அதிகாரம்: அல் ஹதீது
அருளப்பெற்ற இடம்
: மதீனா | வசனங்கள்: 30
பிரிவுகள்: 4
- அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்).
- வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லோனும், நுட்ப ஞானமுடையோனுமாவான்.
- வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் உயிரளிக்கிறான்; மரணத்தையும் தருகிறான். மேலும் அவன் எல்லாவற்றிற்கும் முழுமையான ஆற்றல் பெற்றவனுமாவான்.
- அவன் முதலானவனும், இறுதியானவனும், தெளிவானவனும், மறைவானவனும் ஆவான். மேலும் அவன் எல்லாவற்றையும் நன்கு அறிந்தவனுமாவான்.
- அவனே வானங்களையும், பூமியையும் ஆறு காலகட்டங்களில் படைத்தான். பின்னர் அவன் அரியணையில் உறுதியாக நிலை கொண்டான். பூமிக்குள் செல்கின்றவற்றையும், அதிலிருந்து வெளிப்படுகின்றவற்றையும், வானிலிருந்து இறங்குகின்றவற்றையும், அதை நோக்கி ஏறுகின்றவற்றையும் அவன் அறிகின்றான். நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். மேலும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்க்கவும் செய்கிறான்.
- வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது. எல்லாப் பிரச்சினைகளும் (தீர்ப்புக்காக) அல்லாஹ்விடமே திருப்பிக் கொண்டு செல்லப்படும்.
- அவன் இரவைப் பகலிலும், பகலை இரவிலும் நுழையச் செய்கிறான். மேலும் அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றையும் நன்கு அறிகிறவனும் ஆவான்.
- நீங்கள் அல்லாஹ்விடத்தும், அவனுடைய தூதரிடத்தும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களை அவன் வாரிசுகளாக ஆக்கியுள்ளவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள். உங்களுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், இறைவழியில் செலவு செய்பவர்களுக்கும் பெரும் நற்பலன் உண்டு.
- நீங்கள் உங்கள் இறைவனிடம் நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று, உங்களைத் தூதர் அழைக்கும் போது, நீங்கள் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொள்ளாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், ஏற்கனவே அவன் உங்களிடம் ஒரு வாக்குறுதியும்1 வாங்கியுள்ளான்.
- அவன் உங்களை(ப் பலவகையான) இருள்களிலிருந்து ஒளியின்பால் கொண்டு வருவதற்காக, அவனே தன் அடியாருக்குத் தெளிவான அடையாளங்களை இறக்குகின்றான். நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க இரக்கம் காட்டுபவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- வானங்கள், பூமி ஆகியவற்றின் மரபு உரிமை அல்லாஹ்வுக்குரியதாக இருக்கும் நிலையில்2, நீங்கள் அல்லாஹ்வின் வழியில் செலவு செய்யாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? உங்களுள் வெற்றிக்கு முன்னர் (அல்லாஹ்வின் வழியில்) செலவிடவும், போரிடவும் செய்தவர் (அதன் பின்னர் அவ்வாறு செய்தவருக்கு) ஒப்பாகமாட்டார். அவர்கள் பின்னர் செலவிடவும், போர் புரியவும் செய்தவர்களை விட மேன்மையான பதவியுடையவர்களாவர். எல்லோரிடமும் அல்லாஹ் நன்மையையே வாக்குறுதி அளித்துள்ளான். மேலும் நீங்கள் செய்தவற்றை அல்லாஹ் நன்கு அறிபவனாவான். ரு1
- அல்லாஹ்வுக்கு அழகிய கடனாக கடன் கொடுப்பவர் யார்? அவ்வாறாயின், அவன் அவருக்கு அதனைப் பல மடங்காக ஆக்குவான். அவருக்குக் கண்ணியமான கூலியும் உண்டு.
- நம்பிக்கை கொண்ட ஆண்கள், நம்பிக்கை கொண்ட பெண்கள் ஆகியோரின் ஒளி, அவர்களுக்கு முன்னும், அவர்களின் வலப்பக்கங்களிலும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், நீர் அவர்களைக் காணும் நாள் (குறித்து நினைத்துப் பார்ப்பீராக. அப்பொழுது அவர்களிடம்) " இன்று உங்களுக்கு நற்செய்தி! தோட்டங்கள், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் நீங்கள் என்றென்றும் வாழ்ந்து வருவீர்கள், இது மாபெரும் வெற்றியாகும் " (என்று கூறப்படும்).
