56- அல் வா(க்)கிஅ(த்)

அதிகாரம்: அல் வா(க்)கிஅ(த்)
அருளப்பெற்ற இடம் : மக்கா | வசனங்கள்: 97

பிரிவுகள்: 3


  1. அளவற்ற அருளாளனும், மேன்மேலும் கருணை காட்டுபவனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் (ஓதுகின்றேன்). 
  2. தவிர்க்க முடியாததென்று முடிவு செய்யப்பட்ட நிகழ்ச்சி நிகழும் போது1. 
  3. அதன் நிகழ்விற்கு எந்த மறுப்புமில்லை. 
  4. சிலரைத் தாழ்த்தியும், சிலரை உயர்த்தியும்2 (அது நிகழும்). 
  5. பூமி (பயங்கரமான) அதிர்ச்சிக்குள்ளாக்கப்படும் போது, 
  6. மலைகள் தவிடுபொடியாக்கப்படும் போது. 
  7. அவை சிதறடிக்கப்பட்ட துகள்களைப் போன்றவையாகி விடும். 
  8. நீங்கள் மூன்று பிரிவினர்களாக(ப் பகுக்கப்பட்டு) இருப்பீர்கள். 
  9. (ஒன்று) வலப்பக்கத்தவர். வலப்பக்கத்தவரின் நிலை என்ன? 
  10. (இன்னொன்று) இடப்பக்கத்தவர். இடப்பக்கத்தவரின் நிலை என்ன? (என்பதைப் பற்றி உமக்கென்ன தெரியும்?).
  11. இன்னுமொன்று (நம்பிக்கையிலும், செயலிலும்) முதன்மையானவர்கள், இவர்கள் முதன்மையானவர்களேயாவர். 
  12. இவர்களே (இறைவனுக்கு) நெருங்கியவர்களாவார்கள். 
  13. பேரின்பத் தோட்டங்களில் (இவர்கள் வாழ்ந்து வருவர்). 
  14. முன்னவரைச் சேர்ந்தவர்கள் பெருங்கூட்டமாக இருப்பார்கள். 
  15. பின்னவரைச் சேர்ந்தவர்கள் சிறு கூட்டமாக3 இருப்பார்கள். 
  16. அவர்கள் (பொன்னும், இரத்தினங்களும்) பதிக்கப்பட்ட மஞ்சங்களில், 
  17. ஒருவரையொருவர் நோக்கியவாறு சாய்ந்திருப்பார்கள். 
  18. நன்மையில் என்றும் நிலைத்திருக்கும் படி செய்யப்பட்ட இளைஞர்கள் அவர்களுக்குப் பணி செய்ய வருவார்கள். 
  19. கிண்ணங்களையும், ஜாடிகளையும் பாய்ந்தோடும் நீரூற்றிலிருந்து (நிரப்பிய) குவளைகளையும் கொண்டு (வந்து பணி செய்வர்). 
  20. அவர்களுக்குத் தலைவலியும் ஏற்படாது, அவர்கள் (போதை ஏறி) உணர்வு இழந்துவிடவும் மாட்டார்கள்.
  21. அவர்கள் தேர்ந்தெடுக்கும் பழங்களையும், 
  22. அவர்கள் விரும்பும் பறவைகளின் இறைச்சியையும் (பணி செய்யும் இளைஞர்கள் கொண்டு வருவர்). 
  23. அகன்ற, அழகிய கண்களைக் கொண்ட பெண்கள் (அங்கு இருப்பர்). 
  24. அவர்கள் நன்றாக மூடிய, பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்றவர்கள் ஆவார்கள். 
  25. (இவையெல்லாம்) அவர்கள் செய்த செயல்களுக்குக் கூலியாகக் கிடைக்கும். 
  26. அவர்கள் அங்கு வீணான அல்லது பாவமான எந்தப் பேச்சையும் செவியுற மாட்டார்கள். 
  27. சாந்தி, சாந்தி என்னும் (வாழ்த்துச்) சொல்லைத் தவிர, 
  28. வலப்பக்கத்தவர்(களின் நிலையைப் பற்றியும் கேளும்). வலப்பக்கத்தவரின் நிலை என்ன? (என்பது உமக்குத் தெரியுமா?). 
  29. அவர்கள் முள் இல்லாத இலந்தை மரத் தோட்டங்களில் (இருப்பர்). 
