம்பிக்கை கொண்டவர்களுக்குமே உரியதாகும். இருப்பினும் நயவஞ்சகர்கள் அறிந்து கொள்வதில்லை. ரு1
- நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் உங்கள் கவனத்தைத் திருப்பி விட வேண்டாம். எவர் அவ்வாறு செய்கின்றாரோ, அத்தகையவர்களே இழப்பிற்குரியோர் ஆவார்கள்.
- உங்களுள் எவருக்கும் மரணம் வருவதற்கு முன்னதாகவே நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து(இறைவழியில்) செலவு செய்யுங்கள். (அவ்வாறு செலவு செய்யாதவர் மரணிக்கும் நேரத்தில்) என் இறவா! நான் தர்மம் வழங்கி, நல்லவர்களைச் சேர்ந்தவனாக ஆகுவதற்காக நீ எனக்கு காலக்கெடு கொடுக்கக் கூடாதா? என்று அவர் கூறுவார்.
- ஆனால் அல்லாஹ் எந்த உயிருக்கும் அதற்குரிய குறிப்பிட்ட நேரம் வந்து விடும் போது, காலக்கெடு வழங்குவதில்லை. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாவான். ரு2