- நயவஞ்சக ஆண்களும், நயவஞ்சகப் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களிடம், நாங்கள் உங்கள் ஒளியிலிருந்து சிறிது பெற்றுக் கொள்ளும் விதத்தில் நீங்கள் எங்களுக்கு ஆதரவு காட்டுங்கள் என்று கூறும் நாளில், (அவர்களிடம் உங்களால் இயலுமாயின்) திரும்பிச் சென்று3, ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள் எனக் கூறப்படும். பின்னர் அவர்களுக்கிடையே ஒரு கதவைக் கொண்ட சுவர் ஒன்று எழுப்பப்படும். அதன் உட்புறத்தில் அருளும், அதன் வெளிப்புறத்தில் முன்பக்கமாகத் தண்டனையும் இருக்கும்.
- (நயவஞ்சகர்களாகிய) அவர்கள், நாங்கள் உங்களுடன் இருந்ததில்லையா? என்று (கூறியவாறு) அவர்களை அழைப்பார்கள். (இதற்கு நம்பிக்கை கொண்டவர்களாகிய) அவர்கள் இவ்வாறு பதிலளிப்பார்கள்: ஆம், எனினும் நீங்கள் உங்களையே தண்டனைக்கு ஆளாக்கிக் கொண்டீர்கள், (எங்களுக்கு அழிவு ஏற்பட வேண்டுமென்று) நீங்கள் எதிர்பார்த்திருந்தீர்கள். ஐயப்பாடு கொண்டிருந்தீர்கள், அல்லாஹ்வின் கட்டளை வரும் வரை உங்களது வீண் ஆசைகள் உங்களை ஏமாற்றி விட்டன, ஏமாற்றுபவன், அல்லாஹ்வைக் குறித்து உங்களை ஏமாற்றி விட்டான்.
- எனவே, இன்று உங்களிடமிருந்தோ, நிராகரித்தவர்களிடமிருந்தோ எந்த ஈடும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. உங்கள் தங்குமிடம் நரகம் தான். இதுவே உங்கள் தோழன், அது மிகக் கெட்ட சேருமிடமாகும்.
- நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள், அல்லாஹ்வின் நினைவிற்கும், அவன் இறக்கிய உண்மைக்கும் பணியக் கூடிய காலம் வரவில்லையா? மேலும் இவர்களுக்கு முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போல் அவர்களும் ஆகி விட வேண்டாம். அவர்களுக்கு (இறையருள் இறங்குவதற்குரிய) காலக்கெடு நீண்டதாகி விட்டதனால், அவர்களது உள்ளங்கள் கடினமாகி விட்டன. அவர்களுள் பெரும்பாலார் தீயவர்களாகி விட்டனர்.
- அல்லாஹ் பூமியை அதன் மரணத்திற்குப் பின்னர் உயிர்ப்பிக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்வதற்காக நாம் உங்களுக்கு அடையாளங்களைத் தெளிவாக விளக்கியுள்ளோம்.
- தர்மம் வழங்கும் ஆண்கள், தர்மம் வழங்கும் பெண்கள், அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அது பன்மடங்கு ஆக்கப்படும். அவர்களுக்குக் கண்ணியமான கூலியும் உண்டு.
- அல்லாஹ்விடத்தும், அவனது தூதர்களிடத்தும் நம்பிக்கை கொள்பவர்களே, தங்கள் இறைவனின் பார்வையில் நேர்மையானவர்களும், (உண்மைக்குச்) சாட்சி பகர்பவர்களுமாவார்கள்4. அவர்களுக்குத் தங்களுக்குரிய வெகுமதியும், தங்களுக்குரிய ஒளியும் உண்டு. ஆனால் நிராகரித்து, எம் அடையாளங்களைப் பொய்யாக்குபவர்கள் நரகத்திற்குரியவர்களாவர். ரு2
- இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், பொழுது போக்கும், அலங்காரமும், உங்களுக்கிடையே பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களையும், குழந்தைகளையும் பெருக்கிக் கொள்வதில் போட்டியிடுவதுமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாழ்க்கை) மழையைப் போன்றது. அதனால் உற்பத்தியான தாவர வகைகள் விவசாயிகளை மகிழ்ச்சியடையச் செய்கிறது. பின்னர் அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அது மக்கிப் போன சருகாக ஆகி விடுகிறது. (உலகையே நோக்கமாகக் கொண்டவர்களுக்கு ) மறுமையில் கடினமான தண்டனையும், (மற்றவர்களுக்கு) அல்லாஹ்விடமிருந்து பாவ மன்னிப்பும், இறை திருப்தியும் உள்ளன. இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் பொருள்களடங்கிய தற்காலிக இன்பமேயன்றி வேறில்லை.
- உங்கள் இறைவனிடமிருந்து மன்னிப்பிற்காகவும், வானம், பூமி ஆகியவற்றின் மதிப்பிற்குச் சமமான சுவர்க்கத்திற்காகவும் நீங்கள் போட்டியிடுங்கள். அது அல்லாஹ்விடத்தும், அவனது தூதர்களிடத்தும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளதாகும். இது அல்லாஹ்வின் அருளாகும். தான் விரும்புபவருக்கு இதனை அவன் வழங்குகிறான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாவான்.
