66- அத்தஹ்ரீம்

அதிகாரம்: அத்தஹ்ரீம்
அருளப்பெற்ற இடம்: மதீனா | வசனங்கள்: 13

பிரிவுகள்: 2

  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. நபியே! அல்லாஹ் உமக்கு ஆகுமானதாக ஆக்கியிருப்பதை, நீர் உமது மனைவிகளின் விருப்பை நாடி (உமக்கு) விலக்கப்பட்டதாக ஏன் ஆக்குகின்றீர்?1 அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான். 
  3. நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு, உங்கள் சத்தியங்களை ரத்து செய்வதற்கு அனுமதியளித்துள்ளான். அல்லாஹ் உங்கள் நண்பனாவான்; மேலும் அவன் நன்கு அறிபவனும், நுண்ணறிவுள்ளவனுமாவான். 
  4. நபி தமது மனைவியர்களுள் ஒருவரிடம் இரகசியச் செய்தி ஒன்றைக் கூறிய நேரத்தை (நினைத்துப் பாருங்கள்). பின்னர் அவர் அதனை வெளிப்படுத்திய போது, அதனைப் பற்றி அல்லாஹ் அவருக்குத் தெரிவித்ததும், அவர் அதன் ஒரு பகுதியினை (அந்த மனைவிக்கு) அறிவித்து, மற்றொரு பகுதியி(னைக் கூறுவதி)லிருந்து விலகிக் கொண்டார். பின்னர் அவர் அந்த மனைவிக்கு அதனைப் பற்றி தெரிவித்த போது, இதனைப் பற்றி உங்களுக்கு அறிவித்தவர் யார்? என்று அவர் கேட்டார். நன்கு அறிபவனும், நன்கு தெரிந்திருப்பவனுமாகிய (இறை)வன் எனக்கு அறிவித்தான் என்று அவர் பதிலளித்தார். 
  5. (மனைவிகளே!) இப்பொழுது நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் கழிவிரக்கத்துடன் திரும்பினால் (அது உங்களுக்கு மிகச்சிறந்ததாகும்). உங்கள் உள்ளங்களும் (அதற்காக ஏற்கனவே) பணிந்து விட்டன2. ஆனால் அவருக்கெதிராக நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிட ஆயத்தமாகி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்பவனாவான். ஜிப்ரீலும், நம்பிக்கை கொண்டவர்களுள் நல்லவர்களும் (அவ்வாறே உதவி செய்பவர்களாவார்கள்). அவர்கள் மட்டுமன்றி, ஏனைய வானவர்களும் (அவருக்கு) உதவி செய்பவர்களாவார்கள். 
  6. அவர் உங்களுக்கு மணவிலக்குக் கொடுத்து விட்டால், அவருக்கு அவரது இறைவன் (உங்களுக்குப்) பதிலாக உங்களை விட மிகச்சிறந்த மனைவிகளை கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்களும், நம்பிக்கை கொண்டவர்களும், கீழ்ப்படிந்து நடக்கக் கூடியவர்களும், எப்போதும் இறைவனிடம் திரும்பக் கூடியவர்களும், நன்கு வணங்கக் கூடியவர்களும், நோன்பு நோற்கக் கூடியவர்களும், விதவைகளும், கன்னிகளுமாகியவர்களை வழங்கி விடலாம். 
  7. நம்பிக்கை கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும் எரிபொருளாக இருக்கக்கூடிய நரகத்திலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். கண்டிப்பானவர்களும், கடினமானவர்களுமாகிய வானவர்கள் அதன் மீது நியமிக்கப்பட்டுள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு இட்ட கட்டளைக்கு அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். தங்களுக்குக் கட்டளை இடப்படுவதையே அவர்கள் செய்வார்கள். 
  8. நிராகரிப்பவர்களே! இன்று நீங்கள் சாக்குபோக்குக் கூறாதீர்கள். நீங்கள் செய்தவற்றிற்கே உங்களுக்குக் கூலி கொடுக்கப்படும். ரு1 
  9. நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் கபடமற்ற கழிவிரக்கத்துடன் அல்லாஹ்விடம் திரும்புங்கள். உங்கள் இறைவன், உங்கள் (செயல்களின்)தீமை (பயக்கும் விளைவு) களை உங்களை விட்டும் அகற்றி, உங்களைத் தோட்டங்களில் நுழையச் செய்யலாம். அவற்றிற்கிடையே ஆறுகள் ஓடும். அந்நாளில் நபியையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னாலும், அவர்களின் வலப்பக்கங்களிலும் விரைவாகச் செல்லும். அவர்கள்: எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக ஆக்கி, எங்களை மன்னிப்பாயாக. நிச்சயமாக நீ எல்லாவற்றிற்கும் பேராற்றல் உடையவனாவாய் என்று கூறுவார்கள். 
  10. நபியே! நிராகரிப்பவர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகக் கடினமான முயற்சியை மேற்கொண்டு, அவர்கள் மீது கண்டிப்பானவராக இருப்பீராக. அவர்களின் இருப்பிடம் நரகமாகும். அது மிகக் கெட்ட சேருமிடமாகும்.
  11. நூஹ்வின் மனைவியையும், லூத்துவின் மனைவியையும் நிராகரிப்பவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அல்லாஹ் விளக்குகின்றான். அவ்விரு பெண்களும், எம் அடியார்களுள் இரண்டு நல்லடியார்களுக்கு மனைவிகளாக இருந்தனர். ஆனால் அவ்விரு பெண்களும், இவ்விருவருக்கும் நம்பிக்கைத் துரோகம் செய்தனர். எனவே இவர்கள் அல்லாஹ்வின் தண்டனைக்கு எதிராக (இவர்களுடைய மனைவிமார்களுக்கு) சிறிதும் பயன்பட முடியவில்லை3. மேலும் (நரகத்தில்) நுழைபவர்களுடன் நீங்கள் இருவரும் நகரத்தில் நுழையுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டது. 
  12. மேலும் ஃபிர்அவ்னின் மனைவியை நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான். அக்காலத்தில் அவள், என் இறைவா! உன்னிடத்திலே தோட்டத்தில் நீ எனக்காக ஒரு வீட்டைக் கட்டுவாயாக; ஃபிர்அவ்னிடமிருந்தும், அவனது செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக. அநீதியிழைக்கும் (அவனது) சமுதாயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக என்று கூறினாள். 
  13. மேலும் இம்ரானின் மகள் மரியமையும்4 (நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இறைவன் விளக்குகின்றான்). அவள் தனது கற்புடைமையைக் காப்பாற்றிக் கொண்டாள். எனவே நாம் அவளுக்கு எமது வசனத்தை வழங்கினோம்5, அவள் தனது இறைவனின் வசனங்களையும், அவனுடைய வேதங்களையும் உண்மைப்படுத்தி6, கட்டுப்பட்டு நடப்பவர்களைச் சேர்ந்தவளாக விளங்கினாள்7. ரு2
Powered by Blogger.