  30. மேலும் குலை, குலையாகத் தொங்கும் வாழை(த் தோட்டங்) கள்,
  31. மிக்க விரிவான நிழல், 
  32. பாய்ந்தோடும் நீர், 
  33. மிகுதியான பழங்கள், 
  34. அவை குறையாதவையும், தடுக்கப்படாதவையும் ஆகும். (இவையெல்லாம் அவர்களுக்கு உண்டு). 
  35. மேலும் மேன்மையான துணைவிகளும் (அவர்களுக்கு உண்டு). 
  36. நிச்சயமாக நாம் அவர்களை நல்லமுறையில் படைத்துள்ளோம். 
  37. நாம் அவர்களைக் கன்னிகளாக ஆக்கியுள்ளோம். 
  38. அன்பு நிறைந்த, சம வயதுள்ளவர்களாக, 
  39. வலப்பக்கத்தவருக்காக (ஆக்கியுள்ளோம்). ரு1 
  40. முன்னவரைச் சேர்ந்த பெருங்கூட்டத்தினரும்
  41. பின்னவரைச் சேர்ந்த பெருங்கூட்டத்தினரும் (இருப்பார்கள்). 
  42. இடப்பக்கத்தவர்(கள் நிலையைப் பற்றியும் நீர் கேளும்), இடப்பக்கத்தவரின் நிலை என்ன? (என்பது உமக்குத் தெரியுமா?). 
  43. அவர்கள் பொசுக்கும் காற்றுகளுக்கிடையேயும், கொதிக்கும் நீரிலும், 
  44. கருப்புப் புகையின் நிழலிலும் (இருப்பர்). 
  45. (அது) குளிர்ச்சியோ, புத்துணர்ச்சியோ தராததாகும். 
  46. அவர்கள் இதற்கு முன்னர் மிக்க நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 
  47. அவர்கள் பெரும்பாவத்தைப் பிடிவாதமாகச் செய்து வந்தனர். 
  48. என்ன! நாங்கள் மரணமடைந்து, மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விடும் போது, நாங்கள் மீண்டும் எழுப்பப்படுவோமா? என்று அவர்கள் கூறி வந்தனர். 
  49. எங்கள் முந்தைய மூதாதையர்களுமா  (எழுப்பப்படுவர்?). 
  50. நீர் கூறுவீராக: (ஆம்) முற்காலத்திலுள்ளவர்களும், பிற்காலத்திலுள்ளவர்களும்,
  51. எல்லோரும் குறிப்பிட்ட ஒரு நாளின், குறித்த நேரத்தில் ஒன்றுதிரட்டப்படுவார்கள். 
  52. பின்னர் பொய்யாக்கிய, வழிதவறியவர்களே! நீங்கள், 
  53. நிச்சயமாக கள்ளிமரத்திலிருந்து உண்ணுவீர்கள். 
  54. அதனைக் கொண்டு உங்கள் வயிறுகளை நிரப்புவீர்கள். 
  55. அதற்கு மேல் கொதிக்கும் நீரைக் குடிப்பீர்கள். 
  56. தாகமுள்ள ஒட்டகம் குடிப்பது போன்று குடிப்பீர்கள். 
  57. தீர்ப்பு நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பல் இதுவே. 
  58. நாமே உங்களைப் படைத்தோம். பின்னர் ஏன் நீங்கள் (உண்மையை) ஒப்புக் கொள்வதில்லை. 
  59. நீங்கள் வெளியாக்குகின்ற (விந்)தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 
  60. அதனை நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
  61. நாம் உங்கள் எல்லோருக்கும் மரணத்தை விதித்துள்ளோம். எவராலும் எம்மைத் தாண்டி விட முடியாது. 
  62. நாம் உங்கள் உருவத்தை மாற்றி, நீங்கள் அறியாத ஒன்றாக உங்களை எழுப்புவதிலிருந்தும் (எம்மை எவராலும் தடுத்து விட இயலாது)5. 
  63. நிச்சயமாக நீங்கள் முதல் படைப்பை அறிந்தே இருக்கிறீர்கள். பின்னர் ஏன் நீங்கள் சிந்திப்பதில்லை? 
  64. நீங்கள் விதைப்பதைக் கவனிக்கின்றீர்களா? 
  65. அதனை நீங்கள் வளரச் செய்கிறீர்களா? அல்லது நாம் வளரச் செய்கின்றோமா? 