- பூமியிலோ, உங்களுக்கோ எந்த ஒரு துன்பம் ஏற்பட்டாலும் அதனை நாம் வெளிப்படுத்துவதற்கு முன்னதாகவே அது ஒரு நூலில் (பதிவாகி) உள்ளது5. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதே!
- உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நீங்கள் வருந்தாமலிருக்கவும், அவன் உங்களுக்கு வழங்கியதனால் நீங்கள் பேருவகை அடையாதிருக்கவும் (அவ்வாறு ஏற்படுகின்றது). கர்வங் கொண்டு, தற்பெருமையடிப்பவர்களை அல்லாஹ் விரும்புவதில்லை.
- அத்தகையோர் கருமித்தனம் செய்கின்றனர். மற்ற மனிதர்களையும் கருமித்தனம் செய்யுமாறு ஏவுகின்றனர். புறக்கணித்து விடுகின்றவன், நிச்சயமாக அல்லாஹ் தன்னிறைவு பெற்றவனும், எல்லாப் புகழுக்கும் உரியவனுமாவான்.(என்பதை நினைவில் கொள்ளட்டும்).
- நிச்சயமாக நாம் எம் தூதர்களைத் தெளிவான அடையாளங்களுடன் அனுப்பினோம். மக்கள் நீதியுடன் நடப்பதற்காக அவர்களுடன் வேதத்தையும், துலாக் கோலையும் அவன் இறக்கினான். இரும்பையும் நாம் (உங்களுக்கு) இறக்கினோம். கடுமையான போரு(க்குரிய பொருள்களு)ம், மக்களுக்கு இன்னும் பல பயன்களும் அதில் உள்ளன. பார்க்கப்படாத நிலையிலும் கூட, அல்லாஹ்வுக்கும், அவனது தூதர்களுக்கும் உதவி செய்பவர்களை அவன் அடையாளம் காண்பதற்காக, (இவற்றையெல்லாம் அவன் வழங்கினான்). நிச்சயமாக அல்லாஹ் ஆற்றல் மிக்கவனும், வல்லமையுள்ளவனுமாவான். ரு3
- நிச்சயமாக நாம் நூஹையும், இப்ராஹீமையும் தூதர்களாக அனுப்பினோம். அவர்களின் சந்ததிகளுக்கிடையே நபித்துவத்தையும், வேதத்தையும் நாம் வழங்கினோம். எனவே அவர்களுள் சிலர் நேர்வழியைப் பின்பற்றினர். ஆனால் அவர்களுள் பெரும்பாலார் கட்டுப்படாதவர்களாய் இருந்தனர்.
- பின்னர் நாம் எம் தூதர்களை (நபிமார்களாகிய) அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்குமாறு செய்தோம். மேலும் நாம் மரியத்தின் மகன் ஈஸாவையும் அவர்களைப் பின்பற்றி நடக்கச் செய்து, அவருக்கு சுவிசேஷத்தை (நற்செய்தியினை) வழங்கி, அவரைப் பின்பற்றியவர்களின் உள்ளங்களில் இரக்கத்தையும், கருணையையும் நாம் உண்டு பண்ணினோம். அவர்கள் புதிதாக ஏற்படுத்திக் கொண்ட துறவறம் நாம் அவர்களுக்கு விதித்ததன்று. இதற்குப் பதிலாக, அல்லாஹ்வின் விருப்பத்தைத் தேடுவதையே நாம் அவர்களுக்கு விதித்தோம். (ஆனால்) அவர்கள் அதில் கவனம் செலுத்த வேண்டிய முறைப்படி கவனம் செலுத்தவில்லை. எனவே நாம் அவர்களுள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு, அவர்களுக்குரிய கூலியை வழங்கினோம். எனினும், அவர்களுள் பெரும்பாலார் கட்டுப்படாதவர்களாய் இருக்கின்றனர்.
- நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய தூதரிடத்து நம்பிக்கை கொள்ளுங்கள். அப்பொழுது அவன் உங்களுக்குத் தன் கருணையிலிருந்து இரு பங்கை அளித்து, உங்களுக்கு ஓர் ஒளியை வழங்குவான். அதன் உதவியால் நீங்கள் நடப்பீர்கள். மேலும் அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாவான்.
- (முஸ்லிம்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின்அருளின் எந்தப் பங்கிற்கும் தகுதியுடையவர்கள் இல்லை என்று வேதத்தையுடையவர்கள் கருதிக் கொள்ளாமலிருப்பதற்காகவே (நாம் இதனைக் கூறுகின்றோம்). மேலும் அருள் (யாவும்) அல்லாஹ்வின் கையில் உள்ளது. தான் விரும்பியவருக்கு அவன் அதனை வழங்குகிறான். அல்லாஹ் மாபெரும் அருளுடையவனாவான். ரு4