அதிகாரம்: அத்தகாபுன்
அருளப்பெற்ற இடம்:
மதீனா| வசனங்கள்: 19
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வானங்களிலும், பூமியிலுமுள்ளவையெல்லாம் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. ஆட்சி அவனுடையது. புகழும் அவனுக்கே உரியது. மேலும் அவன் எல்லாவற்றிற்கும் பேராற்றல் உடையவனாவான்.
- அவனே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுள் சிலர் நிராகரிப்பவர்களாகவும், மற்றும் சிலர் நம்பிக்கை கொள்பவர்களாகவும் இருக்கின்றனர். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்றுப் பார்ப்பவனாக இருக்கின்றான்.
- அவன் வானங்களையும், பூமியையும் குறிப்பிட்ட நோக்கத்துடன் படைத்தான். அவன் உங்கள் தோற்றத்தை உருவாக்கினான். உங்கள் வடிவங்களை நன்றாக அமைத்தான். அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது.
- வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகின்றான். மேலும் நீங்கள் மறைத்து வைப்பதையும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் அறிகின்றான். நெஞ்சங்களிலுள்ளவற்றையும் அல்லாஹ் நன்கு அறிகின்றான்.
- இதற்கு முன்னர் நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்குக் கிடைக்கவில்லையா? அவர்கள் தங்கள் நடத்தையின் தீய விளைவுகளைச் சுவைத்தனர். அவர்களுக்கு வேதனையளிக்கக்கூடிய தண்டனையும் (விதிக்கப்பட்டு) உள்ளது.
- இதற்குக் காரணம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளுடன் அவர்களிடம் வந்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் ஒரு மனிதரா எங்களுக்கு நேர்வழி காட்டப்போகிறார்? என்று கூறினர். எனவே அவர்கள் நிராகரித்துப் புறக்கணித்து விட்டனர். ஆனால் அல்லாஹ்வுக்கு (அவர்களிடத்து) எந்தத் தேவையுமில்லை. அல்லாஹ் தன்னிறைவு பெற்றவனும், புகழனைத்திற்கும் உரியவனுமாவான்.
- தாங்கள் ஒருபோதும் (உயிர்ப்பித்து) எழுப்பப்படப் போவதில்லை என்று நிராகரிப்பவர்கள் உறுதியாக நினைக்கின்றனர். நீர் கூறுவீராக! அவ்வாறன்று; மாறாக, என் இறைவன் மேல் ஆணையாக, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள். பின்னர் நீங்கள் செய்தவற்றைப் பற்றி நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும். இது அல்லாஹ்வுக்கு மிக எளிதே.
- எனவே நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனது தூதரிடத்தும், நாம் இறக்கிய ஒளியி(ன் அதாவது குர்ஆனி)னிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாவான்.
- ஒன்றுதிரட்டும் (மறுமை) நாளிற்காக, அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாள்; அது, இலாபம், நஷ்டம் ஆகியவற்றிற்குரிய நாளாகும். அல்லாஹ்விடத்து நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்பவர்களிடமிருந்து அவர்களின் (செயல்களின்) தீமை (பயக்கும் விளைவு)களை அகற்றி, அவர்களைத் தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அத்தோட்டங்களில் அவர்கள் என்றென்றும் வாழ்ந்து வருவர். இது மாபெரும் வெற்றியாகும்.
- ஆனால் எவர்கள் நிராகரித்து, எம் வசனங்களை ஏற்க மறுத்தார்களோ அவர்கள் நரகத்திற்குரியவர்களாவார்கள். அதில் அவர்கள் நெடுங்காலம் இருப்பார்கள். அது மிகக் கெட்ட சேருமிடமாகும். ரு1
- அல்லாஹ்வின் அனுமதியின்றி எந்தத் துன்பமும் ஏற்படுவதில்லை. அல்லாஹ்விடத்து நம்பிக்கை கொள்பவரது உள்ளத்திற்கு அவன் நேர்வழி காட்டுகின்றான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு அறிபவனாவான்.
- நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடங்கள்; தூதருக்கும் கட்டுப்பட்டு நடங்கள். ஆனால் நீங்கள் புறக்கணித்து விட்டால், (தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதே எம் தூதரின் பொறுப்பாகும்.
- அல்லாஹ்! அவனையன்றி வணக்கத்திற்குரியவன் எவனும் இல்லை. எனவே நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்விடமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
- நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் சிலர் உங்களுக்குப் பகைவர்களாவார்கள். எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். நீங்கள் கண்டுங்காணாதது போன்று இருந்து, தவறைப் பொறுத்து, மன்னித்து விடுவீர்களாயின், நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- உங்கள் செல்வங்களும், உங்கள் சந்ததிகளும் ஒரு சோதனையேயாகும். ஆனால் அல்லாஹ்விடத்தில் மாபெரும் நற்பலன் உள்ளது.
- உங்களால் இயன்றவரை நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, செவி சாய்த்துக் கீழ்ப்படிந்து (அவனது வழியில்) செலவு செய்யுங்கள். இது உங்களுக்கே மிக நல்லதாகும். தங்கள் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து காப்பாற்றப்படுபவர்களே வெற்றி பெறுபவர்களாவர்.
- நீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அவன் அதனை உங்களுக்குப் பன்மடங்காக்கித் தருவதுடன், உங்களை மன்னித்தருள்வான். அல்லாஹ் மிக்க மதிப்பளிப்பவனும், சகித்துக் கொள்பவனுமாவான்.
- அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனும், வல்லமையுள்ளவனும், நுண்ணறிவுடையோனுமாவான். ரு2