  66. நாம் விரும்பியிருந்தால் அதனையெல்லாம் காய்ந்து போன சருகுகளாக ஆக்கியிருப்போம். பின்னர் நீங்கள் புலம்பிக் கொண்டிருந்திருப்பீர்கள்: 
  67. 'நிச்சயமாக நாங்கள் செலவு செய்த தொகையினால் அழுத்தப்பட்டுள்ளோம்', 
  68. 'அவ்வாறன்று, நாங்கள் கைவிடப்பட்டவர்களாகி விட்டோம்' (எனக் கூறுவீர்கள்). 
  69. நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பார்த்தீர்களா? 
  70. அதனை மேகத்திலிருந்து இறக்குபவர்கள் நீங்களா? அல்லது அதனை நாம் இறக்குகின்றோமா?
  71. நாம் விரும்பியிருந்தால், அதனை நாம் கசப்பானதாக ஆக்கியிருப்போம். பின்னர் ஏன் நீங்கள் நன்றி செலுத்துவதில்லை? 
  72. நீங்கள் எரிக்கின்ற நெருப்பைப் பார்த்தீர்களா? 
  73. அதற்குரிய மரத்தை நீங்கள் உற்பத்தி செய்கின்றீர்களா? அல்லது நாம் உற்பத்தி செய்கின்றோமா? 
  74. நாம் அதனை நினைவூட்டக் கூடியதாகவும்6, பயணிகளுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்கியுள்ளோம். 
  75. எனவே நீர் மகிமை மிக்க உமது இறைவனின் பெயரைக் கொண்டு அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. ரு2 
  76. நான் நட்சத்திரங்களின் நிலைகளைச் சான்றாகக் காட்டுகிறேன். 
  77. நீங்கள் அறிந்திருப்பின் நிச்சயமாக இது மாபெரும் சான்றாகும். 
  78. நிச்சயமாக இந்தக் குர்ஆன் மேன்மை மிக்கதாகும். 
  79. (இது) நன்கு பாதுகாக்கப்பட்ட ஒரு நூலிலுள்ளதாகும்7. 
  80. தூய்மையாக்கப்படுபவர்களைத் தவிர வேறெவரும் அதனைத் தொட மாட்டார்கள்8. (அதாவது அதன் மகத்துவத்தையும், உண்மையையும் உணர முடியாது).
  81. இது எல்லா உலகங்களுக்கும் உரிய இறைவனிடமிருந்து இறங்கியுள்ள ஒன்றாகும். 
  82. இந்த(இறை) வசனத்தை நீங்கள் அற்பமானதாகக் கருதுகிறீர்களா? 
  83. நீங்கள் அதைப் பொய்யாக்குவதை உங்கள் வாழ்விற்குத் தேவையான பொருளாக ஆக்கிக் கொண்டீர்களா? 
  84. (மரணமடையவிருக்கும் ஒருவனது உயிர்) தொண்டையை வந்தடையும் போது, பின்னர் ஏன், 
  85. அந்த நேரத்திலும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். 
  86. உங்களை விட நாம் அவனுக்கு மிக அருகில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பார்ப்பதில்லை (இந்த உண்மையை அறிய மாட்டீர்கள்). 
  87. உங்களுக்கு எந்தக் கேள்வி கணக்கும் இல்லை என்றால், 
  88. நீங்கள் உண்மையாளர்களாயின் அதனை ஏன் உங்களால் திரும்பக் கொண்டு வர இயல்வதில்லை? 
  89. எனவே ஒருவர் (இறைவனுக்கு) நெருக்கமானவர்களைச் சேர்ந்தவராக இருந்தால், 
  90. அவருக்கு ஆறுதலும், (மகிழ்ச்சிக்குரிய) நறுமணமும், பேரின்பத் தோட்டமும் உண்டு.
  91. அவர் வலப்பக்கத்தவரைச் சேர்ந்தவராக இருந்தால், 
  92. வலப்பக்கத்தவரைச் சேர்ந்தவரே! உமக்குச் சாந்தி உண்டாவதாக (என்று அவரிடம் கூறப்படும்). 
  93. ஆனால், அவர் வழிதவறிய, பொய்யாக்குபவர்களைச் சேர்ந்தவராக இருந்தால், 
  94. (அவருக்குக் கிடைப்பது) கொதிக்கும் நீர் விருந்தும், 
  95. நரகத்தில் எரிவதுமாகும். 
  96. நிச்சயமாக இதுவே உறுதியான உண்மை. 
  97. எனவே நீர் மகத்தான உமது இறைவனின் பெயரைக் கொண்டு அவனது தூய்மையினை எடுத்துரைப்பீராக. ரு3

Powered by Blogger.