அதிகாரம்: அத்தலாக்
அருளப்பெற்ற இடம்:
மதீனா | வசனங்கள்: 13
பிரிவுகள்: 2
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- நபியே1 (அதாவது அவரைப் பின்பற்றக்கூடியவர்களே) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு (தலாக்) கொடுக்கும் போது, குறிப்பிட்ட காலவரைக்கேற்ப அவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து2 அந்தக் காலவரையைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சி நடங்கள். அவர்களின் வீடுகளிலிருந்து அவர்களை வெளியேற்றாதீர்கள். அவர்கள் பகிரங்கமான ஓர் அருவெறுக்கத்தக்க செயலைச் செய்தாலன்றி, அவர்கள் தாமாகவும் வெளியேற வேண்டாம்3. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும். அல்லாஹ்வின் வரையறைகளை மீறுபவர், நிச்சயமாகத் தமக்கே அநீதியிழைத்துக் கொள்கின்றார்.(மணவிலக்கு கொடுப்பவரே!) இதன்பின்னர் ஒருக்கால் அல்லாஹ் ஏதேனும் புதிது ஒன்றை ஏற்படுத்தி விடலாம் என்பதை நீர் அறிய மாட்டீர்.
- பின்னர் அவர்கள் தங்களுக்குரிய காலக்கெடு(வின் இறுதி எல்லையை) அடைந்து விடும் போது, அவர்களைப் பொருத்தமான முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்; அல்லது பொருத்தமான முறையில் அவர்களைப் போக விட்டு விடுங்கள். உங்களுள் நேர்மையான இருவரைச் சாட்சிகளாக நியமித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்காக உண்மையான சாட்சி கூறுங்கள். அல்லாஹ்விடத்தும், இறுதி நாளிடத்தும் நம்பிக்கை கொள்பவருக்கு இவ்வாறு அறிவுரை வழங்கப்படுகிறது. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவருக்கு அவன் ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்துவான்.
- அவர் எதிர்பாராத இடத்திலிருந்து அவன் அவருக்கு உணவு அளிப்பான். அல்லாஹ்விடம் நம்பிக்கை வைப்பவருக்கு அவனே போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தனது நோக்கத்தை நிறைவேற்றுவான். அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் ஓர் அளவை நியமித்துள்ளான்.
- உங்கள் பெண்களுள் மாதவிடாய் குறித்து நம்பிக்கையிழந்து விட்டவர் (காலக்கெடு) தொடர்பாக, நீங்கள் ஐயப்பாட்டிற்குள்ளானால், அவர்களுக்குரிய காலக்கெடு மூன்று மாதங்களாகும். மாதவிடாய் வராதவர்களுக்கும்4 அவ்வாறே. கருத்தரித்தவர்களுக்குரிய காலக்கெடு அவர்கள் தங்கள் சுமையை விடுவிக்கும் வரையாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவருக்கு, அவரது விவகாரங்களை அவன் எளிதாக்கி விடுவான்.
- இது அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்துள்ள கட்டளையாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவரது செயல்களின் தீமை (பயக்கும் விளைவு)களை அவன் அவரை விட்டும் அகற்றி விடுவான். மேலும், அவருக்குரிய கூலியை மிகுதியாகக் கொடுக்கின்றான்.
- (மணவிலக்கு கொடுக்கப்பட்ட பெண்களை அவர்களுக்குரிய காலக்கெடுவின் போது) நீங்கள் இருந்து வரும் வீடுகளிலேயே அவர்களையும் இருக்கச் செய்யுங்கள். நீங்கள் அவர்களுக்குக் கொடுமைகளை உருவாக்கும் பொருட்டு வேண்டுமென்றே அவர்களைத் துன்புறுத்தாதீர்கள். அவர்கள் கருத்தரித்தவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் சுமையை விடுவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள். அவர்கள் உங்களுக்காக(க் குழந்தைகளுக்கு) ப் பாலூட்டினால், அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பிரதிபலனை அவர்களுக்குக் கொடுங்கள். உங்களுக்கிடையே பொருத்தமான முறையில் கலந்தாலோசனை செய்து கொள்ளுங்கள். ஆனால் ஒருவரால் மற்றொருவர் சங்கடத்திற்காளாக வேண்டியதிருந்தால், (குழந்தைக்கு) வேறொருத்தி பாலூட்டட்டும்.
- செல்வந்தர் தமது செல்வத்திற்கேற்ப செலவு செய்ய வேண்டும்; தமது வாழ்விற்குரிய பொருள்கள் குறைவாகக் கொடுக்கப்பட்டவர், அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து செலவு செய்ய வேண்டும். அல்லாஹ் எந்த ஆன்மாவுக்கும் அவன் அதற்கு வழங்கியிருப்பதற்கு அப்பாற்பட்ட சுமையைச் சுமத்துவதில்லை. அல்லாஹ் விரைவில் கஷ்டத்திற்குப் பின்னர் (வாழ்க்கை) வசதியை உண்டாக்குவான். ரு1
- எத்தனையோ நகரங்கள் தம் இறைவனது கட்டளையையும், அவனது தூதர்களையும் எதிர்த்தன. இதனால் நாம் அவற்றிடம் கடினமான கேள்வி,கணக்குக் கேட்டு, அவற்றிற்குக் கடுந்தண்டனை அளித்தோம்.
- எனவே அவை தம் நடத்தையின் தீய விளைவுகளைச் சுவைத்தன. அவற்றின் செயல்களின் முடிவு நஷ்டத்திற்குரியதாகவே இருந்தது.
- அல்லாஹ் அவர்களுக்குக் கடினமான தண்டனையை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளான். எனவே நம்பிக்கை கொண்ட அறிவுடையவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டக்கூடிய ஒரு (தூது)வரை அனுப்பியுள்ளான்.
- அத்தூதர் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்பவர்களை (எல்லா வகையான) இருள்களிலிருந்து(ம்) ஒளியின்பால் கொண்டு வருவதற்காக, அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை அவர் உங்களுக்கு ஓதிக் காட்டுகின்றார். மேலும் அல்லாஹ்விடத்து நம்பிக்கை கொண்டு, நற்செயலாற்றுபவரை அவன் தோட்டங்களில் நுழையச் செய்வான். அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடுகின்றன. அவர்கள் அத்தோட்டங்களில் என்றென்றும் வாழ்ந்து வருவார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவருக்காக மிகச்சிறந்த உணவை வழங்கியுள்ளான்.
- அல்லாஹ்தான் ஏழு வானங்களையும், அவைகளைப் போன்று பூமியையும் படைத்தான். அல்லாஹ் எல்லாவற்றிற்கும் ஆற்றல் உடையவனாவான்5 என்பதையும், அல்லாஹ் எல்லாவற்றையும் (தனது) அறிவால் சூழ்ந்து கொள்கின்றான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவற்றிற்கிடையே (இறைக்) கட்டளை இறங்குகின்றது6. ரு2